அல்காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தான் நாட்டுக்குள் நுழைந்து அமெரிக்க கப்பல்படை பாகிஸ்தான் நாட்டிற்கு தெரிவிக்காமலேயே சுட்டுக் கொன்றுவிட்டது. பின்லேடன் கொல்லப்பட்டதை அமெரிக்கா கொண்டாடி வருகிறது. ஆப்கானிஸ்தானத்தில் சோவியத் படைகளை வெளியேற்றுவதற்கு இதே ஒசாமாவை அமெரிக்கா தான் வளர்த்து விட்டது. அமெரிக்காவின் எப்.பி.அய். (FBI) உளவு நிறுவனம் வளர்த்துவிட்ட ஒசாமை - பிறகு அதே அமெரிக்காவின் சி.அய்.ஏ. உளவு நிறுவனம் உலகம் முழுதும் வலைவீசி தேடத் தொடங்கி, பாகிஸ்தானில் அவரது கதையை முடித்துள்ளது. ஒசாமா மூச்சு அடங்கிவிட்டதால் அல்காய்தாவின் செயல்பாடுகளும் முடங்கி விடுமா என்பது கேள்விக்குறிதான். ஒசாமா பின்லேடன்கள் உருவாவதற்கு காரணமான அமெரிக்காவின் கொள்கைகள் வீழ்த்தப்படும்போதுதான் பின்லேடன்கள் உருவாகாமல் இருப்பார்கள் என்பதை அமெரிக்கா உணர வேண்டும். பாகிஸ்தான் நாட்டுக்குள் நுழைந்து நேரடி நடவடிக்கை எடுத்ததன் வழியாக அந்நாட்டின் இறையாண்மையில் தலையிட்ட அமெரிக்கா, இப்போது பாகிஸ்தானையே மிரட்டத் தொடங்கியிருக்கிறது.
இந்திராகாந்தி இப்படித்தான் பஞ்சாபில் சீக்கியர்களின் அகாலிதளம் கட்சிக்கு எதிராக பிந்தரன் வாலே என்ற சீக்கிய தீவிரவாதியை உருவாக்கினார். பிறகு பிந்தரன்வாலே இந்திராவுக்கு எதிராகத் திரும்பியபோது இந்திராவின் உத்தரவின்படி ராணுவம் பொற்கோயிலுக்குள் நுழைந்து பிந்தரன் வாலேயை 1984 ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றது.
அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் பின்லேடனின் தாக்குதல்களில் நமக்கு உடன்பாடில்லை. பகுத்தறிவாளர் என்ற அடிப்படையில் மற்றொரு கேள்வியையும் கேட்க வேண்டியிருக்கிறது. ‘இந்துத்துவா’ என்றாலும், ‘இஸ்லாமிய அடிப்படைவாதம்’ என்றாலும் பகுத்தறிவாளர்கள் அதை ஏற்கவியலாது. ஓர் இறைக் கொள்கையாக தாம் ஏற்ற மதக் கொள்கையை அரசியலில் முன்னெடுத்த பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டபோது, அவர் ஏற்றுக் கொண்டிருந்த இறை நம்பிக்கை அவரைக் காப்பாற்ற முன்வரவில்லையே!