புகார் கொடுத்திட
சாலையை உட்கார்ந்து மறியல் செய்ய
சட்டம் ஒழுங்கை சீர்குழைக்க
வெடிகுண்டுகள் வீசி மயக்கமருந்து கொடுத்து கட்டிப்போட
துப்பாக்கியால் சுட்டு நடவடிக்கை எடுக்க
கும்கிகளை கொண்டு விரட்டியடிக்க
எதுவும் முடியாமல்
எவற்றுக்கும் அஞ்சாமல்
ஒற்றையானையெனத் திரிகிறது
நள்ளிரவு நிலவு.

 ***

பெருத்த மவுனத்துடன்
முடிச்சிட்டு கிடக்கும்
மானுடத்தின் துர்நாற்றப் பொட்டலங்களை தன்
வாயால் அவிழ்த்து உதிர்க்கிறாள்
வீதிகளில் குப்பைகளை சுவைக்கும் காமதேனு.

  ***

காமம் செப்பாது கண்டதையும் மொழிகிறது உன்விழி
நீ காதலியாவதும் நான் காதலனாவதும் நம் காதலின் கடனாகும்
கொல்லேர் கூர்விழியில் நீ எனைத் தாக்குவதும்
முல்லைநில நெடும்பனையாய் ஒத்தையில்
நான் காத்துக்கிடப்பதுவும்
நம் இளமையின் கடனாகும்,
ஏகாதிபத்தியமாய் நீ ஏகபோகியானவுடன்
வளம்குன்றாமல் என்ன செய்யும் என் திணைகள்
ஒப்பந்தங்களை எரித்துவிட்டு
கையெழுத்து இடாமலேயே எல்லை மீறுகிறாய்
என் ஆநிரைகளை களவாடி
வெறியாடல் நிகழ்த்துகிறாய்
நீ எவ்வழி சென்றாலும்
அவ்வழி நிற்பவள் என் நிறை சூலிதான்
என் ஒரு சொட்டு உதிரம்தான்
உனக்கு ஆட்சிபீடம்.
மகளிடம் தோற்று மனையாளிடம் தோற்றுப் போவதே
உன் பிறவிப்பயன் சாகசம்
தொல்லுலகில் நல்லோருக்காக அல்ல
என் காதலின் பொருட்டே
எல்லோர்க்கும் பெய்கிறது இப்பெருமழை.

  ***

ஒரு மரம் என்பது
மரம் என்பது
மரம் என்பது
மரம்தான்
பொம்மையன்று

  ***

தத்தளிக்கிறது
மணல் குவாரிக்குள் விழுந்து
தாகத்திற்கு நீர்த்தேடி
ஆற்றுக்குள் இறங்கிய நிலவு

  ***

நிலத்தினும் பெரிது
வானினும் உயர்ந்தது
பெருநெல் அளந்த உழுதுண்டக் குடியின்
கொடுந்துயர்.

 ***

உரக்கடை வியாபாரிகள் குடித்ததேயில்லை
ஒரு போதும்
பூச்சிக்கொல்லிகளை

 ***

மேல்நோக்கியே எரியும் போதும்
கீழிருப்பவர்களையே
எரிக்கும் கார்ப்ரேட்
தீ கொடிது.

 ***

நெடும் பனைகள் எடுத்த தற்படங்களில்
வரிசைக்கட்டி நிற்கின்றது
பொக்கலின்கள்

 ***

விற்பனைக்கு வந்திருப்பதை அறியாமல்
விலைபேச வந்திருப்போரிடம்
வாலாட்டிக் குழையும் நாய்களென
நீயும் நானும்
சந்தையில்

Pin It