மார்கழி மாசத்திய விடியப்பொழுது, எப்ப விடியுமுன்னு குருசாமியால் அனுமானிக்க முடியவில்லை. ஊசிக்குத்தலாய் குளிர் அடித்தது. சுருங்கிப் போயிருக்கும் அவர் உடம்பை மூடியிருக்கும் தோலை ஊதல் குன்ன வச்சிக்கிட்டு இருந்தது. எழுபது வயதைத் தாண்டியிருக்கும். இவரால் தன்னோட வயசு என்ன இருக்கும் என்று இன்னிக்கு வரைக்கும் யோசித்துப் பாத்ததில்லை. 'ஊருக்குள்ள பெரிய பொசக்காத்து அடிச்சி கடல் அலை அரை தென்னை மரம் உயரம் எம்பி கடற்கரையைத் தாண்டி ஊரைத் தொட்டுச்சே அப்ப நீ ஒம்மா வயித்துல எட்டு மாசம்' ன்னு அவரோட ஆத்தா சொல்லிக்கிட்டு இருந்ததை அவர் எப்பவாவது நினைச்சுக்குவார்.

அவர் மனசு மட்டும் வாலிபப் புள்ளைங்க போலத்தான் குறுகுறுன்று ... எந்த வேலையச் செய்யவும் அலுத்துக்கிறது இல்லை. ஆனா முன்னைப்போல அவர் உடம்பு எடம் கொடுக்க மாட்டேங்குது. பனைநார் கட்டிலில் தான் படுக்கை. நிலை முக்காடாய்ப் போட்டுக்கொண்டு கூனிப்படுத்திருந்தவர், காலை நீட்டிப் படுத்தார். சணல் நார் போர்வை, கழுத்தை முட்டி நின்றது. குப்புன்னு பனிச்சாரல் மூஞ்சில் வந்து அப்பியது. கடல் அலையின் சத்தம் இன்னிக்கு கூடுதலாய்க் கேட்டுக்கொண்டு இருந்தது. இது பழகிப்போன ஒன்றாகத்தான் இருந்தது அவருக்கு. அதன் உணர்தல் இன்னிக்கு கூடுதலாகியிருந்தது. வடக்கத்தியக் காத்து வேறு சல்லுச்சல்லுன்னு வீசியது. இந்தப் பருவத்தில் இந்தக் காத்தும் பனிவாடலும் ரெண்டு வருசமாத்தான் மாறிமாறி வீசுது.

இப்ப இருக்கிற மனுசங்க, அப்ப உள்ள மனுசங்கப் போலவா இருக்காங்க? ஒரு வீட்டுல ஒரு நல்லது கெட்டதுன்னா வந்து கூடி ஒக்கத்தக்க நின்று அதுல பங்குப் போட்டுக்கிட்டு ஒன்னடி முன்னடியா வாழ்ந்தாங்க. இப்ப மட்டும் அவங்களுக்கு என்னா வந்துட்டு? புதுசாவா காய்ச்சித் தொங்க வச்சிருக்கு? உடம்புக்குள்ளேயே நாக்க வழிச்சிருக்கிற சாதியா மாறிட்டாங்களே! இதெல்லாம் நல்லதுக்கில்லன்னு மட்டும் உணர்ந்திருக்கார், குருசாமி.

நாலஞ்சி வருசத்துக்கு முன்னாடி எல்லாம், இந்நேரம் படுக்கையைவிட்டு எழுந்திருச்சிருப்பார். அப்படி எழுந்திரிச்சக் கையோட அவர் தோத்தா, சுயஆர்ஜிதமாக வாங்கி வச்சிருந்த பதினைஞ்சி ' மா' நெலம் வேட்டர்காடு. குடும்பத்தில் திடீர் செலவுகள் ஏற்படும் போதெல்லாம் சுயஉதவிக் குழுத்தலைவன் கிட்டவும் வட்டிமஸ்தான் கிட்டவும் கொம்பு வட்டிக்கு வாங்கி, வட்டி கட்டி, தாங்க முடியாம சன்னம்சன்னமா அவர் கையாலேயே விற்கவேண்டியதாயிற்று. 'இருக்கிறத எப்படியும் தன் பேரப்புள்ளைக்கு கை மாற்றிவிட்டுத்தான் கண்ணுமூடவேண்டும்' எ ன்ற வைராக்கியம் அவருக்கிட்ட அழுத்தமாகப் படிஞ்சிக்கிடக்கு.

போன மாசத்துக்கு முந்தி அவரோட கடைக்குட்டி மவன் வயித்துப்புள்ளைக்கு முதுகில் 'நெளிச்சி' வந்து பாடா படுத்திட்டு. மந்திரம் மாயம் பாத்து கதைக்கு ஆகல. ஆதரவா வந்து பாக்கிறவங்க சொன்ன கை வைத்தியம் எல்லாம் பாத்தும் ஒண்ணும் நடக்கல. இந்த நெளிச்சி வீங்கின பின் தஞ்சாவூர் தனியாரு மருத்துவமனைக்குக் கொண்டு போய்க் காட்டினார்கள்.

"பயப்படும்படியா இல்ல. ஆனா, இது உயிர்க்கொல்லி நோய்தான். ரெண்டு மாசத்துக்கு ஊசி மருந்து கொடுக்கிறேன். உள்ளூர் டாக்டர்கிட்ட காட்டி ஊசி போட்டுக்கிட்டு மருந்த கொடுத்துக்கிட்டு வாங்க. உங்க நேரம் நல்லாயிருந்தா இதுலேயே சரியானாலும் ஆயிடலாம். இல்ல, கிழிச்சி ஆத்துறதுதான் ஒரே வழி. பாத்துக்கிட்டு வாங்க! -இப்படியே பத்தாயிரத்துக்கு மேல கை நழுவுப் போயிட்டு.

குருசாமி மவன், அலண்டு போயிட்டான். அவன் கையைப் பிசைஞ்சிக்கிட்டு நிக்கும்போது, 'கவலைப்படாதேடா, என்ன வெலைக் கொடுத்தாலும் புள்ளையைக் காப்பாத்திடலாம்' என்று மவனை ஆசுவசப்படுத்தினார். வாயால சொல்லிவிட்டார். பணம் பொறட்டியாகணுமே. அதுக்கு முழுசா வேட்டைக்காடு பத்து மா நெலத்தையே நம்பினார்.

கோடை இறங்கினதும் வரிஞ்சி கட்டிக்கிட்டு இறங்கிட்டார். முன்னெல்லாம் 'இன்னிக்கு கொத்து வெட்டுக்கு ஆள் வேணும்' என்று ஒரு காக்காக்கிட்டச் சொல்லிவிட்டாப்போதும், 'நான் நீ' என்று வந்து நின்னுடுங்க. இன்னிக்கு கூலிக்கு ஆள் கிடைக்கிறதே குதிரைக் கொம்பா ஆயிட்டு இந்தக் குருசாமிக்கு எந்தக் காலத்திலும் வயிரவன்கட்டு தெருசனங்க தான் ஒக்கதக்க நிக்குங்க.

இன்னிக்கு எல்லாம் தலைகீழாப் போயிட்டு 'அந்த சனங்க தான் என்னா பண்ணுங்க? ஊருக்குள்ள உள்ள பட்டா மிராசுங்களும் அவங்களைச் சேந்த குடி படைகளும் சாதிச்சொல்லி இடுக்கிப் போட்டு அதுங்க மனசை நோவ அடிச்சே.... அதுங்க இப்ப வெள்ளாமைக் கூலிக்கே வரமாட்டேங்குதுங்க' தனக்குள்ளேயே பினாத்திக்குவார்.

இப்பெல்லாம் வாலிபப் புள்ளைங்க உள்ளூர் வேலைக்கே தலை காட்டுறதில்ல. 'அது அது திருப்பூர், கோயம்புத்தூர், கேரளா என்று போய் அடவா மாசக்கணக்காத் தங்கி வேலை பாத்துட்டு 'வெள்ளையும் சொள்ளையுமா' வந்துடுதுங்க. அதுங்க மனசு அதில லயிச்சிட்டு. நடுத்தர வயசுக்காரதுங்களும் மூத்த ஆளுங்களும் மெழுக்கான வேலையா இருந்தா கூப்புடும்போது வந்து வேலைப் பாக்குங்க. கொத்துவெட்டு வேலைன்னா யாரும் வர்றதுல்ல.

குருசாமிக்குன்னு ஒரு ஆளு தொடர்ந்தாப்போல நின்னு வேலை பாத்துகிட்டு இருந்தான். அந்த ரத்தினம், 'என்னோட மவனுங்க. 'வேலைக்கு போக வேண்டாம் இருக்கிற ஆட்டுமாட்டை ஒழுங்கா கவனிச்சிக்கிட்டு இரு. அதுல வர்ற வருமானம் உனக்குப்போதும்'ங்கிறானுங்க. அதுக்கு என் பொண்டாட்டியும் தலையாட்டிட்டா. 'இப்ப என்னா வயித்து சோத்துக்கும், இடுப்பு துணிக்கும் இல்லாமலயா நிக்கிற?'ன்னு திட்டுறாங்க. நான் அவ சொல்லுறதுக்கு மறுப்பு பேச முடியலங்கய்யா' என்று ரத்தனம் சொல்லும்போது குருசாமி கம்முன்னு இருந்துட்டார்.

அவர் மனசுக்குள்ள, 'சுனாமி அடிச்சதுக்குப் பொறவு தன்னார்வக் குழுக்களும் கெவருமென்டும் போட்டி போட்டுக் கிட்டு மேல கீழன்னு பாக்காம காசு பணத்தை அள்ளிவிட்டுட்டு. ஒவ்வொருத்தர் வீட்டுலயும் மூட்டைமூட்டையா அரிசியும், பருப்பும், மொளவா செலவும் இருக்கு. பத்தாதுக்கு மச்சி வீடு வேற கட்டிக்கொடுத்துக்கிட்டு இருக்காங்க. இப்புடி இருக்கும்போது, 'ஏன் வெள்ளாமையில நின்னு ஒடம்ப தெண்டிச்சிக்கனும்'ங்கிற நெனப்புக்கு வந்துட்டுங்க. பொண்டு புள்ளைங்க அது அது வீட்டுல இருந்திடுது. ஆம்பள ஆளுங்க அங்கஅங்க கும்பல் கும்பலா உக்காந்து சீட்டு விளையாடுறதும் கிளிக்கோடு விiளாயடுறதுமா இருக்குங்க.

நாம யாரு மேல கோவிச்சுக்க முடியும்? ன்னு நெனைச்சிக் கிட்டார். இது சரியா தப்பான்னு அவரு யாருக்கிட்டப் போய் பேச முடியும்? தனக்கு வயித்து வலி. யாருக்கிட்டப் போய் நோவமுடியும்? என்று தான் அடுத்த ஆளு கை வேலையை எதிர்பார்க்காமல் எறங்கிட்டார்.

கோடை ஒடுங்கினதுமே ஏர் கட்டி புழுதியடிச்சிப் போட்டுட்டார். இந்த மண்ணை புழுதி அடிச்சி கிளறிப் போடுறது ஒண்ணும் பெரிசில்ல. மணச்சாரி மேல படியிற வண்டலுக்கும் போடுற உரத்தைத் தின்னுட்டு பயிரு அப்படியே திம்முன்னு வளர்ந்து விளைச்சலைக் காட்டிப்புடும். மழை மட்டும் கண்ணு தொறக்கனும்.

புரட்டாசி மாசம் இந்நேரமெல்லாம் மவனோட வேட்டைக்காட்டுல நிப்பார். ராபகன்னு பார்க்காம பத்து மாவையும் பதப்படுத்திட்டார். 'விதைக்குத்தான் என்ன பண்ணுறது'ன்னு மட்டுப்படல. சுனாமி அடிச்ச வருசம் நல்ல விளைச்சல் தான். கைக்கு எட்டினது வாயிக்கு எட்டாமப் போயிட்டு. கடல் தண்ணி ஒரு ஆள் கழுத்து முட்டும் அளவுக்கு வந்து பேய், அறையிறாப் போல மனுசாள மட்டுமா கொண்டு போனுச்சி? நெல்விளைச்சலையும் அடியோட உருட்டிக்கிட்டு போயிட்டே. விதை முதல்கூட தேறாம அடிச்சிட்டு. மறு வருசம் கடல் தண்ணி கொண்டு வந்து சேத்த உப்பு, நிலத்தில் படிஞ்சி. எல்லா நெலமும் வெள்ளாமை செய்ய வாகு இல்லாம போய் கைகழுவுற இடத்துக்கு சனங்க வந்துட்டு. தொண்டு நிறுவனங்களும் அரசு விவசாயத்துறையும் சேந்து இந்த உப்பு படிஞ்ச நிலத்தைப் பதப்படுத்திவிட்டதும் சனங்க வயித்துல பால் வாத்தாபோல இருந்துச்சி.

இந்த மண்ணுக்கு ஏத்த சேப்புக்குடவாலை, குருவிக்காரன், குருவியடிச்சான் குழிவெடிச்சான் நெல்லுங்க தான் விளைச்சலைக் கொடுக்கும். இந்த விலை நெல்லுலதான் பால் கட்டு அவ்வளவு சல்லுதியா இத்துப் போயிடாது. அதனால முளைக்கிற திறனும் நீண்டுக்கிட்டுபோகும்.

இப்படித்தான், குருசாமி வாலிப வயசுல இருக்கும்போது பெரிய வறட்சி வந்து மழைதண்ணி காணாமப் போயிட்டு. பெரும் பஞ்சமே ஏற்பட்டுச்சி பருவம் மாறி மழை பேயிறப்ப கையில வச்சருந்த மூணு வருசத்திய பழைய விதை முதலை தெளிச்சதும் நல்லா முளைச்சிட்டு . விளைச்சலும் விட்டுக்கொடுத்திடல. அந்த நினைவு வரவும் அவருக்கு நம்பிக்கை பொறந்துட்டு.

புரட்டாசி மாசக் கடையில் மழை பேயிறதுக்கான அறிகுறியா, குருட்டிகளும், அணிகல்களும் கத்திக்கிட்டு கிடக்கிறதப் பாத்துட்டு துணிச்சலா பத்து மாவிலும் விதை பாவி வைச்சிட்டார். எதிர்பார்த்தாப் போலவே ஐப்பசி முதல்லேயே பெரும்பெரும் பாட்டமா ரெண்டு தடவ மழை பேஞ்சிட்டு. விதையில உயிரு வந்து அரும்பு கட்டியிருந்தாலும் இருக்கட்டு மேன்னுதான் சாம்பல் எருவை மேல தூவி பதக்கி வைச்சார்.

நாலஞ்சி நாளுக்குள்ளேயே எல்லா விதைகளும் பழுதுபடாம அரும்புகட்டி முளைச்சிட்டு குருசாமிக்கு நம்பிக்கைப் பொறந்துட்டு. ஊருக்குள்ள இவரைப் போல நாலஞ்சி பேரு தான் நெல்லு விதைச்சாங்க. மத்தவங்க, நாம நெல்லு விளைவிக்காட்டா நாமும் சனங்களும் பட்டினயாவா கிடந்துடப்போறோம்? காசு கிடைச்சிட்டாப் போதும் அதான் அங்காடியில கிலோ ஒரு ரூவாயிக்கு பாடிப்பாடிக் கொடுக்கிறாங்களே. இப்ப நாம சவுக்குக் கன்னை ஊன்றிவச்சிட்டு அஞ்சி வருசம் காத்திருந்தாப் போதும் நல்லவிலைக்கு தேறிக்கும். இந்த சவுக்கு நடபெரிசா ஆளு தேளு தேடிக்கிட்டு நிக்க வேணாம். மேஞ்செலவும் கம்மிதான். சவுக்கு வளரும் போதே செய்யிற கவாத்துக் குச்சிக்கும் இப்ப ஏகமா கிராக்கி இருக்கு. அப்படி. இருக்கும்போது நாம ஏன் நெல்லப் போட்டுக்கிட்டு லோலுபடனும்?ன்னு சவுக்குப் போட்டு வச்சிட்டுங்க.

அங்கஅங்க விடியல் குருவிங்களும் காக்கைகளும் கத்திக்கிட்டு கிடந்தன. குருசாமி அதற்குமேல் கட்டிலில் படுத்திருக்க விரும்பவில்லை. போர்வையைக் களைந்து எழுந்து உக்கார்ந்தார். பனியின் வாடை அதிகம் இருப்பதாக உணர்ந்தார். எழுந்து கட்டிலிலேயே, தலைத்துடுப்புக் கட்டையில் காலைக் கட்டிக்கொண்டு போர்த்தி உக்கார்ந்திருந்தார். நேற்றையிலிருந்தே எப்பவும் இல்லாத பனியின் வீச்சும் கூடுதலாக இருந்தது. இவர் படுத்திருந்த இடத்தில் பனை ஓலைப் பாய்களைக் கொண்டு ஊதலை தடுத்திருந்தார்கள். ஆளோடி திண்ணையில் கூடுதலாக ஊதல் இருப்பதை உணர்ந்த அவர் மவன் மூட்டையாக கட்டிப்போட்டு இருந்த நான்கைந்து புதுப்போர்வைகளை எடுத்து வந்து இண்டு இடுக்கு இல்லாமல் மறைத்து தொங்கப்போட்டு இருந்தான். இந்தப் போர்வைகள் சுனாமி பாதிப்புக்கு உள்ளானவர்களைப் பாதுகாக்கன்னு கொண்டுவந்து கொடுத்தவைதான்.

அவர் மவனும் மருமவளும் இன்னும் எழுந்திரிக்கவில்லை. மீனவக்குப்பத்தில் சுனாமிக்குப்பின் புதியதாகக் கட்டப்பட்ட பெத்தராயம்மன் கோயிலில் மார்கழி மாச விடியல் கொண்டாட்டம் தொடங்குவதுபோல ஸ்பீக்கரில் மேளக்கச்சேரியைப் போட ஆரம்பித்திருந்தார்கள். அந்த மேளக் கச்சேரி அவருக்குப் பிடிச்சிருந்தது. வீட்டுக்குள் படுத்திருந்த அவர் பேரன் இருமும் சத்தம் கேட்டது. தொடர்ந்தும் இருமினான். அதைக் கேட்டதும், அவனைப் பற்றிய நெனப்பு அவர் மனசுக்குள் அப்பிக் கொண்டது.

வேட்டர்காடு பத்து மா நிலத்தில் விளைஞ்சி கிடக்கும் விளைச்சல்தான் பேரனோட உயிரையும் குடும்பத்தோட மானத்தையும் மரியாதையையும் காவந்து பண்ணைப் போவுதுங்கிற நெனப்பு வந்தது. இந்த நெனப்பில்தான் இந்த வயதிலும் லொங்குலொங்குன்னு உழைச்சிக்கிட்டு இருக்கார். அதற்கு மேல் அவரால் குளிருதுன்னு குன்னிக்கிட்டு உக்காந் திருக்க முடியல. சுருட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டார். இது இல்லாம முடியாது. பழகியாகிவிட்டது.

வீட்டை விட்டு வெளியேவந்தார். வீட்டைச் சுற்றிலும் தென்னைமரங்களும் மாமரங்களும் இருந்தன. ரெண்டு வருசமா காய்ப்பு இல்லாம வறடா நிக்கிது. இந்த வருசம் மாமரங்க பூத்து இருந்தாலும் கடும் பனியில கருகிக் கொட்டிக்கொண்டு இருந்தன. இல்லாவிட்டால் இப்புடி தலை கொள்ளாமல் பூத்திருக்கும் பூவில் இருந்து வெளிப்படும் வாசனை அவர் மனசை கொள்ளை கொண்டு இதப்படுத்திவிடும்.

வடுவில் இருந்து அது காயாகி பழமாகும் வரையிலும் மேஞ்செலவை தன்னைக் கட்டிவிடும். அதிலும் சுனாமி வந்து மண்ணைப் போட்டுவிட்டது.

மானம் நீலம் பூத்துக் கிடந்தது. ஒருவார காலம் அடாது அடிச்ச காத்தும் மழையும் நின்று பதினைஞ்சி நாட்களுக்கு மேல ஆகிவிட்டது. கடை கண்ணியில் இன்னும் தண்ணீ சலசலத்து ஓடிக்கொண்டு இருந்தது. வெயிலின் உக்கிரம் கூடக்கூட பேஞ்ச மழையை மண்ணு அப்புடியே உள்வாங்கி இருந்தது. இப்ப அந்த மணச்சாரிக் கொப்பளிச்சதில் ஓடுவதுதான் இந்தத் தண்ணி.

"வெள்ளாமைக்காரவங்க செய்கை உரத்தை நம்பி செலவை ஏத்துக்கிட்டு இருக்க வேணாம். இயற்கை உரம் போட்டு வெள்ளாமை செய்யத் திரும்புங்க. நம்மக் கழிவுகளைப் பதப்படுத்தி பயிருக்குப் போட்டா விளைச்சல் ஒரு பங்கு கூடிக்கும்” என்று சொல்லி செஞ்சிகாட்டி, வீட்டுக்கு வீடு சாம்பல் கக்கூஸ் கட்டிக்கொடுத்திருக்காங்க. புதுசில, அதில போயி உக்காந்து எழுந்திரிக்க அவர் நாக்கப் புடுங்கிக் கிட்டுத்தான் நிப்பார். இப்பெல்லாம் பழகிட்டு. கக்கூஸ்லருந்து வெளிப்பட்டவர் கைகளை மேலே தூக்கி நெளுவு எடுத்தார். உடம்பும் ஆத்தலா இருந்தது. ஆனா மனசுக்குள் பேரன் குந்திக் கொண்டு இருந்தான். தினம்தினம் விடியல்ல எழுந்திரிச்சி வேட்டைக்காடு பத்து மா விளைச்சலை ஒரு சுற்றிவந்து விளைச்சல் என்னாக் காணும் என்று புள்ளி போட்டு... கேரளா யாவாரி வந்து கை மூட்டைக்கு ஐநூறு ரூவா கொடுத்து பணத்தை வாங்கி.....பேரன் மூஞ்சியில சிரிப்பைக் கண்டு.... அந்த மகிழ்ச்சி வந்தாகவேண்டுமேங்கிற எண்ணம் குருசாமியின் கண்முன்னால்....

பொடி நடையாய் நடந்தார். பொழுது பளபளன்னு விடிந்தாலும் பனியின் மூடாக்கு வெளிச்சத்தை வெயிடாமல் கவுத்துபோட்டு இருந்தது. வேட்டைக்காட்டின் வடவண்டப்பக்கம் காசிக் கோனாருக்கு ஆறுமா நெலம் இருக்கு. அவர் இந்தக் குருசாமி என்னா சாகுபடி செய்கிறாரோ அதை அப்படியே செய்து கொண்டு இருந்தார். ஆனால் இந்தப் பட்டத்தில் புரட்டாசி கடைசியில பேஞ்ச மழையை வச்சிக்கிட்டு சவுக்கு நட்டுப்புட்டார். நட்டு நாலு மாசம் கூட இன்னும் முழுசா ஆகல. அதுக ரெண்டு கட்டைவிரல் மொத்தத்தில் ஆள் உசரத்துக்கு பொசுபொசுன்று வளர்ந்துநின்றன. இத்தனை கருக்குல இப்புடியாய் சவுக்கு வளந்து அவர் வாழ்நாளில் பார்த்ததில்லை. எல்லாத்துக்கும் கடல்தண்ணி ஊருக்குள்ள கொண்ட பின்தான். கடல் தண்ணியை அப்படியே மண்ணு உள்வாங்கி கொப்பளிச்சதில ஏற்பட்ட வேதி மாற்றத்தின் பெயர் தெரியாவிட்டாலும் அதை அவர் உணர்ந்துகொண்டார்.

புதிதாக இப்ப வரப்புகளில் வளர்ந்து தொல்லை கொடுக்கும் கணை கொண்ட பூண்டுகளை இவர் இது காலம் வரை பார்த்ததில்லை. இந்தப் பூண்டுகளுக்கு வந்து விழும் வண்டுகளால் சேப்பு குடவாலை பயிருக்கு நோய கொண்டுவந்து சேத்திடும்ன்னு அதுகளை பிடிங்கி அப்புறப்படுத்திக்கொண்டு இருந்தார். கொஞ்ச நாளாய் இதுவும் ஒரு வேலையாக வந்து சேர்ந்துவிட்டது. கடல் தண்ணி ஊருக்குள்ள வந்து வடிந்தபின் ஏற்பட்ட வேதி மாற்றத்தால் இந்த சேப்புகுடவாலை பயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. வழக்கமாக மழைத்தண்ணி இருந்தால் மார்முட்டும் அளவுக்கு பயிர் வளர்ந்துவிடும். இப்போது ஒரு ஓட்டை வளர்த்தி குறைவாக இருந்தது. இந்த சேப்புகுடவாலைப் பயிர் கக்கியிருக்கும் கதிரின் விளைச்சலில் குறைபடவில்லை. மணிகட்டும் கூடித்தான் இருந்தது.

ஆனால் கதிரின் இடைஇடையே பால்கட்டு சுருங்கிய பதர்கள் கூடுலாகத் தெரிந்தன. எப்படி இருந்தாலும் ஈட்டுக்கும் பாட்டுக்கும் சமன் செய்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. பத்து மேனிக்கு விட்டுக்கொடுத்துவிடாது என்று பார்த்த மாத்திரத்திலேயே அனுமானிக்க முடிந்தது. மண்கொப்பளிக்கும் தண்ணி அளவு படிப்படியாக குறைந்துகொண்டு இருந்தது. மண் ஈரம் குறைந்து மேல் ஓடு காய்ந்துவிட்டால் பத்து நாட்களுக்குள் அறுத்து கண்டு முதல் செய்துவிடலாம் என்று தோன்றிது.

மரமட்டைகளில் உக்காந்திருந்த குருவிகளும் காக்கைகளும் கத்திக்கொண்டு பறந்துசென்றன. பனியின் மூடாக்கு இன்னும் விடுபடவில்லை. சூரியக்கதிர்கள் தென்னை ஓலைகளில் பட்டு பளபளத்து படபடத்துக் கொண்டு இருந்தன. இந்தத் தடவை சாம்பல் கக்கூஸ் கழிவு மக்கி போனதும் தென்னைக்கு வைத்துப் பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டார். ஒரு கால் இந்த உரம் தென்னைக்கு... பார்கட்டி பனைக்கொட்டைகளை போட்டு வைத்திருந்தது கிழங்கு விட்டு இருக்கா? என்று பார்க்க மண்வெட்டை எடுத்துவந்து பாரில் நாலு கொத்து கொத்திருப்பார்....

“என் புள்ளையைக் காப்பாத்துங்களேன்" என்று வீட்டில் அவர் மருமவப் பொண்ணு அலறும் சத்தம். அதைத் தொடர்ந்து மவனும் அலறும் சத்தமும் கேட்டதும், குருசாமி பதறி அடித்துக்கொண்டு வீட்டுக்கு ஓடினார்.

தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்தாயிற்று. ”உடனடியாக ஆப்பரேசன் செஞ்சா காப்பாத்திடலாம்” குருசாமிக்கு இக்கெட்டாயிட்டு. பறந்துக்கிட்டு வந்து இங்கஅங்க பணம் பொறட்டி, பேரனை நல்ல இருப்போடு வீட்டுக்கு கொண்டுவந்து சேர்த்தபின் பதட்டம் குறைந்திருந்தது. அதுபோல நேரத்தில கேட்டதும் இல்லன்னு சொல்லாம கையிலருந்ததைக் கொடுத்தவர்கள் உண்டு.

“ அய்யா! என்னோட புள்ளைங்க கேரளாவில் இருந்து சம்பாத்தியம் பண்ணி பேரப்புள்ளைங்களுக்கு காதுகுத்து செய்ய அனுப்பி வைத்த பணம் பத்தாயிரம் இருக்கு. இதை வச்சிக்கிட்டு சின்னைய்யாவ நல்லபடியா அழைச்சிக்கிட்டு வாங்கைய்யா”ன்னு கொடுத்த ரத்தினம், குருசாமிக்கு கடவுளாகத்தான் தெரிந்தான். இப்புடி கேக்காமலேயே தன்னிச்சி கொண்டுவந்து கொடுத்த மனசு, அந்த மனசு கோணாம திருப்பிக் கொடுக்கிறதுதான் மனுசத்தனம்ங்கிற முடிவுக்கு வந்திருந்தார்.

அறுப்பு முடிஞ்சு, கண்டுமுதல் ஆனதும் கேரள யாவாரிக்கு ஏத்திவிட்டு கைக்கு பணம் வந்ததும் கடனை அடைச்சிப்புடலாங்கிற நம்பிக்கை பலமா குருசாமிக்கிட்ட இருக்கு. பத்து மா வேட்டைக்காடு விளைச்சல், நல்லா சொடிஞ்சிப்போயிருந்தது. மண்பாடும் காய்ஞ்சியிருந்தது. வீட்டுக்குப் பின்னாலேயே களம் அக்குதொக்கு இல்ல. ஒரே நாள்அறுப்பா இருந்தா தேவலாம். ஆள் கிடைக்குனுமேங்கிற கவலையில பார்க்கிறவங்களை அறுப்புக்கு கூப்புட்டுக்கிட்டு இருந்தார். தோதுபாடா யாரும் வர்ரேன்னு சொல்லவில்லை. ரெத்தனத்தைப் பார்த்து கேட்டா ஏதாவது பண்ணி ஆளத் தொட்டிக்கிட்டு வந்து அறுத்துக் கொடுப்பானேன்னு நெனச்சிக்கிட்டு இருக்கும்போது, ரெத்தினமே நேரில் வந்ததும் கடவுளே நேரில் வந்ததுபோல சந்தோசமாயிட்டார்.

“எங்க ஆளுங்க ஒரு நாள் நின்னு உங்க அறுப்ப முடிச்சி களம்பொழங்கிட்டு போவலாம்னு சொல்லியிருக்காங்க. நாளைக்கே நாங்க வந்துடுறோம்ங்க"ன்னு சொன்னதோடு விட்டுப்புடல. முப்பது ஆளுகளை அழைச்சிக்கிட்டு வந்து அறுப்புல கைவச்சிட்டான். விளைச்சலின் தாளை முழம் விடாம படிய அறுப்பு. அறுக்கும் போதே "எப்படியும் பன்னெண்டு மேனிக்கு குறையாத கண்டு முதல் செஞ்சிடலாம்"ன்னு மதிப்புப் போட்டுச் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

ஆளுங்களோட குருசாமியும் கூடமாட நின்னு களம் புழங்கினார். நெல் பொலியில மரக்காலைச் சாத்தி அளந்து மூட்டை புடிக்கும்போது, குருசாமி மனசுக்குள்ள 'என்ன காணுமோ? ஏது காணுமோ? வாங்கின கடனை அடைச்சிட்டாப் போதும்ங்கிற அரட்டி இருந்துக்கிட்டு இருந்தது". அம்பது மூட்டைக்கு மேல போனதும் தான் அவருக்கு நிம்மதி பொறந்தது. கடனை அடைச்சிடலாங்கிற தைரியம் வந்துட்டு. பத்து நாளாய் நல்லத் தூக்கம் இல்லாம இருந்தவர் அன்னிக்கு படுத்ததும் தூங்கிப்போனார்.

சொல்லிவச்சி எழுப்பினாப்போல விடியல்ல எழுந்திரிச்சிட்டார். பனியின் ஊதலும் கூடுதலாகத்தான் இருந்தது. இதெல்லாம் அவரை கூனிக்கிட்டு படுக்க வைக்க முடியவில்லை. "தம்பி! விடியலல்ல கீழையூர் போய் யாவாரி வெளியே கிளம்புறதுக்குள்ள பாத்தாகணும்"ன்னு சொல்லி வச்சடிபயே அவர் மவனும் அவரோட கிளம்பிட்டான். எல்லாம் அவர் நினைத்தபடி நடந்தது.

"யாவாரி இன்னும் படுக்கையைவிட்டு எழும்பல"னு அவர் வூட்டு வாசலிலேயே காத்திருந்தார்கள். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் யாவாரியின் டிரைவர் வந்தார். குருசாமியைப் பார்த்து "என்னா காலங்காலத்துல வந்து நிக்கிறீங்க"ன்னு கேட்டு அவர் மூஞ்சை கூர்ந்து பாத்துட்டு "உங்க ஊரு நெல்லுக்குத்தான் மௌசு கொறைஞ்சிட்டே. உங்க நெல்ல சொன்ன விலைக்கொடுத்துட்டு அள்ளிக்கிட்டுப்போற கேரளயாவாரிங்க இப்ப வர்றதே இல்லை. இப்ப உங்க நெல்லுலருந்து புதுரகம் ஒட்டி ஆந்திராப்பக்கம் நல்ல விளைச்சலைப் பாத்துட்டாங்களாம். சன்னரக நெல் வந்து குமிஞ்சிக்கிட்டு இருக்கு. யாவாரமும் படுத்துட்டு. அய்யாவும் தொறப்பு இருக்கான்னு அங்கஇங்க போய் பர்த்துக்கிட்டுதான் இருக்காங்க."ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே யாவாரி வீட்டுக்குள் இருந்துவெளிப்பட்டார். அவரைப் பார்த்ததும் குருசாமி வணக்கம் சொன்னார்.

"இதுக்குன்னு நீங்க வந்துருக்க வேணாமே. போன்லேயே விசாரிச்சிருக்கலாம். நேத்துக்கூடி நாகப்பட்டணம் போய் கௌருமெண்டு டி.என்..சி.எஸ். எப்ப தொறக்கப் போறாங்கன்னு கேட்டுட்டுத்தான் வந்தேன். இப்போதைக்கு ஆவறாப்போலத்தெரியில...."

"அய்யா! அம்பது மூட்டை சேப்புகுடவாலை இருக்குங்க. நான் ரொம்ப நெருக்கடியிலே இருக்கேங்க..." குருசாமி கெஞ்சி கால்ல விழாதக் குறையாக் கேட்டார்.

"எல்லாம் சரி. கேரள யாவாரிங்க வந்து போறாப்போல இருந்தா இப்பவே உனக்கு பணத்தைக் கொடுத்துட்டு அப்புறமாக்கூட நெல்ல வந்து ஏத்திக்குவேன். உன்னோட நெல்ல கௌருமென்ட்கூட வாங்காது. கருப்பு அரிசியா இருக்கிறத எங்க கொண்டுபோய் விக்க முடியும்? கோயம்புத்தூர்ல இது வெலபோகும்ன்னாலும் நான் போன தடவ ஏத்திவிட்டதில் கூட பாக்கி பணம் நிலுவையில் போட்டு வச்சிருக்காங்க. நான் என்ன செய்யிறது? வா! யாவாரம் படியட்டும் பார்க்கலாம்..."

"அய்யா! இந்த நேரம் நான் ரொம்ப நெருக்கடியிலே இருக்கேங்க..."

"அப்ப ஒன்னு செய்யி. நான் மினி லாரிய அனுப்பி வைக்கிறேன். ஏத்திவிடு. மூட்டைக்கு இருநூறு தான் தரலாம். அதுவும் யாவாரிக்கு ஏத்திவிட்டதும் தான் தரமுடியும். வாங்கி நான் இருப்பு வச்சிக்கிட்டு என்ன பண்ண முடியும்?"ன்னு சொல்லிக்கொண்டே," டிரைவர் வண்டியை எடு..:"ன்னு சொல்லிட்டு வண்டியில உக்காந்துட்டார்.

குருசாமிக்கு என்ன சொல்லுறதுன்னு மட்டுப்படவில்லை. கதிகலங்கி நின்னுட்டார். அவர் தலைக்கு மேல் மடையான்கள் கத்திக்கொண்டு பறந்துசென்றன.

Pin It