வாக்கு அரசியலுக்கு பிற்படுத்தப்பட்டோர் உரிமை பேசுவதும், சமூகநீதியில் அதே மக்களுக்கு குழி பறிப்பதுமான இரட்டை வேடம் தான் பா.ஜ.க.வின் கொள்கை. அதைத் தான் “பேச நா இரண்டுடையாய் போற்றி” என்று ‘ஆரிய மாயை’ நூலில் அண்ணா முகவுரையாகக் கவிதை நடையில் பதிவு செய்தார்.

மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ திணிப்பு; அகில இந்திய கோட்டாவில் பிற்படுத்தப் பட்டோர் ஒதுக்கீடு மறுப்பு; உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்குவதில் தீவிர முனைப்பு; ‘நீட்’டால் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு அனுமதியளிக்க ஆளுநர் வழியாக முட்டுக் கட்டை; உயர்ஜாதி ஏழைகளுக்கான ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் திணிக்க மறைமுக நிர்ப்பந்தம் என்று நடுவண் அரசின் ஒவ்வொரு செயல்பாடும் சமூகநீதிக்கு குழி பறிப்பதுதான். ஆனால் கட்சித் தலைவர் தலித் என்பார்கள்; வேல் யாத்திரைக்கு பிற்படுத்தப்பட்டோரை திரட்டுவார்கள்.

உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு மாநில அரசுகளின் விருப்பம் சார்ந்தது. சட்டப்படி மாநிலங்களைக் கட்டாயப்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, இந்த ஒதுக்கீட்டை அமுல்படுத்துவது இல்லை என்ற நல்ல முடிவு எடுத்துள்ளது. ஆனால், மறை முகமாக நடுவண் ஆட்சி கட்டாயப்படுத்தி வருகிறது.

சென்னையில் கலைஞர் கருணாநிதி நகரில் 2011-12இல் மருத்துவக் கல்லூரி ஒன்று (ஈ.எஸ்.அய்.சி. கல்லூரி) 100 இடங்களுடன் தொடங்கப்பட்டது. எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரி.

இந்த ஆண்டு இந்திய மருத்துவக் கழகம் 100 இடங்களை 125 இடங்களாக உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கியது. ஆனால், உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 சதவீத ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

(ஆதாரம்: ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நவம். 2, 2020) ஈ.எஸ்.அய். தொழிலாளர் வைப்பு நிதியில் அந்தத் தொழிலாளர் நலனுக்காக உருவாக்கப்பட்ட இந்தக் கல்லூரியில் மொத்தமுள்ள 125 மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 25 இடங்கள் வைப்பு நிதி செலுத்தும் தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒதுக்க வேண்டும். நடுவண் ஆட்சி அகில இந்திய கோட்டாவின் கீழ் 19 இடங்களை எடுத்துக் கொண்டு விட்டது.

மாநில அரசுக்கான 81 இடங்களை ஒற்றைச் சாளர முறையில் நிரப்ப வேண்டும். இந்த நிலையில் தமிழ்நாட்டில் உயர்ஜாதி ஏழை களுக்கான இடஒதுக்கீடு பின்பற்றப்படாத நிலையில் அந்த 10 சதவிகித இடங்களை எப்படி நிரப்புவது? நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீடு முறையில் மட்டுமே இடங்களை நிரப்ப முடியும் என்ற நிலையில் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாத சமூக நீதி தத்துவத்தையே சீர்குலைக்கும் ஒரு இட ஒதுக்கீடு முறையை கொல்லைப்புற வழியாக திணிப்பதில் ஏன் நடுவண் ஆட்சி இப்படி துடிக்கிறது?

நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்வி வணிகத்துக்கு துணைப் போகிறவர்கள் என்றும் அவர்கள் கொள்ளை அடிப்பதைத் தடுக்கவே ‘நீட்’ கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் பா.ஜ.க.வினர் நியாயம் பேசினார்கள். உண்மையில் தமிழ்நாடு சட்டமன்றம் ‘நீட்’டிலிருந்து விலக்குக் கேட்டதே, அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குத் தானே தவிர, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கும் அல்ல; ஆனாலும் ‘நீட்’ தேர்வு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் வணிகக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வில்லை என்பதே உண்மை.

மிக உயர்ந்த ‘கட்-ஆப்’ மார்க் பெறும் மாணவர்களைவிட மிகக் குறைவான ‘கட் ஆப்’ மதிப்பெண் பெறும் மாணவர்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளிலேயே நிர்வாகத்துக்கான ஒதுக்கீட்டில் முதல் சுற்றில் இடம் பிடித்து வருகிறார்கள். நடப்பு ஆண்டு மிக அதிகபட்ச ‘கட்ஆப்’ 720 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் திறந்த போட்டி யாளருக்கு ‘கட்ஆப்’ 618; பட்டியல் இனப் பிரிவினருக்கு 521; பழங் குடியினருக்கு 492; இது கடந்த ஆண்டுகளைவிட அதிகம். ஆனால், மிகக் குறைந்த ‘கட் - ஆப்’ ஆக மருத்துவக் கல்லூரியில் ‘183’ மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு இடைவெளியை ஏன் மருத்துவக் கவுன்சில் நிர்ணயிக்கிறது? தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் நிரம்ப வேண்டும்; அவர்கள் வணிகம் செழிக்க வேண்டும் என்பதால் தானே! இந்த ஆண்டு 183 ‘கட்ஆப்’ மதிப்பெண் மட்டுமே பெற்ற ஒரு மாணவர் சென்னை மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் முதல் சுற்றிலேயே இடம் பிடித்து விட்டார்.

அந்தக் கல்லூரியில் ஓராண்டு கல்விக் கட்டணம் 22.5 இலட்சம் ரூபாய். மிகக் குறைந்த மதிப்பெண்; மிக மிகக் கூடுதலான கல்விக் கட்டணம். ஆக, தனியார் மருத்துவக் கல்லூரி வணிகத்துக்கு எதிராகவே நீட் தேர்வு கொண்டு வரப் பட்டது என்ற வாதம் மிகப் பெரும் மோசடி அல்லவா?

7.5 சதவீத அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் இந்த ஆண்டு 405 பேருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைத்த இடங்கள் இரண்டு மட்டுமே.

இந்த உள் ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் தருவதற்கே ஆளுநர் இழுத்தடித்து ‘உயர்ஜாதி ஏழைகளுக்கு’ ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தார் என்ற தகவல்கள் கசிந்தன. கடைசியில் அரசே ஆணை பிறப்பித்த  பிறகே ஆளுநர் ஒப்புதல் தரும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

‘நீட்’ தேர்வே இல்லாத ஒரு நிலை தமிழகத்தில் இருக்க வேண்டும். ‘உள் ஒதுக்கீடு’ ஒரு தற்காலிகப் பாதுகாப்பு தான் என்றாலும், அதுவே முழுமையான தீர்வாகிட முடியாது. அதே நேரத்தில் நடுவண் ஆட்சியின் துரோகங்களையும் இரட்டை வேடத்தையும்  மக்களிடம் விளக்குவதோடு தமிழ்நாடு பெரியாரின் சமூக நீதி மண் என்பதை மேலும் உறுதியாக்குவோம்.

இந்துக்களுக்கான உரிமையாளர்களாக புனித வேடம் போடுவோர் அதே இந்துக்களின் சமூக நீதியை மறுப்பதற்குப் பெயர் தான் - பார்ப்பனியம்!

விடுதலை இராசேந்திரன்