தெ.வெற்றிச்செல்வன் (1969)

தமிழ் இலக்கிய உலகம் நன்கு அறிந்த கவிஞர், ஆய்வாளர். "மற்றவை நேரில்" (1993), "புத்தகமல்ல" (1996), "மனத்தடி நீர்" (2003), "உப்புச் சிற்பங்கள்" (2007) ஆகிய கவிதைத் தொகுதிகளையும், "தைரியமாகச் சொல்" (1997) என்கிற சிறுகதைத் தொகுதியையும், "சொற்களின் ஒளிச்சேர்க்கை" (2006), "நகரும் திணைகள்" (2007) என்கிற கட்டுரைத் தொகுதிகளையும், "மெய்யாக வாழ்ந்தகதை" (2007) என்கிற தனது தந்தை குறித்த நினைவலை களுடனான சிறு தன்வரலாற்றுக் குறிப்பையும், "திசை எல்லாம் தமிழ்க்கவிதை" (2006) என்கிற தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வேட்டை நூலாக ஆக்கியும் என மொத்தம் ஒன்பது நூல்களின் ஆசிரியர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அருகிலிருக்கிற பெரியத்தும்பூர் என்கிற சிறிய கிராமத்தில் ப.தெட்சணாமூர்த்தி என்கிற ஆசிரியருக்கும் செல்லம்மாள் என்கிற தாயாருக்கும் அய்ந்தாவது மகனாகப் பிறந்தவர். ஒரு சகோதரரும் (பாவல் சூரியன்), மூன்று சகோதரி களும் இவரது உடன் பிறப்புகள். பயிற்சி முடித்த ஆசிரியராகப் பல காலம் பணியாற்றிவிட்டுத் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று இன்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின், அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

1991ஆம் ஆண்டு கிராமத்துமேட்டில் நடந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், புரட்சியாளர் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவில் கவிஞர் முருகுசுந்தரம், கவிஞர் கோவை இளஞ்சேரன், கவிஞர் பாலா, கவிஞர் பஞ்சாங்கம், கவிஞர் யுகசிற்பி போன்றவர்களோடு தனது முதற் கவிதையை அரங்கேற்றினார் வெற்றிச்செல்வன். பாரதிதாசன் பற்றி அவர் பாடிய அந்தக் கவிதை எழுச்சி மிகுந்ததாய் அரங்கத்திலிருந்தோரின் பாராட்டைப் பெற்றது. தொடர்ந்து கவியரங்குகளிலும் இதழ்களிலும் தனது படைப்புக்களை அரங்கேற்றினார்.

வெற்றிச்செல்வனின் குடும்பப் பின்புலமும் சமூகப் பின்புலமும் திராவிட இயக்கத்தோடு இடதுசாரி இயக்கமம் சார்ந்தவை. எளிய மனிதர்கள்- குறிப்பாக வேளாண் கூலிகள் படுகிற துன்பங்கள், வறுமை, கல்வியறிவின்மை, சாதிய ஏற்றத்தாழ்வுகள் போன்றவையே வெற்றிச்செல்வனின் சூழல்கள். குறிப்பாக தலித்துகளோடு வாழ நேர்ந்த வாழ்க்கை அவரை ஒரு கூர்மையான படைப்பாளியாகப் புடம் போட்டது.

கவிதை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான முகத்தைக் காட்டுகிறது. சிலருக்கு நிலவைப் போல குளிர்ச்சியானதாய், அழகானதாய், ஒளிபொருந்தியதாய் இருக்கிறது. ரோஜாவைப் போல் மென்மையானதாய், தண்ணீரைப் போல் இதமானதாய், கனவுகளைப்போல சுகமானதாய் இருக்கிறது. வாழ்க்கையின் அழகியலை மேவி, தேன் குடித்து மயக்கமுறும் வண்டைப்போலக் கவிஞர்கள் தங்களை மறந்து திளைக்கிறார்கள்.

இன்னொரு சாராருக்குக் கவிதை என்பது போர் முழக்கமாய், அக்கினிக் குழம்பாய், வெடி மருந்தாய், எதிரிகளை நோக்கி வீசுகிற ஆயுதமாய், கோபம் கொப்பளிக்கும் வார்த்தை எரிமலையாய், அசிங்கங்களுக்கெதிராய், ஆபாசங்களுக்கெதிராய், அடிமைத்தனத்திற்கெதிராய்ப் போராடுகிற, சொற்களே ஆயுதமாகி அணி வகுக்கிற போர்க் கருவியாக இருக்கிறது.
எழுதுகிறவன் கையில் இருக்கிறது எழுத்துக்கான நியாயம். இங்கே வெற்றிச்செல்வனின் எழுத்துகள் ஒடுக்கப்பட்டோரின் ஓங்காரக் குரலாக ஒலிக்கிறது. 'மற்றவை நேரில்" தொகுதியில்

சைவம் என்கிற தலைப்பில்,
ஆட்டுக்கறி கோழிக்கறி
அறவே தொடமாட்டான்
மீன்கறி சமைத்தாலோ
முட்டையை அவனுக்கெதிரில்
சாப்பிட்டாலோ
முகஞ்சுளித்து
அப்பால் நகர்ந்து கொள்வான்.
சுத்த சைவம்
என்று சொல்லிக்கொண்டு
எப்படி முடிகிறது அவனால்
மனுஷக் கறியை மட்டும்
சுவைத்துச் சாப்பிட?

இந்தக் கவிதைக்குள் பல நூற்றாண்டுகளாக சைவம் என்கிற பெயரில் நடந்திருக்கிற வன்கொடுமைகள் உள்ளீடாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்திய வரலாறு என்பதே பௌத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்குமான போராட்டம்தான் என்கிறார் அண்ணல் அம்பேத்கர்; தமிழக வரலாறு என்பதும் அப்படித்தான். சமணர்களைக் கழுவிலேற்றி, பௌத்தர்களைக் கொன்று குவித்து, வருணா சிரம தர்மத்தை நிலை நிறுத்தத் தோன்றியது தான் 'சைவம்" என்கிற கோட்பாடு. பார்ப்பனியத்தின் தமிழ் வடிவம்தான் சைவம். ஒவ்வொரு சாதிக்குமான தர்மங்கள் நிலைநிறுத்தப் பட வேண்டியும், அந்தந்த சாதியினர் தம்முடைய சாதி தர்மங்களை மீறாதவாறும் பார்த்துக்கொள்ள எழுதப்பட்டதே பெரிய புராணம் போன்ற கட்டுக்கதைகள். பொ.வேல் சாமியின் வார்த்தைகளில் கூறுவதென்றால் பார்ப்பன-வெள்ளாளர்களின் கூட்டுதான் "சைவம்" என்கிற கோட்பாடு. இதைத்தான் கவித்துவமாக "அவனால் எப்படி முடிகிறது, மனுஷக் கறியை மட்டும் சுவைத்துச் சாப்பிட" என்று வெற்றிச்செல்வன் கேள்வியெழுப்புகிறார். சாதி வெறியர்கள் தமிழ் என்ற போர்வையில் அடைக்கலமாகிற இடமாகச் சைவ மடங்கள் திகழ்வதைக் காணமுடியும்.

இந்தத் தொகுதியில் மிகவும் முக்கியமானது "நெருப்பில் குளித்த காற்று" என்ற குறுங்காவியம். பாலமுருகனின் "சோளகர் தொட்டி" நாவல் எவ்வளவு முக்கியமானதோ அவ்வளவு முக்கியமானது இக்குறுங்காவியம். தொண்ணூறு களிலேயே வெற்றிச்செல்வன் இதை எழுதியது மிகவும் வியப்பானது. வாச்சாத்தி சம்பவத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இக் குறுங்காவியம் வாச்சாத்தி மலையின மக்களின் எழுச்சி, மலையின மக்கள்மீது அதிகாரி களாலும் காவல் துறையினராலும் நடத்தப் பட்ட கொடூரம், பாலியல் வன்முறைகள் என அரச பயங்கரவாதத்தின் அத்தனை கொடுமை களையும் நம் கண்முன்னே நிறுத்துகிறது. இதை வாசித்து முடிக்கிற எவருக்கும் கண்கள் சிவக்கும்.

மரண ஓலமிடும்
அரைகுறைப் பிணங்களை
மிதித்தபடி ஓடும்
கால்களின் பயணம்
கால்கள் கால்கள்
தொடர்ந்து
அதிகாரமணிந்த கால்கள்

தொடர்ந்து "புதிய தேசீயகீதம்" என்னும் கவிதையில் வன்முறை இல்லாத சூழலில் தேசீய கீதம் பாடுவோம் என்கிறார். இரவீந்திர நாத் தாகூர் இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து அரசரை வரவேற்றுப் பாடிய வாழ்த்துப் பாடல்தான் இன்றும் நாம் பாடிக்கொண்டிருக்கிற தேசீய கீதம் என்னும் ஜனகனமன பாடல். இதில் குறிப்பிடுகிற பல பகுதிகள் இன்றைய பாகிஸ்தானில் இருக்கின்றன. ஆனாலும் மிக்க மரியாதையாக அசையாமல் நின்று அனைவரும் பாடிக்கொண்டிருக்கிறோம். ஏற்றத்தாழ்வற்ற சமூகம் உருவாக நாம் புதிய நாட்டுப் பண்ணை இசைக்க வேண்டும்.
"புத்தகமல்ல" வெற்றிச்செல்வனின் இரண்டாவது படைப்பு. இந்தத் தொகுதியிலும் வெற்றிச்செல்வன் தனக்கான தனித்துவத்தை என்பிக்கிறார். வாழ்வின் வெப்பச் சூட்டால் பிறந்த கவிதைகள் தொகுதி முழுக்கப் பூத்திருக்கின்றன. உதாரணத்திற்கு ஒரு கவிதை:

பரிணாமம்
அவர்களுக்கு வசதியாக
மூன்று குரங்குகள் இருந்தன
ஒடுக்குமுறைகளைக் காணாது
கண்களை மூடிக்கொண்டது ஒன்று
சுரண்டல்களைப் பற்றிப் பேசாது
வாயைப் பொத்திக்கொண்டது மற்றது
நெருக்கடிகள் குறித்த செய்திகளுக்கு
செவி சாய்க்காமல் பார்த்துக்கொண்டது
இன்னொன்று
மூன்று குரங்குகளும்
ஒன்றை ஒன்று புணர்ந்தன

ஆடம்பரமற்ற, கவிதைக் குறியீடுகள் ஏதுமற்ற உவமை, உவமானம், இருண்மைகள், படிமம் என்கிற எந்தப் பூச்சும் இல்லாமல் மிக எதார்த்தமாக, எளிமையாகப் பேசும் இக் கவிதை ஒடுக்குமுறைகளுக்கு எதிரான செய்தி யைப் பதிவு செய்கிறது. காந்தியின் மூன்று குரங்குகளும் இங்கே கேள்விக்குள்ளாக்கப் படுகின்றன. அதாவது காந்தியம் அங்கதச் சுவையோடு கேள்விக்குள்ளாகிறது. காந்தியம் மறுவாசிப்பு செய்யப்பட்டு காந்தியத்தில் சோசலிசத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார் கள் நமது பின்நவீனத்துவப் பேராசிரியப் பெருமக்கள். காந்தியம் என்பது பார்ப்பனியம் தான்; ஆனால் இனிப்பு தடவிய பார்ப்பனியம். காந்தியம் முதலாளியம் தான்; ஆனால் நயவஞ்சகமான முதலாளியம். அது உழைப் பவர் நலனைப் பேசுவதைப் போல அவர்கள் கழுத்தில் கத்தி வைக்கிறது. அதனால்தான் உழைக்கும் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள் சார்பாக சிந்தித்த, எழுதிய, போராடிய மாபெரும் சிந்தனையாளர்களாகிய தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் காந்தி யையும் அவரது கோட்பாட்டையும் மறுத்தார் கள். காந்தியை முழுமையாகப் புரிந்து கொள்ள அண்ணல் அம்பேத்கர் எழுதிய 'காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக் குச் செய்தது என்ன?" என்கிற நூலை வாசிக்க வேண்டும். என் உயிரைக் கொடுத்தாவது இந்து மதத்தைக் காப்பாற்றுவேன் என்று இரட்டை வாக்குரிமைக்கு எதிராகப் போராடிய காந்தியின் நவீன வடிவம்தான் நரேந்திர மோடி என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்துத்துவம் ஒரு அரசியல் வடிவமாக உரு வெடுத்ததற்கு அன்றைக்கே விதை போட்ட வர் காந்திதான். அவரது மத சகிப்புத்தன்மை என்பதுகூட இந்துக்களுக்கு ஆபத்து நேர்ந்து விடக்கூடாது என்ற அக்கறையில் உருவானது தான். இதைத்தான் வெற்றிச்செல்வன் காந்தி யின் குரங்கை மையமாக வைத்துக் கவி பாடுகிறார்.

"மனத்தடிநீர்" வெற்றிச்செல்வனின் மூன்றாவது தொகுதி. தலைப்பிலேயே கவித்துவத்தை வெளிப் படுத்துகிறார். புதுக் கவிதையை நவீனத்தன்மை நோக்கி நகர்த்தியிருக்கிறது இந்தத் தொகுதி. நவீன கவிதை என்கிற பெயரில் அகமன ஓட்டங்கள் மட்டுமே வார்த்தை வடிவம் எடுக் கிற இன்றைய சூழலில் எளிய வார்த்தைகளில் வெற்றி இங்கே சமூகம் பற்றியே பேசுகிறார். இந்தத் தொகுதியில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது:

வைகையாற்றில்
கள்ளழகர்
காவிரியாற்றில்
அரங்கநாதர்
திருவையாற்றில்
பஞ்சநதீஸ்வரர்
நட்டாற்றில்
ஜனங்கள்

கோயில்கள், திருவிழாக்கள், அவற்றுக்காக இறைக்கப்படுகிற கோடிக்கணக்கான தொகை என எல்லா நடவடிக்கைகளிலும் பார்ப்பனர் களின் தொந்திதான் பெருக்கிறது; உழைக்கிற மக்கள் ஓட்டாண்டிகளாகத்தான் தேய்கிறார்கள். அதைத்தான் நட்டாற்றில் ஜனங்கள் என்கிற தொடர் சுட்டுகிறது. இல்லாத கடவுளுக்குத் தான் இங்கே மரியாதை. இருக்கிற மக்களுக்கோ அவமரியாதைதான்.

வெற்றியின் நான்காவது தொகுதி 'உப்புச் சிற்பங்கள்." இத் தொகுதியில் உள்ள கவிதை களும் மற்றைய தொகுதிகளைப் போலவே நமது கவனத்தை ஈர்க்கின்றன. பெரும் பாலானவை அரசியல் சார்ந்த கவிதைகள். உதாரணம், ''வறட்சி நிவாரணத் திற்கும்/ வெள்ள நிவாரணத்திற்கும்/ இடை நசுங்கி/ மாண்டவை போக/ மீந்த எனதிந்த/ கடை மடைச் சொற்கள்." அதுபோலவே ''கடன் நிவர்த்திஸ்தலத்திற்கு/ ஏழை, எளிய பக்தர்கள்/ வாராவாரம் போகிறார்கள்/ கடன் வாங்கிக் கொண்டு." மக்களின் மூட நம்பிக்கை எவ்வளவு தூரம் அவர்களது வாழ்வையே சூறையாடுகிறது என்பதற்கு இக்கவிதை ஒரு உதாரணம். இந்தத் தொகுதியின் மிக முக்கிய மான கவிதை 'எழுதுவதென்றால்" என்கிற இந்தக் கவிதைதான். முலைகள், யோனிகள் என்று பெண்கள் தங்கள் உடல் மொழியை மையமாக வைத்துக் கவிதை எழுதுகிறார்கள்.

''உடல்மொழி நுகர்வு கலாச்சாரச் சந்தையைக் கவர்ந்திழுக்க வலியெடுக்க வலியெடுக்க கூர்மை காட்டும் நடிகையின் சிலிக்கன் முலைகள் பற்றி, முலைவரி கட்ட கட்டாயப் படுத்தியபோது முலை அறுத்து வாழை யிலையில் கொடுத்த முலைச்சிப் பரம்புப் பற்றி, வரப்பில் தூளியாடும் குழந்தை விழித்துப் பாலுக்கழ நடவு வயலிலிருந்து கறையேறி குழந்தைக்குப் பால்கொடுத்ததால் வேலைநேரம் கெட்ட தாகக் காரணம் காட்டி நடவுப் பெண்ணின் முலையறுத்த தஞ்சை நெற்களஞ்சியம் பற்றி, பிறப்புறுப்பில் கிரானைட் வைத்து வெடிக்கச் செய்து கொல்லப்பட்ட ஈழத்துக் கோனேஸ்வரி பற்றி, பிறப்புறுப்பில் குச்சிக்கட்டைகள் திணித்து குதறப்பட்ட கயர் லாஞ்சி பிரியங்கா பற்றியெல் லாம் எழுதுவது, பெண்ணிய எழுத்தாக இருப்பதும், வெறும் அதிர்ச்சி மதிப்புக்காக பெண்ணுறுப்புகளைச் சிலாகிப்பது, பெண் எழுத்தேயாயினும் ஆணா திக்கப் பாலியல் நுகர்வுக்கு வழிகோலும் கூறாகிவிடும் ஆபத்து இருக்கிறது என்பது கவிதையில் பெறப்படும் ஆதங்கமாக இருக்கிறது. 'எழுதுவதென்றால்" கவிதையின் கரு, அதிர்ச்சி மதிப்புக்காக பாலுறுப்பு பற்றி எழுதுவதல் லாமல் முலைகள் பற்றியும், யோனி பற்றியும் எழுதுவதென்றால் உண்மையான பொறுப் புணர்ச்சியோடு எழுதுவதும், துயர வரலாற்றைப் பதிவு செய்வதுமாகத்தானே இருக்க முடியும் என்கிற நியாயாவேசம் கொண்டதாக இருக்கிறது வெற்றிச் செல்வனின் கவிதை.

1999இல் வெளியான 'தைரியமாகச் சொல்" சிறுகதைத் தொகுதி கடைமடைப் பாசனப் பகுதி மண் மணத்தோடு வறட்சிக் கருவேல முள் கிழித்த வாழ்க்கைப் பொத்தல்களைத் தைக்கும் கவனத்துடன் படைப்பியல் நகர் கிறது. கவர்ச்சிகளுக்காகத் தங்களின் சுய மிழக்கும் கிராமியக் கலைஞர் வாழ்வியல், வெண்மணி நெருப்பின் வெக்கை, கொடூரத் தாலும், பருவந்தப்பிய மழையாலும் வெள்ளத் தில் மூழ்கடிக்கப்பட்ட நடவுப்பாடல் களின் துயரம், போலிமை உறவுகள் கொண்டாடும் பொறாமைத் திருவிழாவில் காணாமல்போகும் மனிதம், அதைத் தேடும் மனிதர்கள், நவகாலனி யத்துக்குக் கடல்வழி கண்டுபிடிக்கும் புதிய கொலம்பஸ், இப்படிப் பல பொருண்மை களில் கதைகளைச் சலிப்பின்றிக் காட்சிப் படுத்துவதைக் குறிப்பிடவேண்டும்.
இதன் வளர்ச்சியாகவே அச்சு ஊடகப் படைப் பாக்கத்திலிருந்து நகர்ந்து திரை ஊடகப் படைப் பாளியாக 'தரிசு" குறும்பட நடிப்பு/ இயக்கத் தின் மூலம் பரிணமித்திருப்பதையும் பதிவு செய்ய வேண்டியதிருக்கிறது. 'தரிசு" கடைமடை நிலங்கள் பண்ணை யார்கள் ஆதிக்கத்தி லிருந்து இன்று இரால் பண்ணையார்களின் ஆதிக்கத்தை நோக்கிப் போயிருப்பதை, அதன் காரணமாக கிராமம் பெயர்ந்து நகர்நோக்கி ஓடுவதும், நகர எந்திரப் பற்சக்கரங்களில் சிக்கிவிடப் பயந்து கிராமம் நோக்கி மீள்வதும், அல்லது எங்கே போவது என திகைக்கும் தவிப்புமாகக் காட்சிப்படுத்தப்படுகிறது.

இவர் தொகுத்த 'ஏழாம்திணை" சிறப்பு மலர், ஆஸ்திரேலியக் கவிஞர் நட்சத்திரன் செவ் விந்தியன் நேர்காணல், "அமெரிக்கா" சிறுகதைத் தொகுப்பு (ஆசிரியர் வ.நா. கிரிதரன், அமெரிக்கா) பற்றிய விரிவான பார்வை, சேரன் (கனடா) கவிதைகள் குறித்த அரசியல் அழகியல் பார்வைப் பதிவுகள், பிரதீபா தில்லை நாதன் (கனடா) கவிதைகள், சுரேஷ் கனக ராஜா (லண்டன்) கட்டுரை மொழியாக்கம், அகிலனின் ஆங்கிலக் கவிதை மொழி பெயர்ப்பு (யுகசிற்பி) இப்படி பன்மணித் திரளாக விளங்குகிறது.

இவர் நடத்திவரும் "களரி" என்கிற இணைய இதழும் அந்த வகையில் குறிப்பிடத்தக்கதே. சேது சமுத்திரம் குறித்த ஆழ்ந்தகன்ற ஆய்வு மற்றும் பல்வேறு படைப்புகள் என வளர்ச்சி குறித்து நம்பிக்கையளிக்கும் ஊடகச் செயல்பாட்டைப் புலப்படுத்துகிறது. பழந்தமிழ்ப் புலவர் செம்புலப்பெயல்நீரார் போல நவீன கால "கரும்புலப்பெயல் நீரார்" இவர். இது தெ.வெற்றிச்செல்வனின் புனைபெயர். இந்தப் பெயரில் இவரது நையாண்டி கொப்பளிக்கும் கவிதைகள் சமூகக் குணக்கேட்டை அங்கதமாக்குகின்றன.

"சொற்களின் ஒளிச்சேர்க்கை" தமிழகத் தமிழ்க் கலை இலக்கியப்பன்மைத் தன்மை குறித்த விரிவான ஆய்வுக்களப் பதிவு எனலாம். புதினவியல், சிறுகதை இயல், ஓவியவியல், அரசியல், பழந்தமிழியல், நாட்டாரியல் என ஒவ்வொரு துறை சார்ந்தும் நாலாசிரியரின் அறிவுத் தேட்டமும், செரித்துக்கொண்ட செய்திகளின் களஞ்சியமும் நுண்மாண் நுழைபுலத்தோடு கட்டுரைக்கப்பட்டிருக்கும் பாங்கு ஈர்ப்பானது. பாழ்மண்டபத்திலிருந்து விட்டு விடுதலையாவதில் தொடங்கி தீண்டாத வசந்தத்தின் இடி முழக்கம் கேட்பது வரை "சொற்களின் ஒளிச்சேர்க்கை" வீரியமாய் நிகழ்ந்திருக்கிறது.

"சொற்களின் ஒளிச்சேர்க்கை", தமிழகக் கலை இலக்கியப்பன்மையை ஆய்வு செய்கிற தென்றால், 'நகரும் திணைகள்" - அயலக தமிழ் இலக்கியப் பன்மை குறித்து ஆய்வுத் தடத்தை பதித்திருக்கிறது எனலாம். 'வெள்ளாவி யில் வெந்தும் வெளியேறாத கறுப்புக் கறைகள்", 'அகதிமயமாக்கல்", 'சுருங்கிய உலகும் விரியும் இலக்கியமும்" என முளைக்க மண் தேடி அலையும் விதைகளை நூலின் ஒவ்வொரு வரியிலும் அடையாளங்காண முடிகிறது.

"மெய்யாக வாழ்ந்த கதை" வெற்றிச் செல்வனின் முக்கியமான படைப்பு. தனது தந்தை குறித்த வாழ்வியல் பதிவு. வெற்றிச் செல்வனின் தந்தை ப.தெட்சணாமூர்த்தி ஆசிரியர். திராவிட இயக்கங்களின்பால் ஈடுபாடு கொண்டு தனது பெயரைத் தென்னவன் என்று சூட்டிக் கொண்டவர். பெரியார் மேல் ஆழ்ந்த பற்று காரணமாக பகுத்தறிவு சார்ந்த வாழ்க்கை முறையைத் தனதாக்கிக்கொண்டவர். கருப்புத் துண்டு எப்போதும் தோளில் கிடக்கும். பகுத்தறிவுக் கொள்கைகளைப் பிரச்சாரமாக மேற் கொண்டவர். திராவிட இயக்கச் செயல் பாடுகளுக்கு உறுதுணையாக நின்றவர். திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளூரில் அமைய முன்னோடியாய் இருந்தவர். ஆசிரியர் இயக்கங் களில் தீவிரமாகப் போராடிச் சிறை சென்றவர். அவரது கடிதங்களும் உயிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இவரது தந்தை குறித்து தமிழ்ப் படைப்புலகில் வெவ்வேறு வாய்ப்புகளில் என்னால், கவிஞர் யுகபாரதியால் மற்றும் சிலரால் எழுதப்பட்ட தோடு கவிஞர் ஈரோடு தமிழன்பன் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் சி.சுப்பிரமணியம் போன்றவர்களால் பல்வேறு அரங்குகளில் பேசப்பட்டிருக்கிறது.

அவரது "உயில்" தமிழிலக்கிய உலகில் ஒரு தனித்த இலக்கிய ஆவணம். உயில் என்பது 'சொத்துக் கைமாற்றம்" என்ற பிம்பத்தைத் தகர்த்தவர் ப.தெட்சிணாமூர்த்தி (எ) தென்னவன். ''உயிருடன் இருந்தவரை தொழிற்சங்கப் போராட்டங்களில் ஒப்பளிக்கப் பட்ட இந்த உடலை நான் இறந்த பிறகு தொழிற்சங்கக் காரர்களிடமே ஒப்படைத்துவிடுவது எனவும், இறப்புச் செலவுக்குப் பணம் ரூ.500 வைத் திருப்பது பற்றி, இறப்பு என்பது இயற்கை நிகழ்வு என்ற உணர்வோடு அழுது அரற்றாமல் வந்தவர்களுக்கு குளிர்நீர், தேநீர் கொடுத்து உபசரிப்பது குறித்து, தன் இறுதி ஊர்வலத்தில் 'கோவிந்தா கோவிந்தா" எனக் கோஷ மிடாமல் 'தமிழ் வாழ்க! தமிழ்நாடு தன்னாட்சி பெறுக!" என முழக்கமிட வேண்டும் என்பது பற்றி, காலம்பூராவும் வறுமையிலும் செம்மை யாகத் தான் வாழ்ந்தது பற்றி, மகன்கள் வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விழைவு பற்றி, இறுதிவரை பகுத்தறிவாளனாய், சமூக அக்கறை யாளனாய், போராளியாய் வாழ்ந்தது பற்றி வெடிப்புறப் பேசும் ஒரு தனியான இலக்கிய ஆவணம் வெற்றிச்செல்வனின் தந்தையார் எழுதிய உயில் எனலாம்." இவையெல்லாம் அவரது 'மெய்யாக வாழ்ந்த கதை"யில் அழகிய லோடு பதிவாகியிருக்கின்றன.


"திசையெலாம் தமிழ்க் கவிதை" என்கிற நூல் வெற்றிச் செல்வனின் முனைவர் பட்ட ஆய்வு நூல். ''தமிழ்க் கவிதை வளர்ச்சிக்குப் புகலிடக் கவிதைகளின் பங்களிப்பு" என்பது அரவது ஆய்வுத் தலைப்பு. ஆய்வுப் புலத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க ஆய்வு. சோதனை முயற்சியாக வெற்றிச்செல்வன் பெரும் வெற்றி கண்டிருக்கிறார். பல்கலைக் கழகங்களின் தமிழ்த்துறைகளில் மேற்கொள்ளப்படுகிற ஆய்வு களையும் அவற்றுக்காக வழங்கப்படுகிற முனைவர் பட்டங்களையும் மதிப்பீடு செய்தால் தொண்ணூறு விழுக்காடு குப்பைகள்தாம். பல ஆய்வுகள் ஒன்றின் பிரதியாகவே மற்றொன்றும் அமைவதைக் காண இயலும். வெற்றிச் செல்வன் மேற்கொண்ட ஆய்வு அதை நிகழ்த்த அவர் எடுத்துக்கொண்ட உழைப்பு, தரவுகளைத் திரட்டவும், நேர்காணல்களுக்காகவும் அவர் மேற்கொண்ட அலைச்சல், திரட்டிய தரவுகளை வடிவ ஒழுங்கிற்குள் பொருத்த அவர் மேற் கொண்ட முயற்சிகள் என, கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் அவர் மேற்கொண்ட பேருழைப்பின் வெளிப்பாடாய் வந்துள்ளது. தமிழ் இலக்கியத் தின் அடர்த்தியை அறிந்த வெற்றிச்செல்வன் தன் ஆய்வையும் அதற்குரிய நேர்த்தியோடு வழங்கியிருக்கிறார்.

புகலிடத்தில்அகதிகள் பற்றிய வரையறைகள், அவர்கள் படுகிற துன்பங்கள், வேதனைகள், மன அழுத்தங்கள், புலம்பெயர்வதால் எதிர் கொள்கிற அறைகூவல்கள், மனித உரிமைகளுக்கான அவர்களது போராட்டங்கள், ஒவ்வொரு நாடும், அரசும் அதன் சட்ட திட்டங்களும் அவர்களை நடத்துகிறவிதங்கள், குறிப்பாகத் தமிழ் மக்கள் உலகம் பூராவும் அனுபவிக்கிற வலிகள் ஆகியவை இந்த ஆய்வின் முதற்பகுதியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதை வாசிக்கிறவர்கள் மனிதர்களாக இருக்கிறபட்சத்தில் அழாமல் இருக்க முடியாது. பெரும்பாலும் ஈழம் சார்ந்த படைப்புகளே இதில் கவனப்படுத்தப்படுகின்றன.

அடுத்த பகுதியில் தங்குமிடம், கல்வி, மொழி, வேலைவாய்ப்பு, சாதி மற்றும் பிற வேற்றுமை களால் வரும் இடர்ப்பாடுகள், பால் வேறுபாடு களால் அமையும் துன்பங்கள் போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கென பொருத்தப் பாடுடைய கவிதை கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விவரிக்கப்படுகின்றன. புகலிட மனிதர்களின் அவலத்தைச் சுட்டும் ஒரு கவிதை,

ஒரு பிராங்கெனினும்
என் ஊதியம் பெருக்க
முதலாளி குண்டியைக்கூட
துடைக்கத் தயார் - (தேவி கணேசன்)

என அவலத்தைப் பதிந்து செல்கிறது. தமிழ்க் கவிதையின் உத்திகளாக உவமைகள், உருவகங்கள், அங்கதம், படிமம், முரண் போன்ற உத்தி களையும் அதற்குப் பொருத்த மான கவிதை களையும் கொண்டிருக்கிறது இந்த இயல்.

அடுத்த இயல் புகலிடக் கவிதைகளின் உளவியல் பற்றிப் பேசுகிறது. ''தம் தாயக நினைவு வலைப் பின்னலுக்குள் அவர்கள் சுய அடையாளங்களைப் பேணி வந்தபோதும் அவர்கள் புகலிடத்தில் எதிர்கொள்ளும் கலாச்சார அதிர்ச்சி அல்லது முறிவு, மற்றும் இங்கு வந்துவிட்டபோதும், அவர்களுக்குத் தாயத்தில் போர்ச் சூழலில் நேர்ந்த துன்ப. துயரங்கள், அவை தந்த மன அதிர்ச்சிகள், இழப்புகள், வடுக்கள் மற்றும் அகதி முறைமை கோரிய முயற்சிகள், போராட்டங்கள், பயண முகவர்களின் ஏமாற்றுத் தந்திர மாய்மாலங்கள், நாஜிகளின், நிற வெறியர்களின் தாக்குதல்கள், மொழி மற்றும் காலநிலை இடர்ப்பாடுகள், பணிச் சூழலில் நெருக்கடிகள், போர்க் களத்தில் இராணுவத்தினரின் புகலிடத்தில் - பயண முகவர்களின் நாஜி களின் பாலியல் வல்லுறவுகள் என்று தொடர்ந்து உளவியல் ரீதியான பாதிப்புக்குள்ளாகின்றனர்."

நகரில் எல்லாக் கடைகளும்
பூட்டப்பட்டாலும்
சவப்பெட்டிக் கடைக்காரன் மட்டும்
நம்பிக்கையோடு திறந்து வைத்திருக்கிறான் - (சேரன்)
இதில் யுத்தச் சூழலை நம் கண்முன் நிறுத்துகிறார்.

இறுதியாக, தமிழ்க் கவிதை வளர்ச்சி நோக்கில் புகலிடக் கவிதை ஒப்பீட்டியல்: இந்த இயலில் தமிழ்க் கவிதை மரபில் உள்ள கவிதை களோடு இன்றைய அகதி வாழ்வை ஒப்பிட்டுப் பேசும் கவிதைகள் இடம் பெறுகின்றன. சிவ சேகரத்தின் ஒரு கவிதையை இங்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்து
பயன்மிகு அரிந்த பனைசெறி நாட்டார்
வழிபல சென்றே பலதிசைப் பறந்தார்
வருகுவதெந்நாள் அறிவையோ நாராய்
... பெருங்குளிர்... கூறாய்
அகதிமையோடு தமிழ்ச் சமூகம் உள்ளாகி யிருக்கிற நெருக்கடிகளை இதில் காணலாம்.

இவ்வாய்வில் வெற்றிச்செல்வன் எடுத்துக் கொண்ட முயற்சியும் உழைப்பும் இளம் ஆய்வாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியன. இருபதுக்கும் மேற்பட்ட பன்னாட்டுத் தமிழறிஞர்களை நேர்கண்டு திரட்டிய செய்திகள், இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்களின் வாசிப்பு, ஆய்வுக்குரிய தகவல்களைப் பல இடங்களில் அலைந்து திரிந்து திரட்டியது, ஒப்புக்காக இன்றி உணர்வோடும் உண்மையோடும் தனக்கேயுரிய தனி மொழியோடும் அளவோடும் இவ்வாய்வைத் தமிழ் மக்கள் முன் வைத்திருக்கிறார். மனிதர் படும் இன்னல்களைச் சகித்துக்கொள்ள இயலாததன் வெளிப்பாடாக இவ்வாய்வு வந்துள்ளது.

சில ஆண்டுகளுக்குமுன் வெற்றிச்செல்வனிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன். வெண்மணி பற்றி இந்திரா பார்த்தசாரதி எழுதியுள்ளார். நீங்கள் தலித்திய கண்ணோட்டத்தில் ஒரு நாவல் எழுதுங்கள் என்றேன். அதை அவர் எழுதாமல் வேறொரு நபரிடம் சொல்ல வெண்மணி பற்றிச் சில 'போலி" தலித் நாவல்கள் உருவாயின. விரைவில் அந்தப் பணியை மேற் கொண்டு ஓர் அசல் நாவலை வழங்குவார் என்று நாம் நம்பலாம்.

இடதுசாரி இயக்கங்கள், மற்றும் தலித் இயக்கங்களின் கலை இலக்கிய அமைப்புகள், ஆசிரியர்களின் சங்கங்கள், மனித உரிமை அமைப்புகள், சிற்றிதழ்கள், பல்கலைக்கழகக் கருத்தரங்குகள் என்று விரிந்து பரந்து தனது சொற்களை வலிமிகுந்த மனிதர்களின் வாழ்க்கை மேம்படத் துடுப்பாக வலிக்கிறார்.

பிற்போக்குத்தனங்களோடு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாத கவிஞர். தன் திருமணத்தைத் தமிழ்ச் சான்றோர் அறிஞர் அருளி (பேராசிரியர்-தமிழ்ப் பல்கலைக்கழகம்) அவர்களின் தலைமையில் சுயமரியாதைத் திருமணமாகத்தான் நடத்தவேண்டும் என்று பிடிவாதம் காட்டி நிறைவேற்றிக் கொண்டவர். குடும்பத்தினரையும் சனநாயகப் பண்புகளோடு சடங்குகள் தவிர்த்த நடவடிக்கைகளோடு பழக்கிவருபவர். தனது ஆண் குழந்தைக்கு பகத்சிங் என்றும் பெண் மகவுக்குத் தமிழிசை என்றும் பெயர் வைத்து மகிழ்ந்திருக்கிறார். அவ்வகையில் வெற்றிச்செல்வனின் வாழ்க்கை ஒரு முன்மாதிரியானது.

ஒரு சிலை தன்னைத்தானே செதுக்கிக் கொண்டதைப் போல வெற்றிச் செல்வன் தன் வாழ்வைத்தானே செதுக்கிக் கொண்டவர். இளமையிலிருந்து அவர்பட்ட உளியின் காயங்கள், வறுமையால் கருகிவிடாமல் அவற்றையே பதிவுகளாகக் கொண்டு எழுந்து நிற்கும் இன்றைய நிலை, இளைஞர்களை வசியப்படுத்தி வழிநடத்தும் ஆற்றல் கொண்டவை.

அவரது ஒவ்வொரு படைப்பினூடாகவும் வெளிப்படுவது வாழ்வின் பதிவுதான். தமிழகம் முழுவதும் தோழமை உறவுகளை வளர்த்து வைத்திருக்கும் வெற்றி, பழகுவதற்கும் குழந்தையைப் போலவே இனிமையானவர். அவரது எழுத்துகளுக்கும் அப்படி ஒரு வசீகரத்தன்மை உள்ளது.

வெற்றிச் செல்வனின் இலக்கு இது தான்: எல்லா மனிதர்களும் சம உரிமையோடு வாழும் வாழ்க்கைக்கான போராட்டம்தான் அவரின் எழுத்து.

Pin It