முற்போக்கு இலக்கிய முகாமின் முகமாகத் திகழ்கிற நாவலாசிரியர் டி.செல்வராஜ், தனது முதல் நாவலாக ‘மலரும் சருகும்’ தந்தார். இன்றைக்கு வாசிக்கிற வாசகருக்கும் புதிய அனுவபத்தையும், வசீகரத்தை யும் வழங்கத்தக்க கலைத்தரமிக்க வீர்யமான படைப்பாகும் அது. தமிழிலக்கியத்தின் முதல் தலித் நாவல் என்ற வரலாற்றுச் சிறப்பு, கல்வெட்டு ஓவியத்தைப்போல நிலைத்த பேருண்மை.

தேநீர், மூலதனம், அக்கினிக் குண்டம், ஜீவா என்ற படைப் பிலக்கிய நூல்கள் வழியாக பயணப்பட்ட படைப்பாளி, இப்போது தோல் என்ற 695 பக்க நாவலாக வெளிப்பட் டிருக்கிறார்.

நாவலுக்கு ஆழமும் அடர்த் தியுமான விரிவுமிக்க ஒரு முன்னுரை எழுதியிருக்கிறார். வர்க்க அரசியல் போராட்டத் தில் முழுமையாக தீவிரப்பட்ட கம்யூனிஸ இயக்கம், சாதிய எதிர்ப்பு உள்ளிட்ட சமூக நீதிக் கான அரசியல் போராட்டம் நடத்தாமல் விலகி நின்று துரோகமிழைத்திருக்கின்றது என்று உள்நோக்கத்துடன் இலக் கிய அறிவு ஜீவிகளால் கூறப் பட்டு வருகிற அவதூறுக் கான ஆற்றல் மிகு - நேர்மைமிகு பதி லுரையாக அமைந்திருக்கிறது, அந்த முன்னுரை.

கதையின் களங்கள் முற்றி லும் தனித்துவமிக்கது. தோல் ஷாப் என்னும் கொதிக்கும் சுண்ணாம்புக் குழிக்குள் தோல் களை முக்கி நனைத்தெடுக்கிற மனிதர்கள். கொதிக்கும் சுண்ணாம்புக்குள் வெந்து மடிய வேண்டிய கொடூரமான பணி கள். மூட்டை கட்டி புழுக்கமான தோல்களின் நாற்றம். அதில் இணுக்குகளாகத் தொங்குகிற சதைத்துளிகளின் நெடி. உதிர்ந்து மலையெனக் குவிந்துகிடக்கும்.

ரோமங்களை கூட்டியள்ளி ஒதுக்குகிற பெண்கள். மணிக் கணக்கோ-இரவு பகல் கணக் கோ பார்க்காமல்கொத்தடிமைக் கூலிகளாக உழைக்கிற பணியாட் கள். நோய்களும் சாவுகளும் மலிந்த தோல் பதனிடும் தொழிற்சாலைகள். ஆயிரத்துக் கும் ஐநூறுக்கும் பாண்டுப் பத்தி ரத்தில் கைநாட்டு போட்டு விட்டு, தங்கள் உடலையும் உரிமைகளையும் தாரை வார்த்து விட்டு, எல்லாவிதக் கொடுமை களுக்கும் உடன்பட்டவர்கள். கொத்தடிமைகளாக மிதியுண்டு, எல்லா வகைச் சுரண்டல் களுக் கும் மௌனமாகப் பலி யாகின்ற வர்கள்.

இவையெல்லாம் விவரணை விவரிப்புகளாக வரவில்லை. எழுத்தோவியமாக நிகழ்த்தப் படுகிற சம்பவச் சித்தரிப்புகளின் களங்களாகவும், பின்புலங்களா வும் வருகின்றன.

தோல் ஷாப்பில் சகலரின் பிரியத்துக்கும் உரிய - நேற்று சடங்கான அழகான இளமஞ்சள் குமரி சின்னக்கிளி. அவளை தோல்ஷாப் மேற்பார்வை யாளன் முஸ்தபா, மிருகத்தன மாகவும் மூர்க்கமாகவும் பகிரங் கமாக சீரழித்து சிதைத்துக் குதறி யெடுக்கிறான். கதறிக் கதறி மரணமடைகிற சின்னக்கிளிக் காக எல்லோரும் இரக்கப்பட்டு கலங்கினாலும், தடுக்க முன்வரத் தைரியமில்லை. அடிமைகளில் ஒருவனான ஓசேப்பு பயச் சுமை யை உதறியெறிந்து விட்டு ஆவே சத்தில் முஸ்தபாவை அடித்துச் சாய்க்கிறான்.

சின்னக்கிளியின் இசைவோடு தன்னைத் திறந்து கொள்கிற நாவல், நம்மை விரல் பற்றி தோழமையுடன் ஒரு நீள் பயணத் தில் அழைத்துச் செல்கிறது.

உடல் கிழிந்து மரணமடைந்த சின்னக்கிளியைப் பார்த்து காலனியே கதறியழுகிறது. எரிப் பதற்காகக் கண்ணீரும் கம்பலை யுமாக சுடுகாட்டுக்குக் கொண்டு போக விடாமல், பாதையை மறிக்கிறது!

ஊர்ச்சாதியினர். கம்புக்கத்தியு மாக நிற்கிற அவர்கள். சேரி மக்களின் உரிமைக்காக வாதாடு கிற சுந்தரேச அய்யர், தமது இளம் வக்கீல் மகன் சங்கரனை அனுப்ப... சேரிப் பெண் பிணத்தைத் தூக்குவதற்கு ஒரு பிராமணன் போனதால் ஆசாரமே கெட்டு விட்டதாக முறுக்கித் திமிறுகிற சனாதனி கள். சனாதனத் தடை தாண்டி, சப் கலெக்டர் ஆதரவுடன் பாடை யைத் தொட்டுத் தூக்குகிற சங்கரன். உயர்சாதியினரான தாசில்தார், போலீஸார் எல் லாம் பொறுமுகின்றனர்.

நாவலின் துவக்கமே வர்க்கச் சுரண்டலும், சாதிய ஆதிக்கமும் இரண்டறப் பின்னிப் பிணைந்து கிடக்கிற சமூகச் சித்தரிப்புடன் துவங்குகிறது.

நாவலின் பிரதானம் எது? தொழிற்சாலைகளின் வளர்ச்சி வரலாறா? தொழிலாளர்களின் மனமும், செயல்பாடும் இயங்கு திசையின் வரலாறா? தொழிற் சங்க இயக்க வரலாறா? சுதந்திரப் போராட்ட வரலாறா? அனைத்துச்சாதி முதலாளிகளும் ஒன்றிணைந்து, காவல்துறையை ஏவல் துறையாக்குகிற வரலா றா? இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது தொழிற் சங்க அரசியலின் செயல்பாட்டு தனித் துவ வரலாறா? தோல் ஷாப் முதலாளிகளும் பிற செல்வந்தர் களும் தாறுமாறாக ஊதிப் பெருத்த வரலாறா? கம்யூனிஸ இயக்கம் சேரியிலும் ஷாப்களி லும் அரும்பி மலர்வுற்ற வரலா றா? அடிமைப் பட்டுக் கிடந்த மக்கள் ஆர்ப்பரித்து, அமைப் பாக திரளுகிறபோது, நகரையே மாற்றியமைக்கிற ஆற்றல் பெறு கிற சமூக வர்க்க அரசியல் வரலா றா? சாதி கடந்த காதல்களின் வரலாறா? பாண்டிச்சேரிப் பறையர்களுக்கும் பாண்டி நாட்டுப் பறையர்களுக்குமான உள் முரண்பாட்டு வரலாறா? பறைச் சாதித் தொழிலாளி களுக்கும், அருந்ததித் தொழி லாளிகளுக்கு மிடையிலான பேத உணர்ச்சியும், ஒற்றுமை உணர்வுமான வரலாறா?

இவற்றில் எதிலிருந்தும் எதை யும் பிரித்தெடுத்துவிட முடியாத அளவுக்கு ஒன்றுக்குள் ஒன்றாக உள்பிணைப்புற்று பின்னிக் கிடக் கிற சகல கேள்விகளின் சங்கம வரலாறே இந்த நாவல்.

நாவலில் ஓர் இதிகாசப் பண்பு இருக்கிறது. ஒரு குறிப் பிட்ட நகரத்தின் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியின் வாழ்க்கையை யும், மனிதர்களையும், நிகழ்வு களையும், உள் முரண்பாட்டு வளர் நிலையையும் காட்சிப் படுத்தி உணர்த்திக் கொண்டே பயணப்படுகிற நாவல், முஸ்த பாவை அடித்துச் சாய்க்கிற ஓசேப்பு என்ற அடிமை, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தப்பித்தோட முயன்று, முடியா மல் முதலாளிகளின் அடியாள் கழுவத்தேவனிடம் சிக்கிக் கொண்டு, சித்திரவதைப் படு கிறான். உடல் கிழிபடுகிற அந்த ஓசேப்பு இடையில் எப்படி யெப்படியோ மாற்றம் பெற்று, இறுதியில் என்னவாக பரிணமிக் கிறான் என்பது சமூகவியல் அரசி யலின் பேராச்சரியம்.

சனாதனத் தடை தாண்டுகிற இளம் வக்கீல் சங்கரனின் மனத்துணிவையும் உயர் மானுடப் பண்பையும் கண்டு உடன் வந்து, பின் தொடர்கிற வேலாயுதம் பின்னாளில் என்ன வாக பரிணமிக்கிறார் என்பது வும் பேராச்சரியமான அதிசயம்.

சங்கரனைக் கொல்ல வந்த சந்தனத்தேவன் மன உலகம். அகவாழ்வின் உள் அவமானம். நம்பிக்கிடக்கிற தாயின் அவல ஓலம். தொழிற்சங்கத்தின்- மக்க ளின் காவல் தெய்வமாக உயர் கிற சந்தனத்தேவன். இம் மாதிரி பரிணாமம் கொண் டெழுகிற சாகாத பாத்திரங்கள் நாவல் நெடுகிலும் உயிர் வாழ்கின்ற னர். இதுவும் இதிகாசக் கூறு தான். நாதியற்ற தாயம்மா... ஆசீர்வாதத்துக்கு நாதியாகி, ஓசேப்பின் வளர்ப்புத் தாயாகிற வளர்நிலை. கந்துவட்டிக்கார னால், நடுத்தெருவில் அம்மண மாக்கப்படுகிற வீராயியின் அவலம், அவளே பின்னாளில் ஒரு போர்ப் படைக்கே தலை மை தாங்குகிற வீராங்கனை யாகிற பரிணமிப்பு, ஒரு நாயக்க ருக்கு வைப்பாட்டியாக வாழ் கிற மானமிகு சிட்டம்மா, முஸ் தாபாவைக் கொன்று தீர்க்கிற தீரமும், நாயக்கரையும் காவலதி காரியையும் மீறிக் கொண்டு தானே கொன்றதாக நீதிமன்றத் தில் உண்மை பேசி, தொழிற் சங்க நல்லவர்களைக் காப்பாற்று கிற நேர்மை.

பார்த்த பெண்களையெல் லாம் சூறையாடிச் சுவைப்பதில் வெற்றி பெறுகிற முஸ்தபாவை அடித்துச் சாய்த்து, அவமானப் படுத்தித் தோற்கடிக்கிற மான மிகு வீரப்பெண் மாடத்தி...

ஒசேப்புக்கும், அருக்காணிக் கும் இடையில் பூக்கிற காதல் - அவர்கள் இருவருக்கும் லபிக் கும் வாழ்க்கை - அதையும் பாண்டிச்சேரி பறையர், பாண்டியப் பறையர் என்ற பேதத்தையும் தாண்டி உயிர் பெறுகிற தாம்பத்யமும் காத லும் தனித்துவ உயிர்ச் சிற்பம். பொட்டுக் கட்டி, தாசி குலமான வடிவாம்பாளுக்கும், தோழர் சங்கரனுக்குமிடையில் பூக்கிற அறிவார்ந்த காதலும், அவற் றுக்கு நேர்கிற சனாதனத் தடை களும், அதைக் கடந்து ஜீவத் துடிப்புடன் நிஜமாகிற திரு மணம் தனிச் சிறப்பான கல் லெழுத்துக் காவியம். பிராமணச் சனாதனியான அம்புஜத்தம் மாளின் மன மாற்றம் மிகுந்த இயல்புத் தன்மையுடன் இருக் கிறது.

பரமசிவ அய்யர் ஒத்துழைப் புடன் சுந்தரேச அய்யர் வால்மீகி ராமாயணம் உள்ளிட்டு பிற மொழி ராமாயணங்களை யும் உள்வாங்கி, அலசி ஆய்ந்து, ஆங்கிலத்தில் எழுதப்படுகிற ஆராய்ச்சி நூல்கூட ஒரு பாத்திர மாகிறது. ராமபக்தரை மாற்று கிறது. ராமாயணம் குறித்த புதிய கோணம் தருகிறது.

‘வர்ஷிக்கிற’-’திரஸ்கரிக்கிற’ போன்ற பழமையாகிவிட்ட சொற்பிரயோகங்களைத் தவிர்த்திருக்கலாம்.

இந்நாவல், இந்தக் காலத் தில் முக்கியத்துவம் பெறுகிறது. மார்க்ஸிய இயக்கம் மீதான அவதூறுகளுக்குப் பதில் சொல்கிறது.

அழகாக அச்சிட்டு அழகாக வடிவமைத்த என்.சி.பி.எச். பதிப்பகம், அட்டைப்பட ஓவி யம் தந்த ஸ்ரீரசா பாராட்டத்தக்க வர்கள். இயக்கத்தின் இதயமாக நின்று துடிக்கிற இந்த நாவலைப் படைத்ததன் மூலம், டி.செல் வராஜ், சோசலிச யதார்த்தவாத மார்க்ஸீய அழகியல் கோட்பாட்டின் உறுதி வாய்ந்த-தெளிவு மிக்க முன்னோடிப் படைப்பாளி என்று நிரூபித்திருக்கிறார்.

- மேலாண்மை பொன்னுச்சாமி

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்

41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்

அம்பத்தூர், சென்னை-600098

பக்கங்கள்: 695, விலை - ரூ 375

Pin It