சென்னை & பெங்களூர் : கங்கண சூரியகிரகணனம் சென்னையில் 82 சதவீத அளவுக்கு இருந்தது. கிரகண நேரத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டமும் வெகுவாகக் குறைந்திருந்தது.

கடைசியாக தமிழகத்தில் 1901-ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி கங்கண சூரியகிரகணம் நிகழ்ந்தது. அதற்குப் பின்னர் 15.02.2010 அன்றுதான் கங்கண சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இதனால் தமிழக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடனும், சற்று பதட்டத்துடனும் இருந்தனர்.

சூரிய கிரகணம் தமிழ்நாட்டில் 11.25 மணிக்கு தொடங்கியது. அப்போது 35 சதவீத அளவுதான் சூரியனை சந்திரன் மறைத்து இருந்தது. பகல் 1,30 மணிக்கு 82.33 சதவீத அளவுக்கு சந்திரன் சூரியனை மறைத்து இருந்தது. மதியம் 3 மணி வரை இந்த கிரகணம் நீடித்தது. கன்னியாகுமரியில்தான் 89 சதவீத அளவுக்கு கிரகணம் நிகழ்ந்தது.

கங்கண கிரகணத்தின்போது சூரியனை வெறுங்கண்களால் பார்க்கக்கூடாது என்பதால், கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கத்தில் கிரகணத்தை காண பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.

அங்கு 2 டெலஸ்கோப்கள் வைக்கப்பட்டிருந்தன. அதன் மூலம் பொதுமக்கள் கங்கண சூரிய கிரணத்தை கண்டு களித்தனர். மேலும் சுமார் 2,000 பிளாஸ்டிக் கண்ணாடிகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. அதன் மூலமும் ஏராளமானோர் கிரகணத்தை பார்த்து ரசித்தனர்.

மாணவ - மாணவிகள் பெற்றோர்களுடன் கிரகணத்தை கண்டுகளித்தனர். டெலஸ்கோப் வழியாக காண பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இருண்ட வானம் ...

சூரிய கிரகணத்தின்போது வானம் இருண்டது போலக் காணப்பட்டது. இதனால் மக்களிடையே அச்சமும் காணப்பட்டது. சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.

கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு பார்த்தால் எப்படித் தெரியுமோ, அதேபோல வானம் காணப்பட்டது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொளுத்திக் கொண்டிருக்கிறது வெயில். ஆனால் சூரியகிரகண சமயத்தில் அப்படியே வெயில் அடியோடு குறைந்தது மக்களிடையே பரபரப்பையும், ஒரு வித திகிலையும் ஏற்படுத்தியது.

வெறிச்சோடிய பெங்களூர் :

கிரகணத்தின்போது பெங்களூர் நகரமும் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்து வெறிச்சோடியது. பயணிகளே இல்லாமல் சில பஸ்கள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தன. பெரும்பாலான தமிழர்கள் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்குப் போய்விட ஏற்கனவே கூட்டம் குறைந்த பெங்களூரில் கிரகணமும் சேர்ந்து கொள்ள அன்று பகலில் சாலைகள் எல்லாம் காலியாகக் கிடந்தன.

வதந்தியால் வந்த பரபரப்பு ....

கங்கண சூரிய கிரகணம் ஏற்படுவதால் ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்ற வதந்தி தமிழகத்தின் சில பகுதிகளில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்குப் பரிகாரமாக பெண்கள் தங்கள் வீடுகள் முன் சுத்தம் செய்து வாழை இழையில் பச்சரிசி படைத்து அகல் விளக்கு ஏற்றிவழிபட்டனர். சில பெண்கள் வேப்ப மரத்துக்கு தாலி கட்டி வழிபட்டனர்.

வழக்கமாக சூரியகிரகணம், சந்திரகிரகணம் என்றால் வீடுகள் முன்பு அகல் விளக்கு ஏற்றி வழிபடுவர். தற்போது மூட நம்பிக்கை ஒரு படி மேலே போய் வேப்பமரத்துக்கு தாலி கட்டிய வினோத செயல் அனைவரையும் வியப்படைய வைத்தது.

Pin It