“காலந்தோறும் பிராமணியம்” என்ற தலைப்பில் நீண்ட நெடிய வரலாற்று ஆய்வு நூலை எழுதி வருகிற அருணன் அதன் நான்காம் பாகத்தை நம் முன்னால் வைக்கிறார்.

வேத காலம் முதல் சோழர் காலம் வரை முதல் பாகத்திலும், டில்லி சுல்தான்கள் காலம் வரை இரண்டாம் பாகத்திலும், முக லாய மன்னர்கள் ஆண்ட காலம் வரை மூன்றாம் பாகத்திலும் ஆழமாய்- அகலமாய்- நுட்பமாய்- துல்லியமாய் ஆய்வுகள் நடத்தி விவரித்த நூலாசிரியர், இந்தியாவுக்குள் கிழக்கிந்தியக் கம்பெனி துலாக்கோலுடன் நுழைந்து செங்கோலுடன் சிம்ம சனமிட்ட காலத்து நிகழ்வுகளை புதிய கோணத்தில் சித்தரித்திருக்கிறார், இந்த நான்காம் பாகத்து நூலில்.

ஒவ்வொரு காலக் கட்டத்திலும் பிராமணியம் தனது மனு தர்ம முறையிலான வாழ்வியல் ஆதிக்கத்தை நிறுவிக் கொண்ட விதம், விஸ்தரித்த விதம், நிலை நிறுத்திக் கொண்ட விதம், தக்க வைத்துக் கொண்ட விதம் என்ற நீள் வரலாற்றை அதற்கேயுரிய ஆழத்துடனும், நுட்பத்துடனும் புதுமைப் பார்வையுடன் முன் வைக்கிறார்.

இந்த நாலாம் பாகத்து நூலில் கிழக்கிந்தியக் கம்பெனியின் வருகையை சித்தரித்திருக்கிறார். முகலாய மன்னர்களின் ராஜ்யங்கள் சரிந்த பலவீனமான காலம், பேஷ்வா எனும் அதிகாரத்தின் மூலம் மராட்டிய சத்திரியர்களை முன் வைத்து அரசாண்ட பார்ப்பனர்களின் மனுதர்ம ஆட்சி நிகழ்கிற காலம். சிறுசிறு ராஜ்யங்களாக உடைவுற்று, உள்ளுக்குள் போட்டிகளும் சதிகளுமான உறவுக் குழப்பத்தில் மாட்டிக் கொண்டு விழிக்கும் சிற்றரசுகள் இப்படியொரு காலத்தில் துலாக்கோலுடன் வாணிபம் செய்ய நுழைகிற கிழக்கிந்தியக் கம்பெனி மெல்ல மெல்ல செங்கோலை ஏந்துகிற காலத்தில் பிராமணியம் தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்காக செய்கிற தகிடுதத்தங்கள்.

பிராமணியம் என்பது ஒரு ஜாதீய அடையாளமல்ல. ஜாதீய அடுக்குகளும் ஆதிக்க அடக்கு முறைகளுமான சமுதாய அமைப்பு முறைமையை சாஸ்திரங்கள் பெயரால், கடவுள்களின் பெயரால் எளிய மக்களையும், பெண்ணினத்தையும் அடக்கி ஒடுக்குவதன் மூலம் சுரண்டிக் கொழுக்கிற ஒரு கொடிய தத்துவத்தின் பெயர். பிறப்பினால் ஜாதியையும், படிநிலையையும் நிர்ணயிக்கிற கொடிய சித்தாந்தம். பலதார மணம், சிறு பெண் திருமணம், இறந்த கணவனுடன் எல்லா மனைவியரையும் சிதையில் ஏற்றி உயிருடன் எரித்தல் போன்ற உலகில் எங்குமில்லாத கொடிய வாழ்வியல் அமைப்பு முறைமை. மக்களிடம் ஒப்புதல் பெற்ற மக்கள் விரோத தத்துவம்.

இந்தப் பிராமணியம் காலந்தோறும் எப்படித் தன்னைத் தற்காத்து, நிலை நிறுத்தி, தனது அதிகாரத்தை எடுத்துக் கொள்கிறது என்கிற வரலாற்றை வாசிக்க வாசிக்க நாம் கடந்து வந்த வாழ்க்கையின் நதி மூலம் தெரிகிறது. இன்றைய சிக்கல்களுக்கான வேர்களும் பிடிபடு கிறது.

நாடுகளை போரில் வென்று ஆக்ரமித்த சுல்தான்கள், முகலாய மன்னர்கள் போன்ற மூர்க்க மன்னர்களும்கூட பிராமணிய தர்மத்துக்குள் தலையிட முடியாத அளவுக்கு பிராமணியத்தின் தந்திரங்களும், சூழ்ச்சிகளும் அமைகின்றன.

ஆனால் கிழக்கிந்தியக் கம்பெனி அப்படியல்ல. பிரிட்டிஷ் முதலாளித்துவம். முதலாளித்துவ முறையிலான வாழ்வியல் தர்மத்துக்கு தடையாக உள்ள நிலப்பிரபுத்துவ முறைமையை தகர்க்க வேண்டிய சுயதேவை உள்ளது. தகர்க்கவும் முனைகிறது. பலதாரத் தடைச்சட்டம், குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், கல்வி மசோதா, விதவைத் திருமண சட்டம், சாதி விலக்கம் செய்யப்பட்டவருக்கும் வாரிசுரிமை போன்ற சட்டங்கள் பல்வேறு தயக்கங்களுக்குப்பிறகு தடுமாறித் தத்தளித்து வருகின்றன.

பிராமணிய வாழ்வியல் தர்மத்தின் ஆணிவேரில் அரிவாள் வெட்டுகளாக விழுகிற இம்மாதிரிச் சட்டங்கள், இவற்றை எதிர்த்து வன்மம் காட்டுகிற பிராமணியம். 1857 சிப்பாய்க்கலகத்தை உருவாக்கி ஆங்கிலேயர்களைக் கொன்று குவித்த தந்திரம்.

1857 சிப்பாய்க்கலகம் பற்றிய ஆய்வு தனிச்சிறப்பான விஷயம் இது வரை நிகழாத புதிய கோணத்தில் ஆய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது. பி.சி.ஜோஷியின் கணிப்பை விமர்சிக்கிறபோது, கார்ல்மார்க்சிடமிருந்து மேற்கோள்களை முன் வைக்கிற விதம். இந்து மதவெறியர் சாவர்க்கரின் நீளமான மேற்கோள்கள் யாவும் மதவெறியின் ஒப்புதல் வாக்குமூலம்.

1857 சிப்பாய்க்கலகம் என்பது சமூக சீர்த்திருத்தச் சட்டங்கள் இயற்றிய கம்பெனிகளின் முதலாளித்துவ நடவடிக்கைக்கு நிலப்பிரபுத்துவ மனுதர்ம பிராமணியம் தந்த பதிலடி எதிரடி என்கிறார் ஆய்வாளர்.

இது ஒரு புதிய கோணம். 1857 கலகத்துக்குப் பிறகு சீர்த்திருத்த முயற்சிகளை முழுமையாகக் கைவிட்ட கம்பெனியின் செயல், ஆய்வாளருக்கான சான்றாகிறது.

ராம்மோகன் ராய் செயல்பாடுகள், பிரம்ம சமாஜ சபை அமைத்தல் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விஸ்தாரமாகச் சொல்கிறது நூல்.

நெருக்கடிகளுக்கு ஆளாகிற தருணத்திலும், சாஸ்திரங்கள், வேதங்கள், இவற்றைக் காப்பாற்றி வெகுமக்களிடம் பரப்புவதற்குப் பிராமணியம் செய்த தொடர் ஏற்பாடுகள், விளக்கவுரை நூல்கள் இயற்றுதல், இசையின் வழியாக பக்தி பரப்புகிற தியாகவையர் என்று நீள்கிறது. மற்ற மதங்களின் சித்தாந்தங்களுக்குள் ஊடுருவல்கள் செய்கிற திருப்பணிகளையும் விவரிக்கிறது நூல்.

காலந்தோறும் பிராமணியம் என்ற இந்த நூல், நமக்குப்புதிய வெளிச்சம் தருகிறது. மார்க்சிஸ நோக்கில் தமிழ் மனத்துடன் இந்திய வரலாற்றைப் புதிய கோணத்தில் நம்முன் வைக்கிறது. நமது அறிவின் பலவாசல்களைத் திறந்து வைக்கிறது நூல்.

விஞ்ஞானத்தின் மூலமாக வளர்கிற மேற்குலக முதலாளித்துவம், ‘எல்லாம் எம் வேதத்தில் உள்ளது’ என்கிற மலட்டு மமதையில் எதையும் கற்க மறுத்து அடம் பிடிக்கிற இந்திய நிலப் பிரபுத்துவ பிராமணியம் இந்தியாவை தேங்கிய குட்டையாக சிறுமைப்படுத்தி, வளர விடாமல் தடுத்து விட்ட வரலாற்றை முன் வைக்கிறது நூல்.

ஆய்வு நூலுக்கேயுரிய அலுப்பூட்டக்கூடிய, சலிப்பூட்டக்கூடிய மொழி நடையில் இல்லை. இலக்கியப் படைப்பாளியின் ஆய்வு நூல் என்பதால், நாவலுக்குரிய சுவாரசியமான மொழி நடை, வாசகரை வசீகரித்து விரல் பற்றி அழைத்துச் செல்கிறது.

இந்து, பிராமணியம் இரண்டுமே இந்தியா என்ற மயக்கத்தை ஏற்படுத்தியிருந்த பிராமணியத்தை முழுமையாக அம்பலப்படுத்துகிறார்.

பேஷ்வா என்ற பிராமணிய ஆட்சியை கம்பெனிக்காரர்கள் வீழ்த்துகிற போது, கொந்தளிக்கிறது பிராமணியம். ஆட்சிக்குட்பட்டிருந்த மக்கள் மௌன மகிழ்ச்சியாக இருந்ததை நுட்பமாகக் குறிப்பிடுகிறது நூல்.

தேசிய நலன் - சமூக நீதி இரண்டுக்கும் சம முக்கியத்துவம் தருகிற சரியான மார்க்ஸியத்தின் பார்வையில் ஆதி முதல் இன்று வரையிலான இந்திய வரலாற்றை அலசி அலசிப் பரிசீலித்து விவாதித்து விவரிக்கிற இந்த நூல், தமிழுக்கு வந்த புத்தம் புதிய வரவு. ஒவ்வொரு சமூக நீதியாளன் கையிலும் நூலகத்திலும் இருக்க வேண்டிய மிக முக்கிய நூல், ‘காலந்தோறும் பிராமணியம்’. இந்த நூலை உருவாக்க... இந்த ஆய்வை முழுமைப்படுத்த அருணன் சிந்திய வியர்வை, செலவழித்த உழைப்பு, சேகரித்த ஆதாரங்கள் எதுவும் வீண் போகவில்லை. வரலாற்று இயங்கியல் பொருள்முதல்வாத நோக்கில் இந்திய வரலாற்றை முழுமையான -புதுமையான - வெளிச்சத்தில் முன் வைக்கிற இந்த நூல், ஒவ்வொரு தமிழனுக்கும் கலா சாலையாகத் திகழ்கிறது. அரசியல் வரலாற்று வகுப்பு நடத்துகிறது.

வெளியீடு:

வசந்தம் வெளியீட்டகம்,

69/24-ஏ, அனுமார் கோவில் படித்துறை, சிம்மக்கல்,

மதுரை -625001.

விலை: ரூ. 150

Pin It