2010 சனவரி மத்தியில் கொழும்பு சென்றிருந்த வேளையில், கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் செம்மொழி மாநாடு பற்றி கருத்துக்கள் கேட்டார்கள். செம்மொழி மாநாட்டின் உயிர் நிலையானது அரசியல் ஆதாயம் பெறுவதில் தங்கியுள்ளது பற்றி- அதற்கான எதிர்வினைகள் எங்களிடமிருந்து தொடங்கியுள்ளது பற்றி எடுத்து வைத்தேன்.

அவர்களுடன் உரையாடிய வேளையில் 2011 – சனவரியில் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டினை ஒழுங்கு செய்யவிருப்பதாகவும், அதன் பொருட்டான ஆலோசனைக் கூட்டம் சனவரி 3ம் நாள் நடத்தப் பெற்றதெனவும் தெரிவித்தார்கள். பேரா.கா.சிவத்தம்பி முன்னிலை வகித்துள்ளார். ஆஸ்திரேலியாவிலுள்ள முருகபூபதி, நடேசன், லண்டனிலுள்ள ராசேஸ்வரி பாலசுப்பிரமணியம் முன்கை எடுத்துச் செய்கிறார்களெனக் குறிப்பிட்டார்கள்.

தமிழினப் படுகொலை முழு வீச்சில் நடந்துள்ள நிலையில், இன்னும் அந்த வங்கொடுமை வெப்பத்தினை இராஜபக்ஷே சகோதரர்கள் இறக்கிக் கொள்ளாத சூழலில் மாநாடு சாத்தியமா என்ற ஐயம் எழுந்தது. அரசு அனுமதியுடன் தான் நடக்கும் என்றார்கள். பன்னிரண்டு பணிகளை முன்னெடுக்கும் ஒரு அறிக்கையினை என் கையில் அளித்து தமிழகம் திரும்பியதும், எழுத்தாள நண்பர்களிடம் விநியோகிக்குமாறு தெரிவித்தார்கள். சில ஐயங்கள் தெளிவுpபடுத்தப்படாததால் அதை நான் ஒருவருக்கும் விநியோகிக்கவில்லை. அறிக்கையில் அவர்கள் எழுதியுள்ள 12 அம்சங்கள் பற்றி ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. எழுப்பியுள்ள கேள்விகள் தருக்க ரீதியில் அர்த்தமுள்ளவை.

“இந்த மாநாட்டிற்கான நோக்கம் உலகத் தமிழர்களிடம் நன்மதிப்பைப் பெற்று இலங்கையில் ஈழத் தமிழர்களுக்குச் செய்த துரோகத்தை மறைப்பது தான்” (புதிய பார்வை-16 .5.2010) என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச் செயலர் சி.மகேந்திரன் குறிப்பிட்டது, மாநாட்டின் பிரதான அரசியல் நோக்கம் பற்றியதாக இருந்தது.

செம்மொழி மாநாட்டின் ஆரவாரம் காதுகளிலிருந்து அகலும் முன்பே, கொழும்பில் மாநாட்டு முயற்சியினை தீவிரப்படுத்தியுள்ளார்கள் சிலர். இந்தச் சிலர் அங்கும் இங்கும் உள்ள சிலராகும். முன்னது தமிழர் செவிப்பறை கிழித்து – அவர் தம் புத்திமங்கச் செய்ய நடந்த ஆரவாரம் பின்னது இரைச்சல் ஏற்படுத்தாது அதே பாதையில் நடக்கும் அடக்கமான முயற்சி.

கொழும்பு என்றவுடன் இலங்கையும், இலங்கை என்றதும் இராஜபக்ஷேக்களும், இராஜபக்ஷேக்களைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் படுகொலையும் நினைவில் மேலெழுதல் ஒவ்வொரு தமிழனுக்கு மட்டுமல்ல, மனிதனான எவரொருவருக்கும் வருதல் தவிர்க்க இயலாதது. மனிதன் சிந்திப்பு சக்தி கொண்டவன்.

2010 சனவரி இந்தியக் குடியரசு நாள் விழாவில் தென்கொரிய அதிபர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது இவ்வாண்டின் இந்தியத் திரைப்பட விழா தென்கொரியாவில் நடைபெறுமென இந்தியப் பிரதமர் உறுதிமொழி அளித்தார். முள்ளிவாய்க்காலினுள்ளிருந்து உலக முழுதும் வீசுகின்ற பிணநாற்றத்தை திரைப்பட விழா என்னும் மாயாஜாலத்தால் மறைத்திடலாமென அதைக் கபளீகரம் செய்து கொழும்பில் நடத்திட வந்தார் ராஜபக்ஷே. குடியரசு நாளின் உறுதிமொழி பற்றி பிரதமர் கவலைப்படவில்லை. உலகமயமாதலின் இந்திய நாயகனான பிரதமர், இலங்கையைக் கபளீகரம் செய்யும் முயற்சியாக கண்டதால் ஜஃபா நிகழ்ச்சியினை நடத்த தடையேதும் இல்லாமல் போனது.

இந்தியத் திரைப்பட விழாவினை ஏற்பாடு செய்வது ஃபிக்கி - இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு ஆகும். சாதாரண மக்களை வீழ்த்த திரைப்பட விழா; சர்வதேச மூலதனத்தை இறக்க இந்திய தொழில் வர்த்தக விழா - என்ற இரு பிரிவாக இலங்கையை வளைப்பதில் இந்தியப் பிரதமருக்கும் இலங்கை அதிபருக்கும் உடன்பாடுதான். இருவரும் ஒருவழிப் பயணிகளே. இலங்கையின் ராசபக்ஷேக்கு கூடுதலான ஒரு குறிக்கோள் உண்டு. அது கெட்டுப்போய்க் கிடக்கும் உலகை வளைப்பது. இந்த ஃபிக்கி அமைப்பின் ஊடக பொழுதுப்போக்குத்துறையின் தலைவராக இருப்பவர் நடிகர் கமலஹாசன். இவர் பத்மஸ்ரீ விருது பெற்றபோது, முதல் பாராட்டைத் தெரிவித்தது இந்த அமைப்பு.

       தமிழகத்தில் இதற்கான முதல் எதிர்ப்பைக் கையிலெடுத்தனர் மே-17 இயக்கத்தினர் ஃபிக்கியின் ஊடகத் துறைத் தலைவரான கமலஹாசன் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார்கள்.

       இலங்கையில் நடைபெறும் விழாவில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று கமலஹாசன் வாக்குறுதி கொடுத்தார். ஃபிக்கி அமைப்பின் ஊடகத் தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விலகவில்லை. அதிலிருந்து விலகுவதால் தமிழருக்கு என்ன பயன் என்கிற ரீதியில் தர்க்கம் செய்தார். தமிழர்களுக்கு நன்மை விளைகிறதோ இல்லையோ, ஃபிக்கி அமைப்பின் நிரந்தரச் சுரண்டலுக்கு துணை செய்வதால் அவருக்கு கோடி கோடியாய்ப் பயன் விளைகிறது. தமிழ்த் திரையுலகம்- ஐஃபா விழாவினைப் புறக்கணிப்பது என்ற திடமான முடிவை எடுத்தத பின் கமலஹாசனுக்கு வேறு வழியில்லை என்பதாலும், இந்தி திரைப்பட நடிகர்களின் வீடுகளுக்கு முன், மும்பைத் தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களினாலும், இலங்கை ராசபக்ஷேக்கள் நடத்த நினைத்த நாடகம் வெற்றியடையவில்லை.

       எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவு ஜீவிகளது, மூளையில் இலங்கையின் பயங்கரவாதம் பற்றி ஆழமாக நடப்பட்டுள்ள வேர்களைக் களைவது இலங்கையின் அடுத்த உடனடித் தேவை. அங்கும் இங்குமுள்ள சாதாரண சனக்கூட்டத்தைக் கவர எடுத்த முயற்சி தோல்வியுற்ற நிலையில் சிந்தனையாளர்களை இழுக்க சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்று கூடலுக்கு இலங்கை தன் ஆதரவாளர்களை இறக்கி விட்டுள்ளது.

       “சர்வதேச ரீதியாகப் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர்களைத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஒன்றிணைத்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் முயற்சி’’

மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் விடுத்துள்ள அறிக்கை இவ்வாறு தொடங்குகிறது. ஈழத் தமிழராயினும், புலம்பெயர் தமிழராயினும் தமக்கென ஒரு தாயகம் கண்டு, சுயநிர்ணய உரிமையைக்கொண்டாடுதல் அவர்களின் விருப்பமாகும்’ அதைத் தடுத்து தமிழின அடையாளமே இல்லாமல் செய்கிற சிங்களப் பேரினவாதத்தின் மீதானது அவர்களது வெறுப்பு. இந்த இரு எல்லைகள் மட்டுமே தமிழினத்தின் விருப்பாகவும்,வெறுப்பாகவும் இருக்க முடியும். இந்த யதார்த்தத்தைப் புறக்கணித்து, புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றிணைதல் என்பது, புலம்பெயர்ந்த தமிழர்களில் தமிழீழ விடுதலைக்கு எதிராகவும், குறிப்பாய் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் நிற்கும் சிலரை ஒன்று கூட்டும் காரியமாகக் காணமுடியும். அவ்வாறான புலம்பெயர் அறிவு ஜீவிகளை இணைத்து ஒற்றைச் சிங்கள நோக்கத்துக்கு உள்ளடக்கமாய் ஆக்குவது என்பதாகவே முடியப் போகிறது.

       விடுதலைப்புலிகள் காலத்தில் சாத்தியப்படாததை - இந்தச் சுதந்திர ஆட்சியில் சாத்தியமாக்குகிறோம் என்று சில ஓட்டை உடைசல்கள் முனங்குவதை அறிய முடிகிறது.

       எழுத்துச்சுதந்திரம், கருத்துரிமை மறுக்கப்பட்ட இராணுவ பூமியில் எதைப்பேச, எழுத வேண்டுமென அவனே வரையறுக்கிறான். மாநாட்டில் இலங்கை அரசினையோ, இராஜபக்ஷேக்களையோ விமரிசித்துப் பேச இயலுமா? அவ்வாறு விமரிசிக்காமல் தமிழினத்தை அழித்தவனை விமரிசிக்காமல் தமிழை செழுமைப்படுத்த என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்.?

       “அவன் ஒரு ஆங்கிலேயன் என்ற கவிதை உண்டு.”

       “அவர் ஓர் ஆங்கிலேயர்

       அவரே அதைக் கூறினார்

       அந்தப்பெருமை அவரையே சாரும்

       அதாவது அவர் ஓர் ஆங்கிலேயர்

       அவர் ஒரு ருசியனாக இருக்கலாம்

       ஒரு பிரெஞ்சுக்காரரார், ஒரு துருக்கியர்

       இத்தாலியனாக இருக்கலாம்;

       பிற தேசங்களினவராக மாற

       அனைத்து ஆசைகளிருந்தாலும்

       அவர் ஓர் ஆங்கிலேயராகவே இருக்கிறார்

               -கில்பர்ட் 1878

அதுபோல், எந்த தேசத்தில் வாழ்ந்தாலும், அத் தேசத்தவராக மாறும் ஆசைகளிருந்தாலும் புலம்பெயர் ஈழர்-தானொரு ஈழத்தமிழராக இருக்கவே விரும்புகிறார். ஈழத் தமிழர் என்றொரு பெருமித அடையாளத்துடன் நடவடடிக்கைகளை ஒழுங்கு செய்யவே எண்ணுவார். அவர்களுடைய இந்தப் பெருமிதம் கடந்த காலம் சார்ந்ததல்ல; சமகாலத்தின் உரிமைப் போராளி என்ற பெருமிதத்தினை அடியாகக் கொண்டது. அது இன விடுதலைப் போராட்டப் பெருமிதம். இனவிடுதலைப் போராளி என்ற உணர்வுடன், உரிமைப் போராட்டச் செயல்பாட்டுனுள்ள புலம்பெயர்தமிழர்களால் ஈழத்தாரின் வாழ்வு, பண்பாடு, மொழிக்காப்பு என அனைத்தும் அவர்களின் வழிகாட்டலில் அமையும்; அவர்களை உரிமைப் போராட்டத் தடத்திலிருந்து இறக்கி, சிங்கள இனக் கரைப்புக்குள் செலுத்தும் தடம்மாறு வேலையை - கொழும்பில் நடக்கும் மாநாடு செய்ய இருக்கிறதா? கொழும்பில் நடக்கும் என்றால் சிங்கள அதிகாரத்தின் இசைவுடன் தானே நடக்க முடியும்?

       ஈழத்தில் நசுங்கி, நைந்துபோன மக்களது உணர்வு நிலையிலிருந்து- மேலோங்கிய இன்னொரு மட்டத்தில் புலம்பெயர் ஈழர்கள் இருந்தாலும், அதுவே மற்றொரு சாதகமாக மாறியுள்ளது. உலக அளவில் பரந்து வாழுவதால், வாழுகிற நாடுகளில் உரிமைக்குரல் எழுப்புவதும், ஒன்றிணைப்பதும் சாத்தியமாகியுள்ளது. லண்டனில் ஓரிரு மாதங்கள் முன்னர் உலகத் தமிழர் பேரவை நடத்திய மாநாட்டில் வெளி விவகாரத்துறை அமைச்சர் மிலிபாண்ட், பிரிட்டன் பிரதமர் ஆகியோர் கலந்து கொண்டு, தமிழின உரிமை மீட்டெடுக்கப்படட வேண்டுமெனப் பேசினார்கள். இலங்கைப் பிரதமர் ரத்னசிறிவிக்கிரம நாயக உடனே “வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் கிளைகளை வலுப்படுத்த சில வல்லரசுகள் முயற்சிகளை மேற்கொள்கின்றன. இலங்கை ஆசிய நாடுகளில் வலுவான நாடாக வளருவது சில சக்திகளுக்குப் பிடிக்கவில்லை’’ என சீற்றத்தைக் கொட்டினார்.

       ஈழத்தமிழர் பிரச்சனையைக் கையாண்டதில் உலக நாடுகளுக்கு அவரவர் நலனே முதன்மையாக வந்தது. அதைக் கையாண்டது குறித்து அவர்களுக்கு எந்தக் குற்ற உணர்வும் கிடையாது. ஓரினத்தின் தேசிய விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்டதில் அவை பெரும் பங்கு வகித்ததை ஓரங்கட்டி விட முடியாது. அந்த நாடுகளின் காதுகளில் மறுபடி நுழைக்கவும், அழுத்தம் தரவுமான கடமையினை புலம்பெயர் ஈழர்கள் செய்து வருகிறார்கள். அவர்களைக் குறிவைத்து சலனப்படுத்தும் காரியத்தை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் செய்கிறார்கள் எனத் தோன்றுகிறது.

       இந்த நேரத்தில் 1974-ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழ்ஆராய்ச்சி மாநாடு நிகழ்வு ஒரு படிப்பினையாக அமைகிறது. கொழும்பில் நடத்த முயலுதலை ஏன் தமிழ்மக்கள் மட்டுமே செறிவாய் வாழும் யாழ்நகரில் நடத்தக்கூடாது, ஏன் முயற்சி மேற்கொள்ளவில்லை என்ற கேள்வி எழுகிறது.

       1972ல் புதிய யாப்பைக் கொண்டு வந்தது சிங்கள மொழி, மத, பண்பாட்டு, அரசியல் ஆதிக்கத்தை நிலைப்படுத்தியதன் காரணமாய் சிறீமாவோ பண்டார நாயகாவின் முகம் சர்வதேச அளவில் சர்வாதிகாரத்தின் கோரமுகமாக ஆகியிருந்தது. தானொது இனச்சமத்துவம் பேணுபவர், சனநாயகவாதி என்ற புதிய முகத்தை மாட்டிக் கொள்ளும் தேவையில் கொழும்பில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்தி, பெயர்வாங்கிக் கொள்ள நினைத்தார். தமிழ் வளர்த்த யாழ் மண்ணில் தமிழர்கள் தங்களின் தலைநகரில் அம்மாநாட்டை நடத்தியே தீருவோம் எனப் போராடி வெற்றி பெற்றார்கள். அந்த வெற்றியைத் தாங்கிக்கொள்ள முடியாத சிரிமாவோ பண்டாரநாயகா ஒன்பது தமிழ் உயிர்களை மாநாட்டு அரங்கிலேயே கொன்று களிப்படைந்தார்.

“அன்று பண்டார நாயகா இருந்த நிலையைப் போல இராசபக்ஷே இன்று பன்னாட்டுஅளவில் முகமிழந்து போயிருக்கிறார். அங்கு நடக்கும் கொடுமைகளை விசாரிக்க பன்னாட்டு அவை(ஐ,நா) முயலும்போது அதைக் கூட மோசமான முறையில் தாக்கி மூடச் செய்த அரசாக அவருடைய அரசு அமைந்திருக்கிறது. புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள், பன்னாட்டு எழுத்தாளர்கள் ஆகியோரைக் கொழும்பிற்கு அழைத்து அவர் மாநாடு நடத்துவதற்குக் காரணமே தான் மனித உரிமைகளை மதிப்பவன் என்று ஒப்பனை செய்து பன்னாட்டு அரங்கில் காட்டிக் கொள்ளத்தான்’’ என்று மூத்த ஈழ எழுத்தாளர் எஸ்.பொ கூறுவது உண்மை.

       உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை கொழும்பிலே நடத்த வேண்டுமென சிரிமாவோ முனைப்புச் செலுத்தியபோது, மறுப்புக் காட்டாமல் அதற்கு முட்டுக்கொடுத்தவர் கா.சிவத்தம்பி. அதனால் யாழ் நகரில் 1974ல் நடைபெற்ற மாநாட்டில் சிவத்தம்பி பங்கேற்கவில்லை என்று உண்மையையும் இங்கு கருதிப் பார்க்க வேண்டும். அந்த சிவத்தம்பிதான் இப்போதும் கொழும்பு மாநாட்டுக்கு முன்னிலைப் படுத்தப்படுகிறார்.

       சிங்கள அரசை நம்பி ஒருபோதும் காரியம் ஆற்றக்கூடாது என்பதை உலக நாடுகள் பல உணர்ந்துள்ளன. உலக நாடுகள் உணர்ந்த அளவு கூட ஈழத் தமிழர்கள் குறிப்பாய் கொழும்புத் தமிழர்கள் உணரவில்லையோ என்கிறபோது, ரணமாகக் காந்துகிறது. சிங்கள அரசை நம்பி இது போன்ற காரியங்களை முன்னெடுக்கிறார்கள் என்றால் உள்ளறுப்பு வேலைகள் செய்கிறவர்கள் யார் என்ற கேள்வி சரியே.

       இன்றைய தகிக்கும் நிலையில், தமிழர் கோருவது தமிழை வளர்ப்பது அல்ல; தமிழை வளர்ப்பதற்கான அரசியல் அதிகாரத்தையே. சிங்களத்துக்கு சமமாகத் தமிழ் என்று நிறுவுவதற்கான அரசியல் அதிகாரத்தைக் கேட்பதே முதன்மைப் பணியேயன்றி உலகத்துக்கும் மேலாகத் தமிழைக் கொண்டு செல்லும் பணி அல்ல. அதைச் செய்வதாகக் கூறித்தான் 350 கோடி செலவில் செம்மொழி மாநாடு எல்லா ஒப்பாரிகளையும் பாடி முடித்துவிட்டதே! மொழி வளர்ச்சிக்கு அரசியல் உரிமையே முதற்தேவையாகும் என்பதை எவரும் உணர்வர். ஆட்சியில், நிர்வாகத்தில், கல்வியில், வேலை வாய்ப்பில் எல்லா இனங்களின் வாழ்வையும் நிர்ணயிப்பதில் சிங்களம் எதனால் சாத்தியமாயிற்று? அரசியல் மேலாண்மையில்தான். சிங்களத்திற்கு சமமாக தமிழ்மொழியை வளர்ச்சி செய்ய வேண்டுமெனில் மொழி வளர்ச்சிக்கு முன்னிபந்தனையாய் ஈழத்து மண்ணில் அரசியல் அதிகாரம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த அரசியல் பற்றி எண்ணிப் பார்க்காமல் மொழி வளர்ச்சிக்கு தலைகொடுக்கப் போகும் வித்தையை எவ்வாறு செய்யப் போகிறார்கள்?

       தமிழர் பிரதேசத்தை அபிவிருத்தி செய்தல் என்ற போர்வையில் ராஜபக்ஷேக்கள் வேறொரு காரியத்துக்கு வழிவகை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அடிமைச் சமூகமாக ஆக்கப்பட்ட தமிழினத்தை - சிங்கள இனக் கரைப்பில் செலுத்துவதுதான் அது. தமிழ் மக்களுக்கு இப்போது தேவைப்படுவது அதிகாரமல்ல; அபிவிருத்திதான் என்று மொழி வளர்ச்சிக்கு வழி அமைப்பதுபோல் காட்டுவதும் ஒரு உத்தியாகும்.

       “வளர்ச்சியை விரும்புகிற ஒரு தேசிய இனம் முதலில் தனது சுதந்திரத்தைப் பெற வேண்டும். அவர்களுடைய தேசிய சுதந்திரம் இரண்டாம் பட்சம் என மற்றவர்கள் அவர்களுக்குக் கூறுவது தேவையற்ற வேலை’’ என்று ஒரு சமயத்தில் போலந்து பற்றி காவுட்ஸ்கிக்கு மார்க்ஸும் ஏங்கல்ஸும் எழுதினார்கள்.

       அயர்லாந்திலுள்ள நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் என்ற அமைப்பு அளித்த டப்ளின் அறிக்கை “போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இலங்கை அரசு, சூலை 2006-ல் போர் தொடங்கிய நாள் முதல் ஏப்ரல் 2009 வரை அய்க்கிய நாடுகள் அவையின் ஆவணங்கள்படி, வான்வழித் தாக்குதல், கனரக ஆயுதத் தாக்குதல், காரணமாய் நாளொன்றுக்கு 116 பேர் கொல்லப்பட்டனர். இறுதிச் சில நாட்களில் மட்டும் 20000 பேர் கொல்லப்பட்டதாக பிரெஞ்சு, பிரித்தானிய ஊடகங்கள் வெளியிட்டன’’ என முன்வைக்கிறது. அதன்படி சூலை 2006 முதல் ஏப்ரல் 2009 வரை கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 22 ஆயிரம். அதன் பின் 20000 என்றால் ஒரு லட்சத்து 42 ஆயிரம். ஆனால் கடைசி நாட்களில் கொல்லப்பட்ட மக்கள், போராளிகளின் எண்ணிக்கையையும் கணக்கிட்டால் இரண்டு லட்சம் பேர் என்று வருகிறது.

இதன் காரணமாக மட்டுமல்ல எல்லாக் காரணங்களின் படியும் “இலங்கை அரசிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தனி நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே தமிழர்களுக்கு ஏற்புடையது. பன்னாட்டுச் சட்டதிட்டங்களின்படி, இன அழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தனிநாடு ஒன்றை உருவாக்கிக்கொள்வதே பயனுள்ள தீர்வும் உரிய இழப்பீடும் ஆகும்’’ என மனித உரிமையாளரும், பேராசிரியருமான பிரான்சிஸ் பாய்ல் கூறியுள்ளார்.

இவ்வாறான சிந்தனைகளால் வார்க்கப்பட்டு, வழி நடக்கும் புலம்பெயர் ஈழர்களை தடம் மாறச் செய்ய – மொழி வளர்ச்சி, கலை, இலக்கிய வளர்ச்சி என்ற பெயரில் கொழும்புத் தமிழர்கள் முயலுகிறார்கள். இதனை இராஜபக்ஷேயிசத்தின் இன்னொரு பக்கம் என்கிறோம். தடம் மாறுதல் ஆபத்தானது. ஆசிய தடகளப்போட்டி நடைபெற்றபோது, ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவதாய் வருவார் என எதிர்பாக்கப்பட்ட ஒரு இந்திய வீராங்கனை முதல் சுற்றின் இறுதியில் தடம் மாறி ஓடியதால், தகுதி இழந்தவராய் ஆக்கப்பட்டார். என்ன இப்படிச் செய்துவிட்டாயே என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வருத்தப்பட்டதாகக் கூறுவார்கள். அதுபோல் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களை மொழிவளர்ச்சி, கலை, இலக்கிய மேம்பாடு என்று தடம் மாற்றி ஓட வைக்கும் பொறுப்பு கொழும்புத் தமிழர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தமிழர் கோருவது மொழி வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சி அல்ல என்பதை, ஈழத்து அரசியல் ஆய்வாளர் தனபாலா முன்வைக்கிறார். “தமிழர் கோருவது அபிவிருத்தி செய்வதற்கான அரசியல் அதிகாரத்தைத் தான். அதைத்தான் நாம் தீர்வு என்கிறோம். அதாவது நாம் அபிவிருத்தியை நிராகரிக்க வில்லை. எமது வாழ்நிலை, பழக்க வழக்கம், பண்பாடு என்பவற்றிற்கு இசைவான அபிவிருத்தியை நாம் செய்வதற்கு எமக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்று கோருகிறோமே தவிர, தமிழினத்தைச் சிங்கள இனமாகக் கரைப்பதற்கு ஏதுவான பண்பாட்டுக் கொலையைச் செய்யவல்ல சிங்கள மேலாதிக்க அரசியல் ஆதிக்கத்தை அல்ல; இங்கே இலங்கை அரசு ஒடுக்கு முறையை இன்னொரு தளத்திற்கு அபிவிருத்தி என்ற அழகான வார்த்தைப் பிரயோகம் மூலம் இராசதந்திர ரீதியாக நகர்த்தியுள்ளது. எனவே அரசியலைப் பற்றிக் கதைக்க மாட்டோம்; அபிவிருத்தி பற்றி கதைப்போம் என்பது ஒடுக்குமுறைக்கான இன்னொரு பெயராகும்” (பொங்கு தமிழ் இணையம் - 23.7.2010)

அரசியல் பற்றி உதடு பிரிக்காமல், மொழிவளர்ச்சி, கலை இலக்கிய மேம்பாடு என்ற உச்சாடனம் செய்து, ஒடுக்கு முறைக்கு துணை போக ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளார்கள் என்பது தெளிவாய்ப் புலப்படுகிறது; அதுவும் இராசபக்ஷேக்கள் மீதான போர்க்குற்ற விசாரணை தீவிரப்பட்டுக் கொண்டிருக்கிற வேளையில் உலக அளவில் அதனை உடைக்க எடுக்கும் முயற்சிக்கு இந்த நேரத்தில் அறிவூஜீவிகளின் ஒன்றிப்பு தேவைப்படுகிறது. இந்த வகைச் செயல்பாட்டுக்குள் கண்டு கொள்ள முடியாதவகையில் ஒளிந்து கொண்டுள்ளது சிங்கள ராசதந்திரம்; அரசியல் மேலாண்மையில் இருப்பவர்கள் அறிவுச் சூழ்ச்சியிலும் மேலாண்மை கொண்டிருப்பார்கள். அந்தச் சிங்களர் ஒருபோதும் “மோட்டுச் சிங்களர்” (முரட்டுச் சிங்களர்) அல்ல; அடிமைச் சமூகமாக்கப்பட்ட நாம் தான் முட்டாள்களாக இருக்கிறோம்.

இந்திய அரசும் இலங்கை அரசும் கை கோர்த்து நடத்திய திரைப்பட விழாவைத் தோல்விகாணச் செய்த தமிழர் ஒற்றுமை நமக்கு ஒரு முன்மாதிரியாகும். இந்த ஒற்றுமை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டைப் புறக்கணிக்கவும் அவசியப்படும் தருணமிது. குறிப்பாக தமிழக எழுத்தாளர்களை, புலம்பெயர் எழுத்தாளர்களை அழைக்கிறோம். நடைபெறப் போகும் கொழும்பு மாநாட்டில் நிச்சயமாக நாங்கள் இல்லை என்போம்.

- பா.செயப்பிரகாசம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

10 முதல் குறுக்கு தெரு, பாரிநகர், பாக்கமுடையான் பட்டு, புதுச்சேரி 605 008

Pin It

ந்திய தேசத்தின் விடுதலைக்காக, தன் தேகத்தையே அர்பணித்த காந்தியடிகள் கொடூரமாக கொல்லப்பட்ட நிகழ்வுதான, விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் பயங்கரவாத நிகழ்வு. மூச்சுக்கு ஒரு முறை ''ஹே ராம்'' என்று உச்சரித்து, கடைசி வரை தீவிர இந்து மதப் பற்றாளராக வாழ்ந்த காந்தியடிகளை கொன்றொழித்த பயங்கரவாதத்தை செய்தது முஸ்லிம்கள் அல்ல.. ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

பன்மைத் தன்மை உடைய இந்தியத் திருநாட்டில், சமயச்சார்பின்மை என்னும் தத்துவம் தளைக்க தன் இறுதி மூச்சு உள்ள வரைப் போராடிய ஜவஹர்லால் நேருவின், அரசியல் வாரிசான இந்திரா காந்தியை சுட்டுப் பொசுக்கிய பயங்கரவாதத்தில் முஸ்லிம்களுக்குத் தொடர்பில்லை., ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

இந்திரா காந்தியின் அருமைப் புதல்வரும், இந்தியாவின் இளம் பிரதமருமான ராஜீவ் காந்தியை சிதறடித்த பயங்கரவாதத்திலும் முஸ்லிம்களுக்கு சம்மந்தமில்லை. ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

இந்துக்களின், கிறிஸ்தவர்களின், சீக்கியர்களின், பௌத்தர்களின் இன்ன பிற சமூகங்களின் வழிபாட்டுத் தலங்களையோ, வரலாற்றுச் சின்னங்களையோ, இடித்துத் தகர்த்த பயங்கரவாதத்தை, இந்தியாவின் எந்த ஒரு மூலையிலும் எந்த ஒரு முஸ்லிமும் செய்ததில்லை., ஆனாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

சுதந்திர இந்தியாவில் நடை பெற்ற மிகப்பெரும் வகுப்புக் கலவரங்கள், இனப்படுகொலைகள் எல்லாவற்றிலும் உயிரை இழந்து, உடைமை இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாய் அல்லல்பட்டபோதும், உணர்வை இழக்காமல் உரிமை கேட்டதனால்., முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!

madani_360இரத்தமும் சதையுமாக இந்திய மண்ணை நேசித்த முஸ்லிம்களின், இரத்தம் குடித்து தன் சதை வளர்க்கும் இழி செயலை, இந்தியாவின் அதிகார வர்க்கமும், ஊடகங்களும் வெளிப்படையாக செய்து வருகின்றன. முஸ்லிம்களை குதறுவதையே முழு நேர செயல் திட்டமாகக் கொண்டு இயங்கும் இந்துத்துவ சக்திகளுக்கு, ஜனநாயகத்தின் அத்தனைத் தூண்களும் அரணாய் நிற்கின்றன. நாடு முழுவதும் தொடரும் இந்த அக்கிரமத்திற்கு இரையாகிப் போன இரத்த சாட்சியாக இப்போது பெங்களூர் சிறைக் கொட்டடியில் அடைபட்டுக் கிடக்கிறார் அப்துல் நாசர் மதானி.

நாம் வாழும் காலத்தில், நம் கண் முன்னாலேயே ஒரு மிகப்பெரும் அக்கிரமம் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. சட்டம் அதன் கயமையைச் செய்கிறது. நீதிக்கு கல்லறை கட்டப்படுகிறது, எளிய மனிதர்களைச் சூறையாடும் அரச பயங்கரவாதம் தலை விரித்தாடுகிறது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இருபது சதவீதத்துக்கும் அதிகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் எழுச்சிக்காகவும், மறு மலர்ச்சிக்காகவும் போராடிய ஒற்றைக் காரணத்திற்காக ஒரு அப்பாவி மனிதரை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றன இந்தியாவின் அரசுகள்.

சட்டம், நீதி, ஜனநாயகம், இறையாண்மை என்றெல்லாம் வாய்கிழியப் பேசப்படுகின்ற ஒரு மண்ணில், அப்பட்டமாக மீறப் படுகின்றன மனித உரிமைகள். மாந்த நேயத்திற்கான அத்தனை இலக்கணங்களும் குழி தோண்டிப் புதைக்கப் படுகின்றன. ஜனநாயகத்தின் தூண்கள் அனைத்தும் ஈரமற்றப் பாறையாய் மாறி வருகின்றன. இதற்குப் பிறகும் சட்டம் பற்றியும், நீதி பற்றியும், ஜனநாயகத்தின் மாண்பைப் பற்றியும் பிதற்றுபவர்களை காணும்போது கடும் எரிச்சலும், கோபமும் தான் வருகிறது.

1992 டிசம்பர் 6 - இல் பாபர் மஸ்ஜிதை இடித்தார்கள். 450 ஆண்டு கால வரலாற்றுச் சின்னத்தை, முஸ்லிம்களின் புனிதமிக்க வழிபாட்டுத் தலத்தை அநீதியான முறையில் தகர்த்து எறிந்தார்கள். எப்படியாவது தங்களின் பள்ளிவாசல் காப்பாற்றப்பட்டு விடும் என்று கடைசி வரை நம்பியிருந்த முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்டார்கள். இந்த நாட்டின் மதிப்பு மிகுந்த நீதிமன்றத்தையும், ராணுவத்தையும், போலீசையும், ஓட்டுப் பொறுக்கி அரசியல் வாதிகளையும் நம்பி, நம்பி ஏமாந்து போனது முஸ்லிம் சமூகம்.

அவநம்பிக்கை மிகுந்த நிலையில், தமது இருப்பு குறித்த பாதுகாப்பின்மையும், எதிர்காலம் குறித்த அச்சமும் முஸ்லிம்களை வாட்டத் தொடங்கியது. தமக்கான பாதுகாப்பை தாமே உறுதி செய்து கொள்ளும் வகையில் முஸ்லிம் சமூகத்தின் உள்ளிருந்து உரிமைக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. அப்படி நாடு முழுவதும், ஜனநாயகப் பாதையில் நின்று உரிமை கேட்பதற்காக வெடித்து முளைத்த விதைகளில் ஒருவர்தான் அப்துல் நாசர் மதானி.

அடக்குமுறைகளுக்கு எதிரான கர்ஜனை, எவருக்கும் எதற்கும் அடங்காத கம்பீரம், நெருப்பை உமிழும் உரை வீச்சு, சமுதாய மறுமலர்ச்சியே உயிர் மூச்சு என்று தனிப்பெரும் அடையாளத்துடன் கேரள அரசியல் வானில் வலம் வந்தவர் அவர். அதிகாரத்தை நோக்கிய உண்மையின் குரலாக, ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்தவர் அவர். கொள்கைச் சமரசமற்ற அவரது அரசியல் நிலைப்பாடுகளும், இந்துத்துவ எதிர்ப்பில் அவர் காட்டிய உறுதிப்பாடும்தான் அவரை இன்று இந்த நிலைக்குத் தள்ளி இருக்கிறது.

கேரளாவின் கொல்லம் மாவட்டம் சாஸ்தான் கோட்டையைச் சார்ந்த அப்துஸ் சமத் மாஸ்டர், அஸ்மா பீவி தம்பதியருக்கு 1965 ஜனவரி 18 - இல், மூத்த மகனாக பிறந்தார் மதானி. பள்ளித் தலைமை ஆசிரியரான மதானியின் தந்தை, அவரை மார்க்க அறிவும் நல்லொழுக்கமும் உடைய பிள்ளையாக வளர்த்து எடுத்தார். பள்ளிக் கல்விக்குப் பின் கொல்லத்தில் உள்ள 'மஅதனுல் உலூம்' அரபிக் கல்லூரியில் இணைந்து இஸ்லாமிய மார்க்க அறிஞராக பரிணாமம் பெற்றார் மதானி. அந்தக் கல்லூரியில் வழங்கப்பட்ட 'மஅதனி' என்ற பட்டமே பின்னாளில் அவரது அடையாளத்துக்குரிய பெயராக மாறிப் போனது.

இளம் மார்க்கப் பிரச்சாரகராக தன் பயணத்தைத் தொடங்கிய மதானி, அனல் பறக்கும் உரை வீச்சுக்களால் அனைவரையும் ஈர்த்தார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதியது. கேரளாவின் சொற்பொழிவு மேடைகளில் தவிர்க்க முடியாத தனிப்பெரும் பேச்சாளர் ஆனார் மதானி. 1990 களில் இந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு அரசியல் நிகழ்வுகள் மதானியைப் பாதித்தது. மண்டல் கமிசன் அறிக்கைக்கு நேர்ந்த கதியும், அத்வானியின் தலைமையில் அரங்கேறிய இந்துத்துவ எழுச்சியும், முஸ்லிம்களை அச்சுறுத்தும் ஆர். எஸ்.எஸ் கும்பலின் தீவிரவாத நடவடிக்கையும் கண்டு கொதித்து எழுந்தார் மதானி.

ஆர்.எஸ்.எஸ்.க்கு அரசியல் தளத்தில் நின்று பதிலடி கொடுக்க ஐ.எஸ்.எஸ். [இஸ்லாமிக் சேவா சங்] என்ற அமைப்பை, 1990 ஆம் ஆண்டு தொடங்கினார். 1992 டிசம்பர் 6 - இல் பாபர் மஸ்ஜித் இடிக்கப் பட்டபோது மதானியின் ஐ.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கையைக் கண்டித்து சூறாவளியாய் சுழன்றார் மதானி. பாபர் மஸ்ஜிதை இடித்த பயங்கரவாதிகளையும், அதற்குத் துணை நின்ற காங்கிரசையும் நெருப்பு உரைகளால் காய்ச்சி எடுத்தார்.

மதானியின் உரை வீச்சில் பொசுங்கிப்போன இந்துத்துவ சக்திகள், அவரை நேர்மையாக எதிர்கொள்ள முடியாமல் தீர்த்துக்கட்டும் சதியில் இறங்கினர். ஆதரவற்ற அனாதைக் குழந்தைகளை அரவணைக்கும் வகையில் அன்வார்சேரியில் மதானி உருவாக்கிய ஜாமியா அன்வார் என்னும் கலாசாலையில் இருந்து இரவு அவர் வெளியே வரும்போது, ஆர். எஸ்.எஸ் கும்பல் அவர் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியது. 1992 இல் நடைபெற்ற அந்த தாக்குதலில் தனது ஒற்றைக் காலை இழந்து ஊனமுற்ற மதானி, அதன் பின்னர் சக்கர நாற்காலியில் தவழ்ந்து கொண்டே சரித்திரம் படைத்தார்.

இந்தியச் சூழலில் முஸ்லிம்கள் தனித்து நின்று போராடுவதன் மூலம் இலக்கை அடைய முடியாது என்ற உண்மையை உணrந்து தெளிந்த மதானி, 1993 இல் மக்கள் ஜனநாயகக் கட்சி [PDP] என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கினார்.  தாழ்த்தப்பட்ட தலித் மக்களும், ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களும் ஓரணியில் ஒன்றிணைந்து அரசியல் சக்தியாக எழுச்சி பெறும் வியூகத்தை வகுத்தார். தலித் சமூகத்தை சார்ந்த ஒருவரை கேரளாவின் முதலமைச்சராக மாற்றியே தீருவேன் என்று சூளுரைத்தார். குருவாயூர், ஒற்றப்பாலம், திரூரங்காடி இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு கேரளாவின் mainstream அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்தார்.

முஸ்லிம்களோடு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களையும் அணி திரட்டும் மதானியின் தொலை நோக்குப் பார்வையைக் கண்டு கேரளாவின் அரசியல் கட்சிகளுக்கு நடுக்கம் வந்தது. அரசியல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திக் கொண்டு முன்னேறிக் கொண்டிருந்த மதானி 1998 மார்ச் 31 - அன்றுகோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

மதானி கோவை சிறையில் இருந்தபோது அவர் அனுபவித்த ரணங்கள் வார்த்தைகளில் அடங்காதவை. விசாரணைக் கைதியாக சிறையில் பூட்டப்பட்டு கசக்கி எறியப்பட்டார். 105 கிலோ எடை கொண்ட கனத்த தேகத்துடன், 33 வயதே நிரம்பிய துடிப்பு மிக்க இளைஞராக சிறைக்குச் சென்ற அவர் அதிகாரத்தின் கொடும் பசிக்கு இரையானார். நாளாக நாளாக அவரது உடல் எடை குறைந்து இறுதியில் 45 கிலோ ஆனது. உலகத்தில் உள்ள அத்தனை வியாதிகளும் குடியிருக்கும் நோய்களின் கூடாரமாக மாறி அவரது உடல் நலியுற்றது. ஒரு விசாரணைக் கைதிக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச உரிமைகள் கூட மதானிக்கு மறுக்கப்பட்டன.

1200 க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டு ஒருவர்கூட அவருக்கு எதிராக சாட்சி சொல்லாத நிலையிலும் அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன. அவரது பாட்டி இறந்தபோது பரோலில் சென்று பட்டியின் உடலை பார்த்து வருவதற்கு கூட அவருக்கு அனுமதி தரப்படவில்லை. நீண்ட நாள் ஆகிவிட்டதால் பழுதடைந்த தனது செயற்கை காலை புதுப்பிக்கவும், சிகிச்சைக்காகவும் வேண்டி மதானி அனுப்பிய மனுக்கள் குப்பைக் கூடையில் எறியப்பட்டன. அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா மதானி விசயத்தில் மிக மூர்கத்தனமாக நடந்து கொண்டார்.

மதானியை விடுதலை செய்யக் கோரி தமிழகத்திலும், கேரளத்திலும் மிகப்பெரும் மக்கள் இயக்கங்கள் நடைபெற்றன. 2006 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும், அப்பாவி சிறைவாசிகளின் விடுதலையை முன்னிலைப்படுத்தி த.மு.மு.க போன்ற தமிழக முஸ்லிம் அமைப்புகள் தேர்தலை எதிர்கொண்ட விதமும், மதானி உள்ளிட்ட அப்பாவிகளின் விடுதலைக்கு வழிவகுத்தது.

கலைஞர் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற உடன் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் குறித்த கோரிக்கைகள் கனிவோடு பரிசீலிக்கப்பட்டன. மதானிக்கு மருத்துவ சிகிச்சை கிடைத்தது. பின்னர் குற்றம் நிரூபிக்கப்படாமல் ஒன்பதரை ஆண்டுகால சிறை வாழ்கையை முடித்துக் கொண்டு 2007 ஆகஸ்ட் 1 - இல் விடுதலையாகி வெளியே வந்தார் மதானி. பரபரப்பான அவரது அரசியல் பயணத்தை முடக்கி, கம்பீரமான அவரது தோற்றத்தை ஒடுக்கி, இயங்க முடியாத நிலைக்கு அவரைத் தள்ளிய பிறகு குற்றமற்றவர் என்று விடுதலை செய்தது நீதிமன்றம்.

விடுதலைக்குப் பின் மதானியைத் தவிர வேறு யாராக இருந்தாலும், நலிந்த தன் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு பொது வாழ்வுக்கு ஓய்வு கொடுத்திருப்பார்கள். வெகு மக்களிடம் தன் மீது ஏற்பட்டிருக்கும் அனுதாபத்தை அரசியல் லாபத்திற்கான அறுவடையாகக் கருதி காங்கிரசோடு பேரம் நடத்தி இருப்பார்கள். முஸ்லிம்களுக்கான பிரச்சனைகளைப் பேசியதனால் தானே வம்பு ; பேசாமல் 'பதவி அரசியல்' நடத்துவோம் என்று கொள்கை அரசியலை கை கழுவி இருப்பார்கள்.

ஆனால் அப்படி எந்த முடிவுக்கும் வரவில்லை மதானி. முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அரசியல் எழுச்சிக்கான தனது பயணத்தை முன்பை விடவும் வேகமாகக் கூர் தீட்டினார்.  பேச்சில் இருந்த வீச்சைக் குறைத்து அதை செயலில் காட்டினார்.  தன் உடல் நிலையைப் புறம் தள்ளி விட்டு கேரளா முழுவதும் வலம் வந்தார். ஒன்பதரை ஆண்டுகாலம் முடங்கிக் கிடந்த தனது தொண்டர்களை மீண்டும் தட்டி எழுப்பினார்.

மதானியின் கதை முடிந்து விட்டது என்று கணக்குப் போட்டு காய் நகர்த்தியவர்களுக்கு, அவரது இத்தகைய மீள் எழுச்சி எரிச்சலைத் தந்தது. ஏற்கனவே கோவைக் குண்டுவெடிப்பு வழக்கில் அவரைச் சிக்கவைத்து குளிர் காய்ந்தவர்கள் மீண்டும் அதே பாணியில் அவரைக் குதறத் தொடக்கி உள்ளனர்.

****

2008 ஆம் ஆண்டு ஜூலை 25 - ஆம் நாள் பெங்களூரில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் மதானி 31- ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, கர்நாடக மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் மதானி சேர்க்கப்பட்டுள்ள விதத்தையும், வழக்கின் போக்கையும் பார்க்கின்ற போது , மதானியை ஒரேயடியாக ஒழித்துக்கட்ட மிகப்பெரிய சதி வலைகள் பின்னப்படுவதை அறிய முடிகின்றது.

கேரளாவைச் சார்ந்த 'தடியன்டவிட' நசீர் என்பவர் 2009 ஆம் ஆண்டு, பங்களாதேசத்தில் வைத்து அங்குள்ள ரைபிள் படையினரால் கைது செய்யப் பட்டார். லஷ்கரே தொய்பா தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்ட நசீர், கொடுத்ததாக சொல்லப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் இப்போது மதானி வேட்டையாடப்படுகிறார்.

2005 ஆம் ஆண்டு கேரள மாநிலம் கலமச்சேரியில், தமிழக அரசுப் பேருந்து எரிக்கப்பட்ட வழக்கில், 'தடியண்டவிட' நசீரிடம் கேரள போலீசார் விசாரித்ததாகவும், விசாரணையில், ''தமிழக அரசுப் பேருந்தை எரிக்கச் சொன்னது மதானியின் மனைவி சூஃபியாதான் '' என்று நசீர் சொன்னதாகவும் கூறி 2009 டிசம்பரில் சூஃபியா கைது செய்யப்பட்டு எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டார். அது தனிக் கதை.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில், பெங்களூர் மாஜிஸ்த்ரேட் நீதிமன்றத்தில் மதானி மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி, மதானியின் சார்பில் அவரது வழக்கறிஞர் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவுக்கு எதிராக கர்நாடக காவல் துறையினர் பதில் மனுத் தாக்கல் செய்தனர். 

 57 பக்கங்கள் கொண்ட அந்த பதில் மனுவில் காவல்துறை கையாண்டிருக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் விஷம் தோய்ந்தவையாக இருக்கின்றன. மதானிக்கு எதிரான சதியின் முழுப் பரிணாமமும், முஸ்லிம்கள் மீதான அதிகார வர்க்கத்தின் வெறுப்புணர்வும் அதில் அப்பட்டமாகத் தெரிகிறது.

'' பெங்களூரில் குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன் மதானியும், கைது செய்யப்பட்ட நசீர் உள்பட 22 குற்றவாளிகளும், கேரள மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள குடகு நகரில் ஒன்று கூடி, அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் வைத்து சதித்திட்டம் வகுத்ததாகவும், இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்பது அவர்களது திட்டம் என்றும், இதற்காக இந்தியாவில் வன்முறையைத் தூண்டி விட்டு, மத்திய மாநில அரசுகளுக்கு இடையூறு செய்வதே அவர்களின் நோக்கம் என்றும் போலீஸ் கூறியுள்ளது.

மேலும், நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வெடி பொருட்களை ரகசியமாக கேரளத்துக்கு கடத்தி, அங்கு வெடிகுண்டைத் தயாரித்துள்ளனர் என்றும், இவ்வாறு தயாரிக்கப்பட்ட குண்டுகளை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிக்க வைத்து மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளார்'' என்றும் நீளுகிறது போலீஸ் அறிக்கை.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து மதானி குற்றமற்றவராக விடுவிக்கப் பட்டாலும், மதானியை தீவிரவாதியாக சித்தரிக்கும் ஆளும் வர்க்கத்தின் கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதையே போலீசின் இந்த அறிக்கை எடுத்துக் காட்டுகிறது.

சிறையிலிருந்து வெளி வந்த பின்னர் மதானியின் முழு செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் மத்திய மாநில புலனாய்வுக் குழுவினரால் கண்காணிக்கப்படுகிறது. அவரது சுற்றுப்பயணம் குறித்த முழு தகவலும் கேரள காவல் துறையிடம் இருக்கிறது.அப்படிப்பட்ட சூழ்நிலையில், 24 மணி நேரமும் கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்கும் ஒருவர், எப்படி குண்டு வெடிப்புச் சதியில் ஈடுபட முடியும்? குடகு நகரில் ரகசியமாகக் கூடி திட்டம் தீட்ட முடியும்? என்றெல்லாம் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் ஜனநாயக நாட்டில் விடை இல்லை.

நசீர் கைது செய்யப்பட்டு சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு, '''மதானிக்கும் குண்டுவெடிப்பில் பங்குண்டு'' என்று அவர் வாக்குமூலம் அளித்ததாகக் கூறி மதானி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் காவல் துறையின் இந்த மோசடித்தனத்தை, கொச்சி உயர் நீதி மன்றத்தில் இருந்து வெளியே வரும் போது பத்திரிகையாளர்களை சந்தித்த நசீர் பகிரங்கமாக அம்பலப் படுத்தினார். ''பெங்களூர் குண்டுவெடிப்பில் மதானிக்கு தொடர்பு உண்டு என்று தான் கூறவே இல்லை'' என்று உறுதியாக மறுத்தார். ஆனாலும் காவல் துறையும், நீதி மன்றமும் அதை எல்லாம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. மதானியை சூறையாட வேண்டும் என்று அதிகார வர்க்கம் முடிவு செய்து விட்ட பிறகு எந்த உண்மையைத் தான் அவர்களால் ஏற்க முடியும்?

இந்தியாவை இஸ்லாமிய நாடாக்க சதி நடக்கிறது என்று கர்நாடக பாஜக அரசின் காவல்துறை சொன்னதைப் போலவே, கேரளாவின் கம்யூனிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தனும் வாந்தி எடுத்தார். முஸ்லிம்களை ஒடுக்குவதில் இந்துத்துவத்திற்கும், இடதுசாரிகளுக்கும் இடையே இருக்கும் கள்ள உறவு இதன் மூலம் அம்பலத்திற்கு வருகிறது.

குற்றமே செய்யாமல், விசாரணைக் கைதியாக கோவை சிறையில் மதானி இழந்த ஒன்பதரை ஆண்டுகளுக்கு, பதில் சொல்ல வக்கற்றவர்கள், தற்போது மதானி விசயத்தில் 'சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும், அவர் குற்றவாளியா இல்லையா என்பதை சட்டம் முடிவு செய்யட்டும்' என்றும் கூறி தப்பிக்க முயலுகின்றனர்.

மதானி கைது செய்யப்பட்டுள்ள 'அன்லாஃபுல் ஆக்டிவிட்டீஸ் பிரிவென்சன் நடைமுறைச் சட்டம் - 2008 ' என்ற சட்டம் எந்த வகையிலும் நீதி வழங்காது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இதே போன்ற கறுப்புச் சட்டங்களால் ஏற்கனவே முஸ்லிம்கள் பட்ட காயங்களும், அதனால் ஏற்பட்ட ரணங்களும் இன்னும் ஆறாத வடுவாய் இருக்கிறது. இந்தக் கொடுஞ்சட்டத்தின் படி, சப் இன்ஸ்பெக்டர் ரேன்கிலுள்ள எந்த ஒரு அதிகாரியும், நாட்டில் யாரையும் சந்தேகத்தின் பேரில் குற்றவாளியாக்க முடியும். அதன் பின்னர் 150 நாட்கள் வரை ஜாமீனில்லாமல் சிறையில் அடைக்கலாம். குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் கோரி விண்ணப்பித்தால் நீதி மன்றமும் எதுவும் செய்ய இயலாது. ஏனெனில் நீதிமன்றத்தின் எந்த ஒரு அனுமதியும் இன்றி 150 நாட்கள் வரை சிறையில் அடைக்க காவல்துறைக்கு சட்ட ரீதியான அதிகாரமுண்டு.

வழக்கமான சட்ட நடைமுறைகளின்படி, சாதாரண நிலையில் ஒருவரை கைது செய்தால், அவரை 24 மணி நேரத்துக்குள் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும். நீதி மன்றம் அவரை 14 நாட்கள் ரிமாண்ட் செய்யலாம். தொடர்ந்து பொறுப்பில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றால் 15 ஆம் நாள் மீண்டும் நீதி மன்றத்தை அணுக வேண்டும்.

குற்றவாளி என்று நிறுவப்படும் வரை, ஒரு குடிமகனுக்கு உரிய அடிப்படை உரிமைகளைக் கருத்தில் கொண்டே சட்டத்தில் இவ்வாறெல்லாம் வழி வகை செய்யப் பட்டுள்ளது. ஆனால், மக்களுக்கு சட்டம் வழங்கியுள்ள இத்தகைய உரிமைகளை காலி செய்து அநீதி இழைக்கவே, அரசு அதிகாரம் புதிய கறுப்புச் சட்டங்களை இயற்றி வைத்துள்ளது. அப்படி என்றால் சட்டம் யாருடைய வழியில் செல்கிறது?

வழக்கு விசாரணை எல்லாம் முடிந்து, குற்றம் சற்றப்பட்டவர் நிரபராதி என்று விடுவிக்கப் பட்டால், சட்டம் போனது எந்த வழியில் என்று மானமுள்ள எவராவது விடையளிப்பார்களா?

அச்சுதானந்தனும், பிரணாய் விஜயனும், ரமேஷ் சென்னிதாலாவும், குஞ்சாலிக் குட்டியும் கூறுகின்ற, சட்டத்தின் யோக்கியதை இவ்வளவுதானே.. இவர்களுக்கெல்லாம் கொஞ்சமேனும் மானமும், சூடு உணர்ச்சியும் இருந்தால் ''சட்டம் சட்டத்தின் பாதையில் செல்லட்டும்'' என்று கூச்சமின்றி கூறுவார்களா?

மதானி விசயத்தில் யாரைக் கேட்டாலும் 'சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்' என்று கூறி சட்டத்தைக் கை காட்டி விட்டு பதுங்கி விடுகின்றனர். இந்தச் சட்டம் என்றைக்குத்தான் முஸ்லிம்களுக்கு நீதியை வழங்கி இருக்கிறது? முஸ்லிம்கள் என்றாலே சட்டம் ஒரு வழியிலும், நீதி வேறு வழியிலும் அல்லவா செல்கிறது...  இங்கே சங்கராச்சாரிக்கும், அப்துல் நாசர் மதானிக்கும் ஒரே சட்டம்தான்... ஆனால் நீதி?

சங்கரமடப் பூசாரி சங்கர ராமனை கூலிப்படையை ஏவி கொலை செய்த வழக்கில் சங்கராச்சாரிக்கு, குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பே, சதிக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என பிணை கொடுக்கிறது நீதி மன்றம். விடுமுறை நாளில் கூட சங்கராசாரிக்காக திறந்தன நீதிமன்றத்தின் கதவுகள். சுவாமிகளை சிறையில் அடைக்காமல் நீதிபதிகளின் குடியிருப்பிலேயே காவலில் வைக்கலாமே என்று யோசனை சொன்னார் ஒரு நீதிபதி. சிறையில் மலம் கழிக்க வாழை இலை கொடுக்கும் அளவுக்கு சங்கராசாரிக்காக வளைந்து கொடுக்கிறது சட்டம். ஒரு குற்றவாளிக்கு வழங்கப்பட்டது நீதி... ஆனால் குற்றமற்ற மதானிக்கு?

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆயுள் தண்டனை; அல் உம்மாவுக்குத் தடை.. ஆனால் குண்டுவெடிப்புக்கு காரணமாக அமைந்த, 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட கோவை கலவரத்தை, முன்னின்று நிகழ்த்திய இந்துத்துவக் குண்டர்களுக்கும், முஸ்லிம்களை சுட்டுத்தள்ளிய காவல் துறையினருக்கும் தடையுமில்லை, தண்டனையுமில்லை!

பழனி பாபாவின் ஜிகாத் கமிட்டிக்குத் தடை.. பழனி பாபாவைக் கொன்றவர்களுக்கோ விடுதலை!

இஸ்லாமிய மாணவர் அமைப்பான 'சிமி' க்குத் தடை.. ஆனால் சிமியின் பெயரால் இந்தியா முழுவதும் மிகப்பெரிய குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய ஆர் எஸ் எஸ்ஸுக்கு சகல சுதந்திரம்!

மாலேகான், புனே, அஜ்மீர், ஹைதராபாத், கோவா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட அபினவ் பாரத், சனாதன் சன்ஸ்தான், இந்து ஜாக்ருதி சமிதி ஆகிய இந்துத்துவ தீவிரவாதஅமைப்புகளையும், அவற்றை பல்வேறு பெயர்களில் இயக்கிக் கொண்டிருக்கும் மூல அமைப்பான ஆர் எஸ் எஸ்ஸையும் தடை செய்ய அரசுக்குத் துணிவில்லை.

குண்டுவெடிப்புகளில் ஆர் எஸ் எஸ்ஸுக்கு தொடர்பு இருப்பதற்கான அனைத்து வகையான ஆதாரங்களும், வீடியோ காட்சிகளும் கிடைத்த பிறகும், ஹெட்லைன்ஸ் டுடே , தெஹல்கா போன்ற பெரிய ஊடகங்கள் அதை அம்பலப் படுத்திய பிறகும், ஆர் எஸ் எஸ் தலைமையகத்தை சோதனை செய்யவோ, ஆர் எஸ் எஸ் தலைவர்களை விசாரணைக்கு அழைக்கவோ துப்பில்லாத தொடை நடுங்கி அரசுகள், மதானியைக் குதறுவதில் முனைப்புக் காட்டுகின்றன.

நந்திகத்தில் உள்ள ஆர் எஸ் எஸ் ஊழியர் வீட்டில் குண்டு வெடிப்பு; கான்பூரில் பஜ்ரங்தள் நிர்வாகி வீட்டில் குண்டு வெடிப்பு; தென்காசி ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் குண்டு வெடிப்பு, என... ஆர் எஸ் எஸ் காரர்கள், குண்டுகளை தயாரித்துக் கொண்டிருக்கும் போதே  வெடித்து சிதறிய குண்டுகள் ஏராளம், தாராளம்... இப்படி, பட்டவர்த்தனமாக ஆர் எஸ் எஸ்ஸின் பயங்கரவாதம் அம்பலப்பட்ட பிறகும், மதானி வெடிகுண்டு தயாரித்து சப்ளை செய்தார் என்று கதை விடுகிறது காவல்துறை.

2006 - லிருந்து நடைபெற்றுவரும் ஏழு மிகப்பெரிய குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர் எஸ் எஸ்ஸின் கள்ளக் குழந்தையான அபினவ் பாரத்துடன், உறவு வைத்துள்ள பல ராணுவ அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரைப் பற்றிய விபரங்கள், புலன் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த பிறகும், அவர்களில் எவரும் விசாரணைக்கு அழைக்கப் படுவதில்லை. 'தடியன்டவிட' நசீரை தேடிப்பிடித்து, நோண்டி நொங்கெடுத்தவர்களுக்கு,  இந்த இந்துத்துவ அதிகாரிகளெல்லாம் கண்ணில் தெரிவதில்லை.

பெங்களூர் குண்டுவெடிப்பில் ஒருவர் பலியான வழக்கில், மதானியை சிக்க வைத்து சிறை பிடித்துள்ளவர்கள்,  குஜராத்தில் மூவாயிரம் முஸ்லிம்களைக் கொன்று நர வேட்டையாடிய நரேந்திர மோடியை,  அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்க்கின்றனர்.

போபாலில் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்த அமெரிக்கப் பயங்கரவாதி ஆண்டர்சனை விமானத்தில் ஏற்றி தப்பி ஓடச் செய்து விட்டு, செத்துப் போன நரசிம்ம ராவ் மீது பழிபோடுகின்றனர். மதானியை விரைவாக ஒப்படைக்காத கேரள அரசின் மீது, கர்நாடக காவல்துறைக்கு வந்த கோபம், ஆண்டர்சனை ஒப்படைக்காத அமெரிக்கா மீது வருவதில்லை.

பாபர் மஸ்ஜித் இடிப்பில் மிக முக்கிய குற்றவாளிகளாக லிபரான் கமிஷனால் அடையாளப்படுத்தப்பட்ட அத்வானி, வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி போன்ற 68 குற்றவாளிகளில் எவர் மீதும் நடவடிக்கை இல்லை. 8 கோடி ரூபாய் மக்கள் வரிப் பணத்தை வாரி இறைத்து, 17 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டு , 1000 பக்கங்களில் சமர்பிக்கப் பட்ட லிபரான் அறிக்கை, இப்போது எந்தக் குப்பைத் தொட்டியில் கிடக்கிறதோ தெரியவில்லை.

 பாபர் மஸ்ஜித் இடிப்புக்குப் பின், மும்பையில் நடைபெற்ற மிகப்பெரும் வகுப்புக் கலவரங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த குற்றவாளி என, நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா கமிஷனால் அறிவிக்கப்பட்ட, மும்பை பயங்கரவாதி பால்தாக்கரே மீது இதுவரை எந்தச் சட்டமும் பாயவில்லை.

சந்தேகத்தின் அடிப்படையிலும், புனையப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையிலும் முஸ்லிம்களை வேட்டையாடும் காவல் துறைக்கு, அரசால் நியமிக்கப் பட்ட விசாரணை ஆணையத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர்களை கைது செய்ய துணிவில்லை.

பன்முகத் தன்மை உடைய இந்தியாவின் அரசியல் சாசன சட்டத்திற்கும், மதச் சார்பின்மைக்கும் எதிராக, மும்பையில் வட இந்தியர்களை, குறிப்பாக பீகார் மாநில எளிய மக்களை விரட்டி விரட்டி வேட்டையாடுகிறது நவ நிர்மான் சேனா. 'என்னை கைது செய்தால் மும்பையே பற்றி எரியும்' என்று பகிரங்கமாக கொக்கரிக்கும் ராஜ் தாக்கரேக்களெல்லாம் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்களாகக் கருதப்படுவதில்லை.

48 கிருமினல் வழக்குகளில் தொடர்புடைய்ய ஆகப் பெரிய குற்றவாளி ஸ்ரீ ராம்சேனா பிரமோத் முத்தலிக் மீது தடாவும் இல்லை, பொடாவும் இல்லை.பெரும் தொகையை பேரம் பேசி கலவரம் செய்யும் புது வகை பயங்கரவாதியான முத்தலிக் மீது இந்தியாவின் பாதுகாப்புச் சட்டங்கள் பாய்வதில்லை.

ஸ்ரீராம் சேனாவைத் தொடங்குவதற்கு முன் முதாலிக் பஜ்ரங்தளத்தில் இருக்கும்போதே பல்வேறு வழக்குகளில் சிக்கிய பின்னணி கொண்டவன்.அப்படி இருந்தும் அவர்களால் எந்தத் தடையும் இன்றி அமைப்பு நிறுவ முடிகிறது; சுதந்திரமாக இயங்க முடிகிறது. பெங்களூர் குண்டுவெடிப்பில் ஸ்ரீராம் சேனாவின் கூலிப் படைக்குத் தொடர்பு உண்டு என்று ஊடகங்கள் உண்மையை உரைத்த பிறகும், அந்தக் கோணத்தில் விசாரணையை முடுக்கி விடாமல், கேரளாவுக்குச் சென்று மதானியைக் கொத்தி வந்துள்ளது கர்நாடக பாஜக அரசு...

***

மதானியின் விசயத்தில் நடப்பவை அனைத்தும் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பது நன்கு தெரிந்த பிறகும், அவர் குற்றம் புரியாத அப்பாவி என்பது புரிந்த பிறகும், கேரளாவின் அரசியல் கட்சிகள் அவரை வெறுப்பது ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை. மதானியின் கைது விவகாரத்தில் கேரளாவில் பாஜகவும், காங்கிரசும், கம்யுனிஸ்ட்டும், முஸ்லிம் லீக்கும் ஓரணியில் நின்று முழங்குகின்றன. மதானி ஒழிக்கப்பட்டால் தான் தாங்கள் நிம்மதியாக அரசியல் நடத்த முடியும் என்று எல்லா கட்சிகளும் எண்ணுகின்றன.

மதானியை உலவ விட்டால் அவர் முஸ்லிம்களை அணி திரட்டுவார்; கேள்வி கேட்கும் படி உசுப்பி விடுவார்; அடிமை அரசியலுக்கு சாவு மணி அடித்து விடுவார் என்று, மதானியின் வலிமை குறித்த பயம் கேரள அரசியல் கட்சிகளை பிடித்தாட்டுகிறது. அதிகார ருசி கண்ட முஸ்லிம் லீக், பதவியை இழக்கவோ அல்லது வேறு ஒருவர் அந்த இடத்திற்கு வரவோ சிறிதும் அனுமதிக்காது. பதவி இல்லாமல் இருக்கவே முடியாது என்ற வெறி முற்றிய பிறகு எந்த இலக்கணங்களுக்கும் கட்டுப்பட மனம் வராது.

பாபர் மஸ்ஜித் இடிப்பில் இந்துத்துவ சக்திகளுக்கு பக்கத் துணையாக நின்ற, காங்கிரஸ் கட்சியின் நயவஞ்சகத்தனத்தைக் கண்டித்து, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று, முதுபெரும் முஸ்லிம் லீக் தலைவர் இப்ராகிம் சுலைமான் சேட் கர்ஜித்தபோது, முஸ்லிம் லீக்கின் பதவி வெறி பிடித்த கேரள தலைவர்கள்தான் அதற்கு முட்டுக் கட்டையாக நின்றனர். மனம் வெறுத்துப் போன சுலைமான் சேட், கொள்கை காக்கும் போராளியாக முஸ்லிம் லீக்கில் இருந்து வெளியேறி தேசிய லீக்கைத் தொடங்கும் நிலை வந்தது.

மதானி ஒழிந்தால் பாஜக வை விட அதிகமாக மகிழ்ச்சி அடையும் கட்சியாக முஸ்லிம் லீக் திகழ்கிறது. மதானியின் மீதான அடக்குமுறை அரங்கேறிக் கொண்டிருக்கும் போதே, கேரளாவில் பிற முஸ்லிம் அமைப்புகளான பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மீதும், ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் மீதும் அரச மற்றும் ஊடக பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது.

நியாயமான வழியில் நின்று, சமரசமற்ற முறையில், உயிரோட்டமான அரசியலை முன்னெடுக்க முனையும் முஸ்லிம் அமைப்புகளை முடக்கிப் போடுவதில் அதிகார வர்க்கம் குறியாய் இருக்கிறது. முஸ்லிம்களுக்கான தனித்த அரசியல் எழுச்சியை ஊடகங்கள் விரும்புவதுமில்லை, கண்டுகொள்வதுமில்லை.

 முஸ்லிம்களின் பிரச்சனைகளை முன்வைத்து ஜனநாயக வழியில் அரசியல் நடத்துகிறவர்களை அடிப்படைவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும், மதவெறியர்களாகவும் சித்தரிக்கின்ற போக்கு, நாடு விடுதலை பெற்ற நாள் முதல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது .

இநதிய முஸ்லிம்களுக்கான தனித்த அரசியல் இயக்கமான முஸ்லிம் லீக், பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானின் கட்சி என்றாகிவிட்ட நிலையில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரில், இநதிய முஸ்லிம்கள் தமது தனித்த அடையாளத்தோடு மீண்டும் அரசியல் நடத்தப் புறப்பட்டதை, அன்றைய ஆளும் காங்கிரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

இநதிய முஸ்லிம்களுக்கு தலைமை ஏற்க காயிதே மில்லத் துணிந்த போது, அவரை முடக்கிப் போடுவதற்கான எல்லா ஆயுதங்களையும் காங்கிரஸ் கட்சி கையில் எடுத்தது.

முதலில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்றொரு அமைப்பு உருவாகி விடாமல் தடுப்பதில் கவனம் செலுத்தியது; முஸ்லிம் லீக்கின் முதுபெரும் தலைவர்களின் வாயாலேயே ''முஸ்லிம் லீக் இனி நமக்கு வேண்டாம்'' என்று சொல்ல வைத்தது; முஸ்லிம் லீக்கை விட்டு வெளியேறி எங்களோடு இணைந்தால், உயர் பதவிகளைத் தருகிறோம் என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியது; காயிதே மில்லத் மசிய மாட்டார் என்று தெரிந்ததும், அபுல் கலாம் ஆசாத்தை முன்னிறுத்தி முஸ்லிம்களை வளைக்கப் பார்த்தது; காங்கிரசின் இத்தகைய எல்லா தந்திரங்களையும் தவிடு பொடியாக்கி விட்டு, இந்திய முஸ்லிம்களுக்குத் துணிச்சலாக தலைமை ஏற்றார் காயிதே மில்லத்.

அதன் பிறகு அவரை கண்காணிக்கத் தொடங்கியது இந்திய அரசு. தேச விரோத செயலில் அவரை சிக்க வைக்க ஏதேனும் வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கித் தவித்தது அரசு. காயிதே மில்லத் வெளிநாடு சென்ற போது, அவரது நடவடிக்கைகளை உளவு பார்க்க காங்கிரஸ் அரசு  காமராஜரை அனுப்பி வைத்ததாக வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது.

ஆனால், இன்றைக்கு முஸ்லிம் லீக்கையோ அல்லது முஸ்லிம் லீக் தலைவர்களையோ, ஆளும் வர்க்கம் அப்படிப் பார்ப்பது இல்லை. முஸ்லிம்களின் பிரச்சனைகளைப் பற்றி இன்றைய முஸ்லிம் லீக், காயிதே மில்லத்தைப் போல் பேசுவதில்லை. வகுப்பு வாதத்துக்கு எதிராக வீச்சோடு களமாடுவதில்லை.

அவர் தவறாக நினைத்து விடுவாரோ, இவர் தவறாக நினைத்து விடுவாரோ...அல்லது கூட்டணித் தலைமை கோபித்துக் கொள்ளுமோ என்று பல கணக்குப் போட்டு மென்மையான முறையில் அரசிய நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அது வெறுமனே பதவியை தக்க வைத்துக்கொள்கிற சுயநல அரசியல். ஆகையினால் இன்றைய முஸ்லிம் லீக்கை, ஆளும் வர்க்கமோ அல்லது ஊடகங்களோ கண்காணிப்பதுமில்லை; பிரச்சனைக்கு உரியவர்களாக கருதுவதுமில்லை.

அன்றைக்கு காயிதே மில்லத்தைப் போல், இன்றைக்கு கொள்கை சமரசமற்ற முறையில் யார் யாரெல்லாம் அரசியலை முன்னெடுக்கின்றர்களோ; போர்குணத்தோடு அமைப்பு நடத்துகிறார்களோ அவர்களின் மீதே, ஆளும் வர்க்கத்தின் பார்வையும் , ஊடகங்களின் பார்வையும் ஒரு சேரக் குவிகிறது. காயிதே மில்லத்தை தேச துரோகி என்றார்கள்; கண்காணித்தார்கள்; அவரது சகாக்களை அவரிடமிருந்து பிரித்து, அவரை பலவீனப் படுத்த முயன்றார்கள்; மிதமான அணுகுமுறை உள்ள மாற்றுத் தலைமையை முன்னிறுத்தினார்கள்.... இன்றைக்கும் அதே வழிமுறையை, அதே நடைமுறையை ஆளும் வர்க்கம் பின் பற்றி வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

அன்றைக்கு அரசோடு கூட்டுச் சேர்ந்து, காயிதே மில்லத்தை விமர்சித்த, சுயநலம் கொண்ட முஸ்லிம்களின் இடத்தை, இன்றைக்கு முஸ்லிம் லீக் பிடித்துக் கொண்டிருப்பது தான் காலத்தின் கோலம்.

மதானியையும், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவையும், ஜமாத்தே இஸ்லாமியையும் கேரளாவில் முடக்கிப் போடுவதற்கு, ஆளும் தரப்பு கையாளுகின்ற அத்தனை வழிமுறைகளையும் முஸ்லிம் லீக் ஆதரிக்கிறது. போர்க் குணமிக்க முஸ்லிம் அமைப்புகள் விசயத்தில் அரசும், காவல் துறையும், ஊடகங்களும் என்ன சொல்கிறார்களோ, அதை ஒரு வரி விடாமல் வார்த்தை விடாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளுகிற மனநிலைக்கு, பாரம்பரிய முஸ்லிம் தலைமை தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது.

***

மதானி கைது செய்யப் பட்ட போது, ஊடகங்கள் அதைக்கையாண்ட விதம் மிகவும் அருவருப்பானது. ஒரு குற்றவாளியை கர்நாடக அரசுக்கு கை மாற்றுவதில், கேரள அரசு தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தி விட்டதாக கேரள ஊடகங்கள் விஷத்தைக் கக்கின. தமிழ் நாட்டின் பிரதான ஊடகமான சன் தொலைக்காட்சியின் செய்தி சேனலில், மதானியைக் கொச்சைப் படுத்தும் வகையில் செய்தி வாசிக்கப் பட்டது.

தான் குற்றவாளி அல்ல என்ற போதும் இறைவனுக்கு அடுத்த படியாக நீதி மன்றத்தின் மீது தான் வைத்துள்ள மரியாதையின் காரணமாக, சரணடைய விரும்புவதாக அறிவித்தவர் மதானி. அப்படிப்பட்ட ஒருவரை, ''ஆம்புலன்ஸ் மூலம் தப்பி ஓட முயன்ற போது பிடிபட்டதாக'' சன் டிவி தலைப்புச் செய்தி சொன்னது. செய்தியின் உள்ளீடாக, ''மதானி கோவை குண்டு வெடிப்பு வழக்கில் எட்டு ஆண்டுகள் தண்டனைப் பெற்றவர்'' என்று சொல்லி வரலாற்றுத் திரிபு செய்தது. விசாரணை கைதியாக கோவை சிறையில் ஒன்பதரை ஆண்டுகளை இழந்து, குற்றமற்றவர் என்று விடுதலையான மதானியின் உண்மை முகத்தைக் காட்டுவதற்கு ஊடகங்களுக்கு மனமில்லை. மதானியைக் கொச்சைப்படுத்தும் போர்வையில், முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்திய சன் டிவிக்கு தமிழக முஸ்லிம்கள் உடனடி பதிலடி கொடுத்தனர். தமிழகம் முழுவதும் இருந்து கிளம்பிய எதிர்ப்பு அலைக்குப் பணிந்து,  தனது தவறை உணர்ந்ததாக வருந்தியது சன் டிவி.

இணைய தளங்களில் ஜெயமோகன் போன்ற இந்துத்துவ சிந்தனை உடைய இலக்கிய பயங்கரவாதிகள், மதானியை தீவிரவாதத்தின் ஊற்றாக சித்தரித்துக் கொண்டிருக்கின்றனர். இளம் தலை முறையினரின் களமாகத் திகழும் இணைய தளத்தில், முஸ்லிம் சமூகத்தின் போராளிகளை கொடூரமானவர்களாகவும்,  மனித குல விரோதிகளாகவும் காட்டுவதன் மூலம், முஸ்லிம்கள் மீதான வெறுப்பு வெகு மக்களிடம் பற்றிப் பரவுவதற்கு திட்டமிட்டு வேலை செய்கின்றனர்.

அறியாமையில் சிக்கி உழலும் முஸ்லிம் சமூகத்திற்கு, ஜெயமோகனையும் தெரியாது; இணைய தளமும் புரியாது என்பதுதான், உச்சக்கட்ட பரிதாபம்.

கருத்துருவாக்கம் செய்யக் கூடிய வலிமை மிகுந்த களமான ஊடகத்தில் முஸ்லிம்கள் இல்லை என்பதுதான்,  இத்தகைய அவலங்களுக்கு காரணமாக இருக்கிறது.

முஸ்லிம்கள் ஊடகத்தில் மட்டுமா இல்லை? அரசியலில் இல்லை; அதிகாரத்தில் இல்லை; கலை இலக்கியத்தில் இல்லை; பண்பாட்டுத் தளத்திலும் இல்லை...... இல்லை, இல்லை, இல்லவே இல்லை... இருப்பதெல்லாம் உள் முரண்பாடுகளும், குழுச் சண்டையும், கொள்கை மோதலும் தான்...

முஸ்லிம்களே! இனியும் இழப்பதற்கு எதுவுமில்லை; மீட்பதற்கோ ஆயிரம் இருக்கிறது.

[நன்றி: சமநிலைச் சமுதாயம்] 

- ஆளூர் ஷாநவாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

குர்ரம் பர்வேஸ்காஷ்மீரில் ஜூன் 11லிருந்து ஆகஸ்ட் 8க்குள் மட்டும் 51 பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. மக்கள் வீதியில் இறங்கி, துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினரை நோக்கிக் கல்லெறிவது என்பது பாகிஸ்தானின் தூண்டுதலால் நடப்பது என்று இந்திய அரசு பிரச்சாரம் செய்து வருகிறது. உண்மைகளை அறியும் நோக்கத்தோடு ‘காஷ்மீரில் நடப்பது என்ன?’ என்ற தலைப்பில் ஆகஸ்ட் 14 ஆம் நாள் லயோலா கல்லூரியில் பி.எட் அரங்கில் அரங்கக் கூட்டம் ஒன்றினை தகவல் தொழிற்நுட்பத் துறையினர் மற்றும் இளைஞர்கள் இணைந்து செயல்படும் Save Tamils Movement ஏற்பாடு செய்திருந்தது. சிறீநகரிலிருந்து வந்திருந்த “ஜம்மு காஷ்மீர் குடிமைச் சமூகங்களின் கூட்டமைப்பு” என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குர்ரம் பர்வேஸ் (Khurram Parvez, Program Coordinator of ‘Jammu and Kashmir Coalition of Civil Society’) அவர்களது உரை இது. 

காஷ்மீரிலும், ஈழத்திலும், உலகெங்கிலும் நடக்கும் மக்கள் புரட்சி வெல்க!

 காஷ்மீரிலிருந்து இந்திய இராணுவத்தை வெளியேற்றக் கோரி நேற்று (ஆகஸ்ட் 13, 2010) இங்கே (சென்னை) உள்நாட்டு அடக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கைதாகிய 52 தோழர்களுக்கு காஷ்மீர் மக்களின் சார்பாக நன்றியையும், வாழ்த்துக்களையும் முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கையில் நடக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் காஷ்மீர் மக்களாகிய நாங்கள் மிக நுட்பமாகக் கவனித்து வருகின்றோம். எங்களுக்கு எழுச்சியூட்டிய போராட்டங்களுள் தமிழீழ விடுதலைப் போராட்டமும் ஒன்று. கடந்த ஆண்டு தமிழ் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட துயரங்களுக்காக நாங்கள் மிகவும் வருந்துகின்றோம். இலங்கை அரசு ஒரு பிரபாகரனைக் கொன்று விடலாம். ஏன், இன்னும் பல பிரபாகரன்களைகூடக் கொன்று குவிக்கலாம். ஆனால் தமிழர்தம் விடுதலை வேட்கையைக் கொல்ல முடியாது. இது காஷ்மீரிகளுக்கும் பொருந்தும். இந்திய படையினர் காஷ்மீர் மக்களைக் கொன்று குவிக்கலாம். ஆனால், காஷ்மீர் மக்களின் விடுதலை வேட்கையைக் கொல்ல முடியாது.

அடிப்படையில் காஷ்மீர் மக்களின் போராட்டம் என்பது இருத்தலின் வெளிப்பாடு. காஷ்மீரிகளோ, தமிழர்களோ இம்மண்ணில் இருக்கும்வரை அவர்தம் விடுதலை வேட்கையும் உயிர் கொண்டிருக்கும். ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை தாகத்தை அழிப்பதற்கான வெடிகுண்டையோ துப்பாக்கி ரவையையோ ஒடுக்குமுறையாளர்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. காஷ்மீரிலும், ஈழத்திலும், உலகெங்கிலும் நடக்கும் மக்கள் புரட்சி வெல்க! 

ஜம்மு காஷ்மீரில் 1990க‌ளிலிருந்து, 70,000க்கும் அ‌திக‌மான‌ பொதும‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர், 8,000 பேர் காணாமல் போயுள்ள‌ன‌ர். காஷ்மீரில் உள்ள‌ 6,71,000 இராணுவ‌, துணை இராணுவ‌, காவ‌ல் துறையின‌ரின் பெரும் ப‌குதி காஷ்மீரின் ப‌ள்ள‌தாக்கு ப‌குதியில் உள்ள‌ பொதும‌க்க‌ளை க‌ட்டுப்ப‌டுத்துவ‌தில் தான் உள்ள‌தே த‌விர‌ எல்லை பாதுகாப்பில் அல்ல‌.  மேலும் இராணுவ‌ம் இன்று க‌ல்வி நிலைய‌ங்க‌ள், ம‌ருத்துவ‌ம‌னைக‌ள், வ‌ணிக‌ வ‌ளாக‌ங்க‌ள், உண‌வ‌க‌ங்க‌ள், விளையாட்டு மைதான‌ங்க‌ள், க‌டைவீதிக‌ள் என‌ எல்லா இட‌ங்க‌ளிலும் நீக்க‌ம‌ற‌ நிறைந்துள்ள‌து. 

த‌ற்போதைய‌ நிலையில் இராணுவ‌ம் ம‌ற்றும் துணை இராணுவ‌க் குழுக்க‌ள் எல்லாவ‌கையான‌ வ‌ன்முறைக‌ளையும் காஷ்மீர் ம‌க்க‌ள் மீது ந‌ட‌த்தி வ‌ருகின்ற‌து. பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, அடித்து துன்புறுத்தி சித்த‌ர‌வ‌தை செய்வது, க‌ண்ணிவெடி வைப்பது, காரணமேயின்றி கைது செய்வது, ம‌னித‌க் கேட‌ய‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்துவது, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவது, க‌ட்டாயப்‌ப‌டுத்தி வேலை வாங்குவது, காணாம‌ல் போக‌ச் செய்வது, கொலை செய்வது என அனைத்துவகையான வ‌ன்முறைக‌ளையும் இந்திய இராணுவ‌மும்  துணை இராணுவ‌க் குழுக்க‌ளும் ம‌க்க‌ள் மீது ந‌ட‌த்தி வ‌ருகின்ற‌து. இது போன்ற‌ கொடுமைக‌ளைச் செய்ப‌வ‌ர்க‌ளின் ப‌ட்டிய‌ல் மிக‌ நீண்ட‌ ஒன்று. 

ச‌ன‌வ‌ரி 2004லிருந்து ந‌வ‌ம்ப‌ர் 2008 வ‌ரையிலான‌ கால‌த்தில் ம‌ட்டும் (மும்பை தாக்குத‌லுக்கு முன்ன‌ர் வ‌ரை) 6588 பொதும‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். இந்த‌ கால‌க‌ட்ட‌த்தைத்தான் இந்தியாவும், பாகிசுதானும் அமைதிக் காலம் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டன. அமைதிக் காலம் தவிர்த்த போர்க் காலங்களில்தான் கொலைகளின் எண்ணிக்கை பெருமளவாக இருக்கும். துரதிஷ்டவசமாக, ஜம்மு காஷ்மீரில் அமைதிப் பேச்சுவார்த்தை என்பது  தண்டனை பயமில்லாமல் பொதுமக்களை கொலைசெய்யும் நடைமுறையை மறைப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. மக்கள் போராட்டங்களுக்கு எதிர்வினையாக அவர்களைக் கொலை செய்வது என்பது போராட்ட வடிவங்கள் மாறினாலும் குறையாமல் தொடர்கின்றது.

ஜம்மு காஷ்மீரில் வாழும் மக்கள் உலக அரசியல்களையும், தங்களைச் சுற்றி நடக்கும் பிராந்திய புவிசார் அரசியலையும் கருத்தில் கொண்டே தங்களது போராட்ட முறைகளைத் தீர்மானிக்கின்றனர். மாறி வரும் உலகச் சூழலில் பெரும் திரளான பொதுமக்கள் ஒன்று கூடி தங்களை ஒடுக்குகின்ற இந்திய அரசை எதிர்த்து அமைதியான ஆயுதமற்ற போராட்டங்களை நடத்துகின்றனர். ஆனால் அவர்களின் இந்த அமைதிவழிப் போராட்டத்திற்கு இந்திய அரசு ஆயுதப்படைகளைக் கொண்டு பதிலளிப்பதால், பொதுமக்கள் படுகாயங்கள் அடைவதும், உயிரிழப்பதுவும் மக்களின் வலியை தொடர்ந்து அதிகப்படுத்தி வருகின்றன.

kashmir-protest

 வன்முறை, அமைதிவழிப் போராட்டம் என்ற எந்த வகையில் மக்கள் போராடினாலும் இந்திய அரசு அதை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகின்றது. இதனால் மக்கள் தங்களது அதிருப்தியைக் காட்டுவதற்கான எல்லாக் கதவுகளும் அடைக்கப்படுகின்றன. ஆயுதம் தாங்கிய போராட்ட வழிகளிலிருந்து பெரும் திரளான மக்கள் ஒன்று கூடி ஆயுதம் இல்லாமல் போராடுவதை அரசு அங்கீகரிக்க மறுப்பதுடன் கொடூரமாக ஒடுக்குவது என்பது இந்திய அரசு இந்தப் பிரச்சனையை எவ்வாறு கையாளுகின்றது என்பதையும் காட்டுகின்றது.

தற்பொழுது நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்கள் இன்றைய அரசின் மீதான கோபம் மட்டுமல்ல, 1989லிருந்து காஷ்மீர் மக்களை இராணுவம் மற்றும் துணை இராணுவம் மூலம் சிறைபடுத்தி வைத்திருப்பதையும், அதற்கு துணை செய்யும் தொடர்ச்சியான வன்முறையையும்,1947 ஆம் ஆண்டிலிருந்து காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை கோரும் போராட்டத்தை நசுக்குவதையும் எதிர்ப்பதும் தான்.  இந்திய அரசு காஷ்மீர் பிரச்சனைக்கு புதுமையான தீர்வைத் தருவதாகக் கூறியுள்ளது. ஆனால் கடந்த கால சம்பவங்களை உற்று நோக்கினால், இந்தியாவின் அணுகுமுறை என்பது மேன்மேலும் இராணுவமயமாக்கல் என்பதாகவே இருந்துள்ளது. அரசியல் ரீதியாக மக்களையோ அல்லது சுதந்திரத்திற்காக போராடும் தலைமையையோ அரசு அணுகியதேயில்லை.  காஷ்மீர் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சுயநிர்ணய உரிமை குறித்து அரசு இது வரை பரிசீலித்தது கூட இல்லை. 

இந்திய அரசு எல்லா பிரச்சனைகளைப் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனக் கூறுகின்றது. ஆனால் மக்களின் விருப்பமான சுய நிர்ணய உரிமையைப் பற்றி மட்டும் பேசுவதே இல்லை. இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காஷ்மீர் ஒரு பிரச்சனை (problem) அல்ல, இது ஒரு சச்சரவான(conflict zone) பகுதி. இந்தியா காஷ்மீரை இராணுவமயப்படுத்துவதன் மூலம் காஷ்மீர் நிலத்தையும், காஷ்மீரில் உள்ள முக்கியப் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் வளங்களைத் தனது கட்டுக்குள் வைத்துள்ளது; நீதித் துறை, கல்வி நிலையங்கள், ஊடகம் போன்ற ஜனநாயகத் தூண்கள் செயலிழக்க வைத்துள்ளது. இதில் இந்தியாவின் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே சிறப்பாக பணியாற்றுவதைக் கண்டு இந்தியா பெருமை கொள்ளலாம். அது தான் இந்திய இராணுவம்.

உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசியல் தலைவர்களின் கட்டுப்பாட்டின்படி செயல்படும் இந்திய இராணுவத்தால்தான் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக நீடிக்கின்றது. இந்தியப் படையினர் இந்துத்துவ தேசியவாதிகளுடன் கைகோர்த்துக் கொண்டு, கடந்த மே மாதத்தில் 100 கிராமப் பாதுகாப்பு குழுக்களை உருவாக்கியுள்ளதாக அறிவித்தது. இந்துக்களின் தற்காப்புக்காக ஆயுதக் குழுக்கள் அமைக்கிறோம் என்ற  பிரச்சாரங்களின் முலம் இந்தப் பிரச்சினைக்கு மதச்சாயம் பூசுகிறது இந்திய இராணுவம். 

குடிமை மற்றும் அரசியல் உரிமைகளைச் சகித்துக்கொள்ளாமை:  

காஷ்மீரில் இராணுவ நிர்வாகத்தை உறுதிப்படுத்த ஒரு வழியாகவே மனித உரிமை மீறல்கள் நடத்தப்படுகின்றன. மனித உரிமை மீறல்களைக் கிஞ்சித்தும் சகித்துக் கொள்ளமாட்டோம் என்று இந்திய அரசு திரும்பத் திரும்ப உறுதியளித்துள்ளது. ஆனால், 'இந்தியாவே வெளியேறு, திரும்பிப் போ' என்றும் ’இந்தியாவே, காஷ்மீரைவிட்டு வெளியேறு’ என்று வீதிகளில் முழங்கும் மக்களை இந்தியப் படைகள் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குவதன் மூலம் அவர்கள் வன்முறையின்றி அமைதிவழியில் மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டுவதைக் கிஞ்சித்தும் தாங்க முடியாதவர்களாக இருக்கின்றனர் என்பதைப் பார்க்க முடிகின்றது.

காஷ்மீர் விடுதலையைக் கோரும் தலைவர்கள் இளைஞர்களிடம் வன்முறையைத் தூண்டுகிறார்கள் என்று உமர் அப்துல்லா ஜூன் 24, 2010 அன்று சொன்னார். அதைத் தொடர்ந்து, அமைதியான போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்த தலைவர்கள் மீது இந்தியப் படைகள் அடக்குமுறையை ஏவினார்கள். துணை இராணுவப் படையால் கொல்லப்பட்டவர்களுக்காக அழுது கொண்டு, கோபத்தோடு வீதிகளில் பேரணியாகச் செல்லும் மக்கள் எப்போதும் ஆயுதமேந்தியப்  படைகளைக் கொண்டே ஒடுக்கப்படுகின்றார்கள். ஊரடங்கு உத்தரவை மீறியதற்காகவும், காவல்துறையின் சோதனைச் சாவடிகளைத் தாக்கியதற்காகவும் தண்டிக்கப்பட வேண்டியவர்களைத்தான் பாதுகாப்பு படையினர் சுட்டனர் என்று சொல்கிறார் இந்தியாவின் உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை. இதன்மூலம் சி.ஆர்.பி.எப் மற்றும் காவல்துறையின் கொடூரமான செயல்களை நியாயப்படுத்துகிறார். இது, இந்தியப் படைகள் இந்திய அரசின் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெற்றிருப்பதையே காட்டுகின்றது. மேலும், இராணுவ ஆட்சியை மக்கள் எதிர்ப்பதைக் குற்ற நடவடிக்கையாகப் பார்க்கும் இந்திய அரசின் போக்கைச் சுட்டிக்காட்டுகின்றது. 

kashmir_police_harassment

 ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் இந்தியப் படையினரின் சொல்லும், செயலும் மக்களின் ஒத்துழையாமை இயக்கத்தைப் பயங்கரவாதத்திற்கு இணையான தேசத்துரோகமாக சித்தரிக்க முயல்வதாகத் தோன்றுகின்றது. அமைதியான போரட்டங்களில் பங்குபெறும் ஆண்களையும், பெண்களையும் துப்பாக்கியால் சுடுவதன் மூலம் பாதுகாப்புப் படையினர் அடக்குமுறையை மேற்கொள்கின்றனர். காஷ்மீரில் கல்லெறிவதென்பது கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு செயல். அதை வன்முறையென்று சொல்கின்றார்கள். அரசியல் ரீதியாகக் கோரிக்கைகளை எழுப்புவதற்கான வழிகள் திட்டமிட்ட முறையில் அடைக்கப்பட்டதால், ஒடுக்கப்பட்ட மக்களின் ஆத்திரத்தின் வெளிப்பாடே கல்லெறிதல். ஆதிக்கம் செலுத்துவதற்காக அரசு பயன்படுத்தும் கொடூரமான வழிமுறைகளை கல்லெறிவதோடு ஒப்பிட முடியாது. 

விடுதலையைக் கோரும் எண்ணற்ற தலைவர்கள் வீட்டுக் காவலிலும், தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டுள்ளார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்கூட போராட்டங்கள் எதுவும் நடத்தமுடியாதவாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சிறீநகர் வந்து, மனித உரிமை மீறல்களைக் கொஞ்சமும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று மீண்டும் உறுதி அளித்துக் கொண்டிருந்தபோது சுமார் நூறு தோழர்களுடன் போராட்டம் நடத்த முனைந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் தடுத்து நிறுத்தப்பட்டார். இதே இந்தியப் பிரதமர்தான் 2008ஆம் ஆண்டு தேர்தல் சமயத்தில் ஒரு கருத்தை சொன்னார்,  'தேர்தலுக்குப் பின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்காகப் பேசுவார்கள்; அதன் பிறகு, பிரிவினைவாதத் தலைவர்களெல்லாம் தேவையற்றவர்களாகிவிடுவார்கள்' என்று. 

இராணுவம் மற்றும் துணை இராணுவத்தின் செயல்கள் குறித்து கவனிப்பதும், அதற்கு பொறுப்பேற்கவும் அரசுக்கு அக்கறை இருப்பது போல் தோன்றவில்லை. போராட்டங்களில் பங்கேற்கும் சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களையும், அரசியல் தலைவர்களையும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் (Public Safety Act - PSA) கைது செய்கின்றார்கள். அறிவிக்கப்படாத ஊரடங்குநிலை நிலவுகின்ற காஷ்மீரில்,  முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் எதுவும் கொடுக்காமல், பின்விளைவுகள் குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் பாதுகாப்புப் படையினர் செயல்படுகின்றனர். அரசியல் தலைவர்களின் அழைப்பை ஏற்று மக்கள் மேற்கொண்ட ஒத்துழையாமை இயக்கத்தை பயங்கரவாதிகளால் தூண்டிவிடப்பட்ட பயங்கரவாத எழுச்சி என்று நவம்பர் 2009 இல் சித்தரித்துப் பேசினார் லெப். ஜெனரல் பி.எஸ். அகர்வால். 2008 மற்றும் 2009 இல் நடந்த அமைதியான போராட்டங்களின்போது பாதுகாப்புப் படையினர் மக்கள்திரளை நோக்கிச் சுட்டதால் போராட்டங்கள் மரணத்தை ஏற்படுத்துவதாக மாறிப் போயின. வலைத்தளங்களில் பதிவு செய்யப்படுகிற எதிர்ப்புகளை ’வலைதளப் பயங்கரவாதம்’ என்று முத்திரைக் குத்தி கண்காணிப்புக்கு உட்படுத்தியுள்ளார்கள். 

தடுப்புக் காவலிலும், கைது செய்யப்பட்டும் இருக்கும் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், அறிவுஜீவிகள், காஷ்மீர் விடுதலையைக் கோரும் தலைவர்கள் மற்றும் சிறுவர்களின் முழு எண்ணிக்கை யாரிடமும் இல்லை. காவல்துறையினர் சிறைக்காவலில் இருப்பவர்களிடமும், கைது செய்யப்பட்டிருப்பவர்களின் விடுதலையை வேண்டுபவர்களிடமும் லஞ்சம் கேட்பது மற்றும் பலவந்தமாகப் பணம் பறிப்பது முதலிய செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அரசுடைய இராணுவம், துணை இராணுவம் மற்றும் காவல் துறையின் அடக்குமுறையை எதிர்க்கும் குடிமைச் சமூகத்தின் ஒரு சாராரை மிரட்டுவதற்கும், பயமுறுத்துவதற்கும், அடக்குவதற்கும் உறுதி செய்யப்படாத சந்தேகத்தின் அடிப்படையில் தடுப்புக் காவல் மற்றும் கைது நடவடிக்கைகள் அதிக எண்ணிக்கையில் மேற்கொள்ளப்படுகின்றன. 

சூலை 7, 2010 அன்று ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவரும், மனித உரிமைப் பாதுகாவலருமான வழக்கறிஞர் மியான் குயோம் (Mian Qayoom) பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பொதுப் பாதுகாப்புச் சட்டம் என்பதன்மூலம் எந்தவித ஆதாரமும் இல்லாமல் சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து இரண்டு வருடம் வரை தடுப்பு காவலில் வைக்கமுடியும். ஒருநபரால் அமைதி மற்றும் ஒழுங்கு குறையும் என்று அரசு கருதினால், இந்த சட்டத்தின் மூலம் அவரைக் கைது செய்து இரண்டு வருடம் தடுப்புக்காவலில் வைக்க முடியும். தனது மனித உரிமை செயல்களுக்காகவும், அதிலும் குறிப்பாகத் தடுப்புக் காவலிலும், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கவும் சட்டரீதியான ஆலோசனைகள் வழங்கியதாலும், இந்திய அரசை எதிர்த்துப் போராடுபவர்களுக்காக வாதிடுவதாலும், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தவறாக பயன்படுத்துவதை எதிர்த்து வாதிடுவதாலும், இந்திய இராணுவ, துணை இராணுவத்தின் குற்றங்களை விசாரிப்பதனாலும், சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவு தெரிவித்ததாலும், காஷ்மீர் ஒரு "சச்சரவான நிலப்பகுதி"(disputed territory) என அறிவித்ததாலுமே குயோமை கைது செய்துள்ளார்கள். சூலை 18, 2010 அன்று ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், மனித உரிமை பாதுகாவலருமான வழக்கறிஞர் குலாம் நபி சகாகீனும் (Ghulam Nabi Shaheen) பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

 குறைவில்லாமல் கொல்லப்படும் பொதுமக்கள்:  

2010 ச‌ன‌வ‌ரியிலிருந்து ஆக‌ஸ்ட் வ‌ரையிலான‌ கால‌க‌ட்ட‌த்தில் ம‌ட்டும் 89 பொது ம‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். இதில் 71 பேர் இந்திய‌ ஆயுத‌ப்ப‌டையினால் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். ஆனால் இன்ன‌மும் எங்க‌ளை (பொது ம‌க்க‌ளை) வ‌ன்முறை செய்வ‌தாக‌வும், இந்திய‌ இராணுவ‌ம் அமைதியின் வ‌டிவ‌ம் என்றும் கூறி வ‌ருகின்ற‌ன‌ர். 

இராணுவ‌ ஆட்சி? 

இந்திய‌ அர‌சு த‌ற்பொழுது ந‌டைபெற்று வ‌ரும் போராட்ட‌ங்க‌ளை காஷ்மீருக்குள் காஷ்மீரிகள் நடத்தும் போராட்டம் என்பதனை மறைக்க முயல்கின்றனர். அதே ச‌ம‌ய‌த்தில் இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரில் இராணுவ‌ம் த‌ன‌து ப‌டைக‌ளை அதிக‌ரித்தும், ப‌ல‌மாக‌ வேரூன்றியும் வ‌ருகின்ற‌து. இந்திய அரசு, இராணுவம் மற்றும் துணை இராணுவத்தின் அடக்குமுறை செயல்களைக் கண்டு கொள்ளாமலும் அல்லது கட்டுப்படுத்த முடியாமாலும் உள்ளது. ஒருபுறம் “காஷ்மீர் மக்களைப் பாதுகாப்பதற்கே இந்திய இராணுவப்படை” என்று கூறிக் கொண்டே மறுபுறம் இந்திய அரசின் பாதுகாப்பு நலன்களுக்காகப் பொதுமக்கள் இராணுவத்தால் சுட்டு கொல்லப்படுவதை நியாயப்படுத்துகிறது. எமது "பாதுகாவலர்கள்" விநோதமானவர்கள். அவர்கள் எப்பொழுதும் எங்களை துப்பாக்கி இல்லாத பயங்கரவாதிகளாகவும் எதிர்கால விரோதிகளாகவுமே பார்க்கின்றனர். மொத்தத்தில் இந்தியாவைப் பாதுகாப்பதற்கு காஷ்மீரில் இராணுவ அடக்குமுறை தேவை என்பதாகப் புரிந்து கொள்ளப்படுகின்றது. 

காஷ்மீரில் நிலவும் பொதுப் பாதுகாப்புச் சட்டம் (PSA) , சச்சரவுப் பகுதி சட்டம் (Disturbed Areas Act), ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (Armed Forces Special Powers Act - AFSPA) போன்றவை எல்லாம் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு முரணானவை. இந்த சட்டங்களெல்லாம் இந்திய இராணுவத்தையும், துணை இராணுவக் குழுக்களையும்  சர்வதேச மனித உரிமை சட்டங்களிடமிருந்து பாதுகாக்கின்றன. 2009 பிப்ரவரி 26 அன்று முதலமைச்சராகப் பதவியேற்ற பின் 'ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்' நீக்கப்படும் என அறிவித்தார் உமர் அப்துல்லா. இதை ஆயுதப்படைத் தரப்பு  கடுமையாக எதிர்த்தது. இந்த சட்டத்தை நீக்குவது 'பிற்போக்குத்தனமானது' எனவும், 'காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் மக்களின் பாதுகாப்பு இதனால் பாதிக்கப்படும்' எனவும், இது பயங்கரவாதத்தை மேலும் ஊக்குவிக்கும் எனவும் கூறியது. 

விடுதலையை விரும்பும் தலைவர்களுடன் சுயாட்சி பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், 'ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்' நீக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தார் உமர் அப்துல்லா. 'ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை' நீக்குவது சட்டரீதியாக மட்டுமல்லாமல் அரசியல்ரீதியாகவும் மக்களுக்கு சுதந்திரமாக செயல்பட அவசியமாகும். ஆனால் இப்போது, அந்த சட்டத்தை நீக்குவதைவிட, அதில் சில மாற்றங்களை மட்டும் கொண்டுவருவது மக்களுக்குப் பாதுகாப்பானது என்று காஷ்மீரிகள் அறிவுறுத்தப்படுகின்றனர். 

இறுதியாக... 

இந்திய அரசு நிர்வாகத்தாலும், இராணுவத்தினாலும் வன்முறைச் சோதனைகளை மேற்கொள்ளும் பரிசோதனைக் கூடமாக காஷ்மீர் உள்ளது. காஷ்மீரில் இராணுவ ஆட்சி நடக்கின்றது என்பதனை இந்திய அரசும், சர்வதேச சமூகமும் எங்கும் சொல்வதேயில்லை. ஜம்மு காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொள்ளும் இராணுவமயமாக்கல் 'உள்நாட்டுப் பிரச்சனை' என்று கூறப்படுகின்றது. ஆனால், இந்தப் பகுதி சர்வதேச சச்சரவு மற்றும் போர் பகுதியின் விதிகளுக்குள் வரவேண்டிய பகுதி. இந்திய அரசின் திட்டமிட்ட மனித உரிமை மீறல்களையும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும் சர்வதேச சமூகமும் கண்டிக்காமல் மௌனியாக இருந்து வருகின்ற‌து. காஷ்மீர் பிரச்சனையும் மற்ற சர்வதேசப் பிரச்சனைகளைப் போன்றதே. இதில் சர்வதேச சமூகத்தின் அவசரமான கவனமும், ஒரு முடிவும் தேவை. தற்பொழுது இங்கு ஒரு சர்வதேச மேற்பார்வையாளர்களும் இல்லை. சமூக நீதியின்படி ஒரு சரியான முடிவுக்கு வருவதற்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை. 

சர்வதேச சமூகத்தின் கவனத்திலும், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் பேச்சுவார்த்தையிலும்,  காஷ்மீர் குறித்த எந்த உடன்படிக்கையிலும் காஷ்மீரி  மக்கள் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ளப்படுவதேயில்லை. தற்பொழுது உள்ள நிலை தொடர்ந்து இந்திய அரசு அமைதி வழியில் போராடி வருபவர்களைத் திட்டமிட்டு கடுமையாக அடக்குமானால், அதே பொதுமக்களை மீண்டும் ஆயுதங்களை கையிலெடுக்க நிர்ப்பந்திக்கின்றது என்றே பொருள். இதனால் மீண்டும் வன்முறை சக்கரம் சுழலும். 

Pin It

17.08.2010 செவ்வாய்க்கிழமை அன்று சென்னை சட்டக்கல்லூரியில் 4ம் ஆண்டு படிக்கும் மாணவர் அசோக் குமார் செங்கல்பட்டு அருகே உள்ள திருக்கழுக்குன்றம் என்ற ஊரில் உள்ள காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு, மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தற்போது அப்பலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த மாணவர் 'தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின்' காஞ்சிபுர மாவட்டப் பொறுப்பாளர் என்பதும் அவர் காவல் துறையின் அத்துமீறல்களை பலமுறை கண்டித்திருக்கிறார் என்பதும் காவல்துறை அந்த மாணவரை பலி வாங்க்க் காத்திருந்தது என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. காவல் துறையினர் அடித்த அடியில் மேல்தாடையில் பல் உடைந்திருக்கிறது, உதடு கிழிந்திருக்கிறது, பாதத்தில் தோல் உரிந்திருக்கிறது. தலை, தொடை, கழுத்து என உடம்பில் பல பாகங்களில் காட்டுமிராண்டித்தனமாக தாக்கி உள்ளனர்.

law_student_ashokkumarசட்டக்கல்லுரி மாணவர்கள் கொதிப்பு

மாணவர் காவல் துறையினரால் தாக்கப்பட்ட சம்பவமானது சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களைக் கொதித்தெழ வைத்தது. அவர்கள் அந்தச் செய்தியைக் கேட்டவுடன் தன்னெழுச்சியாக திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அதுவும் பாரிஸ் கார்னரில் இரண்டு இடங்களில் சாலையை மறித்ததால் வட சென்னை, தென்சென்னை, மத்திய சென்னை என்று அனைத்துப் பகுதியிலும் போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டது. காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணி வரையிலும் சுமார் ஆறு மணி நேரம் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிய காவல் துறை

 சென்னையில் மிகவும் வாகன நெருக்கடி மிகுந்த இடம் பாரிஸ் கார்னர். இதில் உயர்நீதி மன்றம், பிராட்வே என்ற இரண்டு பேருந்து நிலையங்களுக்கும் உட்பட்ட இரண்டு சாலைகளும் மறிக்கப்பட்டதால் ஒட்டுமொத்தமாக போக்குவரத்து சேவையே ஸ்தம்பிதது. பொதுமக்கள் அவதிக்கு உள்ளானபோதும் காவல் துறை அம்மாணவர்களைக் கைது செய்யவோ, கலைந்து போகச்செய்யவோ இல்லை. தேர்தல் நெருங்குவதால் இது மீண்டும் வழக்கறிஞர்கள், சட்ட மாணவர்கள் போராட்டமாக மாறி விடுமோ என்ற பயம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டு விட்டதைத் தான் இது காட்டுகிறது.

காவல் துறையின் மாறாத்தன்மை

இன்றைய காவல் துறையானது பிரிட்டிஷ் காவல்துறை எப்படி இருந்ததோ அப்படியே இம்மியும் மாறாமல் இன்றும் இருக்கிறது. பிரிட்டிஷ் காலத்திலாவது காவல்துறையில் லஞ்சம் என்பது இன்று உள்ளதைப்போல இல்லை. ஆனால் ஸ்காட்லாந்து காவல் துறைக்கு இணையாக வைத்து போற்றப்படும் தமிழக காவல் துறை குற்ற வழக்குகளைக் கண்டுபிடிப்பதில் முதன்மை வகிக்கின்றதோ இல்லையோ, அதிகமாக லஞ்சம் வாங்குவதில் துறைரீதியாக முதன்மை வகிக்கின்றது.

சட்டத்தை மதிக்காதவர்கள் யார்?

அமைச்சர்கள், சில பணக்கார பத்திரிகையாளர்கள் அடிக்கடி ஒரு வாசகத்தைக் கூறுவதுண்டு ‘வழக்கறிஞர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்கக்கூடாது, அவர்களும் சட்டத்திற்கு உட்பட்டவர்களே’ என்று சொல்வார்கள். இது எவ்வாறு முழுக்க முழுக்க பொய்யோ, அதைப் போலவே காவல் துறை சட்டப்படி தனது கடமையை ஆற்றுகிறது என்பதும். காவல் துறை மட்டுமல்ல நமது ஆட்சியாளர்களும் சட்டத்தையும், நீதிமன்றங்களையும் மதிப்பதில்லை என்பதே உண்மை ஆகும். உண்மையிலேயே அவர்கள் தான் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள். எந்த சட்டம் ஊழல் செய்யவும், கையாடல் மற்றும் இன்ன பிற முறைகேடுகளையும் செய்யச்சொல்கிறது என்று தெரியவில்லை. அது அவர்களுக்கே வெளிச்சம்.

மனித உரிமைகளை காவு கொடுக்கும் காவல்துறை

காவல்துறைக்கு பல சட்ட வழிகாட்டுதல்கள் உண்டு. மனித உரிமை ஆணையம் வகுத்திருக்கும் வழிமுறைகள் மற்றும் ‘டி.கே.பாசு - எதிர் - மேற்கு வங்காள அரசு’ என்ற வழக்கில் தெளிவாக வரையறுத்துள்ள வழிமுறைகளையோ காவல்துறை அதிகாரிகள் மதிப்பதும் இல்லை, கிஞ்சித்தும் பின்பற்றுவதும் இல்லை. அவர்களுக்குத் தைரியம் கொடுப்பவர்கள் எல்லாம் அரசியல் கட்சியினர் தான். ஏனெனில் எந்த அரசுமே ஆட்சியை தங்கள் சுயலாபத்திற்குப் பயன்படுத்த முழுக்க, முழுக்க நம்பி இருப்பது காவல் துறையைத்தான்.

கள்ளக்கூட்டு போடும் காவல்துறை

அரசு என்பது ஒடுக்குமுறைக் கருவி எனும்போது அது அதன் பிரதிநிதியாக வைத்திருப்பது காவல் துறையைத்தான். இந்த சம்பவத்திற்கு எந்த அரசியல் கட்சியுமே காவல்துறையைக் கண்டிக்கவில்லை. ஏன் என்றால் இவர்களோடு கூட்டு சேர்ந்து கட்டைப் பஞ்சாயத்து செய்து காசு பார்ப்பதே இவர்களின் இப்போதைய முக்கியமான தொழில். அத்தோடு இவர்கள் செய்யும் அனைத்து குற்றவியல் வேலைகளுக்கும் காவல் துறையின் ஆசியும், பங்கும் அவசியம் தேவை. இதை பொது மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டார்களானால் இவர்கள் தேர்தலின்போது ஓட்டு கேட்டு மக்களிடம் செல்லவே முடியாது. மக்களை இவர்கள் பல வழிகளிலும் ‘தாங்கள் தான் மக்களுக்கு உண்மையான எதிரி’ என்பது தெரியாமல் திசை திருப்பி வைத்துள்ளனர்.

law_college_students_strike

வழக்கறிஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி!

 வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே காவல் துறையினரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டனர்; நீதிமன்ற வளாகங்களும், வாகனங்களும், கண்முடித்தனமாக அடித்து நொறுக்கப்பட்டது. நீதிபதிகளும் தாக்கப்பட்ட ஒரு மிகக் கேவலமான சம்பவம் நடைபெற்றது. ஆனாலும் ஆட்சியாளர்கள் ஒருபோதும் அதற்குக் காரணமான அதிகாரிகள் மீது இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை. உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட வேலைநீக்கப் பரிந்துரையையும், அரசு செய்யாமல் உச்ச நீதிமன்றத்திலே மேல் முறையீடு செய்து காவல் துறையினரைப் பாதுகாக்கும் பணியைச் செய்துள்ளது. இது போலவே அரசு தனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு தருணத்திலும் நீதிமன்ற உத்தரவுகளை கிள்ளுக்கீரையாக மதிக்கும் நிலை வேறு எந்த நாட்டிலும் இல்லை எனலாம்.

காவல்துறை யாருக்கு நண்பன்?

இன்றைய காவல் நிலையங்கள் பெரும்பான்மையானவை பணம் காட்சி மரங்களாகவே இருக்கின்றன. புகார் கொடுப்பவரிடம் இருந்தும், யார் மீது புகார் அளிக்கப்பட்டதோ அவர்களிடம் இருந்தும், பணத்தைக் கறந்து கொண்டு இருவரையும் மிரட்டி அனுப்பும் வேலையைத்தான் இன்றைய காவல்துறை செய்து கொண்டு இருக்கிறது. காவல் துறை மக்களின் நண்பன் என்று சொல்வது மிகப்பெரிய ஏமாற்று வேலையாகும். இது எப்போதும் நியாயமான போராட்டங்களை ஒடுக்கும் வேலையைத்தான் செய்து வருகிறது. மனித உரிமை, அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமை என்று எந்த உரிமையையும் சாதாரண மக்களுக்கு வழங்காமல் தங்களிடம் சிக்குபவர்களை சிதறு தேங்காய் போடும் வேலையை கணகச்சிதமாக செய்து வருகிறது நமது காவல் துறை.

நமது ஆட்சியாளர்களுக்கு அது ஒரு ஏவல் துறை ஆகும். தாங்கள் வைத்தது தான் சட்டம், எங்களால் எதையும் செய்ய முடியும், நிரபராதியை குற்றவாளியாக்க முடியும், குற்றம் செய்தவனை காக்கவும் முடியும், ஒருவனை ரவுடி என்று என்கவுண்டர் செய்யவும் முடியும், கொலைக் குற்றம் செய்தவனுக்கு பாதுகாவல் வேலையும் செய்ய முடியும் என்று தலை கொழுத்து காவல் துறை ஆடுகிறது. கஸ்டடி மரணங்கள் பல நடந்தும் அவற்றில் பல மறைக்கப்பட்டும், சில ஆர்.டி.ஒ விசாரணையில் தூங்குவதும், நமது நாட்டில் வழக்கமான ஒன்றாகி விட்டது என்றே சொல்லலாம். அதை எதிர்த்துக் கேட்பதும், நியாயம் கிடைக்கப் போராடுவதும், அந்தப் போராட்டங்கள் சட்ட விரோதமாக நசுக்கப்படுவதும் தான் இன்று நடைபெற்று வருகிறது. நமது சட்டக் கல்லூரி மாணவர்கள் அந்த நடைமுறைக்கு தங்களின் நேர்மையான போராட்டம் மூலம் ஒரு முற்றுப்புள்ளி வைத்து உள்ளனர்.

கருத்துரிமையை கொலை செய்யும் காவல்துறை!

 இன்று அரங்கக் கூட்டங்களுக்கே காவல் தூறையின் அனுமதி வாங்க வேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு வந்து எந்த ஒரு கருத்தும் அரசுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ எதிராகத் திரும்பக் கூடாது என்பதில் காவல்துறை கவனமாக கருத்துரிமை பறிக்கும் வேலையைச் செய்து வருகின்றது. போராட்டம் நடத்த வேண்டும் என்றால் மனிதர்களே இல்லாத இடமாகப் பார்த்து கண்டன ஆர்பாட்டம் நடத்த அதுவும் பலகட்டப் போரட்டங்களுக்கு பிறகே அனுமதி கிடைக்கின்றது.

கிளர்ந்தெழுந்த மாணவர்கள்!

 அந்த நிலையில் தான் மாணவர்கள் போராட்டம் யாரையும் சார்ந்திராமல் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது. இது சட்டக் கல்லுரி வரலாற்றிலே பொன் எழுத்துகளால் பொறிக்க வேண்டிய செய்தி ஆகும். சட்டக் கல்லுரி மாணவர்கள் 2008 ஆண்டில் மாணவர்களுக்குள்ளேயே இரு பிரிவாக பிரிந்து அடித்துக் கொண்டது பொது மக்களுக்கு அவர்கள் மீது இருந்த மரியாதையை இழக்கும் விதமாக இருந்தது. அத்தோடு இரு வருடங்களாக எந்தவிதப் போராட்டமும் செய்யாமல் மாணவர்கள் முடங்கிக் கிடந்தனர் என்றே சொல்லலாம். இந்தப் போராட்டத்தின் மூலம் சக மாணவன் காவல் துறையைச் சேர்ந்தவர்களால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டபோது கொதித்தெழுந்து ஆளும் அரசுக்கு எதிராக அந்த சட்ட விரோத காவல் துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய வைத்திருப்பது என்பது சாதாரண செய்தி அல்ல. ஏன் என்றால் இது போலவே பல முறை மாணவர்கள் காவல் துறையின் அத்துமீறலுக்கு எதிராக களம் இறங்கிப் போராடி எந்த விதமான தீர்வும் கிடைக்காமல் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டி இருந்தது.

நீதிமன்ற உத்தரவு

road_rokoஇந்தப் போராட்டத்தில் இறுதியாக சட்டக் கல்லூரி மாணவர்கள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டவுடன் அந்நீதிமன்றம் உடனே காஞ்சிபுர மாவட்ட காவல் துறை உயர் அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமித்தது. அத்தோடு திருக்கழுக்குன்றம் காவல் நிலைய அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டது. மேலும் அம்மாணவரை உடனடியாக பெற்றோர் பார்க்கவும், அவருக்கு நல்ல சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டது.

துருவ நட்சத்திரங்கள்

 மாணவர்கள் என்பவர்கள் வருங்காலத்தை தீர்மானிக்கப் போகும் பாரதத்தின் விலை மதிக்க முடியாத வைரங்கள். இன்று அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி என்பது அவர்கள் தேர்விலே வெற்றி பெற மட்டுமே உதவக்கூடியதாகவும், வாழ்க்கைத் தேர்வில் தேரமுடியாதவர்களாகவும் ஆக்குகிறது. அகத்தேர்வு முறையானது மாணவர்கள் முதுகெலும்பை முறிப்பதாகவும், அவர்களின் போராட்ட குணத்திற்கு சவால் விடுவதாக்கவுமே உள்ளது. அந்த நிலையைத் தகர்த்து இலங்கைத் தமிழர் பிரச்சனையாகட்டும், நாட்டில் நடக்கும் அநீதியைத் தட்டி கேட்பதாகட்டும், காவல் துறையின் அராஜகப் போக்கை கண்டிப்பதாகட்டும் எதிலுமே எப்போதும் முதல் இடத்தில் இருப்பவர்களும், முதலில் குரல் கொடுப்பவர்களாக இருப்பவர்களும் சட்டக் கல்லுரி மாணவர்களே.

புறக்கணித்த செய்தி நிறுவனங்கள்

 சட்டக் கல்லுரி மாணவர்கள் இந்த ஆளும் சந்தர்ப்பவாத, அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கும் மக்கள் விரோத அரசுக்கு எதிராக 6 மணி நேர மறியல் போராட்டம் நடத்துவது என்பது நடைமுறையில் சாத்தியப்படாத ஓன்று. அத்தோடு மற்ற சட்டக் கல்லூரிகளான சேலம், மதுரை, திருச்சி, செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களையும் திரண்டெழுந்து போராட வைத்தது. அதைப் போலவே ஒவ்வொரு கல்லூரியிலும் போராட்டம் பரவி விடும் என்ற நோக்கத்தில் தான் எந்த மீடியாவும் இந்தச் செய்தியை முக்கிய செய்தியாக வெளிவிடவில்லை. அதுவும் சில மீடியாக்கள் அந்த உண்மையைத் திரித்தும், புரட்டியுமே அரைகுறை செய்தியை வெளியிட்டன. இதில் இருந்தே அனைத்து செய்தி நிறுவனங்களும் அரசாங்கத்தின் விரல் அசைப்பில் ஆடுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகிவிட்டது. மாணவர்களின் நேர்மையான போராட்டமானது எந்த அடக்குமுறைக் கருவிக்கும் கட்டுப்பட்டதல்ல என்பதே வரலாறு காட்டும் உண்மை. ஆகவே தான் அரசின் அடக்குமுறையை உடைத்து எறிந்து மாணவர் சக்தி எழுந்தால் அது எந்த அரசையும் ஆட்டுவிக்கும் சக்தி கொண்டது என்பதும், மாணவர்கள் அச்சமற்றவர்கள் என்பதும் மீண்டும் நிரூபிக்கப்பட்டது.

மாணவர்கள் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறும்

போராட்டம் என்பது நாமே வலிந்து ஏற்பதல்ல, அது நம் மீது வன்முறையாகத் திணிக்கப்படுகிறது. அதைப் போலவே போராட்ட வடிவமும் சந்தர்ப்பத்தைப் பொறுத்து மாறுகிறது. அதுவும் இளம் மாணவர்கள் போராட்டமானது எந்த வலிமை மிக்க அரசாங்கத்தையும் ஆட்டுவிக்கும் வல்லமை கொண்டது. ஜெயப்பிரகாஷ் நாராயண் தொடங்கிய ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தைப் போலவே இதுவும் காவல்துறை அத்துமீறல்களுக்கு எதிராக வலிமையான மாணவர்கள் போராட்டமாக மாற வேண்டும். அப்போது தான் காவல் துறை லத்தியை ஓங்கும்முன் கொஞ்சம் புத்தியையும் உபயோகிக்கும். எந்த சமூகத்தில் மாணவர்கள் எழுச்சி மிக்கவர்களாக, அநீதி எங்கு நடந்தாலும் தட்டி கேட்கின்றனரோ, அந்த சமூகமே நல்ல ஒரு விழிப்புணர்வு நிரம்பிய சமூகமாக இருக்கும். நமது மாணவர்கள் அதைப் போராட்டங்கள் மூலம் கண்டிப்பாக சாதிப்பார்கள்.

- கு.கதிரேசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

செல்பேசி: 9843464246

Pin It

"சிங்களவன் போட்ட குண்டில்
50 பேர் பலியானார்கள்.
500 பேர் புலியானார்கள்"  -  பேரா.ஹாஜா கனி
 
              ஒவ்வொரு தேசிய இனமும் தன் அடையாளங்களையும், தன் பண்பாட்டு விழுமியங்களையும் காப்பாற்ற போராடத் துணிந்திருக்கும் இவ்வேளையில் தமிழ்த் தேசிய சிந்தனை மென்மேலும் தன்னகத்தே செழுமை அடைந்து விரிவடைவதை நாம் காண்கிறோம். நடந்து முடிந்திருக்கும் ஈழப்போரும், அதில் தமிழர்கள் அடைந்த பின்னடைவும் தமிழ்த் தேசிய சிந்தனையினை மேலும் கூர்மைப்படுத்தி இருக்கிறது. ஒரு தேசிய இனம் தனக்கான அடையாளங்களைப் பாதுகாக்க முனைவதும், தன் மொழியின் அடிப்படை சாரத்தினை அறிவியல் உச்சங்களில் ஏற்றி வாழ வைப்பதற்கான தகவமைப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதும் இயல்பானதே. இந்நிலையில் இனம் குறித்த வரையறைவியலில் தவறான பிரச்சாரங்களைப் போதிப்பதன் மூலம் பெருகி வரும் தமிழ்த் தேசிய ஓர்மையினை - மதம், சாதி போன்ற சமூக உள்ளடுக்கு முரண்களை முன்னிறுத்தி முறியடிக்க முயன்றிருக்கும் ஆபத்தானவர்கள் கருத்து நிலையின் துவக்கத்திலேயே வீழ்த்தப்பட வேண்டியவர்கள் ஆகிறார்கள்.
 
              பூர்வகுடி மக்களிடையே அயலார் ஊடுருவல் வழியாய் உருவாகும் சாதி, மதம் போன்ற சமூகக் குழுக்கள் நாளடைவில் அந்த மக்களிடையே உருவாகி இருக்கவேண்டிய உரிமை சார்ந்த ஓர்மை உணர்விற்கு மிகப்பெரிய சவாலாக‌ மாறுகின்றன. இந்த மண்ணில் பூர்வ குடிமக்களாகிய தமிழர்கள் மீது ஆரியர் உள்ளிட்ட அயலார் படையெடுப்புகள் மூலமாகவே சாதிக்குழுக்கள், மதப்பிரிவுகள் தோன்றின என்பதற்கான அனைத்து சாட்சியங்களும் ஏற்கனவே பல ஆராய்ச்சியாளர்களால் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. தமிழர் மெய்யியல் வரலாற்றில் சாதிக்கு இடமில்லை என்பதும், இந்த பரந்துபட்ட நிலப்பரப்பில் காலத்தால் பழைமை உடையதாகக் கருதப்படும் சமண, பெளத்த மரபுகளுக்கு மூத்தது தமிழர் மெய்யியல் என்பதும் ஆசீவகம் என்றும், தமிழர் அணுவியம் என்றும் அழைக்கப்படும் இந்த சிந்தனை தமிழர்களுக்கான மெய்யியல் அடையாளமாய் இருந்திருக்கிறது என்பதும் புத்துலக சிந்தனையாய், ஆய்வாய் உருவாகி வருகிறது. (ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம் – பேரா.க.நெடுஞ்செழியன், மனிதம் வெளியீடு). 
 
இச்சூழலில் இந்த மண்ணின் பூர்வகுடித் தமிழர்களான முஸ்லிம்களை தமிழ்ச் சமூகத்திலிருந்து பிரித்தெடுக்கும் நாசகார வேலையை, அ.மார்க்ஸ் போன்ற மூன்றாம் தர பிழைப்பு ஆய்வாளர்கள் செய்யத் துவங்கி உள்ளார்கள். மொழி, இனம், குடும்பம் போன்ற அனைத்துமே கற்பிதம் என உச்சாணிக் கொம்பில் ஏறிக்கொண்டு உரத்துப் பேசும் அ.மார்க்ஸ்க்கு மதம் மட்டும் சமீப காலமாக  இனிக்கும் காரணியாக மாறிப் போனதன் உண்மை அனைவரும் அறிந்ததே. அ.மார்க்ஸ் போன்றவர்கள் மதத்தினை முன்வைத்து இயங்கி இனத்தினைப் பிரிக்கும்  விஷமிகள்; மத அடிப்படைவாதிகளை விட அபாயமானவர்கள்.
 
              முஸ்லிம்கள் இந்த மண்ணின் பூர்வீகத் தமிழர்கள் என்பதும் அவர்கள் தமிழ்த் தேசிய தன்னுரிமைப் போராட்டத்தில் தங்களுக்குரிய பங்கினை நிறைவாகவே செய்து வருகின்றனர் என்பதனையும் யாராலும் மறுக்க இயலாது. மதம், சாதி போன்றவை தமிழ் இன வரலாற்றில் இடையில் தோன்றிய  முரண்கள் ஆகும். மேலும்  இந்து மதம் கடைப்பிடிக்கும் வர்ணாசிரமக் கோட்பாடுகளுக்கு எதிராகவே தமிழர்களின் பூர்வீக மெய்யியல் வரலாறு இருந்திருக்கிறது. எனவே இந்து மதத்தில் நிலவும் சாதீய ஏற்றத்தாழ்வும், இதர சமூகக் காரணிகளுமே தமிழர்கள் முஸ்லிம்களாக, கிருத்துவராக மதம் மாறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பதும் உண்மை. எனவே பூர்வீகத் தமிழர்களான முஸ்லிம்களை தமிழ்த் தேசிய ஓர்மைச் சிந்தனைக்கு எதிராக முன்னிறுத்துவதன் அரசியல் - இன எதிரிகளிடம் எவ்விதக் கூச்சமுமில்லாமல் நக்கிப் பிழைக்கும் பிழைப்புவாதிகளைச் சார்ந்தது.
 
           தமிழ்த் தேசிய சிந்தனை மரபின் அளவுகோல் முழுக்க முழுக்க சமூக அறிவியலை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. ஆனால் மதங்களின் அளவுகோல் அவ்வாறல்ல. குறிப்பாக இந்து மதத்தின் அளவுகோல் சாதீய ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கிய வர்ணாசிரமக் கோட்பாடுகளின்படி அமைந்தது. இந்து மத மேலாண்மையை போதிக்கும், பெரும்பான்மை மதவாதச் சின்னமான ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளை எதிர்த்துத்தான் தமிழ் தேசிய அமைப்புகளின் அரசியல் இருந்து வருகிறது. 1992 டிசம்பர் 6-ல் பாபர் மசூதித் தகர்ப்பில் ஈடுபட்ட இந்து மத மேலாதிக்கத்தினை ஒற்றைக்குரலாய் எதிர்த்த தமிழர்களின் குரலே இன்றளவும் தமிழ்நாட்டினை மதவாதம் பெருகாத பூமியாய் நிறுத்தி வைத்திருக்கிறது. எனவே தமிழ்த் தேசிய சிந்தனை என்பது மதங்கள் வழி சார்ந்தது அல்ல என்பதும் மதங்களின் மேலாதிக்கத்தினை எதிர்த்து மிகவும் உக்கிரமாக போர் தொடுக்கும் சக்தி என்பதும் இந்த மண்ணில் மதச் சிறுபான்மையான  இஸ்லாமியர்களுக்குத் தோழமையான  குரல் என்பதனையும்  உணர்வு மிக்க தமிழர்களாகிய இஸ்லாமிய உறவுகள் புரிந்தே வைத்துள்ளனர். தமிழர்கள் மதத்தில் இந்துவாக, முஸ்லிம்களாக, கிருத்துவர்களாக இருக்கலாம்; ஆனால் இனத்தில்  தமிழர்களாக இருக்கிறார்கள்.
 
             இஸ்லாமியர்களில்  தமிழ்த் தேசிய சிந்தனையை உள்வாங்கி தன் இனம் உணர்ந்து இனம் காக்கப் போராடும் வீரர்கள் ஏராளம். ஈழப் போரின் கடைசி கட்ட காலத்தின் தமிழினத்தின் அறம் சார்ந்த உணர்வின் உச்சமாய் நின்ற முத்துக்குமாரின் ஈகைக்கு முன்பாகவே, 1995 ஆம் ஆண்டு சிங்களப் பேரினவாதி சந்திரிக்கா யாழ்ப்பாணத்தின் மீது போர் தொடுத்தபோது - சுரணையற்ற தமிழனை சூடேற்ற - அன்றும் ஒரு முத்துக்குமார் இருந்தான். அவன் தான் அருமை தமிழின வீரன் அப்துல் ரவூப். அன்றைய காலகட்டத்தில் தமிழினத்தினை அழித்தொழிக்கும் சிங்களர்களின் பிள்ளைகள் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு விளையாட்டுப் போட்டிக்கு இந்திய அரசால் அழைக்கப்பட்டிருந்தனர். இந்திய அரசின் இந்த இரண்டகத் துரோகம் தாங்காமல், இனம் காக்க, தன் சொந்த சகோதர சகோதரிகளின் துயரம் பொறுக்காமல்.., தமிழினத்தினை உசுப்ப தன்னைத் தானே எரித்துக் கொண்டு இந்த மண்ணில் விதையாய் விழுந்த தமிழன் அப்துல் ரவூப்பினை - அ.மார்க்ஸ் போன்ற - 'சிறுபான்மை உரிமைகளுக்காக எழுதுகிறேன்' என்ற போலி முகமூடியில் - திடீரென்று வானில்  இருந்து குதித்து, இனத்தினைப் பிரிக்கும் பிழைப்புவாதிகளுக்குத் தெரியாது.
 
மாவீரன் அப்துல் ரவூப்பின் தந்தை - அருமை அப்பா அசேன் முகமது இன்றளவும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவர். அது மட்டுமல்ல தமிழினத்தின் போராளியாக இருந்து கடும் பொடாச் சட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியில் சிறைப்பட்ட தமிழ் முழக்கம் சாகுல் அமீது நாம் தமிழர் அமைப்பின்  நிர்வாகிகளுள் ஒருவர். நாம் தமிழர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூத்தன் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர்.
 
                தமிழர்களுக்கு என தரணியில் ஒரு நாடு கட்டி ஆண்ட எம் இனத்தின் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனை சந்திக்கச் சென்ற  - கவிதை உலகின் போர்க்குரல் - இன்குலாப்  இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழக முதல்வர் கருணாநிதி அளித்த விருதை திருப்பி அனுப்பிய பெரும் தமிழர் இன்குலாப்பினை இவர்களால் சீரணிக்க முடியாது. இன்னும் ஏராளமான, லட்சணக்கணக்கான இஸ்லாமிய தமிழின வீரர்களை எம்மால் அடையாளம் காட்ட இயலும். 
 
         திருத்துறைப்பூண்டி கலை இலக்கிய இரவில் இந்து மதத்தின் போலித் தன்மைகளை எடுத்துக் காட்டி பேசிய செந்தமிழன் சீமான் மீது  இந்துத்துவா வெறியர்கள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டதும், அந்தக் கலவரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் ஒருவர் கொல்லப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. கோவையில் நடந்த தோழர் மதிமாறனின் புத்தக வெளியீட்டு விழாவில் சீமான், இந்து மத போலித்தன்மைகளை தன் பேச்சால் அடித்து நொறுக்கியபோது பொறுத்துக் கொள்ள முடியாத இந்து மத வெறியர்கள் மிகப்பெரிய கலவரத்தில் ஈடுபட்டதும், பெரியார் திக தோழர்கள் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்து மத வெறியர்களை ஓட ஓட விரட்டியதும் அனைவருக்கும் தெரியும். பெரியாரின் பேரன்களாக தமிழ்த் தேசியப் பரப்பில் செயல்பட்டு வரும் லட்சக்கணக்கான தமிழின இளைஞர்கள் சாதி, மத மறுப்பாளர்களாய் களம் கண்டு வருகிறார்கள் என்பதும்… இவர்கள் தான் மதம் கடந்து, சாதி வென்று இனம் காக்க தமிழ்த்  தேசியம் வென்றெடுக்கும் நம்பிக்கையாய்த் திகழ்கிறார்கள்  என்பதும் அ.மார்க்ஸ் போன்ற நேர்மையற்றவர்களால் பொறுக்க முடியவில்லை.

பால் தாக்கரேவினை செந்தமிழன் சீமான் சபை நாகரீகத்திற்காக 'பெருமகன்' என விளித்ததை வைத்து சொல் அரசியல் பேசும் இவர்கள், ராசபக்சேவினை இலங்கையில் எப்படி விளித்தார்கள் என்பது குறித்து யாருக்கும் தெரியாது. ஒருவேளை அ.மார்க்ஸ் உள் மனச்சான்றோடு  ராசபக்சேவினை கடுமையாக விமர்சித்துப் பேசி இருந்தால் அவரது இலங்கைப் பயணம் இவ்வளவு இலகுவானதாக இருந்திருக்காது; அவர் திரும்பி வந்திருக்கவும் முடியாது. அங்கு வாய்மூடி, 'மெளனம் சம்மதம்' என்று வந்துவிட்டு இங்கு பம்மாத்து வேடங்களைக் காட்டுவது அ.மார்க்ஸின் தற்போதைய பாணி. 

இவரைப் போன்றவர்கள் போராளிகளை அழித்த பிறகான சிங்கள அரசின் தலைவர் ராசபக்சேவின் நடவடிக்கைகள் - இன்றளவும் தமிழர்களுக்கு மட்டுமல்ல, முஸ்லீம்களுக்கு எதிராகவும் இருப்பது குறித்து வாய்மூடி கள்ள மெளனம் காக்கிறார்கள். சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இழைத்து வரும் கொடுமைகளை முஸ்தீன் அவர்கள் கீற்று இணையத் தளத்தில் தெரிவித்துள்ளது இச்சமயத்தில் கவனிக்கத்தக்கது. தமிழனின் அறிவுசார் பெருஞ்சொத்தான யாழ்ப்பாண நூலகம் அழிவிற்கும், எண்ணற்ற இளைஞர்களும், இளம் பெண்களும் விடுதலைப்புலிகளாக கருதப்பட்டு முள்வேலி வதை முகாம்களில் அடைக்கப்படிருப்பதற்கும், உலக மகா போர்குற்றங்களுக்கும் காரணமான ராசபக்சே  பற்றி இவர்கள் பேசுவதில்லை. காஷ்மீருக்குச் சென்று மனித உரிமை ஆய்வு செய்யும் இவர்கள் இலங்கைக்குச் சென்று விட்டு வந்து சிங்கள பேரினவாதத்தினைப் பற்றி பேசாமல் தன்னின விடுதலைக்காக போரிட்டு வீழ்த்தப்பட்ட விடுதலைப்புலிகளை  இன்றளவும் வன்மத்துடன் திட்டித் தீர்க்கிறார்கள். காரணம் என்னவென்றால் விடுதலைப் புலிகள் ஒரு சமூகத்திற்கான, ஒரு இனத்திற்கான விடுதலை வீரர்கள். ஆனால் இவர்களோ… அறிவுஜீவிப் போர்வையில் புத்தகம் போடவும், கூட்டம் நடத்தவும் தன்னையே விற்று, வார்த்தை அரசியல் பேசும்  பிழைப்புவாதிகள்.

                ஏற்கனவே தோழர் கார்க்கி அவர்கள் அ.மார்க்ஸ்க்கு எழுப்பிய வினாக்களுக்கு இதுவரை பதிலளிக்காமல் கள்ள மெளனம் காத்து… கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கண்டதையும் வாந்தி எடுக்கும் அ.மார்க்ஸின் போலி முகமூடி மேன்மேலும் கிழித்தெறியப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னால் சென்னை லயோலா கல்லூரிக்கு அருகில் உள்ள AICUF அரங்கில் ஈழத்தினைப் பற்றியும், தமிழர்களைப் பற்றியும் தரக்குறைவாகப் பேசிய அ.மார்க்ஸினை நோக்கி அந்த அரங்கில் இருந்த உணர்வுமிக்க  தோழர்கள் சிலர் ஜனநாயக முறையில் வினாக்களை முன் வைத்தனர். வளர்மதி என்ற தோழர்  மேடைக்குச் சென்று அ.மார்க்ஸின் பேச்சுக்கெதிரான தனது வினாவினை முன்வைத்தபோது, எவ்வித பதிலும் தெரிவிக்காத அ.மார்க்சும், அந்தக் கூட்டத்தினை நடத்தியவர்களும் வளர்மதியை தடுத்து சட்டையைப் பிடித்து இழுத்து மேடையை விட்டு வலுக்கட்டாயமாக இறக்கி விட்டுள்ளனர். இது தான் அ.மார்க்ஸ் பேணி வரும் கருத்துச் சுதந்திர லட்சணம்.

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கெதிரான அவதூறுகளைப் பரப்பும் அ.மார்க்ஸுற்கு எதிராக அவர் கலந்துக் கொள்ளும் கூட்டங்களில் தமிழின உணர்வாளர்கள் மற்றும் முற்போக்காளர்கள் ஆற்றும் எதிர்வினைகளை - முஸ்லீம்களுக்கு எதிரான ஒன்றாக - அ.மா மிகவும் விஷமத்தனமாய் கற்பிதம் செய்கிறார். அ.மாவிற்கு எதிராக நிகழும் எதிர்வினைகள் - சிறுபான்மையினரின் உரிமைகள் சார்ந்த அவரின் நடவடிக்கைகளுக்கானதில்லை. மாறாக அவர் சிங்களப் பேரினவாதத்தின் மறைமுக ஆதரவாளராய், ஊதுகுழலாய் மாறி செய்யும், பரப்பும் செயல்களுக்கானது. இது போன்ற நடவடிக்கைகள்தான் சென்னை AICUF அரங்கில் நடைபெற்றது. ஆனால் அ.மார்க்ஸ் தன்னையும், சிங்களப் பேரினவாதத்தினையும் எதிர்த்தால் உடனே அதனை முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கைகளாக மாற்றி மோசடித்தனம் செய்கிறார்.
 
தமிழர்கள் மீது நிகழ்ந்த பெருங்குற்றங்களைக் கேட்காத அ.மார்க்ஸ் - தான் தோழனாக காட்டிக் கொள்ள விரும்பும் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை எதிர்த்துக்கூட ராஜபக்சேவினைத் தாக்கிப் பேசவில்லையே.. ஏன்..? இலங்கையில் முஸ்லிம்களை வாழ்விடங்களை விட்டு அகற்ற முக்கியக் காரணமாக இருந்த கருணா, பிள்ளையான் போன்றவர்களைப் பற்றி வாய் திறக்க மறுக்கும் இந்த அ.மார்க்ஸ், இனப்படுகொலை நடந்த ஒரு நாட்டில்… இதுவரை பத்திரிக்கையாளர்கள் கூட அனுமதிக்கப்படாத ஒரு பூமியில்.. எல்லாவித சுதந்திரத்தோடு வலம் வருகிறார் என்றால்.. யாருடன் கூட்டு… எந்த குரலுக்காக இந்த ஒத்து ஊதும் பாட்டு என்று தெரியாமலா இருக்கிறது..?
 
 நாம் தமிழர் போன்ற தமிழ்த் தேசிய அமைப்புகள் அ.மார்க்ஸினை மிரட்டுவதாக அவரே கதை கட்டிக் கொண்டு.. இனம் சார்ந்த பிரச்சனையை மதம் சார்ந்ததாக ஆக்க முயற்சிக்கும் அ.மார்க்ஸின் அரசியல் அருவருப்பானது. சிங்களப் பேரினவாதத்தினை தமிழ்த் தேசிய அமைப்புகள் எதிர்த்துப் பேசினால் அ.மார்க்சுக்குப் பொறுக்காது. உடனே தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கு எதிராக முஸ்லிம்களைத் திருப்பி விடும் விஷமத்தினை அவர் செய்யத் துவங்குவார். தமிழர்கள் எதன் பொருட்டும் ஒன்றாகக் கூடாது.. மதம், சாதி என அவர்கள் வேறுபட்டு நிற்கவேண்டும் என்ற சிங்களப் பேரினவாதத்தின் ஆசையின் வடிவமாய் அ.மார்க்ஸ் செயல்படுகிறார். எனவே தமிழ்த் தேசிய சிந்தனை மரபிற்கு முரணான சமூகமாய் முஸ்லிம்களை முன்நிறுத்தும் அ.மார்க்ஸ் போன்றவர்களின் போக்கு கற்பிதமாகப் புனையப்பட்டவை ஆகும். இயல்பான  தமிழ்த் தேசிய தன்னுரிமைப் போராட்டத்தின் தவிர்க்க முடியாத சக்திகளாய் தமிழ் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்; இருப்பார்கள்.
 
நாம் தமிழர் உள்ளிட்ட தமிழ்த் தேசிய அமைப்புக்கள் இந்த மண்ணின் பூர்வக்குடித் தமிழர்களான முஸ்லிம்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருந்து இந்து மத மேலாதிக்கத்தினை விரட்டும் படையாக செயல்படும். இந்த மண்ணின் பூர்வகுடித் தமிழர்களான முஸ்லிம் பெருமக்கள் இதுபோன்ற சதிகளை முறியடித்து மத மேலாதிக்கத்தினைத் தகர்க்கும் பணியினை இனத் தன்னுரிமைப் போராட்டத்தின் ஒரு பகுதியாக செய்து வரும் தமிழ்த் தேசிய சிந்தனை மரபினை வலிமைப்படுத்த வேண்டும் என்பதில்தான் எதிர்கால தமிழ் இனத்தின் மேன்மையும், பெருமையும் அடங்கியிருக்கிறது.        

- மணி.செந்தில் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

உட்பிரிவுகள்