சங்கர ராம சுப்ரமணியனின் நான்காவது கவிதைத் தொகுப்பு இது. பேச வேண்டும் என்ற தலைப்பில் அவர் நீண்ட கவிதையின் வாழ்வை, அதன் சூழலைப் பற்றி உரைக்கிறார். சலிப்பு, மௌனம், உணர்தல் என்ற விளிம்பில் இருந்து கவிதை எழுதுவதாகக் குறிப் பிடுகிறார். ஒரு நகரம் தரும் வலி களையும், இடையறாத மனவெழுச்சி யையும் ஒரு கவிஞனால் மட்டுமே உணரமுடியும். சுந்தரராமசாமியுடன் சந்திப்புகள், நகுலனை இரண்டு முறைப் பார்த்து, அனுபவித்ததுப் பற்றிக் குறிப்பிடுகிறார். ஜி.நாகராஜன், முருகபூபதி, கோணங்கி ஆகியோரின் வழியே கண்டடையும் மாநகரமான மதுரை என்பது நரிகள் ஒலிக்கும் ஊழ் எனப் பிரஸ்தாபிக்கிறார், சங்கர்.

நித்தியத்தோடு நிச்சயமற்ற தன் இருப்பை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஆசை படைக்கிறவனுக்கு இருக்கக்கூடும். அதனாலேயே அவன் நித்தியமான படிமங்களோடு தொடர்ந்து உரையாடுபவனாக இருக் கிறான் என்று கவிஞர் கூறியிருப்பதின் வழி, இத்தொகுப்பில் உள்ள படிமங்கள் அர்த்த கர்ப்பத்தோடு வாழ்கின்றன. ஒவ்வொரு கவிஞனுக்கும் அவனு டைய புதிய தொகுப்பு, கடந்த தொகுப்பைவிட வேறாக அமைவதை அதில் புதிய ஒளி வீசுவதை நாம் கண்டடையலாம். அவரின் உரை வழியே நாம் காண்பது மரணப் பிரக்ஞை குறித்த விஷயங்கள்தான். சென்னை, தி.நகர், மதுரை ஆகிய ஊர்களில் வாழ்ந்திருக்கும் கவிஞரின் நகரம் மீதான பதிவுகள் மனதில் சலனத்தை ஏற்படுத்துகின்றன.

சங்கரின் கவிதைகளை ஒரு குவி மையத்தில் அடக்கிவிடலாம், காமம், காதல், மரணம் இவற்றின் மீதான விசாரணைதான் இக்கவிதைகளோ. எதிர்படும் ஒரு பெண், குறுக்கு மறுக்கான அலைவுறும் மன மூட்டத்தின் இலக்கற்ற காதல், உள்ளூரக் களைத்த காதல்மலர், முரண்நகையாகக் கனியைத் தீண்டும் ஒட்டகச்சிவங்கி, விருந்துமேஜையின் மீது படியும் துயரஒளிதான் காதல் என்று காதல் குறித்த பாத்திரங்கள் உயிர்த் தன்மையுடன் அலைவதை நாம் காணலாம். மரணம், காமம், காதல் இவற்றினூடே அரூப விஷயங்களைச் சங்கர் எழுதியுள்ளார். தன்னைக்குறித்த சுயபிரக்ஞை ஒவ்வொரு கவிஞனுக்கும் உரியது போலவே, சங்கரின் அடை யாளமும் இருப்பும் ஒருசேர அசேதனங் களுடனான உறவாக அமைவதை பார்க்கலாம் நாம். சிறிய வயதில் சிறிய மீனுடனும், பெரிய வயதில் பெரிய மீனுடன் தன்னை அடையாளமாகக் காண்கிறார். நொண்டிப்பூனையின் ஊனம் தன் இதயம்வரை ஊடுருவி யிருப்பதையும், அலையும் மரநாயைத் தன்னுருவாய்ப் பார்க்கும் தன்மையும் பறைசாற்றுபவை சங்கரின் கவிதைகள். ஒரு குருட்டு வன்மத்தால், தன்னைப் படிகளாக, தனிமையின் தூண்களாக, ஒரு செவ்வியல் பிரதியாக உரு மாறுவதை பல கவிதைகளில், நம் வாசிப்பில் அறியலாம். கிளிப் பெண்ணை விளித்த அவருடைய கவிதைகள் மனதில் அசூசையை ஏற்படுத்துகின்றன. ஒட்டகங்கள், கதைகள், கடவுளர்கள், காதல்கள் எல்லாவற்றையும் சிறுகை வடிவங் களாக மாற்றி, பரிசாகக் குழந்தையிடம் தரும் மனம் விசேஷமானதுகூட.

ஒரு கவிதை பொறுத்த அளவில் அனுபவத்திற்கும் சலனத்திற்கும் மிகப் பெரிய அளவில் வேறுபாடு இருப்ப தாகவே உணர்கிறேன். சில கவிதைகள் வெறும் அனுபவமாகப் பதிவாகி யுள்ளன. பெரும்பாலான கவிதைகளில் மரணப்பிரக்ஞை தன்னை மீறிய அளவில் பதிவாகியுள்ளன. இன்னொன்று நகுலன் மீதான ஈர்ப்பு. நகுலன் ஒரு கட்டத்தில் ஆர்.ராஜ கோபாலன் எழுத்து ஒரு சாயலை உருவாக்கியிருப்பதாகக் குறிப்பிடு கிறார். சங்கரும் நகுலனின் சாயல் தன் கவிதையில் படிந்திருப்பதை உணர்த்து கிறார். சங்கரின் மரணம் குறித்த விசாரணைக் கவிதைகள் பலவற்றை வாசிக்கும்போது, மரணம் என்பது கனத்த சம்பவங்களற்ற ஒரு காதை யாகவே படுகிறது. இவரின் மொழி, கவிதைச்சொல்லலில் யதார்த்தத்தை யும் தெளிவையும் கொண்டது. மிக நேர்த்தியான கட்டமைப்புடனான கவிதைகள், வடிவத்தையும் மீறி அனுபவத்தை நமக்குள் தந்து விடுகின்றன. அச்சம், மரணம் என்ற இரண்டுநாய்க்குட்டிகள் எப்போதும் நாம்தான்.

(அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாய்க்குட்டிகள், சங்கர ராம சுப்பிரமணியன், குருத்து, டிசம்பர் 2008, ரூ.45)

- ராணிதிலக்

Pin It