பூமி வெப்பம் அடைகிறது, பனிக்கட்டிகள் உருகுகின்றன என தினசரி பல செய்திகள் நம் காதுகளில் விழுந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு மே மாதமும் "வெயில் இப்படி படுத்தி எடுக்குதே", ஒவ்வொரு குளிர் காலத்திலும் "இந்த வருஷம் குளிர் ரொம்ப ஜாஸ்திப்பா" என்றெல்லாம் குறைபட்டுக் கொள்கிறோம். ஆனால் நம் இயந்திரகதியான வாழ்க்கை எந்தத் தடையும் இல்லாமல், அது பாட்டுக்கு ஓடிக் கொண்டேதான் இருக்கிறது. பிரச்சினைகளுக்கு அரசையும், மற்றவர்களையும் குறைகூறுகிறோமே தவிர, நாம் எந்த வகையில் இயற்கைக்கு இணக்கமாக வாழ்கிறோம் என்று கவலைப்படுவதில்லை. உண்மையில் நாம் ஒவ்வொருவரும் அன்றாட வாழ்வில் சிறிய மாற்றங்களை செய்தாலும், சில செயல்களை தவிர்த்தாலுமே மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும். இந்த விஷயங்கள் நமக்குத் தெரியாதவையும் அல்ல. நமது அசிரத்தையால் இவற்றைச் செய்ய முனைப்பாக இருப்பதில்லை. இனிமேலும் அந்த அசிரத்தையை தொடராமல், கீழ்க்காணும் விஷயங்களை கடைப்பிடிக்க முயற்சிக்கலாமே.

தண்ணீர் தண்ணீர்... 

தினசரி காலையில் பல் துலக்கும்போது குழாயை திறந்து வைத்துக் கொண்டே, அதைச் செய்கிறோமா என்பதை கவனிக்க வேண்டும். நம்மில் பெரும்பாலானோர், குறிப்பாக நகரங்களில் வசிப்போர் பல் துலக்கும்போதும், முகச்சவரம் செய்யும்போதும் குழாயை மூடுவதில்லை. ஒருவர் இப்படிச் செய்வதால் மட்டும் 3 லிட்டர் தண்ணீர் வீணாகிறது. உண்மையில் இந்தச் செயல்களுக்கு ஒரு கப் தண்ணீரே போதுமானது. 

அதேபோல் "ஷவரில்" குளித்தால் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறோம். இதனால் தண்ணீர் வீணாகிறது. வாளியில் குளித்தால் ஒரு வாளித் தண்ணீரே செலவழியும். ஷவரைத் தவிர்ப்பது நல்லது. 

இதைவிட முக்கியமாக தண்ணீர் வீணாகும் விஷயம் பழுதடைந்த குழாய்களும், பைப்புகளும். எடுத்துக்காட்டாக, ஒரு குழாயில் இருந்து 30 சொட்டு தண்ணீர் ஒரு நிமிடத்துக்கு வெளியேறினால், ஒரு நாளைக்கு 32 லிட்டர் தண்ணீர் வீணாகும். எனவே, வீட்டிலும் அலுவலகத்திலும் குழாய் பழுதடைந்து இருந்தால் உடனே அவற்றை சரிசெய்ய வேண்டும். 

கழிப்பறையில் உள்ள "பிளஷில்" இருந்தும் தண்ணீர் கசிந்து வீணாகும். இதை அறிய அந்நீரில் பேனாமையை கரைத்து விட்டால் தெரியும். அத்துடன் "பிளஷில்" இருந்து ஒரு தடவைக்கு வெளியேறும் தண்ணீர் மிக அதிகமானது, தேவையற்றது. ஒரு முறைக்கு 6 லிட்டர் தண்ணீர் வீணாகிறது என்கிறார்கள். இதை கட்டுப்படுத்த தண்ணீர் அடைக்கப்பட்ட பாட்டிலையோ அல்லது கல்லையோ அந்தத் தொட்டியில் போட்டு வைத்தால் குறைந்த அளவு நீரே வெளியேறும். 

நமது குளியல் அறை, கழிப்பறையை சுத்தப்படுத்த ஆசிட், பிளீச்சிங் பவுடரையே பயன்படுத்துகிறோம். இது சூழலுக்கு எதிரானது. மண்ணை மலடாக்கக் கூடியது. இதற்கு பதிலாக எலுமிச்சை, வினிகர், சமையல் சோடா போன்றவற்றை பயன்படுத்தலாம். 

காய்கறி, அரிசி போன்றவற்றை கழுவிய நீரை செடிகளுக்கு ஊற்றலாம். பாத்திரங்களைக் கழுவும்போது குழாயை திறந்து விட்டுக் கொண்டே கழுவுவதைவிட, ஒரு பெரிய "டப்"பில் தேய்த்து வைத்துக் கொண்டு, மற்றொரு "டப்"பில் நிரப்பப்பட்ட நல்ல நீரில் இரண்டொரு முறை முக்கி எடுத்தால் தண்ணீர் தேவையின்றி விரயம் ஆகாது.

- பேராசிரியர் த.முருகவேள்

Pin It