தமிழகத்தில் ஜூன் மாத துவக்கம் என்பது பெற்றோர்களின் கவலைக்குரிய மாதமாய் இருக்கிறது. கல்வி நிலையங்களில் தங்களது பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் பண மூட்டையுடன் அலையும் காட்சியை சர்வ சாதாரணமாய் காண முடியும். சர்வ சாதாரணமாய் எல்.கே.ஜி சேர்க்கக்கூட 30 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கும் பள்ளிகள் தமிழகத்தில் உள்ளது. கொடைக்கானல் போன்ற இடங்களில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிகளில் ஒரு ஆண்டு கட்டணமாக இரண்டு லட்சம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது. அத்தகைய பள்ளிகளில் உயர் அதிகாரிகள் முதல் தொழிலதிபர்கள் வரை வரிசையில் நிற்பது பெருமையாக பேசப்படும் விஷயமாகிவிட்டது. இதை பெற்றோர்களின் குறையாய் குற்றம் சுமத்தும் கூட்டம் இன்று உள்ளது.

ஆனால், பணம் கொடுத்தால்தான் தரமானக் கல்வி கிடைக்கும் என்பது சமூகத்தின் பொதுபுத்தியில் விதைக்கப்பட்ட பதிவு இது. தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சமச்சீரான கல்வி என்பது கானல் நீராகவே தொடர்கிறது. தமிழக அரசிடம் சமச்சீர் கல்வி கேட்டால் பாடத்திட்டங்களில் ஒன்று போல் மாற்றுவதே சமச்சீர் கல்வி என்று ஆளும் கட்சியினர் மந்திர தந்திர வேலைகளில் ஈடுபடுகின்றனர். இது ஒருபக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் கல்வியை விலைபேசும் பழக்கம் நமது தமிழ்நாட்டில் துவங்கி பல வருடங்களாகிறது. நர்சரிபள்ளி, மெட்ரிகுலேசன் பள்ளி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி என தனியார்கள் நடத்தும் கல்வி நிலையங்களில் பணம் அநியாயமாய் கொள்ளையடிக்கப்படுகிறது. இது அரசாங்கத்தின் ஆசியுடன் தொடர்கிறது. கல்வி வியாபாரிகள் இன்று ஆட்சியாளர்களாகவும் கோலோச்சுகின்றனர்.

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள், மந்திரிகள், தமிழகத்தின் மத்திய மந்திரிகள் என அனைவருக் கும் கல்லூரிகள் இருக்கின்றன. இதில் அரசு அதிகாரிகள் தலையிட முடியாது. இதை யார் ஒழுங்கு படுத்துவது என்ற கேள்வியும் தொடர்கிறது. கல்வி கட்டணம் யார் யாருக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கறக்கின்றனர். ஒரு மாட்டுக்கொட்டகையில் துவக்கப்படும் நர்சரி பள்ளி சில ஆண்டுகளில் பிரமாண்டமான கட்டடமாய் எழுந்து நிற்கிறது. அந்த கட்டடத்தினுள் உழைப்பாளி மக்களின் உதிரம் அடி உரமாய் கிடக்கிறது. இந்த கொடூரத்தை தடுக்க வேண்டிய தமிழக அரசு மிகவும் கறாராக இருப்பதை போல நாடகமாடுகிறது. தமிழக முதல்வர் கலைஞர் தனது தம்பிகளுக்கு கடிதம் எழுதி செம்மொழி மாநாடு கொண்டாட்டத்தில் திளைக்கிறார். தமிழில் சட்ட, பட்ட மேற்படிப்புகளை படிக்க வக்கில்லாத நிலையில்தான் செம்மொழி மாநாடு கொண்டாட்டம் நடக்கிறது. வாழ்க நம் செம்மொழி! இது ஒருபுறம் நடக்கும் போதுதான் கல்வி என்பது இன்றும் ஏழைகளுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது.

தமிழகத்தில் கல்வி கட்டணத்தை அரசே தீர்மானிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததும், தமிழக அரசு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்தது. அந்த குழு விரிவான ஆய்வு நடத்தி துவக்கக் கல்விக்கு 3500 முதல் 5000 ரூபாயும், நடுநிலை கல்விக்கு 6000 முதல் 8000 ரூபாயும், உயர்நிலை கல்விக்கு 9000 ரூபாயும், மேல்நிலை கல்விக்கு 11000 ரூபாயும் என தீர்மானித்து. இந்தக் குழு தீர்மானம் செய்த தொகை அடிப்படையில் அதிகம்தான். இருப்பினும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் கொதித்தெழுந்தன. இத்தனை நாள் தங்கள் இஷ்டம் போல கொள்ளையடித்தவர்கள் இந்த கட்டண அறிவிப்பால் கோபம் அடைந்து நீதிமன்றக் கதவுகளை தட்டினர். இந்த கமிட்டி அமைக்கப்பட்டதும் இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கு தள்ளுபடியானது. குழுவின் பரிந்துரைகள் வந்ததும் தனியார் கட்டண நிர்ணய உரிமையில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என குதித்தனர். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆனால் அரசு கட்டணம் நிர்ணயிக்க உரிமை உண்டு என உச்ச நிதிமன்றமும் தீர்பளித்தது. இருப்பினும் நாங்கள் இந்த கட்டணத்தில் கல்வி கொடுக்க தயாரில்லை, பள்ளிகளை திறக்க மாட்டோம் என அரசுக்கு சவால் விட்டனர். வேறு வழி இல்லாமல் அதை வாபஸ் பெற்றனர்.

இந்த கமிஷன் அமைக்கப்பட்டதும் கட்டண நிர்ணயம் செய்ததும் எத்துனை மக்களுக்கு தெரியும் என்பது முக்கியமான கேள்வி. கமிஷன் எத்துனை மக்களிடம் எவ்விதமான கருத்தை கேட்டது என்பதும் ஒருபுறம் அவசியமான கேள்வியாகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் 6 முதல் 14 வரை இலவசக் கல்வி என்று பறைசாற்றும் கல்வி உரிமை சட்டம் அமலாகும் நேரத்தில்தான் இந்த கூத்தும் தமிழகத்தில் நடக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். கல்வி எங்கள் பிறப் புரிமை அதை அடைந்தே தீருவோம் என்ற ஜனநாயக இயக்கங்களின் போர் குரல் வெல்லும் போது தான் நிரந்தரத் தீர்வு கிடைக்கும். அதற்கு அனைவரையும் அணிதிரட்டுவது அவசியமானது. அவசியம் எப்போதும் போராடாமல் கிடைத்ததில்லை. போராடமல் கிடைப்பது அவசியமாய் இருந்ததில்லை.

-ஆசிரியர் குழு

Pin It