'நந்துருணிக்குப் பொறந்திருந்தாலும் ராஜயோகத்தில்லப் பொறந்திருக்கா... கார்த்திகா, அப்படியான யோகத்தில் தான் அவ ஆயா வயித்தில இருந்து விழுந்திருக்கணும். இன்னிக்கு அவ ஆயி, அப்பன் அன்றாடம் காய்ச்சியா இருந்தாலும் அவளோடச் சிவந்த தோலுக்கும் உடம்போட லட்சணத்துக்கும் பொண்ணு கேட்டு வர்றவனுங்க அவளை ஏந்திக்கிட்டுப் போயிடுவானுங்க.' அவள் பிறந்து மண்டிப்போட்டு ஊர்ந்து அழகு காட்டியக் காலத்தில் இருந்து, தெருவுக்குள் இருக்கும் வயதானதுகள் வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள்.
கீர்த்திகா அப்படியான அழகில் துறுதுறு என்றுதான் மொழுமொழுப்பாய் இருந்தாள். இரண்டாவதும் பெண்ணாய் பிறந்துவிட்டாளே என்ற ஆயாசத்தில் ஆயாக்காரி மருந்து சோறுக் கூடத் திங்காமல் சாரம்பிடித்துக் கிடந்தாள்.
அவள் கணவன் மதி, ரொட்டிக் கம்பெனியில் வேலைபார்த்து கொண்டுவரும் சம்பாத்தியத்தில் இந்த இரண்டு பொட்டைப் புள்ளைகளையும் எப்படி கரை ஏற்றிவிட முடியும் என்பதுதான் அவளின் சாரத்திற்கான காரணமாக இருந்தது. அவன், முதல் முதலில் வேலைக்கு என்று போனது அந்த ரொட்டிக் கம்பெனிக்குத்தான். தொடர்ந்து அந்த கம்பெனியும் அதன் முதலாளியும்தான் தனக்கு எல்லாமும் என்றுதான் நத்திக்கொண்டு கிடந்தான். சொலுப்பமான வருமானம் என்றாலும் அந்த வருமானத்தில் வாழ்ந்து மகிழ்ச்சியாக இருக்கப் பழகிக் கொண்டான்.
அந்த முதலாளியும் மதியை விட்டுவிட மனசில்லாமல் தான்அவனுக்கான அவசியத் தேவைகளை தெரிந்துகொண்டு அப்பஅப்ப... ஏங்க தாங்கலுக்கு காசு பணம் கொடுத்து தனக்கு நம்பகமான ஒரு ஆளாக வைத்துக் கொண்டு இருக்கிறார். அவரே ஏற்பாடு செய்து கொடுத்த கோவில் மனை. அதில் சின்னதான கூறை வீடு. பொண்ணுகளைப் பட்டினிப்பசி போடாமல் காலத்தை ஓட்ட முடிந்தது. உள்ளூர் பள்ளிக்கூடத்தில் அதுகளை படிக்க வைத்திருந்தான்.
".... மாலதி படிச்சது போதும். உன்னோட அண்ணன் மவனுக்குக் கொடுத்துடலாம்.. அம்மா கேட்டுச்சி. நானும் செஞ்சிடுலாம்ன்னு சொல்லிருக்கேன். அண்ணன் மவன் திருப்பூர் வேலைப்பார்த்துக்கிட்டு இருக்கு. நாம பெரிசா செய்யிறதுக்கு இல்லங்கிறது அவங்களுக்கும் தெரியும். காலத்தோட செஞ்சிடுவோம்...' என்று தன் மனைவி சொல்லும் போது மதிக்கு மவளை இன்னும் கொஞ்சம் மேலே படிக்க வைக்கத்தான் ஆசை. ஆசைக்கு வாக்கப்பட்டா தீனிபோட வக்கு இருக்கணுமே.. சொடுக்கிப்போட்டாள். அதுவும் சரிதான் என்று அவனுக்குப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் மூத்தப்பொண்ணும் ஏற்றுக்கொண்டுவிட்டாள். குட்டாக சொல்ல வேண்டியவர்களுக்கு மட்டும் சொல்லி கோவிலில் வைத்து கல்யாணத்தை செய்து முடித்தார்கள்.
என்னதான் சிக்கனம் என்றாலும் மாப்பிள்ளைக்கு செய்ய வேண்டிய சீர்வரிசையைச் செய்யும்படிதான் ஆயிற்று. மதியை ரொட்டிக் கம்பெனிக்காரரும் கைவிட்டுவிடவில்லை. மதி இதில ஏழாயிரம் இருக்கு. இந்தப் பணத்தை நீ திருப்பித்தர வேண்டாம். நீ கடனாக் கேட்ட பதினைஞ்சாயிரத்தை இப்ப புரட்ட முடியில. நாளைக்கு எட்டாயிரம் தர்றேன். அதை வச்சிப் பாத்துக்க.
இந்த ஊரில் மூன்று ரொட்டிக் கம்பெனிகள் இருந்தன. ஒன்றை ஒன்று தாண்டாமல் அது அது பாட்டுக்க யாவரத்தைப் பாத்துக்கிட்டுதான். இப்ப நாலஞ்சி வருசத்தில பெரிய பெரிய கம்பெனிகள் போட்டிப்போட்டுக் கொண்டு.. இங்கே இருக்கும் இந்தச் சில்லரைக் கம்பெனிகளால் ஈடுகொடுக்க முடியவில்லை. இரண்டு வருசத்திற்குள் இரண்டு கம் பெனிகளை வரிசையாக மூடிவிட்டார்கள். மதியோட முதலாளியின் கம்பெனியும் இப்போது தள்ளாடியபடிதான்.. போட்டச் சரக்குகளுக்கு கையில் பணம் புரளவில்லை. கடன் போனது பெரும்பகுதி வாராக்கடனாக நிலுவையில் நிற்கிறது. இந்த நேரம் கம்பெனி முதலாளி இந்தப்பணத்தைக்கூட புரட்டிக் கொடுப்பார் என்று மதி எதிர்பார்க்கவில்லை. இப்போதெல்லாம் மாசக்கடைசியில் கூலிபோடும்போது அவர் முழிபிதுங்கி நிற்பது அவனுக்குத் தெரியாதது இல்லை. எப்படியோ இன்னும் ரெண்டு வருசம், கம்பெனியை இழுத்துப்பிடிச்சி ஓட்டினால் போதும், நாம் தலை நிமிர்ந்திடலாம். கார்த்திகாவுக்கு ஒரு நல்லது செஞ்சிட்டாப்போதும், அப்பாடான்னு உக்காந்திடலாம் என்ற நினைப்பு நீண்ட நாட்களுக்குத் தாக்குப்பிடிக்கவில்லை.
'மதி-இவ்வளவு ஆட்களை வச்சிக்கிட்டு இனிமே கம்பெனியை ஓட்ட முடியாது. நாலஞ்சி பேரு மட்டும் நின்னு செய்ய மட்டும் செய்யுங்க. நீ அடுப்பைப் பாத்துக்க.. தை, மாசி மகசூல் காலத்தில் பண்ணும் வருக்கியுந்தான் கொஞ்சம் அதிகமா போகும். இப்ப நடக்கிறது நடக்கட்டும் நாம முடிஞ்ச வரைக்கும் செஞ்சிப் பார்ப்போம்..' அவன் முதலாளி சொன்னதும் அவனும் ஏற்றுக்கொண்டான். வேறு வழியும் இல்லை.
இரவு, அவன் வீட்டுக்குப் போகும்போது அவன் அக்காவும் அவள் கணவரும், தன் மனைவியோடு சிரித்துப் பேசிக் கொண்டு இருந்ததைப் பார்த்தபோது அவனுக்கு மகிழ்ச்சி கூடியது. எப்படியோ தன் அக்காள் மகன் சூர்யா, தன் மகள் கீர்த்திகாவைக் கல்யாணம் கட்டிக் கொண்டால் போதும், மவளின் ஆசையை நிறைவேற்றி வைத்ததுபோல் ஆகிவிடும் என்ற நினைப்புதான் அவனுக்கு.
அக்காவிடம் போன ஆறுமாசத்துக்கு முன்னால இவனாகவே பேச்சு எடுத்தபோது, '...எனக்கு ஒரே புள்ள. தத்திஉத்தி பாலிடெக்னிக்கில படிக்க வச்சிட்டேன். துபாயிக்கும் போயி நாலு காசு சம்பாதிக்கிறான். அவனுக்கு ஏங்கதாங்க உள்ள எடத்தில தான் பொண்ணு எடுக்கணும். உன் பொண்ணு அத்தானைக் கட்டிக்கனுன்னு நாக்க தட்டிக்கிட்டிக்கிட்டு நிக்கிறா. என்னோட மவனுக்கும் அந்த ஆசை இருக்கு. நான் செஞ்சி வைக்க ஒத்துக்க மாட்டேன். நீயும் நப்பாசையில இருக்காதே. சேப்பு தோலோட, உடம்பு கரவுசெரவா இருந்துட்டா எல்லாம் வந்துடுமா...? உன் பொண்ணு வாய்யையும் கையையும் அடக்கி வச்சிக்கிட்டு இருக்கச்சொல்லு...' திட்டித் தீர்த்துவிட்டுப்போன அக்கா இப்போது புருசனோட வந்திருக்குன்னா, கல்யாணம் பேசி முடிக்கத்தான் என்று நினைத்துக்கொண்டான்.
அவன் நினைத்து வந்தது சரிதான். தன் அக்காவிடமும் அத்தானிடமும் பொதுப்படையாகப் பேசிக் கொண்டு இருந்தான். அவன் மனைவியும், "சாப்பிட வாங்க" என்று அழைத்துவிட்டு பரிமாறிக் கொண்டு இருந்தாள். கார்த்திகாவுக்கு சந்தோசம்.
'என்னை மேல படிக்க வைக்கத்தான் முடியல, அப்ப, உனக்கு கல்யாணம் பண்ணிவிட்டாப்போதும்'ன்னு அசமடக்கிட்டே. மாங்குடி அத்தானைதான் நான் கல்யாணம் பண்ணிப்பேன். இதையாவது நிறைவேத்தி வைம்மா' என்று கெஞ்சிக்கொண்டு இருந்தாள். அப்போது தான் இந்த அத்தைக்காரி வந்து அப்படிப்பேசி முறித்துக்கொண்டு போய்விட்டாள். ஆனால் கார்த்திகாவுக்கு முழுநம்பிக்கை இருந்தது. சூர்யாவும் கீர்த்திகாவோடு அவ்வப்போது பேசிக்கொண்டுதான் இருக்கிறான். அவளுக்கென்று அலைபேசி ஒன்றையும் அனுப்பி வைத்து தொடர்பை நெருக்கத்தில் வைத்துக் கொண்டான். பத்து நாளைக்கு முன்னால் அவன் பேசிடும்போது, 'கார்த்திகா/உன்னைத்தான் நான்.. அம்மாவும் அப்பாவும் மனசு கோண வேண்டாம்ன்னு தான் அவங்க மனசையும் சரிபண்ணிக்கிட்டு இருக்கேன். அம்மா அப்பா வந்துபேசினா அவங்க கேக்கிறதை செய்யிறேன்னு ஒத்துக்கச் சொல்லு. நான் இருக்கிறேன். மாமாவுக்கும் மாமிக்கும் கஷ்டத்தைத் தரமாட்டேன்' என்று சொன்னதோட நிறுத்திக்கவில்லை. ஆறுபவுனுக்கு நீளமான சங்கிலியை அனுப்பி வைத்திருந்தான்.
சாப்பிட உக்காந்ததும் தான் மதியின் அக்கா பேச்சை எடுத்தாள். 'மூத்தப்பெண்ணைக் கட்டிக் கொடுத்ததுபோல கார்த்திகாவை கட்டுன பொடவையோட அனுப்பிடக்கூடாது. நாங்களும் மவனுக்கு கல்யாணம் கட்டிவச்சி எங்க கூடவே வச்சிக்கிறது போல இல்ல. தனிக்குடித்தனம் வச்சிடத்தான் நினைச்சிக்கிட்டு இருக்கிறோம். அவனுக்குன்னு ஒரு வீட்டுமனையை மட்டும் வாங்கிக் கொடுத்திடுங்க போதும். வேற நகைநட்டு எதுவும் பேசலை...' என்று சொல்லுவதைக் கேட்டதும் மதிக்கும் அவன் பொண்டாட்டிக்கும் சொரக்கு என்றுதான் இருந்தது.
"... ஏன் இப்படி விதண்டுப்போறீங்க. வேற யாருக்கு செய்யப்போறீங்க? அதுவும் இப்பவேயா வாங்கி வைக்கச் சொல்லுறோம். நீங்க நெனைச்சா செய்யலாம்..." என்று சொன்னதும் சூரியாவின் வார்த்தையை நம்பி ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.
கல்யாணம் முடிஞ்சி நாலு மாசம் போனதே தெரியாமல்தான் சூர்யாவை கீர்த்திகா மசக்கிப்போட்டு இருந்தாள். போனவாரம்தான் கீர்த்திகாவை கட்டிக்கொண்ட உணர்வில் இருந்தான். பெரும்பாலான நாட்களில் கீர்த்திகாவோடு வீட்டிலேயேஇல்லை. பயணம்தான். அவன் மனசில் வரித்து வைத்திருந்த ஆசை எல்லாம் நடத்திக்கொண்டான். கோடைக்கானலில் தங்கியிருந்த அந்த நான்கு நாட்கள் போல இனி ஒரு தடவைஅப்படி ஒரு இனிமையான வாழ்வாக அமையுமா என்று அவனே நினைத்துக் கொண்டு இருக்கிறான். மவன் இப்படி காசை தண்ணியாக செலவு செய்து ஊர்ஊராக பயணப்பட்டுப்போய் கொண்டு இருக்கிறானே பொண்ணைக் கொடுத்தவங்களும் அவனுக்கு எந்த சீரும் செய்யாமல்.. அவன் அம்மாக்காரி நோப்பாலப்பட்டுக் கொண்டு இருக்கிறாள்.
'சும்மாத்தான் இரு... அவனும் ஏழெட்டு வருசமா வெளிநாட்டிலேயே அடங்கி ஒடுங்கிக்கிடந்தவன். பொண்டாட்டியோட அங்க இங்க போய் வர ஆசையா இருக்காதா? இன்னும் ஒரு மாசமோ இரண்டு மாசமோ பொண்டாட்டியோட இங்க இருக்கப்போறான். விட்டுட்டுப்போனா எத்தனை வருசம் கழிச்சி வரப்போறானோ. அவன் சந்தோசத்துக்குத்தானே சம்பாதிக்கிறான். செலவு செஞ்சிக்கிட்டுப்போவட்டுமே..' அவன் அப்பாக்காரர் அவன் அம்மாவை அசமடக்கி வைத்தார். கூடவே மருமகள் கீர்த்திகா நாலுமாசமா இருக்கிறாள் என்று தெரிந்ததும் தன் வாயடியைக் குறைத்துக்கொண்டாள்.
அவன் தன் அம்மாவைப் பற்றி புரியாமலா இருக்கிறான் 'அம்மா கேக்கிற வீட்டுமனையை வாங்கித்தாறேன்னு ஒத்துங்க நான் அதுக்கு ஏற்பாடு பண்ணிடுறேன்..' என்று கல்யாணத்துக்கு முன்னேயே தன் மாமா, அத்தையிடமும் சொன்னதை சூரியா அப்படியே விட்டுவிடவில்லை.
சொன்னபடி வீட்டுமனை வாங்கிக்கொடுக்காவிட்டால், அம்மா, கீர்த்திகாவை விரட்டியே அடித்துவிடுவாள் என்று புரிந்துதான்.. அவனுக்குப் பிடித்தது போல நகர விரிவாக்கத்தில் ஒரு மனையைப் பார்த்து முன்பணம் கட்டி தன் பெயருக்கு ஒப்பந்தம் செய்து வைத்துக் கொண்டான்.
"கீர்த்திகா இதுக்கு மேலும் நான் லீவ தொடர முடியாது. மூணு மாச லீவுதான் வாங்கிக்கிட்டு வந்தேன், ஆறுமாசமா நீட்டிச்சிக்கிட்டு வந்துட்டேன். அடுத்த வாரம் இந்நேரமெல்லாம் நான் துபாயில இருக்கணும்..." என்று சூரியா சொன்னதும் கீர்த்திகாவுக்கு சப்பென்று வடிந்து போயிற்று "முதல்ல நீ அம்மாவோடத்தான் இருக்கனுன்னு சொல்லிக்கிட்டு இருந்துச்சுல்ல. இப்ப வீட்டுமனைக்கு உன் அப்பா அம்மா அட்வான்ஸ் கொடுத்து வாங்கிட்டாங்கன்னு அந்தப்பத்திரத்தைப் பார்த்ததும், கீர்த்திகா மனசுக்குப் புடுச்ச இடத்தில இருக்கட்டுமே. நான் அவளை பாக்கனுன்னு நெனைச்சாலும் அவ என்னைப் பாக்கனுன்னு நெனைச்சாலும் பெரிய பயணமா செய்யப்போறோம். நெனைச்ச நேரத்தில பஸ்ஸப்படுச்சா கால் மணிநேரத்திலே பாத்துடப்போறோம்.. நீ பொண்டாட்டிப்பத்தி கவலைப்படாமப் போடா.." அம்மா சொல்லிட்டு, நீ அம்மா அப்பா மனசு கோணாம நடந்துக்க. போன மாசம் அம்மா சண்டைப்போட்டதை மனசில வச்சிக்காம சௌசன்னியமா அம்மாக்கிட்ட பேசி பொழங்கிக்கிட்டு இரு.." என்று அவளுக்கு ஆறுதல் சொன்னாலும் இப்படி அவள் வாயும் வயிறுமா இருக்கும்போது நாம கிட்டக்க இருந்து பாத்துக்க முடியாம பயணம் போறோமேங்கிற கவலை அவனை பிடித்திருந்தது. ஒரு ரெண்டு வருசம் ஓடுற ஓட்டம் என்று மனசை திடப்படுத்திக்கொண்டான். ஆனால் அதை அவன் காட்டிக்கொள்ளவில்லை. கீர்த்திகா அவ்வப்போது அழுகு குவித்துக் கொண்டுதான் இருந்தாள்.
"....மாமா, கீர்த்திகாவுக்கு எந்த குறையும் இருக்கக்கூடாது. பணங்காசப்பத்தி கவலைப்படாதீங்க. நான் கவனிச்சிக்கிறேன். இப்ப பாத்துட்டு வந்த டாக்டருக்கிட்டவே பிரசவத்தை வச்சிக்கலாம். மாசத்துக்கு ரெண்டு தடவை அவங்கக்கிட்டவே அழைச்சிக்கிட்டுப் போய் காட்டிக்கிட்டு வாங்க. அடுத்தமுறை ஊருக்கு வந்து திரும்பும் போது கீர்த்திகாவையும் துபாய்க்கு அழைச்சிக்கிட்டுப்போவலாம்ன்னு இருக்கேன். நான் சொல்லும்போது பாஸ்போட்டு எடுத்திடுங்க. விசாவோடுதான் வருவேன். இப்ப நான் போய் ஆறு மாசத்திற்குள்ள வீட்டுமனைக்கு ஒரு லட்ச ரூவாயை அனுப்பி வைச்சிடுறேன். அப்ப அப்ப நான் அம்மா அப்பாவுக்கு பணம் அனுப்பும் போது கீர்த்திகாவுக்கு பணம் கொடுக்கச் சொல்லிட்டுத்தான் போறேன். அவங்களும் கொடுப்பாங்க. நானும் சூழலுக்கு ஏத்தாப்போல உங்க பேருக்கும் பணம் அனுப்பி வைக்கிறேன். கீர்த்திக்கும் குழந்தைக்கும் எந்தக்குறையும் வைக்கக்கூடாது. கவனமாப் பாத்துங்க. அப்பா அம்மா கூட குறைச்சலா நடந்துக்கிட்டாலும் பொறுத்துக்குங்க" என்று சொன்னதை கேட்கும் போது கீர்த்திக்கு மனநிறைவாக இருந்தது.
கீர்த்திகாவின் அம்மாவும் அப்பாவும் மாப்பிள்ளையின் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து சூரியாவை பயணத்திற்கு அனுப்பிவைத்துவிட்டுத் தான் திரும்பியிருந்தார்கள்.
மதிக்குக் கொஞ்சம் பளுவை இறக்கி வைத்ததுபோல இருந்தது. இருந்தாலும் இன்னும் கொஞ்சகாலத்துக்கு கம்பெனியை இழுத்துச்புடுச்சிக்கிட்டு இருந்துட்டாப்போதும் என்ற நினைப்போடுதான் அன்றைக்குக் கம்பெனிக்குப் போனான். சில சரக்குகள் இல்லையே தவிர வியாபாரத்திற்கு போகும் ஆட்கள் உற்சாகமாக இல்லை. "நம்ம சரக்குக்கு கிராக்கி இல்லை. ஒரு ரூபா வரைக்கும் பெரிய கம்பெனிகளோட பாக்கெட் ரொட்டி வந்துட்டு, மக்கள் அதைத்தான் விரும்புது. கடைங்களும் சரக்குப்போடாதேங்கிறாங்க. இருக்கிறத வித்து காசுக் கொடுத்தாப்போதுன்னு சொல்றாங்க..." லயன் பார்ப்பவர்கள் சொல்லி மழுமாறினார்கள். வியாபாரம் படுத்ததும் கம்பெனியோட முதலாளிக்கும் கொடுக்கல் வாங்கலில் தொங்கல் விழுந்துவிட்டது.
"மதி, கம்பெனிய இனிமே நடத்த முடியாது. அவங்க அவங்க வேற இடத்தில் கிடைக்கிற வேலைக்கு போயிடுங்க. இன்னும் ஒரு மாசம் போகட்டும் விக்க வேண்டியதெல்லாம் வித்துட்டு உங்களுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீட்டுப் பணம் தருகிறேன்..." என்று அனுப்பி வைக்கும்போது மதியால் எடுத்து அடி வைக்க முடியவில்லை. எதிர்காலமே அவன் முன்னால் இருண்டு போய் கிடந்தது.
கீர்த்திகா மூணு நாளைக்குப் பிறகு இன்றைக்குத்தான் அடித்துப் போட்டது போல தூங்கிக்கிடக்கிறாள். அவள் மனசு இத்துப்போய் கிடந்தது. 'பொண்ணாப் பொறந்தவ இப்படி மல்லாக்கப் படுக்கக் கூடாது' இவள் அம்மாக்காரி அடிக்கடி நினைவுபடுத்துவாள். இன்றைக்கு அந்தப் தொணதொணப்பும் அவளை உசுப்பவில்லை. ஏழுமாதம் நிறையாத அவளின் அன்பு மகன் பாலைக் குடித்துவிட்டு அம்மாவின் மனசில் படிந்துக் கிடக்கும் வேதனை என்ன என்று அறியாமல் அவள் மார்பில் குப்புறப்படுத்துக்கிடக்கிறான். அவன் அனிச்சயாய் அவ்வப்போது அவள் மார்பு பால்காம்பை சப்பியதால் பால் வழிந்தோடி மார்பில் திவளைத் திவளையாய் கிடக்கின்றன. அரை வயிற்றுக்கு கஞ்சிக்குடித்தாலும் படுத்தால் அமைதியாய் தூங்கி நிம்மதியாய் முழிப்பதை இழந்துவிடாமல் இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்து இந்த திருப்பூர் நகருக்குள் அடி எடுத்து வைத்தாளோ அப்போதே கீச்சிடும் பறவைகளின் ஒலியும் தாவி ஒடும் அணிகளின் கிச்கிச் ஒலியும் கறவைமாடுகளின் காலத்தை உணர்த்திக் கத்திடும் கத்தலும் கன்றுகள் துள்ளி ஓடும் பாய்ச்சல் ஒலியும் இவை எல்லாவற்றையும் வழித்து எறிந்துவிட்டுத்தான் கீர்த்திகாவின் அம்மா செவித்தை அணைத்தாற்போல் கூனிக்கிடக்கிறாள்.
திருப்பூர் பிரதான சாலைக்குள் இருந்து விலகிப்போகும் சந்து பல திருப்பங்களுக்குப் பிற்பாடு நூற்றுக்கணக்கான வார்குச்சிகள் ஒவ்வொன்றும் பத்துக்கு இருவதுக்குள் வாழ்க்கைத்தேவைகள் அனைத்தும் அதற்குள் அடங்கிக் கிடந்தன. தனித்த ஷெட்டருக்குள் யாரும் புதிதாய் வந்துவிடாமல் பாதுகாப்பை செய்து வைத்திருக்கிறார். மதி வேலைபார்க்கும் கம்பெனியின் மேலாளர். அதை ஓட்டிச் செல்லும் சந்தில் இரவு பகல் என்ற வேறுபாடே தெரியாது. எந்த நேரமும் மனிதர்களின் நடமாட்டம். இரண்டு சக்கர வாகனங்களின் விரட்டல் சத்தம், பக்தி பரவசங்கள், குமுறும் அழுகையின் குரல்கள், குடிமகன்களின் தள்ளாட்ட அரவம், இவை எல்லாவற்றையும் மீறித்தான் இவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வார்குச்சியில் உறக்கத்தில் கிடக்கிறார்கள்.
கீர்த்திகாவின் அம்மாக்காரி பனிரெண்டு மணி நேரம் பனியனுக்கு லேபில் ஒட்டி ஒரு நாள்கணக்கை நேர் செய்துவிட்டு வந்து கீர்த்திக்கும்அவன் மகனுக்கும் செய்ய வேண்டியதை செய்து கொடுத்து மவள் மனசு கோணாமல் பேசி இருந்துவிட்டு படுத்தவள்தான் உடல் ரோதனையையும் மனக்கவலையையும் ஒழிந்துபோகட்டும் என்றுதான் வாய்பிளந்தபடி அப்படி தூங்குகிறாள். அவள் அப்பாவுக்கு இரவுநேர வேலை. நாம் பிறந்து இப்படி அம்மாவுக்கும் அப்பாவுக்கும்.. அவள் மனசு குன்னிப்போகிறது.
ஒரு பதினைந்து நாட்களுக்கு முன் வரை இதே கீர்த்திகா அவள் பிறந்த வீட்டில் தன் மகனை அணைத்துப் பால் மார்பைத் தந்து ஒருக்கணிந்துக்கிடந்தாள். இந்நேரம் சூரியா என்ன செய்து கொண்டு இருப்பாரோ? சூரியாவும் நம்மைப்போல பிறந்த மகன் முகம் பார்க்காமல் பணத்திற்காக இப்படி முடங்கிக்கிடக்கிறோமேங்கிற ஆதங்கம் வழிய கிடப்பாரோ, கோடைக்கானலின் அந்த நான்கு நாட்களை அசைப்போட்டபடி கிடப்பாரோ என்ற நினைவுகள் அறுத்துக்கொண்டு இருக்கும்போது தான்அலைபேசியின் சிணுங்கல் அவளை உசுப்பியது. கணவன்தான் என்ற முடிவோடு எடுத்தாள்.
மகனின் உள்ளாங்கை அகல அலைபேசியின் திரையில் கோடைக்கானல் புல்வெளியில் பொய்யான மான்குட்டியை அணைத்து சிரித்துக் கிடந்தபோது அவள் எடுத்த அந்தப்படம் அவளை வசப்படுத்தியது. அவளே போதுங்கிற வரை பேசினான். அவன் பேசியதில்... கீர்த்தி ஒரு லட்ச ரூபாவுக்கு செக் அனுப்பியிருக்கேன். என்னா செய்யனுன்னு அதில கடுதாசியும் எழுதியிருக்கேன். எல்லாத்தையும் முடிச்சிக்கிட்டுபேசு... என்று அதை சுறுக்கமாய்பேசி முடித்தான். இன்னும் இரண்டு வருசம் பல்லைக்கடிச்சிக்கிட்டு இருந்தால் அப்புறம் நானும் என்மகனும் சூரியாவின் பிடிக்குள் மயங்கித்தான் கிடக்கப் போகிறோம். அதை யாராலும்.. என்ற நினைப்போடு தான் உறங்கிப் போனாள் கீர்த்திகா. இவர்களுக்கு என்று அவள் அப்பா ஏற்படுத்தித் தந்த மறைப்புக்குள் எப்படி தன்னை மயக்கிப் போட்டு குசுகுசு என்று பேசினானோ அப்படித்தான்.
அந்தமயக்கம் அந்த நொடியே அவளைவிட்டு அகலவில்லை. நான்கு நாட்கள் போனபின் அவள் அத்தையும் மாமாவும் திடுதிப்பென்று வந்தார்கள். வாய்ப்பேச்சால் அவளையும், அவள் பெற்றவர்களையும் நைய அடித்து வார்வாராய் கிழித்துப்போட்டு போய்விட்டார்கள். அவர்கள் பேசிய அந்த ஒவ்வொரு வசையையும்.. ஏதோ வீட்டிற்குள் வந்தா அப்படிப்பேசினார்கள்? தெருவே கூடி வேடிக்கைப்பார்ப்பது போல அல்லவா நெருப்பை அள்ளிக்கொட்டினார்கள். இப்போது அவள் அந்த வசையை நினைத்தாலும் இந்த வார்குச்சியிலேயே தூக்குமாட்டித் தொங்கவேண்டும் போலத்தான். அன்றைக்கு பிற்பகலில் தபால்காரர் வந்து தந்த உறையை பிரித்துப்பார்த்தபோது அதிர்ந்துதான் போனார்கள்.
கீர்த்திகாவிடம் சொன்னதுபோல செக் இருந்தது. அவன் சொன்ன கடிதம் அப்படி இல்லை. அவன் அம்மா அப்பாவிற்கு எழுதியது. கீர்த்திக்கு எழுதியது அவர்கள் அப்பா அம்மாவுக்கு.... அப்போதே கவலை அவளை குரல் வளையைப் பிடிக்கத்தான் செய்தது. ஆனால், அப்போது கூட இப்படி எல்லாம் மாறிப்போகும் என்று அவள் எதிர்பார்க்வில்லை.
அதற்கு மேல் இந்த ஊரில் இருந்து என்ன செய்யப்போகிறோம் என்று மதி முடிவு எடுத்தபோது அவன் மனைவி ஏற்றுக்கொள்ளத் தயங்கினாள். இன்னும் பத்து நாளில் மருமகன் வாங்கி மாமா வாங்கினதாக சொன்ன அந்த மனைக்கு கெடு முடியப்போகிறது. நல்லவேளை சூரியா எழுதிய அந்தக்கடிதத்தில் நீங்கள் வாங்கி இருக்கும் அந்த வீட்டுமனைக்கு கொடுங்கள் என்று எழுதியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் அக்காக்காரி இன்னும் என்னென்ன கொட்டி இருப்பாளோ. இப்ப நாம குடியிருக்கிற எடத்தை வித்தாபோதும் அந்த மனைக்கு கொடுத்திடலாம். நாம எங்காவது போய் பிழைச்சிடலாம் என்று முடிவு எடுத்து உடனடியாக விற்றும் விட்டான். மருமகன் வாங்கின அந்த மனைக்கான பத்திரப்பதிவை முடித்துக்கொண்டு இத்தனை காலமாக உரிமையோட வாழ்ந்த அந்த வீட்டைகாலி செய்துவிட்டு திருப்பூருக்கு வந்து சேர்ந்து இருக்கிறார்கள்.
இதை நினைக்கும்போது கீர்த்திகாவுக்கு இன்னும் மனவேதனை கூடிவிட்டது. அன்றைய நாளில் இருந்து அவள் பிடிக்குள் கிடந்த சூர்யா சிரித்துக்கிடந்த படம் கிசுகிசுக்க சூர்யா கொடுக்கும் அழைப்பை காது கொடுத்துக்கேட்டாலும் அவன் அழைப்பைத் தொட விரும்பவில்லை. மகனை எறும்பு கடிப்பது போல உணர்ந்தவள் அனிச்சயாய் மகனை தடவிக் கொடுத்த போது மீண்டும் அந்த அலைபேசி மினுக்கி சிணுங்கியது. நிச்சயமா சூரியாவாகத்தான் இருக்கும் என்று அலட்சியமாக எடுத்துப்பார்த்தாள். இதே நகரில் இருக்கும் அவள் அக்காக்காரி நான்காவது முறையாக அழைத்திருந்தாள். அவசரம் இல்லாமல் இந்த அகால நேரத்தில் அக்கா அழைத்து இருக்க மாட்டாள் என்ற நினைவு அவளை உறுத்தியது. பரபரப்போடு அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டாள்.
"... யேய் கீர்த்தி நான் எத்தனை தடவ.. அப்படி என்னடீ மல்லக்க அடிச்சிக்கிட்டு தூங்கிற? உன் புருஷன் நீ குடியிருக்கும் ஷெட்டர்வாசல்ல காத்துக்கிட்டு நிக்கிறாராம்டீ... வாட்சுமேனும் உன் நம்பருக்கு அடிச்சிருக்காரு. நீ எடுக்கலன்னதும் உன் புருஷனை வெளியிலயே நிறுத்தியிருக்காருடி.."
மவனை வாரி அணைத்துக் கொண்டு வாசலுக்கு ஓடினாள். காவலரின் ஷெட்டரை ஒட்டி, பெட்டியை நெஞ்சோடு அணைத்தபடி சூர்யா சாய்ந்து இருந்தான். களைப்பு அவன் விழிகளை மூடச் செய்திருந்தது. அவன் சிவந்த கன்னத்தில் நான்கைந்து கொசுக்கள் கடித்துக்கிடந்தன.
இன்றைய அந்தியில் இருந்து சூரியாவிடம் இருநது தொடர்ச்சியான அழைப்பைப் பார்த்தாலும் எடுத்துப் பேச மனசில்லாமல் செய்த அலட்சியம் அவளை படீர் என்று தாக்கியது.
- சோலை சுந்தரபெருமாள்