அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புப் பணிகளில் காங்கிரசு, பாரதியசனதா உள்ளிட்ட இந்தியத் தேசியக் கட்சிகள் முனைப்புடன் இறங்கி விட்டன. காங்கிரசுக் கட்சி தனது பட்டத்து இளவரசரான இராகுல்காந்தியை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ள நிலையில், அவருக்கு எதிராக நரேந்திரமோடியை முன்னிறுத்தப் போவதாக பாரதியசனதாக் கட்சி அறிவித்துள்ளது.

குஜராத்தில், 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோத்ரா தொடர்வண்டி எரிப்பு நிகழ்வைத் தொடர்ந்து இசுலாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மதவெறிப் படுகொலைகள், வரலாற்றில் ஆறாதவடுவை ஏற்படுத்திய கொடுஞ்செயலாகும். திட்டமிட்டு இசுலாமியர்களின் வீடுகளும், கடைகளும், பெண்கள், முதியவர்கள் என இசுலாமியர்களும் தாக்கப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட கொடுஞ்செயலுக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இருந்தவர் அப்போதைய குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திரமோடி ஆவார்.

‘ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு’ என இசுலாமியர்கள் தாக்கப்படுவதை ஞாயப்படுத்திப் பேசிய முதல்வர் நரேந்திரமோடி, இசுலாமியர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க முனைந்த 500க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து படு கொலைகளுக்குத் துணை நின்றார்.

அப்படுகொலையின் போது, ‘பாரத் மாதாக் கீ ஜே’ என்றும், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்றும் முழக்கமிட்டுக் கொண்டு, இசுலாமியப் பெண்களை வல்லுறவுக்குள்ளாக்கியும், படுகொலை செய்தும் கொன்ற ஆர்.எஸ்.எஸ். மதப்பயங்கரவாதிகள், இந்தியத் தேசியத்துடன் இணைந்ததே இந்துத்வா என்பதை குஜராத்தில் பிரகடனப்படுத்தினர்.

ஆரியப் பார்ப்பனிய ‘இந்துத்வா’ கொள்கையை முன்னிறுத்தி ஆட்சி நடத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் பாரதியசனதாக் கட்சியின் நரேந்திரமோடி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற குஜராத் கலவர நிகழ்வு, நரேந்திரமோடியை உலகெங்கும் அறிமுகப்படுத்தியது. இந்த அறிமுகம், ஹிட்லருக்கும், இன்றைக்கு சிங்கள இனவெறியன் இராசபக்சேவுக்கும் கிடைக்கும் அதே அறிமுகத்திற்கு ஒப்பானதாகவே இருந்தது.

ஆனால், இதைத் தம் சாதனைகளுக்கு கிடைத்த வரவேற்பாகப் புரிந்து கொண்ட மோடி, தமது எதிர் கால அரசியல் நலனுக்காக அதைப் பயன்படுத்தத் தொடங்கினார். இன்று உலகமய முதலாளிய ஊடகங்கள் பலவும், ஆரியப் பார்ப்பனிய ஊடகங்களும் இந்தியாவின் எதிர்கால நம்பிக்கை நாயகனாக மோடியை முன்னிறுத்துகின்றன.

அப்படி மோடி என்ன தான் குஜராத்தில் சாதித்து விட்டார்? என்று ஆராய்ந்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

இன்றைய உலகமயக் கால கட்டத்தில் முதலாளிய ஊடகங்களால் முன்னிறுத்தப்படுகின்ற, போலியான தொழில் வீக்கத்தையே அவை ‘வளர்ச்சி’ என முன்னிறுத்துகின்றன.

தற்போது அதே போன்று, குஜராத் மாநிலத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கும், வடநாட்டுப் பெருமுதலாளிய நிறுவனங் களுக்குமான வேட்டைக்காடாக மாற்றி ‘சாதனை’ புரிந்ததுதான் நரேந்திர மோடியின் உண்மையான சாதனையாகும்.

யாருக்கும், எந்த சனநாயக உரிமையையும் வழங்காமல் தொழிலாளர் உரிமைகளைக் காலில் போடு மிதித்து சுடுகாட்டு அமைதியை மோடி நிலை நாட்டினார். இசுலாமியர் படுகொலையை அடுத்து அம்மோடி நிலைநாட்டினார். இசுலாமியர் படுகொலையை அடுத்து அம்மாநில மக்களிடம் பற்றிக் கொண்ட அச்ச உணர்வை தனது இந்த கெடுபிடிக் கொள்கைக்கு வாய்ப்பாக மோடி பயன் படுத்திக்கொண்டார். அம்மாநிலத்தின் ஆட்சி நிர்வாகம் முற்றிலும் ஒரு நபர் செயல்பாடாக, மோடியின் செயல்படாக மாற்றியமைக்கப்பட்டது.

உலகமய முதலாளிகளுக்கு இந்த மயான அமைதியும், அதன் மூலம் கிடைத்த குறை கூலித் தொழிலாளர் உழைப்பும் பிடித்திருந்தன.

மூலதன ஈர்ப்பு மையமாக குஜராத் வலுப்பெற்றது. அது மோடி வருவதற்கும் முன்பும் தொழில் வளர்ச்சியில் முதல் நிலை மாநிலம்தான் மோடியின் சனநாயக மறுப்பு, முதலாளிய தாராளமயத்திற்கு ஒத்து செயாக இருந்தது. வெளிமூலனத்தை ஈர்த்தது.

ஆயினும் அந்தப் போக்கு அதே வேகத்தில் தொடர முடியவில்லை.

கடந்த 2010-11ஆம் நிதியாண்டில், இந்தியாவின் அந்நிய நேரடி முதலீட்டில் 3.38 விழுக்காட்டைப் பெற்றிருந்த குஜராத் மாநிலம், 2011-12ஆம் ஆண்டில் 2.85 விழுக்காடாக குறைந்தது. தற்போதைய நிதியாண்டில் இது மேலும் குறைந்து, 2.35 விழுக்காடாக உள்ளது.

இதன்படி, அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் குஜராத் மாநிலம், மூன்றாம் இடத்திலுள்ள தமிழ்நாட்டை விட பின் தங்கி 6ஆம் இடத்தில் இருக்கிறது. (காண்க: தி இந்து, 13.04.2013). இவ்வாறு குஜராத் இறங்கு நிலையில் உள்ளபோதுதான், குஜராத் அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் மையமாக உள்ளது என்ற வேடிக்கைப் பரப்புரையும் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

குஜராத்தின் போலியான ‘வளர்ச்சி’யைப் பற்றி பேசும் முதலாளிய ஊடகங்கள், உண்மையில் மிகப்பெரிதாக வளர்ந்துள்ள அம்மாநிலத்தின் கடன் தொகை பற்றி எவ்விதக் கருத்தும் வெளியிடுவதில்லை.

கடந்த 2001-2002ஆம் நிதியாண்டின் போது, குஜராத் மாநிலத்தின் மொத்தக் கடன் தொகை 45,301 கோடி ரூபாய் ஆகும். கடந்த 2011ஆம் ஆண்டு திசம்பர் 31 அன்று, இது இரு மடங்கிற்கும் மேலாக உயர்ந்து 1,18,299 கோடி ரூபாயாக உள்ளதென குஜராத் மாநில நிதியமைச்சர் வாஜூபாய் வாலா அறிவித்தார் (காண்க: 28.02.2012, தி டைம்ஸ் ஆப் இந்தியா),

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் குஜராத் மாநிலம் மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று விட்டதெனவும், எரிவாயு உள்ளிட்டத் தேவைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு விட்டதாகவும் தம்பட்டம் அடித்தார் மோடி. ஆனால் உண்மையென்ன?

2011ஆம் ஆண்டு வெளியான நடுவண் அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, குஜராத்தில் இன் றைக்கும் 11 இலட்சம் வீடுகளுக்கு மின்சார இணைப்பே கொடுக்கப்படவில்லை என்ற உண்மையை அம்பலப்படுத்தியது. அதில் 9 இலட்சம் குடும்பங்கள் மண்ணென்னையைக் கொண்டுதான் இன்றைக்கும் தங்கள் இல்லங்களில் விளக்கேற்றுகின்றனர் என்றும் அவர்களில் பெரும்பாலானர்கள் நகர்ப்புறத்தவர்கள் என்பதும் கண்கெடுப்பில் தெரியவந்தது. (காண்க: தி பினான்சியல் எக்ஸ்பிரஸ், 05.03.2012).

மோடி நிர்வாகத்திறன் மிக்கவர் என்றும் நிதி மேலாண்மையில் வல்லவர் என இந்தியாடுடே போன்ற முதலாளிய ஊடகங்கள் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், இந்தியத் தலைமைக் கணக்காளர்(CAG) குஜராத்தின் நிதி மேலாண்மை குறித்து ஆராய்ந்து, கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கையில், பொறுப்பற்றவகையில் நிதி மேலாண்மை இருப்பதாக சாடினார்.

கடந்த ஆண்டை விட, இவ்வாண்டு 41 விழுக்காடு கடன் தொகை அதிகரித்திருப்பதையும், அரசின் பல முதலீடுகள் நட்டத்தில் இருப்பதையும் அவ்வறிக்கையில் தலைமைக் கணக்காளர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளுக்கு மற்ற மாநிலங்களை விட குஜராத் குறைந்தளவே நிதி ஒதுக்கி வருவதை கவலையுடன் குறிப்பிட்டுள்ளார். பலதுறைகளில், அத்துறைப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படாமல் அப்படியே இருப்பதையும் அவர் அம்பலப்படுத்தினார். கணினிக் கல்விக்காக ஒதுக்கப்பட்ட 292 கோடி ரூபாயில் வெறும் 88.24 கோடி ரூபாயே செலவிடப்பட்டுள்ளதெனவும், சிறப்பு நீதிமன்றங்களுக்காக 629 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அதில் வெறும் 252.45 கோடி ரூபாயே செலவிடப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார். (காண்க: தி டைம்ஸ் ஆப் இந்தியா, 22.03.2013).

மகாராட்டிரத்தையடுத்து, ஊட்டச்சத்துக் குறைவாக உள்ள குழந்தைகள் இந்தியாவிலேயே குஜராத்தில்தான் அதிகம். 2008ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தேசிய குடும்ப சுகாதார சர்வே, குஜராத்தின் 80 விழுக்காட்டுக் குழந்தைகளும், கருவுற்றப் பெண்கள் 61 விழுக்காட்டினரும் சோகை நோயால் (Anaemic) பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. மக்களின் சுகாதாரத்திற்கு அதிக நிதி செலவிட்டு, இக்குறைபாடுகளை சரிசெய்ய முன்வராத மோடிஅரசு, அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக மட்டும் மாநகரங்களில் புதிய தொழிற்சாலைகள் கட்டுவதில் கவனம் செலுத்துகின்றது.

பாரதியசனதாக் கட்சி, மோடியை முன்னிறுத்திப் பணிகளை செய்ய திட்டமிட்ட நிலையில், அம்முடிவுக்கு பா.ச.க.விலேயே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்ப்புத் தெரிவித்தவரும் சாதாரண மானவர் அல்ல, பா.ச.க.வின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி.

குஜராத் கலவரத்தை முன்னிட்டு, பாரதியசனதாக் கட்சியில் மிதவாத இந்துத்வாவாதியாக கருதப்படும் வாஜ்பாயி, மோடிக்கு எதிராக நகர்வுகள் மேற் கொண்டபோது, அதைத் தடுத்து நிறுத்தி மோடியைக் காப்பாற்றியவர் எல்.கே.அத்வானி ஆவார். குஜராத்தில் யாரும் செய்ய முன்வராத அளவிற்கு இசுலாமியப் படுகொலைகளை நிகழ்த்திய காரணத்தால் ஏற்பட்ட ‘பாசம்’ அது! இப்போது, எல்.கே.அத்வானி, தன்னையே விஞ்சும் அளவிற்கு மோடி ‘வளர்ந்து’ விட்டதைப் பார்த்து வெளிப்படையாகவே வயிறெரிகிறார்.

மோடியை பாரதியசனதாக் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் குழுவின் தலைவராக அறிவித்த அடுத்த நாளே தனது அனைத்துக் கட்சிப் பதவிகளையும் ராஜினமா செய்தார். பின்னர் ஆர்.எஸ்.எஸ். ஆணையை ஏற்று பதவி விலகலைத் திரும்பப் பெற்றார். பாரதியசனதாக் கட்சியின் பிரதமர் வேட்பாளராகத் தானே முன்னிறுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் அத்வானிக்கு இருக்கிறது.

கட்டுப்பாடானக் கட்சி, ஒழுக்க சீலத் தலைவர் என்று தம் பட்டம் அடித்துக் கொள்ளும் பா.ச.க. பதவிச் சண்டையில் காங்கிரசை விடவும் நாறிக் கிடக்கிறது.

இந்தியத் தேசியம் பலவீனப்பட்டுள்ள இச்சூழலில், இந்துத்வ வெறியுடன் மேலெழ முயலும் பா.ச.க., இந்தியத் தேசிய வெறியை முன்னிறுத்தி பரப்புரை செய்யக் கூடும். அதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டு, பா.ச.க.வைவிடதான் தான், தீவிர இந்துத்வ வெறியன் என அப்சல் குருவின் பிணத்தைக் காட்டி காங்கிரசுக் கட்சியும் வாதிடக் கூடும். இவ்விருக் கட்சிகளும் கட்டியெழுப்ப விரும்பும், இந்துத்வ இந்தியத் தேசியத்தின் ஊடாக, சனநாயகப் பறிப்புத் தேசிய இனங்களின் மீதான ஒடுக்கு முறையும் தீவரம் பெறும் ஆபத்து உள்ளது.

உலகமயத்திற்கு உவப்பானதும் அதுதான். இந்த ஒடுக்கு முறையிலிருந்து தற்காத்துக் கொள்ள தமிழ்நாட்டு மக்கள் தமிழ்த் தேசியத்தின்பால் அணி திரள வேண்டும்.

Pin It