சடோஷிநகமோட்டோ என்ற பெயருடைய ஒரு மனிதரை இந்த உலகம் கடந்த 2011 முதல் தேடி வருகிறது. இணையமெங்கும் தேடி அலைந்து ஆராய்ச்சிகள் செய்து இணையத்தில் அவரைப் போலவே எழுதுகிறார் இவராக இருக்குமோ இல்லை அவராக இருக்குமோ என்று ஊகிக்கிறார்கள். அப்படி சொல்லப்பட்டவர்களும் அது நான் இல்லை என்று மறுக்கிறார்கள். இவர் யாரென்று நமக்குத் தெரிந்தால் அந்த சிறிய விவரத்திற்கே கோடிக்கணக்கில் பணம் கிடைக்கலாம். அல்லது அது நீங்களாக இருந்தால் உலகின் பெரிய மென்பொருள் நிறுவனங்கள் உங்களை வேலைக்கு எடுத்துக்கொள்ள உங்கள் வீட்டு வாசலில் வரிசை கட்டி நிற்கும் நிலை வரும். அப்படி யார் இந்த சடோஷிநகமோட்டோ? பிட்காயின் என்று அழைக்கப்படும் விர்ச்சுவல்கரன்சியை உருவாக்கியவர்தான் அவர். கிரிப்டோகிராபி துறையைச் சேர்ந்தவர் (ரோஜா அரவிந்தசாமி சொல்வாரே அதேதான்) என்பதைத் தவிர வேறு எதுவும் அவரைப் பற்றித் தெரியாது. இன்று ஒரு பிட்காயினின் மதிப்பு இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட ரூ.80,000.

bitcoin

அதை உருவாக்கியவர் தன்னை யாரென்றே வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் அதன் ப்ரோகிராமிங் மற்றும் தொழில்நுட்பத்தை ஓபன்சோர்ஸ் எனப்படும் திறந்த நிலை மென்பொருளாக உலகத்திற்கு அளித்துச் சென்று விட்டதால் பிட்காயின் எந்தத் தடையுமின்றி வளர்ந்து வருகிறது. அதுதான் பிட்காயினின் சிறப்பும் கூட. அது ஒரு உண்மையான இணையப் பணம். எப்படி இணையம் என்று ஒன்றை யாரும் எந்த நாடும் சொந்தம் கொண்டாட முடியாத வகையில் அது பல கம்ப்யூட்டர்கள், சர்வர்களால் ஆன வலைப்பின்னலால் உருவானதோ அதே போல பிட்காயினும் எந்த நாட்டின் ரிசர்வ் வங்கிக்கும் சொந்தமானதல்ல. உண்மையைச் சொல்லப் போனால் பிட்காயின் மூலம் பொருட்களை வாங்கவோ விற்கவோ எந்த வங்கியின் தயவும் தேவையில்லை. பிட்காயினை எந்த நாட்டின் அரசும் தடை செய்யவோ கட்டுப்படுத்தவோ முடியாது. உண்மையில் பிட்காயினின் நோக்கமே அதுதான். யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு கரன்சி.

டோரண்ட்டுகளை பலரும் பயன்படுத்தியிருப்பீர்கள். அவற்றுக்கென்று பொதுவான சர்வர்கள் கிடையாது. ஒரு கணினியில் இருந்து இன்னொரு கணினிக்கு நேராக கோப்புகள் அனுப்பப்படும். இது போன்ற ஒரு அடிப்படையில் தான் பிட்காயின் இயங்குகிறது. ஆனால் டோரண்ட்டுகளைப் போல் அவ்வளவு எளிமையானது அல்ல. எந்த ஒரு பணப்பரிமாற்றமும் லெட்ஜர்களில் (பேரேடுகள்) பராமரிக்கப்படுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்த லெட்ஜர்களை வங்கிகளோ அலுவலகங்களோ வைத்திருக்கும். பிட்காயினைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக ஒரே லெட்ஜர்தான். உலகம் முழுக்க இதுவரை நடந்த அத்தனை பிட்காயின் பரிமாற்றங்களும் அந்த லெட்ஜரில் தான் பதியப்பட்டிருக்கும்.  இனிமேல் நடக்கப்போகும் பரிமாற்றங்களும். இதை பிளாக்செயின் என்று அழைக்கிறார்கள். இந்த லெட்ஜர் பிட்காயின் வலைப்பின்னலில் இணைந்திருக்கும் அத்தனை கணினிகளிலும் ஒரேநேரத்தில் சேமிக்கப்பட்டுள்ளது.

ஒரு புதிய பரிமாற்றம் நிகழும்போது அந்தப் பரிமாற்றத்தின் விவரங்களை விற்பவரோ வாங்குபவரோ உள்ளிடுகிறார். அந்தப் பரிமாற்றத்தின் விவரங்கள் பிட்காயின் நெட்வொர்க்கை அடைந்ததும் தான் சுவாரசியம் தொடங்குகிறது. பிட்காயின் மைனர்ஸ் என்று அழைக்கப்படும் நிறுவனங்களோ அல்லது தனிப்பட்ட மனிதர்களோ அந்தப் பரிமாற்றத்தை சரிபார்த்து பிளாக்செயினில் இணைக்கும் ஒரு சிக்கலான வேலையைச் செய்கிறார்கள். கையில் மல்லிகைப் பூ சுற்றிய மைனர் அல்ல. சுரங்கம் தோண்டும் மைனர் (miner). இந்த வேலையை யார் செய்வார்கள் என்று சொல்ல முடியாது. லட்சக்கணக்கான கணினிகளில் எங்கு வேண்டுமானாலும் இது நடக்கலாம். அப்படி நடந்தால் அந்த சுரங்க உரிமையாளர் கொஞ்சம் பிட்காயினை சம்பாதிப்பார். உலகெங்கும் இந்த வேலையை பல லட்சம் பேர் செய்து வருகிறார்கள். பரிமாற்றம் பிளாக் செயினில் இணைந்தபின் இன்னொரு மைனர் சரிபார்ப்பார். அதன் பிறகே லெட்ஜர் உலகெங்கும் உள்ள பிட்காயின் கணினிகளில் மாற்றம் பெறும். அதற்கு அடுத்த பரிவர்த்தனை புதிய லெட்ஜரின் வால் பகுதியில் இணைக்கப்படும். இப்படியாக அந்த லெட்ஜர் ஒரு பெரிய சங்கிலித் தொடராகவே எப்போதும் இருக்கும்.

உருவாக்கியவர் யாரென்று தெரியாது. எந்தப் பொதுவான சர்வரிலும் அதன் பதிவுகள் வைக்கப்படவில்லை. எந்த அரசு கஜானாவும் வங்கியும் இதற்கு உத்தரவாதம் தருவதில்லை. இப்படி வெளிப்பார்வைக்கு பாதுகாப்பே இல்லாதது போல் தோன்றும் பிட்காயின்கள் உண்மையில் மிக மிகப் பாதுகாப்பானவை என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுனர்கள். முதலில் இதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. கட்டுப்படுத்தவும்முடியாது. ஒரு இடத்தில் கணினியை ஹேக் செய்து லெட்ஜரில் மாறுதல் செய்தாலும் மீதமுள்ள கணினிகள் அதை ஒத்துக் கொள்ளாது. தாக்கப்பட்டகணினி பிட்காயின் நெட்வொர்க்கிலிருந்து விடுவிக்கப்படும். இதுதவிர இடையில் வங்கிகள் எதுவும் இல்லாத காரணத்தால் பிட்காயின்கள் மூலம் பரிவர்த்தனை செய்யும்போது சேவைக்காக எந்தப்பணமும் பிடித்தம் செய்யப்படுவதில்லை அல்லது மிகமிகக் குறைந்த பணமே பிடித்தம் செய்யப்படுகிறது. அதுவும் பிட்காயின்களில்தான். நல்ல சக்தி வாய்ந்த கணினி வாங்கும் அளவு பணமும் ஓரளவு தொழில்நுட்ப அறிவும் இருந்தால் நீங்களேகூட ஒரு பிட்காயின் மைனராக ஆகலாம்.

தங்கள் விருப்பத்துக்கு ஆளாளுக்கு பிட்காயின்களை உருவாக்கிக் கொள்வார்களோ என்ற கவலை வேண்டாம். 21 மில்லியன் என்ற எண்ணிக்கையைத் தாண்டி பிட்காயின்களை யாராலும் உருவாக்க முடியாது. அதுவும் 2140 ம் ஆண்டில்தான் அந்த அளவைத் தொட முடியும். அதைத் தாண்டி பிட்காயின்கள் உருவாக அதன் மென்பொருள் அனுமதிக்காது. ஒவ்வொரு பிட்காயினும் எங்கே இருந்து எங்கே செல்கிறது. யாரிடம் இருக்கிறது என்ற விவரம் எப்போதும் அனைவரும் பார்க்கும் வகையில் பொது லெட்ஜரில் குறித்து வைக்கப்பட்டிருக்கும் என்பதால் பிட்காயின் கறுப்புப் பணத்தை ஒழிப்பதில் பெரிய பங்கு வகிக்கும் என்று கூறுகிறார்கள். அது தவிர பிட்காயின் ஒரு முழுமையான டிஜிட்டல் கரன்சி என்பதால் மேலும் சில நல்ல பயன்கள் உண்டு. உதாரணத்துக்கு அரசாங்கம் ஒரு மருத்துவத் திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதாக வைத்துக் கொள்வோம். அந்தப் பணத்தை மருத்துவமனைகளில் மட்டுமே பயன்படுத்தும்படி வடிவமைத்தால் முறைகேடுகளைத் தடுக்கலாம் அல்லவா? பிட்காயின்களை அப்படி முறைப்படுத்த முடியும். ஒரு ஐந்து நட்சத்திர விடுதியின் அறை வாடகை கட்ட அந்த பிட்காயின்களைப் பயன்படுத்த முடியாது.

ஆரம்பத்தில் ஏதோ சில கணிப்பொறியாளர்களின் விளையாட்டு போல ஆரம்பித்த இந்த பிட்காயின் கடந்த ஏழு ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தில் அசைக்க முடியாத ஒரு கரன்சியாக இடம் பிடித்து விட்டது. பிட்காயின் போலவே லைட்காயின், ரிப்பிள், ஓபன்காயின் என்று பல விர்ச்சுவல் கரன்சிகள் உருவாகிவிட்டன. இது ஏதோ வெளிநாட்டில் நடக்கும் விவகாரம் என்று நீங்கள் நினைக்க வேண்டியதில்லை. செப்பே (Zebpay) எனப்பஇந்திய பிட்காயின் வாலட் நிறுவனம் ஆரம்பித்த முதல் பத்து மாதங்களில் 100 கோடி டும் வியாபாரத்தை நடத்தியுள்ளது. இது சென்ற ஆண்டு நிலவரம். பணநீக்க நடவடிக்கைக்கு அப்புறம் என்ன நடக்கிறது என்று புள்ளிவிவரம் இல்லை. இந்தியாவின் ரிசர்வ் வங்கி பிட்காயின் உட்பட எந்த விர்ச்சுவல் கரன்சியையும் அங்கீகரிக்கப் போவதில்லை என்று சொல்லியிருந்தாலும் இதுவரை 33 நாடுகள் பிட்காயினை வெவ்வேறு அளவுகளில் அங்கீகரித்துள்ளன. இது மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள் பிட்காயினைப் பயன்படுத்துபவர்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.

Pin It