அறிவுலகம் இழந்துவிட்ட சுகுமார் அழிக்கோடு ஓர் அதிசயமான  மாமனிதர். 1946-ஆம் ஆண்டில் குஜராத் மாநிலம் வார்தாவுக்குச் சென்று காந்திஜியைச் சந்தித்து சேவா கிராமத்தில் சேர்ந்து பணியாற்றுவதற்கான தமது விருப்பத்தைத் தெரிவித்த அவர் ஒரு தூய காந்தியவாதி. அதேசமயம், கேரளத்தில் தமது வாழ்நாள் முழுவதும் சக பயணியாய் இணைந்து பயணப்பட்டது இடதுசாரிகளோடு.

sukumar_pho_370இணைந்த பயணம் இடதுசாரிகளோடென்றாலும் அனைத்து அரசியல் தலைவர்களின் அன்பையும் நன் மதிப்பையும் பெற்றவராக வாழ்ந்தார்.

சுகுமார் அழிக்கோடு ஆற்றல் மிக்க ஓர் எழுத்தாளர். அரசியல், சமுதாய, பண்பாடு, கலை - இலக்கிய விமர்சகர். ஆய்வாளர். தத்துவவாதி. நல்ல நிர்வாகி. பல்கலைக் கழகத் துணை வேந்தர். மலையாள-சமஸ்கிருதப் பேராசிரியர்.…இவ்வாறு பலநிலைகளில் நிபுணத்துவம் மிக்கவராய் புகழுடன் விளங்கி னார். 60 ஆண்டுகள் தொண்டாற்றி, வாழ்வாங்கு வாழ்ந்த இந்த 86 வயது மாமனிதர் கடந்த மாதம் 24 -ஆம் தேதியன்று கால மானார். பெரும் இழப்பாக அறிவுலம் அதிர்ந்தது.

ஆசானின் கீதா காவியம், ரமணனும் மலையாள கவிதையும், முற்போக்கு இலக்கியமும் மற்றும், மகாத்மாவின் மார்க்கம், தத்வமஸி முதலாக அவர் எழுதிய நூல்கள் நிறைய. எழுதிய கட்டுரைகளோ ஆயிரக்கணக்கில். மார்க்சிஸ்ட் கட்சியின் மலையாள நாளிதழான தேசாபிமானி யில் அவர் அநேக விஷயங்கள் குறித்து தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார்.

மத்திய சாகித்ய அகாடமி விருது, மாநில சாகித்ய அகாடமி விருது, எழுத்தச்சன் விருது என இவர் பெற்ற விருதுகள் 15.

பத்மஸ்ரீ விருது இவரை நாடிவந்தபோது அதை அவர் விமர்சனத்தோடு பெற மறுத்துவிட்டார்.

சுகுமார் அழிக்கோடுவின் முற்போக்குச் சிந்தனைகள் எல்லா காலத்திலும் மக்களுக்கு உத்வேகமூட்டும் என்றும், அவர் இடதுசாரியின் சக பயணி என்றும், சமுதாயத்தில் நிலவும் அனைத்து அநீதிகளுக்கும் எதிராக விட்டுக்கொடுக்காமல் போராடிய ஒரு கலாச்சார நாயகன் என்றும், அநீதிகளுக்கு எதிரான போராட்டத்தில் தாமே ஓர் இயக்கமாக விளங்கியவர் என்றும் பிரகாஷ்காரத்,பினராயி விஜயன், வி.எஸ்.அச்சுதானந்தன் ஆகிய மார்க்சிஸ்ட் தலைவர்கள் சுகுமார் அழிக்கோடுவுக்கு இரங்கற் புகழாரம் சூட்டியுள்ளனர்.

Pin It