நட்டிருந்தார்கள் நீர்க்கசியும்

நன்செய் வயலில் உடைத்த கற்களை

ஏரி பார்த்த பார்வையாக

 

நீண்ட அவ்வயல் சகதியில் நிதான எருமை

இன்னமும் செல்கிறது

 

அதன் முதுகில் இரட்டைவால் குருவிஜோடி

மாறிமாறி அமர்ந்து பாடுகிறது

 

புல்முட்டும் மண்டிய வெளியில்

நட்டிருந்த கற்கள் பள்ளிப்பிள்ளைகளின்

ஒழுங்கோடு சமாதியின் சலனத்தோடு

இழப்பின் காதலோடு நின்றிருக்க

அநாதியில் புதைந்துள்ளது கல்வேர்

 

வீடு பார்த்த ஞாயிறுக்கும் குடியேறிய

திங்களுக்குமிடையே

பல சூரியன்கள் பல நிலாக்கள் பல வீடுகள்

ஒரே தலைமுறை

 

இதோ புதிதாக ரைஸ்பியரோடு சம்பா "டான்ஸ்

கிளப்'பும் துவங்கிய நிலையில்

நட்ட அடையாளக் கற்கள் சாலையில் சரளையாக

பாவப்பட்டிருந்தன

ஒரு கல்லினை வீட்டிற்குக் கொண்டு செல்ல

மெல்ல அது ஒரு

போன்சாய் குன்றாக அழைக்கப்படுகிறது

 

ஏரியிலிருந்து திரும்பும் நிதான எருமை

முதுகில் இரட்டைவால் குருவிஜோடி

மாற்றி மாற்றி அமர்ந்து பார்க்கிறது

தனது ஒரு சொல் பாடலையும்

முனகாமல். 

 

ஓ லூ லூ

 

ஒலிநாடாவைக் கேட்டும் பாடாத

ஈர்ப்புமிக்க

ஓலூலூ தாலாட்டுத் துண்டினை

முனகிக் கொள்கிறேன்

 

எதிரெதிர் மலையிலிருந்தும் எதிரொலியிலிருந்தும்

கிளம்பும் டைனமட்டின் ராகம்

 

பித்தேன்பது திசைகளிலும்

அதன் உபரி மதிப்பில்

காற்று வீங்கி வருகிறது

பித்தென்பது சுவாசத்திலும்

 

ரெயில்போல்தான் ஜெலட்டின் தின்றால்

பாறைகளுக்கும்

குன்றுகள் உடையும்போது

சற்று நகர்ந்தாலும்

காட்சிகள் பிசிறு தட்டக்கூடும்

கையிலிருக்கும் ஐஸ்கிரீம் உருகக்கூடும்

 

ஆனாலும் சுமந்துசெல்லும் லாரிகள்

மலைப்பாதையில் உருமும்போது

அதில்

இலேசான பெடல் ஹார்மோனியத்தின்

சங்கதிகள் கலந்துள்ளன

 

ஏதுமறியாமல் லாரிமேல் செல்லும்

குவாரிப்பெண் அழுக்கணி கொங்கைகள்

ஆட ஆட சிரிக்கிறாள்.

அது மேல் ஆக்டேவ்வா கீழ் ஆக்டேவ்வா

பழைய மரக்கட்டையின் புதிய துளிர்ப்பில்

மந்த நினைவுகள்

 

ஓலூலூ யா தே தே 

 

காட்டு வீடு

 

மியூசியத்தில் திருடிய

கென்னத் ஆண்டர்கனின் இரட்டைக்குழல் துப்பாக்கியை

வீட்டில் வைக்க முடியாது

யாதார்த்தம்

எனது தோட்டத்தில் இருக்கிறது

 

கொழுப்பு தடவிய தோட்டாவின் வாசனையை

அறிந்துவிட்ட சிவனிப்பள்ளி கருஞ்சிறுத்தையும்

தோட்டத்தில்

 

போக்கில் அது தன் மரங்களைக் கீற

எல்லைகூட வகுத்துவிட

அறிதலின் தாமதத்தில் நான்

துப்பாக்கியின் புனைவென்றே கருதிவிட

 

பயத்தில் கூலியாட்கள் வருவது குறைந்து

நாளாவட்டத்தில் நின்றேவிட்டனர்.

சாகுபடியாகாத விளைச்சலும் வீணில்

நானும் தனித்து

தேடும் கருஞ்சிறுத்தை

 

மரத்திரளில் கிளையிடுக்கில் இலையசைவில்

திடுக்கிடுவதும் அலைவதும்

 

அதன் கால் தடங்களும் தட்டுப்படாமல்

சலித்த ஒருநாளில் உருமல்

கேட்கத் துவங்கியது

 

சப்தத்தைப் பிடித்தவாறு சென்று

கருஞ்சிறுத்தையை கென்னத்தின்

துப்பாக்கி முனையில் நிறுத்த

ஆக்ரோஷத்தோடு

முதற்குட்டியை வெளித்தள்ளி அடுத்ததை

ஈன்றபடி வெறித்தது. 

 

லாலணி 

பிறை மூன்று ஆவணியில்

ஆழ் இருளுக்கும் பாழ் வெய்யிலுக்கும்

கண்ணும் அதிக்கண்ணும் மாறுகண்ணும்

பழக்கி நடப்பது அரிது

 

வெள்ளி அல்லது வீனஸ் அல்லது

காதல் தேவதை கைத்தவறி பற்றியிழுத்துச்

செல்லும் பரலோகம்

வெறிச்சோடிக் கிடக்கிறது

 

மலைப்பள்ளத்தாக்கின் ஈரச்சுனையில்

ஓதம் காக்கும் பட்டாம்பூச்சிகள்

மகரந்தம் சிந்த அமர்ந்து முகர்ந்து செல்கிறது

மதியூகமில்லாம் வீனஸ் விட்டுச்சென்ற

இடத்தில் காதல் நோய்த்தொற்று

பயம் பிடிக்கிறது பயம் விடுகிறது

இலைகளைவிட மிகுதியாக உதிர்ந்துகிடக்கும்

அத்திப்பழத்திலொன்றை இடதுகையால்

எடுத்துண்ணும்போது

 

யாரவன் யாரவள் தனக்குத்தானே

 

உதட்டை உறிஞ்சி உடலின் தோற்பைகளை

நிரப்புவது

தன்னிருப்பை விட்டு

சிட்டிகை நேரத்தில் கடுவன் வெளியேறுகிறது

காட்டின் விளிம்புக்கு

வற்றாத சுனையில்

 

ஒரு கையள்ளினால்

ஸ்படிகம்

வெள்ளி அல்லது வீனஸ் அல்லது காதல்தேவதை 

 

கூட்ட நட்சத்திரங்கள்

 

முதலில் ஒரு நட்சத்திரத்தை மாத்திரமே

பார்த்திருந்தேன்

எதிர்பார்க்கவில்லை

இப்படி நள்ளிரவில் நிலக்கடலைச் செடிகளின்

மீது வீழ்ந்து கிடக்குமென்று

சிறிதும் பெரிதுமாக

 

வானை வெறிக்கிறோம்

காயும் நானும் மலங்க மலங்க

 

நிற்கதியான இரவறியா, ஒப்பில்லா

ஒன்று ஆமை மாதிரி மெதுவாக ஊர்ந்து

அதட்டியும் கேட்காமல்

அதனைக் கவ்வி வந்தது நாய்

 

அந்நட்சத்திரத்தைத் தொட்டுத்தூக்கி

அதன் கால்கள் எம்முனையில்

உள்ளதென்றும்

எதுவித அசைவில் வீழ்ந்தது, நடந்தது

என்றும் தெரியவில்லை ஒளிக்கசிவில்

பற்றியிருந்த விரல்கள் மின்னத்

துவங்கியதும்

நாய் என்னைப் பார்த்து விடாமல்

குரைக்கிறது

வாலை

வீச்சு கத்தியாக சுழற்றி.

- பழனிவேள்

Pin It