“கல்வி சிறந்த தமிழ்நாடு”- என்று எதை வைத்து பாரதி சொன்னானோ தெரியவில்லை. இன்றளவும் தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி படுகிற பாட்டைப்போல வேறெதுவும் இத்தனைத் துயரப் பட்டிருக்குமா தெரியாது. முன்னொரு காலத்தில் அமலிலிருந்த சாதிக்கொரு நீதி சொன்ன குருகுலக் கல்வியைவிடவும் இன்றைய மெக்காலே கல்வி முறையென்பது முற்போக்கானதுதான். அதில் சந்தேகமில்லை. ஆனால், சமூக நலம் சார்ந்து ஒரு சேவையைப்போல நடந்துவந்த கல்விப் பணி இன்று பெரும் செல்வம் கொழிக்கும் வியாபார மாகிப்போனதென்பது எத்துணை கொடுமை யானது.

தாய்மொழி வழிக் கல்விக்கு எதிராக இந்தி திணிக்கப்பட்ட காலத்தில் அதனை எதிர்த்த நியாயமான வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் தமிழர்கள். அந்த இந்தியினிடத்தில் தாய்மொழியாம் தமிழை வைக்கத் தவறி, அதற்கு மாறாக ஆங்கிலத்தை வைத்த தவறைச் செய்தனர். ஆங்கிலேயர்களின் ஆட்சி போய் அறுபது ஆண்டுகளைக் கடந்த பின்னரும் ஆங்கில மொழி நம்மை ஆண்டுகொண்டிருக்கும் அவலம் இங்கே.

ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்கும் உயரிய லட்சியத்தை இந்த மண்ணில் விதைக்க வேண்டிய கல்வியானது மாநில அரசு பாடத் திட்டம், மெட்ரிக்குலேஷன் மற்றும் மத்திய அரசு பாடத் திட்டம் என்று ஏற்றத்தாழ்வுடன் பிரிந்து கிடக்கிறது. வசதியுள்ள மேல் தட்டு, நகர்ப்புற மாணவர்கள் ஒருவகைக் கல்வியையும், வசதியற்ற ஏழை, கிராமப்புற மாணவர்கள் வேறொரு வகைக் கல்வியையும் பெறுகிறபோது இங்கே எப்படி சமத்துவ எண்ணம் மேலோங்கும்?

இதில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் முயற்சியாகச் சமச்சீர் கல்வியை வலியுறுத்தி நீண்ட காலப் போரட்டம் நடந்து, அதை அமலாக்க முழு மனதில்லையெனினும் அமலுக்கு கொண்டு வந்திருக்கும் இந்த சமயத்தில் அதற்கும் இடர் வந்திருக்கிறது. தரமற்று இருக்கிறதென்றும் இன்னும் சில காரணங்களைக் கூறியும் சமச்சீர்க் கல்வியைக் கை கழுவமுயலும் நிலை.

மறுபுறம் ஆங்கிலத்தை மூலதனமாக்கி, கல்வி வணிகம் செய்துவரும் மெட்ரிக் பள்ளிகள் அடா வடியாகக் கட்டணங்களை உயர்த்திக் கொள்ளை யடிக்கும் அவலம். இன்றைக்கு ஆங்காங்கே பெற்றோர்கள் மெட்ரிக் பள்ளிகளின் முன்பு போராடுவது அன்றாடக் காட்சியாகியிருக்கிறது. நமது பிள்ளைகளின் கல்விக் கண்களைத் திறப்ப தொன்றே தங்களின் ‘கடமை’யெனக் கங்கணம் கட்டிக்கொண்டு கிளம்பியிருக்கும் இந்தக் கல்விக் கூடங்கள் இந்தக் கட்டணக் கொள்ளையை முறைப் படுத்த செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச ஏற்பாடு களைக்கூட எதிர்க்கின்றன.

பள்ளிப் படிப்பே இப்படி நமது குழந்தைகளை யும் பெற்றோரையும் ஒன்றாக இப்படி மிரட்டிக் கொண்டிருக்கிறது என்றால், தொழில் முறைப் படிப்புகளும், கல்லூரிக் கல்வியும், உயர்கல்வியும் சாதாரண மாணவர்களுக்கு இன்னமும் எட்டாக் கனியாகவே.

கல்வியென்பது என்ன?

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு

கற்றனைத் தூறும் அறிவு.

- என்றும், கல்வியைக் கேடில் விழுச்செல்வம், அறிவு அற்றம் காக்கும் கருவி என்றெல்லாம் நமது வள்ளுவப் பேராசான் வரையறை செய்துவைத் திருக்கிறான். நவீனக் கல்வி என்பது மனித மாண்பு களைப் போற்றி வளர்க்கிற ஒரு உன்னத முறையாக அல்லவா உருவாகியிருக்க வேண்டும்? மனித மனங்களை நன்கு உழுது பண்படுத்துகிற பயனுள்ள கடமையைக் கல்வி ஆற்றவேண்டாமா? மனிதர் யாரும் சரிநிகர் சமான மென்னும் மகத்தான சமூக அமைப்பை உருவாக்குகிற கடப்பாடு கொண்டதல்லவா கல்வியென்பது?

ஏழையென்றும் அடிமையென்றும் யாருமில்லை எனும் நிலைநோக்கிச் செல்லுகிற சமூக விழிப்புக்குத் துணையாக, தோழமை வழிகாட்டி யாக கல்வி வடிவமைக்கப்படுவதே அறிவார்ந்த செயலாக இருக்கமுடியுமல்லவா?

கல்வியின் உண்மைக் கோட்பாடு இப்படியல்லாமல், சுயநலநோக்கங்களோடு வியாபார வெறிகொண்டு சிதைந்து, சீரழிந்திருக்கிற இந்தச் சூழல்தான் பள்ளிப் பிள்ளைகளைத் தாங்கள் பெறும் கல்விமீது நேசமில்லாமல் செய்து விட்டதோ? எப்போது விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் என்று ஆவலாக ஆர்வம் காட்டவேண்டிய பிள்ளைகள் அய்யோ பள்ளி திறக்கப்போகிறதே... லீவு முடியப் போகிறதே... என்று பயந்து நடுங்கி வருந்திக் கிடக்கும் இந்த யதார்த்தம் மாற என்ன செய்யப்போகிறோம்?

- அரவரசன்

Pin It