பாலக்காடு ரயில் கோட்டத்தில் உள்ள மதுக்கரை-வாளையாறு-காஞ்சிக்கோடு ரயில் தடம் யானைகளின் அழிவுத் தடமாகியுள்ளது. இந்தப் பாதையில் மட்டும் 2000 ஆம் ஆண்டில் இருந்து 16 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் எட்டு யானைகள் (பாதி ஆண் யானைகள்) பலியாகியுள்ளன. சமீபத்தில் சூலை 15, 16 என அடுத்தடுத்த நாட்களில் இரண்டு யானைகள் ரயில் மோதி மடிந்துள்ளன. சூன் 2ந் தேதி பெண் யானை, ஆண் குட்டி இறந்துள்ளன. இது குறித்து ரயில்வே துறை-வனத்துறை இடையே வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த யானைகள் இறந்ததற்கு நேரடிக் காரணமும், மறைமுகக் காரணமும் யார்? அதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்கான விடை சற்று நீண்டது. 

ஆசியாவில் மொத்தமுள்ள காட்டு யானைகளில் பாதிக்கும் மேற்பட்டவை தமிழகத்தில் முதுமலை, சத்தியமங்கலம், கர்நாடகாவில் நாகரஹொளே, பந்திபூர், கேரளாவில் முத்தங்கா, அமைதிப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் வாழ்கின்றன. உலகில் உள்ள இரண்டு யானை வகைகளில் ஒன்றான ஆசிய யானைகள் இயற்கையாக வாழும் பகுதிகள் இவை.  

உயரமான மரங்களில் உள்ள இலைகளை யானைகள் ஓடித்துச் சாப்பிடும்போது, கீழே விழும் இலை, தாவரக் கழிவுகளை இதர விலங்குகள் உண்கின்றன. காட்டு விலங்குகளுக்கு அத்தியாவசியமான தாது உப்பு மண்ணை யானைகள் தேடிக் கண்டடைந்த பின்னர் காட்டு எருது, மான், இதர தாவர உண்ணிகள் பயன்படுத்திக் கொள்கின்றன. மேலும் காடுகளில் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஆண்டுக்கு 37 டன் சாணத்தை பரப்பி, காடுகள் செழித்து வளரவும் யானைகள் உதவுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

ஒரு நாளைக்கு சராசரியாக 350 கிலோ தாவர உணவையும், 200 லிட்டர் தண்ணீரையும் குடித்து வாழும் யானைகள். அவற்றைத் தேடி பருவ காலத்துக்கு ஏற்ப பயணிக்கின்றன. 5,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வலசை போகும் வாழ்க்கை முறையைக் கொண்டவை யானைகள். இப்படி யானை செல்லும் பாதைகள், வலசை போகும் வழித்தடங்கள் (எலிபென்ட் காரிடார்) என்றழைக்கப்படுகின்றன. ஒரு காட்டையும் மற்றொரு காட்டையும் இந்த வழித்தடங்கள் இணைக்கின்றன. தாவரப் பெருக்கமும் கட்டுக் குலையாத காட்டின் செழுமையும் யானைகளின் இந்தப் பயணங்களால் உயிர்பெறுகின்றன. யானைகள் இல்லாத காடுகள் சிறுத்து, புதர் மண்டி இதர பாலூட்டிகளின் வாழ்க்கையை சிக்கலாக்கும் என்பது சூழலியலாளர் தரும் எச்சரிக்கை. 

யானைகள் காலங்காலமாக பயன்படுத்தி வந்த இந்த வலசை வழித்தடங்களை சமீப காலமாக மனிதர்கள் எல்லை மீறி ஆக்கிரமித்துக் கொண்டு விட்டார்கள். மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் மந்தைமந்தையாய் யானைகள் கடந்து போகும் பத்து முதன்மையான வலசை வழித்தடங்களை மறித்து பெரும் கட்டடங்கள் சமீபகாலத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. தோட்டங்கள், பண்ணைவீடுகள், குடில்கள் மட்டுமின்றி சாமியார்களின் கட்டடங்கள், கல்வி வியாபார நிலையங்கள், உல்லாச விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றைச் சுற்றி மின்சார வேலிகள், ஆழமான அகழிகளை அமைத்து ஆக்கிரமிப்பாளர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் செய்கின்றனர். இயல்பான வழித்தடங்கள் அழிக்கப்பட்ட நிலையில், யானைகள் வழிதவறி இப்பகுதிகளுக்குள் நுழைகின்றன. மேலும் காடுகள் அழிக்கப்பட்டதால் உணவு, தண்ணீர் தேடியும் மலையிலிருந்து யானைகள் இறங்குகின்றன. 

மலையடிவாரத்தில் வாழை, கம்பு, மக்காச் சோளம், கரும்பு, தென்னை என யானைகளுக்குப் பிடித்த நீர்ச்சத்து மிகுந்த தாவரங்களின் நறுமணத்தால், அசுரப்பசியோடு இருக்கும் யானைகள் ஈர்க்கப்பட்டு தோட்டங்களுக்குள் புகுந்துவிடுகின்றன. தனது வாழ்வாதாரத்தை கைவிட விரும்பாத விவசாயியோ கூச்சலிட்டு, ஒளி பாய்ச்சி, வெடிவெடித்து யானையை விரட்டப் பார்க்கிறான். முதலில் வெருண்டு போகும் யானைகள். மீண்டும் தேவை அதிகமாகும்போது வேறுவழியின்றி வரவே செய்கின்றன. மீண்டும் விரட்டுகிறான் விவசாயி. யானை-மனித மோதல் இப்படி தீவிரமடைகிறது. 

கடந்த ஆண்டு பிப்ரவர் 4ந் தேதி கோவை மதுக்கரை வனப்பகுதியில் இருந்து செட்டிப்பாளையம், பாப்பம்பட்டி, கலங்கல், அப்பநாயக்கன் பட்டி, சின்னக்குயிலி, பெரிய குயிலி பகுதிகளை ஒட்டி இருந்த வேலிகாத்தான் முட்புதர்களில் ஒரு நிறைமாத கர்ப்பிணி உட்பட நான்கு யானைகள் இதுபோல வந்து பதுங்கிக் கொண்டிருந்தன. இவற்றை காட்டுக்குள் விரட்ட ஓரிரு மாதங்களாக வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டிருந்தனர். கடைசியாக ஒரு ஞாயிற்றுக்கிழமை, மதுக்கரை-குரும்பப்பாளையம் ரயில் தடம் அருகே ஒன்றன் பின் ஒன்றாய் யானைகள் ஓடிக் கொண்டிருந்தன. பத்தடி ஆழமுள்ள இந்த பள்ளத்தில் ஒரு கிலோ மீட்டர் வரை நீளும் தண்டவாளத்தின் மீது கர்ப்பிணி யானை, தலைமைப் பெண் யானை, மற்ற இரு யானைகள் சென்றன. ஈரோட்டில் இருந்து பாலக்காடு செல்லும் ரயில் நெருங்கிய நேரம், ஆபத்தை உணர்ந்து யானைகள் பிளிறின. ஆனால் அந்தப் பிளிறல் அவற்றின் மரணத்தை தடுத்து நிறுத்தவில்லை. ரயில் மோதி ஒன்றன் பின் ஒன்றாய் நான்கும் மடிந்தன. 

ஆனால், யானைகளின் மரணம் என்பது அவற்றுடன் நின்று போகக் கூடிய ஒன்றல்ல. அது காட்டின் மரணம். நாம் செய்ய வேண்டியது இறந்த யானைகளுக்கு இறுதிச் சடங்கல்ல. யானைகளின் வலசை வழித்தடங்களை ஆக்கிரமித்து, மறித்து நிற்கும் எல்லா கட்டடங்களையும் மறுஆய்வு செய்ய வலியுறுத்த வேண்டும். விதிகளை மீறிய கட்டடங்களை இடிக்க வேண்டும். யானை வலசை வழித்தடங்களை சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக அரசு அறிவிக்க வேண்டும். காடுகளுக்குள்ளும், காட்டை ஒட்டியும் செல்லும் ரயில் தடங்கள், ரயில்களின் எண்ணிக்கையையும் வேகத்தையும் மட்டுப்படுத்த வேண்டும். அரசின் பிற துறைகள் வனத்துறைக்கு உதவினால் மட்டுமே இவை சாத்தியமாகும்.  

இது எதுவும் நடக்கவில்லை என்றால், அறிவுமதியின் கீழ்க்கண்ட கவிதை நிஜத்தில் நிகழும். 

யானைகள்// தரையில் உலவும் மேகங்கள்// யானைகளை இழந்துவிட்டு// நாம்// மழையை எதிர்பார்க்க முடியாதடா தம்பி.

("சிட்டு", "மயில்" உள்ளிட்ட காட்டுயிர் ஆவணப்படங்களை இயக்கியுள்ள கோவை சதாசிவம், யானைகள் உள்ளிட்ட காட்டுயிர்கள் தொடர்பான விரிவான புத்தகம் ஒன்றை தற்போது எழுதி வருகிறார்)

- கோவை சதாசிவம்

Pin It