பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளைக் காட்டத் தேவைப்படுகின்ற குறிகளை ‘நிறுத்தக்குறிகள்’ என அழைக்கிறோம். பின்வரும் நிறுத்தக்குறிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

1. கால்புள்ளி ( , )

2. அரைப்புள்ளி ( ; )

3. முக்கால்புள்ளி ( : )

4. முற்றுப்புள்ளி ( . )

5. கேள்விக்குறி ( ? )

6. உணர்ச்சிக்குறி ( ! )

7. இரட்டை மேற்கோள்குறி ( “ ” )

8. ஒற்றை மேற்கோள்குறி ( ‘ ’ )

9. மேற்படிக்குறி (”)

10. பிறை அடைப்பு ( )

11. சதுர அடைப்பு [ ]

12. இணைப்புக்கோடு (-)

13. சாய்கோடு (/)

14. அடிக்கோடு ( _ )

15. உடுக்குறி (*)

நிறுத்தக்குறிகளைப் பயன்படுத்த சில விதிமுறைகள் அவசியம்.

1. கால்புள்ளி ( , )

கால்புள்ளி இட வேண்டிய இடங்கள்:

1.1 ஒரே எழுவாயைக் கொண்டு அடுக்கி வரும் முற்றுவினைகளுக்கு இடையில் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

உங்கள் நூலைப் படித்தேன், ரசித்தேன், சிரித்தேன்.

1.2 ஒரே பெயரைத் தழுவும் சொற்களுக்கு இடையிலும் தொடர்களுக்கு இடையிலும் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

இங்குச் சாதி, மத, நிற வேறுபாடுகள் கிடையாது.

1.3 ஒரே வினையைத் தரும் சொற்களுக்கு இடையிலும் தொடர்களுக்கு இடையிலும் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

அந்தப் பாடல் இனிமையாக, சுகமாக, எளிமையாக, நயமாக இருந்தது.

1.4 தொடர்புபடுத்திக் கூறப்படும் சொற்களுக்கு இடையிலும் தொடர்புகளுக்கு இடையிலும் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

தாய், தந்தை இருவர் முகத்திலும் மகிழ்ச்சி.

1.5 ஒரே சொல் அல்லது தொடர் இருமுறை அடுக்கி வரும்போது அவற்றிற்கு இடையில் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

பகுத்தறிவு, பகுத்தறிவு என்று பேசாதீர்.

1.6 ஒரு வாக்கியத்தை அதன் முன் உள்ள வாக்கியத்துடன் தொடர்புபடுத்தும் சொற்களையும் தொடர்களையும் அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

அவர் நல்லவர். ஆனால், வல்லவர் அல்ல.

அங்குச் சென்றனர். அடுத்து, ஓய்வு எடுத்தனர்.

1.7 வாக்கியத்தின் தொடக்கத்தில் வாக்கியத்திற்கே வினையடையாக வரும் சொற்களையும் தொடர்களையும் அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

பொதுவாக, அவர் அரசியலில் ஈடுபாடு கொள்வதில்லை.

1.8 ‘குறிப்பாக’, ‘அதாவது’ என்னும் சொற்களைக் கொண்ட தொடருக்கு முன்னும் பின்னும் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள், நல்ல உழைப்பாளிகள்.

1.9 அழுத்தத்திற்காக வரிசைமுறை மாற்றி எழுதப்படும் தொடர்களுக்கு இடையில் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

அறையில் மண்டிக்கிடந்தது, குப்பை.

1.10 ஒரு முழுமையான கூற்று வாக்கியத்தைத் தொடர்ந்து வரும் ‘இல்லையா’, ‘அல்லவா’ போன்ற சொற்களுக்கு முன் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

ஆசிரியர் கடுமையாகத் திட்டினார், இல்லையா?

1.11 ஒரே வாக்கியத்தில் அடுக்கி வரும் வினாத் தொடர்களுக்கு இடையில் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

அவன் வருவானோ, மாட்டானோ?

1.12 ஒரே வாக்கியத்தில் அடுத்தடுத்து வரும் ஏவல் வினைகளுக்கு இடையில் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

அவரைத் தடுக்காதே, செல்ல விடு.

1.13 எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையில் தொடர் வரும்போது எழுவாயை அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

என் தங்கையின் திருமணம், வருகிற 30ஆம் தேதி நடைபெற உள்ளது.

1.14 உணர்ச்சிகளைத் தெரிவிக்கும் வாக்கியத்தில் இடம்பெறும் உணர்ச்சியைக் குறிப்பிடும் சொல்லை அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

சே, என்ன வாழ்க்கை இது!

ஆ, என்ன அழகு!

1.15 வாக்கியத்தின் தொடக்கத்தில் வரும் ‘ஆமாம்’, ‘இல்லை’, ‘ஓ’, ‘ஓகோ’போன்ற சொற்களை அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

ஆமாம், நான் ஏழைதான்.

இல்லை, நான் பள்ளிக்குச் செல்லவில்லை.

ஓ, நீங்கள் போகலாம்.

ஓகோ, நீங்கள்தான் மாணவர் தலைவரா?

1.16 இரு வினாக்களுக்கு இடையில் வரும் ‘இல்லை’ என்ற சொல்லை அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

இது சரியா, இல்லை, தவறா?

1.17 விளிக்கும் சொற்களை அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

“பாட்டி, சாப்பீட்டீர்களா?” என்றான் பேரன்.

1.18 கடிதத்தில் இடம்பெறும் விளிக்கும் சொல் அல்லது தொடர், முடிக்கும் சொல் அல்லது தொடர் ஆகியவற்றை அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

ஐயா,

அன்புள்ள தங்கைக்கு,

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

1.19 முகவரியில் பெயர், பதவி, நிறுவனம் போன்ற விவரங்கள் ஒவ்வொன்றையும் அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

முனைவர் கண்ணகி,

செயலாளர்,

41, இலக்குவனார் சாலை,

அண்ணா நகர்,

சென்னை.

1.20 தலைப்பு எழுத்தைப் பெயருக்குப் பின்னால் பயன்படுத்தும்போது பெயரை அடுத்துக் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

கோவலன், மா.

1.21 பட்டங்களைக் குறிக்கும் சுருக்கக் குறியீடுகளுக்கு இடையில் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

முனைவர் சு. செல்லப்பன் எம்.ஏ., பி.டி., பி.எல்., பிஎச்.டி.

1.22மாதத்தின் பெயரைத் தொடர்ந்து வரும் தேதிக்கும், ஆண்டுக்கும் இடையில் கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

ஏப்ரல் 30, 2014

2. அரைப்புள்ளி ( ; )

அரைப்புள்ளி இட வேண்டிய இடங்கள்:

2.1 ஒரு குறிப்பிட்ட கருத்தை மையமாகக் கொண்ட முற்றுத்தொடர்களுக்கு இடையில் அரைப்புள்ளி இட வேண்டும்.

எ-டு

எல்லாப் பணிகளிலும் தமிழ் இடம்பெற வேண்டும்;

தமிழ்மொழி வளர வேண்டும்; தமிழ் சிறப்புப்பெற வேண்டும்.

2.2 ‘ஒப்புமைப்படுத்துதல்’, ‘மாறுபட்ட நிலைகளை இணைத்துக் காட்டுதல்’என்னும் பொருட்கூறுகளை அடிப்படையாகக் கொண்ட முற்றுத் தொடர்களுக்கு இடையில் அரைப்புள்ளி இட வேண்டும்.

எ-டு

அறிஞர் அடக்கமாக இருப்பர்; மூடர் ஆரவாரம் செய்வர்.

தாய், மகள் இருவரும் ஒரு பக்கம்; தந்தை மட்டும் இன்னொரு பக்கம்.

2.3 ஒரு தொகுப்பு ஒன்றுக்கு மேற்பட்ட விவரங்களைக் கொண்டிருக்கும்போது தொகுப்புகளுக்கு இடையில் அரைப்புள்ளி இட வேண்டும்.

எ-டு

வெற்றி பெற்றவர்கள்:

கண்ணகி, கோவை; மணிமேகலை, சேலம்; கௌதமி, திருச்சி;

வாசுகி தருமபுரி; இந்திரா, சென்னை.

3. முக்கால்புள்ளி ( : )

முக்கால்புள்ளி இட வேண்டிய இடங்கள்:

எ-டு

எல்லோரும் கேட்ட கேள்வி: அடுத்த சந்திப்பு எப்போது?

சொத்து வரி: முழுச் சொத்து மதிப்பின் மீதான வரி.

பட்டா : நிலம், வீட்டு மனை முதலியவை குறித்த ஆவணம்.

3.1 விவரங்களைப் பட்டியல் முறையில் ஒன்றன்பின் ஒன்றாகத் தரும்போது முக்கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

பெயர் : கொ. அமுதினி

பிறந்த தேதி : 17 . 1 . 1 996

பிறந்த ஊர் : சென்னை

3.2 ஒருவரை அவருடைய செயல்பாட்டோடு அல்லது செயல்பாட்டுக்கு உரியதோடு தொடர்புபடுத்த முக்கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

வசனம் : சோமு

இயக்கம் : யாழினி

பாட்டு : மணி

3.3 தலைப்புச் செய்திகளில் தலைப்புக்கும் அதனோடு தொடர்புடைய நபர், நிறுவனம் போன்றவற்றிற்கும் இடையில் முக்கால்புள்ளி இட வேண்டும்.

எ-டு

இடைத்தேர்தல் : சம்பத் ஆணை

சரக்கு வரி : மத்திய அரசு சட்டம் இயற்ற வலியுறுத்தல்

4. முற்றுப்புள்ளி ( . )

எ-டு

திருமணம் என்பது காலத்தின் கட்டாயம்.

 “இந்த உலகில் மனிதன்தான் உயர்ந்தவன்.”

பின்வரும் இடங்களில் முற்றுப்புள்ளி தேவை இல்லை.

எ-டு

திருமதி விசாலாட்சி

சேலம் க. மாதவன்

அறிஞர் அண்ணா

முனைவர் இரா. மணிவேலன்

செந்தமிழ்ச்செல்வர் பன்மொழிப்புலவர் கா. அப்பாதுரை

5. கேள்விக்குறி ( ? )

5.1 வினா வாக்கியத்தின் முடிவில் கேள்விக்குறி இட வேண்டும்.

எ-டு

கணினியின் பயன்கள் எவை?

5.2 ஐயம், நம்பிக்கையின்மை ஆகியவை தொனிக்கும் வாக்கிய முடிவில் கேள்விக்குறி இட வேண்டும்.

எ-டு

சிபாரிசு இல்லாமல் வேலை கிடைக்கும்?

5.3 வினாக் குறிப்பு அடங்கிய, முற்றுப் பெறாத வாக்கியத்தின் முடிவில்.

எ-டு

அப்பெண்ணின் கதி....?

5.4 வியப்போடு ஒன்றை வினவும்போது கேள்விக்குறியையும் உணர்ச்சிக் குறியையும் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

எ-டு

அமெரிக்காவிற்கா போகிறீர்கள்?!

5.5 அடுக்கி வரும் வினாக்களுக்கு இடையில் தேவையில்லை. (இறுதி வினாவில் மட்டும் இடலாம்.)

எ-டு

இது வீடா, இல்லை, மாளிகையா?

6. உணர்ச்சிக்குறி ( ! )

6.1 உணர்ச்சியைக் குறிக்கும் சொல்லையடுத்து உணர்ச்சிக்குறி இட வேண்டும்.

எ-டு

ஆஹா! ஐயோ!

6.2 உணர்ச்சியைக் குறிக்கும் சொல் இரட்டித்து வரும்போது அதில் இரண்டாவதாக வருவதை அடுத்து உணர்ச்சிக்குறி வரும்.

எ-டு

ஆஹா ஆஹா! ஆ ஆ! ஐயோ ஐயோ!

6.3 கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரே சொல்லை இரு முறை கூறும்போது ஒவ்வொன்றின் பின்னும் உணர்ச்சிக்குறி வரும்.

எ-டு

பாம்பு! பாம்பு!

6.4 விளிச்சொற்களையும் விளித்தொடர்களையும் அடுத்து உணர்ச்சிக்குறி வரும்.

எ-டு

உடன்பிறப்புகளே!

7. இரட்டை மேற்கோள்குறி ( “ ” )

ஒருவரின் கூற்றைத் தனித்துக் காட்ட இரட்டை மேற்கோள் குறியை இட வேண்டும்.

எ-டு

“இது எப்படி இருக்கிறது?” என்றான் அவன்.

8. ஒற்றை மேற்கோள்குறி ( ‘ ’ )

ஒருவரின் கூற்றுக்குள் (இரட்டை மேற்கோள்குறிக்குள்) வரும் இன்னொருவரின் கூற்றைத் தனித்துக் காட்ட.

எ-டு

“களவியல் சங்க காலத்தைச் சார்ந்தது என்ற கருத்தையே இவர் ஏற்றுக்கொண்டு, ‘இதன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாகாது’ என்கிறார்.”

(முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் எழுதிய ‘தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்’ நூலிலிருந்து...)

tamil grammer book Page 1

tamil grammer book Page 2

tamil grammer book Page 3

tamil grammer book Page 4

tamil grammer book Page 5

tamil grammer book Page 6

tamil grammer book Page 7

(முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் எழுதிய ‘தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்’ நூலிலிருந்து...)

tamil grammer example 1

tamil grammer example 2

tamil grammer example 3

tamil grammer example 4

(முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் எழுதிய ‘தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்’ நூலிலிருந்து...)

tamil grammer Page 1

tamil grammer Page 2

tamil grammer Page 3

tamil grammer Page 4

(முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் எழுதிய ‘தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்’ நூலிலிருந்து...)

1) சுட்டுப் பெயர்களுடன் புணரும் வல்லின எழுத்துகள் மிகா.

எ-டு.

அது காண், இது காண், அது செய், இது செய், அது தா, இது தா, அது பார், இது பார், இவை சிறந்தவை, அவை கடினமானவை,

இவை பார்க்கத் தகுந்தன.

2) வினாப் பெயர்களுடன் புணரும் வல்லின எழுத்துகள் மிகா.

எ-டு.

எது கண்டார்? ஏது கண்டாய்? யாது காண்பாய்?

எது செய்தாய்? ஏது செய்தாய்? யாது செய்வாய்?

எது தந்தாய்? ஏது தருவாய்? யாது தருவாய்?

எது படித்தாய்? ஏது பெற்றாய்? யாது பெற்றாய்?

எவை தவறு? யாவை போயின?

3) முதல் வேற்றுமையில் புணர்ந்து நிற்கும் வல்லின எழுத்துகள் மிகா. (முதல் வேற்றுமை - எழுவாய்; உருபு இல்லை)

எ-டு.

புலி கண்டது, எலி செய்தது,

குதிரை தாண்டியது, கழுதை பார்த்தது,

மாடு பாய்ந்தது, கிளி பேசும்,

அரிசி கொதிக்கிறது, உலகு போற்றும்,

மலர் பூத்தது, கிளி கொஞ்சியது,

வண்டி சென்றது, பேய் திரிந்தது,

பாம்பு சீறிற்று.

4) மூன்றாம் வேற்றுமை விரிகளில் புணரும் வல்லின எழுத்துகள் மிகா.

எ-டு.

என்னொடு + கற்ற = என்னொடு கற்ற

என்னொடு + சிரித்த = என்னொடு சிரித்த

பொன்னொடு + தந்த = பொன்னொடு தந்த

என்னொடு + போந்த = என்னொடு போந்த

சேரனொடு + கண்ணன் வந்தார் = சேரனொடு கண்ணன் வந்தார்.

5) ஆறாம் வேற்றுமை விரிகளில் புணரும் வல்லின எழுத்துகள் மிகா.

எ-டு.

எனது கை, எனது சடை

எனது தலை, எனது பல்

6) விளித் தொடர்களில் புணரும் வல்லின எழுத்துகள் மிகா.

எ-டு.

அண்ணா கேள், மகளே போ

தந்தையே தா, மகனே பார்

பெண்ணே பார், கனவே கலையாதே

கண்ணா தா.

7) பெயரெச்சத்துடன் புணரும் வல்லின எழுத்துகள் மிகா.

எ-டு.

ஓடிய குதிரை, ஓடுகின்ற குதிரை, திரிந்த காலம்

வந்த சிரிப்பு, வருகின்ற சிரிப்பு, பெற்ற செல்வம்

தந்த தெய்வம், தருகிற தெய்வம், படித்த பையன்

பார்த்த பெண், பார்க்கிற பெண், வென்ற தமிழன்.

8) ‘செய்யிய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்துடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

உண்ணிய கண்டான்

காணிய சென்றான்

உண்ணிய தந்தான்.

9) ‘செய்பு’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்துடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

உண்ணுபு கேட்டாள்

காணுபு சென்றான்

உண்ணுபு தந்தான்

காணுபு போனான்.

10) இரண்டாம் வேற்றுமைத் தொகையில் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

நாடு கண்டான், தண்ணீர் குடித்தான், மோர் குடித்தான்,

காடு சேர்ந்தான், புத்தகம் படித்தான்,

புளி கரைத்தான், வீடு இடித்தான், காது கடித்தான்.

11) ‘படி’ என்று முடியும் வினையெச்சங்களுடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

தரும்படி கேட்டான், பேசும்படி சொன்னார்,

வரும்படி சொன்னான், உண்ணும்படி வேண்டினார்,

எழுதும்படி தந்தான், சொல்லும்படி பேசினான்.

12) அகரவீற்று வினைமுற்றுகளுடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

சென்றன பசுக்கள்

பறந்தன பறவைகள்

விழுந்தன கதிர்கள்

பொழிந்தன கார்மேகங்கள்

வந்தன கழுதைகள்

நடந்தன கால்கள்

13) வியங்கோள் வினைமுற்றுகளுடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

வாழ்க தலைவர், வாழ்க கலை,

வீழ்க கயவர், வாழ்க தலைவி,

வாழ்க தமிழ், வாழ்க பாரதம்,

வாழ்க தமிழகம், வீழ்க பகைவர்,

ஒழிக துரோகம்.

14) வினைத்தொகையில் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

குடி தண்ணீர், பாய் புனல், வளர்பிறை, குடிநீர்,

பழமுதிர் சோலை, இடு பொருள், சொறி சிரங்கு,

வடி தேன், செய் கடன், சுடு சோறு,

உயர் குணம், சுடு காடு, உறை பொருள்,

நிமிர் தலை, அடு களிறு, சுடு சொல்,

ஊறு காய், எறி திரை, குளிர் காலம், தாழ் குழல்,

திருவளர் செல்வி, திருவளர் செல்வன்,

திருநிறை செல்வன், திருநிறை செல்வி.

15) அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு என்னும் சொற்களுடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

அவ்வளவு கண்டேன்

எவ்வளவு கொடுத்தாய்

இவ்வளவு பேசினாய்

எவ்வளவு செய்தாய்.

16) ஆ, ஏ, என்னும் ஈறுகளையுடைய வினாப் பெயர்களுடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

அவனா கண்டான், அவனே கண்டான், அவனோ கண்டான்

இவனா செய்தான், இவனே செய்தான், இவனோ செய்தான்

அவனா தந்தான், அவனே தந்தான், அவனோ தந்தான்

இளங்கோவா பார்த்தான், இளங்கோவே பார்த்தான்,

இளங்கோவோ பார்த்தான்.

17) எட்டு, பத்து தவிர எண்ணுப் பெயர்களுடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

ஒரு புத்தகம், ஒன்று சாப்பிடு, ஒன்று கூடுவோம், ஒன்று செய்,

ஒரு செயல், ஒரு பாடம், ஒரு கோடி

இரண்டு பசுக்கள், இரண்டு கண்கள், இரண்டு காளைகள், இரு கண்கள்

மூன்று காளைகள், மூன்று தமிழ், மூன்று கனிகள்

நான்கு திசைகள், நான்கு பிள்ளைகள், நான்கு படைகள்

ஐந்து கால்கள், ஐந்து பழங்கள், ஐந்து பொறிகள்

அறு தொழில், ஆறுபடை, ஆறு காடுகள், அறுசீர், அறுபதம்

ஏழு கடல்கள், ஏழு பிறப்பு, ஏழு சிறப்பு, ஏழு தினம்

ஒன்பது தானியம், ஒன்பது பறவைகள்.

18) அகரவீற்று அஃறிணைப் பன்மைப் பெயருடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

சில கழுதைகள், சில பன்றிகள், சில பொருள்கள், சில பதர்கள்,

பல பெயர்கள், பல காட்சிகள், பல கேள்விகள், பல சொற்கள், பல தடைகள்

19) வன்தொடர் ஒழிந்த ஏனைய குற்றியலுகரங்களுடன் புணரும் வல்லெழுத்துகள் மிகா.

எ-டு.

ஆறு தலை, எஃகு சிறிது

விறகு பெரிது, பந்து தந்தான்

செய்து போனான்.

20) நான்காம் வேற்றுமைத் தொகையில் உயர்திணைப் பெயர்களின் பின்வரும் வலி மிகா.

எ-டு.

வள்ளுவர் கோட்டம்

ஆசிரியர் சம்பளம்

தேன்மொழி கணவன்

கண்ணகி கோயில்.

21) உம்மைத் தொகையில் வலி மிகா.

எ-டு.

தாய் தந்தை

இரவு பகல்

செடி கொடி

பொரி கடலை

வெற்றிலை பாக்கு

அக்கா தங்கை

இட்டலி தோசை

பூரி கிழங்கு

(இராப் பகல், ஏற்றத் தாழ்வு - இவற்றில் மட்டும் விதிவிலக்காக வலி மிகும்.)

22) விளித் தொடரில் வலி மிகா.

எ-டு.

அழகா கொடு

செல்வி சொல்

மணி தா

செல்வா பார்

23) நிறுத்தக் குறிகளின் பயன்பாட்டால் கீழ்க்காணும் இடங்களில் வலி மிகாது.

()ஒற்று இட வேண்டிய சொல்லின்பின் கால்புள்ளியைப் பயன்படுத்துவதால் ஒற்று மிகுவது தவிர்க்கப்படுகிறது.

எ-டு.

கேட்பதற்கு, காது கூர்மையாக இருக்கவேண்டும்.

அதைச் செய்வதற்கு, பணம் தேவைப்படும்.

அதற்கு மாற்றாக, பட்டாடை எடுத்தாள்.

()வருமொழி மேற்கோள் குறிக்குள் இருந்தால் வலி மிகாது.

எ-டு.

இரு சொற்கள் இணைவதை ‘புணர்ச்சி’ என்கிறோம்.

அதனை ‘தினமணி’யில் காணலாம்.

நகரின் பெயரை ‘சென்னை’ என அரசு மாற்றியது.

() வருமொழி அடைப்புக் குறியின் உள்ளேயும் வெளியேயும் இருந்தால் வலி மிகாது.

எ-டு.

எனக்கு அவரை (பாடலாசிரியராக) தெரியாது.

எனக்கு அவரை (ஆசிரியராக) தெரியாது.

உடற்கூறியலை (யயேவடிஅல) பற்றிய நூல்.

 () வருமொழி சுருக்கக் குறியீடாக இருந்தால் வலி மிகாது.

எ-டு.

மின்னிணைப்பை தமிவா (தமிழ்நாடு மின்சார வாரியம்) துண்டித்தது.

24) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர இதர பெயரெச்சங்களுக்குப் பின்வரும் வலி மிகா.

எ-டு.

செய்கின்ற பணி பெரிய தந்தை வந்த பையன்

காணாத கண் பெரிய புராணம் ஓடாத குதிரை

பேசாத படம் இனிய பாடல் பறந்த புறா

வாடாத பூ

25) அன்று, இன்று, என்று, ஆவது, போன்று, அடா, அடி என்னும் சொற்களின் பின் வலி மிகா.

எ-டு.

அன்று கேட்டார்

இன்று சொன்னார்

என்று தருவார்?

அவரைப் போன்று கற்றவர் யாருளர்?

அவராவது கொடுப்பதாவது?

யாரடா செல்வதங்கு?

ஏனடி செல்கிறாய்?

26) அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு என்னும் சொற்களின் பின் வலி மிகா.

எ-டு.

அவ்வளவு பெரிய வீடா?

இவ்வளவு சிறிய வீடா?

எவ்வளவு கொடுத்தார்?

27) அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு என்னும் சொற்களின் பின் வலி மிகா.

எ-டு.

அவ்வாறு சொன்னார்.

அவ்வாறு செய்திருப்பானோ?

இவ்வாறு போர் நடந்துவிடுமா?

இவ்வாறு கூறினார்.

எவ்வாறு செய்தல் வேண்டும்?

எவ்வாறு கேட்டார்?

28) அத்தனை, இத்தனை, எத்தனை என்னும் சொற்களின் பின் வலி மிகா.

எ-டு.

அத்தனை கேள்விகளா? அத்தனை குரங்குகளா?

இத்தனை பாடல்களா? இத்தனை கோயில்களா?

எத்தனை சிரமங்கள் உள்ளன? எத்தனை பசுக்கள் உள்ளன?

29) அத்தகைய, இத்தகைய, எத்தகைய; அன்றைய, இன்றைய, என்றைய; அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்ட; அப்போதைய, இப்போதைய, எப்போதைய; பின்னைய, நேற்றைய, நாளைய - - என்னும் சொற்களின் பின் வலி மிகா.

எ-டு.

அத்தகைய திறமை உள்ளது.

அத்தகைய பேச்சைக் கேட்டதுண்டா?

இத்தகைய செயலை முடிக்க முடியாது.

இத்தகைய தன்மை கொண்டவர்.

எத்தகைய மனிதர்கள் அவர்கள்?

எத்தகைய சால்பு உடையவர்?

அன்றைய செய்தி விரும்பத்தக்கதன்று.

அன்றைய கோட்பாடுகள்

இன்றைய தகவல் என்ன?

இன்றைய கடமைகள்

என்றைய செய்தி இது?

என்றைய பழக்கவழக்கம்?

அப்படிப்பட்ட பெரியவர் இவர்தாமா?

அப்படிப்பட்ட கோவில் இதுவா?

இப்படிப்பட்ட செயலைச் செய்யாதீர்.

இப்படிப்பட்ட காப்பியம் இது.

எப்படிப்பட்ட குடும்பம் அது?

எப்படிப்பட்ட கற்பனை இது?

அப்போதைய பழக்க வழக்கங்கள்

இப்போதைய பண்பாட்டுச் சிறப்புகள்

எப்போதைய கோட்பாடுகள்?

முன்னைய தூற்றுதல்

பின்னைய பாராட்டுகள்

நேற்றைய தடைகள்

நாளைய காட்சிகள்.

30) இரண்டாம் வேற்றுமை உருபாகியஐ’, நான்காம் வேற்றுமை உருபாகிய‘கு’ ஆகிய இவ்விரண்டைத் தவிர, ஏனைய வேற்றுமை உருபுகளின் பின் வலி மிகா.

எ-டு.

என்னோடு சேர்ந்துவிடு. (இங்கு மூன்றாம் வேற்றுமை உருபு ‘ஓடு’ என்பதன் பின் வலி மிகவில்லை)

எங்களது பூமி - ‘அது’ ஆறன் உருபு. வலி மிகவில்லை.

பாலொடு தேன் கலந்தற்றே - ஒடு

மரத்திலிருந்து பறித்தான் - இல்

குரங்கது குட்டி - அது

என்னுடைய புத்தகம் - உடைய

மலையினின்று பாய்ந்தான் - இன்

31) இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகாது.

எ-டு.

பறவை பிடித்தான்.

தமிழ் படித்தான்.

32) மூன்றாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகாது.

எ-டு.

கை தட்டினான் - (கையால் தட்டினான்)

33) நான்காம் வேற்றுமைத் தொகையில் வலி மிகாது.

எ-டு.

சிறை சென்றான் - (சிறைக்குச் சென்றான்)

34) ஐந்தாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகாது.

எ-டு.

வரை பாய்ந்தான் - (வரையிலிருந்து பாய்ந்தான்)

35) ஏழாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகாது.

எ-டு.

ஊர் தங்கினான் - (ஊரின்கண் தங்கினான்)

36) நிலைமொழி உயர்திணையாய் அமையும் எந்தப் பெயர்த்தொகையிலும் வலி மிகா.

எ-டு.

தோழி கூற்று

திருத்தொண்டர் திருக்கோயில்

ஆசிரியர் சம்பளம்

பெரியார் பேரன்

மேற்கண்ட தொடர்களெல்லாம், ஆறாம் வேற்றுமைத் தொகையாகவும், நான்காம் வேற்றுமைத் தொகையாகவும் அமைந்தபோதிலும், நிலைமொழி உயர்திணை ஆதலால், வலி மிகவில்லை.

37) அன்று, பிறகு, முன்பு, உடைய, உள்ள, உரிய, ஆன, வரை, கொண்டு, தக்க, தகுந்த, ஏற்ற - ஆகியன வலி மிகாமல் புணரும் சொல்லுருபுகளாகும்.

எ-டு.

அன்று - திங்களன்று தேர்வு நடைபெறும்.

பிறகு - அடுத்த தலைவர் யாரென்று பிறகு பார்ப்போம்.

முன்பு - வீட்டின் முன்பு செடிகள் வளர்ந்துள்ளன.

உடைய - யாருடைய காசும் தேவையில்லை.

உள்ள - அவருக்குள்ள செல்வாக்கு அளப்பரியது.

உரிய - ஒவ்வொருவர்க்கும் உரிய பங்கு கிடைக்கும்.

ஆன - சிறந்த இயக்குநருக்கான பரிசு ஒரு தமிழருக்குக் கிடைத்தது.

வரை - காடு வரை பிள்ளை

கொண்டு - மனிதன் இறக்கும்போது கொண்டு செல்வது யாதுமில.

தக்க - படிப்புக்குத் தக்க பதவி இன்னும் கிடைக்கவில்லை.

தகுந்த - வேலைக்குத் தகுந்த சம்பளம் தரவில்லை.

ஏற்ற - மனநிலைக்கு ஏற்ற சோகப் பாட்டு காதில் விழுகிறது.

இந்தச் சொல்லுருபுகள் வலி மிகாமல் புணரும்.

38) முன்னிலை ஏவல் ஒருமை வினைமுற்றுத் தொடர்களில் வலி மிகா.

எ-டு.

நட கோவலா

வா சாத்தா

கொடு தேவா

எறி பூதா

39) எதிர்மறைப் பெயரெச்சங்களில் வலி மிகா.

எ-டு.

செல்லாத பணம்

கறவாத பசு

கேளாத செய்தி

முற்றாத தேங்காய்

40) சிறிய, பெரிய - என்னும் குறிப்புப் பெயரெச்சங்களின் பின் வலி மிகா.

எ-டு.

சிறிய + கண்ணாடி = சிறிய கண்ணாடி

சிறிய + பெண் = சிறிய பெண்

பெரிய + கொட்டாய் = பெரிய கொட்டாய்

பெரிய + பாட்டி = பெரிய பாட்டி

பெரிய + புத்தகம் = பெரிய புத்தகம்

41) மென்தொடர்க் குற்றுகர ஈற்று வினையெச்சத்தில் வலி மிகாது.

எ-டு.

கண்டு களித்தான்

வந்து சேர்ந்தான்

சென்று திரும்பினான்

வந்து போனான்

உண்டு படுத்தான்

வென்று பிடித்தான்

42) இடைத்தொடர்க் குற்றுகர ஈற்று வினையெச்சத்தில் வலி மிகாது.

எ-டு.

பெய்து கெடுத்தது

நெய்து சேர்த்தான்

கொய்து தின்றான்

செய்து பார்த்தான்

43) உயிர்த்தொடர்க் குற்றுகர ஈற்று வினையெச்சத்தில் வலி மிகாது.

எ-டு.

அழுது கலங்கினான்

உழுது களைத்தான்

ஆராயாது செய்தான்

அழுது தீர்த்தான்

(குறிப்பு : வன்தொடர்க் குற்றுகர ஈற்று வினையெச்சங்கள் தவிர, ஏனைய குற்றுகர ஈற்று வினையெச்சங்களின் பின் வலி மிகா.)

44) ஆவது, அம்ம, மன்ற, வாளா, சும்மா - என்னும் இடைச்சொற்களின் பின் வலி மிகா.

எ-டு.

ஆவது : நானாவது போய்ப் பார்த்திருக்க வேண்டும்.

அவனாவது சென்றானா?

அம்ம : அம்ம கொடிது

மன்ற : மன்ற தெளிந்தார்

வாளா + சென்றான் = வாளா சென்றான்

சும்மா + போனான் = சும்மா போனான்

45) சால, தவ, தட, குழ - என்னும் உரிச்சொற்களின் பின் வலி மிகும்.

ஏனைய உரிச்சொற்களின் பின் (உறு, நனி, கடி, கூர், மா, கழி, மழ - என்னும் உரிச்சொற்களின் பின்) வலி மிகா.

எ-டு.

உறு: உறு பொருள் கொடுத்தும் உதவினான்.

நனி : நனி தின்றான் சோற்றை.

கடி : கடி காவல் நிறைந்த வீடு.

கூர் : கொடுமை கூர் சித்தியின் செயல்களைப்

பொறுக்க முடியவில்லை.

மா : மா பெரும் கூட்டம் நடந்தது இங்கு.

கழி : கழி பேருவகை கொண்டான் காதலன்.

மழ : மழ களிறு இங்கே உள்ளது.

46) அடுக்குத் தொடர்களில் வலி மிகா.

எ-டு.

பார் பார்

பாம்பு பாம்பு

போ போ

தா தா

47) இரட்டைக் கிளவிகளில் வலி மிகா.

எ-டு.

சிலு சிலு, கல கல, பள பள, சல சல, தள தள, குவா குவா, தக தக, பட பட,கிடு கிடு, குடு குடு

சிலுசிலு - சிலுசிலுவெனக் குளிர் அடிக்கிறது.

கலகல - காற்று கலகலவென வீசுகிறது.

பளபள - பளிங்குத் தரை பளபளவெனக் காட்சியளிக்கிறது.

சலசல - தென்னங்கீற்று சலசலவென ஓசையிட்டுக்

காற்றில் அசைகிறது.

தகதக - தங்க நகை தகதகவென மிளிர்ந்தது.

குவா குவா - குழந்தை குவா குவாவென ஓசையிடுகிறது.

தளதள - அப்பெண் தளதளவென அழகுடன் இருந்தாள்.

கிடுகிடு - கிடுகிடு பள்ளம்

படபட - படபடவென்று பேசினான்.

48) ‘கள்’ என்னும் அஃறிணைப் பன்மை விகுதியில் வலி மிகாது.

எ-டு.

எழுத்து + கள் = எழுத்துகள்

தோப்பு + கள் = தோப்புகள்

கருத்து + கள் = கருத்துகள்

வாழ்த்து + கள் = வாழ்த்துகள்

பொருள் + கள் = பொருள்கள்

நாள் + கள் = நாள்கள்

49) வடமொழி, ஆங்கிலம் போன்ற பிற மொழிச் சொற்கள் வருமொழியாக வரும் தொடர்களில் வலி மிகுவதில்லை.

எ-டு.

பாத + காணிக்கை = பாத காணிக்கை

பதி + பக்தி = பதிபக்தி

பாச + தீபம் = பாச தீபம்

பந்த + பாசம் = பந்த பாசம்

தாலி + பாக்கியம் = தாலி பாக்கியம்

தெய்வ + தரிசனம் = தெய்வ தரிசனம்

தேச + பக்தி = தேச பக்தி

50) ஐகார வரிசை உயிர்மெய் எழுத்துகள் ஓரெழுத்துச் சொற்களாய் வந்து, அவற்றொடுகள்’ விகுதி சேரும்போது வலி மிகா.

எ-டு.

கை + கள் = கைகள்

பை + கள் = பைகள்

51) ‘நல்ல’, ‘தீய’, ‘அரிய’ எனும் பண்புச் சொற்களை அடுத்து வரும் வல்லினம் மிகா.

எ-டு.

நல்ல + பாம்பு = நல்ல பாம்பு

நல்ல + கிணறு = நல்ல கிணறு

தீய + பழக்கம் = தீய பழக்கம்

தீய + குணங்கள் = தீய குணங்கள்

அரிய + செயற்பாடுகள் = அரிய செயற்பாடுகள்

அரிய + காட்சி = அரிய காட்சி

52) ‘சார்பாக’, ‘தொடர்பாக’ உயர்திணைப் பெயர்ச்சொல்லுடன்சார்பாக’, ‘தொடர்பாக’ என்னும் ஒட்டுகள் வந்து சேரும்பொழுது வல்லினம் மிகா.

எ-டு.

மாணவர் + சார்பாக = மாணவர் சார்பாக

உறுப்பினர் + தொடர்பாக = உறுப்பினர் தொடர்பாக

53) ‘போது’, ‘படி’, ‘படியால்’பெயரெச்சத் தொடரின் ஒட்டுகள்போது’, ‘படி’, ‘படியால்’ ஆகியன வரும்போது வல்லினம் மிகா.

எ-டு.

அவன் சென்ற + போது = அவன் சென்றபோது

அவன் செய்த + படி = அவன் செய்தபடி

அவன் சொன்ன + படியால் = அவன் சொன்னபடியால்

54) ‘தொறும்’ - ‘தோறும்’பெயர்ச்சொல்லொடுதொறும்’, ‘தோறும்’ என்னும் பின்னொட்டுகள் வந்து புணரும்பொழுது வல்லினம் மிகா.

எ-டு.

நகர் + தோறும் = நகர்தோறும்

மனை + தோறும் = மனைதோறும்

கல்லூரி தோறும் = கல்லூரிதோறும்

நாடு + தொறும் = நாடு தொறும்

பள்ளி + தொறும் = பள்ளி தொறும்

காடு + தொறும் = காடு தொறும்

55) ‘கூட’, ‘பற்றி’, ‘பொருட்டு’, ‘பால்’, ‘குறித்து’, ‘தவிர’எழுவாயாக நிற்கும் பெயர்ச் சொற்களுடன்கூட’, ‘பற்றி’, ‘பொருட்டு’,‘பால்’, ‘குறித்து’, ‘தவிர’ ஆகிய ஒட்டுகள் சேரும்பொழுது வல்லினம் மிகா.

எ-டு.

தலைவர் + கூட = தலைவர்கூட

நாடு + பற்றி = நாடு பற்றி

ஆசிரியர் + பொருட்டு = ஆசிரியர் பொருட்டு

பசு + குறித்து = பசு குறித்து

ஆடு + தவிர = ஆடு தவிர

56) அம்மை, அப்பர், மாமி, அண்ணி, தந்தை, தம்பி, தங்கை உள்ளிட்ட முறைப் பெயர்களையும், அம்மா, அப்பா, மாமா, மாமி, அண்ணா, அண்ணி, தம்பி, அக்கா உள்ளிட்ட முறைவிளிப் பெயர்களையும் அடுத்துவரும் வல்லினம் மிகா.

எ-டு.

முறைப் பெயர்கள்

அம்மை கோயிலுக்குச் சென்றுள்ளார்

அப்பர் சோறு சாப்பிட்டார்

மாமி சென்றாள்

அண்ணி கூப்பிட்டார்

தந்தை தாங்கினார்

தம்பி பார்த்தான்

தங்கை பூச்சூடினாள்

முறைவிளிப் பெயர்கள்

அம்மா பசிக்கிறது

அப்பா செல்லலாம்

மாமா கொடுப்பீர்

மாமி சாப்பிடுவீர்

அண்ணா செல்வீர்

அண்ணி கேட்பீர்

தம்பி படிப்பாய்

தங்கை பாடுவாய்

அக்கா தருவீர்

(முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் எழுதிய ‘தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்’ நூலிலிருந்து...)