பணத்தையும் பறித்தார்கள் ஆனாலும் பிணத்தை?

புல்வாமா- கிராமத்து மக்களில் ஒரு பால்காரர். அவரது பெயர் குர்ஷித் அஹ்மத். அவர்தான் இப்போது காணமற்போன சமதுல்லாஹ் கானானெய், குலாம் நபி வாணி ஆகியோரை மீட்கும் குழுவின் தலைவர், காரணம் குலாம் நபி வாணியிடம் அவர் அத்துணை நெருக்கத்துடன் பழகினார். அவரை நன்றாக அறிவார்.

குலாம் நபி வாணியின் மனைவி ஜமீலா, பெண்கள் குழுவிற்கு தலைமையேற்றாள். கிராமம் முழுவதும் இராணுவம் அழைத்துச் சென்றவர்கள் பற்றிய பரபரப்பான பேச்சு! எல்லோரும் கூடி அவ்வப்போது இராணுவத்தினர் அழைத்துச் சென்றது அநியாயம். அவசியம் போராடி இராணுவத்தினர் தூக்கிச் சென்ற இருவரையும் மீட்டே ஆகவேண்டும் எனப் பேசிக் கொண்டனர். இது கணவனை பறிகொடுத்த மனைவியர் இருவருக்கும் ஆறுதலாக இருந்தது.

kashmir_lady_620

அகவே அடுத்த நாள் பால் வியாபாரி குர்ஷித் அஹ்மதிடம், ஜமீலாவும் தலைமை தாங்க சமதுல்லாஹ் கனானெய், குலாம் வாணி இருவரையும் அவசியம் மீட்டு விடுவோம் என்ற நம்பிக்கையில் சாக் பாஞ்சிபோரா என்ற இராணுவ முகாமிற்கு ஒரு வேனில் விரைந்தார்கள். அங்கே தான் அவர்களுக்கு அந்தப் பேரதிர்ச்சி காத்திருந்தது.

சமதுல்லாஹ்வும் குலாம் நபி வாணியும் இராணுவத்தோடு மோதியதாகவும் இராணுவம் அவர்களிடம் கடுமையாக நடந்திட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானதாகவும் இதனால் அவர்கள் இறந்து விட்டதாகவும் கூறினார்கள்.

புல்வாமா கிராமத்திலிருந்து வந்தவர்களால் இந்த அதிர்ச்சியைத் தாங்கிடவே இயலவில்லை. குலாம்நபி வாணியின் மனைவி இதுவரை சேர்த்து வைத்திருந்த அனைத்து நெஞ்சுரத்தையும் இழந்தாள். மூர்ச்சையாகி வீழ்ந்தாள்.

சமதுல்லாஹ் கானானெய் மனைவி வஹீதா நெஞ்சில் அடித்து அழுதாள். அலறினாள். பின்னர் தன்னை இழந்தவளாய் கிராமத்து மக்கள் கையில் வீழ்ந்தாள். புல்வாமா கிராமத்திலிருந்து வந்த யாராலும் அந்த அதிர்ச்சியைத் தாங்கிட இயலவில்லை. சிறிது நேரம் எல்லோரும் அமைதியாக அழுதார்கள். ஆண்களில் சிலர் அடப்பாவிகளே எனக் குமுறினார்கள்.

உண்மையில் அவர்கள் செய்வதறியாது திணறினார்கள். குர்ஷித் பாய் காட்டிய ஆர்வம் மடிந்து போனது. ஏனெனில் நிச்சயமாக அவர் இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும் முதல் முதலில் நெஞ்சுரத்தை வரவழைத்துக் கொண்டு தங்களிடம் பணம் வாங்கிய இராணுவ அதிகாரியிடம் அவர்தான் முதன் முதலில் பேசினார்.

"நேற்று இன்று வாருங்கள் விட்டு விடுகின்றோம் என்றீர்கள். இன்று இப்படிச் சொல்லுகின்றீர்களே" என்றார்.

அதற்கு அந்த இராணுவ அதிகாரி "நீங்களெல்லாம் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருகின்றவர்கள். அதனால் உங்கள் கிராமத்து ஆண்கள் அனைவரையும் நாங்கள் கைது செய்ய வேண்டும். ஆனால் நாங்கள் நீங்கள் பாதுகாப்புத்தந்த இரண்டு தீவிரவாதிகளை மட்டும் தான் அழைத்துவந்தோம். அவர்களுடைய திமிரால் அவர்கள் மரணத்தை தருவித்துக் கொண்டார்கள்" என்றார்.

இதற்கு குர்ஷித் மிகவும் பணிவான குரலில் "நான் அவர்களை சிறுவயது முதலே அறிவேன். அவர்கள் எங்கள் கிராமத்தில் எங்கள் கண்களுக்கு முன்னாலேயே வளர்ந்தவர்கள். வாழ்ந்தவர்கள். நான் தான் அவர்கள் வீடுகளுக்குப் பால் ஊற்றுகின்றேன். அவர்கள் இராணுவத்தோடு மோதுகின்ற அளவுக்கு இங்கீதம் இல்லாதவர்கல்லர்" என்றெல்லாம் விளக்கங்கள் சொன்னார்.

இதற்கு அந்த இராணுவ அதிகாரி ஒற்றை வரியில் இப்படிப் பதில் சொன்னான். "உன் கதையெல்லாம் எங்களுக்குத் தேவை இல்லை. நடந்ததது இதுதான். நீங்கள் அந்த பெண்களை எங்கள் முகாமுற்கு வெளியே அழைத்துச் சென்றுவிடுங்கள். இனியும் அவர்கள் இங்கே இருந்தால் நாங்கள் எங்கள் பாணியில் நடவடிக்கை எடுப்போம்" என மிரட்டினான்.

செய்வதறியாது அந்த இடத்தை விட்டு அகன்றார் குர்ஷித். ஏனெனில் எதையும் செய்ய தயங்க மாட்டார்கள் இந்த இராணுவத்தினர் என்பதை அறிந்தார். மூர்ச்சையாகிக் கிடந்த ஜமீலாவின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை ஓரளவுக்கு தேற்றி வைத்திருந்தார்கள் ஏனைய கிராமத்தவர்கள்.

சமதுல்லாஹ் கானானெய் மனைவியும் ஓரளவுக்குத் தேறி இருந்தாள். அந்த இராணுவ அதிகாரி கூறியதைப் போல் அந்த இராணுவ முகாமிற்கு வெளியே வந்தார்கள் அனைவரும்.

இப்போது கிராமத்தவர்கள் சிலர் வீரீயமாக பேசினார்கள். "அடப்பாவிகளே நாற்பதாயிரம் ரூபாரை வாங்கிய போது அவ்வளவு அழுத்தமாக சிறு விசாரணைத்தான் உடனேயே விட்டுவிடுவோம் என்றார்களே. ஆனால் இப்போது அத்துணை நெஞ்சழுத்ததோடு கொன்று விட்டோம் என்கின்றார்களே" என அழுது புலம்பினார்கள்.

இந்த நாற்பதாயிரம் ரூபாய் என்ற பேச்சு அவர்களிடையே விவாதமானது. ஏனெனில் அவர்கள் ஒவ்வொருவரும் உதிரம் சிந்தி உண்டாக்கிய பணம் அது.

பால்காரர் குர்ஷிதுக்கு நாற்பதாயிரம் ரூபாயை நினைத்தவுடன் கும்பியெல்லாம் நெருப்பாய் எரிந்தது. அந்த இராணுவ அதிகாரியிடம் அதைக் கேட்டே ஆகவேண்டும் என முடிவு கட்டினார்.

இதனை சக கிராம வாசிகளிடம் ஆலோசித்தார். அவர்கள் அநியாயக்காரர்கள் படுகொலை செய்யவே பயப்படாதவர்கள். எங்கே அதைத் தரப் போகின்றார்கள். பொன்னான பிள்ளைகள் இரண்டு பேரை இழந்தோம். பணம் தானே போனது போகட்டும் விட்டுவிடு என்றார்கள்.

ஆனால் குர்ஷித் அஹ்மதுக்கு மனம் பொறுக்கவில்லை. எப்படியும் அந்த நாற்பதாயிரத்தையும் பற்றிக் கேட்டேயாக வேண்டும். என்ன வந்தாலும் சரிதான் என முடிவு செய்தார். கிராமவாசிகளிடம் தனது முடிவைச் சொன்னார். அவர்கள் மீண்டும் மீண்டும் வேண்டாம் எனச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

ஆனாலும் குர்ஷித் அஹ்மத் விடுவதாக இல்லை. நேரே அந்த இராணுவ அதிகாரியை நோக்கி விரைந்தார். "உணர்ச்சி வயப்பட்டவராக அந்த இருவரையும் கொலை செய்யவா எங்களிடம் நாற்பதாயிரம் ரூபாயைப் வாங்கினீர்கள்?" என உரக்க கேட்டார்.

அந்த இராணுவ அதிகாரி சட்டென்று எழுந்தவனாய் குர்ஷித்அஹ்மத் இன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். "இவனை இழுத்துச் சென்று ரோட்டில் எறியுங்கடா! எல்லாரும் ஐந்து நிமிடங்களுக்குள் இடத்தைக் காலி பண்ணவில்லை என்றால் சுட்டுத் தள்ளுங்கள்" என்றான்.

வாங்கிய அடியால் திக்கு முக்காடிப் போய்விட்டார் குர்ஷித் அஹ்மத். அடுத்ததென்ன..? என அவர் சிந்திக்கத் தலைப்படுமுன் அங்கே நின்ற சிப்பாய்கள் அவரை செந்தூக்காய்த் தூக்கிக்கொண்டு போய் ரோட்டில் போட்டார்கள்.

ஏனைய கிராமத்தவர்கள் அதிர்ந்தார்கள். ஆனால் சுதாரித்துக் கொண்டார்கள். ஒடோடி சென்று குர்ஷித் அஹ்மத்-ஐ தூக்கினார்கள் தாங்கள் வாடகைக்கு அமர்த்தி வந்த வேனில் ஏற்றினார்கள். அந்த பெண்களையும் ஏனைய கிராம வாசிகளையும் வேனில் ஏற்றினார்கள். பதற பதற, கதற கதற அந்தப் பெண்களோடு புல்வாமா கிராமம் வந்து சேர்ந்தார்கள்.

சமதுல்லாஹ் கனானெய்-யும் குலாம் நபி வாணியையும் அழைக்கச்சென்ற வேன் திரும்பி வந்ததும் கிராமவாசிகள் மகிழ்ச்சி பொங்க அவ்விருவரையும் பார்க்க ஆவலாய் ஓடோடிவந்தார்கள் வேனை சுற்றி வளைத்தார்கள்.

ஆனால் அரை நொடியில் அனைவரின் அகமும் வறண்டது. எங்கே அவர்களை எனக் கேட்டார்கள். அழுகையையே பதிலாக தந்தார்கள் வேனில் வந்தவர்கள். விபரத்தை அறியுமுன்னே கிராமத்து மக்களின் கண்கள் குளமாகின. குழுமிய மக்கள் வேனிலிருந்தவர்கள் இறங்கிக் கொண்டிருக்கும் போதே என்னதான் நடந்தது சொல்லுங்களேன் என அதட்டினார்கள்.

வேனிலிருந்து இறங்கியவர்களுள் ஒருவர் கொன்று விட்டார்கள் என்றார் தழுதழுத்தக்குரலில். வெறுப்போடு கிராமத்து வாசிகள் ஓவென்று ஒருமித்த குரலில் அழுதார்கள். ஆறுதல் சொல்வார் யாருமில்லை அந்த அப்பாவி கிராமவாசிகளுக்கு. ஆளுகையின் ஊடே ஒருவர் ஜனாஸாக்களை (உடல்களை) எங்கே என வினவினார்.

"எதையும் பேசும் அவகாசம் அங்கே இல்லை. நாங்கள் இவ்வளவு வேகமாக அங்கே இருந்து கிளம்பவில்லை என்றால் எங்களையும் நீங்கள் உயிரோடு பார்த்திருக்கமுடியாது" என்றார் ஒருவர்.

அந்த இரு பெண்களையும் கைத்தாங்கலாய் இல்லம் அழைத்துச் சென்றார்கள். போகும் போது உற்சாகமாய் போன குர்ஷித் அஹ்மத் இப்போது மூச்சு பேச்சில்லாமல் நின்று கொண்டிருந்தார். கிராமவாசிகளிடம் நடந்ததை வேனில் வந்தவர்கள் விவரித்தார்கள்

செய்வதறியாது கிராமவாசிகள் ஆங்காங்கே சிதறி சிறு சிறு குழுக்களாக நின்றும் அமர்ந்தும் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவர்களாக அஸர் தொழுகைக்குப்பின் என்ன செய்வதென்று ஆலோசனை செய்வது என அறிவித்தார்கள். இதனை ஒலிப்பெருக்கியிலும் சொன்னார்கள். வழக்கமாக பாங்கொலி எப்போதாவது ஒலித்த பள்ளிவாசல், ஒலி பெருக்கி இப்போது அடிக்கடி அதிர்ந்தது.

பாங்கொலியை எழுப்பிக் கொண்டிருந்த மஸ்ஜித் ஊழியர் எல்லாவற்றிற்கும் தானே காரணம், ஏனெனில் நாம் தான் ஒலிப்பெருக்கியில் எல்லோரையும் அழைத்தோம் எனக் எண்ணிடத் தலைப்பட்டார். அதனால் சதா சர்வகாலமும் கண்ணீரில் நீந்திக்கொண்டிருந்தார்.

இரவு தொழுகையின் நேரம் வந்தது வழக்கம் போல் தொழுகைக்கான அழைப்பை விடுத்தார். கவிழ்ந்ததலை நிமிராமல் அனைவரும் பள்ளிவாசலை நோக்கி வந்தார்கள். தொழுகை முடிந்தது. வழக்கம் போல் ஊர் கூட்டத்திற்கு அமருவதைப் போல் வட்டமாக அனைவரும் அமர்ந்தார்கள்.

நாற்பதாயிரம் ரூபாயை இழந்ததைப் பற்றியே பேச்சுக்கள் சுழன்றன. பணத்தையும் பறித்துவிட்டு பிணமாக்கி விட்டார்களே! என ஆதங்கப்பட்டார்கள்.

குர்ஷித் அஹ்மத், "சரி இனி உடலையாவது வாங்கி வந்து அடக்கம் செய்வோம்" என்றார். இனி நாம் போனால் எரிந்து விழுவார்கள் வேறு யாதேனும் செல்வாக்குடையவர்களை வைத்துத்தான் பிணங்களை வாங்கிட முடியும் என்ற முடிவுக்கு வந்தார்கள். அதற்கான வழிகளை ஆராய்ந்தார்கள்.

காணாமற் போனவர்களின் பெற்றோர்கள் கழகத்தை ஒருவர் பரிந்துரைத்தார். அதன் தலைவர் பர்வீனாவைப் பார்க்கலாம் என்றார். அடுத்த நாள் அதிகாலையில் பால்காரர் குர்ஷித் அஷ்மத் அவர்களின் தலைமையில் ஒரு குழு புறப்பட்டு காணமற் போனவர்களின் பெற்றோர்கள் கழகத்தலைவி பர்வீனாவை சந்திப்பது என முடிவாயிற்று. இந்தக் கழத்தின் தலைவி வழி அந்தப் பிணங்களைப் பெறுவது என முடிவாயிற்று.

அடுத்த நாள் வைகறை தொழுகையை முடித்ததும் முடிக்காததுமாய் பர்வீனாவை சந்தித்தார்கள். பர்வீனா முழுக்கதையையும் அமைதியாக செவிமடுத்தாள். பின்னர் சாதிக்க முடிந்தது எதுவுமில்லை. இருந்தாலும் இந்தப் பிணங்களைப் பெற்றுத் தந்திடலாம் என்று தான் கருதுகின்றேன் என்றாள்.

ஆனால் இராணுவத்தினர் வாங்கிய நாற்பதாயிரம் ரூபாயைப் பற்றி யாரும் பேசிடக்கூடாது. இராணுவம் வாங்கிய லஞ்சத்தைப் பற்றிப் பேசினால் முழுக்கதையும் கெட்டுவிடும் என்றார்கள். இராணுவத்தினர் அப்பாவிகளிடம் பணம் பறிப்பது சாதாரண விஷயம் என்றார்கள்.

புல்வாமா கிராமத்திலிருந்து வந்த அத்தனைபேரும் ஒன்று போல் தலையை ஆட்டிட சம்மதம் தெரிவித்தார்கள். ஆனால் அவர்களின் மனம் சற்றும் ஒப்பவில்லை. இப்போது பிணம் வேண்டும் அவர்களுக்கு. எல்லோரும் எழுந்து புல்வாமா கிராமத்தவர்கள் வந்த வேனில் ஏறி சாக் பாஞ்சி புராவிலுள்ள ராஷ்டிரிய்யரை புல்ஸ் முகாமிற்கு சென்றார்கள்.

அந்த முகாமில் இருந்த அதிகாரிகளில் பலர் பர்வீனாவை நன்றாக அறிந்திருந்தார்கள். அதனால் முகாமிற்குள் செல்வதில் எந்தக் கஷ்டமும் இருக்கவில்லை. என்றாலும் இராணுவத்தினர், பர்வீன் அவர்கள் முகாமிற்குள் வருவதை விரும்பவில்லை என்பதை அவர்களின் முகங்கள் காட்டின.

மூத்த அதிகாரி ஒருவரிடம் பர்வீனா சென்றாள். "புல்வாமா கிராமத்து மக்கள் பிணங்களை கேட்கின்றார்கள்" என்றாள்.

"சரி எடுத்துவிட்டு போங்கள். அரசு மருத்துவமனையில் தான் அவை இருக்கின்றன. அங்கே செல்லுங்கள்" எனக் கூறிவிட்டார்கள். "மாலையில் நீங்கள் வந்து அதற்கான உத்தரவைப் பெற்றுக் பெற்றுக்கொள்ளுங்கள்."

சரி எனச் சொல்லிவிட்டு பர்வின் புல்வாமா கிராமத்து மக்களிடம் வந்தாள்.

"நீங்கள் உடல்களை மாலையில் வாங்கிக் கொள்ளலாம். மாலையில் நானே வந்து பெற்றுக் கொள்கின்றேன்" என்றாள்.

புல்வாமா கிராமத்து மக்கள் நாங்கள் ஒரு கண்பார்த்துச் செல்லுகின்றோம் என்றார்கள். பர்வீன் அதற்கான அனுமதியைப் பெற்றுத்தந்திட வேண்டும் எனக் கேட்டார்கள். பர்வீனா "அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. நான் போய் பிணங்களிருக்கும் இடங்களையும் தெரிந்து கொண்டு அனுமதியையும் பெற்று வருகின்றேன்" எனத் திரும்பச் சென்றாள்.

சென்றவள் சற்று நேரத்திற்கெல்லாம் திரும்பி வந்தாள். கையில் ஒரு சீட்டை வைத்திருந்தாள். அரசின் பிணவறையில் பிணங்கள் இருப்பதாகவும் பிணங்களைப் பார்க்க அனுமதிக்கும் சீட்டைத் தான் பெற்றுவிட்டதாகவும் கூறினாள்.

ஏதோ பர்வீனா தங்களுக்காக நிறைய உதவி செய்து விட்டதாக புல்வாமா கிராமத்து மக்கள் நினைத்து நன்றி சொன்னார்கள். பின்னர் அதே வேனில் ஏறி எல்லோரும் அரசு மருத்துவமனைக்குச் சென்றார்கள்.

அரசு மருத்துவமனையில் சீட்டைக் கொடுத்தாள் பர்வீனா, பர்வீனா அரசு மருத்துவ மனையிலும் பிரபல்யமாகி இருந்தாள். அங்கே சிப்பந்திகளில் பலர் பர்வீனாவுக்கு முகமன் சொன்னார்கள். நலம் விசாரித்தார்கள். பர்வீனாவையும் புல்வாமா கிராமத்தவர்களில் சிலரையும் பிணவறைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அங்கே இரண்டு பிணங்களைக் காட்டினார்கள். அவற்றின் ஒன்றில் மன்சூர் அஹ்மத் டிரேலி என்று எழுதி இருந்தது. இன்னொன்றில் மஹ்மத் யூசுஃப் எனப்பெயர் எழுதி இருந்தது. பிணங்களை புல்வாமா கிராமத்தவர்களிடம் காட்டினாள் பர்வீனா. "பார்த்து விட்டீர்களா போகலாமா?" என்றார்கள்.

கிராமத்தவர்கள் "இவை எங்கள் பையன்களின் பிணமல்ல" எனக் கூறினார்கள். அந்தப் பிணங்களும் முஸ்லிம்களின் பிணங்கள் தாம். யார் பெற்ற பிள்ளைகளோ? எனக் கண்ணீர் வடித்தார்கள்.

பர்வீனா மீண்டும் மீண்டும் கிராமத்தவர்களிடம் கேட்டாள். அவர்கள் தங்கள் கிராமத்திலிருந்து தூக்கி வரப்பட்டவர்கள் இவர்களல்ல என்பதைத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் கூறிவிட்டார்கள். பர்வீனாவுக்கு தலைசுற்றும் போலிருந்தது. கிராமத்துவாசிகள் எங்கள் கிராமத்திலிருந்து தூக்கிவரப்பட்டவர்கள் சமதுல்லாஹ் கானானெய் என்பவரும் குலாம் நபி வாணி என்பவருந்தான் என்பதைத் தெளிவுபடுத்தினார்கள்.

பர்வீனா மீண்டும் 'குலாம் நபி வாணி' என ஒரு காகிதத்தில் எழுதித் தந்து "இந்தப் பிணங்களைக் காட்டுங்கள்" என்றாள்

அரசு மருத்துவமணையிலிருந்தவர்கள் பிணங்களின் பெயர் பட்டியலில் இவர்களின் பெயர்கள் இருக்கின்றனவா? என்பதைத் தெரிந்திட அங்கிருந்த ஆவணங்களைத் தேடினார்கள். பர்வீனாவும் அவர்களுடன் இணைந்து தேடத் தொடங்கினாள்.

எல்லோரும் பிணங்களின் பட்டியலைக் கூர்மையாகத் தேடிக்கொண்டிருந்தனர்.

தேடிக் கொண்டிருந்த பெண்ணொருத்தி புல்வாமா கிராமத்தவர்களிடம் "உங்களில் இருவர் அந்த பிணவரையிலிருக்கும் பிணங்களில் உங்கள் ஊரைச் சார்ந்வர்களின் பிணங்கள் இருக்கின்றனவா எனப்பாருங்கள்" எனக் கூறினார்கள்.

குர்ஷித் அஹ்மதும் மற்றவர்களும் பிணங்களைத் தேடிடத் தொடங்கினார்கள். பிணவறையில் எங்கேயும் சமதுல்லாஹ் கானானெய், குலாம் நபி வாணி ஆகியோரின் பிணங்களைக் காணவில்லை.

புல்வானா கிராமத்து மக்கள் திரும்பிவந்து ஆவணங்களை துளாவி தளர்ந்து போயிருந்த பர்வீனாவிடம் வந்தார்கள். "பிணக்கிடங்கில் அவர்கள் இல்லை என்றார்கள் ஆவணங்களில் ஏதேனும் தெரிந்ததா?" என பர்வீனாவைக் கேட்டார்கள்.

பர்வீனா ஆவணங்களில் அவர்கள் பற்றி எதுவுமில்லை. இராணுவத்தினர் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் எனக் கூறுவது பொய்யாக இருக்கலாம். நாம் அவர்களிடம் திரும்பிப் போவோம் என்றார்கள். அதே வேனில் மீண்டும் அதே இராணுவ முகாமிற்கு வந்தார்கள். அதே இராணுவ அதிகாரி அங்கே இருந்தான். அவனிடம் விஷயத்தைச் சொன்னார்கள்.

முழுப்பூசணியைச் சோற்றில் மறைத்தவன் போல் அந்த அதிகாரி "நீங்கள் சொல்வதைப்போல் யாரையும் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் உங்களிடம் பெயர் எழுதித் தந்தவர்களைத் தான் அழைத்து வந்தோம். அவர்கள் பண்ணிய கலாட்டாக்களால் தாம் நாம் அவர்களை என்கவுண்டரில் அவர்களை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று" என்றான். எத்தனை முறை சொல்லியும் அவர்கள் தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தாம் என சாதித்துவிட்டார்கள்.

பர்வீனாவால் இராணுவ அதிகாரியின் பதிலைப் புரிந்திட முடிந்தது. காரணம் எத்தணையோ முறை இதுபோன்ற அதிர்ச்சியும் ஆச்சர்யமும் நிறைந்த சூழ்நிலைகளை அவள் எதிர் கொண்டிருக்கின்றாள். ஆனால் புல்வானா கிராமத்து மக்கள் அத்துணை எளிதாக இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர் கொண்டிடமாட்டார்கள் என்பதை அவள் அறிவாள்.

ஆகவே அவர்களிடம் "ஏமாற்றத்திலும் நல்லது ஒன்று நடந்திருக்கின்றது. உங்கள் கிராமத்தைச்சார்ந்த சமதுல்லாஹ் கானானெய்யும் குலாம் நபி வாணியும் கொலை செய்யப்படவில்லை. அவர்கள் உயிருடன் இருக்கும் வாய்ப்புகள் அதிகம். நான் எங்கள் அமைப்பு வழி நாங்கள் வழக்கமாக எடுக்கும் நடவடிக்கைளை எடுக்கின்றேன். நீங்கள் சமதுல்லாஹ் கானானெய்-இன் மனைவியையும் குலாம் நபி வாணியின் மனைவியையும் சமாதானப்படுத்துங்கள். என் சார்பில் அவர்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள்" என்று கூறினாள்.

புல்வானா கிராமத்து மக்களுக்கு ஓர் பேரிழப்புலிருந்து விடுபட்டுவிட்டதாக ஆறுதல். சமதுல்லாஹ் கானானெயும் குலாம்நபி வாணியும் உயிருடன் இருக்கும் வாய்ப்புகள் இருக்கும் என்றால் நாம் அவர்களை எப்படியும் தேடிக் கண்டுபிடித்துவிடலாம் என முடிவு செய்தார்கள். அவர்களின் மனங்களுக்கு இன்றும் இதமாக இருந்தது பர்வீனாவின் முயற்சியும் ஆறுதலான வார்த்தைகளுந்தான். பர்வீனாவிடம் அவர்கள் ஒரு தீர்வைப் பார்த்தார்கள் புல்வானா கிராமம் வந்ததும் அவர்கள் நேரே குலாம் நபி வாணியின் மனைவி சமதுல்லாஹ்வின் மனைவி ஆகியோரைத் தான் சந்தித்தார்கள். அவர்களிடம் நடந்ததை சொன்னார்கள்.

தங்கள் கணவன்கள் இறக்கவில்லை என்ற செய்தி அவர்களுக்கு ஆறுதலை தந்தது. என்றாலும் அவர்கள் முழு அளவு தங்களைத் தேர்த்திக் கொள்ள இயலவில்லை. கிராமவாசிகள் வெறுங்கையோடு வந்தது அவர்களுக்கு வெறுப்பைத் தந்தது. சமதுல்லாஹ் கானானெய்-இன் மனைவி வஹீதா எல்லாவற்றிக்கும் சிரித்தாள். கிராமத்தவர்கள் அவள் கணவன் இறக்கவில்லை. உயிருடன் தான் இருக்கின்றார் என்பதை அறிந்துதான் சிரிக்கின்றாள் என நினைத்தார்கள். ஆனால் அவள் எல்லாவற்றிக்கும் சிரிக்கவே கிராமத்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் மனநிலை பாதிக்கப்பட்டுத்தான் சிரிக்கின்றாள் என்பதைப் புரிந்திட அவர்களுக்கு அதிக நேரமாயிற்று.

ஆமாம் அவள் மனநிலை பாதிக்கப்பட்டு பல மணிநேரங்கள் ஆகிவிட்டன. வெளுத்ததெல்லாம் பால் என்றே வாழ்ந்து போய் விட்ட கிராமவாசிகள் சிரிப்பதெல்லாம் சந்தோஷத்தின் சிரிப்பே என எடுத்துக் கொண்டார்கள்

ஆனால் வஹீதா எல்லாவற்றிக்கும் சிரிக்கும் நிலைக்கு வந்துவிட்டாள். இனி கஷ்மீரில் அவள்போல் வாழ்ந்து கொண்டிருக்கும் எண்ணற்றவர்களுள் அவளும் ஒருத்தி..