அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- இரா.ஆறுமுகம்
- பிரிவு: தொழில்நுட்பம்
எதிர்வரும் பிப்ரவரி 6 ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சிவலிங்கபுரம் என்னும் சிறிய கிராமத்தில் தினேஷ் மற்றும் ஜனக நந்தினி என்ற இருவரும் திருமணம் செய்யவிருக்கிறார்கள். இதற்கும் கட்டுரை தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?
காலையில் அவர்களின் திருமணம் முடிந்த பிறகு, மாலை மெட்டாவெர்ஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அது என்ன மெட்டாவெர்ஸ்?!
மெட்டாவெர்ஸில் அவர்களின் திருமண விருந்தினர்கள் மெய்நிகர் (virtual) நிலையில் கலந்து கொள்ளலாம். இது அவர்கள் திருமண வரவேற்பு நிகழ்வின் காணொளிக் காட்சியை இணையத்தில் கண்டு ரசிப்பதை போன்றதல்ல.
அவர்கள் இணையத்தில் நுழைந்து, ஹாரிபாட்டரின் (Harry Potter) ஹாக்வார்ட்ஸ் கோட்டைக்கு (Hogwarts castle) வந்து விடுவார்கள். வீடியோ கேம் போல அவர்கள் மணமக்களின் அலங்காரத்தோடு கூடிய அவதார் (Avatar) பயன்படுத்திக் கொள்வார்கள். அங்கு சாப்பாட்டு மேசையில் காத்திருப்பார்கள். உங்களுக்கு அழைப்பு இருந்தால் நீங்களும் இணையத்தில் நுழைந்து ஒரு அவதாரை தேர்ந்தெடுத்து அவர்களோடும் மற்ற விருந்தினர்களோடும் அளவளாவலாம். ஆனால் உணவு மட்டும் கிடைக்காது. திருமணப் பரிசாக அன்பளிப்பு வவுச்சர்கள் மூலமாகவோ, Gpay மூலமாகவோ வழங்கலாம். கிரிப்டோவாக (crypto) கூட வழங்கலாம் என்று அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
இதில் ஒரு விசேடம் என்னவென்றால் காலம்சென்ற மணமகளின் தந்தையாரின் அவதாரை உருவாக்கி அதில் நடமாட விடுகிறார்கள். மணமகன் ஏற்கனவே பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் பணிபுரிந்து வந்ததால் அவருக்கு இது எளிதாகத் தெரிகிறது.
உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் திருமண வரவேற்பை தங்களது நண்பர்கள் பார்ப்பதற்கு வசதியாக இப்படி ஏற்பாடு செய்ததாகக் கூறுகிறார். மேலும் தற்போதைய பெருந்தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டும் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
கடந்த டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த டிரேசி (Traci) என்பவரும் டேவ் காக்னான் (Dave Gagnon) என்பவரும் இதேபோல மெட்டாவெர்ஸ் திருமணம் முடித்தது பெரிய செய்தியாக இருந்தது.
இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்கிறீர்களா? இதுதான் இனி சமூக ஊடகங்களின் ஒரு வடிவமாக இருக்கப் போகிறது. தொழில்நுட்பம் அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது.
அண்மையில் ஃபேஸ்புக்கின் மார்க் ஸூக்கர்பெர்க் இதைத் தெளிவாக எடுத்து வைத்திருக்கிறார். இதற்காகவே தனது நிறுவனத்தின் பெயரை மெட்டா (Meta) என்று மாற்றியிருக்கிறார். மைக்ரோசாப்ட் கூட மெஷ் (Mesh) என்னுமொரு மெய்நிகர் அனுபவத்திற்கான ஒரு தளத்தினை உருவாக்கி வருகிறது. கூகுளும் ஆப்பிளும் கூட தனித்தனியே இத்தகைய முயற்சியில் இறங்கியிருக்கின்றன.
இந்த மெட்டாவெர்ஸ் சமூக நிகழ்வுகள் மட்டுமல்லாது கல்வி, மருத்துவம், வணிகம், பொழுதுபோக்கு என்று அனைத்துத் துறைகளிலும் பயன் அளிக்கப் போவதாக இருக்கிறது.
மார்க் ஸூக்கர்பெர்க் மற்றும் சத்ய நாடெல்லா போன்ற தலைமை செயல் அதிகாரிகளின் பேச்சுக்களில் இருந்து மெட்டாவெர்ஸ் என்பது இணையத்தின் எதிர்கால வடிவம் என்று தெரிகிறது. இப்போது மெட்டாவெர்ஸை பற்றிப் பேசுவது என்பது எழுபதுகளில் இணையத்தை பற்றிப் பேசுவது போலாகும். அப்போது, இணையம் இப்படித்தான் இருக்கும் என்று ஒருவராலும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. எனது நண்பர் ஒருவர் அப்போது இணையம் என்பது ஒரு பெரிய நூலகமாக இருக்கும் என்று சொன்னார். ஆனால் இணையம் அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. எவ்வளவோ சேவைகளை அது வழங்குகிறது என்பது பின்னாளில் உறுதியாகிப் போன ஒன்று.
மெட்டாவெர்ஸ் என்பது தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னேறி வரும் பல்வேறு தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பினால் விளைவது. அதிகரிக்கப்பட்ட யதார்த்தம் (Augmented Reality), மெய்நிகர் யதார்த்தம் (Virtual Reality), பிளாக்செயின் (Blockchain) தொழில்நுட்பம், சமூக ஊடகம் ஆகியவை இந்த மெட்டாவெர்ஸை முன்னோக்கி செலுத்துகின்றன.
சுருக்கமாகச் சொன்னால் மெட்டாவெர்ஸ் என்பது பல விதமான மக்கள், தங்களுக்குள்ளும், டிஜிட்டல் பொருள்களோடும், தங்களுடைய மெய்நிகர் மாதிரிகள்(virtual models), அதாவது அவதார்களை வைத்து உறவாடும், எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிற மெய்நிகர் சூழல்களின் (virtual environment), ஒரு வலைப்பின்னல் (network) எனலாம்.
மெட்டாவெர்ஸ் என்னும் இந்த சொல், அறிவியல் புனைவுக் கதைகள் எழுதும் 'நீல் ஸ்டீபன்சன்' என்பவரது 1992 இல் வெளியான "ஸ்நோ கிராஷ்" (Snow Crash) என்ற நாவலில் பயன்படுத்தப்பட்டது. அதில் வரும் கதாபாத்திரம் இதேபோல அவதார்களைப் பயன்படுத்தி சமூகத்தில் ஊடாடுகிறது; கடைகளில் பொருட்களை வாங்குகிறது; எதிரிகளை அழித்து ஒழிக்கிறது.
"மனித அனுபவத்தை விட உயர்ந்த" என்று பொருள்படும் மெட்டா (meta) என்ற சொல்லும் யுனிவர்ஸில் (universe) வரும் வெர்ஸ் என்ற சொல்லும் இணைந்து உருவான ஒரு இரட்டைப்பதமே மெட்டாவெர்ஸ்.
மெட்டாவெர்ஸூக்கு மூன்று அடிப்படையான அம்சங்கள் தேவை. ஒன்று, இருத்தல் (presence). அதாவது ஒரு மெய்நிகர் வெளியில் (virtual space) மெய் நிகராக உலாவும் மற்றவர்களுடன் (virtual others) இருப்பதைப் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துவது. இதற்குப் பெரிதும் உதவுவது தலையில் பொருத்திக் கொள்ளும் காட்சிக் கருவிகள் (head mounted displays).
இரண்டாவது, பரஸ்பர செயல்படும் தன்மை (inter operability). அதாவது ஒரு மெய்நிகர் நிலையிலிருந்து, மற்றொன்றிற்கு தனது மெய்நிகர் பொருட்களுடன், (அதாவது அவதார்கள், டிஜிட்டல் பொருட்கள்) எளிதில் செல்வதும் திரும்ப வருவதுமான ஒரு சூழல்.
மூன்றாவது, தரப்படுத்துதல். (Standardization). இதுவே பல்வேறு தளங்களும் சேவைகளும ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படும் பரஸ்பர தன்மைக்கு உதவி செய்வதாக அமையும். இதற்கு கை கொடுப்பதுதான் பிளாக்செயின் தொழில்நுட்பம்.
மெட்டாவெர்ஸ் இணையத்தின் எதிர்கால வடிவம் என்று சொன்னாலும், மாறுபட்ட கருத்துக்களும் இருக்கின்றன. இப்போது நாம் பயன்படுத்தும் இணையம் Web 2.0. எதிர்காலத்தில் வர இருப்பது Web 3.0. இப்போதுள்ள இணையத்தில் உள்ளடக்கங்கள் நம்மைப் போன்ற பயனர்களால் உருவாக்கப்படுகின்றன. ஆனால் நிறுவனங்கள் அதைக் கட்டுப்படுத்தவும், பணமாக்கிக் கொள்ளவும் அவற்றுக்கு வசதிகள் இருக்கின்றன. ஆனால் இனி வரும் இணையத்தில் (Web 3.0) உள்ளடக்கமும் நம்மால் உருவாக்கப்படும். அதைக் கட்டுப்படுத்துவதும், பணமாக்கிக் கொள்வதும் கூட பயனர்களால் முடியும். இதற்கும் முழுவதும் உதவுவது பிளாக்செயின் தொழில்நுட்பம் தான்.
மெட்டாவெர்ஸ்ஸை முன்னோக்கி கொண்டு செல்ல உதவும் ஒரு எஞ்சினாக இந்த எதிர்கால இணையம் Web 3.0 இருக்கும் என்று கூறுகிறார்கள்.
மெட்டாவெர்ஸ், கிருஷ்ணகிரி மாவட்டம் சிவலிங்கபுரம் கிராமம் வரை வந்து விட்டது. நாமும் அதற்கு தயாராகத்தான் வேண்டும்.
- இரா.ஆறுமுகம்
- விவரங்கள்
- இரா.ஆறுமுகம்
- பிரிவு: தொழில்நுட்பம்
உலக வெப்பமயமாதல் நிகழ்வு அறிவியலாளர்கலையும், சமூக ஆர்வலர்களையும் அரசுகளையும், உலக அமைப்புகளையும் ஒருசேர அதை மட்டுப்படுத்துவதற்கான செயல்பாடுகளை எடுப்பதற்கு நிர்பந்தம் வகிக்கும் அளவிற்கு அதிகரித்து வருகின்றது.
பருவநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையிலான குழு (Intergovernmental Panel on Climate Change), அக்டோபர் 2018 இல் வெளியிட்ட உலக வெப்பமயமாதல் பற்றிய சிறப்பு அறிக்கையில், உலக வெப்பமயமாதல், உலகம் தொழில்மயமாவதற்கு முன்பிருந்த அளவுகளை விட 1.5 டிகிரி சென்டிகிரேட் அளவிற்கு உயர்ந்திருக்கின்றது என கணிக்கிறது.
பாரிஸ் ஒப்பந்தத்தின்படி (Paris Agreement) தேசங்கள் அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (Nationally Determined Commitments) என்று சொல்லப்படும் மிகக் கடுமையான சவால் நிறைந்த நடவடிக்கைகள் எடுத்தும் கூட 2030 க்கு பிறகு உலக வெப்பமயமாதல் நிகழ்வு 1.5 டிகிரி சென்டிகிரேடு அதிகமாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்பமயமாதலை 1.5 டிகிரி சென்டிகிரேடுக்குள் கட்டுப்படுத்துவதற்கு, 2050ஆம் வருட வாக்கில், எந்த கார்பன்–டை-ஆக்சைடு வெளியீட்டையும் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்ற நிலையில் தான் நாம் இருக்கிறோம். அதேபோல கார்பன்-டை-ஆக்சைடு தவிர்த்த மற்ற பசுமை வாயுக்களின் வெளியீட்டையும், குறிப்பாக மீத்தேனையும் கட்டுப்படுத்த மிகவும் போராட வேண்டியது இருக்கும்.
உலக வெப்பமயமாதலின் உயர்வு இரண்டு டிகிரி சென்டிகிரேட் ஆக இருக்கும்போது இருப்பதைவிட 1.5 டிகிரி சென்டிகிரேட் ஆக இருக்கும்போது வரும் ஆபத்துகள் மனிதனுக்கும் இயற்கைக்கும் குறைவாகவே இருக்கும் என்பதால் இந்தப் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
பாரிஸ் ஒப்பந்தத்தின்படி, இந்தியா தனது பசுமை வாயுக்கள் வெளியீட்டு அளவினை, 2005 அளவுகளில் இருந்ததைவிட 2030 ஆம் ஆண்டு வாக்கில், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கில் 33 லிருந்து 35 சதவீதம் குறைப்பதன் மூலம் கட்டுப்படுத்த கடப்பாடு கொண்டுள்ளது.
இது 2030 ஆம் ஆண்டு வாக்கில் புதை படிவம் சாராத எரிசக்தி மூலங்களை பயன்படுத்தி நிறுவப்படும் மின்சக்தி திறன்களை 40% அதிகரிப்பதன் மூலமாகவும், மேலதிகமாக காடுகள் மற்றும் மரங்களின் பரவலால் 2.5 இலிருந்து 3 பில்லியன் வரையிலான கார்பன் டை ஆக்ஸைடு அளவிற்கான (GtCO2e) கார்பன் மூழ்கிகளை (carbon sinks) கூடுதலாக உருவாக்குவதன் மூலமும் மட்டுமே அடைய முடியும்.
இதன் தொடர்ச்சியாக, இந்திய அரசு 2022-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் மெகாவாட் சூரிய மின்சார திறன் சக்தியை நிறுவ இலக்கு ஏற்படுத்தியுள்ளது. அதில் 40% மேற்கூரை மற்றும் சிறிய அளவிலான சூரிய ஒளி மின்சக்தி சாதனங்களும் அடங்கும்.
மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை (Ministry of New and Renewable Energy), தமிழ்நாட்டிற்கு 2022 ஆம் ஆண்டு சூரிய மின்சக்தியின் இலக்காக 9 ஆயிரம் மெகாவாட் திறனை முன்வைப்பு செய்திருக்கிறது. தமிழக அரசும் தனது சூரிய ஒளி சக்திக்கான கொள்கையினை (Solar Energy Policy) 2012 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வெளியிட்டிருக்கிறது.
தனிநபர்களின் பங்களிப்பாக நாமும் உலக வெப்பமயமாதலை மட்டுப்படுத்தும் நிகழ்வுப் போக்கில் சிறிய அளவுகளில் நமது இல்லங்களிலோ, வணிக நிறுவனங்களிலோ மேற்கூரை சூரிய மின்நிலையங்கள் (Solar Rooftop Power Plant) அமைத்து அதில் கலந்து கொள்வது மிகவும் எளிதான விடயமே.
மேற்கூரை சூரிய மின் நிலையம்
சூரிய மின் நிலையங்களில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பெருமளவில் அதாவது அதன் மின்திறன் கணக்கில், மெகா வாட்டுகள் அளவில், பரந்த நிலப்பரப்பில் நிறுவப்படுவது. பெரும்பாலும் இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம், அவற்றை நிறுவிய நிறுவனங்களின் சொந்த உபயோகத்திற்கோ, அல்லது மின்சார நிறுவனங்களுக்கு விற்பதற்கோ பயன்படுத்தப்படுகிறது.
இரண்டாவது, சிறிய மின்சக்தி திறன் அளவில் வீடுகள், விடுதிகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றின் மேற்கூரையின்மீது நிறுவப்பட்டு சொந்த உபயோகத்திற்கு பயன்படுபவை. இதில், மின் நிறுவனத்தின் மின் இணைப்போடு பொருத்தப்பட்டு இயக்குவது; மாறாக மின் இணைப்போடு பொருந்தியில்லாமல் தனிப்பட்ட முறையில் இயக்குவது என இரண்டு வகைகள் உண்டு. மின் இணைப்போடு பொருத்தமின்றி இயக்குவதில் பல சிரமங்கள் உள்ளன. முதலில் அதற்கு மின்கலம் வேண்டும்.
மின்கலத்தை பராமரிப்பதற்கு உண்டான செலவுகளும் ஒரு பிரச்சனை. அது தவிர ஒருவேளை நாம் பயன்படுத்தும் தேவைக்கு அதிகமாக மின்சாரம் உற்பத்தியாகும் போது, மின்கலமும் கொள்ளளவு நிறைந்துவிட்ட போது, சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் மின்சாரம் வீணாகத்தான் போகும். இது தவிர, மின்சாரம் மின் கலன்களில் சேமித்து வைத்து மறுபடி உபயோகப்படுத்துவதன் காரணமாக 15 லிருந்து 20 சதவீதம் வரை எரிசக்தி விரயமாக வாய்ப்பிருக்கிறது.
சூரிய மின்சாரத்தில் இயங்கும் மின் சாதனங்களையும், மின்சார நிறுவன மின்சாரத்தில் இயங்கும் மின் சாதனங்களையும் தனித்தனியாக பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். எனவே இந்த மின் இணைப்போடு பொருத்தமின்றி இயக்கும் முறை பிரபலமடையவில்லை. மேலும் அரசினால் ஊக்கப்படுத்தப்படுவதும் இல்லை.
மேற்கூரை சூரிய மின் அமைப்பிற்கு மிகவும் அவசியமானது பேனல்கள் (solar panel) அமைக்க திறந்த மாடியில் நல்ல சூரிய ஒளி விழும் தேவையான இடம். ஒரு கிலோ வாட் மின்சக்தி திறன் கொண்ட சூரிய மின் அமைப்பிற்கு 8 முதல் 10 சதுர மீட்டர் பரப்பளவுள்ள இடம் தேவை.
முதலமைச்சர் மேற்கூரை சூரிய மின் திட்டம்
தமிழக அரசு, முதலமைச்சர் மேற்கூரை சூரிய மின் திட்டம் என்ற பெயரில் ஒரு சூரிய ஒளி மின் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் ஒரு கிலோ வாட் திறன்சக்தி கொண்ட சூரிய மின் அமைப்பிற்கு 20 ஆயிரம் ரூபாயை மானியமாக தருகிறது. இது மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அளிக்கும் 30 சதவீத மானியத்திற்கும் கூடுதலாக கிடைக்கும்.
தனிப்பட்ட வீடுகளுக்கு அல்லது தனிப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தனிப்பட்ட ஒருவருக்கு சூரிய ஒளி மின் அமைப்பின் திறன் அளவு ஒரு கிலோ வாட் அளவிலும், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் சேர்ந்து 10 கிலோவாட் அல்லது அதன் மடங்குகளிலும் இதை நிறுவிக் கொள்ளலாம். தனிப்பட்ட வீடுகளில் நிறுவும் போது 1 கிலோ வாட்டிற்கு அதிக அளவிலான மின்திறனிலும் நிறுவிக் கொள்ளலாம்.
ஆனால் ஒரு கிலோவாட்டுக்கு மட்டும்தான் மானியம் உண்டு. மின்சார நிறுவனத்தின் மின் இணைப்புடன் செயல்படும் சூரிய மின்சார அமைப்புகளுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்.
நிறுவுதலுக்கான வழிமுறைகள்
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாடு அரசின் எரிசக்தி மேம்பாட்டு முகமையிடம் (Tamil Nadu Energy Development Agency - TEDA) விண்ணப்பித்து அனுமதி பெற்று நிறுவ வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் 1, 2, 5 அல்லது 10 கிலோ வாட் மின்சக்திக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் ஏற்கெனவே குறிப்பிட்டவாறு ஒரு வீட்டிற்கு அல்லது ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு, ஒரு கிலோவாட் அளவிற்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்.
இதற்கு விண்ணப்பிப்பவர்கள் இணைய தளத்தின் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். (இணைய தள முகவரி: http://www.teda.in/CIS) ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும்போது இணையதளத்தில் உள்ள படிவத்தை நிரப்பி, பின்னர் அதில் சமர்ப்பிக்கப்பட்ட படிவத்தினை பிரிண்ட் செய்து, கையொப்பமிட்டு, தமிழ்நாடு எரிசக்தி முகமையின் சென்னை முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தபாலில் விண்ணப்பிக்க, குறிப்பிட்ட இணைய தளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும். இரண்டு முறைகளிலும் விண்ணப்பிப்பதற்கு பதிவுக் கட்டணம் கிடையாது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பதிவு செய்யப்படும். ஒரு குறிப்பிட்ட நாளில், ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கு பிறகுதான் ஆஃப்லைனில் உள்ள விண்ணப்பம் எடுத்துக் கொள்ளப்படும்.
விண்ணப்பங்கள், முன்னுரிமை மற்றும் அவற்றின் சரித்தன்மையினை உறுதி செய்த பின்னர், பதிவு செய்வதற்கான ஒப்புதல் அளிக்கப்படும். இப்படி ஒப்புதல் அளிக்கப்பட்ட விவரம் மின்னஞ்சல் மூலமாகவும் குறுஞ்செய்தி மூலமாகவும் அந்த வார இறுதியில் அனுப்பப்படும்.
பதிவுபெற்ற விண்ணப்பங்களின் பதிவு எண்கள் அதனுடைய ஒப்புதல் விவரங்களுடன் இணையதளத்திலும் வெளியிடப்படும். இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலையினையும், மற்ற படிவங்களையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசின் எரிசக்தி மேம்பாட்டு முகமையின் பதிவு செய்யப்பட்ட நிறுவனர்கள் மூலமாக மட்டுமே நாம் சூரிய ஒளி மின்சார அமைப்பினை வாங்கி நிறுவ முடியும். இந்த நிறுவனங்களின் பட்டியல் தமிழ்நாடு எரிசக்தி துறை மேம்பாட்டு முகமை இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும்.
நமது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்ட உடன் அந்த நிறுவனங்களுடன் நாம் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். தற்போதைய நிலவரப்படி இதில் 22 நிறுவனங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.
அதோடு அவர்களின் சூரிய மின் நிலையத்தினை அமைத்துத் தருவதற்கான விலை, கிலோ வாட்டுக்கு எவ்வளவு என்ற விவரங்களும், மற்ற தொடர்பு விவரங்களும் அதில் தரப்பட்டிருக்கும். பட்டியலின்படி தற்போதைய விலை ஒரு கிலோ வாட்டிற்கு 60,000 ரூபாயிலிருந்து 70,000 ருபாய் வரை இருக்கின்றது.
மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் தவிர்த்த நிகர விலைக்கு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டியதிருக்கும். நிறுவனர்கள் நமக்கு இந்த சூரிய மின்சார அடுக்குகளை நிறுவிய பின் அவர்கள் நேரடியாக மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து அந்த மானியத்தை பெற்றுக் கொள்வார்கள்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) அனுமதிகள்
அடுத்ததாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திடம் இருந்து நீங்கள் அமைக்கப்போகும் சூரிய மின் அமைப்பினை அவர்களது மின் இணைப்போடு இணைப்பதற்கும், நெட் மீட்டர் இணைப்பு பெறுவதற்காகவும் அனுமதி பெற வேண்டியிருக்கும்.
முதலாவதாக, உங்கள் பகுதியில் உள்ள TANGEDCO செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஒரு விண்ணப்பம் அளிக்க வேண்டியிருக்கும். பதிவுக் கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டியிருக்கும். உயரழுத்த மின் இணைப்பு வேண்டுவதாக இருந்தால் உங்கள் பகுதி TANGEDCO மேற்பார்வை பொறியாளரிடம் பதிவு செய்ய வேண்டியதிருக்கும்.
இரண்டாவதாக, TANGEDCO உங்களது சூரிய மேற்கூரை மின் அமைப்பினை அதன் விநியோக வலைப்பின்னலில் (Distribution Network) இணைப்பதற்கான தொழில்நுட்ப சாத்தியப்பாடுகளை ஆய்வு செய்வது; இதற்கு முக்கியமாக பார்க்கப்படுவது நீங்கள் பொருத்தப் போகும் மேற்கூரை சூரிய மின் அமைப்பின் மின்சக்தி திறனின் அளவு, உங்களுக்கு மின் இணைப்பு வழங்கும் மின்மாற்றியின் சக்தியில், 30 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது.
அதுமட்டுமன்றி, நீங்கள் உங்கள் வீட்டிற்கு வாங்கியிருக்கும் மின் இணைப்பிற்கான அனுமதிக்கப்பட்ட மின்சக்தியை விடவும் அதிகமாகவும் இருக்கக் கூடாது. அப்படி ஒருவேளை அதிகமாக இருக்க நேர்ந்தால் முதலில் உங்களுக்கான மின்சக்தி அளவினை அதிகரிப்பதற்கான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். பின்னரே சூரிய மின் அமைப்பின் இணைப்பிற்கும், நெட் மீட்டர் இணைப்பிற்குமான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.
TANGEDCO உங்களது சூரிய ஒளி மின் நிலைய அமைப்பினை தனது விநியோக வலைப்பின்னலில் இணைப்பதற்கான தொழில்நுட்ப சாத்தியப்பாடு இருக்கும்பட்சத்தில் உங்களுக்கு ஒரு அறிவிப்பு கடிதம் தரும். நீங்கள் விண்ணப்பித்த தேதியிலிருந்து 10 நாட்களுக்குள் இந்த கடிதம் அனுப்பப்படும்.
மூன்றாவதாக, சூரிய ஒளி மின் நிலைய அமைப்பினை நிறுவுவதும், அது தயார் நிலையில் உள்ளது என TANGEDCO விற்கு அறிவிப்பதும்; இப்போது நீங்கள் சூரிய ஒளி மின் அமைப்பினை நீங்கள் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனங்களிடமிருந்து வாங்கி நிறுவிக் கொள்ளலாம்.
உங்களுக்கு தொழில்நுட்ப சாத்தியப்பாடு அறிவிப்பு கடிதம் கொடுக்கப்பட்டதிலிருந்து ஆறு மாதத்திற்குள் இதை நிறுவ வேண்டும். தேவைப்படுமேயானால், அதை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். இந்த நிறுவுதல் பணி முடிந்தவுடன், TANGEDCO செயற்பொறியாளரிடம், உங்களது சூரிய மின் அமைப்பு தயார் நிலையில் உள்ளது என்ற கடிதத்தினை கொடுக்க வேண்டும்.
நான்காவதாக, பாதுகாப்பு ஆய்வு; நீங்கள் தயார்நிலை கடிதத்தை கொடுத்த பத்து நாட்களுக்குள் உங்களது சூரிய மின் அமைப்பின் பாதுகாப்பினை சோதனையிடுவார்கள். 10 கிலோ வாட்டுக்கும் குறைந்த மின்சக்தி திறனானால் TANGEDCO இந்த ஆய்வினை மேற்கொள்ளும்.
10 கிலோ வாட்டுக்கு அதிகமான மின்சக்தி திறனாக இருந்தால் உங்கள் பகுதியின் மின் ஆய்வாளர் இந்த பணியினை மேற்கொள்வார். ஆய்வு முடிந்த தேதியிலிருந்து ஐந்து நாட்களுக்குள் பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்படும்.
ஐந்தாவதாக, மின் இணைப்பில் மீட்டர் பொருத்துவதும், சூரிய மின் அமைப்பினை செயல்படுத்துவதும்; TANGEDCO உங்களது தற்போதைய மின் இணைப்பின் மீட்டரை மாற்றியமைத்து ஒரு இருபுறமும் செல்லும் (Bi-directional, அதாவது மின் நிறுவனத்திடமிருந்து உங்கள் வீட்டிற்கும், மற்றும் உங்கள் சூரிய மின் அமைப்பிலிருந்து மின் நிறுவனத்திற்கும்), மின்சாரத்தை அளக்கும் மீட்டரை பொருத்துவார்கள்.
இந்த மீட்டர் மாற்றுவதற்கான கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். அல்லது நாமே கூட இந்த மீட்டரை வாங்கிக்கொடுத்து பொருத்தித் தரச் சொல்லலாம். இதற்காக TANGEDCO அனுமதிக்கப்பட்ட மீட்டர் வகைகளையும் அவர்களது இணையதளத்தில் பட்டியலிட்டு இருப்பார்கள்.
பின்வரும் பாதுகாப்பு அம்சங்கள் ஒரு மின் இணைப்புடன் இணைக்கப்பட்ட சூரிய மின் அமைப்பில் இருக்க வேண்டும். சூரிய மின்சாரத்தினை நமது மின் இணைப்போடு இணைக்கும் கருவியான சோலார் இன்வெர்டரில், ஆன்டி-ஐலான்டிங் (Anti-islanding) பாதுகாப்பு இருக்க வேண்டும்.
நமது வீட்டுக்கு வரும் மின் இணைப்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மின் கம்பிகளில் வேலை செய்யும் மின் பணியாளர்களை, நமது சூரிய மின் அமைப்பிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் தாக்கி விடக் கூடாது என்பதற்காக இந்த பாதுகாப்பு.
இதில் அறிந்து கொள்ள வேண்டியது, மின் நிறுவனத்தால் வழங்கப்படும் மின்சாரம் நிறுத்தப்படும் போது சூரிய மின் உற்பத்தியும் நிறுத்தப்படும் என்பதுதான். இது தவிர, மற்ற மின் உபகரணங்கள் போல இதற்கும் தரை இணைப்பு (earthing) கொடுக்கப்பட வேண்டும்.
சூரிய மின் அமைப்பிலிருந்து வரும் ஒரு திசை மின்சாரத்தை, மாறுதிசை மின்சாரமாக மாற்றும் சோலர் இன்வெர்டரின் (solar inverter) இரண்டு புறங்களிலும் மின் பாதுகாப்பு உபகரணங்கள் (surge protection devices), அவை கட்டாயமாகவில்லையென்றாலும், இணைக்கப்படலாம். நமது வீட்டு மின் இணைப்பின் முக்கிய விசை (main switch) அருகிலும், மீட்டர் அருகிலும் 10 செமீ க்கு 7 செமீ அளவில் Solar PV System என்ற அறிவிப்பு ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும்.
என்ன பலன் கிடைக்கும்
ஒவ்வொரு கிலோவாட் மின் திறனுள்ள சூரிய ஒளி மீன் அமைப்பும் வருடத்திற்கு 1500 யூனிட்டுகள் மின்சாரம் தயாரிக்க முடியும். மின் உற்பத்தியானது சூரிய சக்தியின் அளவினையும், அந்த சூரிய மின் அமைப்பு பேனல்கள் நிறுவப்பட்டிருக்கும் கோணத்தையும், காலச் சூழ்நிலையையும், மின் நிறுவனத்தின் மின் இணைப்பு தொடர்ந்து கிடைப்பதைப் பொறுத்தும், சூரிய மின் அமைப்பு பேனல்களின் சுத்தத்தை பொருத்தும் மாறுபட வாய்ப்பு உள்ளது. தினமும் ஏறக்குறைய 6 இலிருந்து 8 யூனிட்டுகள் வரை மின்சாரம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
வீடுகளுக்கு தற்போதைய கட்டணக் காலம் இருமாதங்களாய் இருப்பதால், நெட் மீட்டரில் பதிவான TANGEDCO விலிருந்து நாம் எடுத்துக் கொண்ட மின்சாரமும், TANGEDCO விற்கு நாம் செலுத்திய மின்சாரமும் தனித்தனியாக கணக்கிடப்படும். நாம் எடுத்துக் கொண்ட மின்சாரத்திற்கு ஏற்கெனவே உள்ள மின்கட்டண அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். நமது சூரியமின் நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு நாம் உபயோகித்தது போக TANGEDCO விற்கு செலுத்தப்பட்ட மின் அளவிற்கு தமிழ்நாடு மின்சார ஆணையம் நிர்ணயித்த விலைப்படி கணக்கிடப்பட்டு பில்லில் சரி செய்யப்படும்.
தற்போது அப்படி நிர்ணயம் செய்யப்பட்ட விலையானது யூனிட்டிற்கு ரூபாய் 2.28 ஆக இருக்கிறது. அப்படி சரிசெய்யப்பட்டதற்கும் அதிமாக நாம் செலுத்திய மின்சார அளவு இருந்தால், அந்த வித்தியாசம் அடுத்த மின் கட்டண கால நுகர்வோடு சரி செய்ய எடுத்துச் செல்லப்படும். இப்படியாக 12 மாதங்களுக்கு (ஏப்ரல் மாதத்திலிருந்து அடுத்த மார்ச் மாதம் வரை) சரி செய்வதற்காக, அதிகம் செலுத்திய மின் அளவு எடுத்துச் செல்லப்படும். ஆனால் நாம் இந்த 12 மாத காலத்தில் நுகர்வு செய்த மின்சாரத்தின் அளவில் 90 சதவீதம் வரை மட்டுமே சரிசெய்யப்படும்.
இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் மின்சாரம் பயன்படுத்தும் ஒரு வீட்டில், 1 கிலோ வாட் திறனுள்ள சூரிய மின் அமைப்பு நிறுவுவதாகக் கொள்வோம். அது தினமும் 5 யூனிட்டுகள் உற்பத்தி செய்வதாகக் கொண்டால், இரண்டு மாதங்களுக்கு 300 யூனிட்டுகள் மின்சாரத்தினை உற்பத்தி செய்திருக்கும்.
இந்த 300 யூனிட்டுகளுக்கு மின்நிறுவனம் விதிக்கும் ரூ.4.60 கட்டணத்திலிருந்து சேமிப்பை பெற முடியும். இதன் ஒரு ஆண்டு பலன் ரூ.8,260/- எனக் கொண்டால், 7 வருடங்களில் சூரிய மின் அமைப்பு நிறுவிய செலவினத்தை மீட்டுக் கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேலாக நாமும் உலக வெப்பமயமாதலை மட்டுப்படுத்தும் நிகழ்வில் பங்களிக்கிறோம் என்ற மன திருப்தியைப் பெறலாம்.
- இரா.ஆறுமுகம்
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
மரபணு மாற்றம் (Genome editing) குறித்த ஆய்வுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் தான் தொடங்கப்பட்டது. இதனை சுருக்கமாக சொல்லப் போனால் 'உடலில் உள்ள செல்களை மாற்றம் செய்து மீண்டும் மறு உற்பத்தி (Re productive) செய்வது ஆகும்.
2012 ஆம் ஆண்டில் CRISPR-Cas9 என்ற Gene editing தொழில்நுட்பத்தை வடிவமைத்து, இதுகுறித்து ஆய்வுகளை சமர்ப்பித்த அமெரிக்காவின் Jenifer A Dounda என்பவருக்கும் (இவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்), இவருடன் ஜெர்மனியின் Emmanurlle Charpentier என்பவருக்கும் (இவர் 'Max Planck Unit for the Science of Pathogens, Berlin, Germany' -ல் இயக்குனராக பணியாற்றி வருகிறார்) மரபணு மாற்று CRISPER tool -ஐ கண்டுபிடித்ததற்காக, இவ்விரு பெண்களுக்கு வேதியலுக்கான நோபல் பரிசு பகிரந்துக் கொள்ளப்பட்டது.
"இந்த தொழில்நுட்பம் வாழ்வில் அறிவியலில் ஒரு புரட்சிகர மாற்றத்தை கொண்டு வரும். குறிப்பாக புற்றுநோய் மாற்று சிகிச்சைக்கு புதிய வழிகளை காட்டியிருக்கிறது" என்கிறது வேதியியல் நோபல் குழு.
ஆய்வாளர்களின் கருத்துப்படி Gene editing tool மூலம் விலங்குகள், தாவரங்கள், மற்றும் நுண்ணுயிர்களின் மரபணுக்களை மாற்ற முடியும். இதில் சட்ட ரீதியான பிரச்சனைகளும், அதாவது முறையான முறைப்படுத்தப்பட்ட சட்டங்கள் கிடையாது. அதேவேளையில் சர்ச்சைகளும் இருக்கிறது. இயற்கைக்கு எதிராக நம் உடலில் அல்லது விலங்குகளுக்கு, தாவரங்களுக்கு மாற்றம் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
CRISPER-Cas9 tool என்றால் என்ன?
மரபணு மாற்றம் என்பதே பல்வேறு வகையான தொழில்நுட்ப முறையில் உடலில்/உயிரில் இருக்கும் உறுப்புகளின் DNA -வை மாற்றம் செய்வது அல்லது மாற்றி வடிவமைப்பது ஆகும் என்பதை நாம் சுருக்கமாக பார்த்தோம். இந்த தொழில்நுட்பம் மூலம் உயிர் உற்பத்தி ஆகும் போது கிடைக்கப் பெறும் genetic material -ஐ உடலினுள் ஒரு குறிப்பிட்ட பாகத்தில் சேர்க்கவும், அகற்றவும், அல்லது மாற்றி அமைக்கவும் முடியும்.
இதில் பல்வேறு தொழில்நுட்பங்கள் இருந்தாலும் சமீபத்தில் கண்டறியப்பட CRISPER-Cas9 தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகளால் அதிகம் கையாளப்படுகிறது. Clustered Regularly Interspaced Dhort Palindromic Repeats and CRISPR-associated protein 9 இதன் சுருக்கமே CRISPER-Cas9 ஆகும்.
CRISPER-Cas9 என்ற முறை இயற்கையாக பாக்டீரியாக்களை மாற்றம் செய்வதில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது. பாக்டீரியாக்கள் டி.என்.ஏவின் துணுக்குகளை படையெடுக்கும் வைரஸ்களிலிருந்து பிடிக்கின்றன, மற்றும் CRISPER-Cas9 arrays எனப்படும் டி.என்.ஏ (DNA-deoxyribonucleic acid) பிரிவுகளை உருவாக்க அவற்றைப் பயன்படுத்துகின்றன. CRISPR வரிசைகள் பாக்டீரியாக்களை வைரஸ்களை (அல்லது நெருங்கிய தொடர்புடையவை) "நினைவில்" வைக்க அனுமதிக்கின்றன.
வைரஸ்கள் மீண்டும் தாக்கினால், வைரஸ்களின் டி.என்.ஏவை குறிவைக்க பாக்டீரியா CRISPER-Cas9 வரிசைகளில் இருந்து ஆர்.என்.ஏ (RNA - Ribonucleic acid) பிரிவுகளை உருவாக்குகிறது. பின்னர் அந்த DNA -வைத் துண்டிக்க Cas 9 அல்லது இதே போன்ற நொதியைப் பயன்படுத்தி அதை வெட்டுகிறது.
இது வைரஸை முற்றிலுமாக முடக்குகிறது. இதுவே இதன் அடிப்படை செயல்படும் முறை என கூறலாம். இந்த முறையை பயன்படுத்தி ஒற்றை மரபணு கோளாறு நோய்களான Cystic fibrosis, Hemophilia, Sickle Cell Decease, போன்ற நோய்களை குணப்படுத்த முடியும், என்கிறார்கள் மருத்துவ விஞ்ஞானிகள்.
CRISPER-Cas9 மூலம் செய்யப்பட்ட மரபணு மாற்று சிகிச்சை:
Sickle cell deceas நோயினால் பாதிக்கப்பட்டிருந்த Victoria Gray வயது 34, என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் பெண்மணி தாமாகவே முன்வந்து இந்த மரபணு மாற்று சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டார். இவர் அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் உள்ள நேஷ்வில் நகரத்தில் வசித்து வருகிறார். அவர் மூன்று வயதாக இருக்கும்போது அவரது பாட்டி அவரை குளிக்க வைத்து போது, கையில் பயங்கரமான வலி ஏற்பட்டிருக்கிறது.
மற்ற குழந்தைகள் போல அவரால் விளையாடவோ, பயணம் செய்யவோ முடியவில்லை. ஒரு வேதனையான வாழ்க்கையை தான் தனது இளமைக் காலத்தில் கழித்தார். மருத்துவமனையில் சோதித்த போது தான் அவருக்கு Sickle cell deceas இருப்பது தெரியவந்தது. இவர் தான் பொதுவெளியில் இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளும் முதல் நபர். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 40 வயதுக்கு மேலே உயிர் பிழைப்பதே அரிதாக இருக்கிறது. உலகளவில் மில்லியனில் ஒரு நபருக்கு இந்த நோய் இருப்பதாக கண்டறியப்பட்டு இருக்கிறது.
அவரது உடம்பில் ஏற்பட்ட மரபணு குறைபாடுகளால் எலும்பின் மஜ்ஜை (bone marrow) சிதைந்த புரதத்தை உற்பத்தி செய்து, இரத்தத்தின் செல்களை அரிவாள் போன்ற வடிவில் மாற்றி இரத்த ஓட்டத்தைத் சரியாக இயங்காமல் தடிமனான மாறியுள்ளது. சிதைந்த செல்கள் இரத்த நாளங்களுக்குள் சிக்கிச் சாதாரணமாக ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லாததால் பலவீனமடையும் மற்றும் ஆயுளைக் குறைக்கும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றது.
பொதுவாக ஒருவரின் உடலில் ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல ஹீமோகுளோபின் பயன்படுத்துகின்றது.
இந் நோயாளிகளின் சிவப்பு ரத்த அணுக்களை குறைபாடுள்ள ஹீமோகுளோபின் கொண்டு செல்வதால், அவை சிவப்பு செல்களை மேலும் சிதைக்கின்றன. இதனால் போதுமான ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லாது. (fetal hemoglobin) கருவில் உருவான ஹீமோகுளோபின் மீண்டும் அவரது உடலில் செலுத்துவதன் மூலம் குறைபாடுள்ள புரதத்திற்கு புதிய வடிவத்தை கொடுக்கும்.
fetal hemoglobin இதனை எப்படி உள்வாங்கி கொள்வது என்றால், தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும் போது அதற்கு தேவையான புரதத்தை fetal hemoglobin மூலம் எடுத்துக் கொள்ளும். குழந்தை பிறந்தவுடன் fetal hemoglobin உற்பத்தியாகுவது தானாக நின்றுவிடும். பின்னர் குழந்தையின் உடலில் இருக்கும் hemoglobin தொடர்ந்து இரத்தத்தில் ஆக்ஸிஜனை எடுத்து செல்ல உதவி புரியும்.
2019, ஜூன் 29 நாள் சிகிச்சை அளிக்கப்பட்டது, அவரது Bone marrow -வை மரபணு மாற்றம் செய்து மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு CRISPER-Cas9 தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிகிச்சை ஆரம்பமானது. அதாவது பில்லியன் கணக்கில் புதிய fetal hemoglobin ஆக மாற்றம் செய்து எலும்புகள் செல்லுமாறு சிகிச்சை நடைபெற்றது.
அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்தார். இந்த ஆண்டு ஜூன் மாதம் அவரின் சிகிச்சை முடிந்து ஓராண்டு காலம் ஆகிறது. அவர் நலமுடன் வசித்து வருகிறார். இது ஒரு அற்புதம் என்றே அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் Dr. Haydar Frangoul தெரிவித்தார்.
மரபணு மாற்றம் சர்ச்சைகள்:
இப்புதிய தொழில் நுட்பத்தின் மூலம் தீராத சில வியாதிகளை தீர்த்து வைக்கும் ஆற்றல் இருக்கிறது என்றாலும், இதில் சர்ச்சைகளும் இல்லாமலில்லை. 2018ல் சீன விஞ்ஞானிகள் இத்தொழில் நுட்பத்தின் மூலம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட (genetically modified human babies) இரட்டை பெண் குழந்தைகள் பிறக்கச் செய்தார்கள்.
ஒரு குழந்தையின் பெயர் Lulu மற்றொன்றின் பெயர் Nana. இவ்வுலகில் பிறந்த மற்றக் குழந்தைகளைப் போலவே அவ்விரு குழந்தைகளின் அழுகையை உலகம் பார்த்தது. பின்னர் நல்ல சுகத்துடன் பெற்றோர்களிடம் ஒப்படைத்தார்கள்.
என்ன மாற்றம் செய்தார்கள் என்றால்? தந்தையின் விந்து அணுவிலும் தாயின் கரு முட்டையிலும் HIV (human immunodeficiency virus) வராமல் தடுக்க மாற்றி அமைத்தார்கள். HIV என்ற வைரஸ் தான் எயிட்ஸ் நோயாக கருதப்படுகிறது. அக் குழந்தைகளின் தந்தை மார்க் இவருக்கு HIV positive இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மரபணு மாற்றப்பட்ட இரட்டை குழந்தைகள் குறித்த செய்தி உலகுக்கு தெரிந்த அடுத்த கணமே, மருத்துவ சம்மேளனம் கண்டனம் தெரிவித்து. சீன நாட்டின் மருத்துவ வழிமுறைகளையும், சட்டத்தை பெண்களையும் இவர் கையாளவில்லை என்று அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர் சீன அரசாங்கம்.
இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் செய்த ஆய்வுகள் குறித்து அவரது பல்கலைக்கழகத்துக்கு தெரியாது. இப்போது அவர் சிறையில் இருக்கிறார். ஆனால் இதை மறைமுகமாக அமெரிக்காவும் சீனாவும் ஆதரிக்கிறது என்றே அப்போது செய்திகள் வெளிவந்தன.
சீன விஞ்ஞானிகளின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட குழந்தைகள் குறித்து கண்டனம் தெரிவித்திருந்தார் Jennifer Doudna, "இந்த வேலை உலகளாவிய விஞ்ஞான சமூகத்தின் CRISPR-Cas9 -ஐ மனித மரபணு மாற்றம் பயன்பாட்டின் எச்சரிக்கையான மற்றும் வெளிப்படையான அணுகுமுறையிலிருந்து ஒரு முறிவு ஆகும்" என்றார் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் வேதியியல் Jennifer Doudna, biochemist at the University of California, இவருக்கு தான் இப்போது நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மேலும் அவர் கூறுகையில், HIV தொற்று நோயைத் தவிர்ப்பதற்காக இது செய்யப்பட்டிருந்தால், ஏற்கனவே பயனுள்ள தொற்று நோயைத் தடுப்பதற்கான மாற்று வழிகள் உள்ளன. எச்.ஐ.வி ஒழிக்க பாதிக்கப்பட்ட விந்து தானம் செய்பவர்களின் விந்தணுக்களை "கழுவுதல்" (Washing) போன்றவை, ஏற்கனவே நிறுவப்பட்ட அணுகுமுறைக்கு பதிலாக இதை ஏன் பயன்படுத்துவீர்கள்? என்று அப்போதே காட்டமாக தெரிவித்திருந்தார்.
"இது ஒரு சிக்கலான தொழில்நுட்பம்" என்கிறார் பேராசிரியர் Sheila Jasanoff, இவர் பாஸ்டன் ஹார்வர்ட் கென்னடி பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். Genetic engineering இதுவே ஒரு வெகுநாள் விவாதத்திற்கு உட்பட்ட பாடமாக உள்ளது. அமெரிக்காவில் மரபணுவின மறு உற்பத்தி என்பது சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தனிமனிதர் உரிமையாக கூட இருக்கிறது. உதாரணமாக ஒருவருக்கு நல்ல ஆரோக்கியமான குழந்தைகள் வேண்டுமென்றால் அவர் மரபணு மாற்றம் மூலம் அதை மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், இது இயற்கைக்கும் மரபுக்கும் முரணானது. பல மனித உரிமை குழுக்கள் இதை எதிர்க்கிறார்கள்." என்றார்.
இத்தொழில் நுட்பம் குறித்த பரந்துபட்ட பார்வையை பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வெற்றிச்செல்வன் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதுவும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
1. எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பம் மனித சமூகத்தை கட்டுக்கள் வைத்திருக்கக் கூடிய ஆபத்து இருக்கிறது.
2. இத்தொழில் நுட்பத்தை பயன்படுத்தி செயற்கையாக உயிர் உள்ள செல்களை உருவாக்க முடியும் என்று சீன விஞ்ஞானி கூறியதை மேற்கோள் காட்டியிருக்கிறார்.
3. இத் தொழில்நுட்பத்தை கண்காணிக்கவும் முறைப்படுத்தவும் உலகளவில் போதிய சட்டங்கள் இல்லை.
4. இத்தொழில் நுட்பம் மூலம் சமூக வேறுபாடுகள் உருவாக வாய்ப்பு இருக்கிறது.
5. பல நாடுகளில் தொழில் நுட்பத்தின் மூலம் மனிதர்கள் மீது செயல்படுவதற்கு தடை விதித்திருக்கிறது.
6. விரும்பிய வகையில் குழந்தைகளை உருவாக்குவதற்கு இத்தொழில்நுட்பம் பயன்படலாம்.
கடைசியாக இத்தொழில் நுட்பம் குறித்த சட்டங்களும் கண்காணிப்பு குழுக்களும் உருவாக்க வேண்டிய நிலை தற்போது எழுந்திருக்கிறது. (நன்றி; வெற்றிச்செல்வன் முகநூல் பதிவு)
அறிவியலின் வளர்ச்சி இப்பூமியில் உள்ள உயிரினங்களுக்கு பாதகம் ஏற்படாமல் இருக்க வேண்டும். மரபணு மாற்று சிகிச்சை ஒருபுறம் நல்ல பயன்களை கொடுத்தாலும் அதன் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
- பாண்டி
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
போயிங் 737 MAX 8 வகையைச் சார்ந்த இரண்டு விமானங்கள், 5 மாத இடைவெளியில் விபத்துக்குள்ளாகி மொத்தம் 346 பேர் பலியானார்கள். முதல் விபத்து 2018 அக்டோபர் மாதம் 29ஆம் தேதி லயன் ஏர்லைன்ஸ் விமானம் எண் 610, இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து மேலெழும்பிய பதிமூன்றாவது நிமிடத்தில் ஜாவா கடல் பகுதியில் விழுந்தது.
அதில் பயனித்த 189 பேரும் பலியாகினர். இரண்டாவது விபத்து 2019 மார்ச் மாதம் 10ஆம் தேதி எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் எண் 302, எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து மேலெழும்பிய ஆறாவது நிமிடத்தில் தரையில் விழுந்தது. அதில் பயனித்த 157 பேரும் பலியாகினர். இந்த இரண்டு விமானங்களும் போயிங் நிறுவனத்திடமிருந்து புதிதாக வாங்கப்பட்டவை.
பல கட்ட விசாரணைக்குப் பிறகு (பதினெட்டு மாதங்கள் கழித்து) இரண்டு போயிங் 737 MAX 8 விமானங்கள் விபத்துகள் குறித்த 200 பக்கங்கள் கொண்ட அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது, அமெரிக்கா மேலவையில் உள்ள போக்குவரத்துத் துறை கண்கானிப்பு குழு. அதில் போயிங் நிறுவனத்தின் தொழில்நுட்ப குறைபாடுகளே விபத்துக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளது. "horrific culmination” of design flaws, poor government oversight and lack of corrective action by Boeing." என்று காட்டமாகத் தெரிவித்தது.
மேலும் அவர்கள் இரண்டு விமானங்களின் கருப்பு பெட்டியின் தகவல்களை ஆராய்ந்து பார்த்ததில், லயன் ஏர்லைன்ஸ் விமான விபத்தும், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான விபத்து தகவல்களும் ஒரு மாதிரியாக இருக்கிறது என்றார்கள். போயிங் மற்றும் FAA என்று அழைக்கப்படும் Federal Aviation Administration இவ்விரு அமைப்பின் தோல்வியே என்று கூறியிருக்கிறது. "played instrumental and causative roles" விமானங்கள் பாதுகாப்பிற்குத் தேவையான வழிமுறைகளை அவர்கள் சரியாகக் கையாளப்படவில்லை என்கிறது அந்த அறிக்கை.
லயன் ஏர்லைன்ஸ் விபத்து:
2018 அக்டோபர் 28 ஆம் தேதி காலை 6;21 மணிக்கு ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து Pangkal Pinang என்ற ஊருக்கு சென்றுகொண்டிருந்தது லயன் ஏர்லைன்ஸின் விமானம் எண் JT610. விமான நிலையத்தில் உள்ள ரேடாரில் பதிவாகியத் தகவல்களை வைத்துப் பார்த்ததில், விமானம் மேல் எழும்பிய இரண்டாவது நிமிடத்தில் 2000 அடி உயரத்திற்கு எழும்பியது.
ஆனால் தொடர்ந்து மேலே செல்லாமல் அது 500 அடிக்கு கீழே இறங்கியது. இதுவே வழக்கமான விமான இயக்கம் கிடையாது. மீண்டும் அது இடது பக்கமாக வளைந்து 5000 அடிக்கு மேலே சென்றது. அப்போது விமானத்தின் வேகம் 397mph இருந்ததாகவும். விமானிகளும் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கடைசியாக பேசியிருக்கிறார்கள் விமானத்தை கட்டுப்படுத்த (Flight control system) முடியவில்லை, "RTB" என தகவல் கொடுத்திருக்கிறார்கள் (return to base) அதற்கு கட்டுப்பாட்டு அறையிலிருந்து அனுமதி கிடைத்திருக்கிறது.
ஆனால், விமானம் 3650 அடியை எட்டியதும் அதன் தகவல்கள் முற்றிலுமாக இழந்துவிட்டது, அப்போது நேரம் சரியாக காலை 6;35 மணி. மொத்தம் பதிமூன்று நிமிடங்கள் மட்டுமே ஆகாயத்தில் பறந்து இருக்கிறது. ஜகார்த்தாவில் இருந்த ஒன்பது மைல்கள் தொலைவில் உள்ள கடல் பகுதியில் விழுந்துவிட்டது. இந்த புதிய விமானம் போயிங் நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்டதிலிருந்து மொத்தம் 11,000 மணி நேரங்கள் ஆகாயத்தில் பறந்து இருக்கிறது.
முதல் விமான விபத்து நிகழ்ந்த உடனேயே, அதன் அது கருப்புப் பெட்டியை கண்டறிந்து அதில் பதிவாகிய தகவல்களை வைத்து, என்னக் காரணம் என ஆராயத் தொடங்கியது போயிங் நிறுவனம். போயிங் விமான விபத்துக்கள் எங்கு நிகழ்ந்தாலும் அதன் கூட்டு நிறுவனங்கள் உடனே அதைப் பற்றித்தான் ஆய்வறிக்கையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க தாமாகவே முன்வர வேண்டும் என்ற சட்டத்திருத்தம் அமெரிக்காவில் இருக்கிறது.
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விபத்து:
இரண்டாவது விபத்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் இது கடல் பகுதியில் நிகழவில்லை. எத்தியோப்பியா தலைநகரில் இருந்து 35 மைல்கள் தொலைவில் உள்ள ஒரு பாலைவனப் பகுதியில் நிகழ்ந்தது. மார்ச் 8ஆம் தேதி காலை 8;38 மணிக்கு கென்யா தலைநகர் நைரோபிக்கு கிளம்பிய விமானம் அது. விமானம் மேலெழும்பிய ஆறாவது நிமிடத்தில் 8;44 மணிக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதன் தகவல்கள் துண்டிக்கப்பட்டது.
விமானத்தை இயக்கிய பைலட் கடைசியாக ஒரு தகவல் தெரிவித்தது கட்டுப்பாட்டு அறையில் பதிவாகியது "We have a difficulty we wanted to return" ஆனால், விமானம் கட்டுப்பாட்டை இழந்தது.
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸின் இந்த புதிய விமானம் 2018 நவம்பர் 15ஆம் தேதி போயிங்கிடம் இருந்து வாங்கப்பட்டது. இதுவரை சுமார் 12,000 மணி நேரங்கள் மட்டுமே அது ஆகாயத்தில் பறந்து இருக்கிறது.
விபத்து நிகழ்ந்து இரண்டு நாட்கள் கழித்து விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து அதன் தகவல்கள் பெறப்பட்டன. முதற்கட்ட ஆய்வில் லயன் ஏர்லைன்ஸில் நிகழ்ந்த அதே சம்பவங்கள் இதிலும் நிகழ்ந்துள்ளது என தெரியவந்தது. மேலும் விமானம் தரையில் விழுந்த விதத்தைப் பார்க்கும் போது விமானத்தின் வால் பகுதி 'ஹரிசாண்டல் போசிஷன்' -ல் கிடந்தது. இது வழக்கத்திற்கு மாறானது என்றார்கள் அதனை சோதனையிட்ட வல்லுநர்கள். MCAS தானியங்கி மென்பொருள் அதற்கு காரணமாக இருக்கலாம் என்று கருதினார்கள்.
போயிங் 737 MAX கருப்பு பெட்டித் தகவல்கள் மற்றும் MCAS தானியங்கி மென்பொருள்:
போயிங் விமானங்களின் வேறு எந்த மாடல்களிலும் இல்லாத MCAS இதில் மட்டும் ஏன் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. MAX 8 விமானங்களின் எஞ்சின் (LEAP-1B, 176 cm) மிகவும் சக்கி வாய்ந்தது. விமானம் ஓடுதளத்தில் இருந்து மேலெலழும் போது an aerodynamic stall -ஐ தடுப்பதற்காக, தானியங்கியாக விமானத்தின் மூக்கு பகுதியைக் கீழே அசையும் படி வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதற்காகவே MAX விமானங்களில் MCAS தேவைப்படுகிறது என்கிறது போயிங்.
விபத்துக்குள்ளான விமானத்தின் மூக்கு பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் AOA Sensor (Angle of Attack) மூலம் தவறான தகவல்கள் பெறப்பட்டதால் விமானத்தின் MCAS (Maneuvering Characteristics Augmentation System) தானாகவே இயங்கியுள்ளது. முறையே தொடர்ச்சியாக AOA Sensor -ல் இருந்து வந்த தவறானத் தகவலால் பல முறை MCAS Software இயங்கியது பதிவாகியுள்ளது. விமானி தானியங்கி கட்டுப்பாட்டை தனக்குள் கொண்டு வருவதற்கு முன்னரே விபத்து நிகழ்ந்திருக்கலாம்.
விமானத்தின் மூக்கு பகுதி தலை கீழாகச் சென்றிருக்க வேண்டும். தகவல்களும் அப்படி தான் காட்டுகின்றன என்றார்கள். இதுகுறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றது அமெரிக்காவின் FAA (Federal Aviation Administration).
முதல் விபத்து நடந்து நான்கு மாதங்கள் காலமாகியும் MCAS software இதைப்பற்றி அதிகம் யாருக்கும் தெரியாது. இரண்டாவது விபத்து நிகழ்ந்த மறுநாள்தான் விமானத்தின் தானியங்கி சாப்ட்வேர் பிரச்சனை இருப்பதாகத் தெரிவித்தது FAA.
போயிங் 737 வகையைச் சேர்ந்த விமானங்கள் பரவலாகப் பல நாடுகளில் சேவையில் இருக்கிறது. உலகளவில் பரவலாக அனைத்து நாடுகளிலும் இந்த விமானங்கள் பாதுகாப்பாக இருக்கிறது. விமானச் சேவை நிறுவனங்களின் நம்பிக்கை வாய்ந்தது கூட என்றும் கூறலாம். ஆனால் அது விலை உயர்ந்தது. அதேவேளையில் எரிபொருள் சேமிப்பு இல்லாதது.
இதனை ஈடுகட்டவே MAX 8 வகையைச் சேர்ந்த விமானங்கள் உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. ஆனால் வர்த்தக விமானங்களைக் கண்காணித்து வரும் குழு ஏர்பஸ் நிறுவனத்தின் போட்டிக்காக போயிங் இந்த வகையான விமானங்களை உற்பத்திச் செய்தது என்றார்கள்.
உலகளவில் அதிகப்படியான பயணிகள் விமானத்தை வடிவமைத்து வர்த்தக ரீதியாக ஏற்றுமதி செய்துக் கொண்டிருக்கும் நிறுவனம் எது வென்றால் அது போயிங் மட்டுமே. விமானச் சேவை நிறுவனங்கள் ஒன்று போயிங் நிறுவனத்திடமிருந்து விமானத்தை வாங்க வேண்டும். இல்லை என்றால் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து விமானத்தை வாங்க வேண்டும். இந்த இரண்டு நிறுவனங்கள் தான் உலகின் விமான உற்பத்தியின் முன்னோடிகள்.
வர்த்தக போட்டியைச் சமாளிக்கவே அதாவது ஏர்பஸ் நிறுவனத்தின் A320neo வகைச் சார்ந்த விமானத்திற்கு மாற்றாக வடிவமைக்கப்பட்டதே போயிங் 737 MAX ஆகும். விசாரணை அறிக்கையில் இதையும் குறிப்பிட்டிருந்தார்கள். அதாவது போயிங் நிறுவனம் தொடர்ச்சியாக Cost-effective தள்ளப்பட்டதாகவும் வடிவமைப்பு செய்வதற்கு போதிய காலம் அளிக்கவில்லை.
வாடிக்கையாளர்களுக்கு புதிய விமானங்களை குறித்த நேரத்தில் கொடுக்க வேண்டும் என்பதிலேயே போயிங் குறியாய் இருந்தது அதனால் பாதுகாப்பு குறித்து அதிகம் கவலை கொள்ளவில்லை என்கிறார்கள்.
எந்த ஒரு புதிய விமானத்தின் வடிவமைப்பு முடிந்தவுடன் அதனை FAA அமைப்பிடமிருந்து தரச்சான்றிதழ் பெறப்படவேண்டும். அதன்பின்னர் வாடிக்கையாளர்களுக்கு அந்த விமானங்களை விற்பனைச் செய்ய முடியும். MAX 8 விமானத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட MCAS மென்பொருள் விளக்கங்கள் மற்றும் செய்முறைகள் எல்லாம் FAA -க்கு தெரிந்திருக்கின்றது.
ஆனால் இந்த அளவுக்கு தோல்வி அடையும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. போயிங் நிறுவனமும் இந்த மென்பொருள் குறித்து விமானிகளுக்கு முறையான பயிற்சியும் அளிக்கவில்லை. விமானத்தின் செய்முறை விளக்க புத்தகத்திலிருந்து எதனை நீக்கி இருக்கிறார்கள் என்று பின்னால் தெரிய வந்தது.
MAX 8 -ன் எதிர்காலம்:
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விபத்து நிகழ்ந்த பின்னர் பல நாடுகள் இந்த வகை விமானங்களை இயக்க மாட்டோம் என்று விமான நிலையத்திலேயே ஆங்காங்கே நிற்க வைத்து விட்டார்கள். ஆனால் அமெரிக்காவில் மேக்ஸ் 8 -ன் சேவையை உடனடியாக நிறுத்தவில்லை. பல நாடுகளும் சேவையை நிறுத்தியதைத் தொடர்ந்து அதிபரின் சிறப்பு கையொப்பம் மூலம் அதன் சேவைகளை நிறுத்தி விட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் பல விமான சேவை நிறுவனங்கள் இவ்வகை விமானங்களை தரை இறக்கி விட்டது ஏர்லைன்ஸ் நிறுவனங்கள். இரண்டாவது விபத்து நிகழ்ந்த சமயத்தில் கிட்டத்தட்ட 300 விமானங்கள் சேவையில் இருந்தது. புதிதாக 5000 விமானங்களுக்கான ஒப்பந்தங்களை பெற்றிருந்தது போயிங். அந்நிறுவனத்தின் மிகப்பெரிய MAX 8 வர்த்தகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
எத்தியோப்பியா விபத்தை தொடர்ந்து பல நாடுகள் தங்களின் புதிய ஒப்பந்தங்களை ரத்து செய்து விட்டார்கள். அமெரிக்க நாடாளுமன்றத்தில் விசாரணைக்கு வந்த போயிங் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி Dennis Muilenburg இரண்டு விபத்து சம்பவங்களும் எங்களை வெகுவாக பாதித்திருக்கிறது.
உயிர் இழந்த குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். போயிங் தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றார். கடந்த ஆண்டு டிசம்பரில் அவர் பதவியும் விலகிவிட்டார்.
இரண்டாவது விமான விபத்து நிகழ்ந்து 18 மாதங்கள் ஆகிறது. இதுவரையில் FAA அமைப்பு போய் எங்கின் புதிய சாஃப்ட்வேர் அனுமதி அளிக்கவில்லை. எனினும் போயிங் நிறுவனம் தொடர்ச்சியாக எங்களது சாஃப்ட்வேர் நம்பகத்தன்மை வாய்ந்தது என்கிறார்கள்.
விமானிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டம் அமைந்திருக்கிறது போயிங் நிறுவனம். அமெரிக்காவில் இயங்கிவரும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தங்களது விமானிகளுக்கு இந்த பயிற்சியை அளிக்க ஆயத்தமாக இருக்கிறார்கள். முறையே போயிங் 737 MAX வைத்திருக்கும் அனைத்து விமான சேவை நிறுவனங்களும் தங்களது விமானிகளுக்கு இந்த பயிற்சியினை எடுக்க அனுமதி தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
MAX 8 விமானங்கள் போயிங் நிறுவனத்தின் கனவுத் திட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் அமெரிக்காவின் மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனமாக போயிங் இருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக இருக்க வேண்டுமே தவிர, வர்த்தக போட்டியின் காரணமாக மனித உயிர்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட கூடாது. பிற போக்குவரத்து துறையை போல் விமான உற்பத்தியில் அதிகம் போட்டிகள் கிடையாது.
விமான சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் தங்களின் விமானங்களை ஒன்று அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் வாங்க வேண்டும், இல்லையென்றால் பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்க வேண்டும்.
போயிங்கின் புதிய சாஃப்ட்வேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அது பாதுகாப்பானது என்று FAA அறிவித்தால் நாமும் மீண்டும் அதில் பயணிக்க தொடங்கலாம். வரும் 2021 முதல் காலாண்டில் தரையில் நிற்கும் MAX 8 விமானங்கள் எல்லாம் மீண்டும் பண்பாட்டுக்கு வந்துவிடும் என நம்புகிறது போயிங் நிறுவனம்.
- பாண்டி
- பிளாக்செயின் தொழில் நுட்பம் (Blockchain Technology): தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு புரட்சி
- புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்கப்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்கள்
- ஏன் லினக்ஸ்-க்கு மாற வேண்டும்?
- Facial Recognition தொழில்நுட்பமும் அதன் சர்ச்சைகளும்
- ஆன்லைன் தேர்வுகளை கண்காணிக்கும் Proctoring எனும் செயற்கை நுண்ணறிவு
- 'ZoomBombing' எனும் இணையதள வெறித்தனம்
- தகவல் தொழில்நுட்பத்தின் இதயம் - டேட்டா சென்டர்ஸ்
- எதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers
- அறிவியல் பிரச்சாரம் செய்வோம்...!
- இது யாரு பண்டிகூட்டா? - டிஜிட்டல் பெருச்சாளி
- நிறமுள்ள ஒளியால் வெண்ணிற ஒளியில் ஏற்படும் நிறமாற்றம்
- நுண் பாக்டீரியாக்களின் மூலம் கிராஃபைன் நானோ பொருட்கள் உற்பத்தி
- சூரிய மின்கலன் வெப்பத்தினால் நீரை சுத்தகரிக்கும் புதிய தொழில்நுட்பம்
- நீர்த்திவலையின் இயல்பை விளக்கும் புதிய அறிவியல் விதி
- கிலோகிராமின் வரையறை மாறுகிறது
- பாலினம் கண்டறியப்பட்ட விந்தணுக்கள்: எச்சரிக்கை தேவை
- கறவை மாட்டுப் பண்ணையத்தில் விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பம்
- பால் அருந்தாத வெர்கீஸ் குரியன் வெண்மை புரட்சியின் தந்தையாக உருவெடுத்த வரலாறு (1921-2012)
- கறவை மாட்டுப் பண்ணையத்தில் விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பம்: ஓர் அறிமுகம்
- பாலில் ஆக்ஸிடோசின் வர வாய்ப்புள்ளதா?
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.