காஷ்மீர் : இந்திய அரசின் படுகொலைகளும் சவக்குழியின் சாட்சியங்களும் என்ற இவ்வெளியீட்டில் காஷ்மீரில் 1989 -2009ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்திய ராணுவ மற்றும் துணை ராணுவப் படையினரால் படுகொலை செய்யப்பட்டு அடையாளம் காணப்படாமல் புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டி எடுத்து, ஆய்வு செய்து காஷ்மீர் மீதான சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தினரால் வெளிக்கொணரப்பட்ட “புதைக்கப்பட்ட சாட்சியங்கள்” என்ற ஆய்வு அறிக்கையின் தமிழாக்கத்தை குடியுரிமை பாதுகாப்பு நடுவம் வெளியிட முன்வந்துள்ளது.
காஷ்மீர் பிரச்னை என்பதே இந்திய அரசுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையிலான பிரச்னை என்றும், காஷ்மீரிகளின் அடையாளம் மற்றும் சுதந்திர வேட்கைக்கான போராட்டம் என்றும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான யுத்தம் என்பது போன்றும், இந்திய இராணுவப் படையினர் போராளிகளிடம் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்றிவிடவே நடத்தப்படும் யுத்தம் என்றும், இந்திய ராணுவத்தினரிடம் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்றவே போராளிகள் நடத்தும் யுத்தம் என்பதாகவும் பல முகங்களாக வெளிப்படுகிறது.
ஒட்டுமொத்தத்தில் இந்திய அரசு, பாகிஸ்தான், போராளிக்குழுக்கள் இவற்றின் இடையே சமாதான பேச்சுவார்த்தை என்பது முன்வைக்கப்படும் அதே வேளையில், காஷ்மீர் பகுதியில், 6 லட்சத்திற்கும் மேலான ராணுவ, துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்பதும், ராணுவப் படையினருக்கும் போராளிக் குழுக்களின் இடையிலான மோதல் என்ற பெயரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 70,000 என்பதாகவும், மோதலில் கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,000க்கும் மேலாகவும் காணப்படுவது இந்திய அரசின் மனித உரிமை மீறல்களின் அப்பட்டமான வெளிப்பாடாகும்.
மோதல்களில் கொலை செய்யப்பட்ட அப்பாவிகள் கூட தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டனர் என்பதற்கு 2004ம் ஆண்டு இந்திய ராணுவத்தினர் நடத்திய பத்ரபால் படுகொலை ஒரு சான்றாகும்.
சில நேரங்களில், இந்திய ராணுவத்தினர் நடத்திய படுகொலைகளை மறைக்க, போராளிக் குழுக்கள் படுகொலையை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். சட்டீஸ்சிங் புறா என்ற பகுதியில் 35 சீக்கியர்கள் எல்லைப்புற காவல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர், அதற்கு பொறுப்பாளியாக போராளிக் குழுக்கள் மீது குற்றம் சாட்டப்பட்டன. இந்திய ராணுவத்தினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலை போக்கில் இருந்து மனித உரிமையாளர்களும் கூட தப்பவில்லை. 1996ம் ஆண்டு, மனித உரிமையாளர் அன்டிராபி அவர்களின் படுகொலை இதற்கு சான்றாகும். அன்டிராபியின் படுகொலையை நிகழ்த்திய ராணுவப் படை தலைவர் மேஜர் அவ்தார் சிங் மீது 13 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.
தற்போது 2008ம் ஆண்டு அமர்நாத் யாத்திரை அறக்கட்டளைக்கு அரசு நிலங்களை தாரை வார்த்து மதவெறி மோதலுக்கு (இந்துத்துவ அரசியலுக்கு ஆதரவாக) வழிவகை செய்து அரசு செயல்பட்டதும், 2009ம் ஆண்டு நடந்த ஷோபியன் கூட்டு பாலியல் வன்முறையில் காவல் துறையின் அட்டூழியத்தை மறைக்க மத்திய, மாநில அரசுகள் செயல்பட்ட விதமும்,தற்போது 3 இளஞ்சிறுவர்கள் துணை ராணுவப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்பு எழுந்த மனக் கொந்தளிப்பை ஆற்றும் வகையில் செயல்படாமல், துணை ராணுவப் படையினரை ஆதரித்து நிற்கும் மத்திய, மாநில அரசின் நிலையும் காஷ்மீர் மக்களை, மேலும் அன்னியப்படுத்துவதாகவே அமைகிறது.
இவற்றிற்கிடையில் ராணுவத்திற்கான தனிச்சிறப்பு அதிகாரச் சட்டம் 1990களில் ஜக்மோகன் கவர்னராக பணியாற்றியபோது பிறப்பிக்கப்பட்டது. மாறிமாறி வரும் மத்திய, மாநில அரசுகள் இச்சட்டத்தை வாபஸ் பெறுவதாக வாக்குறுதி அளித்தபோதும்,எவரும் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் இது குறித்த நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.
ராணுவத்திற்கான சிறப்பு அதிகாரச் சட்டம் வடகிழக்கு மாநிலங்களில் எத்தகைய ராணுவ அட்டூழியங்களுக்கு துணை நின்றது என்பதை மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் அறிவர்.
இப்பதட்டமான நிலையில் மேலும் ராணுவமயமாக்கல் என்பது நிலைமையை மோசமடையவே செய்யும். ராணுவத்தை திரும்பப் பெறுவதன் மூலமே, ராணுவமயமாக்கலை கைவிடுவதன் மூலமே, ராணுவப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறுவதன் மூலமே பதட்ட நிலையை சீரடைய செய்ய இயலும்.
இந்திய ராணுவத்தினரின் படுகொலையையும், படுகொலைகளில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகளையும் பாதுகாத்து நிற்கின்ற இந்திய அரசின் நடவடிக்கையை, போராடும் காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான விருப்பார்வங்களை ஒடுக்கும், கொடுமையான மனித உரிமை மீறல்களாகவே கருத இயலும். இந்த மனித உரிமை மீறலுக்கு எதிரான இணைந்த குரலை எழுப்ப முன்வருவது அனைத்து ஜனநாயக, மனித உரிமை அமைப்புகளின் உடனடி கடமையாகும்.
இச்சூழலில் காஷ்மீர் மீதான சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை இந்தியாவின் அனைத்து மக்கள் தரப்பினரையும் சென்றடைவது மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு வலுவான குரலை எழுப்பச் சாதகமான நிலையை உருவாக்கும். இந்த முயற்சியின் சிறு அங்கமாக தீர்ப்பாயத்தின் அறிக்கையை குடியுரிமை பாதுகாப்பு நடுவம் தமிழில் வெளிக்கொணருகிறது.
-------------------------------------------------------------------------------
புதைக்கப்பட்ட சாட்சியங்கள்:
இந்திய நிர்வாகத்தின் கீழ் அடங்கிய காஷ்மீரில் நிலவும் மனித உரிமைகளும், நீதி நிலைமைகளும் குறித்த சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை!
நவம்பர் 2006க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட நேரடி ஆய்வில் காஷ்மீரத்தின் பண்டிபோரா, பாராமுல்லா மற்றும் குப்வாரா மாவட்டங்களைச் சேர்ந்த 52 கிராமங்களில் உள்ள 2,700 விவரம் அறியப்படாத, அடையாளம் காணப்படாத 2,943க்கும் மேலான சடலங்களைக் கொண்ட புதைகுழிகள் குறித்து இங்கு ஆவணப்படுத்தப்படுகிறது. இவ் ஆவணம், கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டகரல் ஸ்டெடியில் தொல்லியல் பிரிவு பேராசிரியரான முனைவர் அங்கனா சட்டர்ஜி, காஷ்மீர் பிரச்னை மீதான சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆன வழக்கறிஞர் பர்வேசு இம்ரோசு, இ.பி.டபிள்யூ, என்ற பத்திரிகையில் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த கௌதம் நவ்லாகா, காஷ்மீர் சிவில் சமூகத்தின் கூட்டணி என்ற அமைப்பின் துணைத்தலைவரான சாஹிர் உத்தின், மும்பை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தலைசிறந்த வழக்கறிஞர் மிஹிர் தேசாய், ஜம்மு காஷ்மீர் சிவில் சமூகத்தின் கூட்டணியின் திட்ட ஒருங்கிணைப்பாளரான குர்றம்பர்வேசு ஆகியோர் அடங்கிய குழுவினரால் தயாரிக்கப்பட்டது.
ஆய்வின் முடிவுகள்
1999-2009ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் மோதல்களிலும், போலி மோதல்களிலும் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சடலங்களைக் கொண்ட புதைக்குழிகளைக் குறித்து காஷ்மீர் மீதான சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் ஆய்வு செய்தது. நீதிக்கு புறம்பாகவும், ஒருதலைப் பட்சமாகவும், முகாந்திரம் ஏதும் இன்றியும் படுகொலை செய்யப்பட்டவர்களின் - இந்திய ராணுவத்தினராலும், துணை ராணுவத்தினராலும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் இப்புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 2,373 புதைகுழிகளில் (87.9 விழுக்காடு) பெயர் ஏதும் குறிப்பிடப்படவில்லை. 154 புதைகுழிகளில் இரண்டுக்கு மேற்பட்ட சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தன. 23 புதைகுழிகளில் இரண்டுக்கும் மேற்பட்ட, மூன்றில் இருந்து 17 வரையிலான சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தன.
பல சடலங்கள் அடங்கிய புதைகுழி என்பதை வழக்கமாக,ஒன்றுக்கும் மேற்பட்ட, அடையாளம் அறியப்படாத, மனித சடலங்கள் அடங்கிய புதைகுழி என அடையாளப்படுத்தலாம். மானுடத்திற்கு எதிரான போர்க் குற்றங்களும், இனப்படுகொலைகளும் நடத்தப்படும்போது தான் பல சடலங்கள் அடங்கிய புதைகுழிகள் காணப்படுகின்றன என்று கல்வியறிவாளர்கள் குறிப்பிடுகின்றனர். திரளாக சடலங்கள் அடங்கிய புதைகுழி என்பதே தண்டனை ஏதும் இன்றி கொலைகளை செய்வதை நோக்கமாக கொண்டிருந்தது என்பதோடு, ஒன்றுக்கு மேற்பட்டவர்களை கொலை செய்வதையும், கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை மறைத்து மோசடி செய்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது. அப்படியெனில், இந்திய ராணுவமும், துணை ராணுவப் படையினரும் இணைந்து “ஒட்டுமொத்தமாக புதைப்பதற்கான” பரந்த வெளிகளை உருவாக்க, கூட்டாக புதைப்பது என்பதன் ஒரு பகுதியே பண்டிபோரா, பாராமுல்லா, குப்வாரா ஆகிய இடங்களில் காணப்படும் புதைகுழிகள் ஆகும்.
மரணத்திற்கு பின்னர், பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் தொடர்ந்து (routine) ராணுவத்தாலும், உள்ளூர் காவல்துறையினரை உள்ளடக்கி, துணை ராண்வப் படையினராலும் கையாளப்பட்டது. குறிப்பாக ஜம்மு - காஷ்மீர் காவல் துறையினரால் அவ்வுடல்கள் “ரகசிய புதைகுழிகளுக்கு” கொண்டு வரப்பட்டன. இப்புதைகுழிகள், உள்ளூரில் சவக்குழியை தோண்டுபவர்களோடு, அவற்றை பாதுகாப்பவர்களாலும் தோண்டப்பட்டு, அவற்றில் சாத்தியப்படும் போதெல்லாம், இஸ்லாமிய மத உணர்வுகளை கருத்தில் கொண்டு, சடலங்கள் தனியாகவும், குறிப்பாக ஒட்டுமொத்தமாக அல்லாமல் புதைக்கப்பட்டன.
இப்புதைகுழிகளில், சில விதிவிலக்குகளைத் தவிர,பெரும்பாலும் ஆண்களின் சடலங்கள் காணப்பட்டன. சாதாரண குடிமகனுக்கு எதிரான வன்முறை என்பது விரிவடைந்து பெண்கள் மீதும் வன்முறை ஏவிவிடப்படுகின்றன. இவ்வாறு காணாமல் போவது, மரணங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, சிதறிப்போன குடும்பங்களை கவனிக்கும் கடமையை மேற்கொள்ளும்படியும், நீதியை பெறுவதற்கான பணிகளில் ஈடுபடும்படியும் பெண்கள் உந்தப்படுகின்றனர். இப்புதை குழிகள், வயல்வெளிகள், பள்ளிகள், வீடுகள், பொதுவான சமூக நிலங்களில் அமைந்துள்ளன என்பதால், உள்ளூர் சமூகத்தினர் மீது இதன் தாக்கம் பயங்கரமானதாகக் காணப்படுகிறது.
இந்திய ராணுவமும், கூட்டு காஷ்மீர் காவல் துறையினரும் புதைகுழியில், சவக்குழியில் புதைக்கப்பட்ட முகம் தெரியாத அடையாளம் காணப்படாத சடலங்கள் யாவும் அயல் நாட்டு தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகளின் சடலங்கள் என்று வழக்கமாக கூறி வருகின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் எல்லைப் பகுதிகளின் வழியாக காஷ்மீரத்திற்குள் ஊடடுருவும்போது அல்லது காஷ்மீரில் இருந்து ஆயுதப் பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தானிற்குள் புக முயன்றபோது, சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். அதிகாரப்பூர்வ அரசு சொல்லாடல்களில், தற்போதைய உள்ளூர் காஷ்மீர் குழுக்களின் வன்முறையற்ற அரசியல் மற்றும் பிரதேச சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை, உள்ளூர் எதிர்ப்பு நடவடிக்கை போராட்டங்களை, பயங்கரவாத நடவடிக்கைகள் என்று சித்தரித்து எல்லை தாண்டிய தீவிரவாதத்துடன் இணைத்து ஊதிப் பெருக்கி குறிப்பிடுகின்றனர்.
கணிசமான நிகழ்வுகளில், சடலங்களை தோண்டி எடுத்து அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வுகளில் காஷ்மீர் நெடுகிலும் நடந்த “மோதல் கொலைகள்” யாவும் “போலி மோதல் கொலைகளே” என்று உண்மையில் உறுதி படுத்தப்பட்டுள்ளது. சில நிகழ்வுகளில் சடலங்கள் புதைக்கப்பட்டதற்கு பின்னர், அவற்றை அடையாளம் காண்பதற்கு இரு வழிமுறைகள் கையாளப்பட்டன. அவை (1) சடலங்களை தோண்டி எடுத்து அடையாளம் காண்பது (2) புகைப்படங்களை பயன்படுத்தி அடையாளம் காண்பது என்பன.
காஷ்மீரத்தின் எண்ணற்ற மாவட்டங்களில், இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய 50க்கும் மேற்பட்டதான மோதல் படுகொலைகள் என்று குறிப்பிட்டவை குறித்தும், இவ்வறிக்கை ஆய்வு செய்தது. இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களில் 39பேர் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த எதிர்ப்பாளர்கள். 4 பேர் இந்து மதத்தை சேர்ந்த எதிர்ப்பாளர்கள். 7 பேர் எத்தகையினர் என தீர்மானிக்கப்பட இயலவில்லை. இந்த நிகழ்வுகளில் 49 பேர்கள் பாதுகாப்பு படையினரால் “அயல்நாட்டு தீவிரவாத கலகக்காரர்கள்” என்று முத்திரை குத்தப்பட்டவர்கள். ஒரு சடலம் நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டது. தொடர்ந்த ஆய்வுகளின் அடிப்படையில் இவர்களுள் 47 பேர் போலி மோதல் படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் என்றும் ஒருவர் உள்ளூர் தீவிரவாதி எனவும் அடையாளம் காணப்பட்டது.
சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் காஷ்மீரில் உள்ள 10 மாவட்டங்களில், மூன்று மாவட்டங்களில் மட்டுமே, பகுதியளவில் மட்டுமே ஆய்வுகளை மேற்கொள்ள முடிந்தது. எங்களது ஆய்வுகளும், துவக்கநிலை சாட்சியங்களும் அங்கு நிலவும் கடுமையான நிலைமையை சுட்டிக்காட்டுகின்றன. அனைத்து 10 மாவட்டங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமாயின் 1989ம் ஆண்டில் இருந்து காணாமல் போக நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் 8000க்கும் மேற்பட்டவர்களாக இருக்கக்கூடும் என மதிப்பிடுவது நியாயமானதாகவே இருக்கும். இது முகம் தெரியாத, அடையாளம் காணப்படாத திரளாக சடலங்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகளில் காணப்படும் சடலங்களின் எண்ணிக்கையுடன் இணையாக உள்ளது.
குற்றச்சாட்டுகள்
தற்போது நடைபெற்றுவரும் மோதல்கள் என்ற பின்னணியில் இந்தியாவினால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரத்தில் கொலைகளையும், வன்முறைகளையும் நிகழ்த்த கையாண்ட வழிமுறைகளும், திட்டங்களும் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகும். இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரத்தில், இந்திய ஆட்சி முறையானது மரணத்தையும், கட்டுப்பாட்டையும், சமூக கட்டுப்பாட்டிற்கான தந்திரங்களாக கையாண்டு வருகிறது. கட்டுப்பாடானது கண்காணிப்பினாலும், தண்டனையாலும்,அச்சத்தாலும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. “சட்டத்திற்கு புறம்பான” வழிகளிலும், சட்டத்தின் அங்கீகாரம் அளிக்கப்பட்டவர்களாலும் மரணங்கள் பரவலாக்கப்பட்டு வருகின்றன. ஆள்வதற்கான இந்த தந்திரங்கள் கொல்வதற்கும், சாவைப் பற்றிய அச்சத்தை மட்டுமல்லாது கொலை பற்றிய அச்சத்தை ஏற்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பரந்த அளவிலும் தீவிரமான முறையிலும் நடத்தப்படும் சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள், ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு எதிராக, இந்திய அரசின் ராணுவத்தாலும், துணை ராணுவப் படையினராலும் தொடர்ச்சியாகவும் விரிந்த அளவிலும் நடத்தப்படும் தாக்குதலின் ஒரு பகுதியே ஆகும். சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் இந்த அறிக்கையில் முன்வைத்துள்ள சாட்சியங்களை பரிசீலிக்கவும், ஒப்பீட்டு பார்க்கவும், பொருத்தமானதா என பரிசீலனை செய்யவும், நம்பத்தகுந்த சுயேச்சையான சர்வதேச அமைப்புகளை கேட்டுக்கொள்கிறது. இது மட்டுமன்றி, இவ்வமைப்புகள் இந்திய அரசை இதுபோன்ற ஆய்வுக்கு உட்படுத்திக்கொள்ளும்படி கோர வேண்டும் என முன்வைக்கிறது.
ஜம்மு-காஷ்மீரத்தில் இந்திய நிர்வாகம் மானுடத்திற்கு எதிராக கொடுமைகள் இழைத்துள்ளது என்ற கருத்தை சர்வதேச அமைப்புகளும் நிறுவனங்களும் பரிசீலிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் அவையும் அதன் உறுப்பு நாடுகளும் இந்திய அரசால் காஷ்மீரம் ராணுவமயப்படுத்தப்படுவதன் மோசமான விளைவுகளை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ ஆற்றலற்ற வகையில் உள்ன என நாங்கஷீமீ குறிப்பிட விரும்புகிறோம். இந்திய அரசால் நிர்வகிக்கப்படும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள முகம் தெரியாத, அடையாளம் காணப்படாத திரளாக சடலங்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் சாட்சியங்கள் குற்றவாளிகளை தண்டித்து பிற நீதித்துறை சமூகபோக்கின் ஊடே நீதியை பெறவும் பயன்படுத்தப்பட வேண்டும்.
1989க்கும், 2009க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரம் ராணுவமயமாக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட வன்முறையில் 70,000க்கும் மேற்பட்ட சாவுகள் நிகழ்ந்துள்ளன. இப்படுகொலைகள்,சட்டத்திற்கு புறம்பான அல்லது போலி மோதல் படுகொலைகள்,சிறைக் கொடுமைகள், பிற வழிகளிலான கொடுமைகள் மூலமாக நிகழ்த்தப்பட்டு உள்ளன. நிகழ்ந்து வரும் சச்சரவுகளில் (conflict) எந்தவித தண்டனையும் இன்றி, 6,67,000 ராணுவ, துணை ராணுவப் படையினர் தொடர்ந்து செயல்படுவதுடன் தொடர்ந்து காஷ்மீரத்தில் சட்டம் ஒழுங்கை முறைப்படுத்தி வருகின்றனர். இந்திய அரசே கூட சட்டம், அரசியல் மற்றும் ராணுவ நடவடிக்கைகளின் மூலம் இந்தியாவின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து மோதல்கள் நீடித்து கொண்டிருப்பதையே வெளிப்படுத்தி வருகிறது.
xxxxxxxx
இந்திய அரசே!
* ராணுவ மயமாக்கலை உடனே கைவிடு
* காஷ்மீரத்தில் உள்ள 6,67,000 ராணுவ, துணை ராணுவப் படையினரை வாபஸ் வாங்கு!
* ராணுவப் படையினருக்கான தனிச்சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் வாங்கு!
* அப்பாவி மக்களை மோதல் படுகொலை செய்த ராணுவ அதிகாரிகள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வகை செய்!
* காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையில் போராடும் மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்து!
வெளியீடு: குடியுரிமை பாதுகாப்பு நடுவம்
17, பாலாஜி மேன்சன், முள்ளுவாடி கேட் அருகில், சேலம் - 1