உண்மை அறியும் குழு அறிக்கையிலிருந்து...

கம்யூனிஸ்ட் கட்சி (மாலெ) மக்கள் விடுதலை தோழர்கள் இரமணி. விநாயகம் ஆகியோரின் ஒருங்கிணைப்பில், பேரா, அ. மார்க்ஸ் தலைமையில், பேரா, சுகுமாறன், பேரா பிரபா கல்விமணி, இளந்தமிழகம் இயக்கத் தோழர்கள் பரிமளா, பாரதிதாசன், சுற்றுச்சூழல் ஆய்வாளர்சீனிவாசன், வழக்கறிஞர் தமயந்தி, விடியல் பெண்கள் மையம், வழக்கறிஞர் சேகர், மக்கள் வழக்கறிஞர் கழகம், கோச்சடை, மக்கள் கல்வி இயக்கம், தன்வீர், தேசிய மனித உரிமைகளுக்கான மக்கள் கூட்டியக்கம், அப்துல் சமது, மனிதநேய மக்கள் கட்சி, வேடியப்பன், சமூகச் செயற்பாட்டாளர், தை.கந்தசாமி, தலித் மக்கள் பண்பாட்டு இயக்கம் உள்ளிட்ட பல மனித உரிமை ஆர்வலர்களைச் செயற்பாட்டாளர்களைக் கொண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 15,16 ஆகிய இரண்டு நாட்களில் இக்குழு திருவண்ணாமலை ஜவ்வாது மலை, தருமபுரி சித்தேரி மலைப்பகுதிகளுக்குச் சென்று படுகொலை செய்யப்பட்ட அக்குடும்ப உறவினர்களையும், அருகில் உள்ள கிராம மக்களையும் சந்தித்து விசாரித்து 22.04.2015 அன்று பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் விரிவான ஆய்வறிக்கையையும் தமிழக அரசுக்கு பின்வரும் கோரிக்கைகளையும் முன்வைத்தது.

தமிழக அரசு செய்ய வேண்டியவை

1. மனித உரிமை அமைப்புகளின் அழுத்தங்களின் விளைவாக இன்று செம்மரக் கடத்தல் தடுப்புப்படை மீது இரு கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் ஒரே ஒரு அதிகாரியின் பெயர் மட்டுமே அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் கூட அவர் தலைமையில் சென்ற யாரோ சில காவலர்கள் என்றுதான் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை ஆந்திர அரசு முறையாக விசாரித்து நீதி வழங்கும் என்கிற நம்பிக்கை இல்லை. எனவே, இது தொடர்பான புலனாய்வை ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) ஒன்றை அமைத்து விசாரிக்க வேண்டும். இந்த விசாரணை உச்ச நீதி மன்றக் கண்காணிப்பின் (monitoring) கீழ் நடத்தப்பட வேண்டும். செம்மரக் கடத்தல் தடுப்புப்படையின் தலைவர் டி.ஐ.ஜி எம்.காந்தாராவ் உட்படக் கொலைச் செயலில் ஈடுபட்ட அதிகாரிகளும் காவலர்களும் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

2.செம்மரக்கடத்தல் மாஃபியா குறித்தும், அரசியல்வாதிகளுக்கும் இவர்களுக்கும் உள்ள உறவுகுறித்தும் ஆராய ஆந்திரம் மற்றும் தமிழகம் அல்லாத மாநிலம் ஒன்றைச் சேர்ந்த பதவியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்க வேண்டும்.

3.செம்மரக்கடத்தல் தொடர்பாகச் சிறையில் உள்ள அனைவரது விவரங்களையும் உடனடியாக ஆந்திர மாநில அரசு வெளியிட வேண்டும். இது இணையத் தளங்களில் யாரும் பார்க்கத் தக்கவடிவில் வெளியிடப்பட வேண்டும்.

4. செம்மரக்கடத்தல் மற்றும் இரு வன அதிகாரிகளின் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தமிழர்கள் பெரும்பாலும் ரயில்கள், பேருந்துகள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் ஆகியவற்றிலேயே கைது செய்து கொண்டு சென்று பொய் வழக்குப் போடப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பழங்குடி மற்றும் வன்னியர், ஒட்டர் முதலான அடித்தளச் சாதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

தமிழக அரசு தம் மக்கள் இவ்வாறு துன்பப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிராமல் இவர்களின் விடுதலைக்காக சட்ட ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 2013 டிசம்பர் 13 அன்று கொல்லப்பட்ட இரு ஆந்திர வனத்துறை அதிகாரிகள் ஸ்ரீதர் மற்றும் டேவிட் ஆகியோரின் கொலை குறித்து ஒரு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். தமிழகத் தொழிலாளிகளைப் போலவே கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அடித்தளத் தொழிலாளிகள் பலரும் கூட இன்று கைது செய்யப்பட்டுச் சிறைகளில் உள்ளதாக ஆந்திர டி.ஜி.பி சொல்கிறார். அவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும். மேல் மட்டங்களில் உள்ள செம்மரக் கடத்தல் மாஃபியாக்களைக் கைது செய்து தண்டனை வழங்குவத்ற்கு ஆந்திர அரசு முனைப்புக் காட்ட வேண்டும்.

5. சுமார் 1.4 கோடி செம்மரங்கள் சேஷாசலம் மற்றும் நல்லமல்லா வனப் பகுதிகளில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவை முழுமையாக எண்ணப்பட்டு (enumeration) அறிவிக்கப்பட வேண்டும். கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றி ஆந்திர அரசு வசம் உள்ள 10,000 டன் செம்மரங்களையும் ஏலம் விட்டுக் கிடைக்கும் தொகையைக் கொண்டு இவ்வனத்தைச் சார்ந்து வாழும் மக்களுக்கு நலத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

6. தமிழக அரசு இதுவரை வனச் சட்டத்தை (Forest Act 2006) அமல்படுத்தாதது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது, இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளால் உருவாகியுள்ள தடைகளை நீக்கி, பிற மாநிலங்களைப் போல அச்சட்டம் இங்கு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள பழங்குடிகளின் வீதம் சுமார் ஒரு சதவிகிதம் மட்டுமே. இவர்கள் அனைவருக்கும் குடும்பம் ஒன்றிற்கு இரண்டு ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட வேண்டும். வனத்துறை அதிகாரிகளுக்குப் பழங்குடி மக்கள் பிரச்சினைகள் மற்றும் உரிமைகள் குறித்த உணர்வூட்டும் பயிற்சிகள் (sensitisation programmes) மேற்கொள்ளப்பட்ட வேண்டும்.

7. பழங்குடிமக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற வீதத்தில் உடனடியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இப்பள்ளிகளில் முறையாக ஆசிரியர்கள் வந்து பாடங்கள் நடத்துகிறார்களா? என்பது கண்காணிக்கப்பட வேண்டும். இப்பள்ளிகளில் வழங்கப்படும் உணவு படுமோசமாக உள்ளது. போதிய காய்கறிகள், மாமிசம் ஆகியவற்றுடன் இது மேம்படுத்தப்பட வேண்டும். அதேபோல பழங்குடிப் பகுதிகளில் உள்ள மருத்துவ மனைகளும் மேம்படுத்தப்பட வேண்டும். போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் முறையாக மருத்துவமனைகளுக்கு வந்து பணி மேற்கொள்கிறார்களா? என்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். கிராம உதவிச் செவிலியர்கள் கருத்தரித்துள்ள பெண்களைப் பிள்ளைப் பேறுக்கு முன்னும் பின்னும் முறையாகக் கவனித்து ஊட்டச் சத்து, மருந்துகள் முதலியவற்றை விநியோகிக்கவேண்டும். இந்தப் பணி முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா? என்பதிலும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

8. அடிவாரங்களிலிருந்து மலைக்குச் செல்லும் சாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும். சாலைகள் இல்லாத இடங்களில் அவை அமைக்கப்பட வேண்டும். போக்குவரத்து வசதிகளை அதிகப் படுத்த வேண்டும். தமது விளைபொருட்களைக் கீழே கொண்டு சென்று விற்பதற்குரிய வகையில் சுமைகளுடன் பயணம் செய்யத்தக்க போக்குவரத்து வசதிகள் செய்யப்பட வேண்டும். இனிப்புச் சத்து குறைந்த, நார்ச்சத்து அதிகமாக உள்ள திணை வகைகளின் சாகுபடியை அரசு ஊக்குவிப்பதோடு உற்பத்தியாகும் திணை வகைகளைக் கொள்முதல் செய்வதற்கான மையங்களை (procurement centres) மலைகளில் அமைக்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில்களும் (agro based industries) இப்பகுதிகளில் ஊக்குவிக்கப்பட வேண்டும். மழை நீரைத் தேக்கும் வகையில் மலைப்பகுதிகளில் குளம் குட்டைகளை உருவாக்க வேண்டும்.

9. மலை அடிவாரங்களில் வசிக்கும் வன்னியர்,போயர் போன்ற அடித்தள மக்களின் நிலையும்பழங்குடி மக்களைப் போன்றே உள்ளன. இன்றுகொல்லப்பட்டவர்கள் மட்டுமின்றி, ஆந்திரச்சிறைகளில் அடைபட்டுக் கிடப்பவர்களிலும் இவர்கள்அதிக அளவில் உள்ளனர். இவர்கள் மத்தியிலும்மேற்குறித்த நலத் திட்டங்களை மேற்கொள்ளுதற்குஅரசு முன்னுரிமை அளிக்கவேண்டும். மலையிலும் அடிவாரங்களிலும் மகாத்மாகாந்தி கிராமப்புறவேலை வாய்ப்புத்திட்டங்கள் முதலியவற்றைமுறையாக நிறைவேற்ற வேண்டும்.

10.பேருந்துகளிலிருந்து இறக்கி அழைத்துச் சென்று சுட்டுக் கொல்வது, தமிழ் பேசினாலே கைதுசெய்து கொடும் பிரிவுகளின் கீழ் வழக்குகள் போட்டுச் சிறையில் அடைப்பது என்கிற நிலையில் தமிழக அரசு, "முறையான விசாரணை வேண்டும்" என ஆந்திர அரசை "வேண்டிக் கொண்டதோடு" நிறுத்தியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முறையான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு மோதல்சாவு கொலைக்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கும், அப்பாவிகளுக்கு உரிய இழப்பீடுகள் கிடைப்பதற்கும், சிறைகளிலுள்ளவர்களை விடுதலை செய்வதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசை இக்குழு வற்புறுத்துகிறது.

11. கொல்லப்பட்ட20 பேர்களின் மனைவியருக்கும் தமிழக அரசு அவர்களின் தகுதிக்கேற்ற அரசுப் பணிகளை வழங்க வேண்டும், குழந்தைகளில் கல்விச் செலவையும் ஏற்க வேண்டும்.

Pin It