நாட்டுப்புறக்கதை

பண்ணை முதலாளிக்கு புதனும் சனியும் எண்ணெய் தேய்ச்சி விடுறதுதான் தொத்தனுக்கு பிரதான வேலை. ரொம்ப வெள்ளந்தியான, மனசுல பட்டதை பளிச்சின்னு சொல்லுற ஆளா இருக்கிறதனால பிரத்யேகமான எடுபிடி வேலைகள், அங்கெ போ இங்கே போ அதைத் தூக்கிப்போடு இதைத் தூக்கிப்போடன்னு மொதலாளிக்கு இவன்தான் அம்சமான கையாளு.

வீட்டுல இவன் பெண்சாதி கல்யாணமாகி வந்த மறுவருசத்திலிருந்து எப்பொ பாத்தாலும் வாயும் வயிறுமாத்தான் இருப்பா. இப்பொ வரைக்கும் ஆறு பேறு காலம் கண்டிருக்கா. அத்தனை தடவையும் ரெட்டைப் பிள்ளைகதான். ஆட்டுரல் கணக்கா இருந்த அவ உடம்பு நஞ்சி நாறா பிஞ்சி போற மாதிரி ஆகிப்போனா.

அப்பொக்கூட, போதும்ய்யா நம்ம பொழப்புக்கு அப்படீன்னு சொல்லி பிள்ளைப் பேறை நிறுத்த வழியில்லே. பொம்பளேன்னா இந்த வகையில சமாளிச்சி நின்னே ஆகணும்ன்னும் ஆம்பளைன்னா அப்படித்தான் இருப்பாகன்னும் அவளுக்கு வழிவழியா குருவங்குலை கொடுத்து போதிச்சிவச்சிருக்காக.

அது மாதிரி அவனுக்கும் 'குடிக்கிற கஞ்சிக்கு அன்னாடு சதுரத்தை சாறா பிழிஞ்சி விட்டிரணும்ன்னு சொன்னதை அவன் எப்படி புரிஞ்சிக்கிட்டானோ!

ஒரு தடவை ரெட்டைப் பிள்ளை பொறந்தா ராமன் லட்சுமணன்னு பேரு வைக்கலாம் வட்டா வட்டம் பொறந்தா?

பெரிய ராமன், குட்டராமன் நோஞ்ச லட்சுமணன், கோடாலி மண்டை லட்சுமணன். ஊளை முக்குராமன் சிரங்குவத்தி ராமாயி உளைஞ்சகஞ்சி ராமுத்தாயி, பொட்டலுலட்சுமின்னு- அடையாளப் பேரோடு வீடு நிறைய வதவதன்னு திரிஞ்சதுக. இதுகளுக்கு அவிச்சுப்போட நாழி தவசத்துக்கு பண்ணையில கிடந்து மாயுறான் பாவம்.

ஆனா ஊர் தெருச்சண்டைகள்ல அது ஆம்பளைக சண்டையாகட்டும் இல்லே பொம்பளைக சண்டையாகட்டும் நீ பெரிய இவனோ நீ பெரிய புடுங்கியோ அப்படீன்னு வார்த்தைக முத்தும் போது அடுத்த பெரிய பெரிசு தொத்தனோட சமாச்சாரமாத்தான் இருக்கும். அவன்தானே ரெட்டை ரெட்டை பிள்ளையா பிதுக்குறான். அவனுக்கு எப்படி வாச்சிருக்கும்? அதோட தெம்பு, தெகிரியம்ன்னு அவங்கவங்களுக்கான அனுமானத்திலே கந்தபுராணப் புளுகைப் காட்டிலும் கூடுதலையாச் சொல்லி உதாரணத்துக்கு சண்டையில பிரஸ்தாபிப்பாங்க.

"தொத்தனை கொண்டாந்து விட்டாத்தாண்டி உனக்கெல்லாம் ஆனும். உன் ராங்கித்தனம் போகும்"ன்னு சொல்லாத பொம்பளைச் சண்டைக கிடையாது. இவ்வளவு ஏன்? நம்ம பண்ணை மொதலாளிக்கும் அவரு பெண் சாதிக்கும் வீட்டுல சண்டை வந்திரும். அவரு பேச்சுக்கு பேச்சு அந்த அம்மா பயப்பாடாம எதித்து எதித்து பதிலுக்கு பதில் சொல்லிக்கிட்டே இருக்கும். அவரும் பேசிபேசி பாப்பாரு. அந்த அம்மா வாயை ஒடுக்கலைன்னா கடைசியில" ஒன்னையெல்லாம் இந்த தொத்தம் பயலை விட்டு ஒரு நாளைக்கு வகைய்யா கிடாவ விடணும். அப்பொதான் அடங்குவே. அதுவரைக்கும் நீ சரிக்கு வர மாட்ட' அப்படீங்கவும்ந்தான் அந்த அம்மா 'கப்'புன்னு வாயைப் பொத்திக் கிட்டு வீட்டுக்குள்ள விறுவிறுன்ன போயிரும்.

ஒருநாள் தொத்தனுக்கு பண்ணை வேலையா வெளியூர் போக வேண்டி வந்தது. முதலாளிக்கும் அன்னைக்கி எண்ணை தேய்ச்சி விடுறநாள். அதனால தனக்குப்பதிலா தன்னோட மூத்த பயலை முதலாளிக்கு எண்ணை தேய்க்க அனுப்பிச்சு வச்சான். அவனும் வந்து முதலாளியை நாற்காலியில உட்கார வச்சி எண்ணையை தேய்ச்சி விட்டான். இம்புட்டு வயசிலேயே தொழில்ல அப்பன மிஞ்சிட்டான். அவன் தேய்ச்ச தேய்ப்புல லயிந்துபோயி மொதலாளி அரை உறக்கத்துல ரொங்கிப்போய் கிடந்தாரு.

தேய்ச்சுக்கிட்டே வந்தவன் உச்சந்தலைக்கு வந்ததும் திடீர்ன்னு கேஸூமூஸூன்னு அழுக ஆரம்பிச்சிட்டான். இருக்க இருக்க அழுகை கூடுதலையாகிப் போச்சி. மொதல்ல பாதி உறக்கக் சடவுல கண்டுக்கிடாம இருந்த முதலாளி ஒரு கட்டத்துல 'ஏண்ட அழுவுறே என்ன விசயம்ன்னார்' அப்பவும் அவன் அழுகையை நிறுத்தலை. இன்னும் கூடுதலையா அழுதான்.

"ஏண்டா தான்யம் தவசம் எதுவும் வேணுமா இல்லே செலவுக்கு துட்டுக்கிட்டு தேவையிருக்கா விசயத்தை சொல்லுடா. என்னான்னு சொன்னாத்தானே தெரியும்"

அவன் அழுகையை நிறுத்தாம கண்ணீரைத் தொடச்சி விட்டுட்டு சொன்னான். "அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க சாமி. உங்க தலையில ஒரு மசிரு கூட இல்லாம இவ்வளவு வழுக்கையா இருக்கே அதை நெனைச்சுத்தான் அழுதேன் முதலாளி."

மொதலாளி மொக்கை வாயைத் திறந்து பகபகன்னு சிரிச்சார். "அட கோட்டிக்காரப் பயலே வயசாயிருச்சுன்னா வழுக்கை விழத்தானடா செய்யும். இதுக்காகவா அழுதே நல்ல பயபுள்ளடா நீயி"

"அதில்ல முதலாளி அந்த எதுத்த தெருவில இருக்கிற காரவீட்டு முதலாளிக்கும் உங்களுக்கும் ரொம்ப நாளா வாய்க்கா தகராறு இருக்கு. அவரு என்னைக்கி இருந்தாலும் உங்க தலையை துண்டா வெட்டி வெட்டுன தலையை தூக்கிக்கிட்டு இந்த ஊரை மூணு சுத்து சுத்தி வரலேன்னா நாஞ் சுப்பா நாக்கெனுக்குப் பொறக்கலை அப்படீன்னு சொல்லிக்கிட்டு திரியுறாரு. ஒரு வேளை அவரு உங்க தலையை துண்டா வெட்டீட்டார்ன்னா பிடிச்சுத் தூக்குறதுக்கு மயிரில்லையில்ல முதலாளி. பிறகு எப்படி பிடிச்சுத்தூக்கி இந்த ஊரை மூணு சுத்து சுத்துவார்ன்னு நெனச்சுதான் அழுதேம் முதலாளி."

அவ்வளதான் மொதலாளிக்கு கோபம் திண்டுக்கு முண்டா முட்டிக்கிட்டு வந்து நாற்காலிய விட்டு துள்ளி விழுந்து எழுந்திருச்சி அடிக்கிறதுக்கு கையை ஓங்குனமட்டுல "போடா நாயே வெளியே போடா ஒரு நிமிசம் இங்கே நிக்காதே எங்கண்ணுலயும் தட்டுப்படாதே கொன்னே போடுவேன் படவா"

அவனை பொடதியைப் புடுச்சி தள்ளிக்கிட்டே போயி வெளிகேட்டுக்கு வெளியே போய் தள்ளி விட்டுட்டு வந்தார். அவருக்கு வந்த ஆத்திரத்துல நிலை கொண்டு நிக்கெ முடியல. மூஞ்சி கங்கா சிவந்து போச்சி. இருப்புக் கொள்ளாம இங்குட்டும் அங்குட்டுமா அலைஞ்சார். வரட்டும் அப்பங்காரன்னு கறுவிக்கிட்டே திரிஞ்சார்.

மூச்சு புஸ்ஸூ புஸ்ஸூன்னு கட்டுவிரியன் இரைஞ்ச மாதிரி இரைஞ்சிக்கிட்டிருந்தது. கீநாடியும் மே நாடியும் கொல்லுப் பட்டறை துருத்திபோல ஊதி ஊதி திறந்து மூடுனது. சாயுங்காலமா தொத்தன் அலுத்து சலுத்துப் போயி வந்து சேந்தான். அவனைப் பார்த்ததும் "அடேய் அடேய் ஒம் மகன் பண்ணுன சேதியைக் கேட்டியா... ம்... கொஞ்சங்கூட பயமில்லாம ராஸ்கோல்..."

என்ன எவடம்ன்னு அறியாத அவனை அடிக்க கையை ஓங்குனாரு."மொதலாளி... மொதலாளி என்னாச்சி மொதலாளி. சின்னப்பய. அவன் எதுவும் தெரிஞ்சும் தெரியாம பேசியிருந்தா நீங்கதான் பெரிய மனசு பண்ணி மன்னிக்கணும்.

"மன்னிக்கவா.. அவனையா! மன்னிக்கும்படியான பேச்சாட பேசிட்டுப் போயிருக்கான். டேய்! அந்தப்பய சொல்லுறான்டா அந்த காரவீட்டுப்பய எந்தலைய துண்டா வெட்டுனான்னா எப்படி பிடிச்சி தூக்கிட்டுப் போவான் ஒங்க மண்டையிலதான் மயிரில்லையேன்னு சொன்னதோட மாத்திரமில்லாம அழுகையா வேற அழுகுறாண்டா அந்த மடப்பய.." மொதலாளி சொன்னதும் தொத்தன் தன் தலையில தலையில அடிச்சான். "முட்டாப்பய முட்டாப்பய புத்திகெட்ட பய இவனெல்லாம் எப்படி தான் பொழைக்கப்போறானோ...

"அதானே நீ சொல்றா அறிவிருந்தாஅப்படி பேசுவானா. போயி அவன் மூஞ்சியிலேயே நாலு போடு போடு புத்தி சொல்லு மொகரையிலேயே போடு."

"நாம் போயி செருப்பாலேயே அடிக்கேன் முதலாளி. கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா. வெட்கமில்லாம அழுதிருக்கான் பாருங்க. கார வீட்டு முதலாளி அவரு வஞ்சினம் சொன்னபடி உங்க தலைய துண்டா வெட்டிப் போட்டாருன்னு வச்சிக்கிடுவோம். பிடிச்சி தூக்கிக்கிட்டுப் போக மண்டையில மயிரில்லையின்னா ஒரு குச்சியைக் கொண்டு வாயில குத்தி தூக்கிட்டு போயிற மாட்டாரு. போட்டுட்டா போவாரு. மானங்கெட்ட பய இதுக்குப் போயி அழுதிருக்கான் பாருங்க."

அவ்வளதான் முதலாளி ஆ...ஓ..ன்னு கூப்பாடு போட்டு அவன் சொந்தஞ் சுருத்துக்களைக் கூட்டி விபரஞ்சொல்லி அவனை ஊரை விட்டே வெளியேறனும்ன்னு தீர்ப்புச் சொல்லீட்டாரு. அதோட ஊருக்குள்ள யார் யாருக்கு கடன் பட்டிருக்கானோ கொடுக்கல் வாங்கல் கைமாத்து கால்மாத்து ஒரு பாக்கியில்லாம முடிச்சிட்டு கண்ணுக்கெட்டாத தூரத்துக்கு குடும்பத்தோட ஓடிப் போகணும்னுட்டார்.

அவனும் பாவம் தான். என்ன தப்புப் பண்ணுனோம் மகன் என்ன தப்புப் பண்ணுனான்னு இன்னும் காரணம் புடிபடாம வேற வழியில்லாம பத்துநாள் தவணை கேட்டிருந்தான். நாள் பத்தாச்சு பதினஞ்சாச்சு அவன் ஊரை விட்டு போனமாதிரி தெரியல. முதலாளி வீட்டை ராப்பகலா சுத்தி சுத்தி வாரான். முதலாளி அவனை கண்டுக்கிடவேயில்லை. பயலுக்கு பட்டாத்தான் புத்திவரும் பட்டினி கிடந்தாத்தான் லாயக்குப்படுவான்னு விட்டுப்பிடிச்சார்.

ஒத்த வீட்டு நாயி ஊருக்குள்ள இருக்கிற பெட்டை நாய்க்கு ஏமாந்து போயி ஊரு எல்லையிலேயே காத்துக் கிடக்கும். ஊருக்குள்ள நொழஞ்சால் மற்ற நாய்க வளைச்சுக்கிடும். அதனால ஊருக்கு வெளியே பரக்க பரக்க பாத்தபடியே காத்துக் கிடக்கும்.

அது மாதிரி தொத்தனும் முதலாளி வீட்டுச் சுவத்தை சுத்தி சுத்தி வந்துக்கிட்டிருந்தான். ஒருநாள் மொதலாளி பாத்து பரிதாபப்பட்டு அவனை உள்ளே இழுத்துட்டு வாங்கடான்னு வேலைக் காரங்களைவிட்டு இழுத்துட்டு வரச் சொன்னார். தொத்தன் முதலாளிகிட்டே வந்து கையைக்கட்டி நின்னு முகாந்திரம் சொன்னான்.

"நீங்க சொன்ன மாதிரி ஊருக்குள்ள ஒரு பாக்கியில்லாம கொடுக்கல் வாங்கலை கொடுத்து முடிச்சிட்டேன் முதலாளி. நீங்க பேசுனா நான் இதுவரைக்கும் தட்டுனதில்லே. உங்க ஒரு வார்த்தைக்குத்தான் கட்டுப்பட்டு ஊரைவிட்டு போக மாட்டாம இருக்கேன் முதலாளி. அதை மீறிப் போக மன ஒவ்வலை முதலாளி"

"அப்படியென்ன என் வார்த்தையை மதிச்சு செய்ய வேண்டியது பாக்கி வச்சிருக்கியோ?"

"நீங்க அப்பைக்கப்பொ முதலாளியம்மாவோட சண்டை போடும் போது கடைசியில ஒன்னையெல்லாம் இந்த" தொத்தம் பயலை விட்டு ஒரு நாளைக்கு வகைய்யா கிடாவ விடணும். அன்னைக்குத்தான் நீ அடங்குவே" அப்படீன்னு சொல்லுவீகள்ல முதலாளி!

Pin It