தமிழ் அச்சுப் பண்பாடு : தொடர் கட்டுரை - 9

பின் காலனியக்காலம், இந்தியா போன்ற நாடுகளில் பல்வேறு புதிய தன்மைகள் உருப்பெறுவதற்கான சூழலை உருவாக்கிற்று. தமிழில் அச்சுச் செயல்பாடு, அரங்கச் செயல்பாடு, கல்வி நிறுவனங்களின் செயல்பாடு ஆகியவை பல்வேறு புதிய பரிமாணங்களை உள்வாங்கிச் செயல்படத் தொடங்கின. இச்சூழுலுக்கான காரணங்களாக பின் கண்டவற்றை நாம் தொகுத்துகொள்ளக் முடியும்.

சுமார் இருநூறு ஆண்டுகள் பிரித்தானியர்கள் மற்றும் பிற ஐரோப்பியர்களின் கட்டுப்பாடுகளில் இயங்கியோர்; அவர்களின் கட்டுப்பாடுகள் இல்லாத சூழலில், தங்களது மறைக்கப்பட்ட அடையாளங்களைப் புதிய கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள முயலும் எத்தனம் உருவானது.

- ஐரோப்பியர்கள் மூலமாகப் பெற்றுக் கொண்டவற்றையும் பின் காலனியச்சூழலில் மேலும் மேலும் வளர்த்தெடுக்கும் செயல்கள் நடைபெற்றன. இவை நவீனமாகப் புரிந்துகொள்ளப்பட்டுச் செயல்படும் நிலை ஏற்பட்டது.

- சோவியத் மற்றும் சீனாவில் உருவான புதிய ஆட்சிமுறை, பின் காலனியச் சூழலில், மூன்றாம் உலக நாடுகளில் செல்வாக்குப் பெற்றது. அந்நாடுகளில் உரையாடலுக்கு உட்பட்ட கோட்பாடுகள் குறித்த புரிதலும் அதனை நடைமுறைப்படுத்தும் செயல்களும் உருப்பெற்றன.

- ஆங்கிலமொழி அறிந்தவர்கள் மட்டும் செயல்பட்ட பொதுவெளியில் மாற்றம் உருவானது. ஆங்கில மொழி அறியாத, வட்டார மொழி மட்டும் அறிந்தவர்கள் பொதுவெளியில் செயல்படத் தொடங் கினார்கள். மொழி வயப்பட்ட நுண் அதிகாரம் ஓரளவு குறையத் தொடங்கியது.

- நவீன கருவிகள் பல்வேறு ஊடகங்களிலும் பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தது. இச்சூழல் புதிய முறையிலான வெகுசனப் பணியை உருவாக்கிற்று.

பின் காலனிய காலங்களில் மேற்குறித்த பல்வேறு தன்மைகளைப் பல பரிமாணங்களிலும் உரையாடலுக்கு உட்படுத்தமுடியும். ஆனால், இங்கு அச்சு ஊடகத்தில் மேற்குறித்த தன்மைகள் செயல்பட்ட பாங்கு உரையாடலுக்கு உட்படுத்தப் படுகிறது. அதன்வழி உருவான அச்சுப் பண்பாட்டை நாம் புரிந்துகொள்ளமுடியும். மிக விரிவான கள ஆய்வுத் தரவுகளின் மூலம் இத்தன்மைகளை விரிவான உரையாடலுக்கு உட்படுத்த வேண்டிய தேவையுண்டு.

பின் காலனிய காலத்தில் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை பெருகியது. வெகுசன எழுத்துப் பயிற்சி பெறுவதின் மூலம் புத்தொளி பெறுவர் என நம்பப்பட்டது. சாதிய படிநிலைகளைக் கடந்து எழுத்துப் பயிற்சி பெறும் வாய்ப்பு உருவானது. இவ்வகைப் பயிற்சியால் வாசிப்புத்தளம் விரிவடைந்தது. வாசிப்புப் பழக்கம் பழம் பெருமைகளில் திருப்தி பெறும் மனநிலையை உருவாக்கிற்று. இந்தச் சூழலில் தான் திராவிட முன்னேற்றக் கழகம், பழந்தமிழரின் பெருமையைப் பொதுமேடைகளில் முன்னெடுத்துப் பேசியது. கல்கி போன்றவர்கள் எழுதிய வரலாற்றுப் புனைவுகளுக்குச் செல்வாக்கு ஏற்பட்டது. தமிழ் வெகுசன வெளியில் பொன்னியின் செல்வன் விரிவாக வாசிக்கப்பட்டதை மேற்குறித்த பின்புலத்தில் புரிந்துகொள்ள முடியும். வரலாற்றுப் புனைவு என்ற பெயரில் பெண் உடலை வகைவகையாகச் சித்திரித்த சாண்டில்யன் போன்றவர்களும் விரிவாக வாசிக்கப்பட்டனர். எனவே தமிழ் வாசிப்புச் சூழல் பழம் பெருமைகளை வாசிக்கும் சூழலாக அமைந்தது. புதிதாக உருப்பெற்றுவந்த சினிமாவில் வரலாற்றுக் கதைகள் மிகுதியாக இடம்பெற்றதை இங்கு இணைத்துப் பார்க்கலாம்.

ஆங்கிலமொழி மூலமாக அறிந்தவற்றைத் தமிழ்ச் சூழலில் அறிமுகப்படுத்தும் பணியும் உருவானது. தமிழ் மொழிபெயர்ப்புச் செயல்பாடுகளின் போக்கு களை இதன் மூலம் புரிந்துகொள்ள முடியும். இதழ்களில் மொழிபெயர்ப்புத் தொடர்கள் வெளிவரத் தொடங்கின. க.நா. சுப்பிரமணியம், சி.சு. செல்லப்பா போன்றோர் ஆங்கில நூல்வழி பெற்ற பல்வேறு செய்திகளையும் தமிழ்வழி கொண்டு வர விரும்பினர். சி.சு. செல்லப்பா நடத்திய ‘எழுத்து’ இதழும் அதன் மூலம் அவர் முன்னெடுத்த விமர்சனம் பற்றிய கருத்தியலும் இவ்வகையில் புரிந்து கொள்ளத்தக்கவை. இவ்வகையில், தமிழ் அச்சுச் சூழலில் ஆங்கிலமொழி செல்வாக்கு செயல் பட்டது. தமிழ் அச்சுப் பண்பாட்டைப் புரிந்து கொள்ள ஆங்கில மொழியில் சிந்தித்து, தமிழில் எழுதியவர்களின் ஆக்கங்களை வாசிக்க வேண்டும். இத்தன்மை சிரத்தையான தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலிலும் வெகுசனச் சூழலிலும் வெவ்வேறு பரிமாணங்களில் நடைபெற்றது. இதற்குள் செயல் பட்ட தமிழ் அச்சுப் பண்பாட்டை நாம் இனம் காணும் அவசியமுண்டு. நவீனத்துவம் என்பதை இப்பின்புலத்தில் புரிந்துகொள்ள வேண்டும். இத்தன்மை, நமது மரபுகளை உள்வாங்கிய கோட் பாட்டுத் தன்மை உடையதா? அல்லது வெறும் இறக்குமதியாகச் செயல்பட்டதா? தமிழ் அச்சுப் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இத் தன்மையை விரிவான உரையாடலுக்கு உட்படுத்த முடியும்.

பின்காலனியச் சூழலில் இந்தியாவில் சோவியத் மற்றும் சீன நாடுகளின் நேரடிச் செயல்பாடுகள் உருப்பெற்றன. சோவியத் நாட்டின் தூதரகங்கள் உருவாக்கப்பட்டன. இரஷ்யமொழி படிப்பதற்காக, அந்நாட்டிற்கு இந்தியாவிலிருந்து பலர் அனுப்பப் பட்டனர். இரஷ்ய மொழி பயின்று, அம்மொழியிலிருந்து இந்தியமொழிகளுக்கு மொழிபெயர்க்கும் செயல் உருவானது. நேரு காலத்தில் இச்செயல்கள் வேகமாக நடைபெற்றன. சோவியத் நூல்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டன. நேரு தலைமையில் செயல்பட்ட அரசு, சோசலிச அரசாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதற்கு சோவியத் நூல்கள் தேவைப்பட்டன. இவ்வகையான செயல் பாடுகள் தமிழ்ச்சூழலில் வேகமாக நடைபெற்றன. இந்திய மொழிகளில் மிக அதிகமான சோவியத் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டது தமிழில்தான். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மூலம், மிக அதிகமான சோவியத் நூல்கள் விற்பனை செய்யப் பட்டதும் தமிழ்நாட்டில்தான். வங்கமொழியை விட அதிகமான சோவியத் நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதை இங்கு நினைவில் கொள்வது அவசியம். பின் காலனியக் காலத்தில் நடைபெற்ற இவ்வகையான செயல்பாடுகள் தமிழ் அச்சுப் பண்பாட்டில் குறிப்பிடத்தக்க தன்மையாக உருப்பெற்றது. இத்தன்மை குறித்து விரிவான உரையாடலை முன்னெடுக்க முடியும். அறுபது ஆண்டுகளாகச் செயல்படும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கும் இடதுசாரி கருத்துரு சார்ந்த நூல்கள் வாசிப்பிற்குமான உறவைத் தமிழ் அச்சுப் பண்பாடாகக் கட்டமைக்கும் தேவையுண்டு.

மேற்குறித்த சூழலை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்க மற்றும் பிரித்தானிய நூலகங்கள் இந்தியாவில் உருவாக்கப்பட்டன. சென்னையில் அவ்வகையில் உருவாக்கப்பட்ட நூலகங்களை க.நா.சு. மற்றும் சி.சு. செல்லப்பா போன்றோர் எவ்வகையில் பயன்படுத்திக் கொண்டனர்? என்பது குறித்து அவர்களது பதிவுகளில் விரிவான குறிப்பு களைக் காண முடியும். சோவியத் மூலம் கொண்டு வரப்படும். அச்சு ஆக்கங்களை எதிர்கொள்ளும் வகையில் ‘யுனெஸ்கோ’ நிறுவனம் உருவாக்கப்பட்டது. ஒரு ரூபாய் விலையில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை யுனெஸ்கோ நிறுவனம், பல்வேறு பதிப்பகங்கள் மூலம் விற்பனை செய்தது. கூரியர் இதழும் இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டது. மிகஅதிகமான கூரியர் இதழ்கள் தமிழில் தான் விற்பனை செய்யப்பட்டதை, அவ்விதழில் பல ஆண்டுகள் ஆசிரியராக இருந்த மணவை முஸ்தபா பதிவு செய்துள்ளார்.

உலகின் வல்லரசுகளாக அன்று அறியப்பட்ட இருநாடுகள் வழி, தமிழ்ச்சூழலில் செயல்பட்ட அச்சுப் பண்பாடு குறித்த செய்திகள் சுவையானவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலம் (1980 வரை) வரை செயல்பட்ட இத்தன்மை குறித்து, தமிழ் அச்சுப் பின்புலத்தில் விரிவான உரையாடலுக்கு உட்படுத்தவேண்டும். தமிழ் அச்சுப் பண்பாட்டின் முதன்மையான பண்பாக, அத்தன்மை செயல் பட்டதை நாம் அறிந்துகொள்ள முடியும். தமிழில் புனைவுகளை உருவாக்கியர்கள் ஆங்கிலமொழியை அறிந்தவர்களாக இருந்தனர். காலனியத்தின் நேரடித் தாக்கமாக அவர்கள் செயல்பட்டனர். காலனிய அதிகாரங்களைப் புரிந்துகொண்டவர்களாக இல்லை. மாறாக இதனை நவீனத்துவமாக ஏற்றுக்கொண்டனர். மலையாளம், வங்காளம், கன்னட மொழிகளில் இவ்வகையான செயல்பாடுகள், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குறைவாகவே இருந்தன; ஆனால் தமிழ்ச்சூழலில் அப்படியில்லை. இதனால்தான் மேற்குறித்த மொழிகளில் உருவான வளமான புனைகதை மரபு, தமிழில் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர்தான் உருவானது. சங்கர குறுப்பு, பொற்றேக்காடு, தகழி சிவசங்கரம் பிள்ளை, எம்.டி வாசுதேவன்நாயர், ஓ.என்.வி. குறுப்பு ஆகியோர் ஞான பீடப்பரிசைப் பெற்றிருப்பதை இப்பின்புலத்தில் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்ச் சூழலில், ‘தாமரை’ இதழ் வழிதான் முதன்முதலாக ஆங்கிலமொழி அறியாத படைப் பாளிகள் உருவாயினர். தமிழ்நாட்டுச் சாதாரண மக்கள் பற்றிய பதிவைத் தாய்மொழி மட்டும் அறிந்தவர்கள் செய்யத் தொடங்கினர். இவ்வகை யான பதிவுகளை இதற்குமுன் செய்தவர்கள், ஆங்கிலமொழி மரபு அறிந்தவர்களாக இருந்தனர். சாதாரண மக்களைப் பற்றிய அவர்களது பதிவுகள், தாய்மொழி மட்டும் அறிந்தவர்கள் செய்த பதிவுகளிலிருந்து வேறுபட்ட மொழியாக உருவானது. பூமணி தொடங்கி கோணங்கி வரை இத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட புனைவாக அமைந் திருப்பதைக் காணலாம். தமிழ்ச் சூழலின் வாசிப்பு மரபில் இத்தன்மையைப் புதிதாகவே பதிவு செய்ய வேண்டும். தாமரை இதழும், குறிப்பாக தி.க.சியும் இத்தன்மை உருவாக்கத்தில் முதன்மையாகச் செயல்பட்டவர்கள். இதனைத் தமிழின் புதிய அச்சுப் பண்பாடாகக் கருத முடியும். தமிழ்ச் சிறுபத்திரிகையும் தமிழில் உருவான புனைகதைகளும் செயல் பட்ட வரலாற்றை இப்பின்புலத்தில் புரிந்துகொள்வது அவசியம். மண்வயப்பட்ட நவீனத்துவமாக இதனைக் கட்டமைக்க முடியும்.

மேற்குறித்த பல்வேறு பரிமாணங்களில் செயல்பட்ட அச்சுப் பண்பாட்டிற்கு மாறான, பிறிதொரு, வெகுசன தமிழ் அச்சுப்பண்பாடும் பின் காலனிய சூழலில் உருவானது. ‘குமுதம்’ இதழ் உருவாக்கத்தை இப்பண்பாட்டின் குறியீடாகக் கொள்ளமுடியும். 1930களில் உருவான ‘ஆனந்தவிகடன்’, 1940களில் உருவான ‘கல்கி’ ஆகியவை பழக்கப்படுத்திய வெகுசன வாசிப்பு மரபை, முழுவதுமாக வேறு தளத்திற்கு ‘குமுதம்’ பத்திரிகை 1950களில் எடுத்துச் சென்றது. திரைப்படம் சார்ந்த இதழியல் பெருக்கம், துணுக்குகளை வாசிக்கும் மனநிலை, பிற இதன்வழி உருவானது. தமிழ் சினிமாவின் தொங்குதசையாகவும் இவை உருப்பெற்றன. சினிமா நடிகையரை முதல் பக்கப் படமாகப் போடும், ‘தினந்தந்தி’ நாளிதழின் போக்கை, வேறு வகையில் விரிவாக வளர்த்தெடுத்தது குமுதம். சினிமா பார்த்த சந்தோஷத்தை, குமுதம் வாசிப்பதின் மூலம் வாசகன் பெறத் தொடங்கினான். இப்பண்பு தமிழ் வெகுசன அச்சு மரபில் ஆழமான தாக்கத்தை உருவாக்கிற்று.

தமிழில் உருவான இதழ்களை நடத்தும் அச்சு வணிக நிறுவனங்கள் மற்றும் குழுமங்களுக்கு ‘குமுதமே’ மாதிரியாக அமைந்தது. அரசுப் பணிகளில் பணிபுரியும் மேல்மட்ட அதிகாரிகள், குடும்பப்பெண்கள், அலுவலகங்களில் பணிபுரியும் நடுத்தரப் பிரிவினர், பள்ளிப் படிப்புடன் நிறுத்திக் கொண்ட வாசகர்கள் ஆகியோர் வாசிக்கும் மரபாக குமுதம் மரபு உருப்பெற்றுள்ளது. கணினி வழி உருப்பெற்ற அச்சுச் சூழலில் இத்தன்மை மிக விரிவாக வளர்ச்சி பெற்றிருப்பதைக் காண்கிறோம். தமிழ் அச்சுப் பண்பாடு, கடந்த அறுபது ஆண்டுகளில் மேலும் மேலும் வளர்ந்து, கொழுத்த இலாபம் தரும் விளம்பரத் தொழிலாக உருப்பெற்றுள்ளது. விளம்பரம் என்னும் வணிகமும் வாசிப்பு மரபும் தம்முள் இரண்டறக் கலந்து செயல்படுவதைக் காண்கிறோம். இப்பண்பு, ‘மாற்றுச்செயல்பாடு’ என்று சொல்லிக்கொள்வோரிடத்திலும் அண்மையில் செல்வாக்குப் பெற்றுள்ளது.

பின் காலனிய அச்சுச் செயல்பாடு என்பது பல்வேறு பரிமாணங்களில் செயல்படுகிறது. எழுத்துப் பயிற்சி மட்டும் கொண்டு செயல்பட்ட அச்சு ஊடகம், இன்று காட்சி ஊடகமாகவும் செயல்படுகிறது. வாசிப்பது என்பது பார்ப்பதின் துணைச் செயலாக உருப்பெற்றுள்ளது. ‘குமுதம் வாசித்தேன்’ என்பது தவறான தொடர். ‘குமுதத்தைப் பார்த்தேன்’ என்பதே சரியான தொடர். இவ்வகையில் தமிழ் அச்சுப்பண்பாடு பல்வேறு கூறுகளில் செயல்படுவதை அறியமுடிகிறது. இத்தன்மைகள் குறித்த பல்வேறு விவரணங்கள் அடிப்படையில் விரிவாக உரையாடும் தேவையுண்டு. அதற்கான முன்னறிவிப்பாக இக்கட்டுரைத் தொடரைக் கருத வேண்டும்.

Pin It