“நான் சண்டை இட விரும்புவது என் கௌரவத்திற்காக, எனக்காக அல்ல. ஆனால் அமெரிக்காவில் வெற்று கட்டாந்தரையில் உறங்கும் என்னுடைய கறுப்பின சகோதரர்களுக்கும், உண்ண ஒன்றுமில்லாத கறுப்பு மக்களுக்கும் தங்களைப் பற்றியே எந்த வித அறிவும் இல்லாத அவர்களுக்கும், நான் நிறைய செய்ய முடியும். கடவுள் தற்செயலாக என்னை இந்தப் பாக்ஸிங் மூலம் ஆசிர்வதித்து இந்த மக்களுக்கு உதவிச் செய்ய செய்திருக்கிறார். ஆனால் ஒரு வெற்றியாளனாக இருப்பது நல்லதுதான். நான் செய்ய வேண்டியதெல்லாம் ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்துவது மட்டுமே”.

          இந்த வார்த்தைகள் யாரால் எப்போது எங்கு சொல்லப்பட்டது என்பது மிக முக்கியமானது. இந்த வார்த்தைகளின் முழு பரிமாணத்தையும் நாம் புரிந்துக்கொள்ள ஒரு வரலாற்றை தெரிந்துக் கொள்ள வேண்டும். அல்லது ஒரு மனிதனின் வாழ்க்கையை படிக்க வேண்டும். ஆம், அந்த மனிதனின் வாழ்க்கை ஒர் வரலாற்று நிகழ்வுப்போலவே ஆனது.

          அந்த மனிதன் மன்னன் இல்லை, தலைவன் இல்லை, போராளி இல்லை, மக்கள் தலைவனும் இல்லை. உங்களைப்போல் என்னைப்போல் மிகச்சாதாரணமான மனிதன் தான். ஆனால் அவனின் வாழ்வாதாரப்போராட்டம் என்பது அவனின் சுயவளர்ச்சி மட்டுமில்லை, அது அவனின் இன எழுச்சியாகவும் இருந்தது. அது அவன் மக்களின் உரிமைக்கான அங்கீகாரத்தை கேட்டுப்பெறுவதல்ல எப்போதும் அவர்களோடு இருப்பது என்பதை உலகிற்கு அறிவிப்பதாக இருந்தது. ஒரு தனிமனிதனின் வாழ்வியல் போராட்டம் எப்படி ஒரு இனத்தின் அடையாளமாக இருக்க முடியும் என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டுமானால் அந்த மனிதனின் வாழ்க்கையை பார்க்கவேண்டும்.

          அந்த மனிதனின் பெயர் ‘கேசியஸ் மார்சிலஸ் கிளே ஜூனியர்’. பிறந்தது அமெரிக்காவில் ஜனவரி 17, 1942. ஒரு ‘ஆப்பிரிக்க-அமெரிக்கன்’ குடும்பத்தில் இரண்டு பிள்ளைகளில் முதல் பிள்ளை. ஏழ்மையான குடும்பம். ஒரு போலீஸ்காரரின் மிதிவண்டியை திருடும்போது பிடிபட்டு, அந்த போலீஸ்காரரால் ஒரு குத்துச் சண்டைக்காரனாக பயிற்று விக்கப் பட்டான். உள்ளூர் போட்டிகளில் பணத்திற்காக கலந்துக் கொண்டான். தொடர்ந்து வெற்றிதான்! அந்த வெற்றிகள் அவனை 1960-இல் ‘ரோமில்’ நடந்த ஒலிம்பிக் குத்துச் சண்டைப் போட்டியில் தங்கம் வெல்லும் வரை கொண்டு சென்றது. இங்கே இருந்துதான் அவன் வாழ்க் கை திசைமாறுகிறது. அதுநாள் வரை ‘அமெச்சூர் பாக்ஸராக’ இருந்தவன் ஒரு ‘தொழில்முறை பாக்ஸராக’ மாறுகிறான்.

          1960-இருந்து 63-க்குள் 19-0 கணக்கில் கலந்துக்கொண்ட எல்லா போட்டிகளிலும் வெற்றி பெறு கிறான். அதில் 15 நாக்-அவுட்ஸ். அவனிடம் விசித்திரமான ஒரு பழக்கம் இருந்தது, போட்டிகள் ஆரம்பிப்பதிற்கு முன்பாகவே தன்னோடு மோதும் எதிராளியை எந்த சுற்றில் தோற்கடிப்பேன் என்று சொல்லுவதும் அதை அப்படி யே நிறைவேற்றுவதும். சொல்லி அடிப்பது என்பார்களே அது இதுதான் போல.

          அதே போல மற்றொரு பழக்கமும் அவனிடமிருந்தது. தன்னோடு போட்டிப்போடும் போட்டியாளரின் முன் தன்னைப் பற்றி பெருமையாகவும், அவனைத் தாழ்த்தியும் பேசுவது. பல நேரங் களில் அது தற்பெருமையாக, ஆணவப் பிரகடனமாக இருக்கும். அந்த வார்த்தைகளெல்லாம் பின் னால் மேற்கோள்களாக ஆகின. காரணம் அத்தனை வார்த்தை களையும் மெய்ப்பித்தான் அவன். 

 - “நானே மிகச் சிறந்தவன்”

- “நீங்கள் என்னை யாராக இருக்கச் சொல்லுகிறீர்களோ அவனாக நான் இருக்க மாட்டேன்”

          இப்படி அவன் சொன்ன வார்த்தைகள் ஏராளம். தான் வாழ்ந்த முறையால் அத்தனை வார்த்தை களையும் சரித்திர குறிப்பேட்டில் குறிக்கச்செய்தான். அதை உலகம் ஒருபோதும் மறுத்ததில்லை.

          எதிராளியை போட்டி களுக்கு முன்னால் திட்டுவதும், அவர்களின் மனோதிடத்தை உரு குலைப்பதும் அவனுக்கு கைவந்தக் கலை. ‘நீ ஒரு அசிங்கமான கரடி’ என்றும் ‘நீ என்னை தாக்கவே முடியாது, ஏனெனில் உன் கண்கள் பார்க்க முடியாததை உன் கைகள் எப்படித் தாக்கும்?’ என்றும் ‘சன்னி லிஸ்டனோடு மோதியப் போட்டி யின் போது அவனைப் பார்த்து சொன்னான், மேலும் ‘நான் வண்ணத்துப்பூச்சியைப்போல் மிதப்பேன், தேனியைப்போல் தாக்குவேன்’ என்றான். பாரம்பரிய முறையில் சண்டை யிடாமல் தனக்கே உரிய வகையில் மாறுபட்ட உத்திகளையும் வடிவமைத்துக் கொண்டான். போட்டிகளின் போது தன் கால்களை அதிகம் பயன்படுத்தினான், ஒரு இடத்தில் நில்லாமல், வேகமாக நகர்ந்துக் கொண்டே இருந்தான். அதேபோல் அவனுடைய பேச்சுகள் ரிதமாக இருக்கும் அது அவனுக்கு ஒரு குத்துச்சண்டை கவிஞன் என்று பெயர் எடுத்துக்கொடுத்தது.

         1964-இல் ‘சன்னி லிஸ்டனோடு’ மோதி வெற்றி பெற்று தான் முதல் உலகச் சாம்பியன் பட்டத்தைப்பெற்றான். அப்போது அவனின் வயது 22. மிகக்குறைந்த வயதில் ‘ஹெவி வெயிட்’ பிரிவில் அந்தப்பட்டதை வென்றது அவன் தான் முதல்.

          தன்னுடைய வெற்றிகளை அவன் தன் சுயவாழ்க்கையின் வளர்ச்சியாக மட்டும் பார்க்க வில்லை. அது தன் இனத்தின் வெற்றியாக, ஒடுக்கப்பட்ட கறுப் பின மக்களின் உரிமைக்கான அங்கீகாரமாக மாற்ற முயன்றான். ஒரு போதும் அவன் தன்னை ஒருவனாக, தனி மனிதனாக கருதியதில்லை. தான் ஒரு இனத்தின் அங்கம் என்பதும், தான் என்பது தன் இனத்தையும் சேர்த்துதான் குறிக்கும் என்பதும் அவனின் வெளிப்பாடாக இருந்தது.

          தான் நம்பியது மட்டு மல்லாமல் உலகமும் அப்படித்தான் பார்க்கவேண்டும் என்றான். அது அவனை இன்னும் பலமானவனாக மாற்றிற்று. மூர்க்கமானவனாக மாற்றிற்று. பல நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட இனம் அல்லவா, அதன் ஒட்டு மொத்த எழுச்சியாகவே அவனின் செயல் பாடுகள் இருந்தன. ஆம் நாம் அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஏனெ னில் அவன் தன்னை உலக சாம்பியன் என்று நிருபித்ததும் செய்த முதல் செயல் என்னத் தெரியுமா?

          தன்னையும் தன் இனத்தை யும் இதுநாள் வரை அடிமையாக ஆண்டதுமில்லாமல் அதை குறிக்கும் வகையில் தன் பெயரில் ஒட்டிக் கொண்டிருக்கும் ‘கிளே’ என்ற பெயரை களைய நினைத்தான், மேலும் கிருத்துவனாக இருப் பதிலிருந்தும் மாற நினைத்தான். தான் சுதந்திரமானவன் என்பதை தன் மதம் மற்றும் பெயரை மாற்றி இந்த உலகத்திற்கு அறிவித்தான். அவன் மாறிய மதம் இஸ்லாம். மாற்றிய பெயர் ‘முகமத் அலி’.

          ஆம் தோழர்களே! உலகத்தின் ஆகச் சிறந்த குத்துச் சண்டை வீரர் ‘முகமத் அலி‘ தான் அவர். அவரின் முந்தைய பெயரான ‘கேசியஸ் மார்சிலஸ் கிளே ஜூனியர்’ என்ற பெயரில் நாம் அவரை நினைவில் கொள்வதில்லை. அது மிகச் சரியானதுதான். ஏனெனில், அது அவர் அடிமை என்பதை குறிப்பதாக இடப்பட்டது. தான் அடிமையில்லை, சுதந்திர மானவன் என்பதுதான் அலியின் அறிவிப்பு. இதை மற்றவர்கள் ஏற்காதபோதும், மறுக்கும்போதும் அலிக்கு வரும் கோபம் கொஞ்சம் நஞ்சம் இல்லை.

Ernie Terrell - என்ற குத்துச்சண்டை வீரரோடு மோதிய ஒரு போட்டியின் போது Terrell அலியைப்பார்த்து ‘கேசியஸ் கிளே’ என அழைத்துவிட்டார். அது அலியை கோபப்படுத்தியது. தன்னை அவமானப்படுத்தியதாகக் கருதினார். சாம்பியன் தன்னை இழிவுப்படுத்தியதற்கு தண்டிக்க நினைத்தார். அந்த போட்டி முடியும் முன்பாக ”என் பெயர் என்ன என்பதை உனக்கு தெரிய வைக்கிறேன்” என்றார். அவ்வளவு தான் அந்த போட்டி முடியும்வரை, ஒவ்வொரு குத்தின் போதும் ” What’s my name, Uncle Tom ... What’s my name” என்று டெரிலிடம் கேட்டுக்கொண்டே இருந்தார். டெரில் மிக மூர்க்கமாக தாக்கப்பட்டார். குத்துச்சண்டை வரலாற்றிலேயே மிக அசிங்கமான சண்டை என அதைச் சொல்லுகிறார்கள். மிக மோசமாக தண்டித்தார் அலி. பதினைந்து சுற்றும் நடந்தது அந்தச்சண்டை. அலி நினைத்திருந்தால் அந்தச் சண்டையை முன்பே முடித்திருக்க முடியும் ஆனால் Ernie Terrell-ஐ தண்டிக்க நினைத்ததினால்தான் பதினைந்து சுற்று வரை கொண்டுவந்து அவனை தாக்கினார் அலி என்கிறார்கள்.

          பெயரை மாற்றிச் சொன்னதற்கா இந்த அடி? இல்லை. அது அவரின் சுதந்திரத்தை மறுத்ததிற்கான அடி. அவரின் சார்பாக மட்டுமில்லை. ஒட்டு மொத்த அவரின் இனத்தின் சார்பாக விழுந்த அடி அது. இந்த சுதந்திர பிரகடனத்தை அவர் தனிமனிதர் களிடத்தில் மட்டும் காட்டவில்லை. ஒரு தேசத்திடமே காட்டினார். அதுவும் அவர் வாழ்ந்த ஆனானப் பட்ட அமெரிக்காவிடமே காட்டி னார்.

          அது 1966 ஆம் ஆண்டு. அமெரிக்கா வியட்நாம் போரில் இருந்த காலகட்டம். அமெரிக்கச் சட்டப்படி முகமத் அலியை வியட்நாம் போருக்கு அனுப்ப முயன்றார்கள். அலி முடியாது என்றார். நான் ஏன் போக வேண்டும்? எனக்கும் வியட் காங்கிற்கும் எந்த வித பிணக்கும் இல்லை என்றார்.

          ” எனக்கு எந்தவித சச்சரவும் வியட்காங்கிடம் இல்லை, எந்த வியட்நாமியும் என்னை நீக்ரோ என்று அழைத்தது இல்லை”

          “இல்லை, நான் போகப் போவதில்லை, 10,000 மைல் தாண்டிபோய் மக்களை கொன்றும் அவர்களின் உடைமைகளை கொளுத் தியும், வெள்ளையர்கள் கறுப்பு மக்களை உலகமுழுவதும் அடிமைப் படுத்தி வைத்திருப்பதை தொடர் வதற்கு உதவப்போவதில்லை”

          “எதற்காக என்னை சீருடை அணிந்து பல்லாயிரம் மைல் கடந்து சென்று வியட்நாமிலிருக்கும் பிரவுன் மக்களின் மீது குண்டுப் போடச் சொல்லுகிறார்கள்? இங்கே ‘நீக்ரோ’ என அழைக்கப் படும் என் மக்கள் மனித உரிமைகள் எதுவும் அற்று நாய்களைப்போல நடத்தப்படும்போது”

          இவைகள், அலியின் வியட்நாம் போருக்கு எதிரான புகழ்ப் பெற்ற வார்த்தைகள். வியட்நாம் போரை அவர் எதிர்த்தார். ஏனெனில் அது அவர் இனத்தைப் போலவே இன்னொரு இனத்தின் மீதான வன்முறை என்பதை அவர் உணர்ந்திருந்ததினால்தான்.

          இந்த எதிர்ப்பை அவர் தன்னை இராணுவத்திற்கு ஆளெ டுக்கும் போது காட்டினார். அந்த இராணுவ அதிகாரி அலியை, அவரின் முந்தைய பெயரான ‘கேசியஸ் மார்சிலஸ் கிளே ஜூனியர்’ என அழைத்தார். அலி தன் இடத்தி லிருந்து நகராமல் இருந்தார். மூன்று முறை அழைத்தார், அப்போதும் அலி அசையாமல் இருந்தார். காவல் அதிகாரி அலியின் முன் வந்து ” கிளே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று தெரியுமா? அடுத்த முறை நீங்கள் பதிலளிக்காவிட்டால், நீங்கள் கைது செய்யப்படுவீர்கள், ஐந்தாண்டு சிறையும் பத்தாயிரம் டாலர் அபதாரமும் விதிக்கப்படும்” என்றார். மறுமுறை அவரின் பெயர் அழைக்கப்பட்ட போதும் அலி நகராமல் இருந்தார். அலி கைதுச் செய்யப்பட்டார். அதேநாள் நியூயார்க் விளையாட்டு கழகம் அவரின் குத்துச்சண்டைக்கான உரிமையை ரத்துசெய்தது மேலும் அவரின் உலகச்சாம்பியன் பட்டமும் பறிக்கப்பட்டது.

          தன் சுதந்திரத்திற்கான, அங்கீகாரத்திற்காக தான் போராடி பெற்ற பட்டத்தையும் தன் தொழிலுக்குத் தேவையான உரிமத்தையும் ஒரே நேரத்தில் அலி இழந்தார். ஆனால் அவர் கலங்கி விடவில்லை. வழக்கு உச்சநீதிமன்றத் திற்குப்போனது. அலி மக்களோடுப் பேசினார். மக்கள் அவரோடு இணைந்து போருக்கான எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். மக்களிடம் அலியின் மதிப்பு உயர்ந்தது. நான்கு வருடம் அவர் தடைச்செய்யப் பட்டிருந்தார். 1971ல் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடிச்செய்தது. அவரின் உரிமம் மீண்டும் தரப்பட்டது.

          பிறகு அக்டோபர் 30, 1974-இல் நடந்த போட்டியில் ‘ஜார்ஜ் ஃபோர்மேனை’ வென்று இரண் டாவது முறையாக உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றார். ஆப்பிரிக்கா கண்டத்திலிருக்கும் ஜியர் நாட்டில் நடந்த அந்த போட்டி “The Rumble In The Jungle” என்று அழைக்கப் படுகிறது. அப்போது அது உலகின் மிக பிரபலமான போட்டியாகப் பார்க்கப்பட்டது. ஏனெனில் ‘ஜார்ஜ் ஃபோர்மேன்’ அப்போதைய நடப்பு சாம்பியன், அவரை வெல்லுவது மிகக்கடினம் என கருத்துக்கணிப்புகள் சொல்லின. அதுவுமில்லாமல் ஜார்ஜ் ஃபோர்மேனின் குத்துகள் மிகப் பிரபலம். எதிராளியை குத்துகளா லேயே தோற்கடிப்பார். அவரை தோற்கடிப்பது முடியாத காரியம் என அலியின் நீண்ட நாள் ஆதரவாளர் களாலேயே நம்பப்பட்டது.

          அந்த போட்டியின் போது தான் நாம் இந்த கட்டுரையின் முதல் பத்தியில் பார்த்த வரிகளை அலி சொன்னார். இப்போது அந்த வரிகளை மீண்டும் ஒருமுறை படித்துப்பாருங்கள். அதனுடைய அர்த்தம் முழுமையாக புரியும்.

          அந்தச்சண்டையில் ஜார்ஜ் ஃபோர்மேன் அலியை மூர்க்கமாகத் தாக்கினார். அலி வழக்கபோல் ஒரு புதிய யுத்தியை இந்த போட்டியில் பயன்படுத்தினார். அதாவது சுற்றுக்கயிற்றோடு சாய்ந்துக்கொண்டு அடிகளை தடுத்தும், சில சமயங்களில் வாங்கியும் கொண்டார். நூற்றுக்கணக்கான அடிகளை ஜார்ஜ் ஃபோர்மேன் அலியின் மேல் பிரயோகித்தார். அத்தனையும் தாங்கிகொண்ட அலி, ஜார்ஜ் ஃபோர்மேன் சோர்வடையும் வரை காத்திருந்தார். ஏழாவது சுற்றுக்கு அப்புறம் ஜார்ஜ் ஃபோர்மேன் சோர்வடைந்திருப்பதைக் கண்ட அலி எட்டாவது சுற்றில் தொடர்ச்சியான குத்துகளின் மூலம் ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்தினார். இதன்மூலம் இரண்டாவது முறை யாக உலகச் சாம்பியன் பட்டத்தை அலி பெற்றார். இந்த போட்டியில் அவர் உபயோகித்த உத்தி “The Rope-A-Dope” என்று அழைக்க படுகிறது. இந்த போட்டி அப்படியே ஆவணப்படமாக எடுக்கப்பட்டு “When We Were Kings” (மன்னர்களாய் நாம் இருந்த போது) என்ற பெயரில் திரையிடப் பட்டு, சிறந்த ஆவணப் படத்திற்கான ஆஸ்கர்(1996) விருதை யும் பெற்றது.

          1978 மீண்டும் மூன்றாவது முறையாக அலி உலகச் சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். அதைத் தொடர்ந்து ஜூன் 27, 1979-இல் அலி ஓய்வுப்பெற்றார். அவர் கலந்துக் கொண்ட சண்டைகள் மொத்தம் 61, வெற்றி பெற்றது 56, அதில் ‘நாக் அவுட்டில்’ வெற்றிப்பெற்றது 37. இதுவரை முறியடிக்கப்படாத சாதனைகள். அவர் சண்டைப் போட்ட காலத்தை குத்துச் சண்டையின் பொற்காலம் என் கிறார்கள்.

          அதற்குப்பிறகு பல பொது காரியங்களில் ஈடுபட்டும் தன் இனமக்களின் முன்னேற்றத் திற்காகவும் செயல்பட்டு வருகிறார். மக்கள் எங்கெல்லாம் அவதிப் படுகிறார்களோ அங்கெல்லாம் சென்று உதவுகிறார். 22 மில்லியன் மக்களுக்கு உணவு வழங்கி இருக்கிறார் என்கிறார்கள். பிற் காலத்தில் 1991-இல் ஐ.நா. வின் சார்பில் ஈராக் சென்று ‘சதாம் உசைனை’ சந்தித்து அமெரிக்க பிணையக்கைதிகளை விடுவிப்பது சம்பந்தமாக பேசி இருக்கிறார். 1998-இருந்து 2008 வரை ஐ.நாவின் அமைதி தூதுவராக நியமிக்கப் பட்டிருந்தார். நவம்பர் 2002-இல் அமைதிக்காக ஆப்கானிஸ்தான் சென்றிருக்கிறார்.

          அமெரிக்காவின் சிறந்த குடிமகனுக்கான பெரிய விருது களான ‘Presidential Citizens Medal' மற்றும் ‘Presidential Medal of Freedom' ஆகிய விருதுகளை 2005-இல் பெற்றிருக்கிறார். எந்த அரசாங்கத்தோடு இவர் மோதினாரோ அதே அரசாங்கம் இவரை சிறந்த குடிமகன் என்று விருது கொடுத்து கௌரவித்தது. இதைதாண்டி பல நாட்டு விருதுகளும், கௌரவ டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார்.

          1984-இருந்து ‘பர்கின்சன்ஸ்’ என்ற நோயால் தாக்கப்பட்டி ருக்கிறார். இவர் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவம் ஒன்று.

          இவர் 1960 ரோமில் ஒலிம்பிக்கில் வாங்கிய தங்கப் பதக்கத்தை ஆற்றில் தூக்கி எறிந்திருக்கிறார், காரணம் ஒரு விடுதியில் வெள்ளையர்களுக்கு மட்டும்தான் உணவுத்தரப்படும் என்று சொன்னதினால் கோபப் பட்டு. பின்பு 1996-இல் அட் லாண்டா ஒலிம்பிக்கின்போது தூக்கி எறிந்த பதக்கத்திற்கு பதிலாக மாற்று தங்கப்பதக்கம் இவருக்கு தரப்பட்டது.

          இவரின் வாழ்க்கையை சித்தரிக்கும் ‘அலி’ திரைப்படம் 2001-இல் வெளிவந்தது. புகழ்ப் பெற்ற இயக்குனர் ‘மைக்கேல் மேன்’ இயக்கத்தில் ‘வில் ஸ்மித்’ முகமத் அலியாக நடித்தார். பொதுவாக ஒரு வாழ்க்கை வரலாற்றுப்படம் என்பது ஒருவரின் சிறுவயது முதல் மரணம் வரை அல்லது சாதனைகள் வரை சொல்லப்படும். ஆனால் இந்தப் படம் அப்படி எடுக்கப்பட வில்லை. இந்தப்படம் ஒரு தனிமனிதனின் இனம் சார்ந்தப்போராட்டமாக, அரசியல் பார்வையில் முன்வைக்கப் படுகிறது. அலி தன் முதல் உலகச் சாம்பியன் பட்டம் பெறுவதில் தொடங்கி, அவரின் அரசியல் பார்வையில் சென்று, தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப்பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக உலகச் சாம்பியன் பட்டதை அவர் மீட்டெடுப்பது வரை சொல்லப் பட்டிருக்கிறது.

          மிக அற்புதமான படம். மிகுந்த தொழில்நுட்பத்தில், சிறந்த நடிப்பில், ரசனையாகச் சொல்லப் பட்டிருக்கிறது. இந்தப்படத்தைப் பார்த்ததின் தூண்டுதலே இந்தக் கட்டுரை. படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது நம்மை வேறொரு தளத்திற்கு அழைத்துச் செல்லுகிறது.

          ஒரு திரைப்படம் என்பது அதன் கதையம்சம், கருத்து, பொழுதுப்போக்கு என எல்லாம் தாண்டி ஒருவித உணர்வை நமக்குள் தூண்டும். என்னை பொருத்தவரை இந்த உணர்வைக் கொண்டுதான் திரைப்படங்களை மதிப்பிடுகிறேன். ஒரு நல்ல திரைப்படம், அது என்ன மாதிரியான படமாகவும் இருக்க லாம். ஆக்சன், த்ரிலர், நகைச்சுவை, சோகம் என ஏதோ ஒன்று அதன் முடிவில் அது ஏற்படுத்தும் முழுமையான உணர்வை நான் அடைந்தால் மட்டுமே நான் அந்தப்படத்தை என்வரையில் நல்லபடமாக கருதுகிறேன்.

          இந்தப்படம் பார்க்கும் போதே, நம்மை நம் அரசியல் அறிவோடு இணைத்து விடுகிறது. அது தூண்டும் அறிவுப்பூர்வமான விடைகள் நோக்கிய பயணம் நம்மை ஒரு வரலாறு நிகழும் சமயத்தில் உடனிருந்த நிலையில் வைத்திருக்கிறது.

          ”நானே மிகச் சிறந்தவன்” என்று உலகத்திற்கு அவர் சொன்ன போது அவருக்கு வயது இருபது.

          அலி தன்னுடைய முதல் உலகச் சாம்பியன் வெற்றிக்குப் பிறகு அந்த மேடையில் சொன்னார் “I shook up the world!”. அது உண்மைதான். நம்மில் பலர், நம்மால் இந்த உலகத்தை அதிர வைக்க முடியும் அலியைப்போல என்று நம்புவதுகூட இல்லை. பெரும்பான்மையோர் தெரிந்து வைத்திருப்ப தில்லை மேன்மையும், நன்மைகளும் பிரகாசிக்க தாங்கள் ஒரு கருவியாக இருக்க முடியும் என்பதை. அலியின் வாழ்க்கை நமக்கு சுட்டிக்காட்டுவது ‘நாம் இன்னும் சிறப்பான வர்களாக இருக்கலாம்’ என்பது. நம்புங்கள் தோழர்களே நாம் முயன்றால் இந்த உலகத்தை அதிரவைக்க முடியும்.

“மற்றவர்களுக்கு சேவை செய்வது நீங்கள் இந்த பூமியில் இருப்பதற்கு செலுத்தும் வாடகை” -          முகமத் அலி

Pin It