இந்திய தேசத்தில், நமது அரசியல் சாசன முகப்பானது ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை பிரகடனப்படுத்தி சுமார் அறுபத்தி ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டது. அரை நூற்றாண்டுகள் கடந்தும் நமது அரசியல் சாசனத்தின் இலட்சியத்தை அடைந்திருக்கிறோமா? என்றால் பெருத்த ஏமாற்றமே மிஞ்சும். இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டிலும், நமது நாட்டில் மத மோதல்களும், உலகில் எங்கும் காணப்படாத ஜாதிய வன்முறைகளும், பாலியல் பாகுபாடு போன்ற குப்பைகளையெல்லாம் இன்னும் எரிக்கமுடியாமல் (முயலாமல்) தவிர்த்தே வருகிறோம். இவற்றில் மிகமிக முக்கியமானது பாலியல் பாகுபாட்டால் உண்டாகும் பாலியல் வன்முறைகளாகும். ஆண் பெண் சமத்துவத்தில் நமது தேசமானது மிக பிற்போக்குத்தனமாக இருக்கிறது. மேலும், அத்தகைய பாலியல் பாகுபாடானது, மதத்தாலும், ஜாதியாலும், பண்பாடாகவும் நமது மரபாகவும் காலந்தோரும் கட்டி காப்பற்றபட்டே வருகிறது. நமது தேசத்தில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதும், பெண்களின் சுதந்திரத்தை பறிப்பது என்பதும் , ஆண்களின் மற்றும் மரவுவழியாக பெண்களின் கடமையாவே போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது.

சமுக சீர்திருத்தத்தின் கருவியான கல்வியை கொண்டு சமுகத்தில் பாலியல் சமத்துவம் கொண்டுவந்துவிடமுடியும் என்று நம்பப்பட்ட நிலையில், இன்றைய கல்வியானது சமுகத்தில் புரட்சியை செய்வதற்கு பதிலாக சமுக பிற்போக்குதனமான ஆணாதிக்க கட்டுமானத்தை இறுக செய்து எதிர்புரட்சியையை உருவாக்கிகொண்டிருக்கிறது. அத்தகைய எதிர்புரட்சியின் வெளிப்பாடுதான், உயர்கல்வியும் இன்று பெண்ணின் திருமணத்திற்கான ஒரு தகுதியாக மாறிவிட்டது. கல்வியானது புரட்சியைசெய்யும் அதேவேளையில், பெண்ணடிமை மற்றும் ஆணாதிக்கமும் நவீன வகையில் தன்னை பரிணமித்துகொண்டு தனது இருப்பை சமுகத்தில் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்கிறது. இப்பரிமாணத்தின் நீட்சிதான், சமுகத்தில் ஒழுக்கங்களும், கட்டுப்பாடுகளும் பெண்ணை சார்ந்து மட்டுமே மேலும்மேலும் திணிக்கப்படுவதாகும். இந்த திணிப்பானது இரண்டு முறைகளில் நடைப்பெறுகிறது, ஒன்று, ஆணாதிக்கம் மனப்பான்மையில், ஆணின் அனைத்து தவறுகளுக்கும் பெண்ணையே குற்றவாளியாக்குது, உதாரணமாக, உடை அணிவதில் பெண்ணின் சுதந்திரத்திற்கு மாறாக, பெண் எதை உடுத்தவேண்டும், எதை செய்யவேண்டும் என்று தீர்மானிப்பதாகும், அப்படி ஆணின் விருப்பத்திற்கு நிகழவில்லையெனில், பெண்ணின் மீது பாலியல் வன்முறை ஏவப்படுவதை தன்னுடைய கடமை உணர்வாகவே ஆணாதிக்க மனப்பான்மை உள்ளவர்கள் நினைக்கிறார்கள். இரண்டு, ஆணாதிக்கவாதிகளின் கூற்றுகளுக்கு உகந்தவாறே, அவர்களின் நிர்பந்தத்தை பெண்ணடிமைத்தன மனப்பான்மையில் உள்ளவர்களும், பெண்களை அடக்கியாள்வது ஆண்களின் கடமையெனவும், அடங்கிபோவது பெண்களின் கடமையெனவும் உணர்கின்றனர். இந்த பிற்போக்குதனமான உணர்வுகளை மழுங்கடிப்பதாக நமது கல்வியமைப்பு இன்றுவரை இல்லை என்பதுதான் இவற்றிக்கு காரணம்.

நமது நாட்டில் ஆண் பெண் பாகுப்பாட்டை களைந்து சமத்துவத்தை நிலைநிறுத்துவதற்கு போதுமான கல்விமுறை தற்போது இல்லை என்பதை கல்வியாளர்களும் பெண்ணியவாதிகளும் அறிந்துவைத்துள்ளனர். மேலும், இத்தகு நிலையை மாற்ற புதிய கல்விமுறையை கொண்டுவரவேண்டும் என்றுணர்ந்து, பாலியல் கல்வியை முன்மொழிகின்றனர். கல்வியாளர்களால் முன்மொழியப்படும் பாலியல் கல்வியானது இரண்டு வகையாக இருக்கிறது, ஒன்று, ஒரு சாரார், பாலியல் கல்வியானது, மாணவர்களின் பாலியல் தொடர்பான சந்தேகங்களுக்கும், பதின்மவயது நிலையை உணரவைத்து அதன் மூலம் விழிப்புணர்வு உண்டாக்கினால், பாலியல் பாகுபாடு இருக்காது, அதனால், சமுகத்தில் பாலியல் வன்முறையானது குறைக்கப்படும் என்று கருத்து தெரிவிக்கின்றனர். இன்னொரு சாரார், பாலியல் கல்வியென்பது வெறும் பாலியல் தொடர்பான சந்தேகங்களை தீர்ப்பதாக இல்லாமல், ஆண் பெண் சமத்துவம் சார்ந்தவகையில் இருக்கவேண்டும் என சொல்கின்றனர்.இவர்கள் முன்மொழிவது, பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும், அதாவது, பெண்ணை எப்படி சமுகத்தில் இருக்கவேண்டும் என கற்பிக்கிறோமோ, அதேப்போல ஆணையும் எப்படியெல்லாம் இருக்ககூடாது என கற்பிக்கவேண்டும், இதனை மேலும், சொல்லவேண்டும் எனில், தனது மகளுக்கு என்ன உடை உடுத்த வேண்டும் என்பதை சொல்லிகொடுக்காமல், தனது மகனுக்கு யார் என்ன உடை அணிந்திருந்தாலும் நீ பார்க்ககூடாது, என கற்பிக்கவேண்டும் என்பதே அது.

பாலியல் கல்வியின் முதல் சாராரின் கருத்தானது, சமுகத்தில் எந்தவித தாக்கத்தையும் உண்டாக்காது அதேவேளையில், இரண்டாம் சாராரின் கருத்து சிறு அளவில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் முழுமையாக எந்தவித மாற்றத்தையும் கொண்டுவரமுடியாது, ஏனெனில், இரண்டாம் சாராரின் கருத்து, கற்பிக்கப்படும் அளவைக்காட்டிலும், நமது சமுகத்தில் மரபு வழியாக கற்பிக்கப்படும் கருத்தாது அதிக பலம் பொருந்தியதாக இருக்கிறது. எனவே, மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் பாலியல் கல்வியால் எந்தவித மாற்றத்தையும் கொண்டு வராது. ஏனெனில் இன்று முன்மொழியப்படும் பாலியல் கல்வியானது நடைமுறைக்கு உகந்ததாக இல்லை.

இன்றைய நிலையில் பாலியல் கல்வியானது அவசியமானது, அதேவேளையில் நீடித்த ஒரு மாற்று நடைமுறை சாத்தியத்தை கொண்டிருக்கவேண்டும். பாலியல் பாகுப்பாட்டை களைந்து ஆண் பெண் சமத்துவத்தை நிலைநிறுத்தும் ஒரு நடைமுறை சாத்தியமான கல்விதான் மனை அறிவியல். பாலியல் கல்வி என வெறும் பாலியல் கல்வியை மட்டும் மாணவர்களுக்கு கற்பிக்காமல், மனை அறிவியலை கற்பிப்பதன் மூலமே பாலியல் பாகுபாட்டை தவிக்கமுடியும். பாலியல் கல்விக்கான விளக்கத்தை மேலே பார்த்தோம், ஆனால், அதற்கு மாற்றாக முன்மொழியப்படும் மனை அறியியல் (மனையியல்) கல்வி எப்படி பாலியல் கல்விக்கு மாற்றாக இருக்கமுடியும் என்பதை பார்ப்போம்.

மனை அறிவியல் என்றவுடன் சமுகத்தில் உள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் படித்தவர்களுக்கும்கூட சட்டென் மனதில் தோன்றுவது, மனையியல் அல்லது மனை அறிவியல் என்பது பெண்கள் படிக்கும் கல்வி என்ற எண்ணமாகும். மேலும், மனை அறிவியலில் என்ன படிப்பார்கள் என்றவுடன் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லுவார்கள் உணவைப்பற்றி படிக்கும் படிப்பு என்று. (யூத் படத்தில் விஜய் கூட மனையியல் என்பது உணவைப்பற்றி படிப்பது என்றுதான் சொல்லுவார்). மனை அறிவியல் என்ற படிப்பே பெண்களுக்கானது என்ற கருத்தே சமுகத்தில் பாலியல்பாகுப்பாட்டின் நிலையை எடுத்துறைக்கும். மனையியல் பற்றிய இவர்களின் கூற்றானது, பெண்களுக்கான படிப்பு என்பதன்மூலம், பெண் என்பவள், வீட்டை பார்த்துகொள்வது என்பது மட்டும்தான் வேலை, அதை ஒழுங்காக செய்வதற்கு இந்த படிப்பு என்ற சமுக திணிப்பு உள்ளது. அதாவது, இல்வாழ்க்கையில் ஆணின் வாழ்க்கை துணையான பெண்ணானவள் வீட்டை பரமரித்துகொள்ள மட்டும்தான் என்ற சமுக திணிப்பு மேலோங்குகிறது. அந்த வகையில் படிக்கும் படிப்பிலும் ஆண்களுக்கான படிப்பு, பெண்களுக்கான படிப்பு என்ற பாகுபாடு நிலை வந்துள்ளது, நாம் முன்னே சொன்னதுபோல, பெண்ணுக்கும் கல்லுவியறிவு வேண்டும் என்ற கோரிக்கையானது வளர்ந்து, பெண் படிக்கலாம், ஆனால், மனையை பற்றி மட்டும் படித்துக்கொள் என்ற நிலையை யாரும், சமத்துவம் என்று கூறமாட்டோம். ஆனால், அதுதான் இன்றைய கல்வியில் நடந்துகொண்டிருக்கிறது.

பெண்ணானவள் இன்று அனைத்து துறைசார்ந்த படிப்புகளையும் படிக்கிறாள், பின் எப்படி பாலியல் பாகுபாடு இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது அல்லவா அதற்கான பதில், பெண்தான் அனைத்தையும் சமம் என்று அனைத்து துறையையும் தேர்ந்தெடுத்து படிக்கிறாளே தவிர, ஆண், பெண்களுக்கான துறையாக
சொல்லப்படும் இத்தகைய மனையியல் போன்ற துறையை எத்தனைபோர் எடுத்துபடிக்கின்றனர். யாரும் படிக்கமாட்டார்கள், காரணம் சமுகத்தின் ஆணாதிக்கத்தின் தொடர்ச்சிதான் இத்தகைய நிலை. அப்படிப்பட்ட நிலையில்தான் மனை அறிவியல் என்ற கல்வியானது இருக்கிறது.

மனை அறிவியலானது பொதுவாக, பள்ளிகளில், எட்டாம் வகுப்பு பாடத்திலோ அல்லது ஏழாம் வகுப்பு பாடத்திலோ மட்டும்தான் ஒரு பாடமாக வரும். அடுத்து, ஒருசில கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், மனை அறிவியல் என்ற துறையில் மாணவிகள் மட்டுமே படிப்பார்கள், தமிழ்நாட்டில், தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டு படிப்பாக மனை அறிவியல் சொல்லிக்கொடுக்கப்பட்டது, இந்த வருடம் இருந்து அதுவும் நீக்கப்பட்டது.

இந்த நிலையில் இருக்கும் மனை அறிவியல் கல்விதான் சமுகத்தில் பாலியல் பாகுப்பாட்டை முடுவுக்குகொண்டுவரமுடியும். மனை அறிவியல் கல்வி என்பது வெறும் உணவு தொடர்பான படிப்பு மட்டும் அல்ல, மாறாக, மனை அறிவியல் என்பது, மனை தொடர்பான நேரடியான மற்றும் மறைமுகமான அனைத்து துறைகளையும் அதாவது மனிதனின் அனைத்து தேவைகள் தொடர்பான அனைத்தையும் படிப்பதாகும், அதாவது, ஒரு மருத்துவர்,மருத்துவம் மட்டும்தான் தெரியும், பொறியாளருக்கும் பொறியியல் மட்டும்தான் தெரியும், வேளாண்மை படிப்பவர்களுக்கு வேளாண்மை பற்றி மட்டும்தான் தெரியும், அதேப்போல, கலை மற்றும் அறிவியல் துறைகளில் படிப்பவர்களுக்கூட அந்தந்த துறைசார்ந்தவை மட்டும்தான் தெரியும், ஆனால், மனை அறிவியல் படித்தவர்களுக்கு இதுவரை கல்வியில் இருக்கும் அனைத்து துறைகளையும், தேவைக்கு ஏற்ப நேரடியாகவும் மறைமுகமாகவும் தெரியும். மனை அறிவியலில், அடிப்படைத்தேவைகளான உணவைப் பற்றியும், உடையை பற்றியும், இருப்பிடத்தை பற்றியும், மனித நலனை பற்றியும், இப்படி மனிதன் பிறப்பதிலிருந்து இறப்பது வரை அவன் வாழ்க்கை முழுவதையும் படிப்பதுதான் மனை அறிவியல்,

இத்தகைய சிறப்பை பெற்ற போதிலும் மனை அறிவியலானது எப்படி பாலியல் கல்விக்கு மாற்றாக அமைய முடியும் என்ற எண்ணம் ஏற்படலாம். அதனை பார்ப்போம், ஒரு விச செடி இருக்கிறது என்றால், அதனை அழிக்க அந்த செடியை வெட்டுவது என்பது தீர்வாகாது, மாறாக, செடியை வேறுடன் அழிப்பதன் மூலமே சாத்தியமாகும். அதுபோலவே, இந்த சமுகமானது பெண்ணை எதற்க்காக எத்தகைய நிலையில் வைத்துள்ளதோ, அத்தகைய நிலையையும் அதனையும் படிப்பதன்மூலமே மாற்றத்தை கொண்டுவரமுடியும். இந்த சமுகமானது பெண்ணானவளை, வாழ்க்கை துணை என்ற நிலையை விடுத்து மனைவி என்ற நிலையியே வைத்துள்ளது. மனைவிக்கும் வாழ்க்கை துணைக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி எழலாம், வாழ்க்கை துணை என்பது சமத்துவத்தின் குறியீடு அங்கு, யார் வேண்டுமானாலும் சமைக்கலாம், குழந்தையை பார்ந்துக்கொள்ளலாம், யாரும் யாருக்கும் அடிமை கிடையாது மாறாக சமமானவர்களே, அதனால் எந்தவித பாகுபாடும் இல்லை. மாறாக, மனைவி என்ற சொற்பதமானது, பெண்ணானவள் வாழ்க்கைத்துணை என்ற நிலையை கடந்து, கணவனுக்கு கட்டுப்பட்டவளாக, முழுக்கமுழுக்க வீட்டை மட்டும் பார்த்துகொள்வது மட்டுமே பெண்ணின் பணி என்ற சமுக திணிப்பால் உருவாக்கப்பட்டது. இதன்மூலம், பெண்ணானவள், வீட்டில் சும்மாதான் இருக்கிறாள் என்ற நிலையானது திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. அதன்மூலம், பெண்ணானவள், வீட்டில் செய்யும் வேலைகளானது வேலையே இல்லை என்றளவில், ஆணாதிக்கத்தின் மூலம், பெண்ணானவள் மிகபெரிய பொருளாதார சுரண்டலுக்கு காலங்காலமாக உள்ளாக்கப்படுகிறாள். இத்தகு நிலையை போக்காமல், பாலின சமத்துவத்தை எப்படி கொண்டு வரமுடியும். இதன்பொருட்டுதான் மனை அறிவியலானது தேவைப்படுகிறது.

மனை அறிவியலில், உணவு சமைத்தல், துணி துவைத்தல், தைத்தல், குழந்தையை வளர்ப்பது, பராமரிப்பது, வீட்டை பாதுக்காப்பது, பெரியவர்களை கவனித்துக் கொள்வது போன்றவற்றை, மரபு வழியாக சமுகமாக பெண் குழந்தைகளுக்கு மட்டுமே கற்பிப்பதால்தான் பாலின பாகுப்பாட்டை களைய முடிவில்லை. மாறாக, இத்தகைய மரபு வழி கல்வியின் நவின வடிவமான மனை அறிவியல் கல்வியை பள்ளிகள் மூலம் கல்லூரிகள் மூலம் ஆண்களும் படிப்பதான் பெண் வாழ்க்கையை முழுமையாக உணர முடியும், அதோடில்லாமல், வீட்டின் வேலைகள் எல்லாம் பெண்தான் பார்க்கவேண்டும் என்ற நிலைமாறி வீட்டை பராமரிப்பது, குழந்தையை வளப்பது, சமைப்பது போன்ற பணிகள் எல்லாம் பொதுவானது என்ற எண்ணமானது ஆணின் மனதில் பதியும். இத்தகைய அடிப்படையான பாகுப்பாட்டை உருவாக்கும் விழுமியங்களாய்யெல்லாம் களைந்தால், பாலியல் தொடர்பான பிரச்சனையை தீர்ப்பது என்பது எளிமையாக இருக்கும். மனை அறிவியலில் ஒரு இன்றியமையாத பகுதிதான் பாலியல் கல்வி என்பதும், நாம் பாலியல் கல்வி என்ற ஒரு பகுதியை மட்டும் வைத்துக்கொண்டு மனை அறிவியல் என்பதை தவிர்பதன் மூலம் பாலியல் பாடுப்பாட்டை மாற்ற முடியாது.

பாலியல் கல்வி என்பதை மாணவர்களின் பதின்ம பருவத்தில் இருந்துதான் ஆரம்பிக்க முடியும், ஆனால், மனை அறிவியல் கல்வியை, குழந்தை கல்வி முதலே கற்றுகொடுக்கலாம், தொடக்க கல்வியில் சில பாடங்களையும், ஆறு முதல் பனினெண்டாம் வகுப்புவரை மனை அறிவியல் என்பதை, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமுக அறிவியல் என்பதுடன் மனை அறிவியலையும் சேர்த்து கற்பிக்கலாம். இதன் மூலம் காலங்காலமாக பெண்கள் மேல் திணிக்கப்பட்டுவரும் கருத்துக்களானது ஆண்களும் படிப்பதால், வேலை என்பதில் பெண், ஆண் பேதமில்லை என்பதை மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள். பெண் என்பவள், இத்தகைய வேலையையை செய்யதான் பிறந்தால், என்ற ஆணாதிக்க மனப்பான்மையை உடைப்பதன் மூலம், பெண்ணையும் தன்னை போல சக மனிதராக பார்க்கும் நிலை உண்டாகும். இதன் மூலம், ஆண்களிடம் இருக்கும் இயற்கை என நாம் செயற்கையாக உருவாக்கிவைத்திருக்கும் ஆதிக்கபான்மையும், பாலியல் கவர்ச்சியை பற்றிய புரிதலுடன் மறைந்துபோகும். உதாரணமாக, தமிழ் படங்களில், ஆண் சமைப்பது, பெண்ணின் துணி துவைப்பது, ஆண் அடிமையானது போன்ற ஒரு தோற்றத்தை கொண்டு நகைச்சுவை என்ற பெயரில் ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர்கள் காட்சிபடுத்தியிருப்பார்கள், மாறாக, இந்த வேலைகளை எல்லாம் பெண்கள் செய்வது நகைச்சுவையாகவும் கேவலமாகவும் சித்தரிப்பதில்லை. மனை அறிவியலை பயிற்றுவிப்பதன் மூலம் இத்தகைய போக்கை மாற்றியமைக்கலாம்.

பள்ளி பாடங்களில், சமுக அறிவியல் என்று சமுகத்தை படிக்கும் பாடங்கள்தான் வைக்கப்பட்டள்ளது, மாறாக, சமுகத்தில் அடிப்படை அலகு குடும்பமாகும், அத்தகைய குடும்பத்தை சுதந்திரத்துடன், சமத்துவத்துடனும், சகோதரத்துடனும் வளர்த்தெடுக்காமல், வெறும் சமுக அறிவியலை போதிப்பதால் எந்த பலனும் பெறமுடியாது. எனவே, சமுக அறிவியல் போலவே பள்ளிகளில், மனை அறிவியலும் ஒரு பாடமாக வைத்து அதில், பாலியல் கல்வியையையும் சொல்லிக்கொடுக்கலாம்.

இத்தகைய மனை அறிவியலை தமிழ் நாட்டில் இருக்கும் சுமார், ஐம்பதாயிரம் பள்ளிகளில், கல்லூரிகளிலும் சொல்லிகொடுப்பதன் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்க முடியும், மேலும், கற்பிப்பதற்க்காக போதிய ஆசிரியர்கள் இருக்கமாட்டார்கள், எனவே, தமிழ் நாட்டில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருக்கும் மனை அறிவியல் துறைகளையும் எடுத்துவிட்டு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் தேசிய ஊரக பல்கலைக்கழகம் இருக்கும் நான்கு வருட மனையியலையும் எடுத்துவிட்டு புதியதாக, தமிழக அளவில், ஏதாவது ஒரு இடத்தை தலைமையகமாக கொண்டு, மனை அறிவியல் பல்கலைக்கழகத்தை உருவாக்கியும் அதன்கீழ், அனைத்து மாவட்டங்களிலும் மனை அறிவியல் கல்லூரிகளையும் உருவாக்குவதன்மூலம், சில வருடங்களில், போதியளவு மனை அறிவியல் மாணவர்களை உருவாக்கலாம், அதன் மூலம் தமிழகத்தில், சுமார், ஐம்பதாயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம், மேலும், மனை அறிவியல் என்பது தொழிற்கல்வி ஆதலால், ஏராளமான தொழில் முனைவோர்களையும் உருவாக்கலாம். இதைப்போலவே இந்திய அளவில் சில இலட்சம் வேலைவாய்ப்புகளாய்
உருவாக்கலாம்.

சமுக சீர்திருத்ததிற்கு மிக அவசியமான மனை அறிவியல் பலகலை கழகத்தை உருவாக்கி மனை அறிவியலை கற்பிப்பதன் மூலம் சமுகத்தில் பாலியல் பாகுப்பாட்டை களையலாம், அந்த வகையில், மனை அறிவியல் பல்கலைக்கழகமானது சமுக சீர்திருத்ததிற்கான ஒரு வரலாற்று தேவையாகும்.

- அ.தங்க அரசன்

Pin It