பண்டைய கிரேக்கமும் உரோமும்:

     மனித சமூகத்தில் சொத்துடமை உருவானபின் உலகம் முழுவதும் வகுப்புகள் தோன்றின. சொத்துடமை இருக்கும்வரை வகுப்புகளும் இருக்கும். தொழில் அடிப்படையில், வர்க்க அடிப்படையில் இந்த வகுப்புகள் இருந்தன. பிறப்பு அடிப்படையில் வகுப்புகள் இருக்கவில்லை. கிரேக்கத்தில் இனக்குழுகால கண ஆட்சிக்குப்பின் உருவான ஏதென்சின் நகர அரசில் முதலில் பிரபுக்கள் ஆட்சியும், அதன்பின் மக்கள் சனநாயக ஆட்சியும் நடந்தன. அக்காலகட்டம் ‘ஆண்டான் அடிமை’ காலகட்டமாகும். அக்காலகட்டத்தில் ஏதென்சில் பிரபுக்கள், தொழில் செய்தவர்களும் வணிகர்களும், விவசாயிகள், அடிமைகள் ஆகிய வகுப்புகள் இருந்தன. தொழில் செய்தவர்களும் வணிகர்களும் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட விவசாயிகள் அளவு இருந்தனர். கிட்டத்தட்ட இதே நிலைதான் உரோமிலும் இருந்தது. அங்கு பிளேபியன்கள் எனப்படும் உரோமின் குடிமக்களாகக் கருதப்படாத மக்கள் பிரிவினர் இருந்தனர். அவர்களில் வசதி படைத்தவர்களும், தொழில் செய்தவர்களும், வணிகர்களும், விவசாயிகளும் இருந்தனர். இவர்கள் போக அடிமைகள் இருந்தனர். ஏதென்சில் மூன்றில் இரு பங்குக்கு மேல் அடிமைகள் இருந்தனர். சுதந்திரமான மக்கள் பிரிவினர் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே இருந்தனர். கிரேக்கத்திலும் உரோமிலும் இனக்குழுகால இறுதியில் வலிமையோடிருந்த பூசாரிகள் வகுப்பு, நகர அரசின் காலத்தில் வலிமையற்றதாக ஆக்கப்பட்டிருந்தது.

இடைக்கால சப்பான்:

   சப்பானில் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் பிரபுக்கள் எனப்பட்ட ஆளும் வர்க்கம், சாமுராய்கள் எனப்படும் போர்வீரர்கள் வகுப்பு, தொழில் செய்வோரும் வணிகர்களும், விவசாயிகள் ஆகிய வகுப்புகள் இருந்தன. பிரபுக்களும், சாமுராய்களும் மட்டுமே ஆயுதந்தாங்கும் உரிமை கொண்டவர்களாக இருந்தனர். பிரபுக்கள் சாமுராய்களையும், சாமுராய்கள் விவசாயிகள் போன்ற பிற அனைத்து வகுப்புகளையும் எப்பொழுது வேண்டுமானாலும் தண்டிக்கும் உரிமை கொண்டவர்களாக இருந்தனர். தண்டிக்கும் உரிமை என்பதில் கொலை செய்யும் உரிமையும் இருந்தது. அதே சமயம் விவசாயிகள் கூட பிரபுக்கள் ஆகலாம். பிறப்பு அடிப்படையில் இவ்வகுப்புகள் இல்லை. பூசாரிகள் வகுப்பு அங்கு வலிமை பெற்றதாக இருக்கவில்லை. சப்பானில் ஆண் தன் மனைவி தவிர பிற பொது மகளிரிடம் இன்பம் துய்க்கும் உரிமையை சட்டபூர்வமாகப் பெற்றிருந்தான். மேல் வகுப்புகளில், அந்தப் பொது மகளிரைத் தேர்ந்தெடுத்து கணவன் விரும்பும்போது தரவேண்டிய கடமையும், நிதி உட்பட ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் நிர்வகிக்க வேண்டிய கடமையும் மனைவிக்கு இருந்தன.

பழந்தமிழகம்:

    பழந்தமிழகத்திலும் வகுப்புகள் இருந்தன. வேந்தர், அரசர், வேளிர் போன்றவர்கள் ஆளும் வகுப்பாக இருந்தனர். பிசிராந்தையார் புறம் 191ஆம் பாடலில் குறிப்பிடும் அந்தணர், தாபதர், அறிவர், கணியர் போன்ற கொள்கைச்சான்றோர் ஒரு வகுப்பாக இருந்தனர். இவர்கள் அறிவு, ஆய்வு, ஒழுக்கம், பொதுநலம், துறவு ஆகியவற்றில் சிறந்தவர்கள். தொல்காப்பியப் பொருளதிகாரம் கற்பியலில் உள்ள 13, 14ஆம் பாடல்கள், தலைவன் தலைவிக்கு நல்லவற்றை கற்பித்தலும், அவர்கள் அறவழி தவறி நடக்கும்பொழுது இடித்துரைத்து அறிவுரை கூறி நல்வழிப்படுத்தலும் அறிவர்கள் எனப்படும் சான்றோர்களின் கடமையாகும் என்கிறது. ஆகவே அறிவர்கள் எனப்படும் கணியர்களும் சான்றோர்கள் என்பதை தொல்காப்பியம் கூறியுள்ளது. சான்றோர்கள் குறித்துக் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற அரச இளவல் தனது புறம் 182ஆம் பாடலில், தேவர்களின் அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாதவர்கள்; யாரையும் வெறுக்காதவர்கள்; கோபம் இல்லாதவர்கள்; அஞ்சவேண்டியவற்றுக்கு அஞ்சுபவர்கள்; புகழுக்காகத் தம் உயிரையும் கொடுப்பவர்கள்; பழி வருமெனின் உலகமே கிடைத்தாலும் ஏற்காதவர்கள்; அயர்வே இல்லாதவர்கள் ஆகிய நற்குணங்களைப்பெற்று தமக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர்கள் எனக்கூறுகிறான். வள்ளுவனின் 99ஆவது அதிகாரமான ‘சான்றாண்மை’ சான்றோர்களின் பண்பு நலன் குறித்துப்பேசுகிறது. மேலும் வள்ளுவன் ‘நீத்தார் பெருமை’ என்ற மூன்றாவது அதிகாரத்தில் உள்ள பத்து குறள்களில் இவர்களின் நற்குணங்களைப் பற்றிக்கூறுகிறான். அதன் பத்தாவது குறள் “அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டுஒழுக ழான்” என்கிறது. அதன்மூலம் ‘அந்தணர்’ என்போர்தான் சான்றோர்கள் எனக்கூறுகிறான் வள்ளுவன். வான் சிறப்புக்குப்பின் மூன்றாவது அதிகாரமாக இது வைக்கப்பட்டுள்ளது என்பது அதன் சிறப்பை உணர்த்துகிறது. நீத்தார் என்பது எல்லாவற்றையும் துறந்தவர்களை, பற்றில்லாதவர்களைக் குறிக்கும்.

  வணிகர்கள், வேளாண்மை செய்யும் நிழக்கிழார்கள் ஆகியவர்களில் செல்வந்தர்களும், உயர்ந்தோர்கள் எனப்படுவோரும் மூன்றாவது வகுப்புக்கு உரியவர்கள் ஆவர். சிறுகுறு வணிகர்களும் & தொழில்செய்பவர்களும், சிறுகுறு வேளாளர்களும், போர்வீரர்களும், பார்ப்பனர், பாணர், கூத்தர், பொருநர், விறலி போன்றவர்களும், இன்னபிறரும் நான்காவது வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். முதல் மூன்று வகுப்பினர் மேலோர் ஆவர். இந்த நான்காவது வகுப்பினர் கீழோர் ஆவர். இழிதொழில்களையும், அடிமைத் தொழில்களையும் செய்யும் இழிசனர், சண்டாளர் போன்றவர்கள் ஐந்தாவது வகுப்பைச் சேந்தவர்கள் ஆவர். தமிழகத்தில், சங்ககாலத்தில் சாதிகள் இருக்கவில்லை. சங்க இலக்கண இலக்கியங்களில் சொல்லப்படும் விடயங்களைக் கொண்டு மேற்கண்ட ஐந்து வகுப்புகளை அடையாளம் காணமுடியும். இந்த ஐந்து வகுப்புகளும் தொழிலை, செல்வத்தை அடிப்படையாகக் கொண்டவைகளாகும். இவை பிறப்பை அடிப்படையாகக் கொண்டவையல்ல. ஆனால் இதில் கடைசி வகுப்பை விலக்கி மீதி நான்கு வகுப்புகளை மட்டுமே தொல்காப்பியம் வகுப்புகளாகக் குறிப்பிடுகிறது. பண்டைய கிரேக்க உரோம சமூகங்களைப் போலவே தமிழகத்திலும் சங்ககாலத்தில் பூசாரிகள் வலிமையற்ற வகுப்பாகவே இருந்தனர். பக்தி காலகட்டத்திலும் அதன்பின்னரும்தான் பூசாரிகளாகிய பார்ப்பனர்கள் தமிழ்ச் சமூகத்தில் வலிமை மிக்க வகுப்பாக ஆனார்கள்.

அந்தணரும் பார்ப்பாரும்:

  அந்தணரும் பார்ப்பாரும் வேறு வேறு வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களில் அந்தணர் என்பது சில இடங்களில் பார்ப்பார், பார்ப்பனர் என மாற்றப்பட்டுள்ளது என்பதோடு நிறைய பார்ப்பனர் சார்ந்த, வைதீகம் சார்ந்த இடைச்செருகல்களும் செய்யப்பட்டுள்ளன. சான்றாக சாமி சிதம்பரனார் தனது தொல்காப்பியத்தமிழர் என்ற நூலில் அறுவகைப்பட்ட அந்தணர் பக்கம் என்பது பார்ப்பனர் பக்கம் என மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்(1) அவர் தொல்காப்பியச் சான்றுகளைக்காட்டி அந்தணர் வேறு, பார்ப்பனர் வேறு என்பதை உறுதிப்படுத்துகிறார். தொல்காப்பியத்தில் உள்ள பொருளதிகாரத்தில் உள்ள 620, 622, 632 (மரபியல்:72,74,84) ஆகிய பாடல்களைக்கொண்டு அந்தணர் அரசருக்குச் சம்மானவர் எனவும் நான்கு வகுப்புகளில் முதல் வகுப்பினர் எனவும் கூறப்படுகின்றனர். ஆனால் பார்ப்பனர் நிலை வேறு. பொருளதிகாரத்தின் 175, 191(கற்பியல்:36,52) ஆகிய பாடல்களிலும், பொருளதிகாரத்தின் 494(செய்யுளியல்-185) ஆம் பாடலிலும் தலைவன், தலைவி ஆகியவர்களின் களவிலும் கற்பிலும் பாணன், பாங்கன், தோழி, செவிலி ஆகியவர்களோடு சேர்ந்து உதவி செய்பவர்களாகக் பார்ப்பனர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர் என சாமி சிதம்பரனார் கூறுகிறார். தலைவன், தலைவியின் பிரிவு நிலையில் பார்ப்பாரின் கூற்று ஆறு என பொருளதிகாரத்தின் 175(கற்பியல்-36)ஆம் பாடல் கூறுகிறது. காமநிலை உரைத்தல், தேர்நிலை உரைத்தல், கிழவோன் குறிப்பினைக்கூறுதல், நிமித்தம் கூறல், செலவறு கிளவி(தலைவன் உறுதியாகப்பிரிந்து போவதைத் தலைவிக்குத் தெளிவாகக் கூறுதல்), செலவழங்கு கிளவி(பிரிவதைத் தள்ளிப்போடும் செலவழுங்கள் பற்றிக்கூறுதல்) ஆகிய ஆறுமாகும். மேலும் அகம் 24ஆம் பாடலில் பார்ப்பனன் வளையல் செய்பவனாக இருக்கிறான். என்கிறார். ஆகவே அந்தணர் வேறு, பார்ப்பனர் வேறு எனவும் ஆனால் இருவரும் தமிழர்களே எனவும் பார்ப்பனர்கள் அந்தணர்களைவிடக் கீழ் நிலையில் உள்ளவர்கள் எனவும் சாமி சிதம்பரனார் கூறுகிறார்(2). ஆகவே சங்ககாலத்தில் அந்தணர்கள் முதல் அல்லது இரண்டாம் வகுப்பைச்சேர்ந்த மேலோராகவும், பார்ப்பனர்கள் நான்காம் வகுப்பைச்சேர்ந்த கீழோராகவும் இருந்துள்ளனர் எனத்தெரிகிறது.

கபிலர்–அந்தணர்:

  அந்தணர்களுக்குச் சான்றாகக் கபிலரை எடுத்துக்கொள்வோம். அவர்தான் சங்ககாலப் புலவர்களில் தன்னை அந்தணர் எனக் கூறிக்கொண்ட பெருமைக்குரியவர். புறம் 200ஆம் பாடலில் விச்சிக்கோவிடம் தான் பரிசிலன், பெருமைக்குரிய அந்தணன் எனவும், புறம் 201ஆம் பாடலில் இருங்கோவேளிடம் தான் அந்தணன், புலவன் எனவும் கூறிக்கொள்கிறார். ஆக கபிலர் தன்னை பரிசிலன் எனவும், புலவன் எனவும் பெருமைக்குரிய அந்தணன் எனவும் கூறிக்கொள்கிறார். அவர் புறத்தில் 28, அகத்தில் 18, நற்றிணையில் 20, குறுந்தொகையில் 28, ஐங்குறுநூறில் 100, 7ஆம் பதிற்றுப்பத்தில் 10 ஆகமொத்தம் 204 பாடல்கள் பாடியுள்ளார்(3). கலித்தொகையில் உள்ள பாடல்கள் அவர் பாடியதல்ல. அவரது பாடல்கள் அவர் ஒரு பொருள்முதல்வாதி என்பதை உறுதிப் படுத்துகின்றன. சான்றாக புறம் 105 முதல் 124 வரையுள்ள பாடல்கள் பாரி குறித்தும் மலையமான் குறித்தும் அவர் பாடியவைகளாகும். அப்பாடல்கள் இயல்பானதாகவும், இயற்கையைப் பாடுபவனாகவும், அறிவியல்தன்மை உடையவனாகவும், மூட நம்பிக்கைகளை, சடங்குகளை, குறிசொல்வதை மறுப்பதாகவும், பொருள்முதல்வாதத்தன்மை கொண்டதாகவும் இருக்கின்றன. முனைவர் க.நெடுஞ்செழியன் அவரை ஆசீவகச் சமயத்தவர் எனவும் ஆசிவக மரபுப்படி வடக்கிருந்து உயிர் துறந்தவர் எனவும் அவரது பாடல்களில் ஆசிவக மெய்யியல் சிந்தனைகள் இடம்பெறுகின்றன எனவும் கூறுகிறார்(4).

  கபிலர் எண்ணிய மூலவரின் பெயரைக்கொண்டுள்ளார் என்பதோடு அவரது பாடல்களில் எண்ணியச் சிந்தனைகளும் இடம்பெறுகின்றன எனலாம். கபிலர் தனது சம காலப்புலவர்களால் மிகவும் மதிக்கப்பட்டவர். மாறோக்கத்து நப்பசலையார் என்பவர் கபிலரை “புலனழுக்கற்ற அந்தணாளன்”(புறம்-126) எனவும், பொருந்தல் இளங்கீரனார், “செறுத்த செய்யுட் செய் செந்நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்”(புறம்-53) எனவும், நக்கீரர், “பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன்”(அகம்-78) எனவும் பெருங்குன்றூர் கிழார் “வயங்கு செந்நாவின்……..நல் இசைக்கபிலன்” (பதிற்றுப்பத்து-85) எனவும் புகழ்ந்து பாடியுள்ளனர்(5). கபிலரின் புலமைச்சிறப்பை மட்டுமின்றி அந்தணர் எனப்படும் சான்றோருக்குரிய அவரின் ஒட்டுமொத்த பண்பு நலன்களின் சிறப்பையும் குறிக்கும் அடிப்படையில்தான் அவரை மேற்கண்ட சங்கப்புலவர்கள் புகழ்ந்துள்ளனர் எனலாம். கபிலரைப்புகழ்ந்து பாடிய நக்கீரர், மாறோக்கத்து நப்பசலையார், பெருங்குன்றூர் கிழார், பொருந்தல் இளங்கீரனார் ஆகிய நால்வரும் மிகச்சிறந்த புலவர்கள் ஆவர். பெருமைக்குரிய அந்தணன் எனக் கூறும் தகுதி பெற்றவர் என்பதால்தான் கபிலர் அந்நால்வராலும் புகழப்பட்டுள்ளார். கபிலர் பொருள்முதல்வாதி; ஆசிவகச் சமயச் சார்பாளர்; வைதீக மரபுக்கு எதிரானவர்; கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியும், பிசிராந்தையாரும், வள்ளுவரும் கூறும் அந்தணர் எனப்படும் தமிழ்ச்சான்றோருக்குரிய பண்புகளை, அதற்கானத் தகுதிகளைக் கொண்டிருப்பவர். அவர் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டாகும்.

  கபிலரின் குறுந்தொகைத்தலைவி(குறுந்:288), ‘தலைவன் விரைந்து மணம் முடிக்காமல் தரும் துன்பத்தின் இனிமையை விடவா தேவருலகம் இனிமையானது’ எனத் தோழியிடம் கேள்வி எழுப்புகிறாள். அக்கவிதை, “இனிதோ- இனிதுஎனப் படூஉம் புத்தேள் நாடே?” என முடிகிறது. கபிலர் அதில் ‘இனிது எனச்சொல்லப்படும் தேவருலகம்’ எனக்கூறுவதன் மூலம் தேவருலகம் இனிமையானது எனச்சொல்லப்படுகிறது. ஆனால் இனிமையானது அல்ல எனக் கூறுவதோடு தேவருலகம் என்ற ஒன்று இல்லை எனவும் கூறுகிறார் எனலாம். தேவருலகத்தை மறுப்பதன் மூலம் இப்பாடல் கடவுள் மறுப்பும், வைதீக எதிர்ப்பும் கொண்ட பாடல் எனலாம். கபிலர் எண்ணியப்பொருள்முதல்வாதி என்பதை இப்பாடல் உறுதி செய்கிறது.

  கபிலரின் குறிஞ்சிப்பாட்டு ஆசிவக ஊழியியலை அடிப்படையாகக் கொண்டது என்கிறார் முனைவர் க.நெடுஞ்செழியன்(6). தமிழுக்கு மட்டுமே உரிய அகத்திணை மரபின் சிறப்பை, தமிழ் அகப்பொருள்நெறி குறித்தத் தெளிவை ஆரிய அரசன் அறிவதற்காகப் பாடியதுதான் அவரது குறிஞ்சிப்பாட்டாகும். அப்பாட்டின் அடிக்குறிப்பு “ஆரிய அரசன் பிரகதத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு முற்றியது” என்கிறது. கபிலர் தாம் பாடிய 7ஆம் பதிற்றுப்பத்தில் செல்வக்கடுங்கோ வாழியாதனின் வடதிசைப்படையெடுப்புக்கான படையை ‘தண்டமிழ் செறித்து’(பதிற்றுப்பத்து-63, வரி-9) எனக் குறிப்பிடுகிறார். அதன்மூலம் அப்படை சேரர்களோடு, சோழ பாண்டியர்களையும் கொண்ட தமிழ்ப்படையாகவே இருந்தது என்பதை அவர் குறிப்பிடுகிறார். தமிழ் மொழி மீதும், தமிழ்ப் பண்பாட்டின் மீதும் அவருக்கிருந்த பற்றை, தான் ஒரு தமிழ்ச்சான்றோன் என்பதில் அவருக்கு இருந்த பெருமையை அவரது பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. சங்ககாலத்துக்கு 1000 வருடங்களுக்குப்பின் வந்த உரையாசிரியர்கள் அல்லது அதற்கு முந்தைய ஏடெழுதியவர்கள் தங்களுடைய காலகட்டச் சிந்தனையைக் கொண்டு கபிலர் போன்ற சான்றோர்களை, வைதீகப் பார்ப்பனர்களாக ஆக்கத் தேவையான இடைச்செருகல்களையும் திருத்தங்களையும் செய்துள்ளனர் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

தொல்காப்பியம்:

   tholkaappiya thamizhar தொல்காப்பியம் எழுதிய தொல்காப்பியரை ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என அதன் சிறப்புப் பாயிரம் கூறுகிறது. ஐந்திரம் என்பது உலகாயதம், ஓகம், எண்ணியம் ஆகிய மூன்றையும் கொண்டது. இதில் உள்ள ஓகம் என்பது சிறப்பியம், நியாயவியல் ஆகிய இரண்டும் சேர்ந்தது. ஆகவே உலகாயதம், சிறப்பியம், நியாயவியல், எண்ணியம் ஆகியவைகளைக்கொண்ட ஐந்திரத்தை முழுமையாகக் கற்றவன் தொல்காப்பியன் என்பதையே ஐந்திரம் நிறைந்தவன் என்பது குறிக்கிறது எனலாம். ஆகவே தொல்காப்பியர் ஒரு உலகாயதப் பொருள்முதல்வாதி என்பதோடு ஒரு எண்ணியவாதியும் ஆவார். ஐந்திரம் கற்ற தொல்காப்பியன் தனது நூலில் படிமுறைக்கோட்பாடு, ஐம்பூதக்கோட்பாடு, அளவையியல் கோட்பாடு, காரணகாரியக்கோட்பாடு, இன்பியல் கோட்பாடு ஆகிய அறிவுசார் துறைகளை விரிவாகவும் செறிவாகவும் கூறியுள்ளார். தொல்காப்பியர் கூறியுள்ள இக்கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதுதான் சங்க இலக்கியத்தின் மெய்யியல் கூறுகளாகும். ஐந்திரம் என்பது தமிழிய அறிவியல் கல்வி முறையாகும். அதனால்தான் தொல்காப்பியர் மேலே குறிப்பிட்ட கோட்பாடுகளைப்பற்றி பேசும் போதெல்லாம் அவை தனது முன்னோர் கூறியது என்றே கூறிச்செல்கிறார். பகுத்தறிவையும், காரணகாரியக் கோட்பாட்டையும், தருக்கவியலையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு அறிவுப்பள்ளிதான் தமிழிய ஐந்திரக்கல்வி முறையாகும்(7). அதனால்தான் ஐந்திரக்கல்வி முறையைச் சாணக்கியனும் கம்பனும் வேதங்களைவிட மேலான கல்விமுறையாகக் குறித்துள்ளனர்.

  தொல்காப்பியரின் ஐந்திர மெய்யியல் & அறிவியல் பின்புலத்தின் அடிப்படையில்தான் நாம் தொல்காப்பியத்தைக் காணவேண்டும். அப்பொழுது தான் தொல்காப்பியத்தில் உள்ள இடைச்செருகல்களை, திருத்தங்களை அடையாளங்கண்டு ஒரு தெளிவைப்பெறமுடியும். தொல்காப்பியருக்கு 1500 ஆண்டுகள் கழித்து வந்த, வைதீகச்சிந்தனை ஆதிக்கத்தில் இருந்த காலகட்டத்துக்குரிய உரையாசிரியர்களின் கருத்தில் இருந்துதான் இன்றும் தொல்காப்பியம் பார்க்கப்படுகிறது. தொல்காப்பியரின் காலம் என்பது வளர்ச்சிபெற்ற வணிக நகர அரசுகள் இருந்த காலம். பொருள்முதல்வாதச் சிந்தனை ஆதிக்கம் வகித்த காலம். இந்தப்புரிதல் இல்லாத பொழுது தொல்காப்பியத்தை முறையாகப் புரிந்து கொள்ளல் என்பது இயலாத காரியம். தொல்காப்பியத்தின் சிறப்பினை உணர்ந்த இரசிய மொழியியல் அறிஞர் டாக்டர் கபில் சுவெலபில் அவர்கள், “தொல்காப்பியம், மனித அறிவாற்றல் எவ்வளவு வியத்தகு உச்சநிலை எய்தக்கூடும் (one of the finest monuments of human intelligence) என்பதைக் காட்டும் சிறந்த சான்றுகளுள் ஒன்று. இலக்கியக் கொள்கையில் வேறு எந்தப் பண்டைய மொழிகளிலும் இல்லாத சிறந்த கருத்துக்களைத் தொல்பொருள் செய்யுளில் தொல்காப்பியம் கூறுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்(8).

தொல்காப்பியப் பொருளதிகாரம்: புறத்திணையியல்

    தொல்காப்பியப் பொருளதிகாரம் 9 இயல்களைக் கொண்டது. இதில் இரண்டாவதாக உள்ள புறத்திணையியலில் வெட்சித்திணை முதல் பாடாண்திணை வரையான ஏழு திணைகள் குறித்த விளக்கம் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு திணையிலும் நடைபெறும் போர் குறித்த நிகழ்வுகள் துறைகளாகப் பிரிக்கப்பட்டு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

1.வெட்சித்திணை: போர் தொடங்குவதற்கு முன் பகைவரின் ஆநிறைகளைக் கவரும் வெட்சித்திணையும், பகைவர் அதை மீட்கும் கரந்தைத்திணையும் குறிஞ்சிக்குப் புறமாக உள்ள வெட்சித்திணையில் அடங்கும். ஆநிறைகளைக்கவரும் வெட்சித்திணையில் 14 துறைகளும், ஆநிறைகளை மீட்கும் கரந்தைத்திணையில் 21 துறைகளும் உள்ளன. கரந்தைத்திணையில் உள்ள கடைசி 5 துறைகள் ஆநிறை மீட்ட போரில் இறந்த வீரனுக்கு நடுகல் நட்டு வழிபடுதல் சார்ந்த துறைகளாகும். வீரர்களின் குடிப்பெருமையைக் கூறும் ‘குடிநிலை’ துறையும், போர்க்கடவுளான கொற்றவையின் பெருமையைக்கூறும் ‘கொற்றவை நிலை’ துறையும் வெட்சித்திணைக்கு உரியவைகளாகும். ஆகமொத்தம் 14+21+2=37 துறைகளாகும்.

2.வஞ்சித்திணை: மண்ணாசை கொண்டு போரிட வந்த பகைவனை எதிர்த்துப் போரிடுவது முல்லைத்திணைக்குப் புறமாக உள்ள வஞ்சித்திணையாகும். இதில் 13 துறைகள் உள்ளன. இதில்தான் ‘பெருஞ்சோற்று நிலை’ துறையும் தோற்ற மன்னன் குறித்துப்பாடும் ‘கொற்றவள்ளை’ துறையும் உள்ளது.

3.உழிஞைத்திணை: மதிலை முற்றுகையிடுவதும் பாதுகாப்பதும் மருதத் திணைக்குப் புறம்பான உழிஞைத்திணையாகும். இதில் மதில் முற்றுகைக்கு 4 துறையும், மதில் காத்தலுக்கு 4 துறையும் உள்ளன. இவை போக இரு நிலைக்கும் பொதுவாக உள்ள துறைகள் 12 ஆகும். இதில் வெண்குற்றக்குடை, வாள் ஆகியவைகளுக்குச் சிறப்பு செய்யும் துறைகளும் அடங்கும்.

4.தும்பைத்திணை: வேந்தர்களின் வலிமையைக்காட்ட நிகழும் போர், நெய்தல் திணைக்குப்புறம்பான தும்பைத்திணையாகும். இதில் 12 துறைகள் உள்ளன.

5.வாகைத்திணை: வெற்றியின் அடையாளமான வாகைத்திணை, பாலைத் திணையின் புறமாகும். போர்வெற்றிக்குப்பின் நடக்கும் நிகழ்வுகள் 9 மறத்துறைத் துறைகளாகவும், அகவாழ்வில் வெற்றி பெறுவதற்கான 9 துறைகள், அறத்துறைத் துறைகளாகவும் தரப்பட்டுள்ளன. ‘வேலினது வென்றி’ என்ற துறை வேலின் சிறப்பைப் புகழ்வதாகும். ‘அவிப்பலி’ என்பது வீரன் ஒருவன், வேந்தனின் வெற்றிக்காகத் தன் உயிரைப் பலி கொடுப்பதாகும்.

6.காஞ்சித்திணை: வாழ்வின் நிலையாமை குறித்தும், போருக்கு பிந்தைய நிகழ்வுகள் குறித்தும் விளக்கம் தரும் காஞ்சித்திணை, பெருந்திணையின் புறமாகும். இதில் போர்க்கள நிகழ்வுகள் குறித்துப் 10 துறைகளும், பிற இட நிகழ்வுகள் குறித்துப் 10 துறைகளும் உள்ளன.

7.பாடாண்திணை: ஐந்து புறத்திணைகளிலும் சிறப்புற்று விளங்கும் ஆண்மகனின் புகழைப்பாடும் பாடாண்திணை, கைக்கிளைத்திணையின் புறமாகும். இதில் பத்துப் பத்து துறைகளாக 20 துறைகள் உள்ளன. இதில் ஆநிரைகளைக்கொடையாக வழங்கும் ‘வேள்வி நிலை’ என்ற துறையும், பிறந்த நாளைக் கொண்டாடும் ‘பெருமங்கலம்’ துறையும், முடிசூட்டு விழாவைக்கொண்டாடும் ‘சீர்த்தி மண்ணுமங்கலம்’ துறையும், நாள்-கோள், புள் போன்ற நிமித்தங்கள் பார்க்கும் ‘நிமித்தம் பார்த்தல்’ துறையும் அடங்கும்.

 ஏழு திணைகளின் மொத்தத் துறைகள் 130 ஆகும். புறத்திணை சார்ந்த அனைத்து நிகழ்வுகளும் இந்த 130 துறைகளில் அடங்கும். வேந்தனின் பிறந்த நாள் விழா, முடிசூட்டு விழா, வெண்கொற்றக்குடை, வாள், வேல் ஆகியவைகளுக்குச் சிறப்புச் செய்யும் விழாக்கள், நடுகல் வழிபாடு, நிமித்தம் பார்த்தல், வேள்விநிலை போன்ற பல துறைகள் இதில் இருக்கின்றன(9).

வேள்வி: தொல்காப்பியத்தில் வேள்வி செய்தல்

   ‘வேள்வி நிலை’ என்ற துறையில் வெற்றிபெற்ற வேந்தன் ஆநிரைகளைப் பரிசாக வழங்கும் நிகழ்வுதான் உள்ளது. ஆனால் ‘வேள்வி செய்தல்’ குறித்தத் துறை எதுவும் இல்லை. ஆகவே வேள்வி செய்தல் என்பது தொல்காப்பியர் காலத்தில் நடைபெறவில்லை எனலாம். இந்த 130 துறைகள் போக வாகைத்திணையில் 7 பாகுபாடுகள் தரப்பட்டுள்ளன. அவை அறுவகைப்பட்ட பார்ப்பனர் பக்கம், ஐவகை மரபின் அரசர் பக்கம், இருமூன்று மரபின் ஏனோர் பக்கம், அறிவன் தேயம், நாலிரு வழக்கில் தாபதப்பக்கம், பொருநர்கண்பக்கம், அனைநிலைவகை ஆகியன. முதல் பாகுபாட்டில் உள்ள பார்ப்பனப்பக்கம் என்பது அந்தணர்பக்கம் என இருக்கவேண்டும் என்பது முன்பே சொல்லப்பட்டுள்ளது. இந்த அந்தணர் பக்கம் அந்தணர்களுக்கான ஆறு கடமைகள் அல்லது ஒழுக்கங்கள் குறித்து பேசுவதற்குப் பதிலாக, அதில் வேதச்சார்பான பார்ப்பனப் பூசாரிகளின் பணிகள்தான் சொல்லப்பட்டுள்ளன. அங்குதான் வேள்வி செய்தல், வேள்வி செய்வித்தல் முதலியன வருகின்றன.  அந்தணர்களுக்கு மட்டுமல்லாது, வேந்தர், வணிகர் ஆகியவர்களுக்கும் வேள்வி செய்தல் ஒரு கடமையாக ஒரு ஒழுக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. அதே சமயம் அறிவர்களுக்கும், போர் செய்யும் பொருநர்களுக்கும் வேள்வி செய்தல், வேள்வி செய்வித்தல் முதலிய கடமைகளோ ஒழுக்கங்களோ இல்லை. தாபதர்களான துறவிகளுக்கும் இவை இல்லை. ஆகவே இந்த 7 பாகுபாடுகளுக்கான கடமைகளிலும், ஒழுக்கங்களிலும் இடைச்செருகல்களும், திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன என்பது உறுதி.

  130 புறத்திணைத்துறைகளிலும் வேள்வி செய்தல் என்பது இல்லை எனும்பொழுது அன்று வேள்வி செய்தல் என்பது இருந்திருக்காது எனலாம். அன்றைய தமிழகத்தில் சான்றோர் உயர் குண நலன்களையும் பண்பு நலன்களையும் பெற்று அந்தணர் என்ற மிக உயர்நிலையில் இருந்தனர் எனவும், பார்ப்பனர்கள் கீழ்நிலையில் இருந்தனர் எனவும் முன்பே குறிப்பிட்டோம். அன்றைய தமிழகத்தில் நகர்மைய அரசுகள் நன்கு வளர்ந்திருந்ததோடு, உலகளாவிய வணிகப் பொருளாதார மேன்மையையும் கொண்டிருந்தன எனவும் பேரரசுகள் இல்லை எனவும் அதன் விளைவாக அன்றைய தமிழ்ச் சமூகத்தில் எண்ணியம், சிறப்பியம், நியாயவியல், உலகாயதம் போன்ற பொருள்முதல்வாதச் சிந்தனைகள் இருந்தன எனவும் முன்பே குறிப்பிட்டுள்ளோம். இந்நிலையில் அன்றைய அந்தணர்களுக்கும், வேந்தர்களுக்கும், வணிகர்களுக்கும் வேள்வி செய்தலும், வேதமறைகளை ஓதுதலும்தான் முக்கியக் கடமையாகச் சொல்லப்பட்டுள்ளது என்பது வேடிக்கையான விடயமாகும். அதே சமயம் துறவிகளான தாபதர்களுக்கும், அறிவர்களுக்கும், போர்வீரர்களுக்கும் அக்கடமைகள் இல்லை. ஆகவே இந்தப்பாகுபாடுகளில் உள்ள கடமைகளிலும், ஒழுக்கங்களிலும் இடைச்செருகல்களும், திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

மீமாம்சமும் வேள்விச்சடங்கும்:

  வேள்விச்சடங்கு என்பது வேத அடிப்படையிலான மீமாம்சக் கருத்தியல் நடைமுறையாகும். அதே சமயம் இம்முறை வைதீகக் கருத்தியலுக்கு மாறுபாடான முறையுமாகும். மீமாம்சம் என்பது அடிப்படையில் கடவுள் மறுப்பையும், நாத்திகத்தையும் கொண்டதாகும். வேதங்கள் இறைத்தன்மை வாய்ந்தவை, பரிபூரணமானவை, மாறாத் தன்மையையும், நித்தியத்தையும் கொண்டவை என்பதும், யாகம்செய்தல், மந்திரம் ஓதுதல், சமயச் சடங்காற்றுதல் ஆகிய கருமங்கள்தான் ஆன்ம முக்தி அடைவதற்கான ஒரே வழி என்பதும், வேதங்களும், பிராமணங்களும் மனிதனுக்குத் தேவையான அனைத்து மெய்யறிவையும் கொண்டுள்ளன என்பதும் மீமாம்சகர்களின் கோட்பாடாகும். வேதங்களின் மீது மாறாப்பக்திகொண்ட இவர்கள் கடவுளை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் இவர்கள் ‘நாத்திகர்’ ஆனார்கள். மீமாம்சத்தில் நாத்திக உள்ளடக்கம் மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. மீமாம்ச இலக்கியங்களில் கடவுளுக்கு எதிரான மிக ஆணித்தரமான பிரகடனங்களும், கடவுளுக்கு எதிரான தருக்கவியல் விளக்கங்களும் மிக ஏராளமாக உள்ளன. கடவுள் என்பது வெறும் கட்டுக்கதை. வேத தெய்வங்கள் வெறும் வார்த்தைகள் என்கின்றனர் இவர்கள். இந்தியத்தத்துவ வரலாற்றில், வேதத்தைப் புனிதமாகக் கருதும் மீமாம்சகர்கள், ‘கடவுள் மறுப்பாளர்கள்’ என்பதும் ‘நாத்திகர்கள்’ என்பதும் ஒரு வியப்பான விடயமாகும்.

   வேள்விச்சடங்குகள் என்பன கடவுள் மறுப்பையும், நாத்திகத் தன்மையையும் கொண்டன என்பதால் சங்கப் பிற்காலகட்ட வேந்தர்கள் சிலர் செய்த வேள்விச்சடங்குகளைக்கொண்டு அவர்களை வைதீக ஆதரவாளர்கள் எனக்கொள்ளமுடியாது என்பதுதான் இங்கு கவனிக்கவேண்டிய விடயமாகும். கி.மு.3ஆம் நூற்றாண்டுக்குப்பின் மீமாம்ச வேள்விச்சடங்குகள் தக்காணத்திலும் வட இந்தியாவிலும் ஆளுவோர்களிடம் செல்வாக்கு பெற்றதாக ஆகியிருந்தது. அதன் விளைவே தமிழகத்திலும் ஒரு சில வேந்தர்களிடம் எதிரொலித்தது எனலாம். ஆனால் சிறு, குறு மன்னர்களிடமும், வேளிர்களிடமும், பொதுமக்களிடமும் அது செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை. அதுபோன்றே சங்ககாலத்தில் அந்தணர் எனப்படும் சான்றோர்கள்தான் தமிழகத்தில் செல்வாக்கு பெற்றவர்களாக இருந்தனர். பார்ப்பனர்கள் கீழ்நிலை மக்களாகவே இருந்தனர். ஆனால் இடைச்செருகல்களும், திருத்தங்களும் இருவரும் ஒருவரே என்ற மயக்கத்தை ஏற்படுத்தி பார்ப்பனர்கள் சங்ககாலத்தில் உயர்நிலையிலும் செல்வாக்கோடும் இருந்தனர் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

பார்வை:

1.தொல்காப்பியத்தமிழர், சாமி சிதம்பரனார், மணிவாசகர் பதிப்பகம், டிசம்பர்-2000, பக்:88 & தொல்காப்பியம், பொருளதிகாரம், உரையாசிரியர் சுபாசு சந்திரபோசு, இயல், 2016, பக்:52.

  1. தொல்காப்பியத்தமிழர், சாமி சிதம்பரனார், மணிவாசகர் பதிப்பகம், டிசம்பர்-2000, பக்:87-93 & தொல்காப்பியம், பொருளதிகாரம், உரையாசிரியர் சுபாசு சந்திரபோசு, இயல், 2016. பக்:140,141.

3.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்:508.

4.ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம், முனைவர் க.நெடுஞ்செழியன், மனிதம் பதிப்பகம், டிசம்பர்-2002, பக்:179-186.

5.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்:514 & அகம், புறம், ப.பத்து ஆகிய நூல்கள்.

6.சங்க இலக்கியக்கோட்பாடுகளும் சமயவடிவங்களும், முனைவர் க.நெடுஞ்செழியன், பதிப்பாசிரியர்-இரா.சக்குபாய், அக்டோபர்-2009, பக்:11,12.

  1.  “ “  “ பக்: 31-34.

8.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 71.

9.தொல்காப்பியம், பொருளதிகாரம், உரையாசிரியர் சுபாசு சந்திரபோசு, இயல், 2016, பக்: 36-70. & தொல்காப்பியம், பொருளதிகாரம், உரையாசிரியர் கி.இராசா பாவை, டிசம்பர்-2007, புறத்திணையியல் - பக்: 31-61.

(தொடரும்)

- கணியன் பாலன், ஈரோடு

Pin It