மெரினாவில் காந்தி சிலையருகே
அமர்ந்திருந்த போதுதான் உதித்தது
ஒற்றை மீனையாவது
வாழ்க்கையில்
பிடித்ததுண்டாவென்ற கேள்வி
வெறியோடு கிளம்பினேன்
கடலைவிட்டு குளத்திற்கு
பதுங்கியிருந்த புழுக்களைச் சேகரித்தேன்
குளம் குதூகலமாயிருந்தது
தேவ கன்னிகைகள்
போன்றொரு களிப்பில் மிதந்து
நிர்வாணம் கொண்டிருந்தன மீன்கள்
புழுக்களை சீதனமாகக் கொடுத்து மாயவேட்டை நடத்தினேன்
குளமெங்கும் ரத்தச் சகதி
வெற்றிக்களிப்பு மேலோங்கக் குதித்தேன்
கால்கள் பெயரவில்லை
எக்காளச் சிரிப்பொலி கேட்டது
புழுக்களும் மீன்களும் கூட்டணி.

 - ஜி.தேவி

Pin It