கியூபா, இந்தியாவில் பெண்களின் நிலை:

ஒரு நாட்டின் நாகரிகம், வளர்ச்சி, முற்போக்கு நிலையை, அங்குள்ள பெண்களின் சமூக நிலையைக் கொண்டு அறிந்து கொள்ள முடியும் என்பது பொதுமொழியாக அறிந்தேற்கப்படுகிறது. பாலின சமத்துவமின்மையும், பாலின இடைவெளியும் சமூக முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் முடக்கும் எதிர்மறை ஆற்றலாக செயல்படுகிறது.

கியூபப் புரட்சி விளிம்பு நிலையில் இருந்த பெண்களின் புரட்சிகர பங்கேற்பையும், ஈடு இணையற்ற தியாகத்தையும் கோரியது.அதுவே பாலின சமத்துவத்துவத்திற்கான புரட்சிக்கு வழிகோலியது. கியூபப் புரட்சியில் பங்கேற்ற முதன்மையான பெண் புரட்சியாளர்களை பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளை இது வரை பார்த்திருந்தோம்.

ஒட்டு மொத்த கியூப பெண்களின் சமூக நிலை எந்தளவிற்கு முன்னேறியிருக்கிறது என்பதையும், அதோடு ஒப்பிடும் போது இந்தியப் பெண்களின் சமூக நிலை எவ்வாறு உள்ளது என்பதையும் இப்பொழுது பார்ப்போம்.

வரலாற்று அடிப்படையில் கியூபா பெரும்பாலும் ஒரு விவசாய நாடாகவே இருந்துள்ளது, நகர்ப்புறங்களில் சுற்றுலா சார்ந்த பொருளாதாரம் நிலவிவந்தது. புரட்சிக்கு முன்னர், பெண்களுக்கு கல்வி வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. வேறு வேலைவாய்ப்புகள் கிடைக்காததால் இந்தப் பகுதிகளில் பெண்கள் பணிப்பெண்களாக, விலைமாதராக வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டனர். உழைப்பு சக்தியில் பங்கேற்ற பெண்களில் 70 விழுக்காட்டினர் வீட்டு ஊழியர்களாக பணி புரிந்தனர்.

1933ல், ​​கியூபப் பெண்கள் வாக்குரிமையைப் பெற்றனர். 1940ல் கியூப அரசியலமைப்பு சட்டம் பாலின அடிப்படையில் பாகுபாடு காண்பிப்பதைத் தடைசெய்தது, பெண்களின் உரிமைகளான சம ஊதியம் அளித்தலும், சம வேலைவாய்ப்பு அளித்தலும் அங்கீகரிக்கப்பட்ட போதும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

கியூப புரட்சிக்குப் பிறகு லத்தீன் அமெரிக்காவின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது கியூபப் பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு பெறுவதில் இணையற்ற உரிமைகளைப் பெற்றனர். 1975 ல் கியூப குடும்ப சட்ட நெறி உருவாக்கப்பட்டது. இது குடும்பத்தில் பெண்குழந்தைகள், பெண்கள் மீதான பாகுபாட்டை தடைசெய்தது.

கியூப பெண்கள் வீட்டுக் கடமைகளை தங்கள் வாழ்க்கைத் துணைவர்களுடன் நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ளும் விதமாகவே 1975 குடும்ப சட்ட நெறி வடிவமைக்கப்பட்டது.கணவன்-மனைவி இருவரும் குடும்பத்தில் சமமான பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்றும் அதுவே இளம் தலைமுறையினருக்கு கல்வி அடிப்படையிலான முன்னுதாரணமாக அமையும் எனவும் 1975 குடும்ப சட்ட நெறி குறிப்பிடுகிறது.

கியூபாவின் வளர்ச்சியில் பெண்களின் முழு பங்கேற்பையும் உறுதி செய்யும் விதமாக சம வாய்ப்புகளை அளிக்கும் வகையில் கியூப அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.கியூப அரசியலமைப்புச் சட்டம், பெண்களுக்கு பொருளாதார, அரசியல், கலாச்சார தளங்களிலும், குடும்பத்திலும் ஆண்களுக்கு நிகரான சமான அரசியலமைப்பு உரிமைகளை வழங்குகிறது.

கியூப அரசியலமைப்பின் 44வது பிரிவில் நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் தங்கள் முழுப் பங்களிப்பை அளிப்பதற்கு, ஆண்களுக்கு கிடைத்த அதே வாய்ப்புகளையும் சாத்தியப்பாடுகளையும் அரசு உறுதிப்படுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கியூபப் பெண்கள் பல்வேறு சமூக இனப் பின்னணியிலிருந்து (ஆஃப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா) வந்தவர்கள். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட விளிம்பு நிலையில் உள்ள கியூப பெண்கள், உட்பட அனைத்து பெண்களுக்கும் இலவசமான உயர் கல்வியையும், சமமான முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளையும் கியூப அரசு வழங்கியுள்ளது.

1959 கியூப புரட்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்ட கியூப பெண்கள் கூட்டமைப்பு (எஃப்எம்சி) 3 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. 14 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 85.2 விழுக்காட்டினர் இதன் உறுப்பினர்களாக உள்ளனர்.

பெண்கள் சமூக முன்னேற்றத்தை அடைவதற்கான புதிய வாய்ப்புகளை இவ்வமைப்பு அளித்தது. பெண்கள் பல்கலைக்கழக கல்வி பெறவும், சம ஊதியம் பெறவும், அரசு வேலைகளில் பங்கேற்கவும் உதவியது. கியூப மகளிர் கூட்டமைப்பை கியூப அரசு "கியூபாவில் பெண்களின் முன்னேற்றத்திற்கான தேசிய பொறிமுறையாக" அங்கீகரித்தது. தேசிய அளவில் பெண்களுக்கான பயிற்சி மையமும், பெண்களுக்கான பதிப்பகமும் ஏற்படுத்தப்பட்டது.

கியூப மகளிர் கூட்டமைப்பு வீட்டு வேலைக்காரர்களாகவும், விலைமாதராகவும் இருந்த பெண்களுக்கும், வறுமையில் வாடும் பெண்களுக்கும் கல்வி கற்பிப்பதற்காக பள்ளிகளை நிறுவியது.இந்தப் பள்ளிகள் பெண்களுக்கு பரந்த அளவிலான திறன்களையும், உயர் கல்வியையும் பெறுவதற்கு அவர்களுக்கு உதவியது.

புரட்சியின் வெற்றியின் போது கியூபாவின் மக்கள்தொகையில் கால் வாசி பேர் கல்வியறிவற்றவர்களாகவும், அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களாகவும் இருந்தனர். 1961ல், கிட்டத்தட்ட முழு நாடும் கல்வியறிவு பெற்றிருந்தது. தன்னார்வலர்களால் கல்விச் சேவையால் தான் இந்த சாதனை சாத்தியமானது.

அதில் 56 விழுக்காட்டினர் இளம் பெண்கள்.அமெரிக்கா, ஐக்கிய முடியரசு போன்ற வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் கல்வி வணிக சரக்காக விற்கப்படும் நிலையில் சின்னஞ்சிறிய கியூபா கல்வியில் முன்னிலையில் ஓங்கி நிற்கிறது.

சோஷலிச கியூபாவின் வளர்ச்சியை முடக்கும் விதமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து பல பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள போதும் கியூப அரசு போற்றுதலுக்குரிய முறையில் அனைத்து குடிமக்களுக்கும் பல்கலைக்கழக முதுநிலைக் கல்வி வரை இலவசக் கல்வி சேவையை வழங்குகிறது. ஆனால் இந்திய கல்லூரிகளில் 22 விழுக்காடு மட்டுமே அரசு கல்லூரிகளாக உள்ளன, இவற்றின் மூலம் 32.7விழுக்காட்டினரே கல்வி பெற முடியும்.

2011ஆம் ஆண்டு நிலவரப்படி, 80 விழுக்காட்டிற்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்களாக, 68 விழுக்காட்டினர் பல்கலைக்கழக பட்டதாரிகளாகவும் கியூப பெண்கள் உள்ளனர். மருத்துவ மாணவர்களில் 81 விழுக்காட்டினர் கியூப பெண்களாக உள்ளனர். ஆனால் மற்ற அறிவியல் துறைகளில் குறைவாகவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள். இயற்கை அறிவியல், கணிதத்துறையில் 46விழுக்காடும், தொழில்நுட்பப்பிரிவில் 37விழுக்காட்டினரும், பொறியியல் துறையில் 30 விழுக்காட்டினரும் பெண்களாக உள்ளனர். கியூப தொழில்நுட்ப, தொழில்முறை பணிக்குழுவில், 1979லிருந்து அதிகரித்து வருகிற பெண்களின் எண்ணிக்கை, 2000த்தில் 66 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

1959 புரட்சிக்கு முன்னர், கியூபாவில் கருக்கலைப்பு செய்வது சட்டவிரோதமானது. 1960ல் கியூபப் பெண்கள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர், கியூபப் பெண்களின் இனப்பெருக்க உரிமைகளை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1965ல், கருக்கலைப்பு குற்ற நடவடிக்கைகளிலிருந்து நீக்கப்பட்டது. 1979ல், கருக்கலைப்பு சேவையை பெண்கள் இலவசமாகவும் எளிதாகவும் பெற முடிந்தது.

1990 சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பிறகு, அங்கிருந்து கியூபா பெற்ற பொருளாதார ஆதரவும், நிதியுதவியும் நிறுத்தப்பட்டதாலும், அமெரிக்காவின் தொடரும் பொருளாதாரத் தடைகளாலும், தவிர்க்க இயலாதபடி கியூபாவில் தனியார்மயம் ஊக்குவிக்கப்பட்டுள்ளது, இதனால் கியூபாவின் சோசலிச வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குடும்பம், குழந்தை பராமரிப்பு சமூக பராமரிப்பு சேவைகள் மீண்டும் தாய்மார்கள், மனைவிகள் பெண்களிடமே திரும்பியுள்ளது.

கியூபப் புரட்சியின் மூலம் கியூபப் பெண்கள் சம உரிமைகள், சம வாய்ப்புகள் பெற்று பெரும் முன்னேற்றத்தை அடைந்திருந்த போதிலும், கியூப சமுதாயத்தில் பாலின அடிப்படையிலான சமூக ஏற்றத்தாழ்வுகளும், ஆணாதிக்கப் போக்கும் இன்னும் முற்றிலுமாகக் களையப்படவில்லை, ஆன போதும் பல வளர்ந்த நாடுகளை காட்டிலும் பாலின சமத்துவத்தில் கியூபா முன்னிலையில் உள்ளது என்பதையும் மறுக்க இயலாது.

இந்தியாவைப் பொறுத்தவரை அரசியலமைப்புச் சட்டம் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான சட்ட நெறிகளைக் கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது உறுப்பு அனைத்து இந்திய பெண்களின் சமத்துவத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது, அரசின் பாலின பாகுபாடற்ற நடைமுறையை உறுப்பு 15 (1) உறுதி செய்கிறது.

உறுப்பு 16 பெண்களுக்கு சம வாய்ப்புகளை அளிப்பதை உறுதி செய்கிறது. சம வேலைக்கு சம ஊதியம் பெறும் உரிமையை உறுப்பு 39 (ஈ) அளிக்கிறது.குழந்தைகளுக்கு ஆதரவாக சிறப்பு ஏற்பாடுகளை செய்ய அரசை உறுப்பு15 (3) அனுமதிக்கிறது, உறுப்பு 51அ பெண்களின் இறைமையை இழிவுபடுத்தும் நடைமுறைகளுக்குத் தடை விதிக்கிறது. உறுப்பு 42 நியாயமான, மனித நேயமிக்க வேலை நிலைமைகளைப் பாதுகாக்கவும், மகப்பேறு நிவாரணம் அளிக்கவேண்டும் என்றும் அரசைப் பணிக்கிறது. பெண்கள் சொத்துரிமையில் சம பங்குபெற சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆன போதும் இவையாவும் முற்றிலுமாக நடைமுறைப்படுத்தாமல் ஏட்டுச் சட்டங்களாகவே நீடித்து வருகிறது. இந்தியாவின் பிரத்யேக சமூகப் பிரச்சனைகளான பெண் சிசுக்கொலை, வரதட்சணைக் கொடுமை, குழந்தைத் திருமணம், ஆகியவற்றைத் தடுப்பதற்கான சட்டங்கள் இயற்றப்பட்ட போதும், இப்பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகம், உலகளவில் இந்தியாவில் தான் வரதட்சணை கொடுமையால் ஏற்படும் இறப்புகள் அதிகமாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளது. 1961ல் வரதட்சணை தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது என்ற போதும் 2012ல், இந்தியா முழுவதும் 8,233 வரதட்சணை மரண வழக்குகள் பதிவாகியுள்ளன.

2017ல் 7000 பேர் வரதட்சணைக் கொடுமையால் இறந்துள்ளனர்.வரதட்சணையால் ஏற்படும் இறப்புகள் 2001ல் ஒரு நாளுக்கு 19ஆக இருந்தது 2016ல் 21ஆக அதிகரித்துள்ளது. 2019ல் 7115 பேர் வரதட்சணைக் கொடுமையால் கொல்லப்பட்டுள்ளனர். வரதட்சணைக் கொடுமைகள் கிராமப் புறங்களில் மட்டுமே காணப்படுவதில்லை, டெல்லி, பெங்களூர் போன்ற நகரங்களிலும் வரதட்சணைக் கொடுமைகள் செய்யப்படுகின்றன.2020ல் பெங்களூரில் 16 நாட்களில் வரதட்சணை கொடுமையால் 17 இறப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் பதிவு செய்யாமல் போகும் வரதட்சணைக் கொடுமைகள் பல.

இந்தியாவில் கல்வித்துறையில் அதிகரித்து வரும் தனியார்மயத்தால் பெண்கள் கல்வி பெறுவதில் பெறும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய ஆணையத்தின் 2019ஆம் ஆண்டு அறிக்கையின்படி, 15-18 வயதுக்கு இடைப்பட்ட இந்தியப் பெண்களில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர் பள்ளிக் கல்வியை இடை நிறுத்தியுள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் குழந்தைத் திருமணம் ஒரு பெரும் சமூகப் பிரச்சனையாக நீடிக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், 18 வயதிற்கும் கீழ் திருமணம் செய்யப்படுகின்ற பெண்களின் எண்ணிக்கை 1.5 மில்லியன் என யுனிசெஃப் மதிப்பிட்டுள்ளது. உலகளவில் குழந்தைத் திருமணம் செய்யப்படும் மூன்றில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர். இந்தியாவில் 15 முதல்19 வயதுடைய பெண்களில் கிட்டத்தட்ட 16 விழுக்காட்டினர் திருமணமானவர்கள் என யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பெண்கள், கர்ப்பிணி, பாலூட்டும் பெண்களிடையே ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகமாக உள்ளது. குடும்ப அமைப்புகளிலும், வேலையிடங்களிலும், சமூகத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குறிப்பாக பாலியல் வன்முறைகள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன.பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்கான சட்டம் 2013ல் நிறைவேற்றப்பட்டது.

ஆனபோதும் பெண்கள் மீதான பாலியன் வன்முறைகள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தில், 2017 ல் பெண்களுக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை 3.59 லட்சம் இது 2018 ல் 3.78 லட்சமாகவும், 2019ல் 4 லட்சத்திற்கும் மேலும் அதிகரித்துள்ளது.

2019ல் பதிவுசெய்யப்பட்ட பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளின் எண்ணிக்கை 32,033 . தினமும் 88 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இந்தியாவில் கணவரால் செய்யப்படும் பாலியல் வல்லுறவு குற்றமாகக் கருதப்படுவதில்லை.

22 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் முதல் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (என்.எஃப்.எச்.எஸ்) முதல் கட்டத்தில் 7 மாநிலங்களில் 25 விழுக்காட்டிற்கும் அதிகமான பெண்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒன்பது மாநிலங்களில் குழந்தை பருவத்தில் பாலியல் வன்முறையை எதிர்கொண்ட இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எட்டு மாநிலங்களில் பெண்களின் பாலின விகிதம் குறைந்துள்ளது. பெரும்பாலும் பெண்களுக்கு எதிரான சமூகக் குற்றங்கள், அதனால் ஏற்படும் சமூகக் களங்கம் குறித்த தப்பெண்ணங்கள் காரணமாக காவல் துறையில் புகாரளிக்கப்படுவதில்லை.

இந்தியாவில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களில் 86 விழுக்காட்டினர் உதவியை நாடுவதில்லை பாதிக்கப்பட்டவர்களில் 77 விழுக்காட்டினர் குற்ற சம்பவத்தை யாரிடமும் குறிப்பிடுவதில்லை.

பாதிக்கப்பட்டவர்களில் உதவியை நாடும் 14.3 விழுக்காட்டினரில், 7 விழுக்காட்டினர் மட்டுமே காவல்துறை, மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் அல்லது சமூக சேவை நிறுவனங்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் அணுகியுள்ளதாக தேசிய மகளிர் ஆணையத்தின் தரவுகள் குறிப்பிடுகின்றன.

1976ல் சம ஊதியச் சட்டம் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டது, இது பாலின அடிப்படையில் ஊதியத்தில் பாகுபாடு காண்பிப்பதைத் தடைசெய்கிறது. ஆனால் ஊதிய ஏற்றத்தாழ்வு இன்னும் நடைமுறையில் உள்ளது. 2017ல், மான்ஸ்டர் ஊதியக் குறியீட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தியாவில் பாலின அடிப்படையிலான ஊதிய இடைவெளி 20 விழுக்காடாகவும் குறிப்பிட்டுள்ளது. பணி அனுபவம் அதிகரிக்கும் போது ஊதிய இடைவெளியும் அதிகரிக்கிறது.

11 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் உள்ளவர்களிடையே பாலின அடிப்படையிலான ஊதிய இடைவெளி 25 விழுக்காட்டிற்கு மேல் அதிகரித்துள்ளது. 4-5 ஆண்டு பட்டக் கல்வி அல்லது முது நிலை பட்டம் பெற்றவர்களிடையிலான ஊதிய இடைவெளி 33.7 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் சாதி, மத பாகுபாடுகளை கடந்து செய்யப்படும் கலப்புத் திருமணங்களும், காதல் திருமணங்களும் சமூகத்தால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதுடன் அவற்றிற்கெதிராக செய்யப்படும் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. இந்தியக் குடும்ப அமைப்புகளில் காணப்படும் பெண்ணடிமைத்தனத்தால், தங்கள் இணைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை பெரும்பாலான இந்தியப் பெண்களுக்கு இல்லை.

பெற்றோர், குடும்பத்தின் மூலமாக தேர்ந்தெடுக்கும் நபரையே திருமணம் செய்து கொள்ளும் போக்கு இன்னும் பெருமளவிற்கு நீடித்து வருகிறது. சரியான புரிதலுக்கான சூழல் ஏற்படுத்தப்படாமல் செய்யப்படும் இத்தகைய திருமணங்கள் பெண்ணடிமைத் தனத்தை ஊக்குவித்து, பெண்களின் சமூக, அரசியல், பொருளாதார பங்கேற்பிற்கும், அவர்களின் முன்னேற்றத்திற்கும் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.

இந்திய தேசியக் குற்ற ஆவண காப்பகம் 2018ல் 30 ஆணவக்கொலைகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறது. ஆணவக் கொலைகள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு தரவுகளின் படி, 2014 முதல் 2016 வரை 288 ஆணவக் கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எவிடன்ஸ் என்கிற தலித் அமைப்பு 2012 முதல் 2017 வரை தமிழ்நாட்டில் 187 சாதி அடிப்படையிலான ஆணவக் கொலைகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் மருத்துவம், விஞ்ஞானம், அறிவியல் தொழில்நுட்பம் கல்வி, விளையாட்டு, அரசியல், ஊடகத்துறை, கலை, சேவைத் துறைகள், போன்ற பல்வேறு துறைகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்துள்ள போதும் பாலின சமத்துவ நிலையை எட்டுவதற்கு இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

பிறப்பின் அடிப்படையிலான பாலியல் விகிதம் கியூபாவில் 100 பெண்களுக்கு 98.6 ஆண்களாகவும், இந்தியாவில் 100 ஆண்களுக்கு 91 பெண்களாகவும் உள்ளது.

நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்கேற்பு விகிதம் 2019ல் கியூபாவில் 53.2விழுக்காடாகவும், இந்தியாவில் 13.5 விழுக்காடாகவும் உள்ளது. உலகளவில் நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்கேற்பு விகிதத்திற்கான தரவரிசையில் 192 நாடுகளில் கியூபா 2ம் இடத்தில் உள்ளது. இந்தியா 149வது இடத்தில் உள்ளது. 2020ஆம் ஆண்டிற்கான பாலின இடைவெளிக் குறியீட்டின் மதிப்பு கியூபாவில் 0.746ஆகவும், இந்தியாவில் 0.668ஆகவும் உள்ளது.

பாலின இடைவெளிக் குறியீட்டிற்கான தரவரிசையில் 153 இடங்களில் கியூபா 31ஆம் இடத்திலும், இந்தியா 112ஆம் இடத்திலும் உள்ளது. 2019ல் பாலின சமத்துவமின்மையின் மதிப்பு கியூபாவில் 0.304ஆகவும், இந்தியாவில் 0.488ஆகவும் உள்ளது.

பாலின சமத்துவமின்மைக்கான தரவரிசையில் 162 இடங்களில் கியூபா 67ஆம் இடத்திலும், இந்தியா 123ஆம் இடத்திலும் உள்ளது. பேறுகால இறப்பு விகிதம் கியூபாவில் 100,000பேருக்கு 39ஆக உலகளவில் மிகக் குறைந்த விகிதத்தைக் கொண்டுள்ளது.இந்தியாவில் பேறுகால இறப்பு விகித்தின் மதிப்பு 133ஆக உள்ளது. பெண்களின் சராசரி ஆயுட்காலம் கியூபாவில் 80.7 ஆண்டுகளாகவும், இந்தியாவில் 70.7 ஆண்டுகளாகவும் உள்ளது.

2015-19க்கு இடைப்பட்ட பகுதியில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களில் கியூப பெண்களில் 85.8விழுக்காட்டினரும், ஆண்களில் 89.1 விழுக்காட்டினரும் இடை நிலை கல்வி பெற்றவர்களாக உள்ளனர்.

இந்தியாவில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெண்களில் 27.7 விழுக்காட்டினரும், ஆண்களில் 47.0 விழுக்காட்டினரும் இடை நிலை கல்வி பெற்றவர்களாக உள்ளனர். 2019ஆம் ஆண்டு நிலவரப்படி 15 வயதுக்கு மேலுள்ள நபர்களில் உழைப்புச் சக்தியில் பங்கேற்கும் பெண்களின் விகிதம் கியூபாவில் 40.7 விழுக்காடாகவும், இந்தியாவில் 20.5 விழுக்காடாகவும் உள்ளது.

15 வயதுக்கு மேலுள்ள நபர்களில் உழைப்புச் சக்தியில் பங்கேற்கும் ஆண்களின் விகிதம் கியூபாவில் 66.8 விழுக்காடாகவும், இந்தியாவில் 76.1 விழுக்காடாகவும் உள்ளது.

இவ்வாறு பொருளாதாரத் தடைகளால் முடக்கப்பட்ட போதிலும் சின்னஞ்சிறிய கியூபாவில் பெண்களின் சமூக நிலை, கல்வியறிவு, அரசியல் பங்கேற்பு, உடல் நலம், உழைப்புச் சக்தியில் பங்கேற்பு என அனைத்திலும் உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரமாக அறியப்படும் இந்தியாவை விட பெருமளவில் முன்னேறியும், மேம்பட்டும் அதிக பாலின சமத்துவத்துடன் காணப்படுகிறது.கியூபாவின் பாலின சமத்துவ நிலையை எட்ட இந்தியா இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது.

(முற்றும்)

- சமந்தா

Pin It