கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
எரிமலை அதிக செயல்பாட்டுடன் இருப்பதையும் வெடிக்கப் போவதையும் முன்கூட்டியே கண்டறிய அங்கு வளரும் மரங்களின் இலைகளில் ஏற்படும் மாற்றங்கள் உதவுகின்றன. நாசா மற்றும் ஸ்மித்சோனியன் ஆய்வுக் கழக விஞ்ஞானிகள் இணைந்து இந்த மாற்றங்களை விண்வெளியில் இருந்து கண்டறியும் ஆய்வுகளை நடத்துகின்றனர்.பூமியின் மேலோட்டின் வழியாக எரிமலைக் குழம்பு (Magma) மேலெழும்பி வரும்போது கார்பன் டை ஆக்சைடு மற்றும் பிற வாயுக்கள் மேற்பரப்பை அடைகின்றன. இந்த வாயுவை எடுத்துக் கொள்ளும் மரங்கள் பசுமை நிறைந்ததாக, செழுமையுள்ளதாக மாறுகின்றன.
இந்த மாற்றங்கள் லேன்சாட் 8 (Landsat 8 ), Airborne Validation Unified Experiment: Land to Ocean (AVUELO) போன்ற நாசாவின் செயற்கைக்கோள்கள் மூலம் கண்டறியப்படுகின்றன. உலகில் 10% பேர் எரிமலைகளால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு அருகில் வாழ்கின்றனர் அல்லது எரிமலை வெடிக்கும் இடத்திற்கு ஒரு சில மைல் தொலைவில் பணி புரிகின்றனர்.
இதனால் இவர்கள் வெடித்துச் சிதறும் பாறைகள், தூசுகள், சூடான நச்சு வாயுக்களால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. எரிமலைக்கு சற்று தொலைவில் இருக்கும் மக்களும் உடைமைகளும் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து நிகழும் மண் சரிவுகள், சாம்பல் பந்துகள், சுனாமி போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். எரிமலை வெடிப்பைத் தடுக்க உதவும் வழிமுறை எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
பொதுமக்கள் பாதுகாப்புக்கு, வெடிப்பிற்கு முந்தைய அறிகுறிகள் முக்கியமானவை. அமெரிக்கா எரிமலை வெடிப்புகளால் அதிகம் பாதிக்கப்படும் உலக நாடுகளில் ஒன்று என்று நாசாவின் லேண்ட் சாட் திட்டத்தின் பங்காளியான அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு கூறுகிறது.
வெடிப்பிற்கு முன் எரிமலைக் குழம்பு நிலத்தின் அடியில் இருந்து மேலெழும்பி வரும்போது கார்பன் டை ஆக்சைடு , சல்பர் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன.
சல்பர் கூட்டுப் பொருட்கள் சுற்றுவட்டப் பாதையில் இருந்து எளிதாக கண்டுபிடிக்கப்படக் கூடியவை. சல்பர் டை ஆக்சைடின் உமிழ்வுக்கு முன் உமிழப்படும் கார்பன் டை ஆக்சைடை விண்வெளியில் இருந்து அறிவது சுலபமானதே என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். கார்பன் டை ஆக்சைடு உமிழ்வால் தாவரங்கள் அதிக அளவு பசுமையடைவது வெடிப்பை அறிய உதவும் ஒரு கருவி.
இதனுடன் நில அதிர்வுகள், தரை உயரத்தில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை எரிமலைக்குள் நடப்பதைப் பற்றி ஒரு தெளிவான கருத்து உருவாக உதவுகிறது.
“எரிமலைகள் ஏராளமான கார்பன் டை ஆக்சைடை உமிழ்கின்றன. ஆனால் வளி மண்டலத்தில் ஏற்கனவே கார்பன் டை ஆக்சைடு உள்ளது. இதனால் எரிமலையில் இருந்து உமிழப்படும் வாயுவின் அளவை கணக்கிடுவது கடினமாக உள்ளது. பெரிய வெடிப்புகளில் இருந்து உமிழப்படும் கார்பன் டை ஆக்சைடை நாசா கார்பன் கண்காணிப்பு அமைப்பு 2 (NASA's Orbiting Carbon Observatory 2) போன்ற உணரிகள் மூலம் விண்வெளியில் இருந்து முன்கூட்டிய எச்சரிக்கை சமிஞ்ஞைகள் மூலம் கண்டுபிடிப்பது கடினம். இந்நிலையில் நடுத்தர அளவில் உமிழ்வு இருந்தால் விண்வெளிப் படங்களில் இருந்து அதை அறிய முடிவதில்லை” என்று கனடா மாண்ட்ரீல் மகில் (McGill) பல்கலைக்கழக எரிமலை விஞ்ஞானி ராபர்ட் பாஃப்க் (Robert Bogue) கூறுகிறார். இதனால் விஞ்ஞானிகள் எரிமலைகளில் மீது ஏறிச்சென்று கார்பன் டை ஆக்சைடை நேரடியாக கணக்கிட வேண்டியுள்ளது.
உலகில் உள்ள சுமார் 1,350 எரிமலைகளில் பெரும்பாலானவை தொலைதூரப் பகுதிகளில் அமைந்துள்ளன. அல்லது சவாலான மலைப் பகுதிகளில் அமைந்துள்ளன. அதனால் ஆய்வுகள் நடத்த தொழிலாளர்கள் அதிகமாகத் தேவை. செலவு அதிகம். சில சமயங்களில் ஆபத்தானது. வாயுக்களின் உமிழ்வில் காணப்படும் அதிகரிப்பு ஒரு எரிமலை வெடிக்கப் போகிறது என்பதைத் தெரிவிக்கிறது. தாவரவியலாளர்கள், காலநிலை ஆய்வாளர்களுடன் பாஃப்க் போன்ற விஞ்ஞானிகள் இணைந்து மரங்களில் நிகழும் மாற்றங்கள் மூலம் வெடிப்புகளை அறியும் வழிமுறைகள் பற்றி ஆராய்ந்து வருகின்றனர். கார்பன் டை ஆக்சைடை நேரடியாக மதிப்பிடுவதற்கு ஒரு மாற்று வழியைக் கண்டுபிடிப்பதே இந்த ஆய்வுகளின் நோக்கம்.
“பகுப்பாய்வுகளை மேற்கொள்ள பல செயற்கைக்கோள்கள் உள்ளன” என்று கூறும் ஹூஸ்ட்டன் பல்கலைக்கழக எரிமலை விஞ்ஞானி நிகோல் கின் (Nicole Guinn) லேன்சாட் 8, நாசா டெரர் (Terra) செயற்கைக்கோள், ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) செண்டினல் 2 (Sentinel-2) மற்றும் பிற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் படங்களை ஒப்பீடு செய்து சிசிலி எட்னா (Etna) எரிமலையை சுற்றிலும் இருக்கும் மரங்களை ஆராய்ந்தார்.
இவரே மர இலைகளின் நிறங்களுக்கும் எரிமலைக் குழம்பினால் உமிழப்பட்ட கார்பன் டை ஆக்சைடிற்கும் இடையில் இருக்கும் தொடர்பை முதலில் கண்டுபிடித்துக் கூறினார். கார்பன் டை ஆக்சைடு உமிழ்வின் அளவை துல்லியமாக மதிப்பிட சாப்மேன் (Chapman) பல்கலைக்கழக எரிமலை விஞ்ஞானி ஜோஷ் பிஷர் (Josh Fisher) போன்ற ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
பனாமா மற்றும் கோஸ்ட்டரீகாவில் எரிமலைகளுக்கு அருகில் இருக்கும் மரங்களின் இலைகளில் ஏற்படும் மாற்றங்களை அறிய நாசா மற்றும் ஸ்மித்சோனியன் ஆய்வுக் கழக விஞ்ஞானிகள் ஓர் ஆய்வு விமானத்தில் நிறமாலைமானியைப் பொருத்தி ஆராய்ந்து வருகின்றனர். கோஸ்ட்டரிக்கா ரிங்கன் டெல வியஜ (Rincon de la Vieja) எரிமலையைச் சுற்றி இருக்கும் மர இலை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆராயப்படுகின்றன. கார்பன் டை ஆக்சைடின் அளவும் மதிப்பிடப்படுகிறது.
“இந்த ஆய்வுகள் சூழலியல் மற்றும் எரிமலையியல் இணைந்து மேற்கொள்ளப்படுபவை. மரங்கள் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக் கொள்ளும் அளவு குறித்தும் ஆராயப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் மரங்களின் இலைகளை செயற்கைக் கோள்கள் முழுமையாகப் படம் பிடிக்க முடிவதில்லை. வெவ்வேறு அளவு கார்பன் டை ஆக்சைடு உமிழ்விற்கு மரஙகள் வெவ்வேறாக பதில்வினை புரிகின்றன. மாறுபடும் வானிலை, காட்டுத் தீ சம்பவங்கள், தாவர நோய்கள் போன்றவற்றாலும் மரங்கள் பாதிக்கப்படுகின்றன. அதனால் மர இலைகளை மட்டும் முன்னறிவிப்புக்கு பயன்படுத்துவதில் வரையறைகள் உள்ளன” என்று பிஷர் கூறுகிறார்.
ஷ்வாண்ட்னர் பிலிப்பைன்ஸ் மெயொன் (Mayon) எரிமலைப் பகுதியில் கார்பன் டை ஆக்சைடு மற்றும் சல்பர் டை ஆக்சைடு உமிழ்வுகளின் கண்காணிப்பை மேம்படுத்த உணரிகளைப் பயன்படுத்தினார்.
டிசம்பர் 2017ல் விஞ்ஞானிகள் மேம்படுத்தப்பட்ட புதிய முறையை பயன்படுத்தி வெடிப்பிற்கு முன் சுமார் 56,000 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பினர். இதனால் ஜனவரி 23, 2018ல் வெடிப்பு தொடங்கியபோது பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மரங்களை செயற்கைக்கோள் படங்களின் மூலம் கண்காணிப்பதால் வருங்கால வெடிப்புகளை முன்கூட்டியே அறியலாம்.
எரிமலை சம்பவங்களை தடுப்பதற்கு இந்த தொழில்நுட்பம் ஒரு நிரந்தரத் தீர்வு ஆகாது என்றாலும் இப்புதிய முறை இந்தத் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மேற்கோள்: https://phys.org/news/2025-05-nasa-satellite-images-early-volcano.html
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
உலகில் ஆடுகளுடன் போராடி தோற்றுப் போன ஒரு இடம் உண்டு... தென்னமெரிக்காவில். சார்ல்ஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடு பிறந்த, ராட்சத ஆமைகள், கடல் இக்வானாக்களின் வாழிடமாக இருந்த ஈக்குவெடோரின் காலப்பகோஸ் தேசியப் பூங்காதான் அந்த இடம். ஆடுகள் முதலில் அங்கு விருந்தாளியாக சென்றன. பிறகு அவை தீவில் காலம் காலமாக வாழ்ந்தவற்றின் உணவு ஆதாரங்களை அழிக்கத் தொடங்கின. சூழல் நலத்திற்கு இது தீராத தலைவலியாக மாறியது.
போராடித் தோற்றபோது பூங்காவின் பாதுகாவலர்கள் நிரந்தரமாக ஆடுகளை இல்லாமல் செய்ய முடிவு செய்தனர். இதற்காக பல கோடிகள் செலவிடப்பட்டன. மிஷின் இசபெல்லா என்று பெயர் சூட்டப்பட்ட அந்த யுத்தத்தின் கதைதான் இது.மாயாஜாலக் கதைகளில் வரும் உயிரினங்கள் போல அதிசய உயிரினங்களின் வாழிடமே காலப்பகோஸ் தேசியப் பூங்கா! 400 கிலோ எடையுள்ள ஆமைகள், சுதந்திரமாக வாழும் ராட்சத கடல் இக்வானாக்கள், போர்ப்பறவைகள், கப்பற்பறவைகள் அல்லது கடற்கொள்ளைப் பறவைகள் இங்கு உள்ளன. தாடியுடன் உள்ள ப்ரிகேட் பறவைகள், அதி அபூர்வ தாவர இனங்கள் என்று பல அதிசயங்களின் தீவு இது. பரிணாமக் கோட்பாட்டின் தந்தை சார்ல்ஸ் டார்வின் தங்கி ஆய்வு செய்த இடம் இது. அந்த இடம் இப்போது உலகின் முக்கிய சுற்றுலா மையங்களில் ஒன்று.
டார்வின் கார்னர் என்று அது அழைக்கப்படுகிறது. 1850 முதல் 1860 வரையுள்ள காலத்தில் ஐரோப்பிய குடியேற்றக்காரர்கள், கப்பல் மாலுமிகளின் தலைமையில் ஆடுகள் இங்கு வந்து சேர்ந்தன. அவை இங்கு உணவுக்காக கொண்டு வரப்பட்டன. ஆனால் விருந்தாளியாக வந்த ஆடுகள் ஒரு சூழல் மண்டலத்தை அழிக்கும் ஆக்ரமிப்பு உயிரினங்களாக மாறின. இயற்கையான புல்வெளிப் பகுதிகளை இவை கூட்டம் கூட்டமாக மேய்ந்து முற்றிலும் அழித்தன.
இதனால் செடி கொடிகளைப் பார்ப்பதே அரிதானது. இந்த அழிவு அங்கு வாழ்ந்த உயிரினங்களின் நிலைநிற்பைப் பாதித்தது. 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அங்கு வாழ்ந்த ஆடுகளின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது. ஆடுகளை உணவாக உண்ணும் வன விலங்குகளின் எண்ணிக்கை குறைவே இதற்கு முக்கிய காரணம். இயல்பான தாவரச்செழுமையின் பின்புலத்தில் இத்தீவு சூழல் பேரிடர்களை சமாளித்து வந்தது.
ஆனால் ஆடுகளின் வரவுடன் எதிர்பாராத மண் அரிப்பும் மண் சரிவுகளும் ஏற்பட்டன. இது ஆக்ரமிப்பு தாவரங்களின் வளர்ச்சிக்குக் காரணமானது. இயற்கைப் பசுமை இல்லாமல் போனதால் அதை நம்பி வாழ்ந்த எண்ணற்ற உயிரினங்கள், நுண்ணுயிரிகள் அழிந்து போயின. இவற்றை உணவாக உண்டு வாழ்ந்த ராட்சத ஆமைகளுக்கும் கடல் இக்வானாக்களுக்கும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தீவு உயிரினங்கள் உணவு மற்றும் நீருக்காக ஆடுகளுடன் மோத வேண்டியதாயிற்று.
உணவுச் சங்கிலியை இது பெரிதும் பாதித்தது. இதனால் அதிகாரிகள் ஆடுகளைக் கொன்று குவிக்க வேண்டும் என்ற கடுமையான முடிவுக்கு வந்தனர். ஆடுகள் உட்பட உள்ள ஆக்ரமிப்பு விலங்குகளை அழித்தொழிக்க 1997ல் மிஷின் இசபெல்லா என்ற திட்டத்தை ஈக்குவெடார் அரசு தொடங்கியது.
மிஷின் இசபெல்லாவும் யூதாஸ் ஆடுகளும்
ஈக்குவெடோர் சூழல் அமைச்சரகம், காலப்பகோஸ் தேசியப் பூங்கா இயக்குனரகம், காலப்பகோஸ் சூழல் அமைப்பு, டார்வின் அறக்கட்டளை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இது 1997 முதல் 2006 வரை உள்ள ஒன்பது ஆண்டுகள் நீடித்தது.
தரைப்பகுதியில் இருந்து வேட்டையாடுதல், வான் வழி வெடி வைத்தல், ஆண் ஆடுகளை ஈர்த்து வரவழைக்க கருத்தடை செய்யப்பட்ட பெண் ஆடுகளுக்கு ரேடியோ காலர் பொருத்தி அனுப்பும் திட்டம், வேலி கட்டுதல், ஆடுகளின் வளர்ச்சியைத் தடுக்க சில ஈக்களைப் பயன்படுத்துதல் போன்ற பல வழிகள் ஆலோசிக்கப்பட்டன. 2006ல் 250,000 ஆடுகள் கொல்லப்பட்டன. இதனால் தீவின் இயற்கை சூழல் மண்டலம் மீட்கப்பட்டது.
2006ல் காலப்பகோஸ் தீவு ஆடுகள் இல்லாத தீவாக அறிவிக்கப்பட்டது. ஆடுகளைக் கொல்ல பயன்படுத்தப்பட்ட திட்டங்களில் பெண் ஆடுகளைப் பயன்படுத்தி சதி செய்து ஆண் ஆடுகளைக் கொல்லும் முறை அதிக பலனைத் தந்தது.
இந்த பெண் ஆடுகளுக்கு யூதாஸ் ஆடுகள் என்று சிறப்புப் பெயரிடப்பட்டது. தரை மற்றும் வான் வழியாக ஆடுகள் அதிகம் கொல்லப்பட்டன என்றாலும் அது முழுமையாக பலன் தரவில்லை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்தே யூதாஸ் ஆடுகள் தீட்டம் நடைமுறைக்கு வந்தது. கருத்தடை செய்து ரேடியோ காலர் பொருத்தப்பட்ட பெண் ஆடுகளை மற்ற ஆடுகளுடன் மேய விடுவதே இதன் நோக்கம். இவற்றைத் தேடி மீதியுள்ள ஆண் ஆடுகள் வரும் என்பது அதிகாரிகளின் நம்பிக்கை.
ஆண் ஆடுகளைக் கவர ரேடியோ காலர் பொருத்தப்பட்ட பெண் ஆடுகள் மீது ஹார்மோன் தெளிக்கப்பட்டது. இதனால் ஆண் ஆடுகள் பெண் ஆடுகளைத் தேடி வந்தன. தயாராகக் காத்திருந்த துப்பாக்கி வீரர்கள் அவற்றை சுட்டுக் கொன்றனர். ரேடியோ காலர் பொருத்தப்பட்ட பெண் ஆடுகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளப்பட்டன. அவை மீண்டும் திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன. இதனுடன் ரேடியோ காலர் தொழில்நுட்பத்தின் மூலம் ஆடுகளுக்கு கருத்தடையும் செய்யப்பட்டது. ஒளிந்திருந்த ஆடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆடு வேட்டையில் பங்காளிகளான உள்ளூர் மக்கள்
காலப்பகோஸ் சாண்டியாகோ தீவில் மட்டும் 213 யூதாஸ் ஆடுகள் ஆடு வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டன. இதன் மூலம் 2004 முதல் 2005 வரை உள்ள காலத்தில் 1,174 ஆடுகள் கொல்லப்பட்டன. இசபெல்லா தீவில் 770 யூதாஸ் ஆடுகள் பயன்படுத்தப்பட்டன. 2006ல் இந்தத் தீவும் ஆடு இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டது.
வேட்டைக்காரர்களைத் தவிர ஆடுகளைக் கொல்ல உள்ளூர் மக்களையும் அதிகாரிகள் அனுமதித்தனர். ஒருபோதும் வேட்டைக்குப் போகாதவர்கள் கூட ஆடுகளைத் தேடி வந்தனர். வேட்டை நடந்தது. தயவுதாட்சண்யம் இல்லாமல் ஆடுகள் கொன்று குவிக்கப்பட்டன. கொல்லப்பட்ட ஆடுகளின் இறைச்சி, உரோமங்கள், தோல் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
வேட்டைக்கு வருபவர்களுக்கு துப்பாக்கி, வேட்டை நாய்கள், தற்காலிக இருப்பிடம் அறியும் வசதி (GPS) போன்றவை ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த வேட்டை இரண்டாண்டு நீடித்தது. 53,782 ஆடுகள் கொல்லப்பட்டன. இரண்டாம் கட்டத்தில் ஹெலிகாப்டர் மூலம் வான் வழி வேட்டை நடந்தது. இது மூன்று மாதங்கள் நீடித்தது. இதற்காக தொழில்ரீதியான வேட்டைக்காரர்கள் தீவிற்கு வர வழைக்கப்பட்டனர்.
ஆடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டதால் உள்ளூர் தாவர விலங்குகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பின. இது ஆய்வாளர்களிடையில் வியப்பை ஏற்படுத்தியது. ஆடுகள் விட்டுச் சென்ற மரங்களின் தளிர் இலைகள் வெகு விரைவில் துளிர்த்தது. செடிகள் வேகமாக துளிர் விட்டு வளர்ந்தன. உள்ளூரில் வளரும் முட்செடிகள் முன்பை விட அதிக ஆற்றலுடன் வளர்ந்தன. உணவும் நீரும் கிடைக்கும் என்ற நம்பிக்கையால் அவற்றைச் சார்ந்து வாழ்ந்த மற்ற உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
தீவின் சூழல் மண்டலம் பழைய வடிவிற்கு வந்தது. மூவாயிரத்தில் இருந்து பத்தொன்பதாயிரமாக ஆமைகளின் எண்ணிக்கை உயர்ந்தது. இவ்வாறு இசபெல்லா திட்டம் ஆக்ரமிப்பு உயிரினங்களுக்கு எதிரான உலகின் மிகச்சிறந்த முன்மாதிரித் திட்டமாக மாறியது.
சார்ல்ஸ் டார்வினும் காலப்பகோஸும்
பரிணாமக் கோட்பாட்டின் தந்தை சார்ல்ஸ் டார்வின் வந்து தங்கிய பிறகே இத்தீவு உலகின் கவனத்தைக் கவந்தது. ஒற்றைப்பட்ட தீவுக்கூட்டம் என்ற நிலையில் இங்கு வாழும் தாவர விலங்கினங்கள் விசித்திரமானவையாக காணப்பட்டன. இது டார்வினைக் கவர்ந்தது. 1831 முதல் ஐந்தாண்டு காலம் கப்பல் பயணம் செய்து உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அவர் ஆய்வுகளை நடத்தினார்.
இந்தப் பயணத்திற்கு நடுவில்தான் அவர் காலப்பகோஸ் தீவில் வந்தார். இங்கு ஐந்து வார காலம் தங்கி ஆய்வுகளை நடத்தினார். பரிணாமக் கோட்பாட்டின் உருவாக்கத்தில் காலப்பகோஸ் தீவின் சூழல் பற்றிய ஆய்வு டார்வின் தன் கொள்கையை வகுக்க பெரிதும் உதவியது. அவர் இத்தீவு ஒற்றைப்பட்ட தீவாக இருந்ததால் இங்கு உள்ள ராட்சத ஆமைகள், கடல் இக்வானாக்கள், பெரிய தாடியுடன் இருந்த ஃப்ரிகேட் பறவைகள் போன்றவற்றின் இயல்பு, வடிவம், வளர்ச்சியை பற்றி விரிவாக ஆராய்ந்தார்.
அவர் இங்கு கண்டுபிடித்த 14 வகை பிஞ்ச் பறவைகளுக்கு அவரது நினைவாக டார்வினின் பிஞ்ச் பறவைகள் என்று பெயரிடப்பட்டன. 1831 டிசம்பர் 27 முதல் 1836 அக்டோபர் 2 வரை ஹெச் எம் எஸ் பீகில் என்ற கப்பலில் மேற்கொண்ட கடல் வழி பயணத்தின்போது 1835 செப்டம்பர் 15 அன்று டார்வின் காலப்பகோஸ் தீவிற்கு வந்து சேர்ந்தார். அங்கு ராட்சத ஆமைகள், அது வரை கண்டிராத பறவைகள் அத்தீவை வித்தியாசமான சூழல் பகுதியாக கருத வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்கு ஏற்படுத்தியது.
1878ல் யுனெச்கோ இத்தீவை உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. தீவைச் சுற்றிலும் உள்ள கடலில் வாழும் 20% உயிரினங்கள் உலகில் வேறெங்கும் காணப்படாதவை. இது இத்தீவை வேறுபட்டதாக மாற்றியது. கடலில் வாழும் ஒரே ஒரு இக்வானா இனம் இங்கு மட்டுமே வாழ்கிறது. காலப்பகோஸ் பெங்குயின் இங்கு வாழும் மற்றொரு அதிசய உயிரினம். இது போன்ற பல அரிய சூழ்நிலைகளே டார்வினை உயிரினங்களின் தோற்றம் (On the origin of the species) என்ற புகழ்பெற்ற நூலை எழுதத் தூண்டியது.
பல உயிரினங்களும் பூமியில் இதர பகுதிகளில் உயிரினங்களுடன் ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பு கொண்டிருக்கும் என்றாலும் இத்தீவில் அவை வேறுபட்ட வடிவத்திலும் விசித்திர சுபாவத்துடனும் காணப்படுகின்றன என்பதை அவர் கண்டறிந்தார். மனிதனைப் பார்த்து பயப்படாத பறவைகள், பெரிய ஆமைகள், உதடுகளுடன் உள்ள பிஞ்ச் குருவிகள் என்று பல தரப்பட்ட உயிரினங்கள் அவற்றில் ஒரு சில.
ஒற்றைப்பட்ட இடங்களில் இத்தகைய உயிரினங்கள் எவ்வாறு தோன்றின என்று டார்வின் சிந்தித்தார். இதில் இருந்தே பாதகமான சூழ்நிலைகளை சமாளித்து வாழும் இயல்புடைய இது போன்ற உயிரினங்கள் தோன்றின என்பது அவருக்குப் புரிந்தது. இதுவே பூமியில் புதிய உயிரினங்கள் தோன்ற காரணம் என்று அவர் கண்டுபிடித்தார். இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டிற்கும் இத்தீவின் உயிரினங்களே வழிவகுத்தன. அவரது நினைவாக அங்கு டார்வின் ஆய்வு நிலையம் செயல்படுகிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
புவி வெப்ப உயர்வினால் அண்டார்டிகா நிறம் மாறுகிறது. வெண்பனிக் கண்டம் வேகமாக பசுமை நிறமாகிறது. செயற்கைக்கோள் படங்களின் பகுப்பாய்வு கடந்த சில பத்தாண்டுகளாக அண்டார்டிகாவின் பசுமைப் போர்வை பல பத்துமடங்கு அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுகிறது. 1986ல் ஒரு சதுர கிலோமீட்டருக்கும் குறைவான பரப்பில் இருந்த தாவரங்களின் வளர்ச்சி 2021ல் 12 சதுர கிலோமீட்டர் என்ற அளவில் பரவியது. 2016 முதல் பாசி வகை தாவரங்கள் கட்டுக்கடங்காமல் பெருகி வருகின்றன.
வெண்பனிக் கண்டத்தில் தாவரங்கள்
பனிக்கட்டிகளாலும் பாறைகளாலும் ஆக்கப்பட்ட இங்கு தாவரங்கள் வேகமாக வளர்வது உலகளவில் வெப்பம் அதிகரிப்பதையே காட்டுகிறது. தாவரங்களின் பரவல் தூய கண்டத்தில் அந்நிய ஆக்ரமிப்பு தாவரங்கள் காலூன்ற வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
(Photograph: Matt Amesbury)
ஆர்க்டிக் பகுதியிலும் பசுமைப் பரப்பு அதிகரிக்கிறது. 2021ல் ஐஸ்லாந்தில் பெரிய பனிமலையில் பனி பொழிவதற்குப் பதில் முதல்முறையாக சாதனையளவு மழை பெய்தது.
“அண்டார்டிகாவில் இப்போதும் ஒரு சிறு பகுதி தாவரங்களால் மூடப்பட்டுள்ளது. என்றாலும் அண்டார்டிகா பெரும்பாலும் பனிக்கட்டிகள் மற்றும் பாறைகளால் மூடப்பட்டுள்ளது” என்று ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியரும் எக்ஸிட்டர் (Exeter) பல்கலைக்கழக ஆய்வாளருமான டாக்டர் தாமஸ் ரோலண்ட் (Dr Thomas Roland) கூறுகிறார். ஆனால் இச்சிறிய பசுமைப் பகுதி கூட ஆபத்தான நிலையில் வளர்கிறது. தனிமைப்படுத்தப்பட்ட, பரந்து விரிந்த இப்பகுதியை கூட மனிதச் செயல்பாடுகள் பாதிக்கிறது.
இதன் பரப்பு 13.66 மில்லியன் சதுர கிலோமீட்டர். கார்பன் உமிழ்வு தடுத்து நிறுத்தப் படாவிட்டால் வருங்காலத்தில் தொடரும் வெப்ப உயர்வு இந்த தனித்துவம் மிக்க, பலவீனமான இதன் உயிரியல் மற்றும் நில அமைப்பை மாற்றி விடும்.
லாண்ட் சாட் (Landsat) செயற்கைக்கோள் படங்களின் பகுப்பாய்வு மூலம் நடந்த இந்த ஆய்வு பற்றிய கட்டுரை நேச்சர் புவி அறிவியல் (Nature Geoscience) என்ற இதழில் வெளிவந்துள்ளது.
“இந்த ஆய்வுகள் சுவாரசியமானவை. கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள லார்சன் இன் லிட் (Larsen Inlet) பகுதிக்குச் சென்றிருந்தோம். 1986-88 ஆண்டு காலத்தில் இப்பகுதியில் இருந்த லார்சன் பனிப்பாறை (Larsen Ice Shelf) உருகி உண்டான நிலப்பரப்பில் நாங்கள் தரையிறங்கினோம். இப்போது இங்கு ஆல்காக்கள் வளர்ந்து பெருகியுள்ள ஓர் ஆறு ஓடுகிறது! ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இப்பகுதி வளி மண்டல மாற்றங்களால் பாதிக்கப்படாத பகுதியாக இருந்தது.
ஆனால் பனிக்கட்டிகள் உருகியதால் வெறும் நிலமாக மாறிய இது கடந்த சில ஆண்டுகளில் தாவரங்கள் வளரும் பகுதியாக மாறிவிட்டது. இந்த மாற்றங்கள் காலநிலை அவசரநிலையைக் காட்டும் கருவி. இதனால் இப்பகுதியில் உயிருள்ளவை காலூன்றத் தொடங்கியுள்ளன” என்று இங்கிலாந்தின் நார்த்தம்ப்ரியா (Northumbria) பல்கலைக்கழக விஞ்ஞானி பேராசிரியர் ஆண்ட்ரூ ஷப்ஃபர்ட் (Prof Andrew Shepherd) கூறுகிறார்.
இப்பகுதியை சுற்றிய கடலில் இருந்த பனி உருகியதால் 2016ல் இங்கு பாசிகள் பெருகத் தொடங்கின. வெதுவெதுப்பான திறந்த நிலை கடல்கள் ஈரமான சூழலை ஏற்படுத்தி நிலப்பரப்பை அதிகரிக்கிறது. பாசிகள் வெறும் பாறைகளில் வளர்ந்து ஆக்ரமிக்கின்றன. இது மண் என்னும் உயிரூட்டமுள்ள பொருளை உருவாக்குகிறது. இதனால் மற்ற தாவரங்கள் வளர உகந்த சூழல் இங்கு உருவாகிறது.
“இங்கிருக்கும் பெரும்பாலான மணற்பரப்பு சத்துகள் அற்றது. பரவும் தாவர வாழ்க்கை அங்ககப் பொருட்களின் அளவை அதிகரிக்கச் செய்யும். கூடுதலான மண் உருவாகும் சூழ்நிலையை இது உண்டாக்கும். இதனால் சூழல் சுற்றுலாப் பயணிகள், விஞ்ஞானிகள் மற்றும் இதர வருகையாளர்களால் இப்பகுதிக்கு எடுத்து வரப்படும் அந்நியமான, ஆக்ரமிப்பு தாவரங்கள் வளரும் வாய்ப்பு அதிகமாகும். 2017ல் பாசிகளின் வளர்ச்சி வேகம் பற்றி ஆராயப்பட்டது. ஆனால் அது பகுதிவாரியாக நடைபெறவில்லை.
2022ல் நடந்த மற்றொரு ஆய்வு இப்பகுதிக்கு சொந்தமான இரண்டு பூக்கும் தாவரங்கள் இதன் வட பகுதியில் அமைந்துள்ள சிக்னி (Signy) தீவில் பரவுவதைக் கண்டறிந்தது. உருகும் பனிப்பரப்புகள் மீது பச்சைப் பாசியும் படர்ந்து வளர்கிறது. இன்றுள்ளது போல அன்று வளி மண்டல கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகமாக இருந்ததால் தென் துருவத்திற்கு அருகில் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மரங்கள் வளர்ந்திருந்தன.
பூமியில் மனிதக் குறுக்கீடுகள் இல்லாத பகுதி என்று பல காலங்களாக கருதப்பட்டு வந்த அண்டார்டிகா வெப்ப உயர்வால் கரைந்து உருகினால் அது நாம் வாழும் இந்த கோளின் அழிவுக்கே காரணமாக அமையும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- ஆழ்கடலில் அதிசய எரிமலைகளின் கண்டுபிடிப்பு
- நஞ்சுள்ள பட்டாணி நாளைய உலகின் உணவாகுமா?
- பவளப் பாறைகளுக்கு மரங்களால் ஒரு புது வீடு
- இந்தியாவில் லித்தியம்
- உலகின் குப்பைத் தொட்டியா அட்டகாமா பாலைவனம்?
- குட்டையாகும் ஆல்ப்ஸ் மலை
- நிறம் மாறும் கடல்கள்
- ஆழ்கடலில் புதிய பவளப் பாறைகளின் கண்டுபிடிப்பு
- உலகை அச்சுறுத்தும் பூஞ்சைகள்
- அதிகரிக்கும் வானவில் நாட்கள்
- பூமியின் வட கோடியில் ஒரு புதிய தீவின் கண்டுபிடிப்பு
- சூரியனின் கதிர்களை திசை திருப்பி விட்டால் பூமியில் சூடு குறையுமா?
- புதையுண்ட பூமிக்குள் ஓர் அற்புதக் காடு
- 2050ல் உலகின் அணைக்கட்டுகள் எப்படி இருக்கும்?
- எரிமலைகள் வரமா? சாபமா?
- ஜெட் ஸ்ட்ரீம்
- அன்னை பூமியின் மடியில் அற்புத அமைப்புகள்
- கதை சொல்லும் காற்று
- ஆக்சிஜன் இல்லாமல் அழியப் போகும் பூமி?
- மூழ்கும் தீவு – மூழ்கப் போகும் உலகம்