செம்மொழி மாநாட்டு மைய நோக்கப் பாடல் கேட்டீர்களா?

          கேட்டேன். பாடல் எழுதத் தெரிந்த வைரமுத்து, மேத்தா போன்றோர் பக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களைப் புறந்தள்ளிவிட்டு கலைஞர் கருணாநிதி ஓர் உரைநடை வர்ணனை எழுதியுள்ளார். எழுச்சி கொள்ளச் செய்யும் இலட்சியம் எதுவும் அதில் இல்லை.

          ஏ. ஆர். இரகுமான் இசை மேதைதான். ஆனால் தமிழிசையைப் புறந்தள்ளி விட்டு மேற்கத்திய இசையைப் பயன்படுத்தி ஒரு களியாட்டக் கூடப் பாடல் பாடல் போல் ஆக்கிவிட்டார். பாடலில் எழுத்தும் சரியில்லை, இசையும் சரியில்லை.

 

அருந்ததிராய் அண்மையில் சென்னையில் நடந்த பச்சை வேட்டையை எதிர்த்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது, “தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஈழத் தமிழர்களின் படுகொலையைத் தடுக்கத் தவறிவிட்டனஎன்று பேசியுள்ளது சரிதானே?

          தமிழினப் படுகொலையைத் தடுப்பதில் இந்திய அரசியல் கட்சிகள் பங்காற்றத் தேவை இல்லை என்கிறாரா? அப்படுகொலையை எதிர்த்து இவர் எழுதிய ஒரே ஒரு கட்டுரை டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏட்டில் ஒரு முறை வந்தது. அதற்கு மேல் இவர் செய்த பரப்புரை என்ன? வடநாட்டில் மனித உரிமை அமைப்புகள் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க என்ன செய்தன?

          அருந்ததிராய் பேசுவதைப் பார்த்தால், ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு மட்டும் உள்ளது போல் அல்லவா தெரிகிறது. மனித உரிமைப் போராளிகளிடமும் இனப்பாகுபாடு இருக்கிறதோ?

 

சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களைப் பார்த்தீர்களா?

          ஒன்றாம் வகுப்பிற்கும் ஆறாம் வகுப்பிற்கும் மட்டும் சமச்சீர் பாடப் புத்தகங்கள் வெளியிட்டுள்ளது தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம். எல்லாப் பாடங்களையும் இன்னும் படிக்கவில்லை.

          ஆறாம் வகுப்பு வரலாற்றுப் பாடநூலை மேம்போக்காகப் பார்த்த போது சில பழைகள் தெரிந்தன.

          “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்” என்னும் பாடல் நன்னூல் எழுதிய பவணந்தியார் எழுதியதாகத் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது. இப்பாடல் தொல்காப்பியத்தின் பாயிரத்தில் பனம்பாரனார் எழுதியது என்பது பலர்க்கும் தெரிந்த ஒன்று.

          சிந்துவெளி நாகரிகம் குறித்த பாடத்தில் அது தமிழர் நாகரிகம் என்று குறிக்கப்படவில்லை. வேதகாலம் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. அது ஆரிய நாகரிகம் என்று எழுதப்பட்டுள்ளது.

          சரியும் தவறும் சமச்சீராய் இருக்கும்படி சமச்சீர் கல்வி ஆகிவிடக் கூடாது.

 

அனைத்து வகை உயர் கல்வியும் இனிமேல் இந்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வரப்போவதாக நடுவண் மனிதவள அமைச்சர் கபில்சிபல் கூறிவருகிறாரே, இதனால் மாநில உரிமைகளுக்குப் பாதிப்பு வருமா?

          இது ஏதோ கபில்சிபலின் தனிப்பட்ட முடிவு - முனைப்பு என்று கருதிவிடக் கூடாது. தில்லி ஏகாதிபத்தியத்தின் திட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்துகிறார் அவர்.

          மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வியை நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட காலத்தில் (1975 சூன் - 1977 மார்ச்) நடுவண் அரசுக்கும் மாநில அரசுக்குமான பொது அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டு சென்றார் இந்திரா காந்தி. நெருக்கடி நிலைக் கொடுமைகளால் 1977 மக்களவைத் தேர்தலில் தோற்றுப் போனார் இந்திரா காந்தி. காங்கிரசுக் கட்சியும் தோற்றது. வெற்றி பெற்று மொரார்சி தேசாய் தலைமையில் ஆட்சி அமைத்தது ஜனதாக் கட்சி. இந்திராகாந்தி எதேச்சாதிகார நோக்கில் நிறைவேற்றியிருந்த அரசமைப்புச் சட்ட 42ஆவது திருத்தங்களை ஜனதா ஆட்சி 44ஆவது திருத்தத்தின் மூலம் நீக்கியது. அவற்றுள் கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு போனதை மட்டும் நீக்காமல் அப்படியே விட்டு விட்டது.

          அப்போதைய ஜனதா ஆட்சியில் பா.ஜ.க. தலைவர்களான வாஜ்பாயியும் அத்வானியும் அமைச்சர்களாக இருந்தார்கள்

          பொதுப்பட்டியலில் உள்ள ஒரு பொருளின் மீது நாடாளுமன்றமும், சட்ட மன்றமும் தனித்தனியே சட்டமியற்றினால் நாடாளுமன்றச் சட்டம் செல்லும், சட்ட மன்றச் சட்டம் செல்லாது.

          எப்பொழுதும் ஓர் ஏகாதிபத்திய ஆட்சி அடிமைப்பட்ட மக்களைத் தன்வசப் படுத்திக் கொள்ள அம்மக்களுக்கான கல்வியையும் பண்பாட்டையும் தனது ஆதிக்கத்திற்கேற்பவே வடிவமைக்கும். ஆங்கிலேய ஏகாதிபத்தியம் அதைத்தான் செய்தது. இப்பொழுது தில்லி ஏகாதிபத்தியம் அதைத்தான் செய்கிறது.

          கபில்சிபல் கொண்டுவரும் உயர்கல்வித் திட்டத்தைச் செயல்படுத்தப் புதிதாக ஓர் ஆணையத்தை இந்திய அரசு அமைக்க உள்ளது. “உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய ஆணையம்” என்ற அந்த அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் மருத்துவக் கல்வி, சட்டக் கல்வி, வேளாண் கல்வி உள்ளிட்ட எல்லா வகை உயர்கல்வியும் வந்துவிடும். இதற்கான சட்டம் மட்டுமின்றி தேவைப்பட்டால் அரசமைப்புச் சட்டத்திருத்தமும் கொண்டு வர உள்ளார்கள்.

          இது மாநில உரிமையைப் பறிக்கும் செயல் என்று எளிமைப் படுத்திப் பார்க்கக் கூடாது. தமிழ்த் தேசிய இனம் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் தனித்தன்மை, உளவியல் பண்பு அனைத்தையும் சீரழித்து, இந்திய ஏகாதிபத்தியம் மற்றும் பன்னாட்டு ஏகாதிபத்தியங்களுக்குச் சேவை செய்யும் அடிமை அலுவல்களில் மனம்மகிழும் படித்த கூட்டமொன்றை அது உருவாக்கிவிடும்.

          தமிழகக் கங்காணி அரசின் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி முதலில் கபில் சிபலின் மேற்படித் திட்டத்தை எதிர்த்தார். ஆனால் கபில்சிபல் 24.06.2010 அன்று புதுதில்லியில் “நடுவண் கல்வி அறிவுரை வாரியக்” கூட்டத்தைக் கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குத் திட்டம் தீட்டியது குறித்து தமிழக அரசு வாய் திறந்ததாகத் தெரியவில்லை.

          நடுவண் அரசின் கல்வி ஆக்கிரமிப்புத் திட்டத்தை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.

முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி அ.இ.அ.தி.மு.க. விலிருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்த போது கலைஞர் கருணாநிதி தமிழ் என்றால் அதில் திராவிடம் வராது, திராவிடம் என்றால் அதில் தமிழ் வரும்என்று கூறியுள்ளது சரியா?

          திராவிடம் என்றால் பார்ப்பனியம்தான் வரும் என்று பேராசிரியர் த.செயராமன் அவர்களும் ம.செந்தமிழனும் நமது தமிழர் கண்ணோட்டத்தில் எழுதி வரும் கட்டுரைகளைப் படித்து வருகிறீர்களா? திராவிடர் என்றால் தென்னாட்டுப் பார்ப்பனரை மட்டுமே குறிக்கும் என்பதற்கு ஏராளமான சான்றுகளை முனைவர் த.செயராமன் கொடுத்துள்ளார்.

          திராவிடம் என்பது ஒரு பொருள் பற்றிக் குறிக்க உருவான இயல்பான சொல் அன்று. அது அயல்மொழி பேசும் அயல் இனத்தாரான ஆரியரால் உருவாக்கப்பட்ட திரிபுச் சொல். எனவே அது பயன்படுத்துவோரைப் பொறுத்து பல வேடங்கள் கட்டிக் கொள்ளும்.

          தமிழ் என்றால் அதில் திராவிடம் வரவே வராது. வரக்கூடாது என்பதுதான் தமிழின் தூய்மைக்கு உரைகல். திராவிடம் என்றால் அதிலும் தமிழ் வரவே வராது. ஐரோப்பிய ஆய்வாளர்கள் தவறாக, தமிழ் மொழிக் குடும்பத்திற்குச் சூட்டிய ஆரியப் பெயர்தான் திராவிடம். சமற்சிருத இலக்கியங்களிலிருந்துதான் கால்டுவெல் அவர்கள் ‘திராவிடம்’ என்ற திரிபுச் சொல்லை எடுத்துக் கொண்டார். பழைமை வாய்ந்த தமிழ் இலக்கியங்களில் ‘திராவிடம்’ என்ற சொல் இல்லை.

          சிந்துவெளிக்குப் புதிதாக வந்த ஆரியர்கள் தமிழம் என்பதைத்தான் திரமிளம், திராவிடம் என்று திரிபாக ஒலித்தார்கள் என்று பாவாணர் கூறுகிறார்.

Pin It