பெருவழக்கில் உள்ளது ‘பூசணிக்காய்’ எனும் சொல்லே.
ஆனால்,இதை ‘பூசுணைக்காய்’ என விளிக்கிறார், அறிஞர் ‘வெங்காலூர் குணா’. இச்சொல்லை "வள்ளுவத்தின் வீழ்ச்சி" என்ற நூலில் எடுத்தாண்டுள்ளார்.
‘பூசுணைக்காய்’ என குறிப்பிட்டுவிட்டு, குழப்பமின்றி விளங்கிக் கொள்ள, கூடவே அடைப்பு குறிக்குள் ‘பூசணிக்காய்’ எனவும் குறிப்பிடுகிறார்.
‘பூசுணைக்காய்’ என அவர் குறிப்பிடுவதிலும் பொருள் உள்ளது. அக்காயைக் கூர்ந்து நோக்கினால் அதன் மேல் பகுதியில், முள் போன்று வெண்மை நிறத்தில் படர்ந்திருக்கும். அதற்கு ‘சுணை’ என்று பெயர். இதன் காரணமாக இதனை ‘சுணைக்காய்’ விளிக்கிறாரா? என்பது தெரியவில்லை.
அந்த ‘சுணை’ நம் தோலில் பட்டால் அரிக்கும். சுணை பூசணிக்கு மட்டுல்ல, வேறு சில செடி கொடிகளுக்கும் உள்ளது. நெற் பயிரில் உள்ள சுணை நம் தோலை அறுத்துவிடும்.
எது எவ்வாறானாலும் சமையலுக்கு பயன்படும் ஓர் அருமையான காய்; இஃது. இதில் நீர்சத்தும் நார்சத்தும் அதிகம் உள்ளதாகக் கூறுவர். இதன் சதைப்பகுதி பூவைக் காட்டிலும் மென்மையானது. எளிதாகக் கரையும் தன்மை உடையது.
இஃது இறைத் தொடர்புடைய காய். திஷ்ட்டிக் கழிக்க, இந்த காயின் மீது கருப்பு,வெள்ளை வண்ணங்களில் மனித முகம் வரைந்து புதிதாக வீடு கட்டும் போதும் கட்டியப் பின்னரும் முகப்பில் தொங்கவிட்டிருப்பர்.
இதைக் கொண்டே பாவேந்தரும் ‘பூசணிக்காய் மகத்துவம்’ என்ற தலைப்பில்,
"மெய்வண்ண வீடுகட்ட உனைத்தொங்க
விடுகின்றார்கள்;
செய்வண்ண வேலைசெய்து திருமாடம்
முடிக்கின்றாய் நீ!
பொய்வண்ணப் பூசணிக்காய்!கறியுனைச்
செய்துண்டேன் உன்
கைவண்ணம் அங்குக் கண்டேன்;
கறிவண்ணம்
இங்குக் கண்டேன்!"
எனப் பாடியுள்ளார்.
பாவேந்தருக்கு இதை ‘பூசுணைக்காய்’ எனவும் சொல்லலாம் என்பது தெரியாது போலும். இறைத் தொடர்பான விழாக்களில், இக்காய் முதன்மையான இடம் பெறும்.
பூசணிக் கொடி கார்த்திகை,மார்கழி மாதங்களில் சிற்றூர் புறங்களில், வயல்வெளிகளில் படர்ந்து,மிகுதியாக காய்த்துக் குலுங்கும். இதன் பூ,மார்கழி மாதத்தில் வீட்டு வாசலை அலங்கரிக்கும்.
திருட்டுத்தனமாக இந்தக் காயை மற்றவர்கள் எடுத்து செல்லமாட்டார்கள். அவ்வாறு திருடிச் சென்றால் அவர்களின் உடலில் ‘வெண் புள்ளிகள்’ தோன்றும் என்ற கருத்து இன்றும் நிலவுகிறது.
கோடைக் காலங்களில் தண்ணீர் தாகத்தை தணிக்க உதவும், ‘தர் பூசணியும்’ உள்ளது. இது பணப்பயிர். இது திருடப்படுவதுண்டு.
அக்டோபர் மாதம் வருகின்ற ‘அலைமகள்’,‘கலைமகள்’, ‘மலைமகள்’ விழாக்களில், தெருக்களில் பூணிக்காயை உடைத்து வழிபடுவர்.
அவற்றில் இருசக்கர வாகனங்கள் சிக்கி ‘நேர்ச்சி’ ஏற்படுவதும் உண்டு. சில சிற்றுந்துகளும் சிக்குவதுண்டு.
மேலும் இந்த காயை ‘வெள்ளைப் பூசணி’, ‘சாம்பல் பூசணி’,‘வெண்பரங்கி’ என விளிப்பதும் உண்டு. இவை யாவும் வட்டார வழக்காகும்.
அதுபோன்றே ‘பரங்கிக்காயை’ நெல்லை மாவட்டத்தில் ‘தடியங்காய்’ என்றுதான் சொல்வர். அஃது அங்கு நிலவும் வட்டார வழக்கு. ஆனால், அம்மாவட்டத்தைச் சேர்ந்த ‘பாரதியார்’ பரங்கிக்காய் என்றே விளித்தார்.
பரங்கிக்காய் பழமான பிறகு, அதன் மேல்பகுதி ஆங்கிலேயரின் தோல் போன்று ‘வெளுத்த காவி’ வண்ணத்தில் இருக்கும். அந்த வண்ணத்தை அடிப்படையாக வைத்து ‘ஆங்கிலேயரை பரங்கியர்’ என்றார்; பாரதியார்.
இப்படியான பலவற்றை உள்ளடக்கிய பூசணிக்காயை, ‘பூசுணைக்காய்’ எனவும் சொல்லலாம் என்பதை, ‘குணாவின்’ நூல் மூலமாகத்தான் அறிந்தேன்.
அவ்வாறும் சொல்லப்படும் என பேராசிரியர் முனைவர். ‘கரு.ஆறுமுகத்தமிழன்’அவர்கள் உறுதி செய்த பின்னர் தெளிந்தேன்.
- ப.தியாகராசன்