வெகுகாலத்துக்கு முன், வயதான ஒரு வர் மூங்கில்வெட்டிப் பிழைத்து வந்தார். அவர் ஒவ்வொரு நாளும் அதிகாலை யிலேயே எழுந்து மலைக்குச் சென்று விடுவார். வானுயர்ந்த மூங்கில்களில் பசிய இறகுகள் துளிர்த்து அடர்ந்து செழித்து வளைந்து கிடக்கும் காடுகளில் அலைந்து திரிவார். நல்ல இளமூங்கில் களைத் தெரிந்தெடுத்து வெட்டிக்கொள் வார். அவற்றில் கனமானவற்றை நீள் வாக்கில் பிளந்தும் மெல்லியவற்றின் மூட்டுகளில் குறுக்கு வாக்கில் வெட்டித் துண்டுகளாக்கியும் கட்டிக்கொள்வார். அவற்றைத் தலைச்சுமையாகவே வீட்டுக்கு எடுத்துச் செல்வார். வீட்டில் அவரும் அவரது மனைவியும் மூங்கில் களைக்கொண்டு முறம், கூடை போன்ற வீட்டு உபயோகப்பொருட்களைச் செய் வார்கள். அவற்றை விற்பதன் மூலம் கிடைத்த சிறிய வருவாயிலேயே அவர் கள் காலம் கழிக்க வேண்டியிருந்தது. அதனால் அந்த முதியவர் ஏழையாகவே இருந்தார். அவருக்குக் குழந்தையும் பிறக்கவில்லை. இந்த வயதான காலத் தில் அவருக்கு உதவ ஒரு குழந்தையைக் கடவுள் அனுப்பி வைக்கவில்லை. அத னாலேயே அவர் எப்போதும் சோக மாகக் காட்சியளித்தார்.

எவ்வளவுதான் வயதானாலும், மரணம் வந்து கல்லறை யில் கிடத்தும் வரையிலும் தனக்கு வேலையிலிருந்து ஓய்வு கிடைக்கப் போவதில்லை என்று நினைத்தார். ஒருநாள் காலை வழக்கம்போல் அவர் வேலைக்குக் கிளம்பினார். நன்கு செறிந்து வளர்ந்த இளம் மூங்கில் புதர் ஒன்றைக் கண்டார். எந்தெந்த மூங்கில் களை வெட்டினால் தனக்குப் பயன்படு மெனத் தேடிப் பண்ணையைச் சுற்றி வந்தார். சில மூங்கில்களைக் கணித்து வெட்டு வதற்கும் ஆயத்தமானார். திடீரென அந்தப் பச்சை மூங்கில் பண்ணைக் குள்ளிருந்து ஒளிவெள்ளம் பொங்கிப் பெருக்கெடுத்தது. முழுநிலவு தோன்றி யதுபோல் காடு முழுதும் பொலிந்தது. இது என்ன அதிசயம். அவர் கூர்ந்து நோக்கினார். ஒரு குறிப்பிட்ட மூங்கி லின் அடியிலிருந்துதான் அத்தனை ஒளியும் ஊற்றெடுப்பதைக் கண்டார்.

கோடரியைக் கீழே எறிந்தார். அந்த ஒளி மூங்கிலை நோக்கி விரைந்தார். நெருக் கத்தில் போகப்போகத் தெரிந்தது. அந்த மூங்கில் கழியின் அடியிலிருந்த ஒரு துளைக்குள்ளிருந்தே ஒளி பொங்குகிறது! விந்தையிலும் விந்தை! அந்த ஒளியின் நடுவில் நிற்பது நிச்சயமாக ஒரு மனிதப் பிறவி தான். ஆனால் அதன் உயரம்! மூன்றங்குலம்! அதன் அழகோ? கண்ணைப் பறித்தது! கொள்ளை அழகு! ‘‘என்னுடைய வேலை மூங்கில்களுக் கிடையேதான். இங்கேயே உன்னைக் காண்கிறேன். நீ எனக்காக அனுப்பப் பட்ட குழந்தைதான்'' என்று சொல்லிக் கொண்ட அந்தப் பெரியவர் அச்சிறிய குழந்தையை ஒரு பூவைப்போல் கையில் ஏந்தி வீட்டுக்கு எடுத்துச் சென்றார். மனைவியிடம், ‘‘இக்குழந்தையை நாமே வளர்க்கலாம்'' என்று சொல்லிக் கொடுத் தார். அவரது மனைவி குழந்தையை ஒரு கூடைக்குள் வைத்தாள்.

குழந்தை மிக மிக அழகாக இருந்தது. என்றாலும் மிகமிகச் சிறியதாக இருக்கிறதே, எவ் விதத்திலும் காயம் பட்டுவிடக்கூடாதே. அத னால்தான் பாதுகாப்புக்காக அப்படிக் கூடையில் பத்திரமாக வைத்தாள். அந்த முதிய தம்பதியினர் இப்போது பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர் களுக்கென ஒரு குழந்தை இல்லாதிருந் ததே அவர்களின் வாழ்நாள் சோகமாக இருந்தது. ஆச்சரியமான வகையில் அந்தக் குழந்தை அவர்களுக்குக் கிடைத் தது. அந்த முதிய வயதில் அக்குழந்தை யின்மீது அவர்கள் அத்தனை அன்பினை யும் கொட்டி மகிழ்ந்தனர். குழந்தை கிடைத்ததிலிருந்தே அந்த முதி யவர் மூங்கில் முடிச்சுகளில், வெட்டுக் குறிகளில் தங்கத்தைக் கண்டெடுத்தார். மூங்கில்களைப் பிளந்தபோது தங்கம் மட்டுமல்ல, விலை மதிப்புமிக்க உயர்ந்த ரகக் கற்களும் கிடைத்தன. அதனால் படிப்படியாகப் பெரும் பணக்காரரா னார். அவர் ஒரு அழகிய வீட்டைக் கட்டினார். அவர் இப்போது பழைய ஏழை விறகு வெட்டி அல்ல; மிகப் பெருஞ்செல்வர்.

மூன்று மாதங்கள் விரைவாகக் கடந் தன. விந்தையிலும் விந்தை! அந்த மூன் றங்குல மூங்கில் குழந்தை முற்றிலும் வளர்ந்த குழந்தையாகத் தோற்றம் கொண்டாள். அதனால் அந்த முதிய வளர்ப்புப் பெற்றோர் அவளது தலை முடியைத் திருத்தி உயர்ந்த கிமோனா உடைகளை அணிவித்து அழகுபார்த்த னர். அழகு என்றால் அழகு! அப்படி யொரு அழகு! அதனாலேயே அந்த முதியவர்கள் அவளை ஒரு இளவரசி யைப்போல திரைக்குப்பின் அமர்த்தி னார்கள். யார் கண்ணிலும் படாமல் பார்த்துக் கொண்டனர். அவளுக்குத் தேவையானதைச் செய்ய அவர்களே காவல் நின்றனர். அவள் ஒளியை உருக்கிச் செய்யப்பட்டதுபோல் தோன் றினாள். அவர்கள் வீடு முழுதுமே ஒரு மெல்லிய தண்ணொளி நிரம்பித் தோற் றமளித்தது. அதனால் இரவிலும்கூடப் பகல் போலிருந்தது. அவள் உடனிருந் தாலே அங்கிருக்கும் எல்லோருக்கும் நலம் பயக்கும் இனிய உணர்வு தோன் றியது. அப்பெரியவர் எப்போதாவது வெறுமையாக அல்லது வருத்தமாக உணர்ந்தால், தன் வளர்ப்பு மகளைப் பார்ப்பார். துயரமெல்லாம் ஓடிப் போகும். இளமைக்காலத்தைப்போல மகிழ்ச்சியாகிவிடுவார்.

அந்த வினோதக் குழந்தைக்குப் பெயர் சூட்டும் நாளும் வந்தது. அந்த நாட்டி லேயே எல்லோரும் நன்கறிந்த புகழ் பெற்ற பெயர் வைப்பவரை அழைத்து வந்தார்கள். அவர் குழந்தையைப் பார்த் ததும் வியந்துபோனார். அவள் நிலவுக் கடவுளின் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும். அதனால்தான் முழு நிலவு போல எப்போதும் மெல்லிய தண்ணொ ளியைத் தந்துகொண்டிருக் கிறாள். அவர் அக்குழந்தைக்கு நிலவொளி இளவரசி என்றே பெயரிட்டார். பெயர் சூட்டும் விழா மூன்றுநாள் கொண்டாட்டமாக இருந்தது. கவிதை, இசை, நடனம் என அனைத்தும் இருந்தன. அந்த முதிய தம்பதியினரின் உறவினர், நண்பர்கள் எல்லோரும் வந்திருந்தனர். ஊர்மக்கள் எல்லோரை யும் அழைத்திருந்தனர். அனைவரும் விழாக் கொண்டாட்டங்களில் பெரு மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் கலந்துகொண்டனர். இப்படியாக நில வொளி இளவரசியின் பெயர் சூட்டு விழா மிகுந்த மகிழ்ச்சிக் கொண்டாட் டங்களுடன் நிறைவேறியது.

நிலவொளி இளவரசியைப் பார்த்த எல்லோருமே இவ்வளவு அழகான பெண்ணை இதுவரை பார்த்ததில்லை யெனப் புகழ்ந்தார்கள். இந்த நிலவுல கத்து அழகையெல்லாம் ஒன்றுதிரட்டி னாலும் அவளுக்கு ஈடாகுமா? அவள் முன் வெளிறிப் போகுமென்றார்கள். அவள் அழகின் புகழ் உலகெங்கும் பரவியது. பலரும் அவளைக் கரம் பிடிக்க விரும்பினார்கள். அவளை ஒரு முறை பார்த்தாலே போதும் என்றவர் களும் இருந்தார்கள். உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் அவளை மணக்க விரும்பிய பலர் அவள் வீட்டின்முன் காவல் நின்றனர். அவர் களில் சிலர் வீட்டு வேலியில் சிறிய துளைகள் இட்டு அதன் வழியே அவளை ஒருமுறையாவது பார்த்துவிட ஆவல் கொண்டனர். அவள் ஒரு அறை யிலிருந்து இன்னொரு அறைக்குச் செல்லமாட்டாளா? அல்லது தாழ்வாரத் தில் உலவ வரமாட்டாளா? ஒரு முறை யாவது அவளைக் கண்டுவிட முடியாதா? இளைஞர்கள் அலைக் கழிந்தனர். உறக்கத்தைக்கூட மறந்த னர். அங்கேயே இரவும் பகலும் பழியாகக் காத்துக் கிடந்தனர். ஆனால் அவர்கள் நினைத் தது எதுவும் நடக்கவில்லை.

சிலர் அந்த முதியவரிடம், அவரது மனைவியிடம், வீட்டு வேலைக்காரர்களிடம் பேசிப் பார்க்க முயன்றனர். அந்த வாய்ப்புகூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இத்தனை ஏமாற்றங்கள் இருந்தாலும் அனைத்தையும் தாங்கிக்கொண்டு பொறு மையாக இரவு பகலின்றித் தொடர்ச்சி யாகக் காத்திருந்தார்கள். அவர்களின் ஆவல் அத்தகையது; இளவரசியின் அழகு அத்தகையது. கடைசியாக அவர்களில் பலரும் தங்கள் ஆவல் ஈடேறாதெனத் தெரிந்து மனம் சோர்ந்தனர். நம்பிக்கையிழந்து வீடு திரும்பிவிட்டனர். அவர்களில் ஐந்து பேர் மட்டும் ஆவலும் உறுதியும் குலை யாமல் தடைகளையெல்லாம் தாண்டி விட முடியுமென அங்கேயே ஒட்டிக் கிடந்ததுபோல் தோன்றியது. அவர்கள் உணவின்றிப் போனாலும் கிடைத்ததைத் தின்றுகொண்டு வீட்டின் வெளியிலேயே நின்றுகொண்டிருந்தனர். மழை பெய்தா லும் வெயில் காய்ந்தாலும் காலநிலை மாறினாலும் அவர்கள் கலங்கவில்லை. கல்லுளி மங்கர்களாக அங்கேயே நின்றார்கள். சிலநேரங்களில் அவர்கள் இளவரசிக்குக் கடிதங்கள் எழுதி அனுப்பினார்கள். இள வரசி மனம் இரங்கவில்லை. அவர்களுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

கடிதங்கள் பதிலளிக்காததால் அவர்கள் கவிதை எழுத முற்பட்டனர். உணவு, உறக்கம், ஓய்வு, வீடு அனைத்தையும் மறந்து அலைக்கழிக்கும் காதலைக் கவிதையாக்கி அனுப்பினார்கள். இருந் தாலும் நிலவொளி இளவரசிக்கு அவர் களின் கவிதைகள் கிடைத்ததாகக்கூடத் தெரிவிக்கவில்லை. நம்பிக்கையற்ற நிலையிலேயே குளிர் காலமும் கடந்துவிட்டது. பனித்திர ளும் உறைபனியும் குளிர்காற்றும் ஒருவழி யாக வசந்தத்தின் மெல்லிய வெப்பத் தில் காணாமற்போயின. கோடை வந்தது. வெயில் வெளிறிக் காய்ந்தது. வானத் தையும் பூமியையும் ஒருசேர எரித்தது கதிர். அப்போதும் அந்த நம்பிக்கையுள்ள வீரர்கள் காத்திருந்தனர். இவ்வாறாக நீண்ட பலமாதங்களின் முடிவில் அவர்கள் அந்த முதியவரைச் சந்தித்து, அவர்கள் மீது கருணை காட்டுமாறும் நிலவொளி இளவரசியைக் கண்ணில் காட்டு மாறும் கெஞ்சிக் கேட்டனர். ஆனால் அவரோ, ‘‘நான் அவளைப் பெற்ற தந்தையல்ல. நான் சொல்வதை அவள் கேட்டேயாக வேண்டுமென்ப தில்லை. அதனால் அவள் விருப்பத் துக்கு மாறாக என்னால் வற்புறுத்த முடி யாது'' என்று கைவிரித்தார்.

முதியவரின் திட்டவட்டமான பதிலைக் கேட்ட ஐந்து வீரர்களும் அவரவர் வீட்டுக்குத் திரும்பிவிட்டனர். என்றா லும் அந்த அழகுப்பெருமிதம் கொண்ட இளவரசியின் இதயத்தில் இடம்பிடிக்க என்ன வழி? என்று அலைபாய்ந்தனர். குறைந்தபட்சம் தங்கள் குறையையாவது அவள் கேட்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அவர்கள் தங்கள் வழிபாட்டு மாலை களோடு வீட்டுத் தெய்வத் திருவுருவங் களின் முன் மண்டியிட்டனர். உயர்ந்த நறுமணத் திரிகளை ஏற்றிவைத்தனர். தங்கள் இதயக் காதலை நிறைவேற்றி அருளுமாறு புத்தபகவானிடம் வேண்டிப் பிரார்த்தனை செய்தனர். இப்படியாகப் பலநாட்கள் கழிந்தன. ஆனாலும் அவர் களால் அவளை மறந்து வீடுகளில் அமர்ந்திருக்க முடியவில்லை. மீண்டும் அவர்கள் மூங்கில் வெட்டு பவரின் வீட்டின் முன் நின்றனர். இம் முறை அந்த முதியவர் அவர்களைப் பார்க்க வெளியே வந்தார். யாராக இருந் தாலும் அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் பார்ப்பதில்லையென்பது இளவரசியின் தீர்மானமா? எனக் கூறு மாறு அவர்கள் அந்த முதியவரிடம் வேண்டிக் கேட்டனர். அவர்களுக்காக இளவரசியிடம் பேசுமாறும் அவர்களின் காதலின் உயர்வை அவளுக்குக் கூறு மாறும் அவரைக் கெஞ்சினர்.

இளவர சியைக் கரம் பிடிக்கும் ஆர்வமிக்க நம் பிக்கையில் பனிக் காலத்தின் குளிரிலும் கோடையின் வெப்பத்திலும் கூரைகளற்ற வெட்ட வெளியில் காலமெல்லாம் ஊண், உறக்கம் இன்றி, ஓய்வினை இழந்து எவ்வளவு நீண்ட காலமாகக் காத்திருக் கிறார்கள் என்பதையும் ஒரே ஒருமுறை தங்களின் காதலை அவளிடம் எடுத்துக் கூற ஒரு வாய்ப்பு கிடைத்தால் போதுமென்றும் இதுவரை பட்ட துன் பத்தையெல்லாம் மகிழ்வாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதையும் அவளுக்குத் தெரிவிக்குமாறு அவரிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டனர். அந்த முதியவர் அவர்களின் காதல் கதைகளையெல்லாம் பரிவுடன் செவி மடுத்துக் கேட்டார். காதலில் உண்மை யான நம்பிக்கையுள்ள அந்த இளைஞர் களைப் பார்க்கும்போது அவர் சிறிது வருத்தமாக உணர்ந்தார். இவர்களில் யாராவது ஒருவரை தனது மகள் மணந்துகொள்வது நலமாக இருக்குமே என்ற எண்ணமும் அவரது இதயத்தின் ஆழத்தில் அரும்பியது. அவர் நேராக நிலவொளி இளவரசியிடம் சென்றார். ஒருவிதத் தயக்கத்தோடு ஆனால் மிகுந்த பாசத்தோடும் மரியாதையோடும் உரை யாடலைத் தொடங்கினார். ‘‘நிலவொளி இளவரசி. நீ ஒரு விண் ணுலகக் குழந்தைதான். இருந்தாலும் நான் உன்னை என் சொந்தக் குழந்தை யாகவே வளர்த்திருக்கிறேன். நீயும் என் பாதுகாப்பில் மகிழ்ச்சியாகவே இருக்கி றாய். உன் நலனுக்காக நான் விரும்பு வதைச் சொல்கிறேன். நான் சொல்கிற படி நடக்கமாட்டாயா?''

‘‘அப்பா. நீங்கள் சொல்லி நான் செய்யக் கூடாததென்று எதுவுமே இல்லை. நான் உங்களை எனது சொந்தத் தந்தையா கவே நேசிக்கிறேன். உங்கள்மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டுள் ளேன். நான் இந்த பூமிக்கு வருவதற்கு முன்பிருந்த காலம் உண்மையிலேயே எனக்கு நினைவில் இல்லை. அதை நினைத்து நினைத்துப் பார்க்கிறேன். ஆனாலும் எதுவுமே நினைவுக்கு வர வில்லை.'' வளர்ப்புமகளின் உண்மையான வார்த் தைகளைக் கேட்ட முதியவருக்குக் கொள்ளை மகிழ்ச்சி. மகளுக்கு இசைந்த முறையில் திருமணம் செய்துவிட வேண்டும். அவளுக்கு ஒரு பாது காப்பு ஏற்படுத்த வேண்டும். அதுவே அந்த முதியவரின் கவலை. அவர் தொடர்ந் தார்:

‘‘அம்மா. நான் முதியவன், வயதோ எழுபதைத் தாண்டிவிட்டது. எப்போது வேண்டுமானாலும் மரணம் நேரலாம். இப்போதேகூட நேர்ந்துவிடலாம். உனக்குத் திருமணம் செய்விக்க வேண் டியது எனது கடமை. வெளியே காத்தி ருக்கும் ஐந்து இளைஞர்களையும் நீ பார்க்க வேண்டும். அவர்களில் ஒரு வரைத் தேர்வு செய்வதுதான் சரியானது. அது அவசியமானதுங்கூட.''

‘‘ஏன்? ஏன் அப்படிச் செய்ய வேண் டும்? எனக்கு இப்போது திருமணம் செய்ய விருப்பமில்லை.''

இளவரசி திருமணப் பேச்சைத் தவிர்க்க முயன்றாள்.

‘‘அம்மா, பல வருடங்களுக்கு முன் மாபெரும் ஒளியின் நடுவில் உன்னைக் கண்டெடுத்தேன். அப்போது நீ மூன் றங்குல உயரமே இருந்தாய். நீ மறைந் திருந்த மூங்கிலின் வெளிச்சமே என்னை உன்னிடம் சேர்த்தது. அதனால்தான் நீ சாதாரண மனிதப்பெண்ணிலும் மேம் பட்டவள் என்று நான் நம்புகிறேன். நான் உயிரோடிருக்கும் காலம்வரை நீ விரும்பியபடியே இருந்து கொள்ளலாம். ஆனால் நான் இல்லாமல் போகும் நாளும் வருமே. அப்போது உன்னை யார் கவனிப்பார்கள்? உனக்கென்று ஒருவர் வேண்டும். அதனால்தான் சொல் கிறேன். நான் உன்னிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான். திருமணம் செய்ய ஒத்துக்கொள். அந்த ஐந்து வீரர்களும் நல்ல வலிமை நிறைந்தவர்கள். அவர் களை நீ ஒரேநேரத்தில் ஒன்றாகப் பார். அவர்களில் உனக்குப் பிடித்த ஒருவரைத் திருமணம் செய்துகொள்.''

ஒருவிதத்தில் அந்த முதியவர் மன்றாடி னார் என்றே சொல்லலாம்.

‘‘அப்பா, எனக்கு நன்றாகத் தெரியும், எல்லோரும் சொல்வதுபோல் நான் ஒன் றும் அவ்வளவு அழகல்ல. அந்த ஐந்து வீரர்களைப்பற்றி நமக்கு உண்மையில் எதுவும் தெரியாது. நான் அவர்களில் ஒருவரைத் திருமணம் செய்யச் சம்மதித் தாலும் அவர் பிற்காலத்தில் மனம் மாற லாம். நீங்கள் சொல்கிறீர்கள், அவர்கள் மதிப்புமிக்க படைத்துறை வீரர்கள், தகுதியானவர்கள் என்று. ஆனால் எனக்கு ஏனோ அவர்களைப்பற்றி உறுதி யான எண்ணம் ஏற்படவில்லை. நம்பிக் கைக்குரியவர்கள் என்று தெரியாமலிருக் கும்போது அவர்களைப் பார்ப்பது சரியென்று எனக்குத் தோன்றவில்லை.''

மறுத்தாலும் மிகுந்த மரியாதையுட னேயே பதிலளித்தார், இளவரசி.

‘‘நீ சொல்வதெல்லாம் நியாயந்தான், அம்மா, அப்படியானால் நீ எந்த மாதிரி யான மனிதர்களைப் பார்க்க ஒப்புக் கொள்வாய்? உனக்காகக் காத்திருக்கும் இவர்கள்மீது நான் திடீர்ப் பரிவு கொண்டுவிடவில்லை. இந்த ஐந்து வீரர்களையும் நான் பல மாதங்களாகப் பொருட்படுத்தவில்லை. ஆனாலும், அவர்கள் கோடையிலும் பனியிலும் முழுவதுமாக இந்த வீட்டிற்கு வெளி யிலேயே நின்றிருக்கிறார்கள். உன் மனத்தில் இடம் பிடித்துவிடும் ஆசை யில் உணவையும் தூக்கத்தையுங்கூடப் பல வேளைகளில் இழந்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்களோடு பேசிப் பார்த்தேன். நல்லவர்களாகத் தெரிவ தால்தான் உன்னிடம் வந்தேன். இதற்கு மேலும் நீ என்ன எதிர்பார்க்கிறாய்?''

இளவரசியை எப்படியாவது திருமணத் துக்குச் சம்மதிக்கச் செய்துவிட வேண் டும் என்று அந்தப்பெரியவர் முயன்றார்.

‘‘அப்படியா? சரி. நான் அவர்களின் காதலைச் சோதிக்கவேண்டும். நான் சொல்லும் பொருட்களை அவர்கள் கொண்டு வரவேண்டும். அப்போது தான் அவர்கள் காதலின் உண்மை தெரிய வரும். நான் அவர்களைப் பார்ப்பதா? வேண்டாமா? என்பதை அப்போது முடிவுசெய்துகொள்ளலாம்'' என்றாள், இளவரசி. முதியவரும், ‘‘உன் விருப்பம்போலவே செய்யலாம், அம்மா'' என்று சொல்லிச் சென்றார். அன்று மாலை அந்த ஐந்து வீரர்களும் இளவரசியின் வீட்டின் முன்நின்று மாறி மாறிக் குழல் இசைக்கத் தொடங் கினர். வரம்பற்ற, தங்கள் அழியாக் காதலையே கவிதைகளாக்கிப் பாடினார்கள். அந்த முதியவர் வெளியே வந்தார். இளவர சியை மணக்க அவர்கள் பொறுமையுடன் மேற்கொள்ளும் விடாமுயற்சிக்காக, அவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களுக் காக இரக்கம் தெரிவித்தார்.

இளவரசி விரும்பும் பொருளை யார் கொண்டு வருகிறார்களோ அவரை மணக்க இள வரசி ஒப்புக்கொள்வதான செய்தியை யும், இது அவர்களுக்கான சோதனை என் பதையும் தெரிவித்தார். வீரர்கள் ஐவரும் போட்டியை ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்குள் பொறாமை ஏற்படாமல் தடுக்கும் நல்ல திட்டம் என்றும் நினைத்தனர். நிலவொளி இளவரசி ஒவ்வொரு வீர ருக்குமான போட்டியைத் தந்தைக்குத் தெரிவித்தாள். இந்தியாவிலிருக்கும் புத்தருடைய கற் கிண்ணத்தை முதல் வீரர் கொண்டுவர வேண்டும். கிழக்குக் கடலில் அமைந்த ஹொரேய் மலையின் உச்சியிலுள்ள அதிசய மரத் தின் கிளையொன்றை இரண்டாம் வீரர் கொண்டுவர வேண்டும். அந்த மரத்தின் வேர்கள் வெள்ளியாகவும், அடிமரம் தங்கமாகவும் இருக்கும். அதன் கிளை களில் வெண்ணிற நகைகள் கனிகளாகத் தொங்கும். மூன்றாம் வீரர் சீனாவுக்குச் சென்று நெருப்புஎலியைக் கண்டுபிடித்து அதன் தோலைக் கொண்டுவர வேண்டும்.

நான்காம் வீரர் ஐந்து நிறங்கள் மின்னும் கல்லைத் தலையில் சுமந்து திரியும் டிராகனிடமிருந்து அந்தக் கல்லைக் கொண்டுவர வேண்டும். ஐந்தாம் வீரர் ஒரு அதிசயத் தூக்கணாங் குருவியைக் கண்டுபிடிக்க வேண்டும். அதன் வயிற்றினுள் இருக்கும் முத்துச் சிப்பியைக் கொண்டுவர வேண்டும். இவையெல்லாம் மிகமிகக் கடினமான பணிகள் என அந்த முதியவர் நினைத் தார். அதனாலேயே இந்தச் செய்திகளை வீரர்களிடம் தெரிவிக்கத் தயங்கினார். ஆனால் இளவரசியோ மாற்று வழிகள் அல்லது வேறு நிபந்தனைகள் ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை. அதனால் இளவரசியின் உத்தரவுகளை வார்த் தைக்கு வார்த்தை மாறாமல் அந்த ஐந்து வீரர்களுக்கும் அறிவித்தார். அவர்கள் என்ன செய்யவேண்டுமென்று எதிர் பார்க்கப்பட்டவற்றைக் கேட்டதும் அவர்கள் நொறுங்கிப் போனார்கள். அவர்களுக்குக் கொடுக்கப் பட்ட வேலை எப்போதுமே செய்ய முடியாததென்று மனம் வெறுத்துத் தொங்கிய முகங் களுடன் வீடுகளுக்குத் திரும்பினர். சில நாட்கள் கடந்தன. இளவரசியை நினைத்ததும் அவர்களின் இதயக்காதல் மீண்டெழுந்தது. இளவரசி விரும்பி யதை எப்படியாவது கொண்டுவந்து அவள் கையில் கொடுத்துவிட வேண்டு மெனத் தாங்களாகவே அவர்கள் திடப் படுத்திக் கொண்டனர்.

முதல் வீரன், தான் புத்தரின் பாத்தி ரத்தைத் தேடிப் புறப்பட்டுவிட்டதாக வும் விரைவிலேயே அதை அவளிடம் கொண்டுசேர்ப்பதாகவும் இளவரசிக்கு செய்தியனுப்பினான். ஆனால் பய ணங்கள் அந்தக் காலத்தில் மிகக் கடின மானவை. அபாயங்கள் நிறைந்தவை. அந்த வீரனுக்கு வெகுதூரத்திலிருக்கும் இந்தியாவுக்குக் கடல்கடந்து செல்லும் மனத்துணிவு இல்லை. அவன் க்யோட் டோவிலுள்ள கோவில் ஒன்றுக்குச் சென்றான். அங்கிருந்த மதகுருவிடம் பெரும்பணத்தைக் கொடுத்து, திருக் கோவிலின் புனித மேடையிலிருந்த கற்கிண்ணம் ஒன்றை எடுத்து வந்தான். அதனைத் தங்கஇழைகள் பின்னப்பட்ட ஒரு துணியில் பொதிந்து வைத்தான். மூன்றாண்டுகள் க்யோட்டோவிலேயே அமைதியாகக் காத்திருந்தான். பின்னர் வீடு திரும்பி, அந்தத் தங்கத்துணிக்குள் பொதிந்திருந்த கற் கிண்ணத்தை அந்த முதியவரிடம் கொடுத்தான். நிலவொளி இளவரசிக்கு ஆச்சரியமான ஆச்சரியம். அந்த வீரர் இவ்வளவு விரைவில் வந்துவிட்டாரே.

இளவரசி ஆவலுடன் தங்கத்துணியை அவிழ்த்து கற்கிண்ணத்தை எடுத்தாள். அந்த அறை முழுதும் ஒளி வீசும் என எதிர் பார்த் தாள். அந்தக் கற்கிண்ணத்தில் எந்த ஒளி யுமில்லை. அது சாதாரணமாக இருந்தது. அது புத்தர் பயன்படுத்தியதல்ல. போலிப்பொருள் என்று இளவரசி கண்டுகொண்டாள். அதை உடனேயே திருப்பியனுப்பினாள். அவமானத்தில் சிறுத்துப்போனான் அந்த வீரன். அவன் கற்கிண்ணத்தை வீசியெறிந்தான். மனம் வெதும்பி வீட்டுக்குத் திரும்பினான். இளவர சியைக் கரம்பிடிக்கும் நம்பிக் கையை முற்றாக இழந்தான். இரண்டாம் வீரன் அவனது பெற்றோரி டம் உடல்நலனுக்காக மாறுதல் வேண்டி வேற்×ர் செல்வதாகக் கூறினான். நில வொளி இளவரசியின் காதலுக்காகப் பயணம் மேற்கொள்வதைப் பெற்றோரி டம் தெரிவிக்க அவனுக்கு வெட்கமாக இருந்தது. அவன் வீட்டை விட்டுப் புறப் பட்டதும், தங்கத்தாலும் வெள்ளியாலு மான மரத்தைத் தேடி ஹொரேய் மலைக்குச் செல்வதாகவும் விரைவி லேயே அவள் விரும்பிய மரக்கிளை யுடன் வருவதாகவும் இளவரசிக்குச் செய்தியனுப்பினான்.

பாதித்தூரம் சென் றதும், தன்னோடு வந்த பணியாட்கள் அனைவரையும் திருப்பியனுப்பினான். கடற்கரைக்குச் சென்றதும் ஒரு சிறிய கப்பலில் ஏறினான். மூன்று நாட்கள், தொடர்ந்த பயணத்தின் பின் ஒரு தீவை அடைந்தான். அங்கு சில தச்சுத்தொழி லாளர் களைக் கொண்டு தனக்காக ஒரு வீட்டை அமைத்தான். அந்த வீடு மற்ற வர்களால் அணுகமுடியாதபடி இருந் தது. அந்த வீட்டில் நெடுநாட்கள் ஆறு பொற்கொல்லர்களுடன் இரகசியமாகத் தங்கினான். அவர்களைக் கொண்டு தங்கத்தாலும் வெள்ளியா லும் நகைமரக் கிளை ஒன்றைச் செய்துமுடித்தான். அதனை ஹொரேய் மலையில் வளரும் அந்த அதிசய மரத்தின் கிளையென்று சொல்லி இளவரசியைத் திருப்திப்படுத்தி விடலாமென நினைத்தான். ஹொரேய் மலையைப்பற்றி அவன் தகவல் கேட்ட எல்லோருமே அது புராணகாலக் கட்டுக் கதையென்றும் அந்த மலை உண்மை யானதல்ல என்றுமே கூறியிருந்தனர். வெண்ணிற நகைகள் தொங்கும் தங்க மரக்கிளையைச் செய்து முடித்ததும் அவன் வீட்டுக்குத் திரும்பினான். நீண்ட பயணத்தில் களைத்துச் சோர்ந்ததுபோல வேடமணிந்தான். அந்த நகைமரக் கிளையை ஒரு அழகிய அரக்குப் பேழையில் வைத்து அந்த முதியவரிடம் கொடுத்து இளவரசியிடம் தன் பரிசாக அளிக்கக் கோரினான்.

பயணத்தில் களைத்த தோற்றத்தில் அந்த வீரனைக் கண்ட முதியவர் முற்றிலும் ஏமாந்துபோனார். அவன் பயணத்தி லிருந்து மரக்கிளையுடன் அப்போது தான் வந்திருப்பான் போலும் என எண்ணிக்கொண்டார். அந்த முதியவர் மரக்கிளையை இளவரசியிடம் காட்டி அது இந்த உலகிலேயே காணக் கிடைக்காத அற்புதப்பொருளென்றும் அருஞ் செல்வமென்றும் புகழ்ந்தார். இளவரசி அந்த வீரனைச் சந்திக்க ஒப்புதல் தருமாறு மீண்டும் மீண்டும் வேண்டினார். ஆனால் இளவரசியோ அமைதியாக இருந்தாள். அவள் முகத் தில் திருப்தியின் சாயல் இல்லை. ஏமாற்றமாகக் காட்சியளித்தாள். அத னால், முதியவர் அந்த வீரனின் எடுப் பான ஆண்மைத் தோற்றம், கண் காணாக் கடலிலுள்ள ஹொரேய் மலைக்குப் பயணம் மேற்கொண்டு வெற்றியுடன் திரும்பியுள்ள வீரம், வலிமை, திண்மை அனைத்தையும் பலபடப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

நிலவொளி இளவரசி அந்த மரக் கிளையைக் கையிலெடுத்துக் கூர்ந்து நோக்கினாள். அவள், தன் பெற் றோரிடம், ‘‘இது உண்மையானதல்ல, செயற்கை. எனக்குத் தெரியும், ஹொரேய் மலைக்குச் சென்று இவ்வளவு விரை வில் திரும்ப முடியாது. அதிலும் அங் குள்ள வெள்ளிவேர் தங்க மரத்திலிருந்து கிளையெடுப்பது அவ்வளவு எளிதல்ல. இது நகைக்கலைஞர்களைக் கொண்டு செய்ததுதான். இதை நான் நம்ப மாட்டேன்.'' என்றாள். வேறுவழியின்றி அந்த முதியவர் காத்து நிற்கும் வீரனைக் காண வீட்டுக்கு வெளியில் வந்தார். அவரைக் கண்ட தும் அந்த வீரன் அவரை ஆவலுடன் விரைந்து அணுகினான். அந்தக் கிளையை அவன் எங்கே கண்டுபிடித் தான் என அந்த முதியவர் வினவியதும் அவன் சிறிதும் தயக்கமின்றி நீண்ட தொரு கதையைக் கூறினான். ‘‘இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு கப்பலில் திறமையான மாலுமி களுடன் ஹொரேய் மலையைத் தேடிப் புறப்பட்டேன். காற்றின் போக்கிலேயே சிலகாலம் போய்க்கொண்டிருந்தோம். ஒருவழியாக வெகுதூரத்திலுள்ள கிழக்குக்கடலுக்குச் சென்று சேர்ந் தோம்.

அப்போது கடும்புயல் எழுந்தது. பல நாட்கள் திசை தெரியாமல் தவித் தோம். திசைகாட்டியும் பயனற்றுப் போனது. கடைசியில் நாங்கள் பெயர் தெரியாத ஒரு தீவின் கரையில் தூக்கி எறியப்பட்டோம். அங்கே நான் பேய்கள் குடியிருக்கும் ஒரு இடத்தைக் கண்டேன். அவை என்னைக் கண்டதும் அருகில் நெருங்கிவந்தன. என்னைக் கொன்று தின்றுவிடப்போவதாக பய முறுத்தின. நானா பயப்படுவேன்? அஞ்சாமல் அவற்றோடு பேசிப் பழ கினேன். ஒரு வழியாக அந்தக் கோரப் பேய்கள் என்னோடு இணக்கம் காட் டின. அவற்றின் உதவியோடு உடைந்த கப்பலைப் பழுது பார்த்து மீண்டும் கடலில் பயணம் புறப்பட்டோம். நாங் கள் கொண்டு சென்ற உணவும் தீர்ந்து விட்டது. கடற்காய்ச்சலால் பெரும் அவதியுற்றோம்.

கடைசியாக ஐநூறா வது நாளில் தூரத்துத் தொடுவானத்தில் மலையின் உச்சி போன்ற ஒன்றைக் கண்டேன். நெருங்க நெருங்க அது ஒரு தீவு என்பதும் அதன் நடுவில் உயர மான, பெரிய மலையொன்று இருப் பதும் தெரிந்தது. நான் கரையிறங்கி னேன். இரண்டு, மூன்று நாட்கள் அங்கேயே அலைந்து திரிந்தேன். திடீ ரென்று கடற்கரையில் ஒரு ஒளியுருவம் என்னை நோக்கி வருவதைக் கண் டேன். நீட்டிய கைகளில் ஒரு பொற் கிண்ணம் ஏந்தி வந்துகொண்டிருந்தது. நான் அவரை நெருங்கிப் பணிந்து, ‘‘இதுதான் ஹொரேய் மலையா? நல் வாய்ப்பால் அதைக் காணும் பேறு பெற்றேனா?'' என்று கேட்டேன். ‘‘ஆம். இதுதான் ஹொரேய் மலை'' என்று சொல்லி மறைந்துவிட்டார். மலைமீது ஏறமுடியாமல் ஏறினேன். மிகுந்த முயற்சிக்குப் பின் உச்சியை அடைந்தேன். அங்கே வளர்ந்து நின்றது வெள்ளிவேரோடிய தங்க மரம்! கண்ணைப் பறித்தது! அந்த வினோத பூமியின் அதிசயங்கள்தாம் எத்தனை! எத்தனை! கணக்கிட முடியாது. அதை யெல்லாம் சொல்ல ஆரம்பித்தால் நிறுத்த முடியுமா? முடியவே முடியாது. அங்கேயே தங்கிவிடவேண்டுமென்று தான் நினைத்தேன். இருந்தாலும் கிளையைப் பறித்ததும் வேக வேக மாகத் திரும்பிவிட்டேன். என்ன தான் வேகமாக வந்தாலும் நானூறு நாட்கள் ஆகிவிட்டன, இங்கு வருவதற்கு. பாருங்கள், இந்தத் துணிகளெல்லாம் இன்னும் உலர்ந்தபாடில்லை. உப்புக் காற்று துணியை எப்படிக் கெடுத்திருக் கிறது பாருங்கள்; நசநசவென்று. உடுப்பு களை மாற்றிக்கொண்டு வரலாந்தான்; எனக்குப் பொறுமையில்லை. என் நினைப்பெல்லாம் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இள வரசியிடம் தங்க மரத்தின் கிளையைக் கொடுத்துவிட வேண்டுமென்பதில்தான்.''

அவன் கதையைச் சொல்லிமுடிக்கும் நேரத்தில் அந்தத் தங்கமரக்கிளையைச் செய்த ஆறு நகைக்கலைஞர்களும் அங்கு வந்து, தங்களுக்குக் கூலி வழங் குமாறு இளவரசிக்கு மனுச் செய்தனர். ஆயிரம் நாட்களுக்கும் மேலாக உழைத்து தங்கத் தில் அடிமரக்கிளையும் வெள்ளியில் சிறுசிறு கொப்புக்கிளைகளையும் அவற் றில் கனிகளாகத் தொங்கும் நகைகளை யும் அவர்களே செய்ததாகவும் அதனை அந்த வீரன் இளவரசிக்குப் பரிசாக அளித்துள்ளதாகவும், ஆனால் அதற்கான செய்கூலி இன்னும் தங்களுக்கு வழங்க வில்லையென்றும் தெரிவித்தனர். இப் படியாக அந்த வீரனின் ஏமாற்று வேலை வெட்டவெளிச்சமாயிற்று. ஒருமுறை யாவது பார்க்க வேண்டுமென்று கெஞ் சாத குறையாக நச்சரித்த அந்த வீரனின் தொந்தரவு ஒழிவதில் இளவரசிக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவள் நகைமரக் கிளையை உடனடியாகத் திருப்பியனுப் பினாள். நகைக் கலைஞர்களை உள்ளே அழைத்து பெருந்தொகையைக் கொடுத் தனுப்பினாள். அவர்களும் மிகுந்த மகிழ்ச்சியோடு அவரவர் வீடுகளுக்குப் புறப்பட்டனர்.

சிறிது தூரங்கூடப் போயி ருக்க மாட்டார்கள். ஏமாற்றமடைந்த வீரன் வழிமறித்துத் தாக்கினான். ரகசி யத்தை உடைத்துவிட்டதாகச் சொல்லிப் புடைத்தெடுத்தான். உயிர்தப்பினால் போதுமென்று அவர்களும் ஓடிமறைந் தார்கள். அந்த வீரனும் மனக்கசப்போடு வீடு திரும்பினான். இளவரசியை இனி எப்போதுமே மணக்க முடியாதென்ற வெறுப்பில் சாமியாராகிக் காட்டுக்கே போய்விட் டான். மூன்றாம் வீரனுக்குச் சீனாவில் ஒரு நண்பன் இருந்தான். நெருப்பெலியின் தோலை எப்படியாவது பெற்றுவரு மாறு அவனுக்குக் கடிதம் எழுதினான். நெருப்பெலியின் உறுப்புகளில் எதை நெருப்பில் போட்டாலும் எரிந்து போகாது. அதுவே அதன் தனித்தன்மை. அவன் கேட்ட நெருப்பெலியின் தோல் மட்டும் கிடைத்துவிட்டால், எந்தத் தொகையையும் அளிப்பதாக உறுதி கூறியிருந்தான். அந்த நண்பன் பயணம் செய்யும் கப்பல் துறைமுகத்துக்கு வந்துவிட்டதாகத் தகவல் கிடைத்ததும் அந்த மூன்றாம் வீரன் குதிரையில் புறப் பட்டான்.

ஏழுநாட்கள் குதிரையி லேயே பயணம்செய்து நண்பனைச் சந்தித்தான். பெருந்தொகை ஒன்றைக் கொடுத்து விட்டு நெருப்பெலியின் தோலைப் பெற்றுவந்தான். அதனை ஒரு அழகிய பரிசுப்பேழையில் வைத்து இளவரசிக்கு அனுப்பிவிட்டு அவள் வீட்டுவாயிலில் நம்பிக்கையுடன் காத்திருந்தான். வழக்கம்போல அந்த முதியவர் பெட் டியை எடுத்துச்சென்று இளவரசியிடம் கொடுத்தார். அதனை ஏற்றுக்கொண்டு அந்த வீரனை இளவரசி உடனே பார்க்கச் சம்மதிக்க வேண்டுமென வற் புறுத்தத் தொடங்கினார். இளவரசியோ மறுத்தாள். அந்தத்தோலை நெருப்பி லிட்டுச் சோதிக்கவேண்டுமென்றாள். அது உண்மையானதாக இருந்தால் எரிந்து போகாது. அவள் பெட்டியின் மேலுறை யாகச் சுற்றியிருந்த அழகுத் தாள்களை அகற்றி மூடியைத் திறந்தாள். உள்ளி ருந்த தோலை எடுத்து எரியும் நெருப்புக் குள் வைத்தாள். அது உடனேயே சடசட வென்று எரிந்து சாம்பலாயிற்று. ஆக இந்த மனிதனும் தன் வாக்கை நிறைவேற்றாமல் தோற்றுப்போனான்.

நான்காவது வீரன் ஓய்வெடுத்ததைத் தவிர வேறெதுவும் செய்துவிடவில்லை. ஐந்துநிறங்கள் மின்னும் கல்லைத் தலையில் சுமந்து திரியும் டிராகனைத் தேடி அவன் புறப்பட்டிருக்க வேண் டும். ஆனால் அப்படிச் செய்யாமல் தன் வேலைக்காரர்களை அனுப்பினான். அவர்களிடம் அந்த டிராகனைச் சப்பான் நாட்டிலும் சீன நாட்டிலும் ஒரு இடங் கூட விட்டுவிடாமல் தேடும்படியும், அந்தக் கல்லைக் கொண்டுவராமல் திரும்பக் கூடாதென்றும் கண்டிப்பாக உத்திர விட்டிருந்தான். அவனுடைய காப்பாளர்கள், பணியாளர் கள் பலரும் நாலாதிசைக்கும் பயணமா னார்கள். அவர்களுக்குத் தெரியும். இது வீணான வேலையென்று. அவர்கள் ‘‘இது அநியாயம்'' என்று முனகிக்கொண்டா லும் தங்கள் தலைவனின் கட்ட ளைக்குப் பணிந்தார்கள். விடுமுறை அனுபவிப்பதாக நினைத்துக்கொண்டு தாங்கள் விரும்பிய கிராமப்பகுதி களுக்குக் குறிப்பிட்ட நோக்கம் ஏதுமின்றியே சென் றார்கள். அந்த வீரனோ, தன் பணியாளர்கள் எப்படியும் அந்த டிராகரத்தினத்தைக் கொண்டுவந்துவிடுவார்கள் என்று நினைத்தான்.

இளவரசியை நாம் தான் மணக்கப்போகிறோம் என்ற நம்பிக்கை யில் இளவரசிக்காகத் தன்னுடைய வீட்டைப் பழுதுபார்த்து அழகுபடுத்தத் தொடங்கினான். காத்திருந்து காத்திருந்து ஒரு ஆண்டும் முடிந்துவிட்டது. அவனது பணியாட் கள் ஒருவர்கூடத் திரும்பவில்லை. எவ்வளவு காலந்தான் காத்திருப்பது? அவன் பொறுமை இழந்தான். மீதமி ருந்த இரண்டே வேலைக்காரர்களுடன் ஒரு கப்பலை வாடகைக்கு அமர்த்தி னான். டிராகனைத் தேடிச்செல்லுமாறு கப்பல் தலைவனுக்கு உத்திரவிட்டான். அது ஒரு முட்டாள்தனமான செய லென்று தலைவனும் மாலுமிகளும் மறுத்தனர். அந்த வீரன் அவர்களைக் கட்டாயப்படுத்த, வேறுவழியின்றிப் புறப்பட்டார்கள். பயணத்திலேயே சில நாட்கள் கழிந் தன. திடீரெனப் பெரும்புயலொன்று கிளம்பி, அலைக்கழித்தது. அவர்களால் பயணத்தைத் தொடர முடியவில்லை. அந்த வீரன் வெறுத்துப்போய் டிரா கனைத் தேடும் முயற்சியைக் கைவிட் டான். புயலோ மேலும் கடுமையானது. கடல் கொந்தளித்தது. கப்பலைத் தூக்கி எறிந்தது. அவர்கள் ஏதோ ஒரு கரையில் ஒதுங்கினார்கள்.

பயணத்தில் நைந்து போன அந்த வீரனுக்குக் கடுமையான நீர்க்கோர்வை ஏற்பட்டது. வீங்கிய முகத் துடன் நோய்ப்படுக்கையில் விழுந்தான். அவனது பரிதாபமான நிலையைக் கேள்விப்பட்ட ஆளுநர் அவனைத் தன் வீட்டுக்கு வரவழைத்து ஓய்வெடுக்கச் செய்தார். அவன் தனக்கேற்பட்ட சிக்கல்களைச் சரிசெய்யும் கவலையில் ஆழ்ந்தான். தனக்கு நேர்ந்த துன்பங் களுக்கெல்லாம் இளவரசிதான் காரண மென நினைத்தான். இளவரசியின்மீது கொண்ட காதல் கடுங்கோபமாக மாறியது. தனது தொல்லையிலிருந்து விடுபடுவதற்காக அவனைக் கொல்ல இளவரசி திட்டமிட்டிருக்கலாமென் றும் அதனாலேயே முடியாத வேலையைத் தன்தலையில் சுமத்தி விட்டதாகவும் பழிசுமத்தினான். இந்த நேரத்தில் டிராகரத்தினத்தைத் தேடுமாறு அவன் அனுப்பிய வேலை யாட்கள் எல்லோரும் வெறுங்கை யோடு திரும்பிவந்தனர். அந்த வீரனின் கோபத்தை எதிர்பார்த்துக் கவலை யோடு வந்த அவர்களுக்கு ஆச்சரியம். அவன் திட்டவேயில்லை. மாறாகப் புகழ்ந்தான். அவன் இப்போது எந்தத் துணிகரச்செயலுக்கும் தயாராக இல்லை.

இனிமேல் அந்த இளவரசியின் வீட்டுப் பக்கம் தலையைக்கூடக் காட்டுவ தில்லையென்றான். எல்லோரையும் போலவே அந்த ஐந்தா வது வீரனும் அவன் முயற்சியில் தோல்வியுற்றான். அவனால் தூக்க ணாங் குருவியின் முத்துச்சிப்பியைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இதற்குள் நிலவொளி இளவரசியின் அழகு பேரரசரின் காதுகளுக்கும் எட்டி யது. அவர் அரண்மனைப் பெண்களில் ஒருவரை, அது உண்மைதானா? என அறிந்துவருமாறு அனுப்பினார். இள வரசி அப்படியொரு பேரழகியாக இருந் தால் அவருக்கான அரண்மனைப் பெண் களில் தனக்காகக் காத்திருக்கும் ஒருவ ராகச் சேர்த்துக்கொள்ள விரும்பினார். அரண்மனைப் பெண் வீட்டுக்கு வந்தார். இளவரசி அவரைச் சந்திக்க மறுத்து விட்டார். இளவரசியின் தந்தை எவ்வ ளவோ எடுத்துக்கூறியும் இளவரசி ஒப்புக் கொள்ளவில்லை. அந்த அரண்மனைத் தூதுவரோ அது பேரரசரின் கட்டளை யென வற்புறுத்தினார்.

அரசரின் கட்ட ளையெனச் சொல்லித் தன்னைக் கட்டா யப்படுத்தினால், தான் இந்த உலகத்தி லிருந்தே மறைந்துவிடுவதாக இளவரசி கூறினார். பேரரசருக்கு இந்தச்செய்தி தெரிவிக்கப் பட்டது. அவரது ஆவல் மேலும் அதிக ரித்தது. அவர் தானே நேரில் சென்று பார்த்துவிடத் தீர்மானித்தார். அதனால் அந்த மூங்கில்காரரின் வீடு இருக்கும் பகுதியை ஒட்டி ஒரு வேட்டைக்குச் செல்வதென்றும் அப்போது இளவர சியைப் பார்த்துவிடுவதென்றும் திட்ட மிட்டார். அதனை அந்த முதியவருக் கும் தெரிவித்தார். அந்த முதியவரும் ஒத்துக்கொண்டார். அடுத்தநாளே அரசர் தன் பரிவாரங்களுடன் வேட் டைக்குக் கிளம்பினார். இளவரசியின் வீட்டைக் கண்டதுமே குதிரையிலிருந்து இறங்கி னார். வீட்டுக்குள் நுழைந்து, நேராக இளவரசியின் அறைக்கே சென்றுவிட் டார். அங்கே பணியாளர்கள் சூழ அழகே உருவாக இளவரசி வீற்றிருந்தாள். அழகு கொழிக்கும் இப்படியொரு பெண்ணை அவர் கண்டதில்லை. அவ ளிடமிருந்து தண்ணொளி அல்லவா பரவிக் கொண்டிருக்கிறது. எந்த மனிதப் பெண்ணையும்விட அவள் அழகான வள்தான். பேரரசர் அப்படிப் பார்க்கக் கூடாதுதான். ஆனாலும் கண்களை அகற்ற முடியவில்லையே!

வேற்றுமனிதர் தன்னை நோக்குவதை அறிந்ததும் இளவரசி அறையை விட்டு வெளியேற முயற்சித்தார். ஆனால் பேரர சர் அவள் கையைப்பற்றிக்கொண்டார். தான் சொல்வதைக் கேட்குமாறு வேண் டினார். ஆனால் இளவரசியோ மேலா டைக்குள் முகத்தைப் புதைத்துக் கொண் டார். பேரரசருக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. அவரின் காதல் மிகுந்தது. தன்னோடு அரண்மனைக்கு வருமாறு மீண்டும் மீண்டும் அழைத் தார். உயர்ந்த பதவி அளிப்பதாகவும் அரசவையில் மரியாதை செய்வதாகவும் அவள் விரும்பும் அனைத்தும் தருவதாக வும் சொன்னார். அவளின் பேரழகு ஒரு மூங்கில்வெட்டியின் குடிசைக்குள் மறைந்துவிடக்கூடாதென்றும் அது அர சவையை அலங்கரிக்க வேண்டுமென் றும் உடனேயே அவளை அழைத்துச் செல்ல பல்லக்கை கொண்டுவரச் செய் வதாகவும் தன்னோடு புறப்படுமாறும் கெஞ்சினார். இளவரசி குறுக்கிட்டாள்.

அரண்மனைக்கு வருமாறு கட்டாயப்படுத்தினால் நிழ லாக மாறிவிடுவேனென்றாள். பேசிக் கொண்டிருக்கும்போதே அவள் உரு விழக்கத் தொடங்கினாள். பேரரசர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவர் கண்ணிலிருந்தும் இளவரசியின் உருவம் மறையத் தொடங்கியது. இளவரசி மீண்டும் தன்னுருவுக்கு மாறி னால் அவளை விட்டுவிடுவதாகப் பேரரசர் உறுதியளித்தார். இளவரசியும் தன்னுருவம் அடைந்தாள். பேரரசர் தன் பரிவாரங்களிடம் உட னேயே திரும்ப வேண்டும். அரசரை நெடுநேரமாகக் காணாமல் அவர்கள் திகைத்திருக்கக்கூடும். அவர் கனத்த இதயத்துடன் இளவரசியிடம் விடை பெற்று வீட்டிலிருந்தும் கிளம்பினார். இந்த உலகிலேயே மிக அழகிய பெண் நிலவொளி இளவரசிதான். மற்றவர் எல்லோரும் அவள் முன்பு அழகற்றவர் தாம். பேரரசர் அல்லும் பகலும் அவ ளையே நினைத்து உருகினார். அவள் நினைவாகவே கவிதைகள் புனையத் தொடங்கினார்.

இளவரசி மீதான ஆழ்ந்த காதல் மட்டுமே கவிதைப் பொருளா னது. கவிதை புனைந்து இளவரசிக்கு அனுப்புவதே அவருக்குத் தினசரி வேலையானது. இளவரசி மீண்டும் அரசரைச் சந்திக்க மறுத்தாலும் அவரது கவிதைகளுக்குப் பதில் கவிதைகளை அவளே புனைந்து அனுப்பினாள். அக் கவிதைகள் மென்மையானவை. அவை அன்போடு தெரிவித்ததெல்லாம் இப் பூமியில் அவள் எவரையுமே மணக்க இயலாது என்பதைத்தான். அந்தச் சிறிய கவிதைகள் அரசருக்கு எவ்வளவோ ஆறுதலைத் தந்தன. அவர் மகிழ்ச்சி யாகவும் உணர்ந்தார். இப்படியாகச் சிலநாட்கள் கழிந்தன. இரவுகளில் இளவரசி மாடிமுகப்பில் தனியாக அமர்ந்து நிலவை நோக்கத் தொடங்கினாள். சிலநாட்களில் இரவு முழுவதும் அப்படியே அமர்ந்திருப் பாள். அவள் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பெருகி வழிந் தன. அவள் இதயத்தில் அப்படியென்ன ஆழ்ந்த சோகம்?

ஒருநாள் அவள் இதயம் வெடிக்க அழுவதைக் கண்ட அந்த முதியவர் அவள் துயரத்தைச் சொல்லுமாறு வேண்டிக் கேட்டார். நீர்வழியும் கண்களோடு இளவரசி, ‘‘அப்பா, நான் பூவுலகைச் சேர்ந்தவ ளல்ல. இதை நீங்கள் மிகச்சரியாக ஏற்கெனவே கணித்துவிட்டீர்கள். நான் உண்மையில் நிலவிலிருந்துதான் வந் தேன். நான் இன்னும் சிலநாட்களே இந்தப் பூமியில் வாழ்ந்திருப்பேன். நான் நிலவுக்குச் செல்லவேண்டிய காலம் வந்துவிட்டது. இது ஆகஸ்டு மாதம். இந்த மாதம் பதினைந்தாம் நாள் என் நண்பர்கள் வந்துவிடுவார்கள். அவர் களோடு நானும் நிலவுக்குத் திரும்ப வேண்டும். என்னுடைய அப்பாவும் அம்மாவும் அங்கேயே இருக்கிறார்கள். ஆனால் பூமிக்கு வந்ததிலிருந்து அவர்கள் நினைவை இழந்துவிட்டேன். என் சொந்தபூமியான நிலாவுலகும் மறந்து போனேன். என்னைப் பிரியமாக வளர்த்த உங்களையும் அம்மாவையும் இவ்வளவு நாட்கள் நான் மகிழ்ச்சியாக வாழ்ந்த இந்த வீட்டையும் விட்டுப் பிரிந்து செல்லவேண்டுமே என்று நினைக்கும்போது தாங்கமுடியவில்லை. என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை'' என்றாள். இளவரசியின் பணிப்பெண்கள் இதை அறிந்ததும் மிகுந்த துயரம் கொண்டார்கள்.

இளவரசி விரைவிலேயே தங் களை விட்டுப்பிரிந்து போய்விடுவாள் என்ற நினைப்பே அவர்களைத் துக்கத் தில் ஆழ்த்தியது. அவர்கள் உணவைக் கூட மறந்தார்கள். உணர்வற்றதுபோல் உல வினார்கள். செய்தியைக் கேள்விப்பட்ட பேரரசர், முதியவரின் வீட்டுக்கு ஆளனுப்பி னார். அரசரின் தூதுவர்களைச் சந்திக்க அந்த முதியவர் வீட்டுக்கு வெளியே வந்தார். கடந்த நாட்களின் துயரம் அவரது உடலை மிகவும் பாதித்திருந்தது. அவர் மிகவும் முதிர்ந்து தளர்ந்தவர்போல் தோற்றமளித்தார். எழுபது வயதுக்கும் அதிகமானதுபோல் தோன்றியது. அவர் தூதுவர்களிடம் அழுதுகொண்டே விவ ரத்தைத் தெரிவித்தார். நிலவிலிருந்து வருபவர்களைச் சிறைப் பிடிக்கப்போவ தாகவும் முடிந்தவரை இளவரசியை நில வுக்கு எடுத்துச் செல்லவிடாமல் தடுக்கப் போவதாகவும் கூறினார். தூதுவர்கள் நடந்த வற்றை அரசருக்குக் கூறினர்.

மிகச்சரியாக அந்த மாதம் பதினைந் தாம் நாளில் அரசர் இளவரசியின் வீட்டுக் காவலுக்காக இரண்டாயிரம் படை வீரர்களை அனுப்பினார். ஆயிரம் வீரர்கள் வீட்டுக்கூரையின்மேல் நிறுத்தப்பட்ட னர். மீதி ஆயிரம் பேரும் வீட்டின் அனைத்து வாயில்களிலும் காவல் நின்றனர். அனைவரும் நன்கு பயிற்சி பெற்ற திறமையான வில்வீரர்கள். அவர்கள் விற்களும் அம்புகளும் தாங்கித் தயாராக நின்றனர். அந்த முதியவரும் அவரது மனைவியும் நிலவொளி இளவரசியை வீட்டின் உள்ளறையில் வைத்துப் பாதுகாப்பாக நின்றனர். அந்த முதியவர் இரவு முழுவதும் யாரும் உறங்கிவிடக் கூடாதென்றும், மிகுந்த கவனத்தோடு இளவரசியைப் பாது காக்க வேண்டுமென்றும் வீரர்களுக்குக் கடுமையாக உத்தரவிட்டிருந்தார். தேவை யான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொண்டுள்ள தால் அரசரின் ஆயுதந்தாங்கிய வீரர் களின் உதவியோடு நிலவுத்தூதர்களை வென்றுவிடலாம் என உறுதியாக அவர் நம்பினார்.

ஆனால் இளவரசியோ, ‘‘அப்பா, இதெல்லாம் ஒன்றும் ஆகாது. நிலவு மனிதர்களை அவர்களது முயற்சி யிலிருந்து எதுவும் தடுத்துவிடமுடி யாது. அவர்கள் நினைத்ததை முடித்து விடுவார்கள். அவர்கள் முன் பேரரசரின் வீரர்கள் செயலிழந்து நிற்பார்கள்'' என்றாள். சிறிது நேரம் அமைதியாக ஆனால் சோகமாகக் காணப்பட்டாள். கலங்கிய கண்களுடன் அவள், ‘‘அப்பா, உங்களையும் அம்மாவையும் நினைக் கும்போது மிகவும் வருத்தமாக இருக் கிறது. உங்களை விட்டுப் பிரிவதற்கு மனமேயில்லை. நான் உங்களை எனது சொந்த அப்பாவாகத்தான் நேசிக்கிறேன். நீங்களும் அம்மாவும் என்னுடைய நிலவுலக வாழ்க்கை முழுதும் அன்பும் பாசமும் கொட்டி வளர்த்திருக்கிறீர்கள். உங்களோடு வாழ்ந்து உங்கள் கடைசி காலத்திலும் உங்களுக்குப் பணிவிடை செய்யவே நான் ஆசைப்படுகிறேன்'' என்றாள். அவள் கண்கள் நீரைப் பொழிந்துகொண்டேயிருந்தன.

இரவும் வந்துவிட்டது. மஞ்சள்நிலவு தோன்றி வானத்தின் உச்சிக்கு வந்தது. பொன்னொளி வீசி பூமியைத் தாலாட்டி உறங்கவைத்தது. பைன்மரச் சரிவுகளி லும் மூங்கில்காடுகளிலும் அமைதி நில வியது. வீட்டு மாடிமீது ஆயிரம் வீரர்கள் ஆயுதம் தாங்கிக் கண்ணிமைக்காமல் காத்துநின்றனர். இரவும் வளர்ந்தது. எல்லோர் கண்களும் நிலவின் மீதேயிருந்தன. விடிகாலைக் கருக்கலில் நிலவொளியும் மங்கியது. எல்லோரும் அபாயம் தீர்ந்ததென்றே நம்பினர். இளவரசி நிலவுக்குப் போக வேண்டியதில்லை. அவள் இனிமேல் தங்களோடேயே இருப்பாள் என முகம் மலர்ந்த நேரத்தில் நிலவைச்சுற்றி ஒரு மேகம் படர்ந்தது போல் தோன்றியது. அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த மேகம் பூமியைநோக்கிச் சுழன்று சுழன்று கீழிறங்கியது. நெருங்க, நெருங்க அது இளவரசியின் வீட்டை நோக்கி வருவதைத் திகிலுடன் உணர்ந்தனர். சிறிது நேரத்திலேயே வானம் இருண்டு விட்டது. மேகம் இறுதியாக வீட்டின் முன் தரையிலிருந்து பத்தடி உயரத்தில் நிலைகொண்டது. மேகத்தின் நடுவில் பறக்கும் தேர் ஒன்று தோன்றியது. அதில் ஒளிமனிதர்கள் ஓரணியாகத் தெரிந்தனர். அவர்களில் ஒருவன் அரசன் போல் தோற்றமளித்தான். அவன் அவர்களின் தலைவனாக இருக்கலாம்.

அவன் ரதத்தி லிருந்து இறங்கினான். அவன் கால்கள் தரையில் படாமல், காற்றிலேயே நின் றான். அந்த முதியவரை வெளியே வருமாறு அழைத்தான். ‘‘நேரம் வந்துவிட்டது. நிலவொளி இளவரசி நிலவுக்குத் திரும்ப வேண் டும். அவள் அங்கிருந்துதான் வந்தாள். அவள் ஒரு கடுங்குற்றம் செய்தாள். அதற்குத் தண்டனையாகவே ஒரு குறிப் பிட்ட காலம் இங்கே வாழுமாறு அனுப் பப்பட்டாள். எமக்குத் தெரியும். நீங்கள் அவளை மிகக் கவனமுடன் சீராட்டினீர்கள். அதற்குப் பரிசாகத்தான் உமக்குப் பெருஞ்செல்வத்தை அனுப்பி வைத் தோம். வளமான வாழ்வை உமக்கு அளித்தோம். நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டுமென்பதற்காகவே மூங்கில் களில் யாம் தங்கத்தை வைத்தோம்.'' அந்த ஒளித்தலைவன் கனிவோடுதான் பேசினான். ஆனால், கண்டிப்பும் கறார்த்தன்மையும் தெரிந்தது. ‘‘இந்த இளவரசியை நான் இருபது வருடங்கள் வளர்த்திருக்கிறேன். ஒரு முறைகூட அவள் தவறு செய்ததில்லை. நீங்கள் தேடும் நபர் இவரில்லை. உங்களைப் பணிவாய்க் கேட்டுக்கொள் கிறேன், வேறு எங்காவது சென்று தேடுங்கள்'' என்றார், அந்தப் பெரியவர்.

‘‘நிலவொளி இளவரசி. ஒரு நிமிடங் கூடத் தாமதிக்கக் கூடாது. வெளியே வாருங்கள், இந்தத் தாழ்ந்த வீட்டிலி ருந்து'' ஓங்கி உத்தரவிட்டான், அந்த ஒளித்தலைவன். அவன் குரலில் கடுமை ஒலித்தது. அந்த வார்த்தைகள் இளவரசியின் அறைத்திரைகளை மோதியதும் அவை தாமாகவே விரியத்திறந்தன. இளவரசி ஒளிர்ந்து நின்றாள். அதிசயம். பலகோடி வெளிச்சம். முழு அழகோடு வெளிப் பட்டாள். ஒளித்தலைவன் அவளை ரதத்திற்கு வழிநடத்திச் சென்றான். இளவரசி திரும்பிப் பார்த்தாள். அந்த முதியவ ரின் ஆழ்ந்த பெரும் சோகத்தைப் பரிவுடன் நோக்கினாள். அவரோ வாய்விட்டுக் கதறி அழுதார். அவள் அவரை அப்பா வென அழைத்து, ‘‘உங்களை விட்டுப் பிரிய நான் விரும்ப வில்லை. என்றாலும் நிலாவுலகம் அதை அனுமதிக்காது. நான் உங்கள் நினைவோடுதான் போகிறேன். தயவு செய்து அழாதீர்கள். உங்களை என்றென் றும் மறக்கமாட்டேன். நிலவைப் பார்க் கும்போதெல்லாம் என்னை நீங்கள் என்னை நினைக்க வேண்டும்'' என்று பலவாறாகத் தேற்ற முயன்றாள்.

அந்தப் பெரியவர் தானும் அவளோடு வருவதாகக்கூறி ரதத்தில் ஏறமுயன் றார். நிலாமனிதர்கள் அவரைத் தடுத்தார்கள். இளவரசி அணிந்திருந்த பூத்தையல் மேலாடையைக் கழற்றி அவரிடம் தன் நினைவாக வைத்திருக்குமாறு கூறிக் கொடுத்தாள். நிலாமனிதர்களில் ஒருவர் சிறகுகள் அமைந்த ஒரு அதிசய மேலுடுப்பினை எடுத்தார். இன்னொருவர் சாகாமருந் தான அமுதம் நிறைந்த சிறுகுப்பி ஒன்றை இளவரசியிடம் கொடுத்து அருந்தச் சொன்னார். இளவரசி பாதியை அருந்திவிட்டு மீதியை அந்தப் பெரிய வரிடம் கொடுக்க முயன்றாள். நிலா மனிதர்கள் தடுத்துவிட்டனர். சிறகுச்சட்டையை அவளுக்கு அணி விக்க ஒருவர் வந்தபோது இளவரசி, ‘‘பொறுங்கள். கொஞ்சம் பொறுங்கள். என்னுடைய நல்ல நண்பரான பேரர சரை மறக்கக்கூடாது. இந்த மனித உரு விலிருக்கும்போதே அவரிடம் விடை பெற்றுக் கடிதம் எழுதவேண்டும்'' என் றாள். நிலாமனிதர்கள் பொறுமையிழந்த போதிலும், இளவரசி கடிதம் எழுதி முடிக்கும்வரை காக்கவேண்டியதாயிற்று. கடிதத்துடன் மீதி அமுத மிருந்த குப்பி யையும் பேரரசரிடம் ஒப்படைக்கச் சொல்லி அந்த முதியவரிடம் கொடுத்தாள்.

இளவரசிக்கு சிறகுச்சட்டையைப் போர்த் தினார்கள். அது அவள் உடம்போடு ஒட்டிக்கொண்டது. ரதம் சுழலத் தொடங் கியது. வானத்தை நோக்கி மெல்ல உயர்ந்தது. நிலவைநோக்கிப் பறந்தது. தங்களைப் பிரிந்து நிலவுரதத்தில் செல் லும் இளவரசியைக் கீழிருந்தவர்கள் பார்த்துக்கொண்டேயிருந்தனர். கண்ணீர் அவர்கள் கண்களிலிருந்து தாரைதாரை யாகப் பொங்கி வழிந்துகொண்டிருந் தது. ரதம் மேகத்துக்குள் மறைந்த பின் னும் அவர்கள் வானத்தையே பார்த்துக் கொண்டிருந் தார்கள். ஏதேனும் அதிசயம் நடக்காதா? இளவரசி வந்துவிடமாட் டாளா? ஏங்கி னார்கள். ஆனால் காலைக் காற்றின் வேகத்தில் நிலவு, ரதம் எல்லாமே மறைந்துபோயின. நிலவொளி இளவரசியின் கடிதத்தை அமுதக்குப்பியுடன் பேரரசருக்காகக் கொண்டுசென்றனர். நிகழ்ந்ததையெல் லாம் அறிந்த அரசரோ அவற்றைத் தொடவும் அஞ்சினார். நாட்டிலேயே புனிதமான ஃப்யூஜி மலைக்கு அவற்றைக் கொண்டுசென்று அழித்து விடுமாறு உத்திரவிட்டார். அரசரின் பிரதிநிதிகள் அவற்றை ஃப்யூஜி மலையின் உச்சிக்கு எடுத்துச்சென்று அதிகாலைச் சூரியன் உதிக்கும் நேரத்தில் எரித்துவிட்டனர். அதனால்தான் இப்போதும் சூரிய உதயத்தின்போது ஃப்யூஜி மலையின் உச்சி யில் மேகமெனப் புகை கிளம்புவதாக மக்கள் பேசிக்கொள்ளுகின்றனர்.

(1908ம் ஆண்டு ஒய் தியோடோரா ஒசாகி தொகுத்த சப்பானிய தேவதைக் கதைகள் என்ற தொகுப்பிலிருந்து இக்கதை மொழிபெயர்க்கப்பட்டது. மொழிபெயர்ப்பு: ஆறுமுகம் பிள்ளை)

Pin It