சில மாதங்களுக்கு முன்புதான் திருமண மானவனும், நீலமேகத்தின் மனைவி யினுடைய தங்கையின் கணவனுமாகிய சுந்தரமூர்த்தி தற்கொலை செய்து கொண் டிருக்கிறான். இது சுந்தரமூர்த்தியைப் பற்றி நீலமேகமும் சந்திரகாந்தாவும் பேசிக்கொண்டிருக்கையில் மறைமுகத் தொடர்புள்ளது போல் செல்போன் வழி யாகத் தெரிய வந்தது. இரவு சாப்பிட்டா னதும் மகன் தூங்கிய பிறகு உறக்கம் வரும்வரையிலும் தினமும் இருவரும் எதையாவது பேசிக்கொண்டிருப்பார்கள். சந்திரகாந்தா கணவனுடைய உறவி னர்களை எப்போதும் குறை கூறிக் கொண்டிருப்பாள். அவனும் வார இதழ்களின் பக்கங்களைப் புரட்டியபடி வாய்ப்பு கிடைக்கையில் அவளுடைய குடும்பத்தைப் பற்றி குத்தலாகச் சொல் வான். கத்திகளை மேலே உரசாமல் வீசியவாறு, இரத்தம் சிந்தாமல் போர் நிகழும். பல நேரங்களில் கடிகாரத்தில் மணி பதினொன்று, பன்னிரண்டு அடிக் கும் வரையிலும் கூட நீண்டு செல்லும். சில சமயங்களில் பையன் எழுந்து சுற் றும் முற்றும் பார்த்து விட்டுத் திரும்ப வும் படுத்துக் கொள்வான். ஒரு கட் டத்தை நெருங்கியதும் போதுமென்று நிறுத்திவிட்டுத் தூங்கத் தொடங்குவார்கள். சக்தியுள்ள நாட்கள் என்று சந்திர காந்தா கருதும் செவ்வாய், வெள்ளி அல்லது பவுர்ணமி, அமாவாசை போன்ற தினங்களில் சண்டை வளர்ந்து இரவு முழுவதும் கூட பேசியபடி விழித்துக் கொண்டிருப்பார்கள். மறுநாள் காலை மிகவும் கசப்பாக விடியும்.

அன்றும் வெள்ளிக்கிழமைதான். சுந்தர மூர்த்தி மகா மோசமானவன், அம்பது பவுன்களையும், ஒரு காரையும், அதுவும் கல்யாணத்துக்குப் பின்னால் வரதட்ச ணையாகக் கேக்குறான். அப்படி கல்யா ணத்துக்கு முன்னால கேட்டிருந்தா அவனுக்குக் கல்யாணமே நடந்திருக்காது. இல்லாட்டி எங்கெங்கியோ தேடிவிட்டு ஒரு வருஷத்துக்குப் பின்னால பெண் கிடைக்கலேன்னு மறுபடியும் திரும்பி வருவாங்களா? என்று தொடங்கினாள் சந்திரகாந்தா. நீலமேகம் அவளை உற்றுப் பார்த்து வீழ்த்துவதற்காக ஏதாவது வலை விரிக்கிறாளா என்று யோசித் தான். ஆனால், மஞ்சளாக எரியும் விளக் கொளியில் அவள் மிகுந்த நிம்மதி யுற்றவளைப் போல் அவனுக்கு அருகில் தோற்றமளித்தாள். அவள் சில நாட் களாக, தங்கை கல்யாணிக்குத் திரு மணத்தை நடத்தி இறந்துவிட்டத் தன் அப்பாவின் ஆன்மாவைத் திருப்தியுறச் செய்த மகிழ்ச்சியுடனிருந்தாள். அவள் அம்மாவுடன் நாலா திசைகளுக்கும் சென்று ஆயிரம் திருமண அழைப்பு களுக்கு மேல் கொடுத்திருந்தாள். அவன் நாற்காலியிலிருந்து எழுந்து அவளை அணைத்து கைகளால் முதுகில் மெல்ல தடவிக் கொடுத்தான். அவள் உள்ளாடை அணியாத மார்புகள் இறுக்க மின்றி தளர்ச்சியாக மேலே அழுந்த, கண்ணீர்த் துளிகள் கசிய விசும்பினாள். சுந்தரமூர்த்தி ரொம்ப நல்லவன் என்றும் அவளின் தங்கை சண்டைக்காரியான கல்யாணியே அவனுக்குப் புத்தி சொல்ல வேண்டுமென்றும் நீலமேகம் கூறினான். அந்த வார்த்தைகளை மிகவும் விரும்பி யவளைப் போல் அவன் விலா எலும்பு கள் உறுத்த இறுக்கமாகக் கட்டிக் கொண் டாள். அவன் அவளுடைய திறந்த பின் கழுத்தை வருடி ஓர் உணர்ச்சிகரமான கூடலுக்கு இசைந்து கொண்டிருந்தான். அப்போதுதான், அனுமதியின்றி எங்கும் புகக் கூடிய எந்திரமான செல்போன் திடீ ரென்று ஒலித்தது. அதன் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த பைத்தியக்கார மணியோசை அந்த நேரத்தில் அச்சமூட் டும்படி இருந்தது. நீலமேகம் கைகளை விலக்கி, சற்றே தொலைவிலிருந்த செல்லை, அது விழுந்து விடலாம் போல் எட்டி எடுத்துப் பார்த்தான். அழைக்கும் எண்கள் சந்திரகாந்தாவினு டைய பெரியப்பா மகன் கே. சங்கரனு டையது என்பதால் அதை உடனடியாகத் துண்டித்தான். அது மீண்டும் நாராசமாக ஒலியெழுப்பியது.

ஒரு வாரம் முன்பிருக்கும், சங்கரனை வீட்டுப் படியேறக் கூடாது என்று நீல மேகம் சொல்லியிருந்தான். சங்கரன் தான் சந்திரகாந்தாவின் அப்பா இறந்த போது ஆண் வாரிசு இல்லையென்று கொள்ளியிட்டது முதல் அந்தக் குடும் பத்தை நடத்தி வருகிறான். கல்யாணிக்குப் போட வேண்டிய நகைகளுக்காக அவர் களுடைய வீட்டை அடமானம் வைத்து விட்டு பணம் புரட்டினான். அதுவும் பற்றாமல் பத்துப் பன்னிரண்டு சவரன் கள் குறைகிறதென்று சந்திரகாந்தாவிட முள்ள தங்க சங்கிலியைப் பெற சங்கரன் தொடர்ந்து நச்சரிப்பதை அவளாலேயே தெரிந்துகொண்டிருந்தான் நீலமேகம். அவன் அந்த இரவு வேலைப் பளுவால் வீட்டிற்குச் சற்று தாமதமாக வந்திருந் தான். சங்கரனுடைய பெரிய இரு சக்கர வாகனம் வழக்கம்போல் வாசப்படிக்கு நேரெதிரில் சாய்த்து வைக்கப்பட்டிருந் தது. எரிச்சலிலும் களைப்பிலும் கோப மாக தன்னுடைய சாதாரண வண்டியை வெளியிலேயே ஏற்றாமல் நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தான் நீலமேகம். அவன் வருகையை கவனிக்காமல் சங்க ரன், கல்யாணி, சந்திரகாந்தா மூவரும் சமையலறையில் ரகசியமான ஆலோ சனையில் ஈடுபட்டிருந்தார்கள். அன்று இதற்காகவே ஊரிலிருந்து கல்யாணி வந்திருக்கிறாள் போலிருக்கிறது. அவன் அவர்களைத் திரும்பிப் பாராமல் தாண்டிச் செல்கையில் சந்திரகாந்தா சங்கரனை வெளியே போகச் சொல்லி திட்டத் தொடங்கினாள். தொடர்ச்சியாக அவள் கத்திக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.

படுக்கையறைக்குள் சென்று அவன் பல முறை கூப்பிட்ட பின்னால் வந்த சந்திரகாந்தாவிடம் ஏன் இப்படி சத்தம் போடற, உடம்பு கெடாதா? என்று வினவினான். இந்த ஒத்த செயினு அவங்க கண்ணை உறுத்துது, இதையும் பிடுங்க திட்டம் போடறாங்க என அவள் அழுதாள். அவங்களை நான் கேட்கு றேன் என்று வெளியே வந்தான். நீங்க சண்டை போடாமல் அமைதியா கேட்க னும் என்றாள் அவள் பின்னால் வந்த படி. கழுத்திலும் காதிலும் நகைகள் பளபளக்க, திருமணமாகி மெருகேறிய வளைப் போலிருந்தாள் கல்யாணி. நெற்றியிலும் உச்சந் தலையிலும் சிவந்த குங்குமத்தை அழுத்தமாக வைத்திருந் தாள். ஒரு நெக்லசை ஏமாத்தி திருடிட்டு இப்ப இந்த செயினையும் பிடுங்கப் பாக்கிறீங்களா என்றான் நீலமேகம். அதற்கு, கனமான புது தாலிக் கயிறு முறுக்கிக்கொண்டும், புதிதான புடவை மொட மொடவெனவும் எழுந்து நின்ற கல்யாணி, எங்களுக்கு பணம் கிடைச் சதும் அதையும் திருப்பிக் கொடுத்துட றோம் என்றாள். பணம் எப்ப வரும்? அவன் ஏதாவது வேலை செய்றானா தர்றதுக்கு? என்றான் நீலமேகம். அது வரையிலும் மௌனமாயிருந்த சங்கரன் ஏறெடுத்துப் பார்த்து, உங்களுக்கு வேண் டியது நகை தானே? அத மட்டும் பேசுங்க என்றான். அவன் கண்கள் குடிகாரர்களுடையவை போல் சிவப் பாக மின்னின. நான் வேலை செஞ்சி கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறதை திருட றீங்களே, வெக்கமாயில்லை? என் றான் நீலமேகம் பொதுப்படையாக. ஒன்னுக் கும் உபயோகமில்லாத வேலை என்று காதில் விழும்படியாக முணுமுணுத் தான் சங்கரன். வீட்டை விட்டுப் போங்க, இனிமே இங்க கால் மிதிக்கக் கூடாது என்று குரல் தடுமாறக் கத்தி னான் நீலமேகம். இடையில் நுழைந்த சந்திரகாந்தா, அவங்க கிட்ட பேசாம நீங்க உள்ள போங்க என்றாள். அவள் கழுத்தை நோக்கி இருகைகளையும் நீட்டிக்கொண்டு நீதானே காரணம் என்று பாய்ந்தாள் கல்யாணி. கால்கள் தடுமாற, ஒரு நாடகத்தின் காட்சி போல் மெதுவாக கீழே விழுந்தாள் சந்திரகாந்தா. அவளைத் தூக்கிக்கூட விடாமல் கல் யாணியும் சங்கரனும் வேகமாக சென்று விட்ட பின்பும் அவள் தொடர்ந்து தரையில் படுத்து அழுது கொண்டிருந் தாள். நாம முன்னிருந்து கல்யாணம் பண்ணி வச்ச கல்யாணியின் பேச்சு இப்ப ரொம்ப மாறிவிட்டது என்றும், கல்யாணமானத் திமிரில்தான் அப்பிடிப் பேசுகிறாள், எவ்வளவு நாளைக்குன்னுப் பார்க்கலாம் என்றும் சொன்னான் நீல மேகம். அன்றிலிருந்தே சங்கரனும் கல்யாணியும் வீட்டுப் பக்கம் வருவ தில்லை. மறுநாள் கல்யாணியை புகுந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று, கொஞ்ச நாட்களில் மீதி நகைகளையெல்லாம் போட்டுவிடுவதாகச் சொல்லிவிட்டு வந்திருக்கிறான் சங்கரன்.

இப்போது பத்து மணி இரவில் சந்திர காந்தாவிடம் ஏதோ பேசுவதற்காகத் தான் சங்கரன் போன் செய்கிறான். அவர் கள் இருவரும் படுக்கையில் உட்கார்ந்தி ருந்தபோது மறுபடியும் செல்போன் பிடிவாதமாக அடித்தது. சங்கரனுடைய விசித்திரமான வரிசை எண்கள் மீண்டும் பளிச்சிட்டன. அதிலிருந்து தீமையின் வாடை வீசுவதாக நீலமேகம் நினைத் தான். அதை சந்திக்க முடியாமல் துண் டித்து, இன்னேரத்தில் ஏன் சங்கரன் தொல்லை பண்றான்? என்றான். அடுத்த முறை நானே எடுக்கிறேன் என்றாள் சந்திரகாந்தா சமாதானமாக. அமைதி யின் நடுவில் திரும்பவும் செல்போன் ஒலித்தது. எடுத்துக் கேட்ட அவளின் முகம் உடனடியாக சுருங்கியது. அய்யோ, சுந்தரமூர்த்தி தூக்குப் போட்டுக்கொண் டானாம் என்று செல்லை கீழே வைத்து விட்டு அழுகை பீறிடக் கூறினாள். நீலமேகம் திடுக்கிட்டு பெரும் பயத்தை அடைந்து எழுந்தான், செல்லையும் எடுத்து அணைத்தான். தெருவெங்கும் கேட்கும்படி ஓலமிட்டு சந்திரகாந்தா தரையில் அழுது புரண்டாள். பையன் ஒருமுறை தூக்கத்தில் ஏதோ பேசியபடி திரும்பிப் படுத்தான். நாம உடனே புறப் பட்டுப் போகணும், என் தங்கச்சியையும் பாவிங்க கொன்னுடுவாங்க என்றாள் சந்திரகாந்தா சிறிது நேரம் கழித்து. உண்மையான்னு கேட்டுத் தெரிஞ்சிக்க லாம் என்றான் நீலமேகம், அப்படி எது வும் ஆகியிருக்கக் கூடாது என்று எண் ணியபடியே.

சங்கரன் குடித்துவிட்டு வழக்கம்போல் இரவில் பொழுதுபோக உளறுகிறான் என்று ஒரு புறம் நினைப்பு எழுந்தது. ஆனால், சுந்தரமூர்த்தி இறந்து தான் போயிருப்பான் என உள் மனதில் தெளிவாகத் தெரிந்தது. சுந்தரமூர்த்தி யின் செல்போன் எடுப்பார் யாருமின்றி அனாதையாக நெடுநேரம் அடித்தது. மறுபடியும் தொடர்ந்து முயன்றுகொண் டிருந்தான். கடைசியாக எடுக்கப்பட்டு தயக்கமாக, யாரு? என்று குரல் கேட்டது. நீலமேகம், சுந்தரமூர்த்திக்கு என்ன ஆயிற்று? என்று கேட்டான். கணவனுக்கும் மனைவிக்கும் ஏதோ பிரச்சினையாம், அதனால இப்படி செய்திருக்கான், உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போயிருக்காங்க, இன்னும் சரியாத் தெரியலை என்று சுந்தரமூர்த்தி யின் ஒர் அண்ணன் பதில் சொன்னான். மௌனமாக செல்போனை வைத்து விட்டு தலையைப் பற்றிக்கொண்டான் நீலமேகம். எல்லாமே உறுதிப்பட்டு விட்டதால் சந்திரகாந்தா மீண்டும் பெருங்குரலில் அழத் தொடங்கினாள். பிறகு, மறுபடியும் சங்கரனிடம் செல் போனில் பேசி அம்மாவையும் மற்றவர் களையும் அழைத்துக்கொண்டு வரச் சொல்லிவிட்டு, படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த பையனைத் தட்டி எழுப் பினாள். தூக்கக் கலக்கத்திலிருந்த அவனிடம், சித்தப்பா செத்துட்டாங்க, போகலாம் வாப்பா என்றதும் அவனும் உடனே எழுந்து உட்கார்ந்தான். அவர்கள் அவசரமாக வீட்டைப் பூட்டிக் கொண்டு பேருந்தைப் பிடிக்க இருண்ட தெருவில் இறங்கி நடந்தார்கள்.

முதன்முதலில் சுந்தரமூர்த்தியின் அப்பா யாரோ சொல்லி பெண் கேட்டு வரும் போது, எவ்வளவு நகை போடுவீங்க? என்றுதான் கேட்டார். பலமுறை பேரம் பேசி கடைசியாக முப்பது சவரனுக்கு அரைகுறை மனதோடு ஒத்துக்கொண் டார், கல்யாணத்தை வெகு விமரிசை யாக நடத்த வேண்டும் என்ற நிபந்தனை யோடு. ஆரம்பத்திலேயே, இரண்டு ஜாதகங்களையும் சங்கரன் காட்டியதில், கண்டிப்பாக இந்தக் கல்யாணம் நடக் காது, மூன்று பொருத்தம் கூட இல்லை என்று குடும்ப சோதிடர் கூறியிருந்தார். சுந்தரமூர்த்தியின் அப்பா, தான் ஒரு பெரிய சோதிடரிடம் பார்த்ததாகவும், தாராளமா செய்யலாம், ஆனா கல்யாணம் முடிஞ்சதும் ஒரு பெரிய கோயிலில் வைத்து மறுதாலி கட்டிக் குங்க என்று சொன்னதாகக் கூறினார். அதற்கு பழக்கமான சோதிடரை மீண் டும் கலந்து ஆலோசித்ததில் அவரும், குலதெய்வத்துக்கு முன்னால முதல் தாலி வாங்கிக்குங்க, உங்க விருப்பப்படி செய்யுங்க, தலையில எழுதியிருப்பதை மாத்த முடியாது என்றார். வயசாயிட்டி ருக்கிற கல்யாணிக்கு எப்படியாவது கல் யாணமானால் போதும், தன்னுடைய பாரம் குறையும் என்றாள் அவளுடைய அம்மா.

பிறகு நல்லதொரு நாளில் வெற்றிலைப் பாக்கு மாற்றிக்கொண்டு பிள்ளை வீட்டில் சாப்பிட்டுவிட்டு நிச் சய தாம்பூலத்திற்கு தேதி குறித்தார்கள். அங்கிருந்து மாலை மயங்கும் வேளை யில் வாடகைக் காரில் அனைவரும் திரும்பிக் கொண்டிருந்தார்கள். காலை யில் வந்த கார் காத்திருக்க முடியாமல் அவசர வேலையாகச் சென்றுவிட்டதால் வந்திருந்த வேறொரு புதிய காரின் இளம் டிரைவர் பேய் பிடித்தது போல் வேகமாக ஓட்டினான். உள்ளே மிகவும் புதியதான சினிமாப் பாட்டுகள் தொடர்ந்து அலறிக்கொண்டிருந்தன. பையன் அதற்கு உற்சாகமாக தாளம் போட்டுக் கொண்டு வந்தான். சந்திர காந்தா நிதானமாகப் போகச் சொல்லி யதைக் கேட்டுவிட்டு டிரைவர் பேசாமல் சிரித்தான். பாதி தூரம் வந்ததும் சிக்க லான நாலு வழிச் சந்திப்பில், ஒரு வய தான மனிதர் எதையும் திரும்பிப் பாராமல் சைக்கிளை மெல்ல மிதித்தபடி குறுக்கே சென்றார். கண் மூடித் திறப்பதற்குள் மோதப்பட்டு அவர் அந்தரத்தில் மேலே எகிறிக் கீழே விழுவது தெரிந்தது. கார், சக்கரங்களைத் தேய்த்தபடி தாறுமாறாக நின்றது. பேச்சற்று கண்களை மூடி விழுந்து கிடந்த வயதானவரின் பின் தலையின் அடியில் இரத்தம் பெருகி தேங்கிக் கொண்டிருந்தது. அருகில் முன் சக்கரம் முறுக்கிய சைக்கிள் கிடந்தது. உடனே நாலைந்து பேர் கூடி அவருக்கு தண்ணீர் புகட்டினார்கள்.

பயந்து போன நீலமேகமும், சந்திரகாந்தாவும், அம்மா வுடனும் பையனுடனும் அவசரமாக ஒரு பேருந்தை நிறுத்தி ஏறி அங்கிருந்து வீடு வந்து சேர்ந்தார்கள். இது பெரிய அபசகுனம் என்றும், திருமணத்தைத் தள்ளி போடலாம் எனவும் சந்திரகாந்தா அபிப்ராயப்பட்டாள். அந்தப் பெரியவர் உயிர் பிழைத்துக்கொண்டதாக, அங் கேயே நின்றுவிட்ட சங்கரன் கூறி சமா தானப்படுத்தினான். அதை நீலமேகம் கொஞ்சமும் நம்பவில்லை, அவர் இறந்து விட்டதாகவே இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறான்.

அந்தப் பேருந்து நிலையம் வெறிச்சோடி யிருந்தது. சாலையோரம் பலரும் பல பைகளோடு பேருந்து வரும் திசையைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தார்கள். இவ்வளவு கூட்டத்தின் நடுவில் பேருந்தைப் பிடித்து நீண்ட தூரம் செல்வது நீலமேகத்துக்கு அச்சத்தைத் தந்தது. பையன் எவ்விதக் கேள்விகளும் கேட்காமல் சுற்றிலும் பார்த்துக்கொண் டிருந்தான். எல்லாவற்றையும் புரிந்து வைத்திருப்பது போல் அவனைப் பார்க் கையில் தோன்றியது. கொஞ்ச நேரத்தில் அருகில் ஊர்ந்து வந்து நின்ற வெள்ளை நிறமான ஒரு காரிலிருந்து சிலர் இறங்கி னார்கள். அதன் டிரைவர் சன்னல் வழி யாகக் குனிந்து அவர்களை அழைப் பதைப்போல் பார்த்தார். இறங்கும் போது பெருந்தொகை கட்டணமாக பிடுங்கப்பட்டு விடலாமென்று தயங்கி எவ்வளவு ஆகுமென நீலமேகம் விசா ரித்தான். அவர் கேட்டதில் பாதித் தொகையைத் தருவதாக சொல்லவும், முடிவாக முக்கால் பங்கைத் தாங்க எனக் கூறி கதவைத் திறந்துவிட்டார்.

உள்ளே அமர்ந்ததும், சாலை விளக்குகள் மற்றும் எதிரே வரும் வாகனங்களின் வெளிச்சம் மட்டும் விழுந்துகொண்டிருந்ததால் சந்திரகாந்தா வெட்கப்படாமல் மீண்டும் அழுகையைத் தொடங்கினாள். அவளை அணைத்து நீலமேகம் ஆறுதலாகத் தட்டிக் கொடுக்கவும் அவன் தோளில் சாய்ந்தபடி கண்ணீர் விட்டாள். எல்லாத் துக்கும் காரணம் சங்கரன்தான், அவன் கல்யாணியின் நகைகளை எல்லாம் பிடுங்கி செலவு செஞ்சிருக்கான். அது அவங்க குடும்பத்துக்குத் தெரிஞ்சிருக் கும், அவ வாழ்வையே அவன் நாசம் பண்ணிட்டான் என்று நீலமேகம் சொன் னான். கல்யாணத்துக்கு மளிகை செலவு வாங்கிய கடனைக் கொடுக்கத்தான், அவங்க போட்ட ஒரேயொரு பழசான அட்டிகைய சங்கரன் அடமானமா வைச்சிருக்கான், அதையும் உடனே மூட்டுக் கொடுத்திடறதாயிருந்தான்... நகைதான் சுந்தரமூர்த்திக்கு பெரிசாயி டுச்சா? என்று மேலும் விசும்பினாள் சந்திரகாந்தா.

ஒருமுறை மட்டும் மேலே கண்ணாடியின் வழியாக அவர்களை டிரைவர் ஏறிட்டுப் பார்த்துவிட்டு இருண்டிருக்கும் சாலையில் கண்களை விலக்காமல் பதித்தபடி ஓட்டிக்கொண் டிருந்தார். நீலமேகத்தின் மடியில் படுத்துக்கொண்டு பையன் மறுபடியும் தன்னுடைய ஆழ்ந்த தூக்கத்தைத் தொடர்ந் தான். சந்திரகாந்தாவிடமிருந்தும் எவ் வித சப்தமுமில்லை. நிச்சயதார்த்தம் நடந்த அன்று விடியற் காலையில் பிசுபிசுவென மழை தூறி யது. சந்திரகாந்தாவின் தாய் வீட்டின் திறந்த வாசலில் பந்தல் போட்டிருந்தும் நனைந்து போய் சமையல் வேலை களெல்லாம் மிகவும் தாமதமாகத் தொடங்கி நடந்துகொண்டிருந்தன. மாப்பிள்ளை வீட்டாருக்கு, நல்ல நேரம் போன பின்னால் கொஞ்சம் காலம் தாழ்ந்து ராகு காலத்தின் தொடக்கத்தில் தான் வர முடிந்தது. அவர்கள் கொண்டு வந்த இருபத்துநாலு வித வரிசைத் தட்டு கள் பழங்களுடனும், பலகாரங்களுட னும், வாசல் கொள்ளாத அளவுக்கு வரிசையாக பரப்பி வைக்கப்பட்டன. சுந்தரமூர்த்தியின் அம்மா, குடும்பத்தினு டைய பரம்பரைச் சொத்தென்று பழைய மஞ்சளான பெரிய கல் அட்டிகை யொன்றை எடுத்துப் பெருமையுடன் தாம்பாளத்தின் மேல் வைத்தாள். மற் றொன்றில் உடலெல்லாம் தங்கச் சரிகை கள் நிரம்பிய அரக்குப் பட்டுச்சேலை பளபளத்தது.

ஊரார் அவை பற்றியெல் லாம் வியந்து கல்யாணம் முடிந்து நீண்ட நாட்களாகியும் பேசிக்கொண்டிருந் தார்கள். நலங்கெல்லாம் வைத்து பத்தி ரிகை எழுதி முடித்து சாப்பிட பிற்பகல் நேரமாகிவிட்டது. சிறிய இடத்தில் எல்லோரும் அமர முடியாமல் பல பந்திகள் நடந்தன. அதனால் தங்கள் கௌரவம் போனதென்றும், சின்ன இடத்துல சம்பந்தம் வைத்துக் கொண்டு விட்டதாகவும், பிள்ளையின் அம்மா பின்னாலும் பலமுறை சொல்லிக் கொண்டிருந்தாள். இதெல்லாம் தெரிஞ்சி தானே கல்யாணத்துக்கு ஒப்புகிட்டிங்க? என்று சந்திரகாந்தாவும் அவளுடைய அம்மாவும் காது படவே கேட்டதற்கு அந்த அம்மாள் பதில் பேசவில்லை. சந்திரகாந்தாவும் நீலமேகமும் சுந்தர மூர்த்தியின் வீட்டை நெருங்குகையில் பின்னிரவின் இருட்டு அடர்ந்து கவிந் திருந்தது. அந்த இடத்தில் மட்டும் விளக்குகள் பளிச்சென்று எரிய, வாசலில் கலைந்து கிடந்த பிளாஸ்டிக் நாற்காலி களில் சிலர் மௌனமாக உட்கார்ந்திருந் தார்கள். நீலமேகம் பையனுடன் அங் கேயே அமர்ந்துகொள்ள, சந்திரகாந்தா புயலென வேகமாக வீட்டினுள் நுழைந் தாள். உடனே அவளுடையதும் கல்யாணி யுடையதுமான அழுகுரல்கள் உரத்து வெளியேறின. மேலும் சில பெண்களின் அழுகைகளும் பின்னணியில் மெல்லிய தாகக் கலந்து கேட்டன.

நீலமேகம் தயங்கியபடி சிறிது நேரம் கழித்து உள்ளே சென்றான். கல்யாணி தலைவிரி கோலமாக, தன் கணவன் போட்டிருந்த சட்டையை அணைத்துக் கொண்டு குரல் கம்ம அரற்றியபடியிருந்தாள். அவள் நெற்றியில் பெரியதான குங்குமம் கரைந்தும், ஆடைகள் குலைந்துமிருந் தன. மற்றொரு பக்கமாக சுந்தரமூர்த்தி யின் அம்மாவும் அவனுடைய அண்ணி களும் கூடி அழுதவாறு அமர்ந்திருந்தார்கள். கல்யாணியின் மேல் இரக்கம் தோன்ற நீலமேகத்தின் கண்கள் அவனை யறியாமல் கசிந்து வழிந்தன. கல்யா ணத்தில் கம்பீரமாக சூட்டுக் கோட்டில் மாலையுடன் நின்றவனும், பிறகு கோயி லுக்குச் செல்கையில் சிரித்துப் பேசி பழகிக் கொண்டிருந்தவனும், உயிரோடு எதிரில் உலவியவனுமான சுந்தரமூர்த்தி திடீரென்று மாயமாக இறந்துவிட்ட பயங்கரம் நெஞ்சைத் தாக்கியது. அவனு டைய தலை தாழ்ந்திருக்க வளர்ந்த உடல் ஒரு சிறு கயிறில் தொங்கிக் கொண்டு காற்றில் ஆடுவதைப் போல் பிம்பம் எழுந்தது. அது வாழ்க்கையைப் பற்றிய பெரும் பீதியை நீலமேகத்துக்கு அடிவயிற்றிலிருந்து கிளப்பியது. அழுகை யில் ஊறிய முகத்துடன் சந்திரகாந்தா எழுந்து அவனுக்கருகில் வந்து மார்பில் தலையைச் சாய்த்துக்கொண்டாள்.

சுந்தர மூர்த்தியை எல்லாரும் சேர்ந்து கொன் னுட்டாங்க என்றும், தன்னுடைய தங் கச்சியின் வாழ்க்கை நாசமாப் போயிட்டது எனவும் சப்தமாகப் புலம்பினாள். நீலமேகம் அவளைக் கத்தக்கூடாது, யாருடனும் சண்டை போட வேண்டா மென்றும் சொன்னான். அப்போது சங்கரன், சந்திரகாந்தாவின் அம்மா மற்றும் சில உறவினர்களுடன் ஒரு காரில் வந்து இறங்கினான். அந்த அம்மா ஓவென்று கத்தியபடி கல்யா ணியைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுதாள். சற்று நேரம் தொடர்ந்து அழுகை சத்தம் எழுந்தது. பிறகு, கல்யாணி சங்கரனிடம் கண்ணீருடன், சுந்தரமூர்த்தி இரவு சாப்பிட்டுவிட்டு சாதாரணமாகவே மாடிப் படுக்கை யறைக்கு சென்றதாகவும், பின்பு மாமியார் ஊற்றித் தந்த பாலை அவள் எடுத்துக் கொண்டு மேலே செல்கையில் உள் தாழ்ப்பாள் போட்டு மூடப்பட் டிருந்ததாகவும், பல முறை தட்டியும் திறக்காததால் பயந்து போய் மாமியாரை அழைத்ததாகவும், கடைசியில் கதவை எல்லாரும் சேர்ந்து உடைத்துத் திறக்கை யில், உள்ளே மின்விசிறியில் முந்தின நாள் உடுத்தியிருந்த பச்சை கலர் புடவையைக் கட்டி அவன் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததாகவும் தெரி வித்தாள்.

இரவு கடையிலிருந்து வீட் டிற்குத் திரும்பும்போது அவன் நன் றாகக் குடித்திருந்தது போலவும் தெரிந்த தாம். மறுநாளைக்கு மறுநாள் தீபா வளிக்கு மாமியார் வீட்டுக்கு செல்ல அவன் அம்மாவிடம் அனுமதி கேட்டதாகவும், அவள் இரண்டு பவு னில் சீர் மோதிரம் போட்டால் மட்டும் போ என்றும் சொன்னாளாம். உடனே, தம்பி கடைக்கு முதல் போட்ட மாதிரி தன் கடையையும் பெரிசாக்க இரண்டு இலட்சம் கேட்டு சண்டையிட்டிருக் கிறான். அம்மா, கொடுக்க முடியாது நீயே சம்பாதிச்சிக்கோ என்றிருக்கிறாள். இதனால் மனமுடைந்து அவன் தற் கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கல்யாணி அழுகையினூடே சொல்லி முடித்தாள். நான் அப்பவே நினைச்சேன், கிழக்குப் பக்கமா வீட்டில பல்லி ஓயாம சொல்லிக்கொண்டிருந் திச்சி, நான்தான் கேக்க முடியாத பாவி யாயிட்டேன் என்றாள் அவளுடைய அம்மா. சங்கரனுடைய கண்களிலும் தாரையாகக் கண்ணீர் வழிய, கனத்த உடல் குமுறிக்கொண்டிருந்தது. சுந்தர மூர்த்தியினுடைய உடம்பை எடுத்துக் கொண்டு அரசாங்க மருத்துவமனைக்கு சென்றிருந்த அவனுடைய அப்பா கலைந்த தலையுடனும் உடையுடனும் அப்போதுதான் திரும்பி வந்தார்.

போலிசு கேசு ஆகிவிட்டதாகவும், உடலை அறுத்து பரிசோதித்துப் பார்த்துவிட்டு மறுநாள்தான் தருவார்களென்றும் அழுத படி கூறினார். இவ்வளவு பெரிய பையன் இப்பிடி பண்ணிட்டானே? என்று நீலமேகத்தினுடைய கைகளை அழுத்திப் பிடித்துக்கொண்டு புலம்பி னார். பிறகு, கைகளை விடாமல் அழைத்தபடி வெளியே தெருவுக்கு வந்தார். கல்யாணிக்கு சங்கரனோடு ஏதோ தொடர்பிருப்பதாக ஊருல சொன் னதா முந்தா நாள்தான் சுந்தரமூர்த்தி சண்டை போட்டிருக்கான். இப்போ இது போல செஞ்சிருக்கான், பெரிய வங்க எங்ககிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லலை... என்று குரலை தாழ்த்திக் கூறினார். நீலமேகத்திற்கு நெஞ்சில் நெருப்பு மூட்டியது போல் பகீரென்றது. அருகிலிருந்த பெரிய அண்ணன் கைகளைக் கட்டியபடி கவனிக்காதவன் போல் வேறுபுறம் பார்த்துக்கொண்டி ருந்தான். அண்ணங்காரன் முறையை சந்தேகப்படறதா? யாராவது வேண்டாத வங்க சொல்லுவாங்க என்று நீலமேகம் சொன்னான். உங்க மேல கூடதான் தம்பிக்கு அந்த எண்ணம் இருந்திருக்கு என்றான் உடனே அண்ணன்காரன். அவர், இதில எங்களுக்கும் நம்பிக்கை யில்ல, பைத்தியக்காரனான அவன் வேளை வந்ததும் போய் சேர்ந்திட்டான் என்றார். பிறகு யாரோ வந்து அழைக்க வும் பெரிய மகனுடன் மறுபடியும் கிளம்பிச் சென்றார்.

நீலமேகம் பயத்தில் உறைந்தவனாக அங்கேயே நின்றிருந் தான். பிறகு மெதுவாக உள்ளே நுழைகையில், கல்யாணி ஞாபகம் வந்த வளாக, இப்படி மறுபடியும் மோசம் பண்ணிட்டானே என்று கத்தியபடிதான் சுந்தரமூர்த்தியின் அப்பா படிகளேறி ஓடி வந்ததாக, அழு குரலில் கூறிக்கொண் டிருந்தாள். கல்யாணம் ஆவதற்கு முன் னாலும் வீட்டுக்காரர் எதற்கோ தற் கொலை பண்ண முயற்சி செய்திருக்கார். ஒரு தரம் தூக்குப் போட்டுக்கொள்ள முயன்றால், அந்தக் கயிறு கடைசிவரை யிலும் விடாமல் கூப்பிட்டுக்கொண்டி ருக்கும் என்றும் புலம்பினாள். என் வீடும் போச்சி, என் பொண்னு வாழ்க் கையும் போச்சே என்று சந்திரகாந்தா வின் அம்மா சீரற்ற ராகத்தில் ஒப்பாரி பாடினாள். வெளியே பொழுது விடியாதது போல் மிகவும் கறுப்பாகத் தோன்றியது. பையன் கடைவாயில் எச்சில் ஒழுக நாற்காலியில் சுருண்டு படுத்துக்கொண் டிருந்தான். நீலமேகம் கைகளால் தலையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு கண்களை அழுத்தி மூடிக் கொண்டிருந் தான்.

சுற்றிலும் இலேசான பனியின் குளிர்ச்சி நிரம்பியிருந்தது. அவ்வப் போது பையனைத் தொட்டு அணைத்துக் கொள்கையில் அவன் உடலிலும் வெம்மை பரவியது. அப்படியே நீல மேகம் எவ்வளவு நேரம் நாற்காலியில் உறங்கி விட்டிருந்தான் என்று தெரிய வில்லை. சுந்தரமூர்த்தி வெண்மை யாகப் பற்கள் தெரிய சிரித்தபடி எதிரில் தோன்றினான். நல்லாயிருக்கீங்களா, ஏன் இங்க உக்காந்திருக்கீங்க? வீட்டுக்கு உள்ளே வாங்க என்று உயரமான உருவம் குனிய அழைத்தான். கல்யாண கோலத்தில் பட்டு வேட்டி சட்டையுடன் புகைப்படத்துக்காக அருகாமையில் நின் றான். கலைந்த தலைமயிரை சரி செய்த படி படுக்கையறையிலிருந்து எழுந்து வெளியில் வந்தான். அவனுடைய வெண்மையான புது பனியனின் விளிம் பில் மஞ்சளும் குங்குமுமான கறை லேசாகப் படிந்திருந்தது. புடைத்துத் தெரியும் கழுத்தில் பொன் சங்கிலி புரண்டு கொண்டிருந்தது. மறுபடியும் அவன் கையைப் பற்றிக் கூப்பிட்டான்.

கண்களைத் திறக்கையில், சந்திரகாந்தா வின் மற்றொரு பெரியம்மா மகன் எதிரே நின்று அழைத்துக் கொண்டிருந் தான். வாங்க டீ சாப்பிடலாம் என்றான். நீலமேகத்திற்கு அந்தக் குளிரிலும் உடல் நன்றாக வியர்த்திருந்தது. கொஞ்ச நேரம் தான் அயர்ந்திருப்பான், இருப்பினும் நீண்ட காலம் ஆகிவிட்டது போலிருந் தது. சுற்றிலும் விளக்குகளும் காலியான நாற்காலிகளும் உள்ளே அழுகைக் குரல் களும் அப்படியேத்தான் மாறாமலிருந் தன. சுந்தரமூர்த்தி இனியும் உயிருடன் திரும்பி வரப் போவதில்லை என்று தெளிவாகக் காட்டின. பையனை எழுப்பி உள்ளே அம்மாவிடம் போகச் சொல்லிவிட்டு நீலமேகம் எழுந்து நடந் தான். சாலையிலிருந்த அதிகாலையின் குளுமை உடலெங்கும் நிறைந்தது. மரங்களிலிருந்து பறவைகளின் குரல்கள் புதிதாக எழும்பின. அப்போதுதான் திறந்து ஊதுபத்தி கொளுத்திய தேனீர்க் கடையின் புதிய டீயின் மணம் கமழ சூடாகக் குடிக்கையில் உள்ளூர அடைந் திருந்த பயம் சற்றுத் தணிவதுபோல் பட்டது. அவனுக்கு அருகில் பலர் உயிர்த் துடிப்புடன் உலவிக் கொண்டி ருக்கிறார்கள்.

இப்பதான் நான் ஆஸ்பத் திரிக்கிப் போயிட்டு வந்தேன் என்று சந்திரகாந்தாவின் பெரியம்மா மகன் கூறினான். அங்கே இருட்டானப் பிண வறையில் சுந்தரமூர்த்தியின் உடம்பு அனாதையாகக் கிடக்கிறதாம். அறுத்துக் கொடுக்க எப்படியும் மதியத்துக்கு மேல் ஆகிவிடும் என்றான். சுந்தரமூர்த்தி நிறையக் குடிச்சிருந்திருக்கான் போலி ருக்குது, அவனுக்கு ஏற்கெனவே வேறு சாதியில் காதல் கல்யாணமாகி, ஒரு குழந்தை கூட வெளியூரில் இருப்பதாக பேசிக் கொண்டதாகவும் தெரிவித்தான். அவன் அப்பா நிறையப் பணம் தந்து இந்த கல்யாணத்துக்கு முன்னாலேயே அத்துக் கழிச்சிட்டதாகவும் சொன்னார் களாம். கல்யாணத்துக்குப் பின்னாலும் அவங்க கடைக்குத் தொடர்ந்து வந்து மேலும் பணம் கேட்டு சுந்தரமூர்த்தியிட மும் அவன் அப்பாவிடமும் மிரட்டிக் கொண்டிருந்தார்களாம். ஒரு பைசாக் கூட நான் இனித் தரமுடியாது என்று அவன் அப்பா சொன்னாராம்.

கல்யாணி யின் நகைகளை அடகு வச்சியும், கடை யில இருந்து எடுத்தும், சுந்தரமூர்த்தி அவங்களுக்குப் பணம் கொடுத்துப் பார்த்திருக்கான். நேற்று, பெற்றவங் களுக்கும் மகன்களுக்கும் பெரும் வாக்குவாதம் நடந்து கைகலப்பு வரை யிலும் போயிருக்கிறது. கல்யாணிக்கு விஷயம் தெரிய வந்துடுமோன்ற பயத்தி லயும், பழைய மனைவியிடமிருந்து தப்பிக்கவும்தான் அவன் தூக்கு மாட்டிட் டிருக்கணும் என்றான். பார்க்கறதுக்கு பூனை போல அமைதியா இருந்தான், அவன் எப்படி செஞ்சிருக்கான் பாருங்க என்றபடி டீயை உறிஞ்சிக் குடித்து முடித்தான். நீலமேகத்திற்கு மயக்கம் வரும் போலிருந்தது. அவன் தலையைச் சுற்றி எண்ணற்ற வார்த்தைகள் பூச்சி களைப் போல் பறந்துகொண்டிருந்தன. கல்யாணியின் கல்யாணம் ஒரு வழியாக ஆடம்பரத்துடன் நடந்து முடிந்த அன் றைக்கே நீலமேகமும் சந்திரகாந்தாவும், இதே போல ஓர் இருண்ட பிண வறையை நேரிடையாக சென்று சந்திக்க நேர்ந்தது. மிகவும் களைப்புடனும், எல்லாம் நல்லபடியாக முடிந்த நிம்மதி யுடனும் மாலையில் வீடு திரும்பி கொஞ்ச நேரம் சந்திரகாந்தாவும் நீல மேகமும் படுத்திருந்தார்கள். திடீரென்று வெளியில் அவசரமாகக் கதவைத் தட்டுகின்ற சத்தம் கேட்டது.

ஒரு போலிஸ்காரர் காக்கி உடையில் கையில் ஒரு திருமண வாழ்த்து மடலுடன் நின்றிருந்தார். கொஞ்சம் குண்டாக, நடுத்தர வயதில் யாரோ ஒருவர் பேருந்து நிலையத்தின் கழிவறையின் பக்கத்தில் கைப்பையோடு விழுந்து கிடந்ததாக வும், அவர் பையில் நிறைய விலாசங் களுடன் சின்ன நோட்டும், அதோடு இதுவும் இருந்ததாகவும் சொன்னார். அடையாளம் கண்டு பிடிக்க முடியாமல் கல்யாண மண்டபத்தில் கேட்டதில் விலாசம் தந்ததாகவும், நீங்க வந்து பாருங்க என்றும் கூறினார். நிறைய நன்றிகளுடன், மலரும் மணமும் போலவும், நிலவும் வானும் போலவும், நகமும் சதையும் போலவும் கல்யாணி யும் சுந்தரமூர்த்தியும் வாழ அதில் சுந்தர மூர்த்தியின் கடை ஊழியர்களால் வாழ்த்தப்பட்டிருந்தது. அப்படி எங்க ளுக்குத் தெரிந்தவர் யாரும் இறந்திருக்க மாட்டார் என்று தயக்கத்துடன் நீல மேகம் சொன்னான். சந்திரகாந்தாவின் கண்கள் அப்போதே கலங்கத் தொடங்கி விட்டிருந்தன. இருவரும் போலிஸ்கார ரின் பின்னால் கிளம்பிச் சென்றார்கள். கருவேலம் புதர்களும், செடி கொடி களும் மண்டியிருந்த அரசாங்க மருத்துவ மனைக்குப் பின்புறமுள்ள இடத்தில், பிணவறைக் கட்டிடம் பாழடைந்து ஒதுக்கமாயிருந்தது. அதன் அரையிருட் டில் ஒரு பருமனான உடல் கையை நீட்டியபடி ஒருக்களித்துக் கிடந்தது.

தலையின் பின்புறம் கருமையான ரத்தம் குழம்புபோல் குட்டையாகத் தேங்கி யிருந்தது. இடுப்பில் கால் சராய் அவிழ்க் கப்பட்டு உப்பிய அடிவயிறு திறந்திருந் தது. நீலமேகம் வாசப்படியிலேயே தயங்கி நிற்க, சந்திரகாந்தா நுழைந்து பிணத்தின் முகத்தை குனிந்து பார்த் தாள். போலிஸ்காரர் ஒரு நெருப்புக் குச்சியைக் கிழித்துக் காண்பித்தார். திடீ ரென்ற வெளிச்சத்தில் பெரும் நிழல்கள் நாற்புற சுவர்களிலும் தோன்றி அசைந் தன. அய்யோ... என்ற கதறலுடன் அரை மயக்கமானாள் சந்திரகாந்தா. அவளை போலிஸ்காரர் உதவியுடன் வெளியில் அழைத்து வந்து சுவரில் சாய்வாக உட் கார வைத்தான் நீலமேகம். அவருக்கு நெஞ்சடைப்பு போலிருக்கு, திடீர்னு கீழே விழுந்திட்டிருக்கார், பக்கத்திலிருந்த வங்க ஓடி வந்து தண்ணி கொடுக்கிறதுக் குள்ள அந்த இடத்துலேயே உயிர் போயிட்டிருக்குது... என்று கூறிக் கொண்டிருந்தார் போலிஸ்காரர். சங்கர னுக்கு விஷயம் சொல்லவும் அவன் கொஞ்ச நேரம் கழித்து நிதானமாக வந்து சேர்ந்தான்.

இறந்தவர் சந்திர காந்தாவின் அம்மாவினுடைய ஒன்றுவிட்ட தம்பி யாம். அவர் தனக்கு கல்யாணியைக் கட்டிக் கொடுக்கக்கூட முன்னால் கேட் டிருந்தாராம். அருகிலுள்ள கிராமத்தி லிருந்து கல்யாணத்துக்கு வந்திருக்கிறார். நல்லாக் குடிச்சிருப்பார் போலிருக்குது, அவருக்கு ரொம்ப நாளாவே இரத்த அழுத்தமும் இருந்தது என்றான். அவருடைய உறவினர்களுக்கெல்லாம் எந்தெந்த தொலைபேசிகளின் வாயிலா கவோ தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பிணம் அப்படியே பிணவறை யில் இருக்க, அபசகுனம் என்பதால் ஒத்திவைக்காமல் மணமக்களுக்கு சொல்லாமல் அவர்களுடைய முதல் இரவு நடந்தது. மறுநாள் காலையிலி ருந்தே கிராமத்திலிருந்து ஆண்களும் பெண்களும் வந்திருந்து மருத்துவமனை யின் வாயிலில் கூட்டமாக மண்ணில் அமர்ந்து அழுதபடி காத்திருந்தார்கள். அவர் இயற்கையாக சாகவில்லை என்ற நம்பிக்கையுடன் கல்யாணி வீட்டார் தான் விரோதத்தால் அடித்துப் போட்டுப் பணமும் பறித்திருக்கிறார்களென தங்க ளுக்குள் பேசிக்கொண்டார்கள்.

மாலை யில் பிணம் ஊருக்கு எடுத்துச் செல்லப் பட்டபோது நீலமேகமும் சந்திரகாந்தா வும் அம்மாவும் வேறு வழியில்லாமல் கூடவே சென்றார்கள். அங்கு பெரிய சண்டைகளுடன், தாரை தப்பட்டைகள் முழங்க குடியும் கொண்டாட்டமுமாக தகனம் நடத்தப்பட்டது. இரவு விடிந்த பிறகு, வீட்டின் எதிரில் மரக்கட்டைகளிலிருந்து புகைச்சுருள் பரவ, மேளம் உச்ச கதியில் அடிக்கப் பட்டுக்கொண்டிருந்தது. காலையிலேயே போலிஸ்காரர்கள் வந்து சுந்தரமூர்த்தி யின் அம்மா அப்பாவையும் கல்யாணி யையும் நீண்ட நேரம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். கணவனே போன பின்னால் யாரையும் குறை சொல்லிப் பயனில்லையென எந்தப் புகாரும் அளிக்காமல் நடந்த சம்பவத்தை மட்டும் விவரித்திருக்கிறாள் கல்யாணி. போலிசாரும் எழுதி கையெழுத்து வாங்கிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். வெயில் வேகமாக ஏறிக்கொண்டிருந் தது. பலர் அங்கங்கே நிழல்களில் நின் றும், நாற்காலிகளில் உட்கார்ந்தும் காத்துக் கொண்டிருந்தார்கள். நாலைந்து பேர் களாக ஓட்டலுக்கும் டீக்கடைகளுக்கும் போய் வந்தும் கொண்டிருந்தார்கள்.

வாழாவெட்டியான கல்யாணிக்கு என்ன வழி செய்வார்கள், எவ்வளவு சொத்து தருவார்கள் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். சிலர் பிணத்தை எடுக் கும் முன்பு அப்போதே பைசல் செய்து விட சுந்தரமூர்த்தி வீட்டாரிடம் கேட்க வேண்டுமெனக் கூறினார்கள். இப்போது சாவு வீட்டில் கூடாது, பதினாலாம் நாள் காரியம் முடிந்த பின்னால்தான் அதைப் பத்தியே பேச முடியும் என்றார்கள் மற்ற வர்கள். நடுப்பகலுக்குப் பின்னால், சங்கரன் நீலமேகத்தின் அருகில் வந்து அமர்ந்தான். நிறைய நாட்களுக்குப் பின் னால் சாதாரணமாகப் பேசுவதுபோல் தான் பேசினான். மேள சத்தத்தையும் மீறி குரல் ரகசியமாகக் கேட்டது. சுந்தர மூர்த்தி குடும்பத்துல எப்பவும் சண்டை தானாம்... அவங்க சொந்தக்காரர் ஒருத் தரே எங்கிட்ட இப்ப சொன்னார் என் றான். அவன் குடித்திருப்பான் போல வும் தோன்றியது. ஆனால் பெரிய துப்பைத் துலக்கிய பாவனை முகத்தில் தெரிந்தது. கூட்டுக் குடும்பம்ன்றதால சம்பாதிக்கிறதெல்லாம் பொதுதானாம். எல்லா சொத்தும் அப்பா பேரிலதான் இருக்குதாம். முந்தா நாள் ராத்திரி கூட அவங்க நடுவில பிரிச்சிக் கொடுக்க சொல்லி பெரிய பிரச்சனையாம் என் றான்.

அவனுடைய கால் சட்டைப் பையிலிருந்து அடித்த செல்போனில், இன்னும் கொஞ்ச நேரத்தில எடுத்திடு வாங்க என்று சத்தமாகப் பேசிவிட்டு வைத்தான். சொத்தை அவங்க அப்பா சுயார்ஜிதமா சம்பாதிச்சதால, யாருக்கும் உரிமை கிடையாதுன்னு சொல்றாராம்... கணவன் சொத்தில கல்யாணியும் பங்கு கேக்க முடியாதாம். ஆனா, இப்ப கல் யாணி கர்ப்பமாகியிருக்கிறாள். குழந்தை பிறந்த பின்னாலதான் தாத்தா சொத்தில பங்கு கேக்கலாம். அதனால, அவ இங்க தங்கியிருக்கவும் முடியாது என்று சட் டங்கள் மிகவும் பழக்கப்பட்ட முறை யில் கூறினான் சங்கரன். அப்போது, கணவன் மனைவிக்குள் சண்டையால் சுந்தரமூர்த்தி தற்கொலை செய்து கொண்டதாக தொலைபேசியில் பெரிய அண்ணன் முதலில் சொன்னது நீல மேகத்துக்கு ஞாபகம் வந்தது. அழுகை ஒலியை மீறி மேளம் தொடர்ந்து உற்சாகமுடன் முழங்கிக் கொண்டிருந்தது. சுற்றிலுமுள்ளவர்கள் ஆரம்ப சுவாரசியங்களை இழந்தும் சோர்வடைந்தும் பேசாமலிருந்தார்கள்.

ஒரு கசங்கிய செய்தித்தாள் பிரிக்கப் பட்டு பலருடைய கைகளிலும் மாறி வந்துகொண்டிருந்தது. நீலமேகத்திடமும் அது கொடுக்கப்பட்டது. இரண்டாம் பக்கம் ஓரமாக முக்கியத்துவமில்லாமல் சிறிய தலைப்புடன் அச்சிட்டிருந்ததை அவன் படித்துப் பார்த்தான். புதிதாக மணமான சுந்தரமூர்த்தி என்பவர் வயிற்று வலி தாளாமல் தற்கொலை என்று அதில் செய்தி வந்திருந்தது. கணவன் மனைவி இருவருடைய வயது களும் சில வருடங்கள் குறைவாகப் போடப்பட்டிருந்தன. அதைப் பலமுறை வெறுமனே நீலமேகம் படித்துக் கொண் டிருந்தான். மேள ஒலி சற்று ஓய்ந்தும் மீண்டும் புதிதாக எழுந்தும் கொண்டி ருந்தது. பையன் அதனால் ஈர்க்கப்பட்டு கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். சாயங்காலம் நெருங்கும் போதுதான் சுந்தரமூர்த்தியின் உடல் குளிர் சாதன கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டு ஆம்புலன்சில் வேகமாக வந்து இறங் கியது. மேள ஒலி விம்மியது. அழுகைக் குரல் எழ அனைவரும் முண்டியடித்துக் கொண்டுப் பார்க்க ஒரே சமயத்தில் நெருங்கினார்கள். அவற்றில் கல்யாணி மற்றும் சந்திரகாந்தாவின் குரல்கள் மட்டும் தனித்து ஒலித்தன.

சந்திரகாந்தா வின் அம்மா மயக்கமடைந்து சரிந்தாள். அவளை யாரும் கவனிக்கக்கூட இல்லை. எல்லாவற்றுக்கும் மேல் சந்திரகாந்தா வின் அழுகை பலமாகக் கேட்டது. அவளால் தாங்க முடியாமல் இறந்த சுந்தரமுர்த்தியை திட்டிக் கொண்டிருந் தாள். அவளை அடிப்பதுபோல் கோப மாக சிலர் பார்த்தார்கள். நீலமேகம் சுந்தரமூர்த்தியின் பிணத்தின் அருகில் தள்ளப்பட்டு சென்றான். பார்வையைக் கூச வைக்கும் வெள்ளைத் துணி உடம் பில் முழுமையாக சுற்றப்பட்டு முகம் மட்டும் தெளிவாகத் தெரிந்தது. அதில் சாவின் பயங்கரமும் துன்பமும் கொஞ்ச மும் இல்லை. அவன் கண்களை மூடி மிகவும் அமைதியுடன் ஆழ்ந்து உறங்கு வது போல் தோன்றியது.

Pin It