தேசிய உயர்கல்வி ஆணையம் 2010 என்ற தலைப்பில் சட்ட முன்வரைவு ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாரித்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே இந்த மசோதாவை நிறைவேற்ற முனைப்பு காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்வித்துறை என்பது தற்போது பொதுப்பட்டியலில் உள்ளது. இந்த புதிய சட்ட முன்வரைவின் மூலம் கல்வித்துறையை - குறிப்பாக உயர்கல்வித்துறையை முற்றிலும் மத்திய பட்டியலுக்குக் கொண்டு செல்வதற்கான முன்னோட்டமாகவே இதைக் கருதவேண்டியுள்ளது.

கூட்டாட்சித் தத்துவத்தை குழிதோண்டிப் புதைத்து, மாநில அரசுகளின் உரிமைகளை மண்மூடச்செய்யும் இந்த விபரீத யோசனையை கேரளம், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் கடுமையாக எதிர்த்துள்ளன. பல்வேறு கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உயர்கல்விக்கான இந்த ஆணையம் நடைமுறைக்கு வருமானால் தேசிய அளவில் அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும் நுழைவுத்தேர்வு கொண்டுவரப்படும், இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வரும், தாய்மொழி வழிக்கல்வி கேள்விக்குறியாகும் என பல ஆபத்தான அம்சங்களை இந்த புதிய சட்ட முன்வரைவு பொதிந்து வைத்துள்ளது.

மாநில அரசுகளைக் கலந்துகொள்ளாமல், மத்திய அமைச்சரவையிலும் விவாதிக்காமல் இந்த சட்ட முன்வரைவை நிறைவேற்றத் துடிக்கிறார் மத்திய அமைச்சர் கபில்சிபல்.

மேல்நிலை பள்ளிக்கல்வியும் இயற்பியல், வேதியியல், உயிரியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களில் நாடு முழுவதிற்கும் ஒரே மாதிரியான பொதுப்பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்றும் பொறியியல், மருத்துவம், வணிகவியல் போன்ற படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது மாநிலங்களின் உரிமையைப் பறிப்பது மட்டுமல்ல, கல்வி என்பது ஒருசிலருக்கு மட்டுமே என்று மாற்றக்கூடிய ஆபத்தைக் கொண்டதாகும்.

மேலும், அந்நிய பல்கலைக்கழகங்களை தாராளமாக நுழையவிடவும் இந்த புதிய ஏற்பாடு வகை செய்கிறது. கல்வித்துறை ஏற்கெனவே வணிகத்துறையாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கல்விக்கூடங்களுக்கு வரவிடாமல் செய்வதற்கே கபில்சிபல் திட்டமிடுகிறார் என்பது தெளிவு. கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டோர், சமூக நீதிக்காக போராடுபவர் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டிய நேரம் இது.

- செம்மலர் ஆசிரியர் குழு

Pin It