இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலைக்கு பொறுப்பானவர்களான இலங்கையின் அதிபர் இராஜபக்சே, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராஜபக்சே, பாலித கோகனா மற்றும் சரத் பொன்சேகா உட்பட 17 இராணுவத் தளபதிகள் என மொத்தம் 21 நபர்கள் மீது நார்வே ஈழத் தமிழர் அவை வழக்குத் தொடுத்துள்ளது.

நார்வே நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது சர்வதேச பிடியாணை பிறப்பித்து, அவர்களை உரிய முறையில் விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கினால், யுத்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட இலங்கைஅரசு அதிகாரிகள் வெளிநாடுகளில் கைது செய்யப்படும் ஆபத்து இருக்கிறது.2008-2009 ஆம் ஆண்டு காலத்தில் நடந்த வன்னிப் போரின்போது பாதிக்கப் பட்டவர்கள் / பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என 15 நபர்களின் சாட்சியங்கள் திரட்டப்பட்டு இவ்வழக்கை நார்வே ஈழத் தமிழர் அவை முன்னெடுத்துள்ளது.

2009 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வன்னிக்கு மருந்துகள் செல்வதை இலங்கை அரசு தடை செய்தது. அதனால், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் இழக்கவும் நேர்ந்தது. அப்படி பாதிக்கப்பட்டு வன்னியில் இறந்த நார்வே குடியுரிமை பெற்றிருந்த ஈழத் தமிழர் ஒருவர் மரணமடைந்தார். இவ்வழக்கினை ஈழத் தமிழர் அவையின் சார்பாக நார்வே நாட்டு வழக்கறிஞர் ஹரால்ட் ஸ்தாபெல் தாக்கல் செய்தார்.இவ்வழக்கிற்கு தேவையான சட்ட விவரங்கள், சாட்சியங்கள், ஆவணங்கள் என அனைத்தையும் திரட்ட ஒரு வருட காலமானது. இவ்வழக்கு தொடர்பாக நார்வே நாட்டு ஊடகமான ‘அவ்தன் போஸ்டனுக்கு’ கருத்து தெரிவித்த நார்வே வழக்கறிஞர் மரியா பெங்கிராம் ஆஸ், “நார்வே குடியுரிமை பெற்ற ஒரு தமிழர் யுத்தக் குற்றத்தினால் மரணமடைந்திருப்பதால் இவ்வழக்கு நார்வேயில் விசாரிக்கப்பட்டே ஆகவேண்டும்” என்று கூறினார். நார்வேயில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வழக்கைப் போன்றே பல்வேறு நாடுகளில் 30-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்படவிருக்கிறது.

Pin It