கம்போடிய நாட்டுப்புறக் கதை

தமிழ் வடிவம் - ச.மாடசாமி

 

1.

சோவானும், ஜோரணியும் காதலர்கள். சோவான் என்றால் தங்கமானவன் என்று பொருள்; ஜோரணி என்றால் மின்னுகின்ற அணிகலன் என்று பொருள். கம்போடியப் பெயர்களில் இந்திய மொழிகளின் செல்வாக்கு அதிகம்.

ஜோரணியின் தந்தையிடம் சோவான் பெண் கேட்டுப் போனான். முதல் பார்வை யிலேயே அவருக்குச் சோவானைப் பிடிக்க வில்லை. சோவான்  ஏழைக்குடும்பத்தில் பிறந்த வன்.ஜோரணியின் தந்தை அந்த ஊரின் செல்வந்தர் களில் ஒருவர்.

ஆனால், பெண் கேட்டு வருபவனிடம் ‘கிடையாது போ’ என்று மூர்க்கத்தனமாய் மறுக்க அந்தக் காலச் சம்பிரதாயத்தில் இடமில்லை. அதே நேரம், பெண் வீட்டார் நினைத்தால் மணமக னுக்குக் கடினமான பரீட்சைகள் வைக்கலாம். தேறி வந்தால் மட்டுமே பெண் தருவதாக வாக்கு அளிக்கலாம்.

ஜோரணியின் தந்தை, பெண் கேட்டு வந்தவனிடம் சொன்னார்: “பார்க்கலாம். அதற்கு முன்னால் உனக்கொரு பரீட்சை”.

2

மணமகன் பரீட்சைகள் எல்லாம் தைரியத்துக் கும் உறுதிக்குமான பரீட்சைகள்தான்.

சோவானுக்குப் பெண் வீட்டார் வைத்த பரீட்சை இது :

ஊர்க் கோடியில் - மலையடிவாரத்தில் ஒரு குளம் உள்ளது. குளிர்ச்சியான குளம். அந்தக் குளத் தில் கழுத்தளவு தண்ணீரில் சோவானை நிறுத்து வார்கள். காலை மட்டும் கட்டி விடுவார்கள். மூன்று நாள் இரவும் பகலும் தண்ணீரில் நின்று குளிரைத் தாங்க வேண்டும். வெதுவெதுப்பான இடத்துக்கு நகரக் கூடாது. வெப்பத்தைத் தேடிப் போகக் கூடாது.

இரண்டு நாள் பொழுதைச் சமாளித்தான் சோவான். மூன்றாம் நாள் காலையில் உடம்பு லேசாக நடுங்கியது. சோவான் தத்தளிக்க ஆரம்பித்தான்.

அப்போது, தூரத்தில் மலையுச்சியில் யாரோ மூட்டிய நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. நீரில் கிடந்தவனுக்கு நெருப்பைப் பார்த்ததும் ஒரு மலர்ச்சி. அந்த நெருப்பைத் தொடுபவனைப் போல கையை நீட்டி நீட்டி விளையாடினான். சும்மா அது ஒரு பாவனைதான். நெருப்பு வெகு தூரத்தில் மலையுச்சியில் எரிந்து கொண்டு இருந் தது.

அந்த நேரம் பார்த்து ஜோரணியின் தந்தை அங்கு வந்தார். சோவான் செய்வதைப் பார்த் தார்.பரீட்சையில் காப்பி அடிக்கும் மாணவனைப் பிடித்த ஆசிரியர் போலக் குதித்தார்.

“நீ குளிர் காய்ஞ்சிட்டே!  நான் ஒத்துக்க மாட் டேன். பரீட்சையில் தோத்துட்டே!” என்று கூச்சலிட் டார்.

சோவானுக்குக் கோபம் வந்தது “மலை உச்சி யில் இருக்கு நெருப்பு. இங்க இருந்து நான் எப்படி குளிர்காய முடியும்?” என்று கத்தினான்.

“அதெல்லாம் முடியாது! வா! பஞ்சாயத்தில் பேசிக்கலாம்” என்றார் ஜோரணியின் தந்தை.

3

ஊர்ப் பஞ்சாயத்து கூடியது.

ஊர்த்தலைவர் ஒரு தலையாட்டி. சபலபுத்தி வேறு. பஞ்சாயத்துக்கு முதல்நாளே ஜோரணியின் தந்தை அவருக்குப் பரிசுப் பொருள்கள்  அனுப்பி வைத்திருந்தார். எனவே, விசாரணைக்கு முன்பே தீர்ப்பு தயாராகி விட்டது.

சோவான் தொண்டை வறளக் கத்தித் தன் நியாயத்தை எடுத்துச் சொன்னான். அது -அம்பலம் ஏறாத பேச்சு.

தலைவர் தீர்ப்பு சொன்னார்: “சோவான் மலை உச்சியில் எரிந்த நெருப்பை நோக்கிக் கையை நீட்டிக் குளிர் காய்ந் திருக்கிறான். எனவே பரீட்சையில் தோற்று விட் டான். இனி அவனுக்கு ஜோரணியைக் கைப் பிடிக்கத் தகுதியில்லை. மேலும் அவன் இந்தப் பஞ்சாயத்தாரின் மேன்மை யான காலத்தை விரயம் செய்ததால் பஞ்சாயத்தார் அனைவருக்கும் இன்று இரவு அவன் ஒரு விருந்து வழங்க வேண்டும்”.

4

தீர்ப்பைக் கேட்டு உருக்குலைந்தான் சோ வான். ஜோரணி இல்லை என்று ஆனதோடு, விருந்துச் செலவையும் தலையில் கட்டி விட்டார் தலைவர்.

விருந்து ஏற்பாட்டுக்கு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தபோதுதான் சோவான் நீதிமான் முயலைச் சந்தித்தான்.

நாட்டுப்புறக் கதைகளில், சிக்கலான கரட்டு வழக்குகள் நடக்கும்போதெல்லாம் மத்தியஸ்தம் பண்ண பட்டம் கட்டாத நீதிபதியாக ஒரு விலங்கு வரும். நம்மூர்க் கதைகளில் ‘நரி’ அப்படி வரும்; ஆப்பிரிக்கக் கதைகளில் ‘சிலந்தி’; கம்போடியக் கதைகளில் ‘முயல்’. வெறும் முயல் அல்ல ‘நீதி மான் முயல்’

“என்னப்பா சோவான்! இப்படி வேர்த்து விறுவிறுத்து அலையுறே?” என்று நீதிமான் முயல் நிறுத்திக் கேட்டது.

சோவான் நடந்தது பூராவும் முயலிடம் சொன்னான். முயல் பொறுமையாகக் கேட்டது.

“ சரி! சரி! நானும் விருந்துக்கு வர்றேன்!”

பிறகு சோவானை அருகில் அழைத்தது. அவன் காதில் ஏதோ கிசுகிசுத்தது. சோவான் முகத் தில் இப்போது புன்னகை. தொங்கிக் கிடந்த தலை நிமிர்ந்தது.

5

விருந்து தயாராகி விட்டது.

பஞ்சாயத்தாரில் முக்கியமானவர்களுக்கு ஒரு பெரிய மேசையில் விருந்து பரிமாறப்பட்டது. தலைவர் மேசை முன் மையமான இடத்தில் அமர்ந் தார். அவரது சகாக்களும்கூட வந்து அமர்ந்தார்கள். நீதிமான் முயலும் மேசை முன்னால் ஒரு நாற்காலி யில் இடம் பிடித்தது.

முதலில் சூப் பரிமாறப்பட்டது. தலைவர் ஆர்வமாய் சூப்பை உறிஞ்சினார். ஒருமுறை... பிறகு மற்றொரு முறை! ச்சீ! முகஞ்சுளித்தார்.

“என்ன, சூப்பில் உப்பில்லையே...?” என்றார்.

சோவான் பணிவாகப் பதில் சொன்னான்: “சூப்பில் உப்பு போடவில்லை. உப்பு டப்பாவை சூப்பின் பக்கத்திலேயே வைத்து விட்டோம். டப்பாவில் இருக்கும் உப்பின் ருசி சூப்பில் இறங்கி இருக்குமே!”

தலைவர் கடுகடுத்துப் பேசினார்: “அதெப் படி? உப்பைப் போட்டால்தானே சூப்பில் உப்பு ருசி கிடைக்கும். உப்பைப் பக்கத்தில் வைத்தால் கிடைக்குமா? நீ சொல்றது கிறுக்குத் தனமா இருக்கே!”

நீதிமான் முயல் காத்திருந்த தருணம் இது. உடனே தலைவரைப் பார்த்துக் கேட்டது:

“மலை உச்சியில் எரியும் நெருப்பின் வெப் பம் தண்ணிக்குள்ள இருக்குறவன் கைக்கு இறங்கு மாம்! பக்கத்தில் வைத்த உப்பு டப்பாவில் இருக் கும் உப்பின் ருசி சூப்புக்குள்ள இறங்காதாம்! இதென்னய்யா நியாயம்?”

தலைவர் திருட்டு முழி முழித்தார். சந்தர்ப் பம் பார்த்து சகாக்களும் காலை வாரினார்கள்.

“ஆமய்யா நாமதான் கிறுக்குத்தனமா தீர்ப்பு சொல்லிருக்கோம். தலைவரே! தீர்ப்பைத் திருத் துங்க. எங்களுக்கு சூப்பில் உப்பு வேணும்!”

உப்புக்காகக் கட்சி மாறிய சகாக்களை முறைத்துக் கொண்டே தலைவர் மறுதீர்ப்பு வழங்கினார்:

“குளத்துத் தண்ணீரில் நின்று கொண்டு சோவான் மலை உச்சியில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் குளிர்காய வாய்ப்பில்லை.எனவே அவன் பரீட்சையில் தோற்கவில்லை. அவசரப் பட்டுத் தவறு செய்தவர் ஜோரணியின் தந்தை தான்!”.

திருத்திய தீர்ப்புக்குப் பலத்த கைதட்டல்.

நியாயத்தைப் பெற்று விட்ட சந்தோசத்தில் நீதிமான் முயல் உப்பைத் தூவித் தூவிக் காரட் சூப்பை வெளுத்துக் கட்டியது.

நாட்டுப்புறக் கதைகளில் நியாயம் என்பது ‘பதிலுக்குப் பதில்’ தான்!.

Pin It