கடும் விலைவாசி ஏற்றம், நாடாளுமன்றத்தையே நடத்த விடாதபடி எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி, பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டுத் தலைக்குப்புற விழுந்த அடி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தியதில் ஊழல், வரலாறு காணாத அளவிலான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல், கார்கில் போரில் இறந்த வீரர்களுக்கான ஆதர்ஷ் வீட்டுமனை ஒதுக்கீட்டு ஊழல் என இத்தனை அலம்பல்களுக்கு நடுவே இந்தியத் தேசிய காங்கிரசுக் கட்சியின் இரண்டு நாள் மாநாடு புதுதில்லியின் புறநகர்ப் பகுதியான புராரியில் 20.12.2010 அன்று முடிவடைந்துள்ளது.

முதல்நாள் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தி காங்கிரசுக் கட்சியால் ஊழலைப் பொறுத்துக் கொள்ளவே முடியாது என்று கொக்கரித்து இருக்கிறார். சோனியா தனது உரையில், ஊழலுக்கு எதிரான கடுமையான கருத்துகளை வெளியிட்டு, காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த நடுவண் அமைச்சர்கள் மற்றும் மாநில முதலமைச்சர்களுக்கு எதிரான நான்கு அம்சத்திட்டங்களை அறிவித்துள்ளார்.

இதன் வழியே நாட்டைக் கெடுத்த நாசகார நேரு குடும்பத்திலிருந்து தொடர்ந்து ஆளவந்து, பாமர மக்களைப் பாழும் படுகுழியில் தள்ள வந்த தனது சதித்திட்டத்தை எல்லோர்க்குமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். தொடர்ந்து கட்சித் தலைவர் பதவி வகித்துவரும் சோனியா, தனது மூனறாண்டுப் பதவிக்காலத்தை அய்ந்தாண்டுகளாக நீட்டித்துக் கொண்டுள்ளார். மானங்கெட்ட காங்கிரசுக் கட்சிக்கு இனிச்சாகும்வரை அவர்தான் தலைவர். மாநாட்டில் பத்து மணித்துளிகள் மட்டுமே பேசிய குட்டித்தலைவர் இராகுல் காந்தியும் அம்மாவின் கருத்தை அடியொற்றியுள்ளார்.

வெள்ளையன் பூட்டிய அடிமை விலங்கை ஆகஸ்டு 15இல் அழுக்குத் துடைத்து மாட்டிய அயோக்கியர்கள் இந்தக் காங்கிரசுக் கயவர்கள்தான். காஷ்மீர் சிக்கல், தேசிய இனங்களின் உரிமைகளைக் காலில் போட்டு நசுக்குதல், இந்தித் திணிப்பு, மாநில அரசுகளின் குரல்வளை நெறிப்பு, மதவெறித் தீயில் நெய்வார்ப்பு, இந்திய இறையாண்மையை (?!) பன்னாட்டு ஏகபோக வல்லூறுகளுக்கு இரை ஆக்குதல், ஈழத் தமிழர் தலைகளின் மேல் எரிநெருப்பைக் காய்ச்சி ஊற்றி, இனப்படுகொலையைத் தொடர்தல் சொந்தநாட்டு மக்களையே சொல்லொணாக் கொடுமைக்கு ஆட்படுத்தித் தொடர்ந்து நடத்துதல் ஆகிய யாவற்றையும் தன் ஒட்டுமொத்த உரிமையாகக் கொண்ட அந்தக் கட்சிக்கு இப்போதைய வயது 125 ஆண்டுகள்.

பற்றி எரியும் காஷ்மீரும் வடகிழக்கு மாநிலங்களும்

இந்திய வல்லாதிக்க அரசை எதிர்த்துப் பல பத்தாண்டுகளாகப் பனிமலை இமயத்தில் போராட்டப் பெரு நெருப்பு, தீக்கங்குகளை உமிழ்ந்தபடி உள்ளது. மனித உரிமைகள் அனைத்தையும் காலில் போட்டு நசுக்கி, இரக்கமே இல்லாமல் மக்களைக் கொல்லும் இந்திய இராணுவத்தை எதிர்த்துப் பெண்களும் சிறுவர்களும் கூடக் களமிறங்கி விட்டார்கள். இந்திய அரசின் அடக்குமுறைச் செயல்கள் அனைத்திற்கும் அடித்தளம் போட்டவர் சமாதானப் புறா பண்டித நேரு ஆவார். ஐ.நா. மன்றத்தில் வாக்களித்தபடி அவரே பொது வாக்கெடுப்பு நடத்த மறுத்தார். காஷ்மீர் மக்களுக்கு இந்திய அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்டிருந்த சில தனித்த உரிமைகளைப் படிப்படியாய்ச் சவக்குழிக்கு அனுப்பினார். ஆட்சிக் கவிழ்ப்பு நாடகங்கள் நடத்திக் காஷ்மீர் மக்களின் தன்னுரிமை எழுச்சியைக் காயப்படுத்தினார். நேருவை அடியொற்றித்தான் இன்று நிழல் அதிகாரம் நிகழ்த்தும் சோனியாவும் சூழ்ச்சி வலைகள் பின்னுகிறார். ஆயிரம் படைகளைக் கொண்டு போய் அடுக்கினாலும் பீறிட்டெழும் காஷ்மீர் மக்களின் தன்னுரிமைக் கிளர்ச்சியை இனி அடக்க முடியாது.

காஷ்மீர் வழியில் வடகிழக்கு மாநிலங்களும் வல்லாதிக்க தில்லி அரசுக்கு அடங்க மறுத்துச் சீறுகின்றன. சுதந்திரத் தேசமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பும் மணிப்பூர் தணியாத உரிமை வேட்கையோடு எழுந்து நிற்கிறது. இந்திய அரசின் பல்வேறு அடக்குமுறை ஆள்தூக்கிச் சட்டங்களை அம்மண்ணின் மக்கள் தமது போராட்டத் தீயில் பொடிப்பொடியாக்குகின்றனர். கடந்த 2000ஆம் ஆண்டு செப்டம்பர் தொடங்கி இன்று வரை பத்து ஆண்டுகளாகச் செயற்கைக் குழல் வழியே உணவு திணிக்கப்படும் நிலையில் கூடத் திமிறும் வீராங்கனையாகத் திகழ்கிறார் ஐரோம் ஷர்மிளா என்கிற போராளி. மணிப்பூர் வழியில் இன்று பல மாநிலங்களில் உரிமை நெருப்புப் பற்றி எரிகிறது.

பழங்குடி மக்கள் மீது நிகழ்த்தப்படும் படுகொலை

இந்தியத் துணைக் கண்டத்தில் பாயும் வற்றாத ஆறுகளும், பசுமை போர்த்திய வயல்களும், உழைக்கும் மக்களின் வியர்வை முத்துகளின் தீண்டலால் உணவுச் செல்வங்களை அள்ளி வழங்குவது ஒருபுறம் நடக்கிறது. மறுபுறத்தே அமைந்த மலைகளும், காடுகளும் தம் மணி வயிற்றில் யாராலும் மதிப்பிட முடியாத கனிமச் செல்வங்களைப் புதைத்து வைத்துள்ளன. குறிப்பாக ஆந்திரம், பீகார், ஒரிசா, சதீஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளில் அள்ள அள்ளக் குறையாத கனிம வளங்கள் பன்னாட்டுக் குழுமங்களின் கழுகுக் கண்களை உறுத்திக் கொண்டேயுள்ளன.

இயற்கை வழங்கியுள்ள இந்த அரிய கொடைகளை நாட்டு மக்களுக்குப் பயன்படுத்தி நல்லரசு நடத்த வக்கற்ற காங்கிரசுக் கட்சி, அந்தப் பன்னாட்டுக் குழுமங்களின் பகற் கொள்ளைக்குக் கதவு திறக்கிறது; ஏவல் நாயாக நின்று காவல் காக்கிறது.

இந்திய அரசு என்ற பொதுத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் - ஒரிசா பழங்குடியின மக்களுக்கு முற்றிலும் உரிமையான மாபெரும் இயற்கைச் சுரங்கத்தைக் கனிம வளங்களைச் சுரண்டிச் சர்வதேசச் சந்தையில் விற்றுக் கொழுக்க நினைக்கும் அனில் அகர்வாலின் கூற்றுப்படி, டன் ஒன்றுக்கு 1000 டாலர் எனில் 240 கோடி டன் பாக்சைட்டில் கழிவு நீங்க, 200 கோடி டன்னுக்குக் கிடைக்கும் வருவாய் 2 இலட்சம் கோடி டாலர். (இந்திய நாணய மதிப்பில் சுமார் 96 இலட்சம் கோடி. அதிலும் இன்றைய சர்வதேச விலை நிலவரத்தில் 2000 கோடி எனில் 192 இலட்சம் கோடிகள்) (பசுமை வேட்டை என்கிற பயங்கரவாதம், கட்டுரை, தலித் முரசு, அக். 2010, பக்26)

வேதாந்தா என்னும் பன்னாட்டு நிறுவனம் ஒரிசாவின் ஒட்டுமொத்த வளங்களையும் சூறையாடத் துடிக்கிறது. இதற்காக அப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள், தம் சொந்த மண்ணிலிருந்து எதிரிகள் போல் விரட்டி அடிக்கப்படுகிறார்கள். இம்மக்களுக்கு அரண் போல் நின்று பாதுகாக்கும் மாவோயிஸ்டுகளை இராணுவம் துணை இராணுவப் படைகளை இறக்கி வேட்டையாடுகிறது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏவல் செய்யும் மன்மோகன்சிங் காங்கிரசு அரசு. நக்சல்களுக்கு எதிரான தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என்று முழங்கிய ப. சிதம்பரம் இன்று மூக்குடைபட்டுக் கிடக்கிறார். ‘அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண முயலுவோம்’ என்று இறங்கி வந்து பசப்புகிறார் சோனியா. டாடா போன்ற பணத்திமிங்கிலங்களுக்குப் பரிந்து, சிங்கூர் போன்ற இடங்களில் இராணுவத்தை அனுப்பிச் சொந்த நாட்டு மக்களையே சுட்டுத் தள்ளும் பாசிச காங்கிரசு அரசுக்குப் பக்கத்துணையாய் நிற்கிறது இடதுசாரி(!) மேற்கு வங்க அரசு.

இரட்டை நாக்கு கொண்ட இந்துத்துவக் காங்கிரசு

மதவெறிக்கு எதிராக மார்தட்டுகிறார் இந்திரா காந்தியின் மருமகள் சோனியா காந்தி. இந்திராவின் பேரன் இராகுல் காந்தியும் “பிற்போக்குத் தாலிபான் இயக்கத்தை விடக் கேடானவை இந்து மத வெறி பிடித்த ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள் பரிவாரங்கள்’ என்று புதிய கண்டுபிடிப்புப் போலப் பிதற்றுகிறார். நடுவண் உள்துறை அமைச்சர் சிதம்பரம் காவி பயங்கரவாதம் பற்றிப் பீதி கிளப்புகிறார். ஆனால் அடிப்படையில் காங்கிரசுக் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை.

காங்கிரசுக் கட்சியின் தொடக்க காலமே கயமைத்தனம் நிறைந்ததாகும். ‘இராம ராஜ்ஜியம் அமைப்பதே தனது வாழ்வின் இறுதி இலக்கு’ என்பதில் உறுதியாய் இருந்தார் காந்தியார். வர்ணாசிரம தருமத்துக்கு வக்காலத்து வாங்கிய புதிய மனுவாதி அவர். திலகர், படேல், இராஜேந்திரப் பிரசாத் போன்ற காங்கிரசுத் தலைவர்கள் வெளிப்படையான மதவெறியர்கள். பண்டித நேரு பார்ப்பனப பூணூலை உள் மறைத்துக் கொண்ட வஞ்சக நரி. பாபர் மசூதிச் செய்தியில் தொடக்கம் முதலே துரோகம் செய்த கட்சி காங்கிரசுக் கட்சி. இந்திராகாந்தி தன்னைப் பச்சைப் பார்ப்பனத்தியாகக் காட்டிக் கொண்டார். அன்றே செங்கல் பூசைக்கு இராசபாட்டை போட்டவர் இராஜீவ் கந்தி. பாபர் மசூதி இடிப்பைக் கண்ணாரக் கண்டு பூரித்தவர் கருவாட்டுப் பூனையாகிய நரசிம்மராவ். சோனியா காலத்திலும் இந்தத் துரோக வரலாறு தொடர்கிறது. சுப்பிரமணியசாமி என்கிற சோழவந்தான் பார்ப்பான் வழக்குத் தொடுத்தான் என்பதற்காகச் சேதுக் கால்வாய்த் திட்டத்தையே கடலுக்கு அடியில் புதைக்க நினைக்கும் கட்சி காங்கிரசுக் கட்சி. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்ற மதவெறி அமைப்புகளுக்குக் கொஞ்சமும் குறைந்த கட்சி அல்ல காங்கிரசுக் கட்சி.இதற்கு உச்சநீதி மன்றமும் துணை நிற்கிறது.

இந்தித் திணிப்பு, மாநில அரசுகளின் உரிமைப் பறிப்பு

இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழி என அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழியாகவே பாதுகாப்புத் தேடிக் கொண்ட கட்சி காங்கிரசுக் கட்சி. அரசமைப்புச் சட்டத்தின் 17-ஆவது பகுதியில் உள்ள விதிகள் 343, 344, 345, 346, 347 போன்ற பிரிவுகள் இந்திக்கு மட்டுமே மகுடம் சூட்டி மற்ற மாநில மொழிகளின் கைகளில் பிச்சைப் பாத்திரங்களைக் கொடுக்கின்றன. ஆரியப் பார்ப்பனச் சூழ்ச்சி மதியினரை அதிகம் கொண்ட காங்கிரசுக் கட்சி, சட்டப்படியாகவே சமஸ்கிருத மொழிக்கு கோடிக்கணக்கான ரூபாய்களைச் சலுகையாக வழங்குகிறது. மற்ற மாநில மொழிகளுக்குக் கோவணங் கட்டி விடுகிறது. தமிழ்நாட்டில் உயர்நீதிமன்ற மொழியாகத் தமிழ் இருக்க வேண்டும் என்று தமிழகச் சட்டமன்றமே தீர்மானம் போட்டு அனுப்பினால் திருப்பி எறிகிறது தில்லியின் பார்ப்பன பனியா அரசு. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடுவண் அமைச்சருக்கு நாடாளுமன்றத்தில் தமிழில் பேசச் சட்டத்தில் இடமில்லையென்றால் இந்திய ஒருமைப்பாடு நாசமாய்ப் போக வேண்டியது தானே?

விடுதலை பெற்ற இந்தியாவில் மாநிலங்களுக்கு இருந்த ஒவ்வொரு அதிகாரத்தையும் தட்டிப் பறித்து அவற்றைச் சவலைப் பிள்ளையாக மாற்றிய சதிகாரக் கட்சி காங்கிரசுக் கட்சி. தில்லியை ஆண்ட எல்லாத் திருடர்களும் மாநில அரசுகளின் உரிமைகளைக் காலில் போட்டு மிதித்தார்கள். நெருக்கடி நிலையை அறிவித்த நேருவின் மகள் இந்திரா எல்லாவற்றையும் சேர்த்துச் சிலுவையில் அறைந்து விட்டார். பின்னர் ஆட்சிக்கு வந்த இராஜிவ் காந்தி மாநில அரசுகளின் உள்ளாட்சி அமைப்புகளில் கூட மூக்கை நுழைத்து மோப்பம் பிடித்தார்.

எல்லைச் சிக்கல், ஆற்று நீர்ச்சிக்கல் போன்ற யாவற்றிலும் தொடர்புடைய இரு மாநில அரசுகளையும் மோதவிட்டு எட்ட நின்று வேடிக்கை பார்க்கும் எசமான அரசாகக் காங்கிரசுக் கட்சி இருக்கிறது. பல்வேறு பெயர்களில் மாநில மக்களின் வளங்களை வரியாகக் கொள்ளையடிக்கும் காங்கிரசின் பிடியில் உள்ள தில்லி அரசு, ஆண்டையின் மனநிலையில் மாநில அரசுகளை அடிமைபோல் நடத்துகிறது.

வெள்ளை மாளிகையைப் பெருக்கும் விளக்குமாறு

அமெரிக்க அதிபர் ஒபாமா அரசு முறைப் பயணமாகக் கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியா வந்து நாட்டையே ஒரு கலக்குக் கலக்கி விட்டுப் போனார். மும்பை வந்த ஒபாமாவை வரவேற்க அந்த மாநிலத்தின் முதலமைச்சரே பல மணிநேரம் மூத்திரத்தை அடக்கிக் கொண்டு காத்துக் கிடந்தார். அமெரிக்காவிலிருந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் நாய்க்கு அடையாள அட்டை கட்டுவதுபோல், ஒவ்வொரு அமைச்சரின் கீழ் உள்ளாடையையும் கழற்றிப் பார்த்துத்தான் உள்ளே அனுப்பினார்கள். இப்படிப் பட்ட அவமானங்களையெல்லாம் தாங்கிய அழுக்குக் கையோடு 46 ஆயிரம் கோடி மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்குமிடையே கையெழுத்தாயின. இதனால் 50 ஆயிரம் பேருக்கு மேல் அமெரிக்காவில் வேலை கிடைக்கும் என்று ஒபாமா பெருமை பொங்கக் குறிப்பிட்டார்.

சுதந்திர இந்தியாவின் வர்த்தகச் சுரண்டலுக்கு டாடா, பிர்லா போன்ற தரகு முதலாளிக்கு உரிமம் வழங்கி வந்தார் சோசலிசப் பிதாமகர் நேரு. அவர் வழி வந்த காங்கிரசு அரசு, ஒட்டுமொத்த இந்திய இறையாண்மையையும் ஒபாமா காலில் அடகு வைக்கத் துடிக்கிறது.

ஈழத் தமிழர்க்குக் காங்கிரசு இழைத்த இரண்டகம்

சின்னஞ்சிறிய இலங்கைத் தீவின் கடற்பரப்பு முழுவதிலும் இன்றும் ஈழத்தமிழர் பிணங்கள் செத்து மிதக்கின்றன. இலங்கைத் தமிழர் உரிமை வாழ்வைக் கிள்ளுக் கீரையாகவே நினைத்து விட்டார்கள் இந்தியத் தலைவர்கள். நேரு, சாஸ்திரி, இந்திரா காந்தி, இராஜீவ் காந்தி என எல்லோருமே ஈழத் தமிழர்க்குப் புதைகுழி வெட்டும் பணியைப் புனிதத் தொழிலாக மேற்கொண்டார்கள். இதில் இத்தாலியப் பெண்ணாகிய சோனியா எல்லோரையும் விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டார். ஈழத் தமிழர்களின் அழுகுரல் தாய் மனம் கொண்ட சோனியாவுக்குத் தாலாட்டுப் பாடலாகவே கேட்கிறது. இரத்தவெறி பிடித்த இராச பக்சேவுக்குக் கூட ஒரு காலத்தில் மனம் இரங்கலாம். ஆனால் பழிவாங்கும் வெறி பிடித்த சோனியா அம்மைக்கு ஈழத்தமிழினமே பூண்டற்றுப் போகும் நாள்தான் இன்ப நாள் போலும்!

சிறுபான்மை மக்களின் காவலன் என்னும் போலிச் சித்திரம்

சிறுபான்மை மக்களைக் காக்க வந்த கருணை இரட்சகன் என்கிற போலிச் சித்திரம் மிக நீண்ட காலமாகக் காங்கிரசுக் கட்சிக்குக் கை கொடுத்து வந்தது. ஆனால் குஜராத் மாநிலத்தின் கொடிய இந்துப் பயங்கரவாதி நரேந்திர மோடியின் தொடர் வெற்றிகளும், உ.பி., மத்தியபிரதேசம் போன்ற வட மாநிலங்களில் தன்னை அடிக்கடி நிறம் மாற்றிக் கொள்ளும் காங்கிரசின் பச்சோந்தித் தனமும் இன்று நாட்டு மக்களிடையே அம்பலப்பட்டு நிற்கிறது. குருதியை உறைய வைக்கும் கயர்லாஞ்சிப் படுகொலைகள் தலித் மக்களின் வாழ்வுரிமையைக் கேள்விக் குறியாக்கியுள்ளன. பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத் தொடக்க காலம் முதலே பெருங்கேடு செய்து வரும் கட்சி காங்கிரசுக் கட்சி. இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு உரிமையைச் சாகும் வரைக்கும் தராமல் பார்த்துக் கொண்டவர் நேரு. அவர் வழியிலேயே இந்திரா காந்தியும் இராஜீவ் காந்தியும் செயல்பட்டனர். ஆந்திரப் பார்ப்பனர் நரசிம்மராவ் பிற்படுத்தப்பட்டோரிடையே பொருளாதார அளவுகோலைப் புகுத்தினார். வளர்ந்த பிரிவினர் (கிரிமிலேயர்) என்கிற வம்படியான நீதிமன்றக் கண்டுபிடிப்புக்கு வழி அமைத்துக் கொடுத்தார். பிற்படுத்தப்பட்டோருக்கான உயர்கல்வி உரிமையைத் தான்தோன்றித் தனமான அணுகுமுறையால் சிதைத்துக் கெடுத்தது காங்கிரசுக் கட்சி.

ஆக, நாட்டில் நிலவும் அத்தனைக் கேடுபாடுகளுக்கும் இத்தனைக் காலமும் நாடாண்ட காங்கிரசுக் கட்சிதான் பெரிய காரணமாகும். உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டி உலகப் பன்னாட்டு நிறுவனங்களின் ஒட்டுமொத்த வேட்டைக்கும் காவல் நாயாகச் செயல்படுகிறது காங்கிரசுக் கட்சி. தேசிய இனங்களின் உரிமைகளை மறுத்து, சிறுபான்மை மற்றும் தலித் மக்களின் வாழ்வுரிமையைச் சிதைத்து அடிப்படைக் குடிநாயக நலன்களுக்கே அறைகூவலாக விளங்கும் கொடிய பாசிச குணங்கொண்ட காங்கிரசை அடித்துத் தகர்க்க வேண்டியது உழைக்கும் மக்களின் முன் உள்ள மிகப்பெரும் கடமையாகும்.

காங்கிரசுக் கட்சியின் காலைப் பிடித்துக் கொண்டு மாறி மாறிக் கரையேறத் துடிக்கும் இரு திராவிடக் கட்சிகளின் மானங்கெட்டத்தனத்தைக் காறி உமிழ வேண்டும். உண்மையான மக்கள் விடுதலைக்கான முதல் பணி என்பது காங்கிரசுக் கட்சியையும், மற்ற ஒட்டுக் கட்சிகளையும் உருத்தெரியாமல் சிதைத்து ஒழிப்பதே ஆகும்.  

Pin It