ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் வரும் போது அறிவியல் துறையில் பலர் ஆர்வமுடன் எதிர்நோக்கும் செய்தி நார்வே நாட்டில் இருந்து வெளியாகிறது. அதுதான் நோபல் பரிசுக்கான அறிவிப்பு. பொதுக் கருத்தில் நோபல் பரிசு என்பது அறிவியலுக்கு அளவுகோலாகி இருக்கும் சூழலில் “அறிவியலுக்கு நோபல் பரிசு ஒரு அளவுகோல் அல்ல’’ என்று உறுதியாக மறுக்கிறார் இந்த ஆண்டு வேதியியல் துறையில் நோபல் பரிசை பகிர்ந்து கொண்ட மூவரில் ஒருவரான திரு. வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். தமிழகத்தில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் 1952ஆம் ஆண்டு பிறந்த இவர் பள்ளிப் படிப்பை பரோடாவில் தொடங்கி (இப்போது வடோதரா என்று பெயர்மாற்றப்பட்டுள்ளது இவ்வூர் குஜராத்தில் உள்ளது) இளங்கலை இயற்பியல் படிப்பினை அங்குள்ள மகாராஜா சாயாகிராவ் பல்கலைக்கழத்தில் பயின்றார். அதன்பின் அமெரிக்கா சென்று ஒஹாயோ பல்கலையில் உயிரியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

“என்னிடம் கார் இல்லை! அதனால் நான் சைக்கிளில் அலுவலகம் வருகிறேன்’’ என எளிமையின் சிகரத்தில் நின்று புன்னகைக்கும் இவர் செய்துள்ள ஆய்வு வேலையோ மிகப்பெரியது. மனிதன் முதல் பாக்டீரியா வரை எல்லா உயிரினங்களின் செல்லுக்குள்ளும் இருக்கும் ரிபோசோம் என்ற ஒரு பகுதி அவ்வுயிரினத்திற்கு தேவையான புரதத்தை தயாரிக்கும் வேலையை செய்கிறது. ஒரு உயிரினத்தின் வளர்ச்சி முதல் உடலின் பல செயல்பாடுகளுக்கு அடிப்படையாக அமைவது புரதங்களே அனைத்து உயிர்களிலும் உள்ள ஞிழிகிவின் மரபணு தொடரை பின்பற்றித் தான் இந்த ரிபோசோம்கள் புரதங்களை வடிவமைக்கின்றன. கண்களால் காண இயலாத நுண்நோக்கியால்  மட்டுமே பார்க்க இயலும். அளவில் மிகச் சிறிதாய் இருக்கும் செல்லின் ஒரு மிகச் சிறிய அங்கமே ரிபோசோம். அவற்றின் அணுகட்டமைப்பு மற்றும் அவை எவ்வாறு புரதங்களை உருவாக்குகின்றன என்ற கேள்விக்கு பெருமுயற்சியால் விடைகண்ட  திரு. வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இக்கண்டுபிடிப்பு எவ்வாறு பயனளிக்கும் என்ற கேள்விக்கு பதில் கூறும் இவர். “பாக்டீரியா போன்ற நுண் உயிர்களிலும் ரிபோசோம் உள்ளது. எனவே, அந்த ரிபோசோம்களின் செயல்பாட்டை தடை செய்யும் மருந்துகளை உருவாக்கி புரதத் தயாரிப்பை இடையூறு செய்வதன் மூலம் நோய் விளைவிக்கும் பாக்டீரியாவை உயிரிழக்கச் செய்யலாம். இதனால் நோய்களை கட்டுப்படுத்தலாம்’’ என்கிறார்.

இவர் இந்தியர், தமிழகத்தில் பிறந்தவர் என இங்குள்ள ஊடகங்கள் பெருமைப் பாராட்டும் வேலையில் இவர் இந்திய அரசுக்கு வைக்கும் கோரிக்கை கவனத்திற்குரியது “இந்தப் பரிசுகளில் கவனம் கொள்ளாமல் அடிப்படை அறிவியலை ஊக்குவிக்கும் வகையில் இந்திய அரசு கல்விக்கு நிதி ஒதுக்க வேண்டும்’’ என்பதே!.

பல லட்சம் கோடிகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிச்சலுகையாகவும் சில லட்சம் கோடிகளை கல்விக்கு நிதி ஒதுக்கியும், கல்வியில் தனியார்மயத்தை ஊக்குவித்தும் வரும் ஆளும் அரசுகள் இருக்கும் வரை ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து அரசுக் கல்லூரியில் அறிவியல் பயின்று கொண்டு நோபல் பரிசு கனவு காணும் ஒவ்வொரு மாணவனின் கனவும் தீக்கிரையாகிக் கொண்டு தான் இருக்கும். நோபல் பரிசு பெறும்  எளிமையின் உதாரணமான, பரிசுகள் மேல் பற்றில்லாத திரு. வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் விரும்பும் சிறந்த தரமான அறிவியல் கல்வி நம் நாட்டில் நிலவ காசு இருப்பவனுக்கே கல்வி எனக் கூவும் கல்வியில் தனியார்மயத்தை நிறுத்தவும், தரமான கல்வி கொடுக்கும் அரசு கல்விச் சாலைகளை அதிக அளவில் நிறுவவும் ஒற்றுமையுடன் உரத்த குரலெழுப்ப வேண்டியுள்ளது.

Email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.