தமிழ்த் தேசியச் சிந்தனையாளரும் தனித்தமிழ் இயக்கத் தளபதிகளில் ஒருவருமான நளபதி என்கிற பறம்பை அறிவன் அவர்கள் 20.05.2013 அன்று மதுரையில் தம் மகள் வீட்டில் காலமானார். பறம்பை அறிவன் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் 14.06.2013 அன்று பரமக்குடி காந்தி சிலை அருகில் திறந்த வெளியில் நடந்தது.

பரமக்குடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய இக்கூட்டத்திற்கு புலவர் ஆ.வீராச்சாமி தலைமை தாங்கினார். வைகைப் பாசன சங்கத் தலைவர் தோழர் மதுரைவீரன், வழக்கறிஞர் சி.பழமலை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பரமக்குடி நகரச் செயலர் தோழர் என்.எஸ்.பெருமாள், திருவாளர்கள் கே.ஏ.எம்.குணா, க.அழகர்சாமி, கா.வே.முருகேசன் (த.தே.பொ.க.), ச.இலிங்கமூர்த்தி, பா.தியாகராசன், க.நாகேசுவரன் (பெரியார் பேரவை), இளம்பிறை அப்துல் ரகுமான், அ.சொ.அன்பழகன், சைபுதீன் (ம.நே.ம.கட்சி), க.குணசேகரன், நாகூர்கான், கோ.இராமசாமி, இரா.இளங்கோ, பறம்பை அறிவன் மருமகன் மதுரை கனகவேல், ஆகியோர் உரையாற்றினர். பறம்பை அறிவன் மகள் அனு மற்றும் பேரப்பிள்ளைகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் தொடக்கத்தில் கவிஞர் க.இராசேந்திரன் எழுச்சிப் பாடல் பாடினார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பறம்பை அறிவன் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து நிறைவில் உரையாற்றினார்.

அதன் எழுத்து வடிவம் வருமாறு:

தமிழ்த் தேசியச் சிந்தனையாளர், தமிழறிஞர், என்னுடைய தோழர், ஆசிரியர் பறம்பை அறிவன் அவர்களுக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பறம்பை அறிவன் அவர்களை முதல்முதலாக 1969ஆம் ஆண்டு இதே பரமக்குடியில் பார்த்தேன். 1969 டிசம்பர் 28, 29 நாள்களில் பரமக்குடியில் உலகத் தமிழ்க் கழகத்தின் இரண்டாவது மாநாடு நடந்தது. அமைப்பை நிறுவிய முதல் மாநாடு திருச்சித் தேவர் மன்றத்தில் 1968ஆம் ஆண்டு நடந்தது. அதில் நானும் தோழர் அறிவுறுவோனும் கலந்து கொண்டோம். அதன் பிறகு, திருக்காட்டுப்பள்ளியில் உலகத் தமிழ்க் கழகக் கிளை அமைத்துச் செயல்பட்டோம்.

அந்தக் கிளையின் சார்பாகத்தான் பரமக்குடி மாநாட்டில் கலந்து கொண்டோம். அந்த மாநாட்டின் களச் செயல்வீரர்களாக காலஞ்சென்ற தமிழ்க்குடிமகன் அவர்களும் பறம்பை அறிவன் அவர்களும் செயல்பட்டார்கள். பரமக்குடி மாநாட்டு ஊர்வலத்தில் இரண்டாயிரம் பேர் கலந்து கொண்டார்கள்.

உலகத் தமிழ்க் கழகத்தின் தலைவர் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பாவாணரைப் போல, பெருஞ்சித்திரனாரைப் போல, பறம்பை அறிவன் தமது வீட்டிலும் தனித்தமிழ் பேசுபவர்; தன் குடும்பத்தவர் அனைவரையும் தனித் தமிழ் பேச வைத்தவர். பறம்பை அறிவன் மனத்தில் சாதி என்ற அழுக்குத் துளியும் கிடையாது. அதைத் துடைத்தெறிந்து விட்டார். தம் பிள்ளைகளுக்கு சாதி மறுப்புத் திருமணங்கள் நடத்திவைத்தார்.

தமிழ்ப் பெருமித உணர்ச்சிமிக்கவர். அதிகாரத்தில் உள்ளவர்களை அண்டி - அவர்களுக்குத் தமிழால் முதுகு சொறிந்து விட்டு தன்னலக்காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாதவர். அப்படிப்பட்ட செயலை அருவருக்கக் கூடியவர்.

சங்ககாலத் தமிழறிஞர்கள் பெருமிதம் மிக்கவர்கள். மன்னர்களுக்கு அறிவுரைகளை எடுத்துச் சொன்னார்கள்; இடித்துச் சொன்னார்கள். மன்னர்களும் புலவர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடந்தார்கள். புறநானூற்றைத் தொகுத்தவர்கள் மன்னர்களை ‘அவன்’ என்றும், மன்னர்களைப் பாடிய புலவர்களை ‘அவர்’ என்றும் குறிப்பிடுகின்றனர்.

பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது என்று குறிப்பிட்டுள்ளார்கள். ‘அவனை’ ‘அவர்’ பாடியது என்றார்கள்.

அன்று தமிழ்ச் சான்றோனுக்கிருந்த அந்த பெருமித உணர்வு இன்று தமிழறிஞர் பலரிடம் இல்லை. தற் சார்பாக, தன்மதிப்போடு, யாம் தமிழ் அறிஞர் என்ற பெருமிதத்தோடு, ஆட்சியாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் அறிவுரை சொல்ல வேண்டியவர்கள் அவர்கள். அவர்கள் தாழ்ந்து போய், தாங்கள் கற்ற தமிழை அதிகாரத்திலிருப்பவர்களுக்கு முதுகு சொரியப் பயன்படுத்துவது வேதனையாக உள்ளது.

தமிழர் மறுமலர்ச்சிச் சிந்தனைகள் 19ஆம் நூற்றாண்டிலிருந்து எழுந்தன. வள்ளலார் இராமலிங்க அடிகளார் தமிழர் மறுமலர்ச்சிச் சிந்தனையின் தொடக்கப்பள்ளி எனலாம். அன்று சென்னை மாநிலத்திலிருந்த தமிழ் மாவட்டமான சித்தூர் மாவட்டத்தில் மார்க்க சகாய ஆசாரி என்ற தமிழறிஞர் பார்ப்பன புரோகிதரை நீக்கி, தமிழர் முறைப்படி திருமணம் செய்து வைத்தார். அதை எதிர்த்துப் பார்ப்பனர்கள் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்கள்.

மார்க்க சகாய ஆசாரி பார்ப்பனப் புரோகிதமுறை, பார்ப்பன மந்திரங்கள் ஆகியவற்றிற்கு எதிராகத் தம் வாதங்களை எடுத்து வைத்தார். எதிர்த்தரப்பாரும் வாதங்களை வைத்தார்கள். கடைசியில், பார்ப்பனப் புரோகிதரை நீக்கித் தமிழர்கள் திருமணம் செய்து கொண்டால் அது சட்டப்படி செல்லும் என்று வெள்ளைக்கார நீதிபதி தீர்ப்புக் கூறினார்.

பார்ப்பனப் புரோகிதர்களை நீக்கிய திருமண முறை, கோயில் குடமுழக்கு போன்றவற்றை மறைமலை அடிகளார் உள்ளிட்ட தமிழறிஞர்கள் வலியுறுத்தினர்.

சமற்கிருதம் உள்ளிட்ட பிறமொழிச் சொற்களை நீக்கித் தூய தமிழல் பேசும், எழுதும் தனித்தமிழ் இயக்கத்தை 1916ஆம் ஆண்டு மறைமலைஅடிகள் தொடங்கினார். அதே 1916ஆம் ஆண்டு தான் நீதிக்கட்சி தொடங்கப்பட்டது.

தமிழறிஞர்கள் முன்மொழிந்து சிறிய அளவில் செய்து காட்டிய பார்ப்பனப் புரோகிதர் நீக்கப்பட்ட திருமண முறையை தந்தை பெரியார் சுயமரியாதைத் திருமணங்களாக செழுமைப்படுத்தித் தமிழகமெங்கும் - பல்லாயிரக் கணக்கில் நடத்தினார். பரப்பினார். அதே போல், தமிழறிஞர்கள் முன்மொழிந்த தூய தமிழ் உரையை - உரைநடையை அறிஞர் அண்ணா அவர்களும் தி.மு.க. தலைவர்களும் நாடு நகர மெங்கும் பட்டி தொட்டியெங்கும் பரப்பினர்.

தமிழின வரலாற்றில் தமிழறிஞர்கள் முற்போக்குத் திட்டங்களை முன்மொழிந்திருக்கிறார்கள். இன்றைக்கு அந்த முன்மொழிவுப் பாத்திரத்தைத் தமிழறிஞர்கள் உரிய அளவில் நிறைவேற்றவில்லை என்பதே உண்மை.

இன்றைக்கு அரசியல்கட்சிகள் - குறிப்பாக பெரிய கட்சிகள் - மக்களின் சிந்தனை வளர்ச்சியைக் கண்டு அச்சப்படுகின்றன. மக்களிடம் விழிப்புணர்ச்சி வளரக்கூடாது என்பதில் தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள் எச்சரிக்கையாய் இருக்கின்றன.

தங்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்களாக மக்கள் கூட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உளவியல் உத்தியுடன் இக்கட்சிகளின் தலைவர்கள் செயல்படுகிறார்கள். கட்டுப்படுத்தப்பட்ட மூளை உள்ளவர்களாக தன் கட்சிக்காரர்கள் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது.

அதற்காக மக்களை இலவசங்களைப் பெறும் பயனாளிகளாக (Beneficiary) மட்டும் மாற்ற முனைகிறார்கள். அதன் பிறகு அவர்களை வாக்காளர்களாக மட்டும் பயன்படுத்துகிறார்கள். அரசியல் தலைவர்களுக்குப் பயனாளிகளாகவும், வாக்காளர்களாகவும் மட்டும் இருக்கப் பழகிக் கொண்ட மக்கள் வணிக நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களாகப் பயன்படுகிறார்கள்.

அரசியல் தலைவர்களும், தொழில் முதலாளிகளும் வணிகர்களும் சேர்ந்து கொண்டு, மக்களை நுகர்வோராக பயனாளியாக, வாடிக்கையாளராக, வாக்காளராக மாற்றுகிறார்கள். மக்கள் தங்களைத் தமிழர்களாக, இந்த மண்ணை ஆளப் பிறந்தவர்களாக, ஆட்சியைத் தீர்மானிக்கக் கூடியவர்களாக கருதிக் கொள்ளக்கூடாது என்பதில் அரசியல் தலைவர்களும், முதலாளிகளும் உறுதியாக இருக்கிறார்கள்.

கட்சித் தலைவர்களாலும், முதலாளிய நிறுவனங்களாலும் கட்டுப்படுத்தப்பட்ட மூளைக்குச் சொந்தக்காரர்கள் ஆனவர்கள், குரங்காட்டி சொல்கிறபடி ஆடும் குரங்குபோல் ஆகிவிடுகிறார்கள். கலைஞர் கருணாநிதியும் - செயலலிதா அம்மையாரும் அப்படித்தான் தங்கள் கட்சியில் உள்ள மக்களை ஆக்கி வைத்துள்ளார்கள்.

உண்மையிலேயே ஒரு தவறான கருத்தைக் கருணாநிதி சொன்னால் கூட அதை ஆதரித்து - அதை ஞாயப்படுத்திப் பேச தி.மு.க.வினர் களமிறங்குகிறார்கள். அதே போல் செயலலிதா ஒரு தவறான கருத்தைச் சொல்லிவிட்டால் அதை ஞாயப்படுத்திப் பேசும் பரப்புரையாளர்களாக அ.தி.மு.க.வினர் செயல்படுகிறார்கள். இவர்கள் இருவரும் தமிழர்களின் மக்கள் தொகையில் ஒரு பெரும் கூட்டத்தை சுயசிந்தனை அற்றவர்களாக - கட்டுப்படுத்தப்பட்ட மூளைக்குச் சொந்தக்காரர்களாக மாற்றி வைத்துள்ளார்கள்.

சொந்தமாக சிந்திக்காமல், சொந்தமாக செயல்படாமல் - தலைவர், தலைவிக்குக் கட்டுப்பட்ட மந்தை போல் தமிழ்ப் பெருமக்களில் ஒரு பெருங்கூட்டம் இருப்பது தில்லி ஏகாதிபத்தியத்திற்கு வசதியாகப் போனது. கன்னட வெறியர்களுக்கும், மலையாள வெறியர்களுக்கும் வசதியாகப் போனது.

தமிழர்களுக்குத் தலைவர்களாக, கருணாநிதியும் செயலலிதாவும் இருக்கும் துணிச்சலில் தான் காவிரி நீரை விடும்படி உச்சநீதிமன்றம் சொன்னாலும் முடியாது என்று கர்நாடகம் மறுத்து வெற்றிபெறுகிறது. அதே போல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் அது எங்களைக் கட்டுப்படுத்தாது என்று கேரளம் சட்டம் போடுகிறது.

கட்சித் தலைமையினால் கட்டுப்படுத்தப்பட்ட மக்களுக்கு மனச்சான்று மரத்துப்போகிறது. அல்லது பிளப்பட்டுப் போகிறது. இவ்வாறான உளவியலுக்கு உள்ளானவர்கள் தன்னம்பிக்கையை இழந்து வருகிறார்கள். தன்னம்பிக்கையை இழந்தவர்கள் தன் முயற்சியை எடுக்க தயங்குவார்கள்.

தமிழ் இளைஞர்கள், இந்த அடிமை அரசியலில் இருந்து விடுபட்டால்தான், தமிழ் இனத்தின் அடிமைத்தனத்தை நீக்க முடியும்.

தற்சார்பும் சொந்த சிந்தனையும் கொண்ட தமிழ்த் தேசியப் போராளியாக விளங்கிய பறம்பை அறிவன் அவர்களின் நினைவைப் போற்றும் இந்நாளில் இப்படிப் பட்ட தமிழ்த் தேசியச் சிந்தனைகளை எண்ணிப் பாருங்கள்.

Pin It