‘குஜிலிக்கடைப் பதிப்புகள்’ என்றழைக்கப்பட்ட இக்குறுநூல்கள் சமூக நிகழ்வுகளை அடித்தளமக்கள் அறிந்து கொள்ளப் பெரிதும் துணை புரிந்துள்ளன.

இவ்வகையில் தமிழ்நாட்டில் அறிமுகமான ரயில்போக்குவரத்தும் குஜிலிக்கடைப் பதிப்புகளின் கருப்பொருளாக அமைந்தது.

 

பத்திரிகைகள் பரவலாக அறிமுகமாகாத காலத்தில், பாடல் வடிவில் குறுநூல்களை அச்சிட்டுப் பரப்பும் பழக்கம் 19 ஆம் நூற்றாண்டில் வழக்கில் இருந்தது. தொழில்முறைப் பாடகர்கள் இப்பாடல்களைப் பொது இடங்களில் பாடி மக்களிடம் அன்பளிப்புப் பெற்று வாழ்ந்தனர். கல்வியறிவுடையோர் இவற்றை உரக்கப்படிக்க, அவரது உறவினர்களும், அக்கம் பக்கத்தாரும் கேட்டு மகிழும் வழக்கம் இருந்தது.

‘குஜிலிக்கடைப் பதிப்புகள்’ என்றழைக்கப் பட்ட இக்குறுநூல்கள் சமூக நிகழ்வுகளை அடித்தளமக்கள் அறிந்து கொள்ளப் பெரிதும் துணை புரிந்துள்ளன.

இவ்வகையில் தமிழ்நாட்டில் அறிமுகமான ரயில்போக்குவரத்தும் குஜிலிக்கடைப் பதிப்பு களின் கருப்பொருளாக அமைந்தது.

தமிழ்நாட்டில் முதன் முதலாக ராயபுரத்தில் ரயில்பாதை அமைக்கப்பட்டதையும், அதில் ரயில் ஓடத் தொடங்கியதையும் ‘இராயபுரம் ரெயில்வே ஸ்டேஷன் கடைக்கால் கும்மி’ என்ற குறுநூல் குறிப்பிடுகிறது.

‘சென்னப் பட்டணமென்னுங் கெடி ஸ்தலத்தில்

தன்னாலே ரெயில்போட ராயபுரத்தில்’

என்று தொடங்கும் இக்குறுநூல் நாவாப், கவர்னர் ஜெனரல், மேஜர் கர்னல் ஆகியோரும் சிப்பாய் களும் கூடி கடைக்கால் செய்த நிகழ்வைக் கூறிவிட்டு பின்னர் ரெயில் புறப்படும் நிகழ்வைக் கூறி முடிகிறது.

சிந்து இலக்கிய வகையில் வழிநடைச் சிந்து என்பதும் ஒன்று. புண்ணியத்தலங்களுக்கு நடந்து செல்பவர்கள் பாடிக் கொண்டு செல்லும் வகையில் இது அமைந்திருக்கும். புறப்படும் ஊரில் தொடங்கி புண்ணியத்தலம் முடிய இடையில் உள்ள ஊர்களின் சிறப்பையும் புண்ணியத்தலத்தின் சிறப்பையும் கூறுவது வழிநடைச்சிந்தின் இயல்பாகும்.

இதே முறையில் ‘தென்னிந்தியா ரெயில்வே என்னும் கர்னாடகப் புகைவண்டிச் சிந்து’ என்ற குறுநூல் உருவாகியுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் புறப்படும் ரயில், திருநெல் வேலிக்கும் தூத்துக்குடிக்கும் கடலூர், தஞ்சாவூர் வழியாக சென்றடைவதை இந்நூல் கூறுகிறது. வழியில் உள்ள ரயில் நிலையங்கள் இச்சிந்தில் இடம் பெற்றுள்ளன. சான்றாகச் சில பகுதிகள் வருமாறு :

டிக்கட்டுகள் வாங்கி இக்கட்டில்லாமலே

பக்குவமாகவே தக்கபடி போடுவோம்.

சைதாப்பேட்டை ஸ்டேஷன் சார்ந்த பரங்கிமலை பயிலாகிரெயில் வண்டி பார்மீதிலே போகும்

பல்லாவரம்பாரு பக்கத்தில்வண்ட லூரு எல்லாருந்தங்குங்கூடு வாஞ்சேரியிதுபாரு

அதகதுயீடேற ஆண்டவனைப் போற்றும் சிங்கப்பெருமாள்கோயில் ஸ்டேஷனிது பாரு

தங்கியிளைப்பாறி தாகவிடாய்தீர

செங்கற்பட்டு ஸ்டேஷன் சிறப்பதாய் நாம் வந்தோம்

கோர்ட்டுமுதலான தூக்குமரங்களும்

மேட்டிமையாய்ச்செயில் தாட்டியாய்த்தோற்றம்”

-

“விக்கிரவாண்டி விழுப்புரந்தாண்டி பக்கத்திலே

கெங்கைதகுண்டான்தண்டி சிறப்பான ரெயில் வண்டி

விந்தைமிகும் திருநெல்வேலி இதோ வந்தோம்

எத்தும் திட்டப்பாறை நேர்த்தியாய் நாம் வந்து

தூத்துக்குடிதுலை தூரமேநாம் வந்தோம்.”

ரயிலில் பயணம் செய்யாதாரும் ரயில் செல்லும் வழியை உணரும் வகையில் இச்சிந்து அமைந்துள்ளது.

ரயில் ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தம் குறித்து குறுநூல் ஒன்று வெளியாகியுள்ளது. வேலை நிறுத்தத்தின் விளைவுகள் இக்குறுநூலில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளன.

“அரக்கோணம் ஜோலார்பேட்டை

அர்த்தமுள்ள ராயபுரம்

பொற்கொடியே வேலைக்காரர்

அற்புதமாய் நின்றார் தினம்

பாசெஞ்சரின் வண்டியும் போச்சு

படுத்து வண்டிகள் உறங்கலாச்சு

ஊரும் போக வந்த செனங்கள்

உத்தமர் டேசனில் நிற்கவுமாச்சு

அரக்கோணம் தனில் வசிக்கும்

அன்புடைய பயர்மென் டிரைவர்

முப்பத்தேழு வேலைக்காரர்

மொய்குழலே நின்றுவிட்டார்

வண்டிக்காரர் பிழைப்புந்தான் போச்சு

சால்ட் கொட்டாய் கடைகளும் பாழாச்சு

உண்டைப் பயிரெல்லாம் ஊசிக்

கடைகளில் தூசி அடைந்ததைப் பாருங்கடி.”

இது போன்று 1913 ஆம் ஆண்டில் நிகழ்ந்த வேலை நிறுத்தம் குறித்தும் ‘மெட்ராஸ் ரெயில் கலகம்’ என்ற தலைப்பில் குறுநூல் ஒன்று வெளியாகியுள்ளது. வேலை நிறுத்தத்தை அதிகார வர்க்கத்தின் மொழியில் ‘கலகம்’ என்று குறிப்பிட் டாலும் வேலை நிறுத்தத்தின் விளைவுகளை,

“டிக்கட் கலெக்டர்கள் சேனபேர் நின்றிட்டார்

செழிப்பான கார்டுகள் முடுக்காகப் போய்விட்டார்.

டேசன் தோறும் நாய் நரியோடுது

சென்று பார்த்தால் சாமான் அங்கங்கே கிடக்குது.”

“சென்றலில் டேஷன் பாருங்கடி யிங்கே

சேரும் ஜெனக் கூட்டம் காணோமடி

தங்கி நின்றுப் பார்த்தால் நாய்களு மோடியே

தாவித் திரியுது பாருங்கடி”

“உருளைக் கிழங்கு கருப்பாச்சி யிங்கே

உற்றதோர் வெங்காயம் வேம்பாச்சி”

என்று பதிவு செய்துள்ளது. மேலும் அவ்வப் போது நடந்த ரெயில் விபத்துக்களை மையமாகக் கொண்டும் குறுநூல்கள் வெளியாகியுள்ளன.

Pin It