“முருகா, இந்த சங்கிகளை அடக்க வர மாட்டாயா?” என்று உண்மையான சைவர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.

“நீ இந்துவாக இருந்தால் மட்டும் போதாது; நீ விபூதியணிந்து சைவக் கோலம் பூண்டால் மட்டும் நாங்கள் மதிக்க மாட்டோம்; இந்த பக்தி கோலத்தோடு மோடிஜிக்கு ‘ஜே’ போட வேண்டும்; ஆர்.எஸ்.எஸ்.யை ஆதரிக்க வேண்டும்; தி.மு.க. ஒழிக என்று கூற வேண்டும்; அப்போதுதான் நீ இந்து; இல்லையேல் இந்து துரோகி” என்று சங்கிகள் பேசும்போது, உண்மை பக்தர் கள் வேறு என்னதான் செய்வார்கள்?

கலையரசி நடராசன், சைவத்தில் ஊறி நிற்பவர். நெற்றியில் விபூதி கோலத்துடன் காட்சியளிப்பவர். சைவம் - இந்து மதம் அல்ல என்று ஓங்கி முழங்குகிறார். என்னுடைய ‘தமிழ்’ மொழியோடு ‘இந்து’வையும் சமஸ்கிருதத்தையும் இணைக்கவே கூடாது என்கிறார். ஆரியத்துக்கும் தமிழனுக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி கேட்கிறார்.

கலையரசியைப் போல் எத்தனையோ சைவர்கள் - தமிழர் என்ற உணர்வோடு களத்துக்கு வந்துவிட்டார்கள். பெரியாரோடு மேடையைப் பகிர்ந்து கொண்ட குன்றக்குடி அடிகளார் - சைவர் தான். அவர் தான் பார்ப்பனியத்தை எதிர்த்தார். திரு.வி.க. - சைவர்தான். அவர் பெரியாரோடு சேர்ந்து திராவிட நாடு கேட்டார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. சைவர் தான். அவர்தான் பெரியாரோடு வகுப்புரிமை கேட்டார். அந்த மரபில் இப்போது கலையரசிகளைப் போல் பல சைவர்கள் பார்ப்பன எதிர்ப்பைப் பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் சங்கிகள் பா.ஜ.க. வழியாக ஆரியத்தை நுழைக்கத் துடிக்கிறார்கள். அதைத் தடுக்கும் ஒரே சக்தி ஸ்டாலின் தலைமையில் வீறுநடை போடும் தி.மு.க. தான் என்று துணிவோடு முழங்குகிறார்கள்.

இந்து விரோதக் கட்சி என்ற முத்திரை குத்தி தி.மு.க.வை வீழ்த்த நினைத்தோமே! இங்கே பக்தியாளர் களே நமக்கு எதிரிகளாக வருகிறார் களே என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறது ஆரியம்.

சென்னையில் அனைத்து மதத்தினரையும் ஒன்றிணைக்கும் விழாவுக்கு மு.க. ஸ்டாலினை சிறப்பு விருந்தினராக கிறிஸ்துவர்கள் அழைத்திருந்தனர். அதில் அம்மையார் கலையரசி சைவக் கோலத்துடன் ஆரிய எதிர்ப்பை முழங்கிய காட்சி சங்கிகளை தூங்க விடவில்லை.

மதன் ரவிச்சந்திரன் என்ற ஒரு பா.ஜ.க. ஆசாமி, கலையரசியை பேட்டி காண அவர் வீட்டுக்குப் போயிருக்கிறார். முன் அனுமதியும் கேட்கவில்லை. தான் நடத்தி வரும் ‘மதன் டைரி’ என்ற வலைக்காட்சி (யு.டியூப்) பெயரை மறைத்துக் கொண்டார். ‘சமூக நீதி சேனல்’ என்று பொய் சொல்லியிருக்கிறார். ‘கலையரசி ஒரு தி.மு.க. ஆதரவாளர்; சைவர் அல்ல’ என்று நீரூபிக்க மடக்கி மடக்கி கேள்விகளைக் கேட்டிருக்கிறார்.

தி.மு.க.வை இந்து விரோத கட்சி என்பார்கள். அதே நேரத்தில் கடவுள் நம்பிக்கையாளர்கள் தி.மு.க.வை ஆதரித்தால் அவர்களை பக்தர்களாக ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். என்னப்பா, இது கதை?

இந்த ஆசாமிக்கு கலையரசி, சரியான பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்; ‘அயோக்கியர்கள்’. சரியான பெயர் தான்!

- கோடங்குடி மாரிமுத்து

Pin It