மாலைப்பொழுது முகம், சிவந்துவிட்டது.

"வேலை முடிந்துவிட்டது தானே வேளைக்கு வெளிக்கிடு..." என்கிறதாய் மார்கிறட்டினது மனம் வாதாடியது. மூச்சில் சுருளும் இந்த இரத்த நாற்றத்தை விட்டு வெளியேற வேண்டுமென்றும் அவளுக்கு அந்தரம்.

வார்ட்டுக்குள் ஒரு பெண்ணின் குரல் அவளைச் சத்தம் போட்டுக் கூப்பிட்டது போல இழுந்தது. குரல் மன ஆழத்தில் புரண்டு அவளை அந்தப் பக்கம் இழுத்தது. வைத்திய சாலையில் இனித் தன் வேலை முடிந்துவிட்டது தானே என்று ஒரு கணம் மனத்தில் அவள் நினைத்தாலும் கூட அவ்விடத்தை நோக்கி அவள் ஓட்டமும் நடையுமாகப் போனாள். வார்டுக்குள் சென்றதும் அங்குள்ளவர்களை முகம்முகமாகப் பார்த்தாள். கட்டிலில் படுத்துக் கிடக்கின்ற நோயாளிகளுக்கும் கீழே பாய் விரிப்புகளில் கிடக்கின்ற நோயாளிகளுக்கும் வாய் திறந்து ஏதும் சொல்ல முடியாத அளவுக்குச் சோர்வு!

அங்கே கடைசிக் கட்டிலில் படுத்துக் கிடந்தவள் மாத்திரம் அவளை உள்ளே கண்டதும், "அம்மா இவ்விடத்தையா வாங்கோ... இங்காலையா ஒருக்காக் கெதி பண்ணி வாருங்கோ..." - என்று சொல்லி அழைத்தாள்.

'இவள் தான்-முன்னம் என்னை அப்பிடியாக் கூப்பிட்டிருப்பாள்..!' - என்று உடனே குரல் அவளுக்குப் பிடிபட்டுவிட்டது.

'என்ன என்ன...' அவசரமாகக் கேட்டாள்.

"அங்க விறாந்தைப் பக்கமா அந்தப் பிள்ள உடுப்பும் ஒழுங்காயில்லாததா ஓடுதம்மா...!

அவள் சொன்னது தான் தாமதம், வார்ட் வாசலடிப்பக்கம் விரைவாக வந்தாள் மார்கிறட். - அதிலே நின்றபடி ஆண் நோயாளர் வார்ட் பக்கம் பார்த்தாள். அந்தப் பெண் விரிந்த கூந்தலோடு பழி வெறி கொண்ட மாதிரி அதிலே ஓடிப் போகின்றது அவளுக்குத் தெரிந்தது. அதே நேரம் ஓடுபவளுக்கு முன்னால் தாதிகள் இருவர் நேரே நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் விளங்கிவிட்ட தாயிருக்க வேண்டும், எச்சரிக்கை அடைந்தார்கள்.

"பேசண்டப் பிடியுங்கோ.. பிடியுங்கோ ஓட விடாதயுங்கோ..." என்று இவளும் விரைவான நடையோடு அவர்களுக்குச் சத்தமாய்ச் சொன்னாள். அவளை அந்த இரு தாதிகளும் ஓடவிடாமல் உடனே நன்றாக தங்கள் கைகளினால் இறுக்கிப் பிடித்துக் கொண்டார்கள்.

அவர்களிடம் பிடிபட்டுக் கொண்ட அவள் கனத்த குரலில் சிரித்தாள். பிறகு, "ஐயோ என்ரை ஐயோ"- என்று தன் தலைமயிரை, பிய்த்தெடுக்கிற மாதிரி கைகளால் பிடித்து இழுத்துக் கொண்டு திமிறியபடி கூவினாள். மார்புக்குள் பாரமாக இருக்கின்ற ஒன்றை உடைப்பவள் போல அவள் முறுகினாள்.

"என்னை விடு... என்னைவிடு.." என்று சொல்லியவாறு அவர்கள் கைகளிலிருந்து தன்னை நழுவி விடுத்துக் கொண்டு மண்டை அடிபட அவள்பிறகு தரையில் விழுந்தாள். தலையைத் தரைமீது அறைந்தபடி அவள் அழுதாள்.

கீழே விழுந்த அவளை தாதிகள் இருவரும்சேர்ந்து அசையவிடாமல் பிடித்துக் கொண்டார்கள். மார்கிறட் தாமதிக்காமல் உடனே வார்ட்டுக்குள் ஓடிப்போய் கட்டிலில் கிடந்த ஒரு வெள்ளை நிற போர்வைத்துணியை எடுத்துக் கொண்டு வந்து அவளின் கழுத்துக்குக் கீழே போர்த்தினாள். அவள் திமிறிய போது மீண்டும் அவளின் உடல் தெரிந்தது.

"கடவுளே என்ன கொடுமை இது..." என்று உள்ளம் நிறைந்த விம்மிதத்தோடு தனக்கு வாயில் வந்ததைச் சொன்னாள் மார்கிறட்.

வைத்தியசாலை என்ன மனித வாசமில்லாத காடா? எத்தனையோ மனிதக் கண்கள் அந்த விறாந்தையிலே அரை நிர்வாணமான நிலையில் ஓடிவந்த அவளைப் பார்ப்பதற்கும் வழியுண்டு தானே?

ஒரு படியாக தாதிகள் எல்லோருமாகச் சேர்ந்து அவளை அப்படியே துணியால் சுற்றிப் பிடித்துக் கொண்டு போய் கட்டிலிலே கிடத்தி அடக்கினார்கள். மார்கிறட் ஓடிப்போய் ஊசியில் அவளுக்கான மருந்தை அவசரமாக நிரப்பிக் கொண்டு வந்து கையிலே குத்தி ஏற்றினாள்.

அவள் புலம்பிக் கொண்டிருந்தபடி பிரேதத்தைப் போல அடங்கிய சலனங்களுடன் ஒரு சில கணங்களுக்குள் அப்படியே நல்ல நித்திரையாகிவிட்டாள்.

"கடவுளே.. இவள் ஓடித்திரிவதை இனி நிறுத்திவிட்டு சில மணித்தியாலங்களாவது தன்னை மறந்து தூங்கினால் போதும்..." என்று மார்கிறட் மனதுக்குள் நினைத்தாள்.

"இதற்குப்பிறகு இனியும் இதுக்குள்ளயா நான் நிண்டுகொண்டு மினக்கெட்டால்- நல்லாப் பொழுது பட்டுப்போகும்.." என்ற நினைப்போடு சுறுக்காக நடந்து சயிக்கிள் தரிப்பிடத்துக்குப் போய் தன் கால் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு வெளிக்கிட்டாள் அவள்.

"நேரம் போய் விட்டது"- என்ற நினைப்புடன் ஆஸ்பத்திரி வீதி வழியாக அவள் சையிக்கிள் மிதித்த வேகத்தில் உடம்பெல்லாம் குப்பென்று வியர்வையாகிவிட்டது. சட்டையின் உள்ளுக்குள் நெருஞ்சி முள்ளாக உறுத்துகிற ஈரநசநசப்பு.

வேலைவிட்டு வெளியே வந்து, கோயில் குளத்திலுள்ள தன் வீட்டுக்குச் சயிக்கிளில் போய்க் கொண்டிருக்கும் போதும் கூட வவுனியா வைத்தியசாலை நினைவுகளை அவளுக்கு மறக்கவே முடியவில்லை.

நிர்வாணமாக ஓடித்திரிந்த அந்த இளம் பெண்ணின் நினைவு இன்னும் போட்டு அவள் நினைவை வருந்தியபடிதான் இருந்தது. ஆட் கூட்டத்தில் அவள் தன்னை மறந்து நிர்வாணமாக ஓடித்திரிந்ததற்குக் காரணம் தான் என்ன?

'நான் இனிமேல் உயிர் வாழ்ந்தே ஓர் அர்த்தமுமில்லை'-என்பது தானே?

"உடலுக்குள் என் உயிர் சிறைப்பட்டிருக்கிறது.. அதை விடுவித்து விடு கடவுளே.." என்பது போல்தானே?

அந்தப் பெண் ஏன் இப்படியாக மனம் குழம்பி போனாள்?' - என்ற அந்த விபரத்தை, மார்கிறட் தான் அறிந்து கொண்டதும், அங்கே சிகிச்சை பெற்று வந்த இன்னொரு பெண்ணின் மூலமாகத் தான் ... காய்ந்த முள் மரத்தில் விழுந்த மாதிரியாகத்தான் அவளுக்கும் ஷெல் சிதறல்களால் ஏற்பட்ட காயங்கள் இருந்தன. முழுங்கி மறைக்கிற உள்காய வேதனைகளோடு அவளும் ஆணியடித்த மாதிரியான பார்வையோடு தான் இருந்தாள்.

மனதுக்குள் இறுகிய பாரமாக கனத்து இருந்த ஒன்றை உடைப்பது போல 'அம்மாளாச்சி... அம்மாளாச்சி...' என்று வற்றாப்பளை அம்மானை நினைத்து அவள் கூப்பிட்டவாறு தான் கட்டிலில் கிடந்தாள்.

அங்கே யுத்தம் நடைபெறுகிற இடத்தில் அவள் இருந்தபோது, அவள் இருந்த இடத்துக்குப் பக்கத்தில் ஷெல் விழுந்து உடல் சிதறிக் கிடக்கிறதைக் கண்ட காட்சி, அவள் கண்களை விட்டு இன்னமும் கூட அகலவே இல்லை.

அந்தக் காட்சியை ஒவ்வொரு நிமிடமும் அவளால் ஞாபகத்துக்குள் கொண்டு வரவே முடிகிறது. அந்தக் காட்சி அவள் மனதில் ஒட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில், 'இப்போது நான் இங்கே இந்த வைத்திய சாலைக்குள் இல்லை-அங்கே யுத்தம் நடக்கின்ற அந்த இடத்தில் தான் இப்போதும் நான் இருக்கின்றேன்'- என்ற பிரக்ஞை தாக்கிக் கொண்டேதான் அவளுக்கு இருக்கிறது.

வார்ட்டுக்குள்ளே ஓடித்திரிந்த அந்தப் பெண்ணினது தாயார் அங்கே எப்படியாவது இறந்து போனாள் என்று அவள் இதைச் சொல்லும் போது - எல்லா உணர்வுகளும் அவளிடத்தில் அதிர்ந்த மாதிரித்தான் மார்கிறட்டின் கண்களுக்கு அவள் காணப்பட்டாள்.

'உயிருக்குப் போராடி அங்கிருந்து வந்திருக்கும் அனைவருக்கும் மனப்பயம் இருக்கும்! நனைந்த நூலாக அவர்கள் செயலற்றுத்துவண்டு கொண்டிருக்கிறார்கள். அப்படியான அவர்களிடம் போய், இப்படியாகவெல்லாம் தான் கேட்பது மனக்குழப்பத்தைத்தான் உண்டுபண்ணி அவர்களுக்குத் துன்பத்தைக் கொடுக்கும்'-என்ற அந்த விஷயம் மார்கிறட்டுககு நன்றாய்த் தெரிந்திருக்கும், தன் வயதுடைய அந்தப் பெண்ணின் கதையைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் அவளுக்கு ஏனோ ஒருவிதத்தில் மிகவும் அக்கறையாகவே இருந்தது.

"அந்தக் கொடுமையளை எல்லாம் என்ரை வாயாலயா சொல்லிக் கொள்ளவே ஏலாதம்மா தங்கச்சி"- என்று தீவிரமாக அதையெல்லாம் மறுக்கிறாப்போல முதலில் சொல்லிவிட்டுத்தான் அவளைப் பற்றிய அந்தச் சம்பவத்தையே மார்கிறட்டுக்கு அவள் சொல்ல ஆரம்பித்தாள்.

"சுர்க்கெண்டு வந்து அதில ஷெல் விழுந்தவுடன் தங்கச்சி அந்த மண்முழுக்கலுமே அப்படியே சதைச் சிதறலாய்ப் போயிற்றம்மா.. ஐயோ.. சிகப்புச் சதைத் துண்டுகளாய் அங்கயெல்லாம் பார்க்கக் கிடந்துது பிள்ள... கூறுபோட்ட இறைச்சித் துண்டங்கள் மாதிரிப்பிள்ள... நாலா பக்கமும் பாத்தா சள்ளெண்டு தெறிச்ச ரெத்தம் தான் முழுக்க... ம்...ம்ம்... இந்தப் பிள்ளையின்ரை தாய் தலைகாலெல்லாம் சிதறிப்போய் வயித்தில இருந்து பொதுக்கெண்டு சரிஞ்ச ஈரக்குட லோட. அப்பிடியே அதிலேயே செத்துப் போனாளம்மா... அதைப் பார்த்ததோடதான் உந்தப் புள்ளை உப்புடியாப் போச்சுது... உந்தப் பெட்டைக்கு தகப்பனுமில்லச் சகோதரங்களுமொண்டுமில்ல இனிமேல் உந்தக் குமருக்கு ஆர் காவலோ? எப்பிடி இது இனி இந்த உலகத்தில சீவிக்கப் போகுதோ...?"

அவள் சொல்லி முடிக்கவும், மார்கிறட்டுக்கு அவள் கதையைக் கேட்டதில் வேதனையினால் கண்களில் கண்ணீர் ஊறிவிட்டது.

சில மாதங்களாக இந்த வைத்தியசாலையில் அவள் எத்தனையோ துன்பப்பட்ட மனிதர்களை பார்த்துக் கொண்டே தான் இருக்கிறாள். சத்திர சிகிச்சை நடக்கும் அறையிலே அவள் வேலை செய்யும் நாட்களில், இவளுக்கு வயிற்றில் அமிலப் புளிப்பு குழம்பிய மாதிரித்தான் சில வேளைகளில் வந்துவிடும்.

ஆயுதங்களிலே சதையும் இரத்தமும் குதறிப் போயிருக்குமளவிற்கு, சிதைந்து சிதறிப்போன கை, கால் அவயவங்களையெல்லாம் அவர்கள் துண்டித்துப்போட்டு விடுவார்கள். வெட்டி ஒதுக்கப்பட்ட சிதைந்த கை கால்கள் அறையில் மறைவிடமுமாயுள்ள பிளாஸ்டிக் பீப்பாய்க்குள் போய்விடும்.

இதையெல்லாம் பார்க்கப் பார்க்க அவளுக்கு மனம்கிடந்து எரியும். அழுகை அழுகையாக அவளுக்கு வரும். கை கால்கள் எடுக்கப்பட்டவர்களெல்லாம் தமக்கு நினைவு திரும்பிப் பிறகு கன்னத்தில் சரமாய் இறங்கிச் சரிகிற கண்ணீரோடுதான் அவள் பார்க்கின்றபோது காணப்படுவார்கள். சிலர் 'மடேர் மடேர்'- என்று தலையில் அடித்துக் கொண்டு அழுவார்கள். அவர்களின் கதறலோடு சேர்ந்து கசிகின்ற வார்த்தைகளோ அவளுக்குக் கேட்டுக் கொண்டிருக்கவே மனத்தால் தாங்கவே இயலாது.

அவர்கள் புலம்பிச் சிதறுகிற சோகச் சொற்களைக் கேட்கும்போது அவளுக்கு, 'நானும் இப்படியே செத்தால் தான் என்ன...' என்பது போலவே வாழ்க்கைதனில் வெறுப்பும் கூட வந்து விடும்.

'அந்த மண்ணே கொலைக்களமாகக் கிடக்கிறது'-என்று தான் காயப்பட்டு உயிர் தப்பிவந்த நோயாளிகளெல்லாம் ஆஸ்பத்திரியில் இருக்கிறபோது அவளுக்குச் சொன்னார்கள். 'உதிர்ந்து கிடக்கும் இலைச் சருகுகள் அளவிற்கு பிரேதங்கள் அங்கே குவிந்து போய்க் கிடக்கின்றது' -என்றும் அவளைப் பார்த்து அவர்கள் குழப்பமான கதறலோடு கூறினார்கள். ... சின்னஞ் சிறு பிள்ளைகள் சிகிச்சை பெறும் வார்ட்டில் அவள் வேலை செய்கிறபோது - இரவிலும் அந்தப் பிள்ளைகள் முழித்துக் கொண்டு தேடுகிறார்கள். "அம்மா.. அப்பா.. " என்று சொல்லிக் கொண்டு.

இழப்பின் சோகம் அந்தச் சின்னஞ் சிறார்களுடைய பிஞ்சு மனத்தைப் போட்டு அழுத்துகிறது. சில சிறுவர்களுக்கு ஷெல் துண்டுகள் பறந்து வெட்டியதால் அவர்களின் பிஞ்சுக்கால்கள் போய்விட்டன. விளையாட்டில் புழுதிபடிய கால்கள் இனிமேல் இல்லை அவர்களுக்கு. முள்குத்தினாலே பிடுங்கும்போது எங்களுக்கு எவ்வளவு வருத்தம். ஆனால் இங்கே இவர்களுக்கு இப்போது கால் இல்லை. கை இல்லை. சிதறிய காயமுள்ள கால்களை கைகளை பிரயோசனமில்லை என்று வெட்டிப் போட்டு நாளாந்தம் அதுவும் ஒரு குப்பை போலத்தான் ஆஸ்பத்திரியில் தள்ளப்படுகிறது.

'என்ன யுத்தம் தான் கடவுளே இது? ஒரு கண நேரங்கூட இடைவெளியே இல்லாமல்..?' - என்று தான் கிட்டித்துவிட்ட இறுக்கத்திலிருந்து காயங்களுடன் வெளியேறிய மக்கள் அவளுக்கு ஆஸ்பத்திரியில் சொல்லி அழுகிறார்கள்.

கருக வாட்டிய வாழை இலை போல எரிகுண்டு தீண்டிக் கரியான தமது உறவினர்களின் உடல்களையெல்லாம் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். பொறிக்குள் சிக்கிக் கொண்ட எலியைப் போல யுத்தம் நடைபெறுகிற அந்த இடத்திலே முன்னுக்கும் போக முடியாமல் பின்னுக்கும் ஓட இயலாமல் எவ்வளவோ கஷ்டப்பட்டு வந்தவர்கள் அவர்கள்.

இந்த வெயிலுக்கு ஒரே புழுக்கம்! நசநசப்பு! மூச்சே போகவில்லை! மயக்கப் படபடப்பு! இந்த மாதிரியான அவர்களது உடல்நிலையில் காடே நடுங்கிய ஷெல்வீச்சுக்களால் (விமானக்குண்டு வீச்சுக்களால்), அங்கே ராட்சதக் குடையாக தலைவிரித்துக் கிடந்த மரங்களெல்லாம் மொட்டையாகப் போய்விட்டதாம்.

இந்த நிலையில் மரநிழலிருட்டு றெக்கைக்குள்ளே அவர்கள் இனிமேல் எங்கே இருப்பது?

'வயோதிபர்கள் கிடந்து அங்கே படுகின்ற பாடுகளெல்லாம் வார்த்தைகளால் விளக்கிச் சொல்லவே முடியாது... அவ்வளவு துக்கம்!' -என்கிறார்கள்.

'பூப்பல்லக்கில் போக வேண்டிய அவர்களது பிரேதங்களெல்லாம் அங்கங்கே அநாதரவாகக் கிடக்கின்றதாம்!'.

'இரண்டு தலைமுறைக்கு இருந்து தின்னலாம் சொத்து... ஆனால் எங்களுக்கு அங்கே ஒரு வேளைகூட சாப்பிடவும் வழியில்லாமல் போச்சு... ஒரு மிடறு தண்ணீர் வாய்க்க ஊத்திக் கொள்ளுறதுக்கும் ஏலாத கஷ்டமாப் போச்சுது.. இப்ப விட்டுப் போட்டு வந்தாச்சு..' என்று ஒரு சோர்ந்த பெருமூச்சோடு சொல்லிக் கொண்டு இருக்கிறவர்களின் கதையையும் இவள் கேட்டவள் தானே..?

சாப்பாட்டு நேரம் வந்தால், 'பிள்ளையளுக்குப் பசிக்கு எண்ணத்தைத் தின்னவாக் குடுக்கிறது'-என்று குமுறிக் கொதித்துப் போயிருக்கிற தாய்மார்கள். பிள்ளை குட்டிகளும் மனைவியும் வயிற்றுப்பசியால் கிடந்த துடிப்பதை நினைத்தபடி வெறித்த நீர்நிறைந்த கண்களுடன் மரங்களைப் பார்த்தபடி படுத்திருக்கும் தகப்பன்மார்கள்... கண்முன்னே இப்பொழுது தான் அவர்களெல்லாம் உயிருடன் பார்க்க இருந்தார்களே... இந்த நிமிஷத்தோடு அவர்களெல்லாம் எங்கே?

"சிதறிக் கிடக்கும் உடல் பிள்ளைகளே நீங்கள் இப்போது எங்கிருக்கிறீர்கள்?"

"அனிதா நீ எங்கிருக்கிறாய்?"

"ராசன்-தயா-குட்டி-நீங்கள் எங்கிருக்கிறீர்கள்? என்ர மக்களே நான் பெத்த செல்வங்களே.."

அவள் எவ்விதமாகவோ சயிக்கிள் மிதித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும், அவர்கள் எல்லாம் சொன்ன அந்த யுத்த சம்பவங்களை- தான் நினைவில் வைத்துக் கொண்டு இப்படியாகவும் கற்பனை பண்ணிப்பார்த்தாள்.

அனிதா, ராசன், தயா, குட்டி என்று சொல்லிக் குழறி அந்தத்தாய் அழுவதைப்போல அவளுக்குப் பிரக்ஞையாயிருந்த வேளை, அவளுக்கும் அழுதுவிட வேண்டுமாப் போலத்தான் உணர்ச்சியாயிருந்தது. அதனால் பெடலை மிதிக்கக் கூட அவளுக்கு இப்போது கால்கள் பலங்கொள்ளவில்லை. எனவே இலகுவாக்கி ஆறுதலாக அதைப் பின்னாலே சுழல விட்டாள். என்றாலும் வீதி இறக்கத்தில் அப்போது சயிக்கிள் உருண்டு கொண்டிருந்ததால் அவள் உடலுக்குக் கொஞ்சம் சுகம் இருந்தது. காற்றுப்பட்டது. உடலுக்கு சிறிது புத்துணர்ச்சியையும் அவளுக்கு உண்டுபண்ணியது.

முஸ்லிம் பள்ளிசாசல் சந்தியடிக்கு சயிக்கிளில் வரவும் அங்கேயுள்ள கடைகளை அவள் பார்த்தாள். முன்பெல்லாம் வவுனியா கடைத் தெருவில் சாயங்காலமானால் ஏகக்கூட்டம் இருக்கும். நெரிபுரியான கசகசவென்ற சனத்தோடு சாயங்கால வியாபாரம் இந்தக் கடைகள் வழியே அமளியாக நடக்கும்.

"என்ர பில்லப் போடுங்கோ.. என்ர சாமான் சரக்கைக் கட்டிக் கெதியாத் தாருங்கோ.." என்ற சலசலத்த கூச்சல்கள் அங்கே கேட்கும்.

சாமான்கள் கட்டிக் கொடுக்கின்ற வேலையாட்களுக்கு பன்னிரண்டு கைகளா இருக்கும்?

இராவணனைப் போல- அல்லது இருபது கைகளா இருக்கும்? என்றாலும் பாவம்! அவர்களுக்கு பறந்து பறந்து தான் பொருட் சரைகளை கட்டிக்கட்டிக் கொடுப்பார்கள். முதலாளி மேசைலாச்சியை இழுப்பதும் மூடுவதுமாக இருந்து கொண்டு வேர்வை துடைக்க நேரமில்லாமல் கணக்குப் பார்ப்பார்.

இப்போது அவ்விடத்தே கடைகளெல்லாம் வேளைக்கே கதவெல்லாம் பூட்டுப்பட்டுப் போய்த்தான் கிடக்கிறது. சனம்-சத்தம்-சாவடி- என்று ஒன்றையும் சந்தியிலும் காணவே இல்லை. மார்கிறட்டுக்கு ஒரு கணம், பொழுது படுகிறதே என்று மீண்டுமொரு முறை நினைத்ததில் மனதுக்குள் இன்னும் சற்று பயம் எறியது.

பலமாக அதன் பிறகு அவள் பெடலை மிதிக்கத் தொடங்கினாள். சயிக்கிள் அதன் பிறகு வேகமாகப் போகத் தொடங்கியது. இறம்பைக்குளம் தாண்டியதும் இன்னும் கொஞ்சம் வேகமாக அவள் பெடலை மிதித்தாள்.

"ஓடி யோடி வேலை செய்து குறுக்கு எலும்புகளெல்லாம் குடைச்சல் எடுக்கிற வலியோட பிறகு எனக்கு இந்தச் சயிக்கிள் ஓட்டமும் வேறயாய்... இதற்கெல்லாம் சலித்துப் புளித்துப்போய் சம்பளம் தருகிற மாதிரித்தான் ஆஸ்பத்திரிச் சம்பளம்... தானமாக ஏதோ தருவது மாதிரி! இந்த லட்சணத்துக்குள்ளே சிரித்துக் கொண்டே செருப்பால் அடிப்பது போல கதைக்கக் கூடிய டாக்குத் தர்மாரும் இருக்கினம் தானே.."

சயிக்கிள் ஓட்டத்தின் இறுக்கம் தளர்ந்த போது இந்தவித சிந்தனையும் அவளுக்குத் தொடங்கியது. வீடுகிட்டவாய் வரவர பெடலில் உள்ள கால்கள் மெத்தென இருக்கிறது மாதிரி அவளுக்கு இருந்தது. அவளின் வீட்டுக்கு முன்னாலுள்ள இலவ மரத்தில் கொத்துக் கொத்தாகத் தொங்கும் காய்கள் அவளுக்குத் தெரிந்தன. ஆ... இப்போது எவ்வளவு கூர்மையாக இருக்கிறது இந்த உணர்வுகளெல்லாம் அவளுக்கு...

வீட்டுப்படல் நெருங்கியதும் அதைத் திறந்து கொண்டு சயிக்கிளுடன் போனாள். அவளின் தாய் வாசல் படியிலே நின்று கொண்டிருந்தாள்.

"என் பிள்ளை இண்டைக்கும் இப்பிடி உனக்கு நேரம் செண்டிட்டுது..?"

"எத்தனை சாவுகள்! எத்தினை வகையான துன்பங்களம்மா அங்கத்தையச் சனத்துக்கு.."

"நான் என்னத்த இவளிட்டக் கேட்டன்... அதுக்கு இவள் என்ன பதில் சொல்லுறாள்?"-என்றதாகத்தான் மகள் சொன்ன கதையைக் கொண்டு தாய் நினைத்தாள் அவளுக்கு ஒவ்வொரு நிமிடமும் மகளின் கல்யாணப் பிரச்சனை பற்றித்தான் நினைப்பு! மகளுக்கு வரன்கள் வந்து நழுவி நழுவிப் போகின்ற கொடுமையை அவளால் தாங்க முடியவில்லை. "ஒரு உதவியும் இல்லாமல் தனியே என்னோடு மகளை வைத்துக்கொண்டு இப்படியே நான் காலம் தள்ளுகிறேன்?-என்றதாய் அவளுக்கு மனதிலே ஏக்கம்.

"உங்கட மோள் நல்ல கறுப்பாம்... அது ஒண்டாலதான் நான் பேசிக் கொண்டு போற கலியாணங்களெல்லாம் குழம்பிக் கொண்டிருக்கு.."-என்று தரகரும் சொல்லத் தொடங்கி விட்டார்.

"கருப்பெண்டாலும் என்ர பிள்ள முகவெட்டும் வடிவம் தானே.."-என்று தாய் கேட்க, ஒரு கதையை அதற்கு அவர் உடனே அவிட்டுவிட்டார். "அவயள் சொல்லுற அந்த ஒரு காரணம் என்னண்டாலம்மா பேந்து பிறக்கிற பிள்ளையும் கறுப்பாச் சில நேரம் வந்திடுமாம்..".

தாய்க்கு இதைக் கேட்டதும் உள்ளுக்குள் -தடக் தடக் ... எல்லோரும் சூழ்ந்து நின்று தன்னைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கிறது மாதிரி இருக்கிறது அவளுக்கு. தோலுரிக்கப்பட்டது மாதிரி ஒரு அவமானம் அவளுக்கு வந்தது.

மார்கிறட்டின் வீட்டில் கல்யாணப் பேச்சுக்கள் அடிக்கடி நடக்கத்தான் செய்யும். இவள் சிரிப்பாள்! அவளின் அம்மா அவளைப் பார்த்து அழுவாள்.பிறகு இருவரும் ஒருங்கச் சேர்ந்ததாய்ப் பெருமூச்சு.

"இரண்டு தலைமுறைக்கு இருந்து தின்னலாம் அப்படிச் சொத்து. எண்டாலும் பிள்ளைக்கொரு கலியாணம் சரிவருகுதேயில்லையே...?"-என்று தாய்க்கு நிதம் கவலை.

மார்கிறட் அறைக்குள் போனதும் துணிமணியை மாற்றினாள். உடம்பைக் கழுவத் தோன்றவில்லை. மனதுக்குள் இனம்புரியாத விசனம் அவளுக்குப் பொங்கிக் கொண்டு வந்தது. வயிறு முட்ட ஒரு செம்பு தண்ணீர் குடிக்க ஆசை. என்றாலும் செம்பில் தண்ணீரை எடுத்துக் குடிக்கப் போக இரத்த நாற்றத்தில் அவளுக்கு வயிற்றைப் புரட்டியது. செம்பை அப்படியே கீழே வைத்து விட்டு, "அம்மா ஒரு பிளேன் ரீ போட்டுத் தாருங்கோ குடிக்க.." என்று அவள் கேட்டாள். அவள் சென்ன கையோடு குசினிக்குள் போய் தேநீர் போட்டுக் கொண்டு வந்து மகளிடம் நீட்டினாள் தாய். தேநீர் சுடச் சுடவாகக் குடிக்கும்போது நொண்டைக்கு இதமாகத்தான் அவளுக்கு இருந்தது.

'இதற்காகத்தான் ஒரு தருணத்தை வைத்துக்கொண்டு நான் காத்துக் கொண்டிருந்தேன்'-என்ற விதத்தில் அம்மா அவளிடம் ஒரு கதையைப் போட்டாள்.

"இண்டைக்கு ஒருவர் உனக்கொரு கலியாண சம்பந்தம் பேசி வந்திருந்தார் பிள்ள". என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள் அவள். கிளியோபாட்ரா மாதிரியாயுள்ள தன் நீண்ட மூக்கை பெருவிரலாலும் பக்கத்து விரலாலும் பிடித்தபடி தாயின் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள் மார்கிறட்.

கொதிக்கிற மனதை ஆற்ற தன் தாயார் பட்டுக் கொண்டிருக்கிற பாடுகளையெல்லாம் நினைக்க அவளுக்கும் மனம் கிடந்து கொதித்தது.

"என்னவாம்... "-என்று மென்மையாக வருடுகிற குரலில் தாயைக் கேட்டாள்.

ஒரு நிமிஷம் நத்தையாய் நகர்ந்தது. அறுபட்ட பல்லிவாலின் மெல்லிய துடிப்பாய் ஒரு வலி அவள் பார்வையில்! கையைப் பிசைந்து கொண்டு தாய் சொன்னாள்.

"இந்தச் சம்பந்தம் எங்களுக்கும் நல்லது தான் பிள்ள.... நல்ல குடும்பம்! நல்ல சாதி சனம்! பெடியனும் கனடா பேமனண்ட் றெசிடண்ட்... ஆனா..."

"என்ன ஆனா...?"

அம்மாவிடம் மெல்லிய உடம்பின் அசைவுகள் நிற்கின்ற மாதிரி அவளுக்குத் தெரிந்தன.

"பெடியன் முந்தி கலியாணம் முடிச்சவராம்! ஆனா அந்தப் பொம்பிள அவரை விட்டுப் போட்டு அங்கினயா உள்ள வேற ஆரோடயோ ஓடிப் போட்டாளாம்... ஆரில என்ன பிழை எண்டத அங்க எல்லாம் நல்லா விசாரிச்சுப்பார்த்து நீங்கள் உங்கட மகளுக்கு விரும்பினா இந்தக் கலியாணத்தச் செய்யலாம் எண்டுறார் புறோக்கர்.." என்று இதமாய்ப் பதமாய் கனிவாய்ச் சொன்னாலும் அப்படிச் சொல்லுகிறபோது அவளுக்குத் தொண்டை கரகரத்தது. அந்த உணர்ச்சி மோதலில் கண்களில் கண்ணீர் சுரந்து நின்றாள் அவள்.

மார்கிறட் தாயின் முகம் பார்த்தாள். அவளுக்கும் அடி வயிற்றுக்குள் புரள்கிற ஓர் உணர்வு. 'வயது எனக்குப் போகிறதே'-என்று நடுங்குகிற ஒரு அச்சம்- அவள் மார்பை இரு கைகளாலும் அழுத்திக் கொண்டாள். அவளுக்கு அகதிகளின் நினைவுகள் ஒரு பக்கம் இழை பின்னனாலும் தன் வாழ்க்கையின் மீதும் ஒருகண். கலியாண ஆசையும் உள்ளுக்குள் வலைபின்னத்தான் செய்கிறது. வெயில் பட்டால் சிலந்தி வலை மின்னுகிற மாதிரி சில வேளைகளில் அவளுக்கு பயமாகவும் தான் இருக்கிறது. என்ன குறை இருந்தாலும்-ஒரு பக்கம் நான் கலியாணம் கட்டிப்போய்க் கரைசேர்ந்து அம்மாவை இந்தத் துன்பத்திலிருந்து விடுதலையாக்கி விடவேண்டுமென்று இத்தருணம் அவள் நினைத்தாள்.

"சரியுங்கோ அம்மா... நல்லா விசாரிச்சுப் போட்டு இந்தக் கலியாணத்தையே இனி செய்தவிடப்பாருங்கோ... எனக்கும் இது விருப்பம்..."-என்று சொன்னாள்.

மகள் சொன்ன பதிலைக் கேட்டதும் தாய்க்கு ஒரு பெருஞ் சுமையை இறக்கியது மாதிரியாய் இருந்தது. தன் மகள் இனி சீக்கிரத்தில் சடங்காகி விடுவாள்- என்ற நம்பிக்கையோடு அவள் மகிழ்ச்சியுடன் வேறு உள்ள வேலைகளைப் பார்ப்போமென்று குசினி அடுப்பங்கரைக்குப் போய்விட்டாள்.

மார்கிறட் தன் வாழ்க்கைப் பிரச்சனைகளை நினைத்ததில்-தானும் இப்போது ஒரு யுத்த பூமியில் இருக்கிறது மாதிரியான நிலைமையைக் கற்பனை செய்து பார்த்துக் கொண்டாள்.

அவளுக்கு ஒரு பக்கம் துப்பாக்கிகள் வெடித்துக் கொண்டிருக்கிற மாதிரியாக இருந்தன. மறுபக்கம் அங்குமிங்குமாக பரபரப்பாக தானும் ஒரு துப்பாக்கிக் குண்டாக பாய்ந்து ஓடுவத மாதிரியாகவும் அவள் நினைத்தாள்.

கவலையும் பீதியுமாக பிறகு தான் ஒரு இருட்டுக்குள்ளே மூழ்கிவிட்டது மாதிரியாயும், அதன்பிறகு உஷ்ணப் புழுதியில் வெட்டிப் போட்ட மாதிரியாய் தான் வாடுவதாகவும் அவள் நினைத்துக் கொண்டாள். இந்தச் சிந்தனைக்குள்ளே நெஞ்சிற்குள் அவளுக்கு "கப கபா"-என்று ஏதோ ஒரு மூலையில் கொடிய வேதனையாயிருந்தது. உடம்பெல்லாம் கொதித்தது. "அகதிகளின் நிலையை இப்படி நான் நினைவுபடுத்தி எந்நேரமும் நினைத்துக் கொண்டால் அது எனக்கு மாறாத மனவருத்தமாகப் போகும்... அந்த மனிதர்கள் படுகின்ற மோசமான அவலங்களை நினைத்தால் சில வேளையில் எனக்குப் புத்தி பேதலித்ததாயும் வந்து விடும்" - என்று தனக்குள் நினைத்தபடி, இன்றே மிச்சமின்றி எல்லாவற்றையும் நினைத்து நான் அழுது தீர்த்து விட வேண்டும்-என்று எண்ணியவளாய் அவள் குளியலறைக் கதவைத் திறந்து கொண்டு அதற்குள்ளே போனாள். கதவைச் சாத்திக் கொண்டாள்.

உள்ளே பிறகு தன் அழுகைச் சத்தம் காதை நிறைப்பதை உணர்ந்து அவள் உடனே வாயைப் பொத்திக் கொண்டாள்.

Pin It