ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொன்மை வாய்ந்த, இலக்கிய இலக்கண மரபுகளை தாங்கி நிற்கும், எந்த மொழியின் கலப்பில்லாமலும் தனித்து நின்று இயங்குகின்ற, கிளை மொழிகளை உருவாக்கிய, இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டுகளில் 55,000க்கும் அதிகமான தமிழ் தொல்லெழுத்துப் பதிவுகளைப் பெற்று மங்காத புகழோடு சிறந்து விளங்கும் செம்மொழியாம் தமிழுக்கு, கொங்கு மண்டலத்தில் ஜூன் 23 முதல் 27 வரை நடைபெறவிருக்கும் மாநாட்டை வரவேற்போம், பாராட்டுவோம்!

       இதுவரை நடைபெற்ற எட்டு உலகத்தமிழ் மாநாடுகளின் (1966 மலேசியா, 1968 சென்னை, 1970 பாரீஸ், 1974 இலங்கை, 1981 மதுரை, 1987 மலேசியா, 1989 மொரீசியஸ், 1995 தஞ்சை) வரிசையில் இந்த மாநாடு நடைபெறவில்லை. உலகத்தமிழ் மாநாடுகளை நடத்துவதற்கு உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகம் என்ற அமைப்பு உள்ளது. அந்தக் கழகம் 2011ல் தமிழகத்தில் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தலாம் என்ற உத்தேசத்தை அளித்தது.

       ஆனால், 2011ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க தமிழக முதல்வருக்கு தமிழ்ச்செம்மொழி மாநாடு தேவைப்படுகிறது. அதனால் உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகத்துடனான உறவை முறித்துக்கொண்டு, முதல் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை 2010லேயே நடத்தத் திட்டமிட்டுவிட்டார். சர்வதேச தமிழ் அமைப்பின் உறவு முறிந்த நிலையில், அடுத்தடுத்த மாநாடுகள் மற்ற நாடுகளில் எப்படி நடத்தப்படும் என்பது புரியவில்லை.

       1974, 1987, 1989ம் ஆண்டுகளில் நடைபெற்ற மாநாடுகளில் முன்வைக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் இதுவரை நூல்களாகத் தொகுத்து வெளியிடப்படவில்லை.

       தமிழின் தொன்மையும் தமிழரின் பண்பாடும் பாமரனுக்கும் எளியோனுக்கும் சென்றுசேரும் வகையில் சங்க இலக்கியங்கள், காப்பிங்கள், சிற்றிலக்கியங்கள், தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினென்கீழ் கணக்கு நூல்கள், நவீன இலக்கியங்கள், தலித் இலக்கியங்கள், பெண் இலக்கியங்கள், திராவிட இலக்கியங்கள், இடதுசாரி இலக்கியங்கள் போன்றவையாவும் மெத்தப்படித்தவர்களின் கைச்சரக்குகளாகவே இருப்பதை மாற்றி, சாதாரணத் தமிழ் படிக்கத் தெரிந்தால் போதுமென்ற அளவுக்கு எளிய வகையில் சந்திபிரித்து, அருஞ்சொற்பொருளுடன், உரிய விளக்கத்துடன் மிகக்குறைந்த விலையில் அச்சிடப்பட்டு, மக்களிடம் அரசு கொண்டுச் சேர்க்கவேண்டும். இதுவே ஆட்சியிலிருப்போர் தமிழுக்குச் செய்யவேண்டிய இன்றியமையாத கடமையாகும்.

       முத்தமிழான இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத்தமிழை வளர்க்க, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கூடுதல் முக்கியத்துவமளித்து அதற்குரிய ஆசிரியர்களையும் பேராசிரியர்களையும் நியமிக்கவேண்டும். நாட்டுப்புறத்தமிழ், தெருக்கூத்து, வீதிநாடகம் போன்ற பாரம்பரிய பண்பாட்டு மரபுகளை பேணிக் காக்கவும் அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். தமிழில் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பை அனைத்துத் துறைகளிலும் அதிக அளவில் உருவாக்க வேண்டும்.

       மேலும், மருத்துவம் பொறியியல் படிப்புகளில் தமிழ், தொலைக்காட்சிகளில் தமிழில் பாடப்படும் பாட்டிற்கு ஆங்கிலத்தில் தீர்ப்பளிக்கும் ஊடக பண்பாட்டுத்துறையில் தமிழ், வழிபாட்டுமுறையில் தமிழ், அறிவியலில் தமிழ், மதிக்கத்தக்க மொழியாக நாடாளுமன்றத்தில் தமிழ், தமிழக உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் வழக்காடும் வழக்குரைஞர் யாருக்காக வாதாடுகிறார் என்பதே தெரியாமல் இருக்கும் முறையை மாற்ற வழக்கு மொழியாகத் தமிழ், ஊடகத்தில் தமிழ், தத்துவத்தில் தமிழ் இறுதியாக ஆட்சி மொழியாகத் தமிழ் என செல்லவேண்டிய தூரம் அதிகம். அதற்காக இந்தச் செம்மொழி மாநாடு என்ன செய்யப்போகிறது?

       தமிழின் பெருமையையும் தமிழிலக்கிய செல்வங்களின் சிறப்பையும் உலகறியச் செய்ய எடுக்கப்போகும் முயற்சிகள் என்ன? உயர்தனிச் செம்மொழித்தமிழை அயல்நாட்டவரும் கற்றுக் கொள்ள எவ்விதத்தில் உதவப்படும்? தமிழ்மொழி வளர்ச்சிக்காக ஒதுக்கப்போகும் நிதி எவ்வளவு? என்பதுபோன்ற கேள்விகளுக்கு உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு சொல்லப்போகும் பதில் என்ன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

       ஒரு மொழியின் வளர்ச்சியைத் தீர்மானிப்பது எது என்பதை கம்யூனிஸ்ட் தலைவரான பி.ராமமூர்த்தி விளக்குகிறார்...

“ஒரு மொழியின் வளர்ச்சியையும் செழுமையையும் கணிக்க வேண்டுமானால், அம்மொழியிலுள்ள பண்டைய நூல்களின் செழுமையைக் கொண்டு மட்டும் நிர்ணயித்துவிடமுடியாது. அந்தக் காலத்திலிருந்த சமூகத்தில் தோன்றிய கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு அது போதியதாக இருக்கும். ஆனால், சமூகத்தில் வளர்ச்சி ஏற்பட்டு வரும்போது, அந்தச் சமூகத்திலுள்ள பல்வேறு கருத்துக்களை, அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம், கணிதம், சமூகவியல், சட்டம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்வதற்கு அம்மொழி எந்த அளவிற்குப் பயன்படுகிறது என்பதைக் கொண்டே அம்மொழியின் வளர்ச்சியை நிர்ணயிக்கமுடியும்...”

       சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என பெயரிடவேண்டுமென 64 நாட்கள் உண்ணாவிரதமிருந்து, தான் இறந்தபிறகு தனது சடலத்தை கம்யூனிஸ்டுகளிடம் ஒப்படைக்கவேண்டுமெனச் சொல்லி மறைந்த காங்கிரசைச் சார்ந்த தியாகி சங்கரலிங்கனார் தமிழுக்கான தீவிர போராட்டத்தின் முன்னோடி என்றே சொல்லலாம். சட்டமன்றத்தில் முதன்முதலில் தமிழில்தான் பேசுவோமென போராடிப் பேசியவர்கள் மறைந்த தலைவர்கள் பி.ராமமூர்த்தி, ஜீவானந்தம், ஏ.நல்லசிவம். நாடாளுமன்றத்தில் செம்மொழிக்காக குரலுயர்த்திய, ரெயில்வே பணிக்கான தேர்வைத் தமிழிலும் எழுத அனுமதிக்கவேண்டுமென கோரிக்கைவைத்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொ.மோகன் இன்றும் நம்மோடு இருக்கும் என்.சங்கரய்யா போன்ற தலைவர்கள் தமிழ்மொழி வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள். அவர்களை நடைபெறும் இந்தச் செம்மொழி மாநாட்டில் நினைவு கூர்ந்து, தமிழ்மொழி வளர்ச்சிக்கான வரலாற்றிலும் பதிவுசெய்து கவுரவிக்கவேண்டும்.

       பொதுவாக, உலகத்தமிழ் மாநாடுகளை தமிழகத்தில் ஆட்சியிலிருப்போர் தங்களின் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் தமிழர்களின் மெல்லிய மொழி உணர்வை, மொழி வெறியாக்கி தேர்தலில் ஓட்டுக்காகவும் அவ்வப்போது பயன்படுத்தி வருகின்றனர்.

       தமிழகத்தில் ஆங்கிலவழிக் கல்விநிறுவனங்களும், தனியார் கல்விநிறுவனங்களும், தடுக்கி விழுந்தால் ஆங்கிலப்பள்ளி என்ற நிலையும் உருவாகியிருப்பது, தமிழ் தமிழென மேடைக்கு மேடைக் கூப்பாடுபோட்டு, ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிபுரிந்த திராவிடக் கட்சிகளின் வருகைக்குப் பின்னர்தான் என்ற உண்மை வரலாற்றை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

       பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து பட்டப்படிப்பிற்கு, எந்தத்துறையும் கிடைக்காத பட்சத்தில் இறுதியாக தமிழ்த்துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவலநிலை யாரால் வந்தது? தமிழில் படித்தால் வேலைவாய்ப்பு குறைவு, தமிழில் படித்தால் அவமானம், தமிழில் படித்தால் பணம் சம்பாதிக்கமுடியாது என்ற நிலை உருவாவதற்கு காரணம் எது? நுகர்வு கலாசாரமும், உலகமயம், தனியார்மயம் மற்றும் தாராளமயத்தை அமலாக்கி மத்தியில் ஆட்சியிலிருந்துவரும் கட்சிகளும் திராவிடக்கட்சிகளும்தான் முக்கியக் காரணம்.

       திரைத்துறையினரும் துதிபாடும் அரசு அமைப்புகளும் இன்னபிற அமைப்புகளும் பாராட்டுவிழா நடத்தி முடித்துள்ள நிலையில் கலைஞரின் புகழ்பாட மற்றுமொரு பிரம்மாண்டமான திருவிழா தேவைப்படுகிறது. அதனால்தான் இந்த மாநாடு நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

       இந்த மாநாட்டில் புகழுரைகளும், ஆய்வுக்கட்டுரைகளும், கவிதைகளும், தமிழ்த் தொகுப்புகளும் தமிழுக்கு இருக்கிறதோ இல்லையோ ஆனால், கலைஞருக்கு நிச்சயமாக இருக்கும். அதற்காக மானமிகு வீரமணி, தொல்திருமா முதல் திரையுலகினர் வரை கலைஞரின் புகழ்பாட வெறிக்கொண்டு காத்திருக்கும் மாநாடாகவே இதுத் தெரிகிறது. அதிலும் (மானமிகு) வீரமணிக்கு கொஞ்சம்கூட சலிப்புத் தட்டாமல் எப்படித்தான் புகழ முடிகிறதோ தெரியவில்லை.

       இத்தகையச் சூழலில், கோவையில் நடைபெறும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கலைஞரின் புகழை மட்டுமே பாடும் மாநாடாக அல்லாமல், உண்மையில் தமிழ்மொழி குறித்தும், அதன் வளர்ச்சி குறித்தும், தமிழுக்காற்றவேண்டிய பணிகளை வடிவமைத்து அதன் வழியில் செயல்படவேண்டிய விதங்கள் குறித்தும் விவாதிக்குமென நம்புவோம்!

- இரா.சரவணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It