வரலாறாகும் வாழ்க்கை

மக்களின் கிளர்ந்தெழுந்த போராட்டத்தின் மூலமே உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பது, வரலாறு நமக்குச் சொல்லும் பாடம். ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட வரலாறு இன்னம் முடிந்தபாடில்லை. அவர்களின் போர்க் குணமும் சற்றும் குறையவில்லை. மாறாக, அது கூர்மை பெற்றிருக்கிறது என்பதற்கு சாட்சியாகத் திகழ்கின்றன பனையடிக்குப்பம், வீராணம் மற்றும் சொரப்பூர் கிராமங்கள். புதுவை மாநிலம் பாகூர் கொம்யூனைச் சேர்ந்த கிராமம் பனையடிக்குப்பம். அந்தக் கிராமத்தை ஒட்டியவாறே இரு புறமும் இருக்கின்றன தமிழகத்தைச் சேர்ந்த கிராமங்களான வீராணம் சொரப்பூரும். இந்த கிராமங்களின் பெயர்கள் வெளி உலகிற்குத் தெரிய வந்தது 1989 இல்தான்.

1989 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக காவல் துறையினர், புதுவை மாநில எல்லைக்குட்பட்ட பனையடிக்குப்பம் கிராமத்தில் அத்துமீறி நுழைந்து, துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கந்தன், சேகர் ஆகியோர் கொல்லப்பட்டனர். அந்த ஆண்டு சொரப்பூர் திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு துப்பாக்கிச் சூடு நடந்ததற்கு முன்னர், இருபது நாட்களாகவே ஊர் மக்களுக்கும் சேரி மக்களுக்கும் சிறு சிறு மோதல்களும் சச்சரவுகளும் இருந்து வந்திருக்கின்றன. அதே நேரத்தில், இரு தரப்பினருக்குமிடையே சமரச முயற்சிகளும் நடந்திருக்கின்றன. பாதுகாப்பிற்காக இருபது காவலர்களும் சொரப்பூர் கிராமத்தில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

"பனையடிக்குப்பம், வீராணம், சொரப்பூர் கிராமங்களில் ஏறக்குறைய 700 குடும்பங்கள் உள்ளன. இது, செழிப்பான விளைநிலங்கள் கொண்ட விவசாய பூமி. புதுச்சேரி விடுதலைப் போராட்டத்தின் போது, பொதுவுடைமை இயக்கத் தலைவர் வ.சுப்பையா அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்தது இக்கிராம மக்கள்தான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்குடன் இருந்த பகுதி. நக்சலைட் இயக்கம், இங்கு ஆழமாக வேரூன்றியதும் குறிப்பிடத்தக்கது. தமிழக புதுச்சேரி காவல் துறையின் "போர்க்குணமிக்க கிராமங்களுக்கான'' வரைபடத்தில், இக்கிராமங்களுக்கு நிரந்தர இடமுண்டு"

இந்நிலையில், 1.9.1989 அன்று பிற்பகல், ஊருக்கும் சேரிக்கும் இடையில் ஒரு பதட்டமான சூழல் நிலவியிருக்கிறது. சொரப்பூர் சேரிக்கு ஆதரவாக, வீராணம் மற்றும் பனையடிக்குப்பம் சேரி மக்களும் சென்றிருக்கின்றனர். கலவரம் ஏற்படாமல் தடுத்த காவலர்கள், மறுநாள் 2.9.1989 அன்று காலை சமரசம் பேசலாம் என்று அனைவரையும் கலைந்து போகச் செய்திருக்கின்றனர். ஆனால், 2.9.1989 அன்று அதிகாலை, மூன்று கிராம சேரி மக்களும் புதுவையைச் சேர்ந்த பனையடிக்குப்பத்தில் கூடி இருந்த நிலையில் தமிழக காவல் துறையினர், சொரப்பூர் சேரி மக்களைத் தேடிக் கொண்டு பனையடிக்குப்பம் கிராமத்தில் புகுந்தனர்.

எதிர்பாராத இந்தத் தாக்குதலால் திகைத்த பனையடிக்குப்பம் மக்கள், "இது புதுவைப் பகுதி, இங்கு ஏன் பிரச்சனை செய்கிறீர்கள்?' என்று கேட்டதை காதில் வாங்காமல் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் பனையடிக்குப்பத்தைச் சேர்ந்த கந்தன் மற்றும் சட்டக் கல்லூரி மாணவரான சேகர் ஆகியோர் கொல்லப்பட்டனர். அதிலும், கந்தன் குண்டடிபட்டு அந்த இடத்திலேயே மரணமடைந்தாலும், சேகருக்கு காலில் மட்டுமே குண்டடிபட்டு இருக்கிறது. நகர முடியாமல் அமர்ந்துவிட்ட சேகரை காவல் துறையினர் சூழ்ந்து கொண்டு, துப்பாக்கியின் பின்புறத்தால் அடித்தே கொன்றுள்ளனர்.

“காலங்காத்தால திடீர்னு ஒரே சத்தம். தடதடன்னு போலிசு காரங்க ஓடி வந்தாங்க. எங்களுக்கு ஒண்ணுமே புரியல தமிழ் நாடு போலிசு ஏன் நம்ம ஊருக்குள்ள நுழையுதுன்னு திகைச்சுப் போயிட்டோம். முன்னால வந்த போலிசுகாரங்க கிட்ட போய், எங்க ஊறு பெரிய மனுசங்க இது புதுவை பகுதி இங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு கேட்டதுக்கு, அவங்களுக்கும் ஒரே அடி. திடீர்னு பார்த்தா வேட்டுச் சத்தம், சுடறாங்க சுடறாங்க ஓடு ஓடுன்னு சனம் எல்லாம் சிதறி ஓடுது. கொல்லி வேலைக்குப் போன கந்தன் சத்தத்த கேட்டு ஓடி வந்தபோது, குண்டு அவன் மேலே பாய்ஞ்சிருச்சு. அந்த எடத்துலேயே கீழ விழுந்துட்டான்'' சம்பவத்தை நேரில் பார்த்த பனையடிக்குப்பத்தைச் சேர்ந்த அறுபது வயதான லட்சுமி விவரிக்கிறார்.

காவல் துறையினர் அத்துடன் நிற்கவில்லை. கலவரம் நடந்ததாகவும், அதனால்தான் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டி வந்ததாகவும் காட்டுவதற்காக, சொரப்பூரில் இருக்கும் சில வீடுகளை காவல் துறையினரே கொளுத்தியுள்ளனர். இச்சம்பவத்தைப் பற்றி விசாரிக்க பல்வேறு அமைப்பினரும் சேர்ந்து உண்மை அறியும் குழு ஒன்றை அமைத்தனர். இக்குழுவினர், சம்பவம் நடந்த அய்ந்து நாட்களுக்குள் அக்கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து, நடந்த உண்மைகளைக் கண்டறிந்து ஓர் அறிக்கையை வெளியிட்டனர்.

அந்த அறிக்கையின் அடிப்படையில், மனித உரிமை அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய இயக்கங்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் போராடின. துப்பாக்கிச் சூடு நடத்திய தமிழக காவல் துறை மீது நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் பிறகு புதுவை அரசு இறந்த கந்தன், சேகர் ஆகியோரின் குடும்பத்தினருக்கு வேலை அளித்தது. ஆனால், துப்பாக்கிச் சூடு நடத்திய தமிழக காவல் துறையினர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த துப்பாக்கிச் சூடு ஒரு நாள் சம்பவம் அல்ல. இதற்குப் பின்னால் ஒரு நெடிய போராட்ட வரலாறே இருக்கிறது. 1970 களில் தொடங்கி நில உரிமை மற்றும் கூலி உயர்வு கிளர்ச்சிகளை இக்கிராமத்தினர் தொடர்ந்து நடத்தி வந்திருக்கின்றனர். "ஒண்ணா ரெண்டா, எல்லாத்துக்கும் போராட்டம் நடத்துவோம். எந்தப் பிரச்சினைனாலும் மூணு சேரிய சேர்ந்த இளைஞர்களும் ஒண்ணு சேர்ந்து பிரச்சனை பண்ணுவோம்'' இப்படிச் சொல்லும் சந்திரசேகரனுக்கு அய்ம்பத்தி மூன்று வயதாகிறது. வீராணம் கிராமத்தைச் சேர்ந்த இவர், மக்கள் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றதற்காக சிறைவாசம் அனுபவித்தவர். அவரது குடும்பம் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்திலேயே கம்யூனிஸ்டு குடும்பமாக இருந்திருக்கிறது.

"அந்தக் காலத்திலேயே எங்க வீட்டுக்கு "சோவியத் நாடு', "சோவியத் பலகணி' போன்ற பத்திரிகைகளும், காரல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் போன்றவர்களின் புத்தகங்களும் வரும். 69 - 70 க்கு முன்னால வீராணத்தில எங்க வீட்டையும் சேர்த்து மூணு பேரு கிட்டதான் நிலம் இருந்தது. பனையடிக்குப்பத்தில ஒரே ஒருத்தரு; சொரப்பூருல யாருக்கும் கிடையாது'' விவரிக்கிறார் சந்திரசேகரன்.

"எல்லாரும் கூலி வேலைக்குதான் போவோம். ஒரு ரெட்டிமாரு வீட்டுல நாலு பேரு அஞ்சு பேருன்னு எங்க ஆளுங்க வேலை பார்ப்பாங்க. பணக்கூலிய வாங்கி என்னங்க செய்யறது? வாங்குனதுல பாதிய குடிச்சே அழிச்சிருவாங்க நம்ம ஆளுங்க. அதனால ஒரு கட்டத்துல, அதாவது 1971 இல் தானியத்த கூலியா கேட்டோம்'' என்கிறார் பனையடிக்குப்பத்தைச் சேர்ந்த அய்ம்பத்தி ரெண்டு வயதான சின்னராசு.

"தானியம் தர முடியாதுன்னு ரெட்டிமாருங்க அவங்களே களத்தில் இறங்கி வேல செஞ்சாங்க. நாங்க விட மாட்டோம். அவங்க நாத்து நட்டா, நாங்க அதக் கலைச்சிட்டு நாங்க புதுசா நடுவோம். அதென்ன எங்க வேலைய அவுங்க செய்யறதுன்னு செய்ய விடமாட்டோம். அறுவடையை எதிர்த்து மறியல் பண்ணோம்'' என்கிறார் முத்துலட்சுமி, நாற்பத்தியெட்டு வயதாகும் இவரும் பனையடிக்குப்பத்தைச் சேர்ந்தவர்தான்.

பல மாதங்கள் தொடர்ந்து போராடிய பிறகு ஒரு வழியாக இறங்கி வந்த சாதி இந்துக்கள், ஆளுக்கு அய்ந்து லிட்டர் நெல் தர ஒப்புக் கொண்டனர். ஆனால், அதிலும் சிக்கல் எழுந்தது. எட்டு ஆட்கள் வேலை செய்ய வேண்டிய இடத்தில் முப்பது பேரை வேலைக்கு அமர்த்தி, எட்டு பேருக்கு உண்டான கூலி நெல்லை முப்பது பேரையும் பங்கிட்டுக் கொள்ளச் செய்தனர். இதனால் ஆளுக்கு ஒரு லிட்டர் ஒன்றரை லிட்டர் நெல் மட்டுமே கிடைக்கும். லிட்டர் கணக்கில் என்பதால், தலை தட்டி மட்டமாகவே அளப்பார்கள். கிடைத்த நெல்லை பிற பொருள்கள் வாங்க கடைகளில் பண்டமாற்று செய்தால், அங்கு குவித்து அளந்தே எடுத்துக் கொள்வார்கள். அதனால் மக்கள் பெரும் நட்டமடைந்தனர். அதற்காக குவித்து அளந்தே கூலி கொடுக்க வேண்டும் என ஒரு போராட்டம் நடத்தி அதிலும் வெற்றி பெற்றனர்.

"இந்தப் போராட்டத்தில்தான் அது வரைக்கும் ஒதுங்கியே இருந்த சொரப்பூர் மக்களும் சேர்ந்துக்கிட்டாங்க'' என்கிறார் சந்திரசேகரன். இந்த நிலையில்தான் 1976 ஆம் ஆண்டு "உழுபவனுக்கே நிலம்' என்ற சட்டம் இயற்றப்பட்டது. அதே சமயத்தில் புதுவை அரசு, குத்தகைச் சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, விளைச்சலில் நிலவுடைமையாளர்களுக்கு நாற்பது பங்கும், குத்தகைக்காரர்களுக்கு அறுபது பங்கும் உரிமை உண்டு என சட்டம் கூறியது. இந்தச் சட்டம், ஒடுக்கப்பட்ட மக்கள் அணிதிரள தூண்டுகோலாக இருந்தது. தங்களுக்கு உரிமையான பங்கை அவர்கள் கேட்டபோது, நிலவுடைமையாளர்களான சாதி இந்துக்கள், இந்த ஏற்பாட்டை ஒப்புக் கொள்ளவில்லை. சட்டத்தை இயற்றிய அரசு, அதனை நடைறைப்படுத்தாமல் சாதி இந்துக்கள் பக்கமே நின்றது.

இந்நிலையில் புதுவையிலேயே முதன் முதலாக பனையடிக்குப்பம் கிராம மக்கள்தான் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி கிளர்ந்தெழுந்தனர். ஆனாலும், சாதி இந்துக்கள் எளிதில் இணங்கிவிடவில்லை. “நாங்களும் விடல. வைக்கோல் போர கொளுத்துவோம். அறுவட செய்ய விடமாட்டோம். அறுவட செஞ்ச பயிர தூற்ற விட மாட்டோம். அதனால அறுவடை செய்யாமலும், செஞ்சத தூற்றாமலும் விளைச்சல் பூரா அப்படியே மக்கிப் போச்சு. ஒரு முடிவே வராம இழுத்துக்கிட்டே இருந்துச்சு'' என்கிறார் சந்திரசேகரன்.

“ஒரு நாள் நாங்கள் ஒரு நூறு இருநூறு பேரு திரண்டோம். பக்கத்துல வீராணம், சொரப்பூர்ல சேரி மக்களும் எங்களுக்கு ஆதரவா வந்தாங்க. எல்லோரும் நம்ம கம்யூனிஸ்டு தலைவரு வையாபுரி தலைமையில போயி, ரெட்டிமாருங்க அறுத்து வைச்சிருந்த நெல்ல வாரிட்டு வந்துட்டோம். அப்புறம்தான் அவுங்க வழிக்கு வந்தாங்க. ரெட்டிமாருங்க அவுங்க கிட்ட வேலை செய்யறவங்களுக்கு ஆளுக்கு காணி நிலம்னு பிரிச்சு கொடுத்தாங்க'' என்கிறார் சின்னராசு.

வாழ்வாதாரமான நில உரிமைக்கானப் போராட்டங்கள் ஒரு புறம் நடந்த அதே வேளையில், கோயில் உரிமை போன்ற சமூகப் பிரச்சனைகளுக்காகவும் மிகப் பெரிய போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர் இந்த மக்கள்.

"அந்தக் காலத்தில ஊருல இருக்கிற திரவுபதியம்மன் கோயில் திருவிழான்னா சேரி மக்கள் யாரும் கிட்டகூட போக முடியாது. தூரத்தில இருந்தே சாமிய கும்பிட்டு வந்திரணும். சாமி ஊர்வலம் சேரிய சுத்திட்டுப் போகும். அப்ப சேரி எல்லைல எங்க சனம் எல்லாம் ரோட்டையே கழுவி கோலம் போட்டுக் காத்திருப்பாங்க. ஆனா அந்தப் பக்கம் வந்தவுடன மேளம் அடிக்கிறதகூட நிறுத்திட்டு, சத்தம் இல்லாம சாமிய தூக்கிட்டு ஓடுவாங்க. எங்க சாமி மாரியம்மன் திருவிழா சமயத்தில அவங்க தெரு வழியா வந்தா, கதவு சன்னல் எல்லாம் இறுக்க மூடிட்டு உள்ள உட்காந்துக்குவாங்க. தீமிதி நடக்கும். நாங்க அந்தப் பக்கம் கூட போக முடியாது. மேல் சாதிய சேர்ந்த ஓராளு கையில சாட்டையோட தீமிதி நடக்கிற இடத்த சுத்தி நடந்துட்டு இருப்பாரு. சேரி ஆளுங்க யாராவது கண்ணுல பட்டா போதும். உடனே சாட்டையால அடி வெளுத்திடுவாரு.

1971 க்கு அப்புறம் கூலி உயர்வுக்காக நிறைய போராட்டங்கள நடத்தி எங்களுக்கு ஓரளவு தைரியம் வந்திருந்த நேரம். முதன் முதலா 1976 இல் ஞானப்பிரகாசங்கிறவரும் அவருடைய மச்சான் பக்கிரிங்கிறவரும், பண்டசோழ நல்லூர் திரவுபதி அம்மன் கோயிலுக்குள்ள போனாங்க. அதப் பார்த்த மேல் சாதிக்காரங்க, அவங்கள அடிக்கிறதுக்குத் துரத்துனாங்க. தொரத்திட்டு வந்தவங்க, செயின அறுத்துட்டு ஓடுறான்னு கத்திட்டே வந்தாங்க. அதக் கேட்டு உண்மையிலேயே திருடன்தான் போலன்னு எங்க ஆளுங்களே அவுங்கள பிடிச்சு கொடுத்துட்டாங்க. அன்னைக்கு அவங்கள கட்டி வெச்சு செம அடி. அதோட திருடன்னு போலிசுலயும் பிடிச்சு கொடுத்திட்டாங்க.

"என் கண்ணு முன்னாலயே கொண்ணுப் போட்டாக''

கூலி விவசாயியான கந்தன், காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட போது அவருக்கு வயது 28. அவரது மனைவி ஏகவள்ளிக்கு புதுவை அரசு வேலை கொடுத்தது. தற்போது அவர் கரையாம் புத்தூர் பள்ளியில் கடைநிலை ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். கந்தனின் தாய் கமலம் தங்கை நாகவள்ளியும் தற்போது பனையடிக்குப்பத்தில் வசித்து வருகின்றனர். "என்ன அனாதையாக்கிட்டு என் புள்ளைய என் கண்ணு முன்னாலயே சுட்டுக் கொன்னுப் போட்டாங்க பாவிங்க'' என கதறுகிறார் கந்தனின் தாய் கமலம். நாகவள்ளி கூலி வேலைக்குப் போய் அதில் வரும் வருமானத்தில் தன் தாயையும் தனது இரு குழந்தைகளையும் கவனித்துக் கொள்கிறார். “என் அம்மாவுக்கு மாசம் ஒரு பத்து ரூவாய்க்கு வழி ஏற்படுத்துனா போதாதாங்க. அவங்க பாட்ட அவங்க பார்த்துக்குவாங்க'' என்கிறார் நாகவள்ளி. "இன்னைக்கு நான் இந்தக் கூரை வீட்ட மராமத்து பண்ணகூட வழியில்லாம ஒழுகிற வீட்டுல பொண்ணு சம்பாதியத்துல உட்கார்ந்திருக்கேன். வீடு கட்ட அரசாங்கம் ஏதோ காசு கொடுக்குதாமே. அது கிடைச்சாலாவது பரவாயில்ல. பாண்டிக்குப் போய் ஏம்.எல்.ஏ.வப் பார்த்து சொல்லலாம்னா பஸ்சுக்குகூட காசு இல்ல'' அழுகையினூடே சொல்கிறார் கமலம்.

அதைப் போலவே, சட்டக் கல்லூரி மாணவரான சேகர் இறக்கும் போது, அவருக்கு வயது 25. அவரும் பனையடிக்குப்பத்தைச் சேர்ந்தவர்தான். புதுவை அரசு அவரது அண்ணன் சந்திரனுக்கு வேலை கொடுத்தது. மடுகரை பள்ளியில் காவல் காரராகப் பணி புரிந்தார். "அவரு 1992 இல் இறந்துட்டாருங்க. அதுக்கப்புறம் ரொம்ப நாளா அலஞ்சதுக்கு அப்புறம் 1997இல் தான் எனக்கு வேலை கொடுத்தாங்க. அதுவும் பார்ட் டைம்தான். என் பிள்ளைங்க நாலும் படிக்குதுங்க. இந்த வருமானத்துல தான் எல்லாத்தையும் பார்த்துக்க வேண்டியிருக்கு. வேலய பெர்மனண்டு பண்ணிக் கொடுத்தாங்கன்னா நல்லாயிருக்கும்'' என்கிறார் சேகரின் அண்ணி பாப்பாத்தி. தற்போது அவர் கல்மண்டபம் பள்ளியில் பகுதி நேர கடைநிலை ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார்.

அடுத்த வருசம் ஒரு பிரச்சினையும் இல்ல. ஆனா அதுக்கு அப்புறம் 1978 இல் நாங்க, மூணு சேரியையும் சேர்ந்த இளைஞர்கள் வெளிப்படையா அறிவிச்சுட்டு, பத்தாம் நாள் திருவிழா அன்னைக்கு கோயிலுக்குள்ள போனோம். எங்களுக்கு ஆதரவா மூணு சேரி சனம் இருக்குங்கிற பயத்தில மேல் சாதிக்காரங்க ஒண்ணும் பிரச்சினை பண்ணாம ஒதுங்கி நின்னாங்க. அதோட இனிமே கோயிலுக்குள்ள வாங்க. நாங்க ஒண்ணும் வர வேண்டான்னு சொல்லலியேன்னு சொல்லிட்டு, பத்து நாள் திருவிழால ஒரு நாள் திருவிழாவ நாங்களே நடத்தவும் ஒத்துக்கிட்டாங்க. அன்னைக்கு நாங்க தீமிதி நடக்கிற இடத்துக்கும் போனோம். தேரையும் வடம் பிடிச்சு இழுத்தோம். எங்கள யாரும் சாட்டையால அடிக்கல. போலிசுகாரங்களுக்கு எங்க மேல எப்போதுமே கடும் கோபம் உண்டு. அதுக்குக் காரணம் இருக்கு. நாங்க மேல் சாதிக்காரங்கள மட்டும் எதிர்த்துப் போராடல. பலமுறை போலிசுகாரங்ககிட்டயும் மோதியிருக்கோம்'' என்கிறார் சின்னராசு.

அக்காலங்களில் காவல் துறையினர், இரவு நேரங்களில் சேரிகளில் புகுந்து வீட்டு வாசலில் உறங்கிக் கொண்டிருக்கும் மக்களை எழுப்பி, குடித்திருக்கிறார்களா என்பதைக் கண்டறிய வாயை ஊதச் சொல்வார்கள். குடித்திருந்தால் உடனே அவர்களைக் கைது செய்து வழக்கும் போட்டு விடுவார்கள். மக்கள் எவ்வளவு கெஞ்சினாலும் கேட்க மாட்டார்கள்.

“ஒரு நாள் ராத்திரி அப்படித்தான் போலிசுகாரங்க வந்து குடிச்சிருக்காங்களான்னு எங்க ஆளுங்க ஒரு நாலஞ்சு பேர கூட்டிட்டுப் போயிட்டாங்க. அப்ப அந்த போலிசுகாரரு ஒருத்தர் தனியா எங்க சனங்க கிட்ட மாட்டிக்கிட்டாரு. அவர வாய ஊதச் சொல்லி எங்க சனங்க கேட்டாங்க. அவரும் குடிச்சிருந்தாரு. அவ்வளவுதான். அவர சனங்க பிடிச்சு வெச்சுக்கிட்டாங்க. வண்டிக்குப் போன மத்த போலிசுகாரங்க, அவங்க ஆளுல ஒருத்தர காணோம்னு தேடிட்டு வந்தாங்க. மக்கள் இவர கொண்டு போய் அங்க நிறுத்தி, இவரும்தான குடிச்சிருக்காரு; அதனால நீங்க எங்க ஆளுங்கள விட்டாதான் நாங்க இவர விடுவோம்னு தகராறு பண்ணி மக்கள் விடுவிச்சாங்க'' என்கிறார் சந்திரசேகரன்.

தமிழக காவல் துறையினருடன் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதால், அம்மக்கள் மீதும் கோபம் கொண்டிருந்த அவர்கள் ஒரு நாள் திட்டமிட்டு ஒரு வேன், மற்றும் ஒரு லாரியில் வந்து அவ்வூரைச் சூழ்ந்து கொண்டனர். அப்போது ஒரு அதிகாரி மட்டும் ஊருக்குள் சென்று சாட்டையை எடுத்து சுழற்றியவாறு "வாங்கடா இப்ப' என்றபடி மிகவும் கேவலமாகப் பேசியிருக்கிறார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மக்கள், அவரைச் சுற்றி நெருங்கியிருக்கின்றனர். அவர் சாட்டையை சுழற்றிய வேகத்தில் நெருங்கிய அனைவருக்கும் அடி விழுந்தது. அதையும் மீறி ஒருவர் சாட்டையை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள, மக்கள் அனைவரும் அந்தக் காவல் துறை அதிகாரியைச் சூழ்ந்து கொண்டு அடித்திருக்கின்றனர். அதைப் பார்த்த அவரைக் காப்பாற்ற வந்த பிற காவலர்களுக்கும் சரியான அடி விழுந்திருக்கிறது. அவர்கள் வந்த வாகனங்களும் சேதமடைய, உயிர் பிழைத்தால் போதுமென தமிழக காவல் துறையினர் வாகனங்களை கிளப்பிக் கொண்டு தப்பி ஓடியிருக்கின்றனர்.

இப்படி பல நிகழ்ச்சிகளை சொல்லிக் கொண்டே போகிறார்கள் அக்கிராமத்து மக்கள். ஆனால், வேறு எந்த மக்களுக்கும் இல்லாத துணிச்சல் இவர்களுக்கு மட்டும் எப்படி வந்தது? இது எப்படி சாத்தியமானது?

“இன்னைக்கு நாங்க இந்த அளவுக்கு நல்லா இருக்கோம்னா, அதுக்கு காரணம் ஒரே ஒருத்தர்தாங்க தோழர் தமிழரசன்'' சொல்லும்போதே குரல் உடைந்து அழத் தொடங்கிவிட்டார் சின்னராசு. இவர் குறிப்பிடும் தமிழரசன் வேறு யாருமல்ல. நக்சலைட் இயக்கத் தலைவராக தமிழகத்தின் கிராமங்களில் எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, 1987 இல் பொன் பரப்பியில் கொல்லப்பட்ட அதே தமிழரசன்தான். அவர் இறந்து பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் அவரை நினைவுகூர்ந்து, அவரது இழப்பை நினைத்து கண்ணீர் சிந்துகின்றனர். 1969 இல்தான் முதன் முதலாக வீராணத்திற்கு வந்திருக்கிறார் தமிழரசன். அன்று முதல் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று கிராம மக்களுடனும் பழகி, அவர்களது உரிமைகளை எடுத்துரைத்து, அவர்களின் அனைத்துப் போராட்டங்களுக்கும் துணை நின்றிருக்கிறார்.

“அப்பல்லாம் வீராணம், சொரப்பூர், பனையடிக்குப்பம் மூணும் தனித்தனியா ஒண்ணுக் கொண்ணு சம்பந்தம் இல்லாமதான் இருக்கும். இங்கிருந்து பக்கத்துல இருக்கிற மத்த ஊருக்குப் போறதுன்னா கூட, ஏதோ வேற நாட்டுக்குப் போற மாதிரி மலைப்பா இருக்கும். தமிழரசன் வந்த பின்னாலதான் மூணு ஊரு இளைஞர்கள் கிட்டயும் ஒரு ஒத்துமைய உண்டு பண்ணாரு. எந்த ஊருல பிரச்சனைனாலும் மூணு ஊரும் சேர்ந்து போராடுறதுங்கிறது, அவரு ஏற்படுத்திக் கொடுத்ததுதான். அதுதான் இன்னைக்கு வரைக்கும் எங்களக் காப்பாத்துது'' என்கிறார் சந்திரசேகரன்.

ஏற்கனவே சாதி ஆதிக்கம், நிலவுடைமை சமுதாயத்தின் அழுத்தம் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருந்த அம்மூன்று கிராமங்களும், நக்சலைட் இயக்கம் அங்கு வேரூன்றிய பிறகு தமிழக காவல் துறை மற்றும் உளவுத் துறையின் கண்காணிப்பையும் அடக்குமுறையையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதுவே அம்மக்களிடையே ஓர் ஒற்றுமையையும் விழிப்புணர்வையும் அடக்குமுறைகளை சந்திக்க துணிவையும் ஏற்படுத்தியது. அதிகார பலம் மட்டுமின்றி ஆயுத பலமும் கொண்ட காவல் துறையையே எதிர் கொண்டு வெற்றி பெற முடியுமானால், வேறு எந்த ஆதிக்கச் சக்தியையும் நிச்சயம் எதிர்கொள்ள இயலும் என்ற நம்பிக்கையை அச்சூழல் அம்மக்களுக்கு அளித்தது.

“தமிழரசன் மட்டும் இல்லைன்னா, நாங்க இன்னைக்கும் அதே பணக்கூலிக்குதான் கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்திருப்போம். அவருதான் எங்களுக்கு தைரியம் கொடுத்து, ஊக்கம் கொடுத்துப் போராட்டம் நிடத்த வைச்சாரு. அரைக் காணி நிலத்துக்கு இவ்வளவு கூலின்னு அவங்க பேசினா, டேப் வெச்சு அளந்து சரியா வேல பார்ப்போம். அவங்க மட்டும் கூலிய அளந்துதான் கொடுக்கிறாங்க. இப்படி நாங்க தொடர்ந்து ஒவ்வொண்ணுக்கும் போராட்டம் நடத்துனதால, மேல் சாதிக்காரங்களால இங்க வாழவே முடியாம போச்சு. அவங்க கிட்ட வேல செஞ்சவங்களையே கூப்பிட்டு, இருக்கிறத கொடுன்னு நிலத்த எல்லாம் பிரிச்சு வித்துட்டு டவுனுக்குப் போயிட்டாங்க. இப்ப தொண்னூறு சத நிலம் எங்க ஆளுங்க கையிலதான் இருக்கு'' என்கிறார் சின்னராசு.

இதனால் வீராணம், பனையடிக்குப்பம், சொரப்பூர் கிராமங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களில் பெரும்பான்மையோர், குறைந்த பட்சம் ஆளுக்கு அரைக் காணி நிலமாவது வைத்துக் கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். ஊரின் நீர் நிலைகளான ஏரி, குளம், குட்டை போன்றவை தற்போது இவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. இன்னமும் கூலி விவசாயிகளும் உள்ளனர் என்ற போதும் தற்போது கூலிப் பிரச்சனைகள் பெரிதாக எழுவதில்லை. ஆதிக்க சாதியினரை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லாத நிலையில், அடுத்த தலைமுறையினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு குடும்பத்திலும் கல்வி பயிலும் பிள்ளைகள், பரவலாக அரசு வேலையில் இருக்கும் மக்கள் என ஒரு நம்பிக்கையான சூழல் இங்கு நிலவுகிறது. நில உரிமை என்பது அம்மக்களுக்கு அளித்திருக்கும் இத்தன்னம்பிக்கை ஒன்றே, பஞ்சமி நில மீட்பு போன்ற போராட்டங்களின் தேவையை மிக அழுத்தமாக உணர்த்துகிறது.

“ஒரு ஏழெட்டுத் தலைமுறைக்கு முன்னால எங்கிருந்தோ இங்க வந்தவங்க, எங்க நிலத்த பூரா பிடுங்கிக்கிட்டாங்க. அவங்களா நிலத்த சீர் செஞ்சு, ஏரி குளம் வெட்டி விவசாயம் பண்ணாங்க? எங்க மக்களோட மண்ணுங்க அது. அவங்க உழைப்புல விளைஞ்ச மண்ணு. அது இன்னைக்கு திரும்பவும் எங்க கைக்கே வந்திருச்சு'' என்கிறார் சந்திரசேகரன்.

இந்த உரிமைகளை அடைய அவர்கள் பட்ட அடிகளும், இழப்புகளும் சாதாரணமானவை அல்ல. தங்களின் உரிமைகளுக்காகப் போராடி, பல தியாகங்கள் செய்தவர்களையும் உயிர் நீத்தவர்களையும் அவர்கள் இன்னமும் நனைவு கூர்கிறார்கள். 1989 இல் கொல்லப்பட்ட கந்தன், சேகர் இருவருக்காக ஊர் மய்யத்தில் ஒரு நினைவுத் தூணை, அடுத்த ஆண்டே எழுப்பியுள்ளனர். அம்பேத்கர் நூற்றாண்டைத் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியின் தாக்கம், இக்கிராமங்களிலும் ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் இத்தியாகிகளின் நினைவுத் தூணிற்கு அருகே அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டுள்ளதே இதற்கு சான்று.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவர்களின் போராட்டம் ஓயவில்லை என்பதுதான் வேதனை. இன்னமும் அங்கு தீண்டாமைக் கொடுமை நிலவுகிறது. சாதி இந்துக்கள் வீடுகளில் சேரி மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சொரப்பூர், பண்டசோழ நல்லூர் உள்ளிட்ட இந்துக் கோயில்களில் தீமிதி போன்ற சடங்குகளில் பங்கேற்க, சேரி மக்களை அனுமதிப்பதில்லை. இப்படி சாதி ஆதிக்கம் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்தாலும், இதற்கு எதிரான இம்மக்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

கடந்த காலப் போராட்ட நினைவுகள், அம்மக்களின் மனதில் மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இன்றும் அதை நினைவு கூறும் நொடிகளில், அம்மக்களின் கண்கள் கடந்த காலத்தைப் பற்றிய பெருமையிலும், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையிலும் மின்னுகின்றன.

“நாம் நமது போராட்டத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொள்ள வேண்டும். இந்த நம்பிக்கை நமது போராட்டம் வெற்றி பெற, நமக்குத் தேவையான நெஞ்சுரத்தையும் மனவலிமையையும் அளிக்கும். இந்தப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொள்பவர்கள் என்றும் வாழ்வர்'' - அண்ணல் அம்பேத்கர்

Pin It