சிந்தனைக் கயிறு அறுத்து
இருளுக்குள் பொத்தென்று
இருளாகி விடப்
பழகியிருந்தேன்.

ஆழமான அதன் பகுதிக்குள் பொதிந்த பொழுது
எங்கும் வியாபித்து இருக்க
அது மெல்லியதானதாகிப்
படரப் படர
மேலே அக்கம் பக்கம்
எல்லாமும் ஆகிப்போனது.

எல்லாமுமாக நானே
எதுவுமான எனக்குள்
நிச்சலனத்தை வாசித்தேன்.
இதுவரை ஒளிந்து
போயிருந்த உலகு
விஸ்வரூபமாய் மாறி அதுவே ஜீரணிக்கிறது.

மௌனமாய் இயங்குகிறேன்
இரவோடு இருளாய் இருட்டாய் ஆகி
பிரபஞ்சத்தோடு கலக்கிறேன்.

சுகத்தின் பிறப்பாய்
விடியாது
அப்பிக் கொள்கிறேன் என்னை....

***

சிலந்தி வலை பின்னிய
செவி தேடி அலைகிறது
என் வார்த்தைப் பூச்சி...
தின்னட்டும்....
கக்கி வாந்தி எடுப்பதைக் காட்டிலும்
இது எனக்கானது
என்னைப் பிடித்துத் தின்னட்டும்

***

எங்கு பார்த்தாலும்
நீண்ட நேரம் என்னுடன் நின்றே செல்கிறது
அந்த வெள்ளை நிற அம்புலன்ஸ் வண்டி.
என் தங்கையின்
நினைவுகளைச் சுமந்தபடி.....

- பாரதிசந்திரன்

Pin It