அநீதிக்கு எதிராக வீதிகளில் திரளும் மக்கள் தான் வரலாற்றைப் படைக்கிறார்கள். தற்போது அது துருக்கியில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. துருக்கியில் நடைபெற்று வரும் இசுலாமிய அடிப்படைவாத முதலாளிய அரசுக்கு எதிராக, மக்கள் வீதிகளில் பேரெழுச்சியுடன் போராடி வருகின்றனர்.

2011ஆம் ஆண்டு தொடங்கி, எதேச்சதிகார இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக அராபிய நாடுகளில் எழுந்த அராபிய வசந்தம் எனப்படும் மக்கள் பேரெழுச்சியின் போது, வடஅமெரிக்கா உள்ளிட்ட முதலாளிய நாடுகளும், ஊடகங்களும் அவ்வெழுச்சியைக் கொண்டாடின. சனநாயகத்திற்கான போராட்டமாக அமைந்த அராபிய வசந்த எழுச்சியை பயன்படுத்தி, அந்நாடுகளில் காலூன்றி ஆதிக்கம் செலுத்தவே ஏகாதிபத்தியங்கள் விரும்பின.

அன்றைக்கு, இசுலாமிய அடிப்படைவாத அரசாக மட்டுமின்றி, தேர்தல் சனநாயகத்தையும், மேற்குலக நாடுகளின் உலகமயப் பொருளியல் சூறையாடலையும் ஏற்றுக் கொண்டு ஆட்சி நடைபெற்று வந்த துருக்கி நாட்டையே, ஏகாதிபத்திய நாடுகளும் ஊடகங்களும் முன்னுதாரணமான இசுலாமிய நாடாக பறைசாற்றின.

இன்றைக்கு, துருக்கியை முன்னிறுத்திய ஏகாதிபத்தியங்களின் விருப்பத்தில் மண் விழுந்துள்ளது. துருக்கியில் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இசுலாமிய முதலாளிய அரசுக்கு எதிரான மக்கள் பேரெழுச்சியுடன் கிளர்ந்தெழுந்து போராடிக் கொண்டுள்ளனர்.

துருக்கி நாட்டின் தேசத்தந்தையாக கருதப்படும் அட்டாதுர்க், துருக்கியை இசுலாமிய நாடாக மட்டுமின்றி முதலாளியம் கோலோச்சும் ‘நவீன’ நாடாகவும் முன்னிறுத்தி தொழில் வளர்ச்சியை ஊக்குவித்தார். அதன் பின்னர் நடைபெற்ற அரசுகள், உலகமயப் பொருளியல் சூறையாடலுக்கு கட்டற்ற சுதந்திரம் வழங்கி, நாட்டையே பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்தன.

இதன் காரணமாக, உலகளவில் நீடித்து வரும் உலகமயப் பொருளியல் மந்தம் துருக்கியையும் நிலைகுலைத்தது. பன்னாட்டு நிறுவனங்களின் பொருளியல் சூறையாடலுக்கு ஆதரவான திட்டங்கள் விதிக்கப்படுவதும், மக்கள் மீது புதிய வரிகள் திணிக்கப்படுவதும் மக்களை போராட்டப் பாதைக்கு அழைத்து வந்தது.

துருக்கிய அரசின் தொடர் முதலாளிய ஆதரவு நடவடிக்கைகள் காரணமாக நிலமிழந்து, வேலையிழந்து பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கு போராடிவந்த நிலையில், மக்களுக்கு எதிராக கடும் அடக்குமுறையை ஏவியது நீதி மற்றும் வளர்ச்சிக்கான கட்சியின் (AKP) அதிபர் ரெசிப்டயிப் எர்டோகனின் ஆட்சி. சனநாயக உரிமைகள் மட்டுமின்றி ஊடகச் சுதந்திரம் கூட மறுக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு, பொதுவுடைமைக் கட்சிகள் முன்முயற்சியில் தொழில் நகரமான இஸ்தான்புல் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள டாக்சிம் சதுக்கத்தில், முன் எப்போதும் இல்லாத வகையில் கொண்டாடப்பட்ட மே தினம், மக்களிடையே புதிய எழுச்சியைத் தோற்றுவித்தது.

அரசுக்கும் மக்களுக்கும் இடையில் வளர்ந்து வந்த முரண்பாடு, கடந்த மே மாதம் துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தின் கெசி பூங்காவை, பன்னாட்டு நிறுவனங்களின் வணிக வளாகத்திற்காக தாரை வார்க்க முயன்ற போது பெரும் போராட்டமாக வெடித்தது.

மே 28 அன்று, கெசி பூங்காவை வணிக வளாகமாக்கும் நடவடிக்கைக்கு எதிராக, வடஅமெரிக்காவில் நடைபெற்ற வால்தெருவை கைப்பற்றும் இயக்கம் (Occupy Wall Street)போல், கெசி பூங்காவை கைப்பற்றும் இயக்கம் அறிவிக்கப்பட்டு, அதில் பொது மக்களும், இடதுசாரிக் கட்சிகளும், சூழலியல் ஆர்வலர்களும் ஓரணியில் திரண்டு பங்கேற்றார்கள். அதிகாலையில் வெறும் 50 பேரோடு தொடங்கிய அப்போராட்டம், அன்று மாலையே ஆயிரக்கணக்கான மக்கள் பூங்காவில் கூடாரம் அமைத்துத் தங்கும் அளவிற்கு வீறு கொண்டது.

பெருமளவிலான மக்கள் தொடர்ந்து பூங்காவில் குவிய, காவல்துறை அவர்களை கைது செய்யும் முயற்சியில் இறங்கி 900க்கும் மேற்பட்டோரை கைது செய்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மக்கள் மீது, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கொடூரமாக ஒடுக்க முயன்றது காவல் துறை. ஆனால், மக்கள் காவல்துறையை திருப்பித் தாக்கத் தொடங்கியதும், காவல்துறை பினவாங்கியது. டாக்சிம் சதுக்கத்தில் கட்டுப்படுத்த இயலாத அளவிற்கு மக்கள் ஒன்றுகூடத் தொடங்கினர்.

துருக்கி நாட்டுக் கொடியும், புரட்சியாளர் சேகுவேரா, குர்து இனத் தேசியத் தலைவர் அப்துல்லா ஒசலான் உள்ளிட்ட பல தலைவர்களின் படங்களையும், பதாகைகளையும் கையில் ஏந்தினர் மக்கள். மக்கள் மட்டுமின்றி, நடிகர்கள், நடிகைகள், துருக்கியின் எதேச்சதிகார இசுலாமிய அடிப்படைவாதத்தால் பாதிக்கப்பட்ட குர்து தேசிய இன மக்கள் என பல தரப்பினரும் போராட்டத்தில் இணையத் தொடங்கினர்.

கண்ணுக்கெட்டிய தொலைவு வரை மக்கள் வெள்ளம், சுற்றிலும் அரசுக்கு எதிரான மக்கள் முழக்கம், ஒருபக்கம் குழந்தைகளுக்கு அங்கேயே பாடம் நடத்தும் போராளி ஆசிரியர்கள், இன்னொரு பக்கம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உணவு வழங்கி உதவி செய்யும் எளிய வணிகர்கள் என அவ்விடம் போராட்டத்தை திருவிழாவாகக் கொண்டாடும் பேரெழுச்சிக் கூடமாக மாறியது.

துருக்கிய அதிபர் ரெசிப்டயிப் எர்டோகனை பதவி விலகக் கோரி மட்டுமின்றி, முதலாளியத்திற்கு எதிரான முழக்கங்களும் அங்கு எதிரொலித்தன.

துருக்கிய அதிபர் ரெசிப்டயிப் எர்டோகன், ஆப்ரிக்க நாட்டு சுற்றுப்பயணம் என்ற பெயரில் சூன் 3 அன்று நாட்டை விட்டே ஓடுமளவுக்கு மக்கள் பேரெழுச்சி அமைந்தது. இஸ்தான்புல் நகரத்தில் தொடங்கிய எழுச்சி, புர்சா, அன்டல்யா என துருக்கியின் மற்ற முக்கிய நகரங்களுக்கும் பரவியது. துருக்கியின் 81 மாகாணங்களில், 78 மாகாணங்களில் போராட்டம் வீறுகொண்டது.

போராட்டத்தை வழிநடத்த தெளிவான தலைமையோ, குழுவோ இல்லாத நிலையிலும் கூட, அங்கு இரண்டு தெளிவான முழக்கங்கள் பெரும்பாலான மக்களால் முன்வைக்கப்பட்டது. ஒன்று, அதிபர் ரெசிப்டயிப் பதவி விலக வேண்டும், மற்றொன்று, மேற்குலக நாடுகளுக்கு ஆதரவான அரசின் முதலாளிய ஆதரவு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் ஆகியவையே அவை.

துருக்கிய எழுச்சி, ஏகாதிபத்திய நாடுகள் முகத்திரையைக் கிழித்துக் கொண்டிருப்பதால் இது குறித்து எந்த செய்தியும் வெளிவரவிடாமல் பார்த்துக் கொண்டன ஊடகங்கள். போராட்டக்காரர்கள், முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலே போராட்ட செய்திகளை வெளியிடத் தொடங்கிய நிலையில் அதற்கும் தடை விதித்தது எர்டோகன் அரசு. டுவிட்டர் மற்றும் பேஸ்புக் வலைத்தளங்களை பயன்படுத்தியவர்களைக் கூட தேடிச்சென்று கைது செய்தது எட்டோகன் அரசு.

எதேச்சதிகாரத்திற்கு எதிராக எழுந்த அராபிய எழுச்சியின் அடுத்தக் கட்ட வளர்ச்சியாகவே துருக்கி எழுச்சி அமைந்துள்ளது எனலாம்.

Pin It