தமிழ்நாட்டின் கல்விச் சூழலை உயர்த்து வதற்கான போராட்டக்களங்கள் அனைத்திலும் முன்னணியில் நின்று வாதிட்டுக் கொண்டிருப்பவர், பிரின்சு கசேந்திரபாபு அவர்கள்! அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தல், கொள்ளை இலாபத்திற்கென தொடங்கப்பட்ட தனியார் பள்ளிகளின் அடாவடிகளை எதிர்த்தல் தொடங்கி புதிய கல்விக் கொள்கை _- நீட் தேர்வு என கல்வித் தளத்தில் நடைபெற்று வரும் தாக்குதல்களுக்கு எதிராக, மக்களைத் திரட்டிப் போராடி வருபவர். பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர். நீட் எதிர்ப்புக்காக பல்வேறு அரசியல் கட்சிகளையும், அறிவுத் துறையின ரையும் தேடிப்பிடித்து சந்தித்துக் கொண்டிருந்தவரை, தமிழர் கண்ணோட்டம் இதழ் செவ்விக்காக நாம் தேடிப் பிடித்தோம். இனி அவருடன்...
த.க. : எப்படி பொதுவாழ்விற்கு வந்தீர்கள் ?
பிரின்சு : 1980களில் மேனிலைப் பள்ளிக் கல்விக்காக, வடசென்னை கொருக்குப்பேட்டையில் அமைந்துள்ள தியாகராயர் கல்லூரி மேனிலைப் பள்ளியில் சேர்ந்ததுதான் என் வாழ்க்கையின் திருப்பு முனை! அப்பகுதி உழைக்கும் மக்களுடன் நேரடியான கள அனுபவம் கிடைத்தது. நிர்வாகம் ஆசிரியர்களை பழி வாங்குவதை எதிர்த்தும், விளையாட்டுத் திடலை விற்க முற்படுவதைத் தடுக்கவும் நடந்த மூன்று மாத போராட் டம் என்னை இடதுசாரி இயக்கத்திற்குள் கொண்டு வந்தது.
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இந்திய மாணவர் சங்கம் என இரண்டு அமைப் புடனும்இணைந்து போராடினோம். இறுதி யாக இந்திய மாணவர் சங்கத்தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன். அதன் தொடர்ச்சி 1996 முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறேன்.
த.க. : எப்பொழுது கல்வித்துறைச் செயல்பாடு களில் தீவிரமானீர்கள்?
பிரின்சு : கடந்த 2002ஆம் ஆண்டு, டி.எம்.ஏ. பாய் வழக்குத் தீர்ப்பிற்கு பிறகு, கல்வி பரவலாக்கப்படுவதற்கு பதிலாக பணம் படைத்தவருக்கு மட்டுமே கல்வி என்ற புதிய நிலை உருவானது. தமிழ்நாட்டில் மெட்ரிக் பள்ளி மோகம், அரசுப்பள்ளியில் பயில்பவர்களை ஏளனமாகப் பார்க்கும் நிலையை உருவாக்கியது. இச்சூழலில் கல்வித் தளத்தில் தொடந்து இயங்க கல்விக்கான ஒரு அமைப்பு தேவை என உணர்ந்தேன்.
நீண்ட விவாதத்திற்கும் முயற்சிக்குப் பின், ஒத்த கருத் துடைய கல்வியாளர்கள், கல்வியியல் செயல்பட்டாளர் கள் இணைந்து “பொதுப்பள்ளிக்கான மாநில மேடை” என்ற அமைப்பை 2007ஆம் ஆண்டு உருவாக்கினோம். அதற்கென www.samacheerkalvi.in என்ற வலை தளத்தை உருவாக்கிச் செயல்பட்டு வருகின்றோம்.
த.க. : தமிழ்நாட்டில் சமச்சீர்க்கல்வி கொண்டு வரப்பட நீங்கள் கடுமையாக உழைத்தீர்களே.. அதன் நிலை இப்போது, எப்படி இருக்கிறது?
பிரின்சு : தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, தனியார் பள்ளிகள் சமச்சீர் கல்வியை இரத்து செய்ய வைத்த போது வீதியிலும் நீதிமன்றத்திலும் போராட் டத்தைத் தொடர்ந்தோம். தன்னெழுச்சியாகத் தமிழகம் முழுக்க போராட்டம் நடந்து, நீதிமன்றத்தில் வலுவாக வழக்கை முன் வைத்தோம். உச்ச நீதிமன்றத்தில் வழக்காடும் போது பலர் வழக்கு தொடுத்திருந்தாலும் இணைந்து செயல்பட்டோம். ஒன்றுபட்ட செயல்பாடு தான் வெற்றியைத் தந்தது. அப்படிப் போராடிப் பெற்ற “சமச்சீர் கல்வி” வெறும் பொதுப் பாடத்திட்டம் அறிமுகத்தோடு நின்று போனது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும் அதை ஒரு படி முன்னேற்ற மாகத்தான் பார்க்கிறோம்.
த.க. : மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை யால் என்னென்ன பாதிப்புகள் நிகழக்கூடும் ?
பிரின்சு : பா.ச.க. நரேந்திர மோடி அரசால் முன் வைக்கப்பட்டுள்ள ‘புதிய கல்விக் கொள்கை’ என்பது, மாணவர்களைப் படிக்க வைப்பதற்கான கல்விக் கொள்கை அல்ல! கல்வி பயில்வதிலிருந்து ஒவ்வொரு வரையும் வடிகட்டி வெளியேற்றும் நோக்கத்துடனேயே இது உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களை மதிப்பெண் உள்ளிட்ட வெவ்வெறு அளவுகோல்களின் வழியே தனித்தனியாய்ப் பிரித்து, அவர்களை குழந்தைப் பருவத்திலேயே அவர்களுக்குக் கல்வி வராது என சான்றளித்து, அவர்களுடைய வாழ்வாதாரத்தைத் தேடப் பயன்படும் தொழில் செய்ய தேவையான தொழில் பயிற்சி நோக்கித் தள்ளிவிடுவதையே இது முதன்மையாகக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, கிராமப்புற மாணவர்களையும், ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களையும், “உனக்குக் கல்வி வராது” என அவர்களது வகுப்பறைகளிலிருந்து வெளியேற்றி சான்றளித்து விடுவர்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உயர்க்கல்வியில் கணிதம் - அறிவியலுக்கு பதிலாக, சட்டம் மற்றும் கலை படிப்பு மேற்கொள்வதே வாய்ப்பு என்ற சூழல் உருவாகியிருந்த காலகட்டத்தில், அண்ணல் அம்பேத்கர் அவர்கள், 1920களிலேயே ஆங்கிலேய அரசிடம் உயர்க்கல்வியில் கணிதமும், அறிவியலும் பயிலாமல் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை எவ்வாறு முன்னேறும் என்ற வினாவை எழுப்பி, உயர்க்கல்வியில் கணிதம் - அறிவியல் படிக்க அரசே வாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.
இன்றைய மோடி அரசு, மாணவர்களை பள்ளிக் கல்வி முறையிலிருந்தே அப்புறப்படுத்தி, பெரும் பகுதி மக்கள் உயர்க்கல்வியில் கணிதம் _- அறிவியல் படிக்க வாய்ப்பற்றவர்களாக மாற்றுகிறது.
இன்றைக்கு இந்தியாவில், ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் பல இலட்சம் பேர் கல்வி உதவித் தொகைப் பெற்று கல்வி கற்று வருகின்றனர். அதிலும், இந்தியா விடுதலை பெற்ற ஐம்பதாண்டுகளுக்குப் பிறகுதான், நீதிபதி இராசேந்திர சச்சார் குழுவின் அறிக்கையின் வெளிச்சத்தில் சிறுபான்மை மதப்பிரிவுகளைச் சேர்ந்த மாணவர் களுக்கான கல்வி உரிமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியுள்ளது.
இவற்றையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாத ஆர்.எஸ்.எஸ்., நேரடியாக மக்கள் அனுபவித்து வரும் இந்த உரிமைகளை ஒழிக்க துணிவு கொள்ளவில்லை. ஆனால், இந்தப் புதிய கல்விக் கொள்கையின் வாயிலாக மறைமுகமாக இதை ஒழிக்க திட்டம் தீட்டியுள்ளது.
பதினைந்து அகவையிலிருந்து இருபத்துநான்கு அகவைக்குள் சற்றொப்ப 50 கோடி மாணவர்கள் இருக்கும் நாட்டில், “பொருளியல்” சூழலில் பின் தங்கியுள்ள 10 இலட்சம் மாணவர்களுக்கு மட்டுமே, அவர்களது மதிப்பெண் அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று புதிய கல்விக் கொள்கைக்கான ஆவணத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. “தகுதி” _- “திறமை” என்று கூறிக் கொண்டு, இட ஒதுக்கீட்டையும், ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் உரிமைகளையும் ஒழிக்கும் சதித்திட்டத்தையே ஆர்.எஸ்.எஸ். மோடி குழுவினர், புதிய கல்விக் கொள்கையின் வாயிலாக நிறைவேற்றத் துடிக்கின்றனர்.
அண்மையில், உத்திரப்பிரதேச முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள பா.ச.க.வின் யோகி அதித்தியநாத், ஒருபடி மேலே போய் அங்குள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில், ஒடுக்கப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக் கீட்டை நேரடியாகவே பறித்து ஆணையிட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். கும்பலால், இந்தியாவின் அடுத்த தலைமையமைச்சராக அவர் முன்னிறுத்தப்பட்டாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை!
இந்த புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தின் நீட்சியாகத்தான், மருத்துவ சேர்க்கைக்கான அனைத்திந்திய அளவிலான “தேசிய தகுதி மற்றும் பொதுநுழைவுத் தேர்வு” (National Eligibility cum Entrance Test - NEET) என்று சொல்லப்படும் “நீட்” தேர்வு முறை திணிக்கப்பட்டுள்ளது.
த.க. : “நீட்” தேர்வு முறையை தமிழ்நாடு மட்டும் ஏன் எதிர்க்கிறது என்று, அனைத்திந்திய அளவில் பலரும் கேள்வி எழுப்புகின்றனரே..
பிரின்சு : ஆம். அது உண்மைதான்! “நீட்” தேர்வை தமிழ்நாடு எதிர்ப்பதற்கு பல வரலாற்றுச் சிறப்புமிக்கக் காரணிகள் உள்ளன. நம் மரபும் அப்படிப்பட்டது!
1951ஆம் ஆண்டு, மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பம் கூட போடாத செண்பகம் துரைராசு என்பவரின் மனுவை வைத்துக் கொண்டு, இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வியில் வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை இரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பு தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெரியார் போன்ற தலைவர்கள் வலுவாகக் குரல் கொடுத்தனர்.
அதன் விளைவாக, 1950 சனவரி 26இல் செயலுக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டம், வெறும் பதினைந்தே மாதங்களில் திருத்தம் செய்யப்பட்டு, கல்வியிலும், சமூகத்திலும் பின்தங்கிய மக்களுக்கு இட ஒதுக்கீடு பெறுவதற்கு வழிவகுத்தது.
1954 முதல் 1963 வரை ஒன்பதாண்டுகள் தமிழ் நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த கர்மவீரர் காமராசர், தமிழ்நாட்டில் பல கல்வி நிலையங்களை ஏற்படுத்தினார். 3 கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி, 5 கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி என்பதோடு நிற்காமல், மதுரை மருத்துவக் கல்லூரி (1954), தஞ்சை மருத்துவக் கல்லூரி (1959), கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி (1960), நெல்லை மருத்துவக் கல்லூரி (1965) என மாவட்டம் தோறும் குறிப்பிடத்தக்கக் கல்லூரிகளை அவர் உருவாக்கினார்.
தமிழ்நாட்டில்தான், கிராமப்புற மாணவர்களுக்கு, கல்லூரி சேர்க்கைகளில் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மருத்துவக் கல்லூரி பட்ட மேற் படிப்பில் 50 இட ஒதுக்கீடும் தமிழ்நாட்டில்தான் இருந்தது. இப்படி, சமூக நீதி போர்க்களமாக உள்ள தமிழ்நாடுதான், நீட் தேர்வையும் எதிர்த்து நின்று போராடுகிறது.
த.க. : தனியார் மருத்துவக் கல்லூரிச் சேர்க்கை யில் நடைபெற்று வரும் பல்வேறு முறைகேடுகளால் மருத்துவக் கல்வி வணிகமயமாகும் சூழலைத் தடுக்கவே, “நீட்” தேர்வு கொண்டு வரப்பட்டுள்ள தாகவும், எனவே அதை வரவேற்பதாகவும் சிலர் கூறுகிறார்களே.. அது பற்றி தங்கள் கருத்து ?
பிரின்சு : கடந்த ஆண்டு (2016- _ 2017) அனுபவம், நீட் தேர்வு தனியார் வணிகக் கொள்ளையை தடுக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. வணிகக் கொள்ளையைத் தடுக்கிறோம் என்ற காரணத்தை முன் வைத்து, கூட்டாட்சி _- கல்வி -_ பொதுச் சுகாதாரத்துறை ஆகிவற்றின் மீதான மிகப் பெரிய தாக்குதலையே “நீட்’’ தேர்வின் மூலம் நடத்து கிறார்கள்.
“நீட்” தேர்வை எதிர்க்கும் போராட்டம், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக நடைபெறும் போராட்டம் என்று சுருக்கிவிடக் கூடியதல்ல!
“நீட்” தேர்வின் மூலமாக, ஒரு மாநில அரசுக்கு தன்னுடைய மாநிலத்தில் உள்ள கல்லூரியில் மாணவர் களைச் சேர்க்கும் குறைந்தபட்ச நிர்வாக உரிமைகூட கிடையாது என்று மறுக்கிறது இந்திய அரசு! அதேபோல், வெவ்வேறு வரலாற்று வழிக் காரணங் களால் ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவுகின்ற இட ஒதுக்கீடுகளை, ஒரேடியாகப் பறிக்கிறது இந்திய அரசு! வெறும் மாணவர் சேர்க்கை என்பதோடு மட்டுமின்றி, மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகவும் “நீட்” தேர்வு பார்க்கப்பட வேண்டும்.
இருபதாண்டுகளாக மருத்துவம் மற்றும் பொறி யியல் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு நடத்திய தமிழ்நாடு அரசு, அதனால் பெற்ற அனு பவத்தின் அடிப்படையில்தான், 2007ஆம் ஆண்டு இந்நுழைவுத் தேர்வை இரத்து செய்து சட்டம் இயற்றி யது. அந்த சட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தாலும், உச்ச நீதிமன்றத்தாலும் உறுதி செய்யப்பட்டது. இப்பொழுது, அதை மீறும் வகையில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், கிராமப்புற மற்றும் தமிழ்வழிப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை இப்பொழுதே மிகக் குறைவாக உள்ள சூழலில், நீட் தேர்வு இதை மேலும் மோசமாக்கப் போகிறது. தமிழ்நாடு அரசின் பாடத் திட்டமும், பள்ளிச் சூழலும் தரம் உயர்த்தப்பட வேண்டியது தேவைதான். எனினும், அதைக் காரணமாக வைத்துக் கொண்டு தமிழ்நாடு அரசின் கல்வி உரிமையையே பறிப்பது எவ்வகையில் ஞாயம்?
தமிழ்நாட்டிலுள்ள மாவட்ட ஆட்சியர்களின் பணி என்ன தெரியுமா? பத்தாம் வகுப்பில் அரசுப் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறும் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர் களில் 20 பேரை மாவட்டந்தோறும் தேர்ந்தெடுத்து, அரசு செலவில் அவர்களை தனியார் பள்ளிகளில் மேனிலைக் கல்விப் படிக்க வைக்கிறார்கள். இராம நாதபுரம், பெரம்பலூர் போன்ற ஒரு சில விதிவிலக்கான மாவட்டங்களில்தான், அரசுப் பள்ளிகளில் மேனிலைக் கல்வி படிக்க வைக்கிறார்கள். கோயில் வரை தேரை நாம் கஷடப்பட்டு இழுத்துச் செல்வோமாம், அதன்பிறகு அதை வேறு யாரோ இழுத்துச் செல்வார் களாம்.
அரசு நிர்வாகமே இப்படி நடந்து கொண்டால், எளிய மக்கள் அவர்களது பிள்ளைகளை எங்கே படிக்க வைப்பார்கள்? இப்படி, கெடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் பள்ளிச் சூழலை எதிர்த்து நாம் போராடித்தான் ஆக வேண்டும். ஆனால், இவற்றை சரி செய்ய ஒரு முயற்சியும் எடுக்காமல், “ஒற்றை நுழைவுத் தேர்வு” என்ற பெயரில், மாநில அரசுகளிடமிருந்து மாணவர் சேர்க்கை போன்ற நிர்வாக உரிமையைக்கூட நடுவண் அரசு பறிப்பது எந்த வகையில் ஞாயம்?
வணிகச்சூழலை ஒழிக்கிறோம் என்று கூறி இவர்கள் கொண்டு வந்த “நீட்” நுழைவுத் தேர்வின் பெயரால், இப்பொழுது புதிது புதிதாக பயிற்சி நிறுவனங்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன. நன்றாக மதிப்பெண் எடுப்பவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அதிகளவில் கட்டணம் பெற்று நடத்தப்படும் இந்த “சிறப்புப் பயிற்சி” நிறுவனங்களில் படிப்பவர்கள் மட்டுமே “நீட்” தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடிக்க முடியும் என்ற நிலை வரப்போகிறது.
ஒரு முறை சுட்ட தோசையை மீண்டும் சுட்டால், அது தீய்ந்துதான் போகும்! அப்படித்தான் தேர்வுக்கு மேல் தேர்வு என்றால் நம் மாணவர்கள் மருத்துவக் கல்வியை விட்டே விலகிப் போவார்கள். உயர் வகுப்பு மற்றும் பணக்கார சமூகத்தினர் பெரும் எண்ணிக் கையில் மருத்துவக்கல்வியில் நுழைய, சட்ட வழி யிலேயே வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதே “நீட்” தேர்வு முறையாகும்!
த.க. : பல்வேறு கல்விமுறைகள் இருப்பதை சமன்படுத்தவே இந்தியாவில் இது போன்ற ஒற்றைக் கல்வி முயற்சிகள் கொண்டு வரப்படுகின்றன என்கிறார்களே?
பிரின்சு : இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், பண்பாடுகள் கொண்டுள்ள மக்கள் வாழும் நாடு! இங்கு, ஒற்றைக் கல்விமுறையும் நுழைவுத் தேர்வுகளும் கல்வித்தரத்தை உயர்த்தும் சரியான நடவடிக்கைகள் அல்ல! அது சாத்தியமானதும் அல்ல!
ஸ்காட்லாந்து, வேல்ஸ், அயர்லாந்து போன்ற பல்வேறு மொழி இன மக்கள் கூடி வாழும் “ஐக்கிய பிரிட்டன்” அரசில், ஒரே பாடத்திட்டம் கிடையாது. ஐரோப்பாவில் ஒரே பாடத் திட்டம் கிடையாது. அவரவரும் அவரவர் சூழலில், அவர்களுடைய தாய்மொழியில் கல்வி கற்கின்றனர்.
ஆனால், அவர்களைவிட வளர்ச்சி குறைவாக உள்ள இந்தியாவில் மட்டும் ஒற்றை பாடத் திட்டம், நுழைவுத் தேர்வு என்றெல்லாம் ஏன் திணிக்க வேண்டும்? குறைந்தபட்சம், கணிதம், அறிவியல் போன்ற பாடத்திட்டங்களைக் கூட, இந்தியா போன்ற பன்மைத்துவ சூழல் நிலவும் நாட்டில் ஒரே பாடத்திட்டமாக கொண்டு வர முடியாது.
த.க. : அனைந்திந்திய அளவிலான இந்த நுழைவுத் தேர்வுகள் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் வாயிலாகவே நடத்தப்படுவது ஏன்?
பிரின்சு : நடுவண் கல்வி வாரியப் பாடத் திட்டமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படியே, இந்த அனைந்திந்திய நுழைவுத் தேர்வுகள் நடத்தப் படுகின்றன. இதன் மூலம், பல்வேறு மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாநில பாடத் திட்டங்களை இரண்டாம் பட்சமாக ஒதுக்கிவிட்டு, அனைவரையும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் நோக்கி இழுத்து வர முயற்சி நடக்கிறது. தமிழ்நாட்டில், சமச்சீர் கல்வி வந்த பிறகு- தனிப் பாடத்திட்டத்தைக் காட்டி செல்வாக்கு செலுத்த முடியாத மெட்ரிக் பள்ளிகள், தற்போது அதிகளவில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டப் பள்ளிகளாக மாறி வருவதைக் கவனிக்கலாம்.
மேலும், இந்த சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில்தான் இந்தி - சமற்கிருத மொழிப் பாடங்களைப் புகுத்த இந்திய அரசு பல்வேறு செயல்திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகிறது. இதன் மூலம், தமிழ்நாட்டிலேயே சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மூலம் இந்தி மொழியைக் கொண்டு வந்து விடலாம். இது தமிழ் மொழிப் பாடத்தை நீக்கிவிட்டு, இந்தியை தமிழ்நாட்டிலேய கட்டாயப் பாடமாக்கும் முயற்சியாகும்.
த.க. : இந்த அபாயங்களைத் தடுக்க தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?
பிரின்சு : தமிழ்நாடு அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளின் இருக்கைகளுக்கும், தமிழ்நாட்டிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசின் இருக்கை களுக்கும் “நீட்” தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று, கடந்த சனவரியில் தமிழ்நாடு அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது. இப்பொழுது வரை, அச்சட்டத்திற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ஏற்பிசைவு அளிக்கவில்லை.
எனவே, உடனடியாக அச்சட்டத்திற்கு இந்தியக் குடியரசுத் தலைவரின் ஏற்பிசைவைப் பெற, இந்திய அரசுக்குத் தமிழ்நாடு அரசு அரசியல் அழுத்தங்கள் அளிக்க வேண்டும். இதை முன் வைத்து, அனைத்துக் கட்சிக் குழுக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துச் சென்று இந்திய நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு, “தமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு இதுதான் மதிப்பா?” என்று வினா எழுப்ப வேண்டும்.
த.க. : தமிழ்நாட்டில் சூழலியல் கல்வியின் தேவை எந்தளவிற்கு உள்ளது?
பிரின்சு : தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இன்றைக்கு நுகர்வியம் மேலோங்கி வருகின்ற காலகட்டத்தில், நாம் வாழுகின்ற இந்தப் புவி வெப்பமயமாகி வரும் சூழலில், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு “சூழலியல் கல்வி”க்கான தேவை வளர்ந்துள்ளது.
பருவமடைந்து வளரும் இளையோர்கள், தான் காண்பதையெல்லாம் தனக்குச் சொந்தம் என்கிற நுகர்விய மனப்போக்குடன் வளர்த்தெடுக்கப்படு கிறார்கள். இயற்கைக் கொடையாக அளிக்கும் ஆறுகள், மலைகள் தொடங்கி, நாம் அன்றாடம் பயன்படுத்தும் கைப்பேசி, கணினி முதற்கொண்டு அனைத்தையும் நுகரும் பொருளாகக் கருதுகிறார்கள். இந்த மனப் போக்கை சிறு பருவத்திலிருந்தே மாற்ற, “சூழலியல் கல்வி” அவசியத் தேவையாகும்.
குழந்தைகளை பூங்காக்களுக்கு அழைத்துச் சென்று அங்குள்ளவற்றைப் பார்வையிட வைக்க வேண்டும். அங்கு வெறும் மலர்ச்செடிகளும் மரங்களும் மட்டும் இருக்கப் போவதில்லை, பூச்சிகளும், புழுக்களும்கூட இருக்கும். நம் சமூகமும் அப்படித்தான் என்று அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
புல் வெளியில் நடக்கக் கூடாது, ஒரு செடியின் முழுமையே பூவாக மலர்கிறது, எனவே அதைப் பறிக்கக் கூடாது - எல்லாம் நுகர்வதற்கானப் பொருட்கள் அல்ல என்பது போன்ற செய்திகளையெல்லாம் பதிய வைக்க வேண்டும். நடைமுறை அனுபவத்துடன் இணைந்த இதுபோன்ற சூழலியல் கல்வியை சிறு பருவத்திலிருந்து பதிய வைத்தால்தான், நம் சமூகம் பற்றிய புரிதல்கள் அவர்கள் மனத்தில் பதியும்.
புலி பசித்தால்தான் வேட்டையாடும். தனது தேவைக்கானதை மட்டுமே வேட்டையாடும். அது போல், மனிதர்கள் தனது தேவைகளுக்காக மட்டுமே பொருளீட்ட வேண்டும் என்பது போன்ற உளவி யலைப் பதிய வைக்க வேண்டும்.
த.க. : சூழலியல் கல்வியை மாநில அளவிலான பாடத்திட்டத்தில் வைத்தால் போதுமா?
பிரின்சு : தற்பொழுது தமிழ்நாடு அரசு, மேனிலைக் கல்விக்கான பாடத்திட்டங்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இதில், சூழலியல் கல்வியையும் சேர்க்க வேண்டும். ஏற்கெனவே, உச்ச நீதிமன்றம் இது குறித்து அறிவுறுத்தி இருக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு இதனைக் கவனத்தில் கொண்டு சூழலியல் கல்வியை பள்ளிப் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். தமிழ்நாட்டு சனநாயக ஆற்றல்களும், கல்வி உரிமைச் செயல்பாட்டாளர்களும் இதற்காக வலுவாகக் குரல் எழுப்ப வேண்டும்.
எனினும், மாநில அளவிலான பாடத்திட்டமாக மட்டுமல்ல, மாவட்ட அளவில்கூட சூழலியல் கல்வி மாறுபட வாய்ப்புண்டு. அவரவர் மாவட்டங்களில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள், மலைகள், தட்பவெப்ப சூழல் அனைத்தையும் அவர்கள் மனத்தில் பதிய வைத்தால், சூழலியல் சுரண்டலும், நுகர்விய மோகமும் சமூகத்தில் குறைவதற்கான வாய்ப்புண்டு! இந்தப் புரிதலுடன் உருவாகும் இளைய தலைமுறை யினரே, நாம் விரும்புகின்ற மாற்று சமுகத்தை -_ சமத்துவமான சமூகத்தைப் படைக்க முடியும்! அதற்குக் கல்வியிலிருந்து அடிப்படை மாற்றங்கள் வேண்டும்!
நேர்கண்டவர் : க. அருணபாரதி.